search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவில்
    X
    அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவில்

    பிரார்த்தனைகளை நிறைவேற்றும் அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவில்

    தேவாரத் திருத்தலங்களில் 64-வது தலமாகவும், காவிரி தென்கரையில் முதல் தலமாகவும் விளங்குவது, குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை சுரும்பார்குழலி சமேத ரெத்தினகிரீஸ்வரர் திருக்கோவில்.
    சோழநாட்டின் காவிரி கரையில், 191 சிவ தலங்கள் இருக்கின்றன. அவற்றுள் காவிரி ஆற்றின் வட பகுதியில் 63 சிவ தலங்களும், தென்பகுதியில் 128 சிவ தலங்களும் உள்ளன. இதில் பாடப்பட்ட தேவாரத் திருத்தலங்களில் 64-வது தலமாகவும், காவிரி தென்கரையில் முதல் தலமாகவும் விளங்குவது, குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை சுரும்பார்குழலி சமேத ரெத்தினகிரீஸ்வரர் திருக்கோவில்.

    பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின்போது இங்கு தங்கி இருந்ததாகவும், அதனால் இந்த மலைக்கு ‘ஐவர்மலை’ என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுவே நாளடைவில் ‘அய்யர்மலை’ என்றானதாக சொல்கிறார்கள். பாண்டவர்கள் இங்கு தங்கியிருந்ததற்கு சான்றாக, மலையின் நடுப்பகுதியில் உள்ள சிறிய குகையில் 5 படுக்கைகள் உள்ளன. இந்த மலையின் பின்பகுதியில் உள்ள மற்றொரு சிறிய குகையில் கற்களால் வெட்டப்பட்ட மூன்று படுக்கைகள் காணப்படுகின்றன. இங்கு சமணர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று அறியப்படுகிறது.

    அய்யர் மலை என்ற ஊரில் மலை மீதுள்ள ஆலயத்தில் ரெத்தினகிரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். இவரை வாட்போக்கிநாதர், ராஜலிங்கமூர்த்தி என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். அதே போல் இந்த ஊரும், சிவாயமலை, ரத்தினகிரி, ரத்தினாசலம், மணிகிரி, ரத்தின வெற்பு, சிவதை, மாணிக்க மலை, வாட்போக்கி மலை, பஞ்சாட்சர மலை உள்ளிட்ட பெயர்களில் வழங்கப்படுகின்றன.

    ஆரிய நாட்டில் மங்கலமா நகரில் ஆரியராசன் என்பவன் ஆட்சி செய்து வந்தான். ஒரு முறை அரசனின் நவரத்தின கிரீடம் காணாமல் போக்கும்படி செய்தார், ரெத்தினகிரீஸ்வரர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அரசனின் முன்பாக தோன்றிய வேதியன் ஒருவன், “உன்னுடைய கிரீடம் ரெத்தினகிரீஸ்வரர் வசம் உள்ளது” என்று கூறினான்.

    இதையடுத்து மன்னன், ரெத்தினகிரீசுவரரிடம் வந்து தமது மணிமுடியை தருமாறு வேண்டினான். அப்போது முதியவர் வடிவில் வந்த இறைவன் “இங்குள்ள கொப்பரையை முழுமையாக காவிரிநீர் கொண்டு நிரப்ப வேண்டும். அப்போதுதான் மணி முடியை உன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இறைவன் கூறியிருக்கிறார்” என்றார்.

    மன்னன் எவ்வளவோ முயன்றும் கொப்பரையை நீர் கொண்டு நிரப்ப முடியவில்லை. ஒரு கட்டத்தில் கோபம் கொண்ட மன்னன், முதியவரை நோக்கி வாளை வீசினான். அப்போது முதியவர் சிவலிங்கத்திற்குச் சென்று மறைய, சிவலிங்கத்தின் மீது வாள் பட்டு, அதில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. தெய்வ குற்றத்துக்கு ஆளானதை எண்ணி அஞ்சிய மன்னன், தன்னைத் தானே மாய்த்துக் கொள்ள முயன்றான். அப்போது அவனை, இறைவன் தடுத்தாட்கொண்டு, மணிமுடியையும் வழங்கி அருளினார். இதற்கு சாட்சியாக இப்போதும், சிவலிங்கத்தின் மீது வெட்டு தழும்பு உள்ளதைக் காணலாம்.

