என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    சாரா (அலை) இப்ராஹிம் (அலை) அவர்களைவிடப் பத்து வயது இளமையானவர்கள். இருவருக்குமே முதுமை நெருங்கும் காலம்.
    சாரா (அலை) இப்ராஹிம் (அலை) அவர்களைவிடப் பத்து வயது இளமையானவர்கள். இருவருக்குமே முதுமை நெருங்கும் காலம். இப்ராஹிம் (அலை) மற்றும் சாரா (அலை) அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லாமை குறையாகவே இருந்தது. அதற்காக இப்ராஹிம் (அலை) இறைவனிடம் “எனக்கு ஸாலிஹான (இறையச்சமுள்ள) ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” என்று பிரார்த்திப்பதை சாரா (அலை) பார்க்கிறார்கள். இறைவன் தனக்குக் குழந்தை பாக்கியத்தைத் தராததால், மிஸ்ர் நாட்டு மன்னன் கொடுத்த பணிப்பெண் ஹாஜராவை திருமணம் செய்து கொள்ளுபடி இப்ராஹிம் (அலை) அவர்களிடம் சாரா (அலை) சொல்கிறார்கள். சாரா (அலை) சொன்னதையேற்று இப்ராஹிம் (அலை) ஹாஜராவை மணம் புரிந்து கொள்கிறார்கள்.

    அவர்கள் எதிர்பார்த்திருந்தபடியே ஹாஜரா இறைவனின் அருளால் கருவுற்றார்கள். மகிழ்ச்சியடைய வேண்டிய சாரா (அலை) வேதனைப்பட்டார்கள். தனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என்று அழுதார்கள். தன்னை இப்ராஹிம் (அலை) வெறுத்து ஒதுக்கிவிடுவார்களோ என்றும் அஞ்சினார்கள். சாரா (அலை) கேட்டுக் கொண்டதன் பேரில் நடந்தேறிய திருமணம் இப்போது சாராவுக்கே மனவருத்தம் என்பதால் ஹாஜரா மனவுளைச்சலில் பிரார்த்தனையில் இறங்கினார்கள். இறைவனிடமிருந்து ஹாஜராவுக்கு நற்செய்தி வந்தது.

    "உங்களுக்கு ஓர் அழகான ஆண் குழந்தை பிறக்கும் அதற்கு இஸ்மாயீல் என்று பெயர் சூட்டுங்கள். அந்தக் குழந்தையின் சந்ததிகளை இறைவன் மேன்மைப்படுத்துவான் அவருடைய சந்ததிகளிலிருந்து பன்னிரெண்டு தலைவர்கள் உருவாகி வருவார்கள்" என்பதுதான் அந்த நற்செய்தி.. இறைவனின் வாக்குப்படி இஸ்மாயீலும் பிறக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பிறக்கிறது. ஆனால் சாரா (அலை) அவர்கள் அதிருப்தியிலிருந்து மீளவில்லை. இப்ராஹிம் (அலை) மன நிம்மதி வேண்டி பிரார்த்திக்கும் வேளையில் இறைவன் அவர்களுக்கு அன்னை ஹாஜராவையும் பச்சிளம் குழந்தை இஸ்மாயீலையும் மக்காவில் கொண்டு விட்டுவிட்டு வரும்படி கட்டளை இடுகிறான்

    பாலஸ்தீனிலிருந்து கிளம்பி ஹாஜராவையும் பால்குடி குழந்தையையும் பாரஹான் பள்ளத்தாக்கில் 'கதாஉ' என்னும் இடத்தில் தற்போது காபா இருக்கும் இடத்திற்கு அருகில், வெட்டவெளி பாலைவனத்தில் ஒற்றை மரத்தின் நிழலின் கீழ் விட்டுவிட்டு ஒரு வார்த்தையும் பேசாமல் மனக் கஷ்டத்தோடு திரும்பி செல்கிறார்கள். இப்ராஹிம் (அலை) உறுதியாக இறைவனை நம்பினார்கள். இறையச்சம் மற்றும் இறைபக்தியின் காரணமாகத் தனக்கு வந்த கட்டளையை அப்படியே பின்பற்றினார்கள்.

    தன்னை விட்டுவிட்டுச் செல்லும் கணவரைப் பார்த்து அன்னை ஹாஜரா கேட்டார்கள், ``எங்களை இங்கே யாரிடம் விட்டுச் செல்கிறீர்கள்?`` என்று. இப்ராஹிம் (அலை) எந்தப் பதிலும் தரவில்லை. ``இப்ராஹிமே! இறைவன் சொல் கேட்டா எங்களை இங்கே விட்டுச் செல்கிறீர்கள்?`` என்று மறுபடியும் ஹாஜரா கேட்க, இப்ராஹிம் ``ஆம்`` என்று தலையசைத்தார்கள். ``அப்படியென்றால் இறைவன் எங்களைப் பார்த்துக் கொள்வான். எங்களைக் கண்டிப்பாகக் கைவிட மாட்டான்`` என்று திடமான நம்பிக்கையுடன் சொல்லிவிட்டார்கள் அன்னை ஹாஜரா.

    தன் மனைவியின் நம்பிக்கை வீண் போகாது என்று தெரிந்த இப்ராஹிம் (அலை) அங்கிருந்து கொஞ்ச தூரம் சென்றதும் மனது கேட்காமல் இரு கரங்களையும் உயர்த்திப் பிரார்த்தித்தார்கள் ``இறைவா, ஆள் நடமாட்டமில்லாத இந்த இடத்தில், வறண்ட இந்தப் பாலைவனத்தில் உன்னை மட்டும் நம்பி என் மனைவியையும் மகனையும் விட்டுச் செல்கிறேன். அவர்கள் வாழ்வதற்கான வசதிகளைத் தந்தருள்வாயாக, எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காகக் குடியமர்த்தி விட்டேன்.

    எனவே எங்கள் இறைவா! மனிதர்கள் இவர்களிடம் நல்லமுறையில் அன்புடன் நடந்து கொள்ளச் செய்வாயாக, உலகத்தில் உள்ள ஒவ்வொரு நல்மனிதனின் உள்ளத்தையும் இந்தப் பூமியில் இணைப்பாயாக!. மேலும் அவர்களுக்கு எல்லா விதமான கனி வகைகளை உணவாக வழங்குவாக!`` என்று கண்ணீர் மல்கப் பிரார்த்தித்து அங்கிருந்து திரும்பி சிரியா நோக்கி சென்றுவிடுகிறார்கள். இது மக்காவுக்காகச் செய்யப்பட்ட பிரார்த்தனை அதனால்தான் இந்த நிமிடம் வரை மக்கா நகரம் மிகச் சுபிட்சமாக, நல்ல அந்தஸ்துடன், உலகில் உள்ள எல்லாக் கனி வகைகளும் கிடைக்கக் கூடிய இடமாகத் திகழ்கிறது.

    இப்ராஹிம் (அலை) ஹாஜராவையும் குழந்தையையும் ஒரு வீட்டில் விடவில்லை, உணவு தந்து செல்லவில்லை, எப்போது திரும்பி வருவேன் என்று சொல்லவில்லை இறைவனின் கட்டளையென்று அப்படியே சொன்ன இடத்தில் விட்டுச் சென்றார்கள். அவர்கள் விட்டுச் சென்றது தண்ணீருள்ள ஒரே ஒரு தோல் பை மட்டுமே. ஹாஜிரா அதிலிருந்து தாகத்திற்குத் தண்ணீர் அருந்தினார். அவர்களின் பால்குடி குழந்தை இஸ்மாயீலுக்காகப் பால் சுரக்கலாயிற்று.

    கொஞ்ச நேரத்திலேயே தண்ணீர் தீர்ந்துவிடுகிறது. தாயும் மகனும் தாகத்திற்குள்ளானார்கள். அந்த நொடியில்தான் ஹாஜரா அம்மையார் எவராவது தென்படுகிறார்களா என்று தேடுகிறார்கள். அங்கு அருகில் ஸஃபா என்ற மலைக் குன்றுக்கு சென்று ஏறி பார்க்கிறார்கள். எவரும் தென்படவில்லை தூரத்தில் தண்ணீர் தெரிவது போலுள்ளது எனவே அங்கிருந்து இறங்கி மர்வா மலைக் குன்றுக்கு வருகிறார்கள். அவர்கள் பார்த்தது கானல் நீர் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

    மீண்டும் அங்கிருந்து பார்க்கும் போது ஸஃபா மலைக்குன்று அருகில் தண்ணீர் இருப்பதாக நினைத்துக் கொண்டு மீண்டும் ஓடுகிறார்கள். பாலைவனத்தில் ஏது தண்ணீர்? இப்படி ஏழு முறை ஸஃபா- மர்வா என்று ஓடுகிறார்கள். அதன் பிறகு குழந்தையை அங்கிருந்து எட்டிப் பார்க்கிறார்கள். குழந்தை இஸ்மாயீல் அழுத வண்ணமுள்ளதை கண்டு மனம் பதை பதைத்து நிம்மதியில்லாத நிலையில் எவராவது தென்படுகிறார்களா என்று பார்க்கிறார்கள்.

    அந்த நேரத்தில் ஒரு குரல் ஒலிக்கிறது. குரல் ஒலி எங்கிருந்து வருகிறது என்று தெரியாதவராக அவர், ''உங்களால் நன்மை செய்ய முடியுமென்றால் எங்களைக் காப்பாற்றுங்கள்" என்று கூறினார். அங்கே வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நின்றிருந்தார்கள். குழந்தை இஸ்மாயீல் அழுது கொண்டே தம் கால்களைத் தரையில் அடிக்க, குதிகாலின் பக்கம் தண்ணீர் பீறிட்டு வர வானவர் ஜிப்ரீல் உதவுகிறார்கள். ஹாஜரா உடனே குழந்தையைப் பாதுகாப்பாக வைத்துவிட்டு, தண்ணீர் பீறிட்டு வரும் இடத்தில் அணை போல் கட்டி 'ஸம் ஸம்' என்கிறார்கள். 'ஸம் ஸம்' என்றால் ஓடாதே நில் என்று பொருள்.

    அன்று அவர்கள் அந்தத் தண்ணீரை அணை போல் கட்டி நிற்க வைக்காமல் போயிருந்தால் தண்ணீர் வெளியே ஓடக் கூடியதாகி இருக்கும். இன்று அது ஒரு கிணறாகப் பல கோடி மக்களுக்கு இன்றளவும் பயன் தரக் கூடிய கிணறாக இருக்கிறது. உலகத்திலுள்ள அனைத்து மக்களும் ஹஜ் கிரியைகளைச் செய்துவிட்டு ஸம்ஸம் தண்ணீர் அருந்தி தங்கள் ஊருக்கும் ஸம்ஸமை எடுத்துச் செல்வது கண்கூடு.

    'ஸம் ஸம்' என்று தண்ணீரை நிற்க வைத்து அந்தத் தண்ணீரிலிருந்து அள்ளித் தம் தண்ணீர்ப் பையில் போட்டுக் கொள்ளத் தொடங்கினார்கள் அன்னை ஹாஜரா. அவர்கள் அள்ளியெடுக்க எடுக்க அது பொங்கியபடி இருந்தது. பிறகு 'ஸம் ஸம்' தண்ணீரை உடனே குடிக்கலானார். அவரின் பால் அவரின் குழந்தைக்காகச் சுரந்த வண்ணமிருந்தது. இப்படியாக அவர்களின் வாழ்வாதாரமும் அழகான முறையில் அந்த இடத்தில் தொடங்கியது.

