search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஏரிக்கரை சீயாத்தம்மன் கோவில்
    X
    ஏரிக்கரை சீயாத்தம்மன் கோவில்

    ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஏரிக்கரை சீயாத்தம்மன் கோவில்

    சென்னை கொரட்டூரில் சீயாத்தம்மன் ஆலயம் உள்ளது. கொரட்டூர் ஏரிக்கரையில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தலம் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சென்னை கொரட்டூரில் சீயாத்தம்மன் ஆலயம் உள்ளது. கொரட்டூர் ஏரிக்கரையில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தலம் உள்ளது. ஆனால் சென்னைவாசிகளில் 90 சதவீத பேருக்கு இந்த சீயாத்தம்மன் ஆலயம் பற்றியும் அவளது மகிமை பற்றியும் தெரியாமலேயே உள்ளது. கொரட்டூருக்கு மிக அருகில் உள்ள பகுதிகளில் வாழ்பவர்களுக்கு கூட சீயாத்தம்மன் அருமை இப்போதுதான் தெரிய தொடங்கி இருக்கிறது.

    பல்லவ மன்னர்களான ராஜசிம்மன், நந்திவர்மன் காலத்தில் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் இந்த ஆலயத்தில் திருவிழா உற்சவம் கோலகலமாக நடைபெறும்.  சீயாத்தம்மன் கொரட்டூருக்கும் செங்குன்றத்துக்கும் இடையில் உள்ள 7 ஊர் மக்களுக்கு குலதெய்வமாக விளங்குகிறாள். இதனால் இந்த அம்மனை ஏழுரின் எல்லையம்மா! எங்கள் குல தெய்வம்மா! ஏழுலகம் வணங்குதம்மா! ஏரிக்கரை சீயாத்தம்மா! என்று ஏழு ஊர் மக்களும் பக்தி பரவசத்துடன் பணிந்து போற்றி பாடுகிறார்கள்.

    தமிழகத்தில் சக்தியின் வடிவங்கள் கணக்கிட முடியாத அளவுக்கு பல்வேறு பெயர்களில் பல்வேறு அவதாரங்களை சொல்லும் வகையில் உள்ளன. அந்த அடிப்படையில் சீயாத்தம்மன் ஆலயத்துக்கும் சிறப்பான வரலாற்று பின்னணி இருக்கிறது. தமிழ்நாட்டின் வட பகுதியில் பல்லவர் சாம்ராஜ்ஜியம் புகழ் பெற்று இருந்த காலத்தில் அவர்களுக்கும் சாளுக்கிய மன்னர்களுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்தது. ஒரு தடவை அப்படி பாலாற்றின் கரையில் மிகப்பெரிய போர் நடந்தது.

    பல்லவ மன்னன் ராஜசிம்மன் படையின் சாளுக்கிய மன்னன் புலிக்கேசி படையும் நேருக்கு நேர் கடுமையாக மோதின. நீண்ட நாட்களாக இந்த போர் நீடித்தது. போருக்கு இடையே ஒருநாள் ராஜசிம்மன் ஒரு இடத்தில் ஓய்வு எடுத்து கொண்டு இருந்தான். அதாவது தற்போது கொரட்டூருக்கும் பாடிக்கும் இடையே ஒரு பகுதியில் அவன் ஓய்வில் இருந்தான். புலிகேசியிடம் தோற்று விடுவோமோ என்ற கவலை அவன் மனதில் ஆழமாக ஏற்பட்டது. அந்த கவலையிலேயே அவன் அப்படி தூங்கி போனான். அப்போது அவனுக்கு ஒரு கனவு ஏற்பட்டது.

    ஏரிக்கரை ஒன்றின் ஓரத்தில் முனிவர்கள் சிலர் யாகம் செய்து கொண்டு இருந்தனர். அவர்களை அசுரர்கள் தொல்லை கொடுத்து யாகத்துக்கு இடையூறு செய்தனர். இதனால் முனிவர்கள் அனைவரும் சிவபெருமானை நோக்கி வேண்டினார்கள். இதையடுத்து பார்வதியை அழைத்த சிவபெருமான் உடனே நீ கொரட்டூர் ஏரி பகுதிக்கு சென்று அசுரர்களை அழித்து விடு என்று உத்தரவிட்டார். அதை ஏற்று பராசக்தி அந்த ஏரி பகுதிக்கு வந்தாள். அங்குள்ள மிகப்பெரிய ஆலமரத்து அடியில் அமர்ந்து தவம் செய்தாள்.

