search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவன்
    X
    சிவன்

    சிவனின் பெருமையை உயர்த்தி சொல்லும் பாடல்

    சிவபெருமானின் பெருமையை உயர்த்தி சொல்லும் இந்த பாடலை பிரதோஷ தினமான இன்று சொல்லி சிவபெருமானை வழிபாடு செய்தால் எண்ணங்கள் நிறைவேறும்.
    பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
    போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
    பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
    வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
    ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
    கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
    ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
    ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.

    பொருள்: தீயபண்புகள் இல்லாத குலத்தில் உதித்தவர்களும், கோயில் திருப்பணியையே சொந்தமாக்கிக் கொண்டவர்களுமான பெண்களே! நம் தலைவனாகிய சிவபெருமானின் சொல்வதற்கரிய பெருமையுடைய திருப் பாதங்கள் ஏழுபாதாள லோகங்களையும் கடந்து கீழே இருக்கிறது. பல் வேறு மலர்களை அணியும் திருமுடியானது வான த்தின் எல்லைகளைக் கடந்து எல்லாப் பொருட்களுக்கும் எல்லையாக இருக்கிறது. சக்தியை மேனியில் ஒரு பாகமாகக் கொண்டதால் அவன் ஒருவனல்ல என்பது நிஜமாகிறது. வேதங்களும், விண்ணவரும், பூலோகத்தினரும் ஒன்று சேர்ந்து துதித்தாலும் அவன் புகழைப் பாடி முடிக்க முடியாது. யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் அவன் நண்பன். ஏராளமான பக்தர்களைப் பெற்றவன். அவனுக்கு ஊர் எது? அவனது பெயர் என்ன? யார் அவனது உறவினர்கள்? யார் அவனது பக்கத்து வீட்டுக்காரர்கள்? எந்தப் பொருளால் அவனைப் பாடி முடிக்க முடியும்? சொல்லத் தெரியவில்லையே!

    விளக்கம்: சிவனின் பெருமையை உயர்த்திச் சொல்லும் பாடல் இது. "போதார் புனை முடியும் என்ற வரிக்கு "மலர்களை அணிந்தவன் என்ற பொருள் வருகிறது. சிவனுக்கு கொன்றை, ஆத்தி, தும்பை, எருக்கு, ஊமத்தை ஆகிய மலர்களை அணிவிக்கும் வழக்கமுண்டு. இதில் எதையாவது மனிதர்கள் பயன்படுத்துவதுண்டா? "உனக்கு மல்லிகையையும், ரோஜாவையும் வைத்துக் கொள். உனக்கு பயன்படாத ஒன்றை எனக்கு அணிவி என்று தன் எளிமையை வெளிப்படுத்துகிறான் இறைவன்.
    Next Story
    ×