    'ஜுர்ஹும்' என்ற குலத்தாரின் ஒரு குழுவினர் அவர்களைக் கடந்து சென்றபோது தண்ணீரின் மீதே வட்டமடித்துப் பறக்கும் ஒரு வகைப் பறவையைக் கண்டு, அவர்களில் ஒருவரை அங்கே தண்ணீர் இருக்கிறதா என்று உறுதி செய்து வர அனுப்பினார்கள். அங்கே தண்ணீர் இருப்பதைக் கண்டு அக்குலத்தார், அன்னை ஹாஜராவிடம் அங்கே தங்கிக் கொள்ள அனுமதி கேட்டார்கள். ஹாஜரா (அலை) அனுமதி அளித்ததோடு தண்ணீரில் அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதையும் தெளிவுப்படுத்தினார்கள். அவர்கள் அங்கே தங்கினார்கள். தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கும் சொல்லியனுப்பி அதன் விளைவாக அக்குலத்தைச் சேர்ந்த பல வீடுகள் மக்காவில் தோன்றியது.

    அந்த நகரம் உருவாக அடிப்படையாக இருந்தது ஸம்ஸம் அதிசய தண்ணீர்தான். ஸம்ஸம் இன்றும் நம்மிடத்தில் உள்ளது. இறைநம்பிக்கையோடு தம் குழந்தையுடன் அந்த இடத்தில் தங்கிவிட்ட அன்னை ஹாஜராவுக்கு இறைவன் தந்த அற்புத பரிசு ஸம்ஸம் நீருற்று. ஏழு முறை ஸஃபா மர்வாவுக்கிடையில் அவர்கள் ஓடி தவித்த தவிப்பை இன்றும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டி உம்ரா மற்றும் ஹஜ் செய்யும் அனைவரும் ஸஃபா- மர்வா மலைக் குன்றுக்கு இடையே ஓடும் தொங்கோட்டம் இன்றும் நடைமுறையில் உள்ளது. ஹஜ் கிரியைகளில் பெரும்பாலான விஷயங்கள் இப்ராஹிம் (அலை) அவர்களின் இறைநம்பிக்கையை நமக்கு நினைவுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

    திருக்குர்ஆன் 14:35-38, ஸஹிஹ் புகாரி 4:60:3365

    - ஜெஸிலா பானு. 
    காரைக்காலை அடுத்துள்ள நாகூர் தர்கா பிரசித்தி பெற்ற ஆன்மிகத் தலமாக விளங்கி வருகிறது.
    காரைக்காலை அடுத்துள்ள நாகூர் தர்கா பிரசித்தி பெற்ற ஆன்மிகத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு அடக்கமாகி இருக்கும் நாகூர் ஆண்டவர் என்று அனைவராலும் அழைக்கப்படும் ஹலரத் செய்யது சாகுல்ஹமீது பாதுஷா நாயகம், சுமார் 460 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்கால் மாவட்டம் கீழவாஞ்சூரில் பூமிக்கடியில் 41 நாட்கள் தவம் இருந்து பல அற்புதங்களை நிகழ்த்தினார்.

    அவ்வாறு நாகூர் ஆண்டவர் தவம் இருந்த இடத்தில் உள்ள தர்காவில், நாகூர் ஆண்டவர் தவம் இருந்ததை நினைவு கூரும் வகையில் நாகூர் தர்கா போர்டு ஆப் டிரஸ்ட் சார்பில் ஆண்டுதோறும் கந்தூரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 459-வது கந்தூரிவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து தினமும் மாலையில் மவுலூது மற்றும் ராத்திபு ஓதப்பட்டு வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு சந்தனம்பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி நாகூரில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு நள்ளிரவு 12 மணியளவில் தர்காவை வந்தடைந்தது. தொடர்ந்து அந்த சந்தனக்கூடு, தர்காவை மூன்று முறை சுற்றி வலம் வந்ததும், அதிலிருந்து சந்தனக் குடங்கள் இறக்கப்பட்டு தர்காவிற்குள் எடுத்துச்செல்லப்பட்டது.

    பின்னர் நாகூர் ஆண்டவர் தவம் இருந்த புனித இடத்தில் சந்தனம் பூசப்பட்டது. தொடர்ந்து பாத்திஆ மற்றும் விசேஷ துஆ ஓதப்பட்டது. நிகழ்ச்சியில் நாகூர் தர்கா நிர்வாக அறங்காவலர் ஷேக்ஹுசைன் சாபு காதிரி, நாகூர் பரம்பரை கலீபா சாபு, பரம்பரை நாட்டாமைக்காரர்கள், கீழவாஞ்சூர் மற்றும் காரைக்கால், நாகை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    வாழ்க்கையில் ஒரு மனிதன் எந்தச் சூழலிலும் பொய் சொல்லக் கூடாது.
    வாய்மை என்பது மற்றவர்களுக்கு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைச் சொல்லுதல் என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார். அதே வள்ளுவர்தான் நல்ல விசயத்திற்காகச் சொல்லப்படும் பொய்யும் கூட உண்மைக்கு ஒப்பானதென்றும் குறிப்பிடுகிறார்.

    வாழ்க்கையில் ஒரு மனிதன் எந்தச் சூழலிலும் பொய் சொல்லக் கூடாது. 'பொய்'தான் தவறான பாதைக்கு முதல் படி என்று நபிகள் நாயகம் (ஸல்) சொல்லியுள்ளார்கள்.

    ஆனால் இப்ராஹிம் (அலை) மூன்று சூழ்நிலையில் பொய் சொன்னதாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன.

    முதல் பொய்யானது மக்கள் எல்லோரும் தாங்கள் வழிபடும் தெய்வங்களுக்காக நடத்திய திருவிழாவிற்குச் செல்லும் போது இப்ராஹிம் நபியை தங்களுடன் வரச் சொல்லி அழைத்த போது, இணை வைப்பதை விரும்பாத இப்ராஹிம் நபி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று பொய் சொல்லி திருவிழாவிற்குப் போகாமல் இருந்து விடுகிறார்.

    இரண்டாவது பொய், இப்ராஹிம் அங்குள்ள எல்லாச் சிலைகளையும் உடைத்த பிறகு, மக்கள் அதிருப்தி கொண்டு இப்ராஹிமிடம் கோபமாக ``இது உம்முடைய வேலைதானே?`` என்று கேட்டபோது, இப்ராஹிம் (அலை) “இந்தப் பெரிய சிலைதான் இதைச் செய்தது” என்று `பொய்` சொல்கிறார்கள்.

    இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இப்ராஹிம் (அலை) தன் தாயகத்தைத் துறந்து வேறு ஊருக்கு சென்று தன் மனைவி சாராவுடன் தங்கிவிடுகிறார்கள். அந்த ஊரின் கொடுங்கோல் மன்னனின் வழக்கம் மற்றவரின் மனைவியை அபகரிப்பதே. இப்ராஹிம் (அலை) என்பவர் அவருடைய அழகான மனைவியுடன் அந்த ஊருக்கு வந்திருப்பதை அறிந்த மன்னன், இப்ராஹிமை அழைத்து வரப் பணிக்கிறார்.

    இப்ராஹிமிடம் மன்னன் “உன்னுடன் வந்த அந்தப் பெண் யார் எனக் கேட்டதும், இப்ராஹிம் (அலை) சாமர்த்தியமாக, “என் சகோதரி” என்று பொய் சொல்லிவிடுகிறார்கள். இதுவே இப்ராஹிம் சொன்ன மூன்றாவது பொய்.

    வீடு திரும்பிய இப்ராஹிம் சாராவிடம் “இந்த ஊரில் உன்னையும் என்னையும் தவிர இறை நம்பிக்கையாளர்கள் தற்போது எவரும் இல்லை. கொடுங்கோல் மன்னன் உன்னைப் பற்றிக் கேட்டான். நான் உன்னை என் சகோதரி என்று பொய் சொல்லிவிட்டேன். நீயும் அப்படியே சொல்லிவிடு” என்று கேட்டுக் கொண்டார்கள்.

    சாரா (அலை) அவர்களை மன்னன் அழைத்து வரப் பணிக்கிறான். சாரா (அலை) அவனிடம் சென்றபோது, அந்த மன்னன் சாராவைக் கண்டு மயங்கி அவளைத் தொட முயற்சிக்கிறான். அவனுடைய தவறான வினைக்குத் தண்டனையாக உடனே அவன் வலிப்பு நோயால் தாக்கப்படுகிறான்.

    அந்த மன்னன் சாரா (அலை) அவர்களிடம் தனக்காகப் பிரார்த்திக்கும்படியும் கைகளைக் குணப்படுத்தும்படியும் கேட்கிறான். அவன் வார்த்தையை நம்பி சாரா (அலை) அவர்கள் இறைவனிடம் பிரார்த்திக்க, அவன் வலிப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறான். கை சரியான அதே நொடியில் மனதைக் கட்டுப்படுத்த தெரியாத மன்னன் மீண்டும் சாரா (அலை) அவர்களை அணைக்க முயல்கிறான். மறுபடியும் வலிப்பு நோயால் தண்டிக்கப்படுகிறான்.

    அதைவிட மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டதால் துடிக்கிறான் மன்னன். “நான் கண்டிப்பாக உனக்கு எந்தத் தீங்கும் செய்ய மாட்டேன், எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பாயாக” என்று மன்னன் சாராவிடம் கெஞ்சுகிறான். சாராவும் அவன் வலிப்பிலிருந்து விடுபட வேண்டுமென்று அவனுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறார்கள். அவனுக்குக் கை சரியாகிவிடுகிறது.

    அவன் தன் பணியாளனை அழைக்கிறான் “நீங்கள் அழைத்து வந்தது ஒரு பெண்ணை அல்ல ஒரு பிசாசை” என்று சொல்லி, அவள் தன்னைச் சரியாக்கிவிட்டதற்காகப் பரிசு பொருட்களும், ஆடுகளும், பணிப்பெண்ணாக ஹாஜிரா என்பவரையும் சாராவிற்குக் கொடுத்து அனுப்புகிறான். அந்த ஊரைவிட்டு அவர்களைக் கிளம்பிடும்படியும் மன்னன் சொல்கிறான்.

    சாரா (அலை) வீட்டிற்குள் நுழையும் போது இப்ராஹிம் (அலை) அவர்கள் தொழுது கொண்டு இருக்கிறார்கள். சாராவைக் கண்டதும் தன் கைகளால் சைகை செய்து `என்ன நடந்தது?` என்று கேட்கிறார்கள். அதற்கு சாரா “நிராகரிப்பாளனின் திட்டம் நிறைவேறவில்லை, அந்தத் தீயவனின் சூழ்ச்சியை முறியடித்துவிட்டான் இறைவன். அவன் மீதே அவன் சூழ்ச்சியைத் திருப்பி விட்டான் அல்லாஹ்” என்று சொல்லி ஹாஜிராவைப் பணிப்பெண்ணாக அளித்ததையும் தெரிவிக்கிறார்கள்.

    அந்த ஊரைவிட்டு இப்ராஹிம், சாரா மற்றும் ஹாஜிரா வெளியேறுகிறார்கள். வெவ்வேறு ஊருக்குச் சென்று ஓரிறைக் கொள்கை பற்றிப் பிரச்சாரம் செய்கிறார்கள் நபி இப்ராஹிம் (அலை). அமைதியான சூழலில் வாழ்ந்து வந்தாலும் இப்ராஹிம் (அலை) மனதில் ஒரு குறை இருந்து கொண்டே இருக்கிறது. நபி இப்ராஹிம் (அலை) மற்றும் சாரா (அலை) அவர்களுக்கு 20 வருட காலமாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. இதற்காக இப்ராஹிம் (அலை) இறைவனிடம் “எனக்கு ஸாலிஹான (இறையச்சமுள்ள) ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” என்று பிரார்த்திப்பதை சாரா (அலை) பார்த்துவிடுகிறார்கள்.