    இந்த நிகழ்வுக்குப் பின்னர் ரெத்தினகிரீஸ் வரரை வழிபட்ட ஆரியராசன், தன் குலத்தினர் பரம்பரை பரம்பரையாக தினமும் காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் நடைமுறை கொண்டு வந்தான். தற்போதும் இந்த ஆலயத்தில் உள்ள இறைவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக, சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து நாள்தோறும் குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து, மலை உச்சியில் உள்ள இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் செய்விக்கப்படுவது தனிச்சிறப்பாகும்.

    சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான சுந்தரர், இந்த மலையை ரத்தின மலையாகவும், ஈசனை லிங்க வடிவமாகவும் கண்டு வழிபட்டதோடு, பொன் வேண்டி பாடியிருக்கிறார். தொடர்ந்து இறைவனின் ஆணைப்படி பூத கணங்கள், பாறையின் மேல் பொன்னை சொரிந்ததாகவும், இங்குள்ள ஒன்றுபாதி என்ற இடத்தில் ரெத்தினகிரீஸ்வரர், சுந்தரருக்கு காட்சி கொடுத்ததாகவும் தல வரலாறு சொல்லப்படுகிறது. சுந்தரருக்கு பொன் அளிக்கப்பட்ட இடம் தற்போது ‘பொன்னிடும் பாறை’ என்று அழைக்கப்படுகிறது. பொன்னிடும் பாறைக்கு முன்பு அமைந்துள்ள கற்கம்பத்தை சுற்றி நூலால் கட்டி, பில்லி, சூனியம், ஏவல், மற்றும் பல்வேறு தடங்கல் நீங்க பிரார்த்தனை செய்யப்படுகிறது. பொன்னிடும் பாறை அருகில் உள்ள சகுன குன்றின் கீழ் அமர்ந்து, காரியங்களைத் தொடங்குவதற்கான நற்சகுனம் பார்க்கவும் பிரார்த்தனை செய்கிறார்கள்.
    ரெத்தினகிரீஸ்வரர்

    சுமார் 4 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டதும், 1,178 அடி உயரமும் கொண்டதுமான மலையின் மீது ரெத்தின கிரீஸ்வரர் கோவில் உள்ளது. மலை உச்சிக்கு சென்று சுவாமியை வழிபட 1017 படிகள் அமைக்கப்பட்டுள்ளது. பொன்னிடும் பாறையில் இருந்து 103 படிகள் மேல்நோக்கி ஏறினால், பதினெட்டு படிகள் வரும். இந்த பதினெட்டு படிகளும் சிறப்பு வாய்ந்தவை. பதினெட்டு படிகளின் நடுவில் ஒரு மலர் செதுக்கப்பட்டுள்ளது. வழக்கு மற்றும் பிரச்சினைகள் ஏற்படும் போது, நியாயம் உள்ளவர்கள் இந்த படிகளில் சூடர் ஏற்றி ‘நான் குற்றமற்றவன். என் பிரச்சினையை தீர்த்து வை இறைவா’ என்று பிரார்த்தித்தால், உடனடியாக தீர்வு கிடைக்குமாம். அதே நேரம் பொய் சத்தியம் செய்தால் அவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும் என்பது கண்கூடாக நடைபெறும் நிகழ்வுகளாம்.

    இந்த மலையை சுற்றிலும் 8 பாறைகளுக்கு நடுவே இருக்கும் ஒன்பதாவது பாறையில், சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். மாசி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் சூரிய கதிர்கள், சுவாமி சன்னிதிக்கு எதிரே உள்ள நவ துவாரங்களின் வழியாக இறைவனின் மீது விழுகிறது. இக்கோவிலில் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்த பச்சைப்பால் மாலை வரை கெட்டுப்போகாது. அபிஷேகம் செய்த பால் பின்னர் கெட்டியான சுவை மிகுந்த தயிராக மாறிவிடுகிறது. இது இக்கோவிலில் இன்றுவரை நடக்கும் அதிசயமாகும். இத்தல இறைவனை, நான்முகன், திருமால், இந்திரன், வாயு, ஆதிசேஷன், சூரியன், அக்கினி, துர்க்கை, சப்த கன்னியர்கள், அகத்தியர் போன்றோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

