search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காரியங்களில் வெற்றி தரும் சூரியன் விரத வழிபாடு
    X
    காரியங்களில் வெற்றி தரும் சூரியன் விரத வழிபாடு

    காரியங்களில் வெற்றி தரும் சூரியன் விரத வழிபாடு

    ஆவணி மாதம் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் விரதம் இருந்து சூரியனுக்குரிய கவசம் பாடிச் சூரிய வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
    நவக்கிரகங்களில் ‘ராஜகிரகம்’ என்று அழைக்கப்படுவது சூரியன் ஆகும். அது மேஷம் முதல் மீனம் வரை, மாதம் ஒரு ராசி வீதம் பன்னிரண்டு மாதமும் பவனி வந்து நமக்கு நன்மைகளை வழங்குகின்றது. அந்த சூரியனுக்கு முக்கியத்துவம் தரும் மாதம் ஆவணி மாதமாகும். இந்த மாதத்தில்தான் சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்தில் உலா வருகின்றது.

    ஆவணி மாதம் என்றாலே, விநாயகர் சதுர்த்திதான் நம் நினைவிற்கு வரும். விநாயகருக்கு உகந்த மாதம் இந்த மாதமாகும். ஆவணி மாதத்தில் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை அன்று தவறாமல் சர்க்கரைப் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட்டால், கண் நோய் பாதிப்பு எதுவும் ஏற்படாது. அப்படி கண் நோய் பாதிப்பு இருந்தால் அவை விரைவில் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

    நாம் நமது சொந்த வீட்டிலே இருப்பதற்கும், வாடகை வீட்டில் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. சொந்த வீட்டில் சுதந்திரமாக வாழலாம். வாடகை வீட்டில் வீட்டு உரிமையாளர் விதித்த கட்டுப்பாட்டின்படி வாழ வேண்டும். இல்லையென்றால் வீட்டைக் காலி செய்யச் சொல்லி விடுவார்கள் அல்லவா? அதுவே சொந்த வீடு என்றால் மகிழ்ச்சியோடு, சுதந்திரமாகவும் வாழ முடியும்.

    சூரியன், அப்படி சுதந்திரமாக செயல்படும் வீடு, அதாவது சூரியனின் சொந்த வீடு சிம்மம் ஆகும். சிம்மத்தில் சூரியன் உலாவரும் மாதத்தில் ஒருவர் பிறந்தால், ஜெகத்தை ஆளும் யோகம் வாய்க்கும். செல்வ வளர்ச்சியில் மற்றவர் வியக்கும் அளவு அவரது வாழ்க்கை அமையும் என்பது முன்னோர்களின் கருத்து.

    மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரையான நட்சத்திரங்கள் அடங்கியது தான், சிம்ம ராசி. அதற்குள் அடியெடுத்து வைக்கும் சூரியன் மகத்தின் காலில் சஞ்சரிக்கும் பொழுது ஒருவர் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம். பஞ்சாயத்து தலைவர் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரை பதவி வாய்ப்பு கிடைக்கவும், புகழின் உச்சிக்கு செல்லவும் வாய்ப்பு உருவாகும். பூரம் நட்சத்திரக் காலில் சூரியன் சஞ்சரிக்கும் பொழுது பிறந்தால், தாரத்தால் தொல்லைகள் ஏற்படாமல் இருக்க பொருத்தம் பார்ப்பது அவசியமாகும். உத்திர நட்சத்திரக் காலில் சூரியன் சஞ்சரிக்கும் பொழுது பிறந்தால், அத்தனை பேரும் பாராட்டும் அளவிற்கு வாழ்க்கை அமையும். எனவே ஆவணியில் பிறந்தவர்கள் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்லலாம்.

    கோபம் அதிகம் வந்தாலும் குணத்தில் சிறந்தவர்களாக சிம்ம ராசிக்காரர்கள் இருப்பார்கள். பரம்பரைப் பெருமையைக் காப்பாற்றுவார்கள். தேசபக்தியுடன், தெய்வ பக்தியையும் கொண்டு விளங்குவர். சட்டத்தை மதிப்பவர்களாகவும், திட்டம் தீட்டுபவர்களாகவும் இருப்பர். கொட்டமடிப்பவர்களைக் கொஞ்ச நேரத்தில் அடி பணிய வைத்து விடுவார்கள். அரசாங்க ஆதரவு அதிகம் பெற்றிருப்பர். எப்படியெல்லாம் வருமானத்தை உயர்த்துவது என்று 24 மணி நேரமும் சிந்திப்பார்கள். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாமல் வைத்துக் கொள்வதில் திறமைசாலிகளாக விளங்குவார்கள்.

    ஆவணி மாதத்தில் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தால், மாமனுக்கு ஆகாது. முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க முறையான பரிகாரங்கள் உள்ளது. பிறந்த நேரத்தின் அடிப்படையில் வழிபாடுகளை மேற்கொள்ளலாம். அதே அமைப்பில் குழந்தைகள் பிறந்தால் உரிய வழிபாடுகளை உடனடியாகச் செய்தால் மாமன், மைத்துனருக்குரிய முட்டுக்கட்டைகள் அகலும்.

    ஆவணி மாதம் சூரியனுக்கு உகந்த மாதம் என்பதால், ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் கதிரவனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது சிறப்பான பலனைத் தரும். அன்றைய தினம் சூரிய நமஸ்காரம் செய்யலாம். சூரியனுக்குரிய துதிப்பாடல்கள், ஆதித்யனுக்குரிய கவசங்கள் படித்து வழிபட்டால் அன்றாட வாழ்க்கை அமைதியாக அமையும். மேலும் புகழ் பெருகும், அரசியல் செல்வாக்கு மேலோங்கும். கதிரவன் வழிபாட்டால் அதிசயிக்கும் வாழ்க்கை அமையும்.

    ஆவணி மாதம் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் விரதம் இருந்து சூரியனுக்குரிய கவசம் பாடிச் சூரிய வழிபாட்டை மேற்கொள்ளலாம். கும்பகோணம் அருகில் உள்ள சூரியனார் கோவில் சென்று வழிபட்டும் வரலாம். உள்ளூரில் நவக்கிரகத்தில் உள்ள சூரிய பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி, கோதுமை தானம் கொடுத்து அர்ச்சனை செய்தும் வழிபடலாம்.

    காசினி இருளை நீக்கக்

    கதிரொளி யாகி நின்று,

    பூசனை உலகோர் போற்றப்

    புசிப்பொடு சுகத்தை நல்கி,

    வாசி ஏழுடைய தேரின்மேல்

    மகாகிரி வலமாகி வந்த

    தேசிகா எனை ரட்சிப்பாய்!

    செங்கதி ரவனே போற்றி! போற்றி!

    என்று சூரிய பகவான் சன்னிதியில் சூரிய கவசம் பாடினால், சுகமும், நலமும் நம்மை நாடி வரும்.

    அலமு ஸ்ரீனிவாஸ்
    Next Story
    ×