    இறைவன் தனக்குக் குழந்தை பாக்கியத்தைத் தராததால், பணிப்பெண் ஹாஜராவை திருமணம் செய்து கொள்ளுபடி இப்ராஹிம் (அலை) அவர்களிடம் சாரா (அலை) சொல்கிறார்கள். சாரா (அலை) சொன்னதையேற்று இப்ராஹிம் (அலை) ஹாஜராவை மணம் புரிந்து கொள்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் ஓர் அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தைதான் இஸ்மாயில் (அலை) அவர்கள். இவர்களின் தலைமுறையின் கீழ் வந்தவர்கள்தான் நபிகள் நாயகம் முகமது (ஸல்). ஆகையால் ஹாஜிராதான் நம் அனைவரின் தாயாரும்.
    ஸஹிஹ் புகாரி நூல் 60:3357, 3358, 7:89:6950, திருக்குர்ஆன் 37:100

    - ஜெஸிலா பானு, 
    நூஹ் வம்ச வழியிலே பத்தாவது தலைமுறையில் ஆஸர் என்பவரின் மகனாக பாபிலோன் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார்கள் நபி இப்ராஹீம்
    நூஹ் வம்ச வழியிலே பத்தாவது தலைமுறையில் ஆஸர் என்பவரின் மகனாக பாபிலோன் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார்கள் நபி இப்ராஹீம் (அலை). இப்ராஹிம் அவர்களின் சகோதரர் இறந்த பிறகு அவருடைய குழந்தைகளான லூத் மற்றும் சாராவையும் அழைத்துக் கொண்டு அவர்கள் கன்னான் என்ற பகுதிக்கு (இன்று சிரியா, ஜோர்டான் இருக்கும் இடம் ) குடிப்பெயர்ந்தார்கள்.

    தன்னுடைய வாழ்வும் மரணமும் ஒரு மனிதரிடமோ, சிலைகளிடமோ, சூரியன், சந்திரன், நெருப்பு, நட்சத்திரம் என்று எதன் கைகளிலும் இல்லாதபோது தான் ஏன் இதற்கு முன்பு நின்று சிரம் தாழ்த்த வேண்டும், அடிபணிய வேண்டுமென்று தன் சிறு வயதிலேயே கேள்விகளை எழுப்பியவர்கள் இப்ராஹிம் (அலை). சிந்திக்கத் தொடங்கிய அவர் "இறைவனுக்கு இணை வைக்கும் ஒவ்வொன்றையும் விட்டு நான் விலகி விட்டேன்" என்று உறுதியுடன் கூறி இறைவனிடம் தன்னை வழிநடத்த வேண்டுமென்று பிரார்த்தித்ததோடு, மக்களிடமும் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்கள்.

    இப்ராஹிம் நபிகளின் தந்தை ஆஸர் புரோகிதராக இருந்ததோடு மட்டுமல்லாமல்  சிலைகளை வடிவமைப்பவரும் கூட.  மதகுரு குடும்பத்தில் வந்தவர்கள் என்பதால் அவர் வெவ்வேறு அளவில் வடிவமைத்த சிலைகளை அவர் தெய்வங்களென்று மக்களை நம்ப வைத்து அதனை வியாபாரமாக்கினார். இது தவறென்றும் படைத்த இறைவன் ஒருவன் இருக்க அவனுக்கு இணைவைக்கும் சிலைகளை தெய்வமாக்கலாமா, நியாயமா என்று கேள்வி கேட்டார் இப்ராஹிம். தந்தை ஆஸருக்குக் கோபம் வந்து "எனது தெய்வங்களை நீ அலட்சியப்படுத்தினால் உன்னைக் கல்லால் எறிந்து கொல்வேன். என்னை விட்டு விலகிச் செல்" என்று மகனை விலக்கி வைத்தார்.

    ``சிலைகளை முட்டாள்களே வணங்குவார்கள்`` என்று சொல்லி ஊரில் உள்ள எல்லா மக்களிடமும் கெட்ட பெயரையும் வெறுப்பையும் சம்பாதித்த இப்ராஹிம் (அலை), நாட்டின் மன்னனாக இருந்த நம்ரூத்தையும் சந்தித்து ஏகத்துவம் பற்றி விளக்கினார்கள்.

    ஒருநாள் நம்ரூதின் அரண்மனைக்கே இப்ராஹிம் (அலை) நேரடியாகச் சென்று சத்திய மார்க்கத்தைப் பற்றி விளக்கி விவாதிக்கத் துணிந்தார்கள். "என் இறைவன் உயிர் கொடுப்பவன், மரணிக்கச் செய்பவன்" என்று இப்ராஹிம் கூறிய போது, "நானும் உயிர் கொடுப்பேன், மரணிக்கச் செய்வேன்" என்று நம்ரூத் கூறினான். "அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். அதனை நீ மேற்கில் உதிக்கச் செய்!" என்று இப்ராஹிம் (அலை) சொன்னார்கள். ஏக இறைவனை மறுத்த அவன் வாயடைத்துப் போனான்.

    இன்னொரு சமயத்தில் ஒரு திருவிழா வந்த போது மக்கள் அனைவரும் ஊருக்கு வெளியே சென்று விட்டனர். அத்தருணத்தில் இப்ராஹிம் (அலை) அவர்கள் சிலைகள் இருக்கும் இடத்திற்கு வந்து கோடாரியைக் கொண்டு அங்கிருந்த ஒரு பெரிய சிலையைத் தவிர்த்து மற்ற எல்லாச் சிலைகளையும் அடித்து உடைத்து நொறுக்கினார்கள். நடுவில் நின்ற பெரிய சிலையின் கழுத்தில் அந்தக் கோடாரியை மாட்டினார். திரும்பி வந்த மக்கள் சிலைகள் உடைந்திருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்தனர். நம் தெய்வங்களைப் பற்றி அவதூறாகப் பேசித் திரிந்த இப்ராஹிம்தான் இதைச் செய்திருக்கக் கூடும் என்று உணர்ந்து அவரை அழைத்தார்கள்.

    அவரிடம் "இப்ராஹிமே! எங்கள் தெய்வங்களை உடைத்தது நீ தானே?" என்று கேட்டார்கள். அவர் மிகவும் தன்மையாக "இந்தப் பெரிய சிலை கழுத்தில் தானே கோடாரியுள்ளது, அதுதான் உடைத்திருக்கக் கூடும். அந்தச் சிலையிடமே கேட்டுக் கொள்ளுங்கள்" என்று சாமர்த்தியமாகப் பதிலளித்தார்.

    அவர்கள் அவர் சொல்ல வரும் விஷயத்தைப் புரிந்து கொண்டார்கள். நாம்தான் இவற்றை தெய்வங்களாக நம்பி தவறு இழைத்துவிட்டோம் என்று சிலர் சொன்னாலும் அவர்களால் நேரடியாக ஒப்புக் கொள்ள முடியவில்லை.

    அவமானப்பட்டதை மறைக்கும் விதமாக, அதனைத் தவிர்ப்பதற்காக "சிலைகள் பேசாது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்களா!?" என்று கேட்டனர்.

    “ஓ! அப்படியானால் சிலைகள் பேசாது என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படி எந்த நன்மையும் தீமையும் அளிக்காதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்? இவ்வாறு செய்வதன் மூலம் இறைவனுக்கு இணை வைக்கிறீர்கள். அது உங்களுக்குக் கேடுதான் என்று உணர்கிறீர்களா? நீங்கள் ஏதேனும் நன்மை செய்ய நாடினால் இவைகளை நெருப்பிலிட்டு எரியுங்கள்” என்று கூறினார்.

    அவர் பேசியதை மக்கள் ஏற்க முடியாமல் அவர் மீது கோபம் கொண்டனர். இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இப்ராஹிம் (அலை) அவர்களைத் தீர்த்துக் கட்ட முயற்சித்தான் நம்ரூத்.

    இப்ராஹிமுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும். அவரை நெருப்புக் குண்டத்தில் தூக்கியெறிய வேண்டுமென்று முடிவெடுத்தார்கள். அப்படியான தண்டனை என்று கேட்டதும் இப்ராஹிம் தான் கூறியது தவறு என்று மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்த்தார்கள்.

    நெருப்புக் குண்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இப்ராஹீம் (அலை) அவர்களைக் குண்டுக்கட்டாகக் கட்டி நெருப்பில் தூக்கி எறிந்தார்கள். அவர்கள் தீயில் கருகி சாம்பலாகிவிடுவார், பொசுங்கியவுடன் அவர் பிரச்சாரம் செய்த விஷயங்களும் மறைந்துவிடும் என்று ஆவலுடன் நம்ரூத் எதிர்பார்த்தான். ஆனால் அங்கு காட்சி மாறியது. அல்லாஹ் அந்த நெருப்புக் குண்டத்தையே இப்ராஹிம் (அலை) அவர்களுக்குக் குளிர்ச்சியாகவும் சுகமளிக்கக் கூடியதாகவும் மாற்றினான்.

    "எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்" என்று இப்ராஹிம் (அலை) நெருப்பிலிருந்தபடி கூறினார்கள்.

    இச்சமயத்தில் நம்ரூத் இறை நிராகரிப்பை விட்டுவிட எண்ணினான். ஆனால் அவனை ஏதோ தடுத்தது. நம்ரூத் இப்ராஹீம் (அலை) அவர்களை நாட்டைவிட்டு வெளியேறுமாறு கட்டளையிட்டான். அவ்வாறே இவர்கள் ஸாரா, லூத் ஆகியோர்களுடன் வெளியேறினார்கள். அதன் பிறகு ஸாராவை பின்னாட்களில் மணம் முடித்துக் கொண்டார்கள். லூத்தை இறைவனின் கட்டளைப்படி வேறு நாட்டுக்கு அனுப்பிவிட்டு, அவர்கள் தம் மனைவி சாராவுடன் மிஸ்ர் நாட்டுக்கு சென்று அங்கு தங்கினார்கள்.

    திருக்குர்ஆன்: 19:46, 2:130, 2:258, 21:58-69, 6:76-83 ஸஹிஹ் புகாரி 4564.

    [அலை: “அலை ஹிஸ்ஸலாம்” அல்லது “அலை ஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம்” என்பதன் சுருக்கமாகும். நபிகள் நாயகம்(ஸல்) தவிர மற்ற நபிமார்களைப் பற்றிக் கூறும்போது இவ்வாறு பயன்படுத்தி வருவது வழக்கமாகவுள்ளது. அவர் மீது இறைவனின் சிறப்பருளும் சாந்தியும் ஏற்படட்டுமாக என்பது இதன் பொருள். அதாவது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதற்கு என்ன பொருளோ அதே பொருள் தான் அலை ஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்பதற்கும் பொருளாகும்.]

    - ஜெஸிலா பானு.
    மதினாவிற்கும் தபூக்கிற்கும் இடையில் ஹிஜ்ர் என்ற ஊரில் 'மதாயின் ஸாலிஹ்' என்ற இடம் ஜோர்டானின் பெட்ராவை போல மிக அழகான வேலைப்பாடுகள் நிறைந்த மண்டபங்களையும் மலைகளைக் குடைந்த வீடுகளையும், சிற்ப கலைகள் நிறைந்த அமைப்புகளையும் காண முடிந்தாலும் அதனை சுற்றுலாத்தளம் போல் யாரும் சென்று பார்க்கச் செல்வதில்லை.
    மதினாவிற்கும் தபூக்கிற்கும் இடையில் ஹிஜ்ர் என்ற ஊரில் 'மதாயின் ஸாலிஹ்' என்ற இடம் ஜோர்டானின் பெட்ராவை போல மிக அழகான வேலைப்பாடுகள் நிறைந்த மண்டபங்களையும் மலைகளைக் குடைந்த வீடுகளையும், சிற்ப கலைகள் நிறைந்த அமைப்புகளையும் காண முடிந்தாலும் அதனை சுற்றுலாத்தளம் போல் யாரும் சென்று பார்க்கச் செல்வதில்லை. காரணம் அது இறைவனின் வேதனை இறங்கிய இடம் என்று திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.

    'மதாயின் ஸாலிஹ்' என்றாலே நபி ஸாலிஹ் வசித்த ஊர் என்ற பொருள் தருகிறது. தமூது கூட்டத்தினருக்காக அனுப்பப்பட்டவர் ஸாலிஹ் (அலை).

    பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்து வசித்து வந்த தமூது கூட்டத்தினர் ஆது சமூகத்தைப் போன்று சிலைகளை வணங்கிக் கொண்டு, ஆடம்பர வாழ்க்கையால் ஆணவத்துடனும், மிகுந்த செருக்குடனும் தங்கள் பெருமைகளைப் பறைச்சாற்றும் விதமாக மாளிகை கட்டி வாழ்ந்து வந்தார்கள். அவர்களை நெறிப்படுத்த அவர்களில் ஒருவரான, அவர்கள் மிகவும் மதித்த, அவர்கள் அறிவார்ந்த சான்றோன் என்று அழைத்த 'ஸாலிஹ்' (அலை) அவர்களை ஓரிறைக்கொள்கையை எத்திவைக்க இறைத்தூதராக்கினான் இறைவன்.

    நபி ஸாலிஹ் (அலை), தமூது கூட்டத்தினரிடம் அல்லாஹ்வை மட்டும் வணங்குமாறும், அவனைத் தவிர வழிபாட்டுக்குரியவன் எவருமில்லை என்றும், அவன்தான் வானத்தையும், பூமியையும் விசாலமாக்கி அதில் நம்மையும் படைத்து இந்தத் தற்காலிக இடத்தில் வசதியாகத் தங்க வைத்திருக்கிறான். எனவே அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள். பாவ மன்னிப்புக் கோருங்கள். அவன் அன்புடையவன், நமக்கு மிக அருகில் இருக்கின்றான். நம் பிரார்த்தனைகளைக் கேட்பவனாக, ஏற்பவனாக இருக்கின்றான்" என்றெல்லாம் சொல்லி வந்தார். அதுவரை ஸாலிஹை மதித்து வந்த கூட்டம் ஓரிறைக் கொள்கை பற்றி அவர் பேச தொடங்கியதும் அவரை விட்டு விலகிச் செல்ல ஆரம்பித்தனர்.

    அவர்கள் முன்னோர்கள் வணங்கியதை அவர்கள் வணங்கவிடாமல் ஸாலிஹ் தடுக்கிறார் என்று நினைத்தார்களே தவிர அவர்கள் முன்னோர்கள் செய்துவந்த காரியம் சரியானதுதானா என்று அவர்கள் யோசிக்கவில்லை. நபி ஸாலிஹிடம் அவர் உண்மையான இறைத்தூதரென்றால் ஓர் அத்தாட்சியைக் கொண்டுவரக் கோரினார்கள். அவர்கள் அத்தாட்சியாகக் கேட்டது ஓர் கர்ப்பமான பெண் ஒட்டகத்தை. ஏனென்றால் அந்தப் பகுதியில் அப்படியான ஒட்டகத்தை அவர்கள் கண்டதில்லை. அதனால் ஸாலிஹால் கொண்டுவர முடியாது என்று எண்ணி அதை வேண்டினார்கள்.

    இறைவனும் அவர்களை நேர்வழிப்படுத்த ஒரு வாய்ப்பு தந்து அவர்கள் கேட்டதற்கிணங்க ஒரு பாறைக்கு நடுவில் பிளந்து கொண்டு எல்லா மக்களும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சினையுற்ற வெள்ளை ஒட்டகம் வெளியே வந்தது. வெளியே வந்ததும் அது குட்டி போட்டது. அவ்வொட்டகத்திற்கு எந்தத் தீங்கும் செய்யாமலிருக்கக் கட்டளையும் வந்தது.

    அங்குள்ள நீர்நிலைகளில் ஒருநாள் அந்த ஒட்டகம் தண்ணீர் அருந்தினால் மறுநாள்தான் அதில் மக்கள் தண்ணீர் அருந்த வேண்டும். ஒட்டகம் தண்ணீர் குடிக்கும் அதே நாள் மக்கள் அதில் தண்ணீர் குடிக்கக் கூடாது என்றும் கட்டளை இருந்தது. நிறைய மக்கள் மனம் திருந்தி அத்தாட்சிக்கு மதிப்பளித்தும் வந்தார்கள். அந்த ஒட்டகம் ஊரில் உள்ள எல்லா மக்களுக்கும் பாலை தாராளமாகத் தந்தது.

    தமூது சமூகத்தில் இருந்த ஒன்பது வன்முறை கூட்டத்தினர் இதையெல்லாம் கண்டு அதிருப்தி அடைந்தார்கள். அவர்கள் பல கடவுள் கொள்கையைக் கைவிடவில்லை, பணம் பறித்தல், கொள்ளை அடித்தல், அக்கிரமம் புரிதல் என்று எந்த நற்குணங்களும் இல்லாமல் இருந்தார்கள்.

    'எவ்வளவு காலம்தான் இந்த ஒட்டகத்தை ஸாலிஹ் சொல்வதற்குக் கட்டுப்பட்டு நம் முன்னோர்கள் வணங்கிய சிலைகளை உதாசீனப்படுத்துவது?' என்று பேசிக் கொண்டார்கள். அந்த அதிசய ஒட்டகத்தை அழிக்க வேண்டுமென்று திட்டம் தீட்டி அவர்களில் பலசாலியான ஒருவன் அந்த ஒட்டகத்தின் கால் நரம்பை அறுத்து அதனைக் கொலை செய்துவிட்டான். இதை அறிந்த ஸாலிஹ் நபி மொழிந்தார்கள்; "உங்களுடைய வீடுகளில் மூன்று நாட்கள் சுகமாக இருங்கள், பின்னர் உங்களுக்கு அழிவு வந்துவிடுமென்று."

    இதைக் கேட்ட அழுக்கு நிறைந்த மனமுடையவர்கள் வாய்விட்டுச் சிரித்தார்கள். இரவில் ஸாலிஹ் நபியையும் கொல்லத் துணிந்து தோற்றார்கள். ஸாலிஹ் நபியும் அவரோடு இருந்த நம்பிக்கையாளர்களும் இறைவனின் அருளால் நடக்கவிருந்த இழிவிலிருந்து காப்பாற்றப்பட்டார்கள். அந்த மூன்று நாட்களிலும் கூட அவர்கள் பாவ மன்னிப்பு கேட்டு இறைவனிடம் திரும்பவில்லை. அகந்தையுடன் திரிந்தார்கள்.

    மூன்றாவது நாள் பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அவர்கள் நிலைகுலைந்து போனார்கள். அவரவர் வீடுகளிலேயே அழிந்து போனார்கள். அதற்கு முன் அவர்கள் அந்த இடத்தில் தங்கி இல்லாதது போல் அந்த இடமே சூனியமானது.

    இது குறித்து ஸஹிஹ் புகாரியில் காணப்படுவது, 'ஹிஜ்ர்' பகுதியில் தங்கியிருந்த போது நபிகளாரின் தோழர்கள் அங்கிருந்த கிணற்றில் தண்ணீர் இறைத்து அதை வைத்து மாவு பிசைந்தார்கள். அதைப் பார்த்த முகமது நபி (ஸல்), அவர்கள் இறைத்த தண்ணீரைக் கொட்டிவிட்டு அதை வைத்து பிசைந்த அந்த மாவையும் ஒட்டகங்களுக்குத் தீனியாகப் போடும்படி கட்டளையிட்டார்கள். ஸாலிஹ் நபி காலத்தில் இருந்த அதிசய ஒட்டகம் தண்ணீர் குடித்த நீர்நிலையிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ளும் படியும் பணித்தார்கள். (தொகுதி 4, நூல் 60 ஹதீஸ் 3379)

    தமூது சமூகத்தினர் அநியாயம் செய்து வந்த காரணத்தால் அழிந்து போனார்கள். அவர்களுக்கு நேர்வழியைக் காட்ட இறைத்தூதரை தந்தான். ஆனால் அவர்கள் குருட்டுத்தனத்தை விரும்பி இறைத்தூதர் ஸாலிஹையே பொய்ப்பித்தார்கள். அதனால் வேதனைக்குள்ளாக்கப்பட்டார்கள். இன்றும் அவர்களுடைய வீடுகள் பாழடைந்து கிடக்கின்றன. அது பயனற்று அப்படிக் கிடப்பதும் நமக்கான அத்தாட்சிதான்.

    திருக்குர்ஆன் 89:9, 11:61-68, 15:80-82, 27:45-53, 41:17

    - ஜெஸிலா பானு.
    வெவ்வேறு சமூகத்தினருக்கு இறைவன் அவரவர் மொழிகளைப் பேசும் நபிகளை அனுப்பி இருக்கிறான் என்று நம்பப்படுகிறது.
    வெவ்வேறு சமூகத்தினருக்கு இறைவன் அவரவர் மொழிகளைப் பேசும் நபிகளை அனுப்பி இருக்கிறான் என்று நம்பப்படுகிறது. பழமை வாய்ந்த தமிழ்மொழிக்கும் இறைவன் நபியை அருளியிருப்பான். ஆனால் அதைப் பற்றிய எந்த வரலாற்றுக் குறிப்புகளும் நம்மிடத்தில் இல்லை.

    அரபி மொழியில் பேசிய முதல் இறைத்தூதர் 'ஹூத்' (அலை) அவர்கள்தான். அவர்களுக்குப் பின் நபி சாலிஹ் (அலை), சுஹைப் (அலை), முகமது நபி (ஸல்) என்று அதன் பிறகு அரபிய மண்ணில் அரபு மொழி பேசுபவர்களாகத் தோன்றியுள்ளார்கள்.

    வெள்ளப்பெருக்கில் மூழ்கடிக்கப்பட்ட நூஹ் நபியின் சமூதாயத்திற்குப் பிறகு அவர்கள் வழியில் வந்த நான்காவது தலைமுறையில் மீண்டும் மக்கள் ஏக இறைவனை மறந்து சிலை வழிப்பாட்டுக்கு திரும்பிய 'ஆது' என்ற கூட்டத்தினருக்காகவே அல்லாஹ் ஹூத் நபியை அருளினான். அவர்கள் வாழ்ந்திருந்தது ஓமான் மற்றும் யெமனுக்கு நடுவில் உள்ள உபார்- அல் அஹ்கஃப் என்ற பகுதியிலாம். ஆது சமூகத்தினர் மிகவும் உயரமானவர்களாகவும் உடல் வலிமை மிக்கவர்களாகவும் இருந்தார்களாம். அவர்களைப் போன்று வேறு எந்தச் சமுதாயமும் படைக்கப்படவில்லையாம், அவ்வளவு உயரமானவர்களாம், வலிமை மிக்கவர்களாம்.

    நிகழ்காலத்தில் இருப்பது போன்றே ஆது சமூகத்தினரும் மிகவும் நாகரீகமானவர்களாகவும், செழுமையானவர்களாகவும் இருந்தனராம். செல்வம் அதிகமாக இருந்ததால் மக்கள் மத்தியில் பெருமையும், ஆணவமும் சேர்ந்தே இருந்ததாம். எவ்வளவு இருந்தும் வாழ்வில் திருப்தி இல்லாதவர்களாக, தம் பெருமையைப் பறைசாற்றுபவர்களாக மிக வடிவான தூண்கள் கொண்ட மாடமாளிகைகளை அமைத்து வாழ்ந்து வந்தார்களாம். அதனால் அவர்கள் ஓர் இறைக் கொள்கையை மறந்து தம் வசதிக்கேற்ப பெரிய பெரிய சிலைகளை அமைத்து வணங்கி வந்தார்களாம்.

    இறைவன் நன்மைகளைக் கொண்டு இவ்வுலகை நிரப்பினாலும் அவன் நற்கிருபையையும் கருணையையும் மனிதன் அனுபவித்துவிட்டு பின்பு அதனை, அவனை விட்டு நீக்கிவிட்டால் அவன் மனக்கசப்போடு நன்றி கெட்டவனாகிவிடுகிறான். இன்பத்திலேயே திளைத்திருப்பவனுக்கு இறைவனே மறந்துவிடுகிறது. அதனால்தான் இறைவன் தன் திருக்குர்ஆனில் தெளிவாகத் துன்பங்களைப் பொறுமையுடன் சகித்து எவர் நன்மைகளையே தொடர்ந்து செய்கின்றார்களோ, அவர்களுக்கு மன்னிப்பையும், மகத்தான நன்மைகளையும் தருவேன் என்று உறுதியளித்துள்ளான்.