    இங்கு அருளும் இறைவனுக்கு, அபிஷேக, ஆராதனைகள் மற்றும் மணி விளக்குகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துகின்றனர். இறைவனுக்கு தூய உலர்ந்த வேட்டி சாத்தி வழிபடலாம். பால், எண்ணெய், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம். விரதம் இருத்தல், தானதர்மம் செய்தல், வேள்வி புரிதல், தவம் செய்தல், தியானம் செய்தல் போன்றவற்றை இந்த ஆலயத்தில் செய்தால் பன்மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள். திருவண்ணாமலையை போல அய்யர் மலையும் கிரிவலத்திற்கு சிறப்பானதாகும். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பல்லாயிரக்கணக்கானோர் இம்மலையை சுற்றி கிரிவலம் வருகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் 15 நாட்கள் தவிர கார்த்திகை சோமவாரங்கள், தைப்பூசம், போன்ற உற்சவங்களும் வெகு சிறப்பாக நடைபெறும். மூன்று நாட்களுக்கு நடைபெறும் தேரோட்டத்தின்போது பக்தர்கள் தேரோடும் வீதியிலும், மலை படிகளிலும், தமது வயல்களில் விளைந்த தானியங்களை தூவி வழிபட்டு செல்வர். இதனால் விளைச்சல் பெருகும் என்பது நம்பிக்கை. தேரோட்டத்திற்கு முதல் நாள் இரவு நடைபெறும் குதிரை தேர் புகழ்பெற்றதாகும். இவ்விழாவின்போது தங்கக்குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி தேரில் எழுந்தருள்வார். இங்குள்ள மலை அடிவாரத்தில் அமைந்துள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் வைரப்பெருமாள், கருப்பண்ணசுவாமி, ஆறுமுகப் பெருமான் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன.

    காலையில் குளித்தலையில் உள்ள கடம்பவனேசுவரரையும், மதிய வேளையில் இத்தல ரெத்தினகிரீஸ்வரரையும், மாலையில் திருச்சி மாவட்டம் முசிறி அருகேஉள்ள திருங்கோய்நாதரையும், அர்த்தசாமத்தில் கருப்பத்தூரில் உள்ள சிம்மபுரீசுவரரையும் வழிபட்டால் முக்தி பேறு கிடைக்கும். மறு பிறவி கிடையாது என்பது ஐதீகமாகும்.

    மலைக்காவல் தெய்வம்


    காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வைரப்பெருமாள் என்பவரின் தங்கை குழந்தை பாக்கியம் இன்றி தவித்து வந்தார். அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தால், தன்னுடைய சிரசை காணிக்கையாக வழங்குவதாக ரெத்தின கிரீஸ்வரரை வேண்டிக்கொண்டார் வைரப்பெருமாள். வேண்டுதலின்படி அவரது தங்கைக்கு குழந்தை பிறந்தது. தன் பிரார்த்தனை நிறைவேறியதால், வைரப்பெருமாள், தன் சிரசை அரிந்து சுவாமிக்கு காணிக்கையாகக் கொடுத்தார். இந்த ஆலயத்தின் அடிவாரத்தில் வைரப்பெருமாள் பாதமும், மலை மீது சிரசுடன் கூடிய முழு உருவ திருமேனியும் உள்ளது. சுவாமிக்கு தினந்தோறும் காலசந்தி, சாயரட்சை பூஜை முடிந்தபிறகு, வைரப்பெருமாளுக்கு தீபாராதனை செய்யப்படும். சுவாமியின் மாலையும் இவருக்கு அணிவிக்கப்படும். இத்தலத்தில் வைரப்பெருமாள் விசேஷமானவர். இவரை இந்தப் பகுதி மக்கள் மலைக் காவல் தெய்வமாக பார்க்கிறார்கள்.

    அமைவிடம் :

    கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து மணப்பாறை செல்லும் சாலையில், குளித்தலையில் இருந்து தெற்கே 8 கிலோமீட்டர் தூரத்தில் அய்யர்மலை உள்ளது.

    ஆர்.பிரகாசம், குளித்தலை. 
    Next Story
    ×