search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நினைத்த காரியங்களை நிறைவேற்றும் வெள்ளிக்கிழமை சக்தி விரத வழிபாடு
    X

    நினைத்த காரியங்களை நிறைவேற்றும் வெள்ளிக்கிழமை சக்தி விரத வழிபாடு

    வெள்ளிக்கிழமை அன்று அம்பிகையை விரதம் இருந்து வழிபாடு செய்தால் வெற்றிகள் வந்து குவியும்; வேதனைகள் அகலும் என்பது முன்னோர்கள் வாக்கு.
    திங்கள் செவ்வாயினில் தெரிசித்த மாந்தர்க்குத் தீங்குகள் அகன்று ஓடும்!
    சேர்புதன் வியாழனில் திருக்கோலம் கண்டோர்க்குச் செல்வங்கள் வந்து கூடும்!
    மங்கல வெள்ளி சனி ஞாயிறில் உனைக்கண்டோர் மாபெரும் வெற்றிகாண்பர்!

    என்று அம்பிகை பாமாலை எடுத்துரைக்கிறது. வெள்ளிக்கிழமை அன்று அம்பிகையை வழிபாடு செய்தால் வெற்றிகள் வந்து குவியும்; வேதனைகள் அகலும் என்பது முன்னோர்கள் வாக்கு. அந்த அடிப்படையில் எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கும் தை வெள்ளிக்கும் ஆலய வழிபாட்டை மேற்கொண்டால் அற்புதப் பலன் கள் கைமேல் கிடைக்கும். மாதங்களில் வித்தியாசமான மாதம் ஆடி மாதம்.

    பெண் தெய்வ வழிபாட்டின் மூலமும், முன்னோர் வழிபாட்டின் மூலமும் முத்தான பலன்கள் நமக்கு கிடைக்க வைக்கும் மாதமாகும். ஆடி வெள்ளியில் அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் தேடிய செல்வம் நிலைக்கும். ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்துவந்தால் முன்னேற்றப் பாதையில் இருக்கும் தடைகள் விலகும். எனவே மனித தெய்வங்களையும், மகத்தான பலன் தரும் தெய்வங்களையும் வழிபட உகந்த மாதமாக இம்மாதம் விளங்குகின்றது.

    அப்படிப்பட்ட அற்புதமான மாதத்தில் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் திருமகள் வழிபாட்டையும் ஆதிபராசக்தியையும் முறையாக வழிபட்டால் கும்பிட்டவுடன் குறைகள் தீரும்! நினைத்த காரியங்கள் அனைத்தும் நடைபெறும்!

    அம்பிகையைச் ‘சக்தி’ என்று சொல்கிறோம். எந்தக் காரியத்தையும் செய்யும் பொழுது ‘சக்தி இருந்தால் செய். இல்லையேல் சிவனே என்றிரு’ என்று பெரியவர்கள் சொல்வது வழக்கம். எனவே, ஒரு மனிதன் செயல்படக் காரணமாக இருப்பது அவன் உடலில் உள்ள சக்தியும், அவனுக்கு அருள்கொடுக்கும் சக்தி எனப்படும் அம்பிகையும் தான். அந்த சக்தி வழிபாடு நம் சஞ்சலத்தைத் தீர்க்கும். நம் வாழ்வில் சந்தோஷத்தைச் சேர்க்கும்.

    சக்தியை சாந்த வடிவத்தில் மீனாட்சி என்றும், காமாட்சி என்றும், விசாலாட்சி என்றும், உண்ணாமலை என்றும், அகிலாண்டேஸ்வரி என்றும், கமலாம்பிகை என்றும், திரிபுரசுந்திரி என்றும், காந்திமதி என்றும், பெரியநாயகி என்றும், தையல்நாயகி என்றும், ஞானப்பூங்கோதை என்றும், வடிவுடையம்மன் என்றும், கொடியிடையம்மன் என்றும், திருவுடையம்மன் என்றும் நாம் எண்ணற்ற பெயர்கள் சூட்டி வழிபாடு செய்கின்றோம்.