    இந்த உறுதிகளை மறந்து ஆது சமூகம் வழிதவறியதைக் கண்ட ஹூத் நபி 'அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்' என்றும் 'உங்கள் மனக் கிளர்ச்சிக்காகவும், செருக்கிற்காகவும், அதன் காரணங்களால் நீங்கள் செய்யும் அநியாயப் பாவங்களுக்காகவும் மன்னிப்பு கேட்டு நல்வழியில் திரும்புங்கள்' என்றும் போதிக்க, அவர்கள் அவர் சொல்வதை நிராகரித்துள்ளனர். 'உங்களை இறைவன் வறட்சியிலிருந்து காத்து, மழையைத் தந்து உங்கள் வளங்களை மேலும் அதிகரிப்பான்' என்று சொல்லும் போதும் புறக்கணித்து 'நீ சொல்வதற்கு என்ன அத்தாட்சியுள்ளது? நீ சொல்வதற்காக எங்கள் தெய்வங்களை நாங்கள் விட்டுவிட முடியாது. எங்களைப் போன்ற இன்னொரு மனிதனான உனக்கு ஏன் இப்படியான வேற்றுச் சிந்தனை? இதையெல்லாம் கேட்க எங்களுக்கு நேரமில்லை. ஏதோ 'வறட்சி' என்றாயே அதை வரச் சொல், பிறகு பார்ப்போம்' என்று ஹூத் நபியிடம் கேலி பேசிவிட்டு, அவர்கள் சொன்ன நல்வழிமுறைகளைக் கடைப்பிடிக்க மறுத்துள்ளனர்.

    ஹூத் நபிக்கு இறைவன் மிக விரைவில் இவர்களை அழிக்கவிருக்கிறான் என்பதும், அவன் நினைத்தால் நிமிடத்தில் ஒரு சமூகத்திற்குப் பதிலாக மற்றொன்றை கொண்டு வந்துவிடுவான் என்றும தெரிந்திருந்தது. எனவே அவர்கள் இறைவனை நேசிப்பவர்களுக்காகவும் அவன் மீது நம்பிக்கையுடையவருக்காகவும் பிரார்த்தித்தார்கள். அவர்கள் மீண்டும் இறையச்சம் கொள்ளாத மக்களை எச்சரித்தார்கள்.

    வறட்சி பரவியது. பச்சைப்பசேலென்று இருந்த இடங்கள் காணாமல் போகத் தொடங்கின. மழை வராமல் நிலம் வறண்டிருந்தது, ஆனால் ஆது சமூகத்தின் ஆணவம் குறையவில்லை. சூரியன் அந்தப் பாலைவன மணலில் குடி கொண்டது. அதன்பிறகு பிறிதொரு நாளில் தண்டனைக்கான உத்தரவு வந்தபோது, அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், அவர்கள் அது மழை மேகமென்று உற்சாகமடைந்தனர். ஆனால் அது அவர்களுக்கு நோவினை தரவிருக்கும் கொடுங்காற்று என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. பலத்த காற்று எல்லாவற்றையும் பிடுங்கி எறிந்து இரக்கம் காட்டாமல் ஏழு இரவுகளும் எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசி, அந்தச் சமூகத்தினரை அடியுடன் சாய்ந்த ஈச்சமரங்களைப் போல் பூமியில் வீழ்த்தியது. எல்லாப் பொருட்களும் அழிந்து தரைமட்டமாகி அவர்களுடைய வீடுகள் மட்டும் ஆள்அரவம் அற்று அமைதியாக நின்றன.

    ஹூதும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் மட்டும் இறையருளால் காப்பாற்றப்பட்டார்கள். காற்றைக் கொண்டு இறைவன் ஆக்கவும் செய்வான், அழிக்கவும் செய்வான்.

    இப்படியாகக் குற்றம் செய்த சமூகத்திற்கு இறைவன் அவர்கள் வாழும் போதே தண்டனையைக் கொடுத்திருக்கிறான். திருக்குர்ஆனில் சில ஊர்களின் வரலாறுகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில இப்போதும் உள்ளன, சில அறுவடை செய்யப்பட்டவை போல் அழிபட்டும் போயின. தற்போது உபாரை சுற்றிலும் யாருமற்ற பாலைவனம் தான் உள்ளது.
    திருக்குர்ஆன் 11:50-60, 46:21-25, 69:6-7, 26:124-140, 89:6-8, 11:100

    -ஜெஸிலா பானு

    முன்னோர்கள் மறைந்ததும் அவர்களின் நினைவாக அவர்களின் உருவங்களை மனிதர்கள் வடிவமைத்தார்கள். அப்படி வடிவமைத்தவர்களும் மறைந்த பிறகு அந்த உருவங்களும் சிலைகளும் கடவுளாகின.
    ஓர் இறைவன் என்பதை மறந்து மனிதர்கள் சிலை வழிபாட்டில் மூழ்கி வழிகேட்டில் இருந்தனர். மனிதர்கள் சிலைகளை வணங்க ஆரம்பித்த பிறகு மனிதர்களுக்குள்ளேயே தாழ்ந்தவர், உயர்ந்தவர் என்றும் பிரிவினை பூண்டது. இப்படியான காலகட்டங்களில் தான் மக்களை நெறிப்படுத்த அவர்களில் ஒருவரை இறைத்தூதராகத் தேர்ந்தெடுத்து அந்த இறைத்தூதருக்கு ஏதாவது ஒரு வகை சக்தியை அளித்து, மக்களை ஓர் இறைக்கொள்கை மீதான நம்பிக்கையில் திரும்பச் செய்வான் இறைவன்.

    இறைவனின் பார்வையில் நல்லொழுக்கம் கொண்டவனே உயர் அந்தஸ்து பெற்றவன். அந்தக் கூட்டத்தில் குணசீலராக, நல்லொழுக்கம் கொண்டவராகத் திகழ்ந்த, எல்லா நிலைகளிலும் இறைவனைத் துதித்துக் கொண்டும், நன்றி செலுத்திக் கொண்டும் இருந்த நூஹை நபியாகத் தேர்ந்தெடுத்தான் இறைவன். அந்தச் சமுதாயத்திற்கு மிகப் பெரிய வேதனை வருவதற்கு முன் அவர்களை எச்சரிப்பதற்காக நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினான்.

    இறைவனிடம் கற்றுத் தெரிந்த விஷயங்களை நபி நூஹ் (அலை) மக்களிடம் அழகான முறையில் எடுத்துக் கூறினார். மக்களைப் பல வகைகளாக, பல வடிவங்களாகப் படைத்ததையும், இந்தப் பிரபஞ்சத்தின் படைப்புகளைப் பற்றியெல்லாம் விவரித்து, கேட்பவர்களைச் சிந்திக்க வைத்தார். ஆனால் மிகச் சொற்ப மக்களே வழிகேட்டிலிருந்து திரும்பினார்கள். மற்றவர்கள் அவர் பேச்சில் மயங்கிவிடக் கூடாதென்று காதுகளைப் பொத்திக் கொண்டு ஓடினார்கள்.

    முகத்தில் ஆடையைக் கொண்டு மூடி அவரைப் பார்க்காதபடி மறைந்தார்கள். செவிமடுக்கவும் நேரமில்லை, உன்னால் முடிந்ததைச் செய்யென்றும், போதித்தவருக்கே தீங்கிழைக்கவும் துணிந்தார்கள். இதன் பிறகு நபி நூஹ் (அலை) இறைவனிடம் "உன்னை மறுப்போரில் ஒருவரையும் விட்டு வைக்காதே, இவர்கள் சந்ததியினரும் வழிகேட்டிலேயே இருப்பார்கள், உனது அடியார்களையும் அவர்கள் வழி கெடுப்பார்கள். அநீதி இழைத்த இவர்களுக்கு அழிவைத் தா" என்று பிரார்த்திக்க ஆரம்பித்தார்கள்.

    அல்லாஹ்வும் நூஹ் நபியின் பிரார்த்தனைக்குச் செவிமடுத்தான். நூஹ் (அலை) அவர்களை ஒரு பிரமாண்டமான கப்பலை செய்யுமாறு பணித்தான். வானவர்களின் உதவியுடன் பல நூறு வருடங்களில் அந்தக் கப்பல் தயாரானது. அந்தக் கப்பலை இறைவனின் கட்டளையின்படி மூன்று தளங்களாகக் கட்டினார். ஒரு தளத்தில் மிருகங்களுக்கான கூடுகளையும் நிறுவினார். வேறொரு தளத்தை இறைநம்பிக்கையாளர்களுக்கென ஒதுக்கினார். மற்றொரு தளத்தைப் பறவைகளுக்கும் மற்ற உயிர்களுக்குமென்று விட்டுவைத்தார்.

    எல்லாருக்கும் தேவையான உணவு பொருட்களையும் சேகரித்து ஏற்றிக் கொண்டார்கள். இவர் பல்லாண்டு காலமாக இந்த வேலையற்ற வேலை செய்து கொண்டிருக்கிறார் என்று கப்பலைத் தயார் செய்து கொண்டிருக்கும் போது அதைப் பார்த்த இறை நிராகரிப்பாளர்கள் பரிகாசம் செய்தார்களாம். 'தண்ணீரில்லாத இடத்தில் கப்பல் எதற்குத் தரையில் ஓட்டவா?' என்று எள்ளி நகையாடினார்கள்.

    பெருமை, தலைக்கனம், ஆணவம் என்று கூடாத குணங்கள் நிறைந்தவர்களுக்கு வரவிருக்கும் ஆபத்துகளைப் பற்றி நூஹ் (அலை) எச்சரித்தும் அவர்களின் குணங்களின் காரணமாகவே அலட்சியம் செய்தார்கள். ஆனால் நூஹ் நபி விடுத்த ஏகத்துவ அழைப்பு ஏழை எளியோர்கள், வறியோர்கள் மற்றும் பலவீனமான மக்களின் இதயத்தில் இடம் பிடித்தது. அவர்களின் துன்பங்களை நீக்கி மனத்திற்கு ஆறுதல் அளிக்கும் அருமருந்தாகவும் அவர்களுக்குத் தெரிந்தது.

    நூஹ் நபியவர்கள் எல்லா உயிரினங்களில் இருந்தும் ஒவ்வொரு ஜோடியைத் தேர்ந்தெடுத்துக் கப்பலில் ஏற்றினார்கள். ஒவ்வொரு விலங்குகளில் இருந்தும், பறவைகளிலிருந்து ஓர் ஆண் இனம்- பெண் இனம் என்று பார்த்துப் பார்த்து இறைவனின் வழிநடத்தலின் பேரில் எல்லாவற்றையும் கப்பலில் ஏற்றினார்கள்.

    இவ்வாறு எல்லா உயிரினங்களையும் ஏற்றிய பிறகு நூஹ் நபியும் அவர்களின் குடும்பத்திலுள்ள இறைநம்பிக்கையாளர்களும் மட்டும் கப்பலில் ஏறிக் கொண்டார்கள். நபியின் மனைவி இறைநம்பிக்கை கொள்ளாததால் கப்பலில் ஏற்றப்படவில்லை. அவள் அந்த நிலையிலும் தன் கணவன் உளறுவதாகவே நினைத்திருந்தால், இறையச்சம் கொள்ளாதவராகவே இருந்தார்.

    இறைவனின் கட்டளையின் பேரில் வானம் திறந்து, பூமி அதுவரை பார்த்திராத அடைமழை கொட்டியது. பூமி தண்ணீரை விழுங்காமல் துப்பித் தள்ள நீர் மட்டம் உயர்ந்து கொண்டே சென்றது. அந்த நொடியிலும் மக்கள் இந்தக் கப்பலை நம்பத் தயாராக இல்லை.