    நீண்ட நாட்கள் தவத்தில் இருந்ததால் அவளை சுற்றி புற்று எழுந்தது. நாளடைவில் அந்த புற்று வளர்ந்து அவளை மூடி விட்டது. ஆனால் புற்றுக்குள் இருந்து மந்திர ஒலி மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. இதை கவனித்த அசுரர்கள் அந்த புற்றை இடித்து பராசக்தியை கொல்ல முயற்சி செய்தனர். இதனால் பார்வதி தேவி ஆவேசமானாள். பயங்கர சத்தத்துடன் புற்றில் இருந்து வெளிபட்டாள். அசுரர்களை கொன்று குவித்தாள்.

    அப்போது அதை தடுத்த அரக்கி வயிற்றை கிழித்து அவளது குழந்தையை கையில் எடுத்து தன் காதில் மாட்டிக் கொண்டாள். இப்படி கனவு சென்று கொண்டு இருந்தபோது பல்லவ மன்னன் ராஜசிம்மன் திடுக்கிட்டு கண் விழித்தான். அவனுக்கு கனவில் வந்த அம்மன் யார் என்று தெரியவில்லை. என்றாலும் சேயை காத்த அம்மன் என்பதால் “சேய்காத்த அம்மன்” என்று கூறினான்.

    சேய்காத்த அம்மனை மனதில் நிறுத்தி அவன் பிரார்த்தனை செய்தான். “அம்மா தாயே, நீ இந்த பகுதியில் மிகுந்த சக்தியுடன் இருப்பது எனக்கு தெரியும். எனக்கு உன் அருள் வேண்டும். புலிக்கேசிக்கு எதிரான போர் மிக கடுமையாக உள்ளது. அவன் இந்த நாட்டை கைப்பற்றி விடக்கூடாது. அதற்கு நீதான் எங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். போரில் எனக்கு வெற்றி கிடைத்தால் நீ தவம் செய்த பகுதியில் மிக சிறப்பான ஆலயம் அமைத்து உன்னை காலம் காலமாக மக்கள் வழிபாடு செய்வதற்கு ஏற்பாடு செய்வேன்” என்று வேண்டிக் கொண்டான்.

    சேய்காத்த அம்மனை அவன் வழிபட்ட பிறகு அவனுக்குள் புது தைரியமும், புத்துணர்ச்சியும் ஏற்பட்டு இருந்தது. அதே வேகத்துடன் அவன் தனது படையை நடத்தினான். அந்த போரில் அவனுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. இந்த வெற்றி சேய்காத்த அம்மனால் கிடைத்த வெற்றி என்று அவன் உறுதியாக நம்பினான்.

    போர் முடிந்த பிறகு அவன் கொரட்டூர் ஏரிக்கரையில் உள்ள அந்த ஆலமரத்து பகுதிக்கு வந்தான். அங்கு இருந்த புற்றை பார்த்தான். அதற்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டான். அப்போது அங்கு சேய்காத்த அம்மன் சுயம்புவாக தன்னை வெளிப்படுத்தினாள். இதை கண்டதும் பல்லவ மன்னன் ராஜசிம்மனுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்த பகுதியில் கற்கோவில் அமைத்தான். அந்த கோவிலுக்கு சிறப்பு பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்தான். இதனால் சுற்றுப்பகுதி கிராம மக்கள் அந்த ஆலயத்துக்கு வரத் தொடங்கினார்கள்.

    இதைத் தொடர்ந்து செங்குன்றம், மாதனாங்குப்பம், சூரப்பேடு, கச்சனாங்குப்பம், கள்ளிக்குப்பம், தாதங்குப்பம், கொரட்டூர் ஆகிய ஏழு ஊர்களுக்கு சேய்காத்த அம்மன் குல தெய்வமாக உருவெடுத்தாள். நாளடைவில் அவளுக்கு துணையாக சப்தமாதர்களும் அங்கிருந்து மக்களுக்கு அருள்பாலிக்க தொடங்கினார்கள்.

