
இருந்தபோதும், திருவிழா நடக்கும் என நம்பிக்கையில் பல்வேறு வேடங்களை அணியும் பக்தர்கள் தற்போது விரதம் தொடங்கி உள்ளனர். ஏராளமான பக்தர்கள் குலசேகரன்பட்டினம் கடலில் புனித நீராடி, கோவிலில் வந்து சாமி தரிசனம் செய்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, பக்தர்களுக்கு அர்ச்சகர்கள் துளசிமாலை அணிவிக்கவில்லை. எனவே, கோவிலுக்கு முன்பாக பக்தர்கள் தங்களுக்கு தாங்களே துளசிமாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.
விரதம் தொடங்கிய பக்தர்கள் தங்களது ஊர்களில் உள்ள கோவில்களின் அருகில் பிறை அமைத்து தங்கி உள்ளனர். அங்கு அவர்கள் தினமும் ஒருவேளை பச்சரிசி உணவு உண்டு, அம்மன் புகழ்பாடி வழிபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து உடன்குடி அருகே மாதவன்குறிச்சி ஈசுவரி தசரா குழு நிர்வாகி கருப்பசாமி கூறியதாவது:-
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெறும் என்ற நம்பிக்கையில் எங்களது ஊரில் பக்தர்கள் விரதம் தொடங்கி உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, தசரா திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கும்நிலை ஏற்பட்டால், உள்ளூரில் உள்ள கோவிலிலேயே காப்பு கட்டி, வேடம் அணிந்து வேண்டுதலை நிறைவேற்றுவோம்.
எனினும் தசரா திருவிழாவுக்கு முன்பாக கொரோனா தொற்றை அம்மன் அழித்து, விழா சிறப்பாக நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.