    இறைநம்பிக்கையுடையவர்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி கப்பலில் ஏறிக் கொண்டார்கள். அவன் பெயரைக் கொண்டே கப்பலையும் செலுத்தத் தயாராகும் போது நூஹ் (அலை) தன் மகனை அன்பாக அழைக்க, அவர்களின் மகன் இறை நிராகரிப்பவர்களுடன் சேர்ந்து கொண்டு 'நான் மலை மீது ஏறித் தப்பித்துக் கொள்வேன்' என்றான். தன் மகன் மூழ்கடிக்கப்படுவான் என்று அஞ்சி இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.

    ஆனால் இறைவனோ "நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல" என்று சொல்லி விட, இறை மறுப்பாளர்களோடு சேர்ந்து நபியின் மனைவியும் மகனும் கூட மூழ்கடிக்கப்பட்டார்கள். இறைக் கட்டளையின்படி பூமி சுத்தமானது, வானமும் மழையை நிறுத்திக் கொண்டது, பூமியும் தன்னால் இயன்றவற்றையெல்லாம் உறிந்து கொண்டது. கப்பலும் ஜூதி மலையில் மோதி நின்றது. வெளி நிலவரத்தை அறிந்து கொள்ள நூஹ் (அலை) அவர்கள் ஒரு புறாவை வெளியே பறக்க விட்டு பரிசோதித்தார்கள். அது ஒலிவச்செடியின் முனைக் காம்பை தன் அலகில் எடுத்து வந்தது. அதைப் பார்த்த அனைவருக்கும் நிம்மதி பெருமூச்சு வந்தது.

    இறைவனை மட்டும் நம்பி கப்பலில் ஏறியவர்கள் கைவிடப்படவில்லை. அதன்பின் அவர்கள் நூஹ் (அலை) சொன்ன வழிமுறையிலேயே இறை வணக்கம் செய்தார்கள். நூஹ் (அலை) மரணத் தருவாயிலும் மக்களை அழைத்து ஏக இறைவனாகிய அல்லாஹ்வை மறந்துவிடக் கூடாதென்றும், எல்லாநிலைகளிலும் அவனை வணங்கி நன்றி செலுத்த வேண்டுமென்றும், மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள் இருக்கக் கூடாது என்றும் இறைவனின் பார்வையில் அனைவரும் சமம் என்றும் அவர்களை நல்வழிப்படுத்தினார்.

    நாமும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நல்ல அறங்களைச் செய்வோம், மற்றவர்களுக்கும் வழிகாட்டுவோம்.

    [திருக்குர்ஆன் 11:25-48, 71:1-28, 7:59-64, 17:4]

    - ஜெஸிலா பானு.
    பல்லாயிரம் நபிகள் இந்த உலகில் தோன்றியிருந்தாலும், திருக்குர்ஆனில் குறிப்பிட்ட சில நபிமார்களைப் பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
    பல்லாயிரம் நபிகள் இந்த உலகில் தோன்றியிருந்தாலும், திருக்குர்ஆனில் குறிப்பிட்ட சில நபிமார்களைப் பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படிப் பார்க்கையில் ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களுக்கு அடுத்து தோன்றிய நபி இத்ரீஸ் (அலை). ஆதம் (அலை) அவர்கள் மரணிக்கும் போது இத்ரீஸ் (அலை) அவர்களுக்குக் கிட்டத்தட்ட நூறு வயதாம்.

    இத்ரீஸ் (அலை) அவர்களின் இயற்பெயர் எக்னூஹ் என்றும் சொல்லப்படுகிறது. ஆதம் (அலை) காலத்தில் இலைகளைக் கொண்டு தம்மை மறைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இத்ரீஸ் தையலை தொழிலாகவே செய்திருந்தவர். அவர் ஆடைகளைத் தைத்து உடுத்திக் கொள்ளும் முறையையும் மக்களுக்குக் கற்பித்துள்ளார். அவருடைய மூதாதையரின் வழிமுறைகளைக் கற்று, ஓர் இறைக் கொள்கையை மக்களுக்குக் கற்றுக் கொடுத்து நல்வழிப்படுத்தி அல்லாஹ்வை தொழவும், நோன்பு நோற்கவும், ஜகாத் கொடுக்கவும் வலியுறுத்தினாராம்.

    இறைவன் நபி இத்ரீஸுக்கு முப்பது ஏடுகளை வழங்கியிருந்தானாம். அந்த இறைவணக்கத்தை அவர் இரவும் பகலும் அதிகப்படியாக ஓதிக் கொண்டிருப்பதை வானவர்களும் கண்டு வியப்பார்களாம். மிகவும் நேர்மையான இத்ரீஸ் (அலை), நபியான பிறகு  பலமுறை வானுலகம் சென்று மறைவானவற்றையும் அறிந்து வந்து வானியலாளராகப் புவிக்கு அப்பாற்பட்ட உலகத்தை ஆராய்ந்து விண்ணில் உள்ள கோள்கள், நிலாக்கள், விண்மீன்கள் போன்ற வானியல்சார் பொருட்களின் உண்மைகளை ஆராய்ந்து கற்பிப்பாராம்.

    அதுமட்டுமின்றி அவர்கள்தான் முதன்முதலில் எழுதுகோலைப் பயன்படுத்தி, அதனை வைத்து எழுதவும் மக்களைப் பயிறுவித்தார்களாம். எல்லாவற்றையும் மக்களுக்குக் கற்றுக் கொடுத்த காரணத்தாலேயே 'பாடம் கற்றுக் கொடுப்பவர்' என்று அரபியில் பொருள்படும் 'இத்ரீஸ்' என்பது அவர்களது பெயரானதாம்.

    ஒரு வானுலகப் பயணத்தின் போது வானவரின் இறக்கையில் நான்காவது வானத்தை அடைந்ததும், அந்த வானவர் மலக்குல் மவ்த்திடம் (உடலிலிருந்து உயிரை எடுக்கும் வானவரிடம்) வந்து, "இத்ரீஸ் (அலை) அவர்களின் மரணத்தைத் தள்ளிப் போட முடியுமா? அவர் அல்லாஹ்வை அதிகம் வணங்க விரும்புகிறார்கள்" என்று கேட்டபோது, அதற்கு மலக்குல் மவ்த் "இப்போது அவர் எங்கே இருக்கிறார்?" என்று கேட்க, "என் இறக்கையில்தான்" என்று அந்த வானவர் பதில் தர, அதற்கு மலக்குல் மவ்த் "இப்போது தான் இறைவன் நபி இத்ரீஸின் உயிரை நான்காம் வானத்தில் கைப்பற்றச் சொன்னான்.

    நானோ எப்படிப் புவியிலிருக்கும் இத்ரீஸின் உயிரை நான்காம் வானத்தில் கைப்பற்றுவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்" என்று சிரித்துக் கொண்டே நபி இத்ரீஸின் உயிரை கைப்பற்றியதாகச் சொல்லப்படுகிறது. இதைத்தான் "நாம் அவரை ஓர் உயரிய இடத்தில் உயர்த்தினோம் என்று திருக்குர்ஆனில் 19:57 குறிப்பிடுவதோடு நபி இத்ரீஸை (அலை) சத்தியவாதியாக இருந்துள்ளார் என்றும் அல்லாஹ் குர்ஆன் 19:56-இல் கூறியுள்ளான். இதையே நபிகள் நாயகம் மிஃராஜ் பயணத்தின் போதும் நான்காவது வானத்தில் இத்ரீஸ் (அலை) அவர்களைப் பார்த்தாகவும் ஹதீஸ்களும் உறுதியளித்துள்ளன.

    இத்ரீஸ் (அலை) அவர்களின் பேரனின் மகன்தான் நூஹ் (அலை) என்றும் வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன.

    இவைகள் மட்டும்தான் நபி இத்ரீஸ் (அலை) அவர்களைப் பற்றிக் கிடைத்த குறிப்புகள்.

    - ஜெஸிலா பானு.  
    நபி ஆதம் (அலை) அவர்கள்தான் இறைவனால் படைக்கப்பட்ட முதல் மனிதர், எல்லா மதத்தாலும் நம்பப்படும் ஆதி மனிதர், அவரே முதல் நபியும்.
    உலகத்திலுள்ள அனைத்தையும் நமக்காகப் படைத்த இறைவன், வானங்களின் பக்கம் திரும்பி அதனை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அதன் பிறகே இந்த உலகத்தின் முதல் மனிதரை படைத்தான்.

    நபி ஆதம் (அலை) அவர்கள்தான் இறைவனால் படைக்கப்பட்ட முதல் மனிதர், எல்லா மதத்தாலும் நம்பப்படும் ஆதி மனிதர், அவரே முதல் நபியும். ஆதாம் என்றால் எபிரேய மொழியில் மண்ணால் ஆனவன் என்றும் பொருளாம். ஆம், இறைவன் ஆதமை ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் படைத்ததாக திருக்குர்ஆன் 15:26-இல் கூறப்பட்டுள்ளது.

    அதென்ன ஓசை தரக்கூடிய மண் என்று நீங்கள் யோசிக்கலாம். இறைவன் தன் அற்புதக் கரங்களால் பூமி முழுவதும் திரட்டப்பட்ட மண்ணின் ஒரு கை அளவிலிருந்து படைத்தானாம். அந்த மண் கூடுக்குள் ஒன்றுமில்லாமல் ஓசை தரக்கூடியதாக இருந்ததாம் அதைத்தான் வேதத்தில் அப்படிக் குறிப்பிட்டிருக்கிறான். அந்த மண்ணால் உருவாக்கிய மனிதரின் மீது இறைவன் தனது ஜீவசுவாசத்தை ஊதியதும் உயிர் பெற்றார் ஆதாம்.

    விழித்த ஆதாம் ஒரு தும்மலைப் போட்டு 'அல்ஹம்துலில்லாஹ்' என்று சொல்லி எழுந்திருக்கிறார். பூமி முழுவதிலிருந்தும் திரட்டப்பட்ட மண் என்பதாலேயே ஆதமின் மக்களான நமக்கு அந்தந்த பூமியின் நிறத்தின் தன்மைகளுக்கு ஏற்றாற்போல் சிலர் வெளிர்நிறத்திலும், சிலர் சிவப்பாகவும், சிலர் கறுப்பான தோற்றத்திலும், மண்ணின் தன்மைகளைப் போல் கடினமானவர், மென்மையானவர் என்று குணத்திலும் வேறுபடுகின்றார்கள் என்று அபூமூஸா (ரலி) அஹ்மத் நூலில் அறிவித்திருக்கிறார்.

    ஆதமை இறைவன் பூமிக்கு தனது பிரதிநிதியாக அமைக்கப் போகிறதாக வானவர்களிடம் சொன்ன உடனேயே வானவர்கள் 'பூமியில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவதற்காகவா அமைக்கப் போகிறாய்? உன்னைப் புகழ, துதிக்க, போற்ற நாங்கள் இருக்கிறோம்' என்று சொன்னதற்கு இறைவன் 'நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நான் அறிவேன்' என்று சொல்லிவிட்டான்.

    ஆதமுக்கு இறைவனே தன்னால் படைக்கப்பட்ட அனைத்து பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்திருக்கிறான். அதன்பின் அதனை வானவர்களுக்கு அதாவது மலக்குமார்களுக்கு விவரிக்குமாறு ஆதமைப் பணித்திருக்கிறான்.

    இறைவன் தான் படைத்த மலக்குகளை, நபி ஆதம் (அலை) அவர்களுக்குச் சிரம் தாழ்த்த பணித்தான். அதன்படியே வானவர்களும் ஆதமுக்குச் சிரம் பணிந்து ஸுஜூது செய்தனர் - இப்லீஸை (சாத்தானை) தவிர.