    மாரியம்மன் என்றும், காளியம்மன் என்றும், பொன்னழகி என்றும், கனகதுர்க்கா என்றும், கண்ணாத்தாள் என்றும், சமயபுரத்தாள் என்றும் அந்த ஓம்கார நாயகனின் தாயாக விளங்கும் ஆங்கார சக்திக்கு வடிவம் கொடுத்திருக்கிறார்கள். அந்த அம்பிகையை நாம் முறையாக விரதமிருந்து வழிபட்டு வர ஏற்ற மாதம் ஆடி மாதமாகும்.

    கோடி மாதங்கள் கிடைத்தாலும் ஆடி மாதம் போல் ஒரு மாதம் வழிபாட்டிற்கு கிடையாது. ஆடி மாதத்தில் தான் வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்வது வழக்கம். காரணம் சூரியன் கடகராசியில் சஞ்சரிக்கும் பொழுது ஆடி மாதத்தில் அம்பிகையை நோக்கி விரதமிருந்து நம் கோரிக்கைகளை நினைத்துக்கொண்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் தேடிவந்துகொண்டேயிருக்கும். துன்பங்கள் ஓடி ஒளியும்.

    குறிப்பாக ஒரு மனிதனின் வாழக்கைக்குத் தேவை அருளா?, பொருளா? என்று ஆராய்ந்து பார்க்கும் பொழுது தெய்வத்தின் அருளோடு வரும் பொருள்தான் என்று பதில் கிடைக்கும். அந்தப் பொருள் வளம் கொடுப்பவளை நாம் திருமகள் என்றும், லட்சுமி என்றும் வர்ணிக்கிறோம். எட்டு வகை லட்சுமியின் அருள் இருந்தால் பண மழையில் நாம் நனையலாம்.

    ‘அன்றாட வாழ்க்கையினில் அனுபவிக்கும் துன்பமெல்லாம்

    உந்தனருள் பெற்றுவிட்டால் ஓடுவதும் உண்மையன்றோ?

    இன்றோடு துயர்விலக இனிய தனலட்சுமியே!

    மன்றாடிக் கேட்கின்றோம் வருவாய் இதுசமயம்!’

    என்று தனலட்சுமியின் முன்னால் ஆடி வெள்ளிக்கிழமையன்று பாடினால், தனவரவு தாராளமாக வந்து கொண்டேயிருக்கும். பற்றாக்குறை அகன்று பணத்தேவைகள் பூர்த்தியாகும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். அங்ஙனம் வரம்கொடுக்கும் லட்சுமியை ‘வரலட்சுமி’ என்று அழைத்து விரதமிருந்து வழிபட ஏற்ற நாளும் ஆடி மாதம் தான்.

    வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில் வீட்டை மெழுகிக் கோலமிட்டு, மாவிலைத் தோரணம் கட்டி லட்சுமிக்கு வரவேற்பு கொடுக்க வேண்டும். வீட்டுவாசலில் லட்சுமிக்குரிய கோலங்களான தாமரைக் கோலம், இதயக்கமலம், ஐஸ்வர்யக் கோலம் போன்றவற்றை வரைந்து திருமகள் வருக! என்று கோலமாவினால் எழுதி வைக்கலாம். அஷ்டலட்சுமியும் இல்லத்தில் அடியெடுத்து வைக்க வேண்டுமானால் இல்லத் தூய்மை மிகவும் முக் கியமாகும்.

    அம்பிகைக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் லட்சுமியை இல்லத்திலும் வழிபாடு செய்யலாம். ஆலயத்தை நோக்கி நாம் அடியெடுத்து வைத்து மகாலட்சுமியை வழிபட்டால் வாழ்வில் வளம் சேரும். வசதி வாய்ப்புகளும் பெருகும். இமயத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு சமய மாலை பாடினால் சமயத்தில் வந்து நமக்கு கைகொடுத்து உதவுவாள்.

    “ஜோதிடக்கலைமணி” சிவல்புரிசிங்காரம்.
    Next Story
    ×