    பல்லவ மன்னன் கொரட்டூர் ஏரிக்கரையில் ஆலயம் அமைத்த போது சேய்காத்த அம்மன் மிகவும் உக்கிரமாக காணப்பட்டாள். இதனால் பக்தர்கள் அந்த பகுதிக்கு செல்ல பயப்பட்டனர். இதையடுத்து விநாயகர் யானை வடிவம் எடுத்து தனது தாய் முன்பு வந்து நின்றார். மகனை கண்டதும் பராசக்தியின் உக்கிரம் தணிந்தது.
    அன்று முதல் சேய்காத்த அம்மன் சாந்தசொரூபியாக அருள்பாலித்து வருகிறாள். அதை பிரதிபலிக்கும் வகையில் கருவறையில் அம்பாளின் காலடியில் ஸ்ரீசக்கரம் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் விநாயகர் வந்து அமைதி ஏற்படுத்தியதால் அதை பிரதிபலிக்கும் வகையில் கருவறை சன்னதி முன்பு யானை வாகனம் அமைக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் சேய்காத்த அம்மனை அடிக்கடி வேகமாக சொல்லி சொல்லி அந்த பெயர் “சீயாத்தம்மன்” என்று மருவியது. தற்போது சேய்காத்த அம்மன் என்று இந்த அம்மனை யாரும் அழைப்பது இல்லை. “சீயாத்தம்மன்” என்றே அனைவரும் அழைக்கிறார்கள். சீயாத்தம்மனுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆலயங்கள் இருக்கிறது. ஆனால் கருவறையில் சீயாத்தம்மனுடன் சப்தமாதர்களும் சேர்ந்து இருப்பது மிக அபூர்வமாக கருதப்படுகிறது. குளித்தலையில் கடம்பவனேஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் சீயாத்தம்மன் சன்னதியில் சப்தமாதர்கள் இருக்கிறார்கள். அதே போன்ற அமைப்புடன் கொரட்டூர் சீயாத்தம்மன் கருவறையிலும் உள்ளது. இதுபோன்ற அமைப்பு தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லை.

    கொரட்டூர் சீயாத்தம்மனை பாடலாத்திரி சீயாத்தம்மன் என்றும் அழைக்கிறார்கள். ஆலயத்தின் நுழைவாயிலிலும் பாடலாத்திரி சீயாத்தம்மன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பாடலாத்திரி என்பதற்கு சிவந்த மலை என்று அர்த்தமாகும். அருகில் உள்ள செங்குன்றத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த பெயர் அமைந்து இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

    இந்த ஆலயம் மிகச்சிறிய ஆலயமாக உள்ளது. ஆலயத்தின் பின்புறம் உள்ள ஆலமரம் வித்தியாசமானது. இந்த ஆலமரத்தில் விழுதுகள் இல்லை. அந்த மரத்தடியில் விநாயகர் வீற்றிருக்கிறார். கோவிலை சுற்றி வரும் போது ஏரிக்கரையை நோக்கி துர்க்கை அம்மன் சன்னதி அமைந்துள்ளது. அந்த துர்க்கைக்கு பெண்கள் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கத்தில் உள்ளது.

    இந்த ஆலயத்திற்கு கொரட்டூர் ரெயில் நிலையத்தில் இருந்து அக்ரகாரம் பஸ் நிறுத்தத்தில் இருந்தும் செல்லலாம். சொந்த வாகனத்தில் செல்பவர்கள் பாடி ரெயில்வே மேம்பாலம் ஏறி இறங்கியதும் வரும் முதல் இடது பக்க பாதையில் சென்றால் வரதராஜ பெருமாள் ஆலயத்தை பார்க்கலாம். அந்த ஆலயத்தின் அருகில் உள்ள தெருவில் சென்றால் ஏரிக்கரை சீயாத்தம்மன் ஆலயத்திற்கு எளிதாக செல்ல முடியும்.
    Next Story
    ×