search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வரலட்சுமி
    X
    வரலட்சுமி

    வரலட்சுமி விரத பூஜை முறைகள்

    வரலட்சுமி விரதம் மேற்கொள்ளும் நாள் முழுவதும் அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம், போன்றவற்றை கூறிக் கொண்டிருக்க வேண்டும்.
    பெண்கள் கொண்டாடும் முக்கியமான விரதங்களில் வரலட்சுமி விரத பூஜை குறிப்பிடத்தக்கது. மகாலட்சுமி வரங்களை அள்ளிக்கொடுப்பதற்கு பிரசித்தி பெற்ற தெய்வம் என்பதால் லட்சுமியை நினைத்து மேற்கொள்ளும் இந்த விரதம் வரலட்சுமி விரதம் என்று அழைக்கப்படுகிறது.

    எல்லா பெண்களும் இந்த விரதத்தில் பங்குகொள்வர் என்றாலும் திருமணமான பெண்கள் இந்த விரதத்தை தங்கள் மாங்கல்யம் பலம் நிலைக்கவும், வீட்டில் சுபீட்சம் நிலைத்திருக்கவும் இந்த விரதத்தை அதிகம் மேற்கொள்வர்.

    அன்பு, அமைதி, புகழ், இன்பம், வலிமை ஆகிய இந்த சக்திகள் வரலட்சுமியின் அம்சங்கள் எனவே வர
    லட்சுமி
      விரதம் மேற்கொள்ளும்போது நம் வாழ்வில் இந்த அம்சங்கள் எல்லாம் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம். சிவனுக்கு வில்வம், விஷ்ணுவுக்கு துளசி, என்பதை போல மகாலட்சுமிக்கு அருகம்புல்.

    அதன் மீது மகாலட்சுமிக்கு அதிக பிரியம் உண்டு. ஆவணி மாத சுக்கிலபட்ச வெள்ளிக்கிழமையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்று சந்தியாகால வேளையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. முதலில் வீட்டை நன்கு சுத்தமாகக் கழுவி மாக்கோலமிட்டு விளக்கேற்றி வீடெல்லாம் வாசனை புகை நிரம்பியிருக்க செய்ய வேண்டும்.

    பின்னர் அழகான மண்டபம் அமைத்து அதில் வாழை மரம், மாவிலை தோரணம் கட்டி சுவற்றில் சித்திரமாகவோ அல்லது வெள்ளியிலான வரலட்சுமி முகத்தை அமைத்து பின்னர் அம்மனுக்கு தோடு, மூக்குத்தி, சங்கிலி, வளையல் போன்றவற்றை பூட்டி அலங்காரம் செய்ய வேண்டும்.. பின்னர் தாழம்பூ பின்னலிட்டு பூச்சூட்டி கலசம் வைத்துப் பூஜிக்க வேண்டும்.

    கலசத்தில் வரலட்சுமியை ஆவாஹணம் செய்து பூஜையை பயபக்தியுடன் தொடங்க வேண்டும். அழகிய மேடை மீது கும்ப கலசத்தை வைத்து கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சம்பழம், சிறிய தங்க டாலர் ஆகியவற்றை வைக்க வேண்டும். பின்னர் வெண்மையான பட்டு ஆடை கொண்டு கும்பத்தை அலங்கரித்து அம்பாளின் திருமுகத்தை அதில் அமைக்க வேண்டும்.

    மஞ்சள் சரடை கும்பத்தின் மீது சாற்றி அம்பாளை கிழக்குமுகமாக எழுந்தருளச் செய்து வலது பக்கத்தில் அமர்ந்து மஞ்சள் சரடை கும்பத்துடன் சேர்த்து பூஜிக்க வேண்டும். பின்னர் பூக்களாலும், தூப தீபங்களாலும் அம்பாளை ஆராதித்து மஞ்சள் சரடை வலது மணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் கட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் நிவேதனம் படைக்க வேண்டும்.

    இனிப்பு, கொலுக்கட்டைகளை படைத்து, பதினாறு வகை உபசரணங்களை செய்து பூஜையில் கலந்துகொள்ள வந்திருப்பவர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் கொடுக்க வேண்டும். பிறகு விரதம் மேற்கொள்ளுபவர்கள் உண்ண வேண்டும்.

    வரலட்சுமி  விரதம் மேற்கொள்ளும் நாள் முழுவதும் அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம், போன்றவற்றை கூறிக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு பக்தி சிரத்தையுடன் வரலட்சுமி விரதம் மேற்கொள்வதனால் மாங்கல்ய பலம், செல்வச்செழிப்பு, ஐஸ்வர்யங்கள் கிடைத்து வாழ்வு மேலோங்கும் என்பது ஐதீகம்.
    Next Story
    ×