    "நெருப்பால் படைக்கப்பட்ட நான் மண்ணுக்கு மண்டியிடுவதா? முடியாது" என்று ஆணவம் கொண்டதோடு, "ஆதமுடைய மக்களைத் தவறான வழிக்கு அழைத்துச் சென்று அவர்களை நரகத்தின் பக்கம் இழுத்துச் செல்வதே என் வேலை" என்று முறுக்கிக் கொண்டு சென்றான் இப்லீஸ்.

    இறைவன் ஆதமைத் தனித்துவிட மனமில்லாமல் அவனுடைய விலா எலும்பிலிருந்தே அவனுக்காக ஹவ்வாவை (ஏவாளை) படைத்தான். தூய்மையாக நன்மை தீமைகளை அறியாதவர்களாகப் படைக்கப்பட்டவர்களிடம் இறைவன் "இச்சோலையில் வசித்திருங்கள், நீங்கள் இருவரும் இதில் விரும்பும் இடத்தில் விரும்பியதையெல்லாம் தாராளமாகச் சாப்பிடுங்கள். ஆனால் 'அந்த' மரத்தை மட்டும் அணுகாதீர்கள்" என்று எச்சரித்தான்.

    இப்லீஸ் சபதம் செய்தது போல் ஆதமை வழி கெடுக்க நினைத்து, மென்மையான குரலில் ஆதமிடம் "நீங்கள் அந்த மரத்தில் உள்ள கனியை உண்டால் இந்த சொர்க்கத்திலேயே தங்கிவிடுவீர்கள்" என்று ஆசை வார்த்தை காட்டினான். இறைவனின் கட்டளையை மாற்றமில்லாமல் அப்படியே செய்யக்கூடியவர்கள் வானவர்கள். ஆனால் மனிதனுக்கு இறைவன் அறிவைத் தந்திருக்கிறான். அந்த அறிவைக் கொண்டு யோசிக்காமல், பொய், ஏமாற்று வேலை, கள்ளம் என்று எதையுமே தெரியாத ஆதாம்- ஹவ்வா இறைவன் தடுத்திருந்ததையும் மறந்து அந்த நன்மை- தீமை அறியத் தரும் மரத்தின் கனியை சுவைத்து விட்டார்கள். உடனே அவர்கள் தங்களின் நிலையை அறிந்து கொண்டவர்களாக அங்கிருக்கும் இலைகளைக் கொண்டு தம்மை மறைத்துக் கொண்டார்கள்.

    வழி தவறிய அவர்களை சொர்க்கத்தை விட்டு வெளியேற்றிவிட்டான் இறைவன். அவ்விருவரில் இருந்துதான் அநேக ஆண்களையும், பெண்களையும் வெளிப்படுத்தி உலகில் பரவச் செய்தான். மேலும்
    இறைவன் எச்சரித்தது "உங்களில் சிலர் மற்றவருக்குப் பகைவராக இருப்பீர்கள். நீங்கள் பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தங்கிவிட்டு, வாழ்ந்து, உலக சுகம் அனுபவித்துவிட்டு அங்கேயே மரணமடைந்து பிறகு என்னால் மீண்டும் எழுப்பப்படுவீர்கள். இருக்கும் வரை இறைவனுக்குப் பயந்து உங்கள் இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் ஆதரியுங்கள், நன்மை புரியுங்கள்".

    இறைவன் தந்த சுதந்திரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் உலகப் பொருட்களின் மீது ஆசைப்பட்டு மயங்கி இறைவனுக்கே எதிராகப் பாவங்கள் செய்ததின் வினை. அதனாலேயே வாழ்நாள் முழுவதும் ஆதம்- ஹவ்வா இருவரும் தாம் செய்த பாவத்திற்காக இறைவனிடத்தில் மன்னிப்புக் கேட்டார்கள். மனிதன் தவறிழைத்தாலும் அத்தவறுக்காகப் பாவ மன்னிப்பு கேட்பதையே இறைவனும் விரும்புகிறான்.

    நிச்சயமாக இறைவன் நம்மைக் கண்காணிப்பவனாகவே இருக்கிறான் என்று நம்பி, நாம் இழி செயல்களிலிருந்து விலகி இருப்போம். செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்போம். இறைவன் அருளிய திருமறையின் வழியில் சென்று ஈருலக நல்வாழ்வினைப் பெற்று, நன்மைகள் புரிவோம்.

    (திருக்குர்ஆன் 2:29-38, 7:24-25, 4:1)

    -- ஜெஸிலா பானு. 
    கற்பனை திறன் என்பது இறைவன் மனிதனுக்கு வழங்கிய ஒரு மாபெரும் அருட்கொடையாகும்.
    இன்றைய புதிய கண்டுபிடிப்புகள் யாவும் ஒரு காலத்தில் மனிதனின் கற்பனையாகவே இருந்துள்ளது.

    நேற்றைய கற்பனை இன்றைய நிஜமாகவும், இன்றைய கற்பனை நாளைய நிஜமாகவும் மாறும் தன்மையுடையதாகும். மனிதனின் கற்பனை என்பது ஒரு திரையிடப்பட்ட உண்மையாகவே விளங்குகிறது.

    ஒரு மனிதனின் மனதில் தோன்றிய உண்மைகள், மற்ற மனிதர்களுக்கு பாடமாகவும், கல்வியாகவும் மாறிவிடுகின்றது. கல்வியில் தன்னைப் பற்றி அறியும் சுயகல்விதான் மிகச்சிறந்த கல்வியாகும்.

    இப்பிரபஞ்சத்தில் காணப்படும் தத்துவங்கள் யாவும் மனிதனுக்குள்ளும் இருப்பதாக அருள் மறை குர்ஆன் கூறுவதை பார்ப்போம்:

    'நிச்சயமாக இ(ந்த வேதமான)து உண்மையானது என்று அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக (உலகின்) பல கோணங்களிலும், (மனிதர்களாகிய) அவர்களுக்கு உள்ளேயும் நம்முடைய அத்தாட்சிகளை நாம் அவர்களுக்கு காண்பிப்போம். (நபியே) உமது இறைவன் நிச்சயமாக எல்லாப் பொருட்களின் மீதும் சாட்சியாளனாக இருக்கின்றான் என்பது (உமக்கு) போதுமானதாக இல்லையா? (41-53).

    இங்குள்ள எல்லாமே இறைவனுடைய கணக்குப்படிதான் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இறைவன் சாட்சியாளனாக இல்லாத எப்பொருளும் இவ்வுலகில் இல்லை. எல்லாம் அவனது கவனத்திற்கு உட்பட்டதாகவே இருக்கின்றது. அவனை விட்டு எப்பொருளும் தப்பிவிட முடியாது.
    இறைவன் நிர்ணயித்த கணக்கின் படிதான் எல்லாம் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பதை குர்ஆன் இவ்வாறு இயம்புகின்றது:

    'நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் (அதற்குரிய) நிர்ணய (கணக்கு) படி (தான்) அதனை படைத்துள்ளோம். (54.49)

    கடலின் அலைகளை காணமுடியும் நம்மால் மின்சார அலைகளின் அதிர்வுகளை காணமுடிவதில்லை. கண்ணுக்கு புலப்படும் அதிர்வு அலைகளைவிட, கண்ணுக்குப் புலப்படாத அதிர்வு அலைகளின் சக்தி அபரிமிதமானதாக இருக்கின்றது.

    உடலின் அசைவுகளால் ஏற்படும் ஆற்றலைவிட இதயத்தின் அசைவால் மனித மூளையில் இருந்து ஏற்படும் அதிர்வு அலைகள் மிக நுட்பமானதும், வலிமை வாய்ந்ததுமாகும்.

    இத்தகைய வலிமை வாய்க்கப்பெற்ற தீர்க்கதரிசிகள், ஞானிகள் போன்ற உண்மையாளர்களை கொண்டு இறைவன் இவ்வுலகில், கடலை ஏழாக பிளந்து வழிவிடச் செய்துள்ளான் (மூசா நபிக்கு),

    மரித்தவர்களை உயிர் கொடுத்து எழுப்பியுள்ளான் - (ஈசா நபிக்கு),
    வானில் சந்திரனை இரண்டாக பிளந்து காட்டினான்- (முகம்மது நபிக்கு),
    மாபெரும் நெருப்பு குண்டத்தை குளிரச் செய்துள்ளான் - (இப்ராஹிம் நபிக்கு),
    காற்றை சுமந்து செல்லும் வாகனமாக மாற்றியும் காட்டினான் - (சுலைமான் நபிக்கு).

    இதுபோன்று நல்ல மனிதர்களை கொண்டு அவன் நடத்திக் காட்டிய அற்புதங்கள் அநேகம் உண்டு.

    வீண் பேச்சும், கோபமும் தான் மனித ஆற்றலை வீணடித்து விடுகின்றது. இறைவனை நினைவு செய்வதினால் மனிதன் அடையும் பேரின்பத்தை குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

    'அவர்கள் தாம் ஈமான் (இறை விசுவாசம்) கொண்டவர்கள், அவர்களின் இதயங்கள் அல்லாஹ்வை திக்ரு (நினைவு) செய்வதனால் அமைதி பெறுகின்றன. அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வை திக்ரு செய்வதனால் தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன'. (13-28)

    இவ்வாறு மனிதன் தன் ஆத்மாவையும் அமைதியடையச் செய்து அது கொண்டு - மற்ற மனிதர்களையும் அமைதி பெறச் செய்யவே இஸ்லாம் வழிகாட்டுகின்றது.

    கோபம் தான் மனிதனுடைய மிகப்பெரிய எதிரியாகும். எவ்வளவு பெரிய அறிவாளிகளையும் அது சட்டென வீழ்த்திவிடும் சக்தி வாய்ந்தது. ஆனால் இறைவிசுவாசிகளோ, தங்களுக்கு கோபம் வந்தால், அதனை இறைவனுக்காக மென்று விழுங்கிவிடுகிறார்கள் என்று அருள்மறை கூறுகிறது.

    'நின்று கொண்டிருக்கும் போது உங்களுக்கு கோபம் வந்தால், உட்கார்ந்து விடுங்கள். அப்படியும் அது தணியவில்லை என்றால் படுத்துவிடுங்கள்.

    அதிலும் அடங்கவில்லை என்றால் ஒளூ (அங்கச் சுத்தி) செய்து உடலை தண்ணீரால் நனைத்து விடுங்கள். அதிலும் அது தீரவில்லை என்றால் நெற்றியை தரையில் வைத்து சஜ்தா செய்து விடுங்கள்...' என்று கோபத்தை தணிக்க நபிகளார் இவ்வாறு கற்றுத்தந்துள்ளார்கள்.

    கோபப்பட்டு பேசிவிட்டு ஒருவன் அமரும் போது நஷ்டத்துடனே தான் அமர்கின்றான். கோபத்தால் ரத்தம் சூடேறி அதிவேகமான செயல்படுவதால், அவனது ஒவ்வொரு வியர்வை துவாரத்தின் வழியாகவும் சக்தி வீணாக வெளியேற்றப்படுகின்றது.

    அதனால் உடலும் மனமும் சோர்வடைந்து மனிதன் பலவீனம் அடைகின்றான். பலவீனமான மனித உடலில் நோய் எளிதில் தொற்றிக் கொள்கின்றது. கோபம் மனிதனுக்கு உள்ளேயும், அவனுக்கு வெளியேயும் கெடுதியை ஏற்படுத்துகின்றது.

    எவ்வளவு கஷ்டம் நஷ்டம் வந்தாலும் துவண்டுவிடாமல் பொறுமையை கடைப்பிடிப்பவர்களுக்கு இறைவன் கூறும் நற்செய்தி இது:

    'இறைவிசுவாசிகளுக்கு ஓரளவு பயத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் (விளைச்சல்) போன்றவற்றின் நஷ்டங்களாலும், திண்ணமாக நாம் உங்களை சோதிப்போம் (இச்சோதனைகளில்) பொறுமையாளர்களுக்கு (நபியே) நீர் (சொர்க்கத்தைக் கொண்டு) சுபச் செய்தி கூறுவீராக' (2-155).

