search icon
என் மலர்tooltip icon

  ஆன்மிகம்

  கோவில் முகப்பு தோற்றம்
  X
  கோவில் முகப்பு தோற்றம்

  தோஷங்கள் நீக்கும் மாந்துறை ஆம்ரவனேசுவரர் கோவில்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  துன்பங்கள் நீக்கும் காயதிரி நதி கொண்ட தலம், காஞ்சி மாமுனிவர் நான்குமுறை தரிசித்த இறைவன் என பல்வேறு சிறப்புகளை பெற்றது மாந்துறை ஆம்ரவனேசுவரர் கோவில்.
  தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலம், திருப் புகழ்ப் பாடல் பெற்ற ஊர், பிரம்மா, சூரியன், சந்திரன், இந்திரன், மிருகண்டு முனிவர், வேதமித்திரன், மருதாந்தன் போன்றோரின் தோஷங்களை நீக்கிய தலம், துன்பங்கள் நீக்கும் காயதிரி நதி கொண்ட தலம், காஞ்சி மாமுனிவர் நான்குமுறை தரிசித்த இறைவன் என பல்வேறு சிறப்புகளை பெற்றது மாந்துறை ஆம்ரவனேசுவரர் கோவில்.

  புராண வரலாறு :

  ஸ்காந்த புராணம், அகஸ்திய சம்ஹிதையில் சேத்திரக் காண்டத்தில் ஆம்ரவன சேத்திரம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. அதில் மிருகண்ட முனிவர் பேறு பெற்றது, பொய் சொன்ன பிரம்மன் சாபம் நீங்கியது, இந்திரனுக்கு கவுதமரால் ஏற்பட்ட சாபம் நீங்கியது பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

  மேலும் வேதமித்திரன் தந்தையின் அஸ்தி, இத் தலத்தில் ரத்தினமாக மாறிய நிகழ்வும் அரங்கேறியுள்ளது. தாயை இழந்த மான்குட்டிகளைக் காக்க இறைவனும், இறைவியும் இத்தலத்தில் தாய் மானின் உருவமாக அவதாரம் எடுத்திருக்கிறார்கள். இத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவனால் ஈர்க்கப்பட்ட காஞ்சி மாமுனிவர், இங்கு நான்கு முறை வந்து இறைவனை பூஜித்து வழிபாடு நடத்தியுள்ளார்.

  சம்பந்தர் தேவாரம் :

  திருஞான சம்பந்தர் பதினோரு பாடல்களில் இத்தலத்தை பற்றி பாடி இருக்கிறார். அருணகிரிநாதரும் திருப்புகழில் இத்தல முருகனைப் பாடியுள்ளார். வடலூர் ராமலிங்க சுவாமிகளும் திருவருட்பாவில் இத்தலத்தை குறிப்பிட்டுள்ளார்.

  பெருகு சந்தனம் காரகில் பீலியும் பெருமரம் நிமிர்ந்து உந்திப்

  பொருது காவிரி வடகரை மாந்துறை புனிதன் எம்பெருமானைப்

  பரிவினால் இருந்து இரவியும் மதியமும் பார்மன்னன் பணிந்து ஏத்த மருதவானவர் வழிபடும் மலரடி வணங்குதல் செய்வோமே - என்று தேவாரத்தில் இத்தல இறைவனை சம்பந்தர் போற்றி புகழ்பாடி இருக்கிறார்.

  மானுக்கு தாயாக இறைவன் அவதரிக்கும் காட்சி

  ஆலய அமைப்பு:

  இரண்டு நிலை கருவறையில் இறைவன் அருள் பாலிக்கிறார். ‘ஆம்ரம்' என்றால் 'மாமரம்' என்று பொருள். இத்தலத்து இறைவன் மாமர வனத்தில் காட்சியளித்ததால், ஆம்ரவனேசுவரர் என்று அழைக்கப்படுகிறார். கருவறை முன்பு விநாயகர், முருகர் காட்சி தருகின்றனர். கோவில் நுழைவு வாயிலின் மேல் பகுதியில் மான்குட்டிக்குத் தாயாக அவதரித்த புராண வரலாறு சுதைச்சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரத்தை யொட்டிய கோவில் பிரகாரத்தின் தெற்கே தலமரமான மாமரம் அமைந்துள்ளது.

  கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம் எதிரில் நந்திமண்டபம் அமைந்துள்ளது. அதன் அருகே கருப்பண்ணசாமி, மதுரைவீரன் சன்னிதிகள் அமைந்து உள்ளன. அதைத்தொடர்ந்து பண்டிதர்சாமி கோவிலும், அதனுள் ஏராளமான வேல்களும் கம்பீரத்துடன் காட்சி அளிக்கின்றன. கருப்புச்சாமி வாகனமான இரண்டு குதிரைகளும் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் அமைந்திருக்கின்றன. இவைதான் கிராமத்தின் காவல் தெய்வம் என்பது குறிப்பிடத்தக்கது.

  பாலாம்பிகை:

  நின்ற கோலத்தில் மேலிரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியும், கீழிரு கரங்கள் அபய, வரத முத்திரையோடும் நின்ற கோலத்தில் அன்னை பாலாம்பிகை எழிலாக காட்சி தருகிறாள். கருவறைக்கு எதிரே நந்தி உள்ளது.

  கோவிலில் தென்மேற்கே அருணகிரிநாதர் பாடிய முருகன், மயில் வாகனத்தில் எழிலாக வள்ளி தெய்வானையோடு காட்சி தருகிறார். இவரை ‘மாங்கனி உடைந்து தேங்கவயல் வந்து மாண்பு நெல் விளைந்த வளநாடா’ என திருப்புகழ் கூறுகிறது. இதையடுத்து தண்டாயுதபாணி, கஜலட்சுமி, சண்டிகேசுவரர் சன்னிதிகள் அமைந்துள்ளன. வடகிழக்கில் நவக்கிரக சன்னிதி உள்ளது. அதில் சூரியன் தன் இரு தேவியரோடு காட்சி தருகிறார். அருகே பைரவர் சன்னதியும் உள்ளது.

  இக்கோவிலில் சுவாமி சன்னிதி கிழக்கு நோக்கியும், அம்மன் சன்னதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. சமயக்குரவர் நால்வர், கைத்தடியைத் தாங்கி நிற்கும் சுந்தரர் கோலம் குறிப்பிடத்தக்க அம்சமாக விளங்குகிறது.

  பாலாம்பிகையுடன் அருள்பாலிக்கும் ஆம்ரவனேசுவரர்

  கல்வெட்டுகள்:

  இக்கோவிலில் பிற்காலச் சோழரான திரிபுவன சக்கரவர்த்தி ராஜராஜதேவரின் இரண்டு கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. அதில் நிலதானம், விதிக்கப்பட்ட வரிகள் பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

  விழாக்கள் :

  பங்குனி மாதத்தில் முதல் மூன்று நாட்கள் சூரியன் தன் ஒளிக்கதிர்களால் இறைவனை வழிபடுவது இத்தலத்தின் சிறப்பு அம்சமாகும். மேலும் சிவாலயங்களில் நடக்கும் அனைத்து விழாக்களும் இங்கு எளிய முறையில் நடத்தப்படுகின்றன.

  காயத்திரி தீர்த்தம்:

  செவ்வாயும், சதுர்த்தியும் சேரும் தினத்தில் இத்தலத்து தீர்த்தமான காயத்திரி நதியில் நீராடினால் பலமடங்கு பலன் கிடைக்கும், துன்பங்கள் நீங்கும் என்று தல வரலாறு கூறுகிறது.

  அமைவிடம் :

  திருச்சி - லால்குடி வழித்தடத்தில் 15 கி.மீ. தொலைவில் மாந்துறை ஆம்ரவனேசுவரர் கோவில் அமைந்துள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து இக்கோவிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் இருக்கின்றன.

  - பனையபுரம் அதியமான்
  Next Story
  ×