search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம்
    X
    ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம்

    ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம்

    சென்னை வியாசர்பாடி பகுதியில் ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சென்னை வியாசர்பாடி பகுதியில் ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம் இருக்கிறது. சித்தர்களில் ஒருவராக அறியப்படும் இவர், ‘ஆனந்தாசிரமம்’ என்ற சாது சங்கத்தை அமைத்து, பலரது அஞ்ஞானத்தைப் போக்கியிருக்கிறார்.

    முருகப்பெருமானின் சிறப்பு மிக்க தலங்களில் ஒன்றான திருப்போரூரில் முத்துசாமி பக்தர்- செங்கமலத்தம்மாள் ஆகியோருக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் சிவப்பிரகாசம். இவர் சிறு வயதிலேயே சைவ சமயத்தின் பஞ்சாட்சரத்தை உச்சரிப்பதிலும், சிவலிங்கத்திற்கு பூஜை செய்வதிலும் தன்னுடைய சிந்தனையை செலுத்தினார்.

    இந்த நிலையில் சிவப்பிரகாசத்தின் குடும்பத்தினர் சென்னை நகருக்குக் குடிபெயர்ந்தனர். அங்கு சைவ ரத்தின தேசிகரிடம் வேதாந்த நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். சிவப்பிரகாசம், சிறுவயதிலேயே தனிமையை நாடினார். யோக பயிற்சிகளில் ஈடுபட்டு, அவ்வப்போது சமாதி நிலையை அடைந்துவிடுவார். ஒரு முறை அவர் சமாதி நிலையில் இருந்தபோது, அவரது குடும்பத்தினர் சிவப்பிரகாசம் இறந்து விட்டதாகக் கருதினர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் சமாதி நிலையில் இருந்து மீண்டதும்தான் அனைவருக்கும் உண்மை புரிந்தது.

    அவரது 16-வது வயதில் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். ஆனால் அந்த இல்லற வாழ்வில் இருந்து விடுபட நினைத்த அவர், திருவொற்றியூரில் பட்டினத்தாரின் சமாதி இருந்த இடத்திற்குச் சென்று துறவு கோலம் பூண்டார். அவரை குடும்பத்தினர் இல்லறத்திற்கு அழைத்து வந்தனர். வீடு வரை வந்தவர், வீட்டிற்குள் செல்லாமல், திண்ணையிலேயே அமர்ந்து கொண்டார்.

    தாயார் கொண்டு வந்து கொடுத்த உணவை கரத்தில் பெற்று உண்டார். மூன்று உருண்டை உணவை பெற்று சாப்பிட்டவர், அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். பின்னர் அவர் துன்பங்கள் சூழ்ந்திருந்த இல்லத்திற்குச் சென்று, ஒரு கவளம் உணவை கரத்தில் வாங்கி உண்பார். அதன் மூலம் அந்த இல்லங்கள் சுபீட்சமான வாழ்வை அடைந்தன. கரத்தையே பாத்திரமாக ஆக்கி உணவை வாங்கி அருந்திய காரணத்தால் ‘கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள்’ என்று அழைக்கப்பட்டார்.

    திருவான்மியூர், வேப்பேரி, சூளை, செங்கல்வராய தோட்டம் என தனது தவ வாழ்க்கையை பல இடங்களில் கழித்து வந்தார். அவர், சாதுக்களுக்காக ஒரு மடத்தை அமைக்க விரும்பினார். இதையறிந்த ஒரு தொண்டா், வியாசர்பாடியில் ஒரு இடத்தை வாங்க உதவி செய்தார். அங்கு சுவாமிகள், ‘ஆனந்தாசிரமம்’ அமைத்தார். அது ‘சாமியார் தோட்டம்’ என்றும் பெயர் பெற்றது.

    தன்னை நாடிவரும் அன்பர்களுக்கு அவர்களின் துன்பங்களைப் போக்கி வந்த சிவப்பிரகாச சுவாமிகள், தன்னுடைய உடலில் இருந்து ஆன்மாவைப் பிரிக்கும் காலம் நெருங்கியதை உணர்ந்தார். அந்தச் செய்தியை மூன்று நாட்களுக்கு முன்பாகவே தன்னுடைய பக்தர்களுக்கு அறிவித்தார். பின்னர் யோகத்தில் ஆழ்ந்தவர் 4.4.1918-ம் ஆண்டு சமாதி அடைந்தார். அவரது சமாதியின் மீது சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஆலயம் உருவானது.

    கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள், ‘ஆன்ம புராணம்’, ‘தத்துவாத சந்தானம்’ என்ற அத்வைத நூல்களை தமிழில் வெளியிட்டுள்ளார். இவரது 144-வது அவதார தினம், வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
    Next Story
    ×