    'பொறுமையே பேரின்பம் நிறைந்த சொர்க்க வாழ்விற்கு மனிதனை தகுதியுடையதாக்குகின்றது' என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகின்றது. அழிந்து போகும் இவ்வுலகையே இவ்வளவு அழகாக படைத்துள்ள இறைவன், என்றும் அழியாத மறு உலகை எவ்வளவு அழகாக படைத்து வைத்திருப்பான்.

    அது எந்த கண்ணும் கண்டிராதது, எந்த காதும் கேட்டிராதது, எவருடைய கற்பனையிலும் தோன்றிடாதது. அத்தகைய சொர்க்க வாழ்வுதான் நாம் ஆசைப்பட மிகவும் தகுதியான ஒன்றாகும். அதனை அடையும் நற்பேற்றினை இறைவன் நம்அனைவருக்கும் வழங்கி அருள்புரிவானாக, ஆமின்.
    அழைப்புக்குச் செவி சாய்த்து கீழ்ப்படிந்தால் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றிதான்
    நமக்குப் பிடித்தவர் நம் அன்பிற்குரியவர் நம்மை அழைத்தால் உடனே பதில் தருவோமா இல்லையா? செல்பேசியில் தெரிந்தவர்கள் அழைத்தாலோ தெரியாதவர் அழைத்தாலோ உடனே எடுத்து பேசுகிறோமா இல்லையா? ஆனால் நம்மை நேசிக்கும் இறைவனை, நம்மைப் படைத்தவனை வழிபடுவதற்காக அழைக்கப்படும் 'பாங்கு' ஒலிக்கு நாம் ஏன் உடனே செவி சாய்ப்பதில்லை?

    எவ்வளவுதான் உடல்நிலை சரியில்லாவிட்டாலும் நமது மேலதிகாரி அவசரமாக அழைத்தால், உடனே சென்று உடன் முடிக்க வேண்டிய வேலையை மட்டுமாவது முடித்துவிட்டு திரும்புவோம் இல்லையா? ஆனால் கொஞ்சம் சோம்பேறித்தனம் வந்துவிட்டாலும் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு நமக்கு வாழ்வு தந்தவனை வழிபட "தொழுகைக்கு விரைந்து வாருங்கள்" என்று அழைப்பு கேட்கும் போது தொழுகையைத் தள்ளிப் போடுகிறோமே ஏன்?

    தொழுகைக்கான நேரங்களில் மக்களைத் தொழுகைக்காக அழைப்பதை அரபி மொழியில் 'அதான்' என்றும் தமிழில் அதனைப் 'பாங்கு' என்றும் சொல்கிறோம். தொழுகைக்கான அழைப்பை விடுப்பவர், 'கிப்லா'வை அதாவது மக்காவிலுள்ள கஅபாவை நோக்கி நின்றபடி தனது இரு கரங்களையும் தம் செவிகள் வரை உயர்த்தி உரத்தக் குரலில் 'பாங்கு' சொல்லுவார். அதனை நாம் எல்லோருமே கேட்டிருப்போம். இது பதிவு செய்யப்பட்ட குரல் இல்லை. நவீனமயமான இந்தக் காலகட்டத்தில் பாங்கு என்ற அழைப்பை பதிவு செய்து ஒலிக்கச்செய்யலாம், ஆனால் அப்படிச் செய்வதில்லை. காரணம் நல்லறங்களை நேரடியாகச் செய்தால்தான் நன்மைகளை அடைய முடியும் என்று நபிகளார் பெருமானார் (ஸல்) சொல்லியிருக்கிறார்கள்.

    அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், "ஆட்டையும், பாலைவனத்தையும் விரும்புகின்றவராக உங்களை நான் காண்கிறேன். நீங்கள் ஆட்டை மேய்த்துக் கொண்டோ, பாலைவனத்திலோ இருக்கும் போது தொழுகை நேரம் வந்துவிட்டால் நீங்கள் தொழுகைக்காக பாங்கு சொல்லி அழைப்புக் கொடுப்பீர்களாயின் உங்கள் குரலை உயர்த்தி அழையுங்கள். ஏனெனில், தொழுகைக்காக அழைப்பவரின் குரல் ஒலிக்கும் தொலைவு நெடுகவுள்ள ஜின்களும், மனிதர்களும் பிற பொருட்களும் அதைக்கேட்டுத் தொழுகை அழைப்புக் கொடுத்தவருக்காக மறுமை நாளில் சாட்சியம் சொல்கின்றன என்றும் இதைத் தாம் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றேன்'' என்றும் அபூ ஸஅஸஆ அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் அல் அன்சாரி (ரலி) அவர்களிடம் கூறியதாக, ஸஹிஹ் புகாரி 819 இல் வந்துள்ளது.

     பாங்கின் சத்தத்தைக் கேட்டிருக்கும் நாம் அதன் பொருளையும் அறிந்து கொள்வோம்.

    அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர் -- 'இறைவன் மிகப் பெரியவன்' என்று ஆரம்பித்து,
    அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ் -- 'இறைவன் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சாட்சி கூறுகிறேன்' என்றும்
    அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் – 'முஹம்மது இறைவனின் தூதர் என்று சாட்சி சொல்கின்றேன்' என்று சொல்லிய பிறகு
    ஹய்ய அலஸ் ஸலாஹ் – 'தொழுகைக்கு விரைந்து வாருங்கள்'
    ஹய்ய அலல் ஃபலாஹ் – 'வெற்றிக்கு வாருங்கள்'
    அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – லா இலாஹ இல்லல்லாஹு -- என்று இறுதியில் மீண்டும் சொல்லி முடிப்பார்கள்.
     
    ஐந்து வேளை தொழுகைக்கும் இப்படியான அழைப்பு விடுக்கப்படும். காலை தொழுகையான ஃபஜ்ர் தொழுகைக்கு அழைப்பு விடுக்கும்போது "ஹய்ய அலல் ஃபலாஹ்" என்பதைச் சொல்லிய பிறகு "அஸ்ஸலாத்து கைருன் மினன் நவ்ம்" அதாவது "தூக்கத்தை விடத் தொழுகையே சிறந்தது" என்றும் சேர்த்தே சொல்லி தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்படும்.

    இதனைப் புரிந்து உடனே அழைப்புக்குச் செவி சாய்த்து கீழ்ப்படிந்தால் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றிதான்.

    (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்கக் கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 3:31) 

    - ஜெஸிலா பானு. 
    குர்ஆனின் இறைவசனங்களின் மொழிப்பெயர்ப்பை படிக்கும் போது அரபி வடிவத்தில் இருக்கும் குர்ஆனின் அழகையும் நயத்தையும் நாம் தவறவிடுகிறோம் என்பதைப் பலர் அறிவதில்லை. குர்ஆனை எந்த மொழிகளிலும் முழுமையாக மொழிபெயர்க்க முடியாது என்பதே உண்மை.
    இறைவன் ஒவ்வொரு இறைத்தூதருக்கும் வெவ்வேறு ஆற்றல்களைத் தந்திருந்தான். இறுதித் தூதர் நபி முகமது (ஸல்) அவர்களுக்குத் தந்தது ‘திருக்குர்ஆனை’.
     
    நபிகளாருக்கு ‘வஹி’யைத் (இறை அறிவிப்பு) தந்து மக்களை பிரமிக்க வைத்தான். காரணம் அந்தக் காலகட்டத்தில் கவிதைகளில் மக்கள் மனம் மயங்கியிருந்த தருணம். அந்த நேரத்தில் குர்ஆனின் இறை வசனங்களைக் கேட்கும் இலக்கியவாதிகள் வியந்தார்கள். படிப்பறிவில்லாத முகமது (ஸல்) எப்படி இப்படியான அழகிய மொழியில் வாழ்வில் வெற்றி பெற உதவும் கட்டளைகளையும், வாழ்ந்து மடிந்த மக்களைப் பற்றியும் சொல்ல முடிகிறது என்று ஆச்சர்யத்தில் இருந்தார்கள். இது இறைவனிடத்திலிருந்து வந்த செய்தி என்றால் யாரும் நம்பத் தயாராக இல்லை. ஆனால் அதே சமயம் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. காரணம் அப்படியான இலக்கிய வடிவமாக குர்ஆன் இருந்தது.

    "நீங்கள் உண்மையாளராக இருந்தால் உங்கள் கற்பனையால் பத்து அத்தியாயங்களை இது போன்று கொண்டு வாருங்கள் (குர்ஆன் 11:13)" என்று குர்-ஆனில் மனிதர்களை நோக்கி சவால் விடப்பட்டது.

    இந்த சவாலை தேர்ந்த அரபி கவிஞர்களாலும் தோற்கடிக்க முடியவில்லை. முயன்று தோற்றார்கள். இன்றும் இந்த சவாலை முறியடிக்கும் சக்தி எவருக்கும் இல்லை என்பதே உண்மை.
     
    அப்படியான குர்ஆனின் இறைவசனங்களின் மொழிப்பெயர்ப்பை படிக்கும் போது அரபி வடிவத்தில் இருக்கும் குர்ஆனின் அழகையும் நயத்தையும் நாம் தவறவிடுகிறோம் என்பதைப் பலர் அறிவதில்லை. குர்ஆனை எந்த மொழிகளிலும் முழுமையாக மொழிபெயர்க்க முடியாது என்பதே உண்மை.

    எவ்வளவு பெரிய புலமை வாய்ந்த எழுத்தாளர்களும் தாம் சொல்ல வரும் விஷயத்திற்கு நடுவில் ஒரு வார்த்தைக்கு விளக்கம் தர நேர்ந்தால் அதனை அடைப்புக் குறியில் அல்லது அந்தப் பகுதிக்கு கீழே அடிக்குறிப்பில் தருவார்கள். ஆனால் கவிதை நடையில் இருக்கும் குர்ஆன், ஒரு விஷயத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வரும்போது - வேறு ஒரு சொல்லுக்கு விரிவான விளக்கத்தை அதே இடத்தில் வேறு ஓசை நயத்தில் சொல்லிவிட்டு - மறுபடியும் முன்பிருந்த நயத்திற்குத் தொடர்கிறது.

    விளக்கும்படியாகச் சொன்னால் ஓர் ஓசையில் ஒரு சூரா ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது அதில் வரும் ஒரு வார்த்தையின் பொருளை வேறு நயத்தில் தந்து விளக்கிவிட்டு, பின்பு மீண்டும் சொல்லிக் கொண்டிருந்த ஓசைக்கே திரும்பிவிடுகிறது.

    இதனை ‘கிராத்’ வடிவில் குர் ஆனை ஓதுபவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். திருக்குர்ஆன் ஒலி வடிவத்தில் இருப்பதாலேயே பலர் மனதில் அப்படியே பதிந்துவிடுகிறது.

    இப்படியான சந்த நயத்துடன் பொருள் மாறாமல் ஒரே சூராவில் ஈரொலி வடிவத்தைக் கொண்டு வருவது இன்றுவரை எவராலும் முயன்றும் முடியாமல் போன விஷயம். குர்ஆனின் இந்த நடை பல இலக்கிய நயங்களை உள்ளடக்கியது. திருக்குர்ஆனின் இலக்கியச் சிறப்பிற்கு இது ஒரு சான்று மட்டுமே. குர்ஆனைப் போன்று வேறு ஒன்றை கொண்டுவர முடியாததற்கு இப்படிப் பலநூறு காரணங்கள் உண்டு, அதனால்தான்,

    இந்த குர்ஆன் போன்றதைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று திரண்டாலும் இது போன்ற ஒன்றை கொண்டுவரமுடியாது (குர் ஆன்17:88) என்கிறது திருக்குர்ஆன்.

    - ஜெஸிலா பானு. 
    ×