search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கற்பக சௌந்தரி அம்பாள் சமேத கற்பேகஸ்வரர் திருக்கோவில்
    X
    கற்பக சௌந்தரி அம்பாள் சமேத கற்பேகஸ்வரர் திருக்கோவில்

    கற்பக சௌந்தரி அம்பாள் சமேத கற்பேகஸ்வரர் திருக்கோவில்

    அருள்மிகு கற்பக சௌந்தரி அம்பாள் சமேத கற்பேகஸ்வரர் திருக்கோவில் 5-வது பிளாக் முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    ஸ்தல வரலாறு

    முகப்பேர் மேற்கு பகுதியில் தமிழக அரசு வீட்டு வசதி வாரியத்தால் நிலம் கையகப்படுத்தப்பட்டு பூமியை சமப்படுத்தும் போது பூமிக்கடியில் அருள்மிகு கற்பேகஸ்வர பெருமாளின் திவலிங்கத் திருமேனி மற்றும் நந்தியெம்பெருமானின் சிவாவிக்ரஹங்கள் கிடைக்கப் பெற்றது. வீட்டுவசதி வாரியத்தால் குடியிருப்பு மனைகள் பகுதிவாழ் மக்களுக்கு ஒதுக்கப்பட்டது.

    இப்பகுதிவாழ் மக்கள் இந்த இடத்தில் ஆலயம் அமைக்க வேண்டும் என எண்ணி "அருள்மிகு கற்பேகஸ்வர் ஆலய டிரஸ்ட்" என்ற பெயரால் ஓர் அமைப்பை ஏற்படுத்தி அதன் உறுப்பினர்கள் பொதுமக்கள் பேராதரவுடன் 12.06.1994 அன்று ஆலயம் அமைக்க பூமி பூஜை செய்து திருப்பணிகள் செய்தனர். மத்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர் இந்த சிவலிங்கத் திருமேனியை பார்வையிட்டு ஆராய்ந்து சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சிவலிங்கம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

    கோவிலில் கற்பகவிநாயகர், கற்பேகஸ்வரர், கற்பகசௌந்தரி அம்பாள், கனகதுர்க்கை, நவக்கிரஹ நாயககர்கள், சண்டிகேஸ்வரர், சுவாமி மோஸ்டத்தில் பால முருகன், ஐயப்பன், தட்சிணமூர்த்தி,  மஹா விஷ்ணு, பிரம்மா, ஸ்தலவிருட்சம் அரசமரத்தில் விநாயகர், கருமாரி அம்மன், நாக கன்னிகள் மூவர், சுவாமிநந்தி, பலிபீடம், அம்பாள் நந்தி, பலிபீடம், மூஷகம், பலிபீடம் என பிரதிஷ்டை செய்து சாஸ்திரப்படி சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கற்பக்கிரஹ விமானங்கள் நிறுவி 02.06.1995 அன்று சுபவேளையில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

    பின்னர் 06-02-2003 ஆண்டு காலபைரவர், நால்வர் பெருமக்கள் மற்றும் சேக்கிழார் பெருமானும் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. 28-11-2007 ஆண்டு உற்ச மூர்த்திகள் பாதுகாப்பு அறை கட்டப்பட்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. 06-12-2009 ஆண்டு துவஜஸ்தம்பம் நிறுவி, கொடிமர விநாயகரும் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

    20-05-2018 ஆண்டு திருமாடப்பள்ளி, அபிஷேக பொருள்கள் வைக்கும் அறைகள், திருப்பள்ளியறை சிதிலமடைந்ததை புனர் அமைக்கப்பட்டு சுவாமி சந்நிதிகளின் தரைகளில் கற்கள் பதித்தும், சுற்றுப் பிரகாரங்களில் கருங்கல் பதித்தும், கற்பக்கிரஹ விமானங்களில் சுதை வேலைகள் புதுப்பிக்கப்பட்டு, வண்ணங்கள் பூசியும், ஆகமவிதிகளின்படி யாகசாலைகள் அமைத்து, வெகுவிமரிசையாக மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கற்பக சௌந்தரி அம்பாள் சமேத கற்பேகஸ்வரர் திருக்கோவில்

    மேலும் விநாயகர், பிரதோஷ நாயகர், சோமால்கந்தர், தாய் அம்பிகை சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, சண்டிகேஸ்வரர், பள்ளியறை சந்திரசேகரர், அம்பாள், நடராஜர், சிவகாமி அஸ்திர தேவர், மாணிக்கவாசகர் முதலான மூர்த்திகளின் பஞ்சலோக விக்ரஹங்கள் பக்தகோடி பெருமக்களால் இத்திருக்கோயிலுக்கு உபயமாக வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஆலயத்திற்கு என எவ்வித அசையும், அசையா சொத்துக்கள் இல்லாத நிலையில், பக்தகோடி பெருமக்களின் பேராதரவுடன் அனைத்து பூஜைகளும் நடைபெற்று வருகிறது.

    இந்த கோவிலின் சிறப்புகள்:

    * கேட்டவர்க்கு கேட்டதைக் கொடுக்கும் கற்பகேஸ்வரர் பெருமான் பக்தர்களின் வேண்டுகளை ஏற்று, கற்பக விருட்சமாக வாரி வழங்குகிறார். தங்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவேறியதாக பக்தர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.

    * குழந்தைப்பேறு கிடைக்காதவர்கள் ஆடிப்பூரத்தன்று கற்க சௌந்தரியை வழிபட்டு, அம்பிகையின்மடியில் வைத்த முளைப்பயிறு பிரசாதத்தினை சிவாச்சாரியார் அவர்களிடம் பெற்று அருத்தி குழந்தைப் பேறு பெற்று பலர் பயன்பெற்று வருகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

    * திருமணம் தடைப்பட்டு வரும் ஆண், பெண் இருபாலரும் சுவாமி, அம்பாளை மனம் உருகி பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணத்தடை நீங்கி, சுபமாக திருமணம் நடைபெறும் என்பதும் உண்மை.

    * தீராத நோய்களும் தீர்ந்துள்ளதாக பலர் தெரிவிக்கின்றனர்.

    இத்தகு பெருமை வாய்ந்த இத்தலம் தமிழ்நாடு அரசு இந்திய சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்குட்பட்டு அறங்காவலர்களால் சிறப்பாக நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.

    கோவில் முகவரி

    அருள்மிகு கற்பக சௌந்தரி அம்பாள் சமேத அருள்மிகு கற்பேகஸ்வரர் திருக்கோயில்
    (தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்குட்பட்டது)
    5-வது பிளாக் முகப்பேர் மேற்கு
    சென்னை 600037
    Next Story
    ×