என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    இறைவன் ஒருவன் தான் ஆனால் அவனுக்கு 99 அழகிய பெயர்கள் உள்ளன. அதனை 'அல் அஸ்மா வுல் ஹுஸ்னா' என்கிறோம். இந்த அழகிய திருநாமங்களைக் கொண்டு அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று திருக்குர்ஆனில் உள்ளது (7:180).
    "எல்லா வல்லமையும் மிக்க அல்லாஹ்வுக்குத் தொண்ணூற்று ஒன்பது திருநாமங்கள் உள்ளன. அவற்றைப் பொருளுடன் நினைவில் வைத்திருப்பவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள்" என்ற அபூஹுரைராவின் அறிவிப்பு ஸஹிஹ் முஸ்லிம் நூலில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இப்படி பெயர்களை மனனம் செய்பவர்கள் உண்மையில் சொர்க்கம் நுழைந்துவிடுவார்களா? தீமைகள் மட்டுமே செய்யும் ஒரு நபர், தொண்ணூற்று ஒன்பது பெயர்களை மனனம் செய்துவிட்டால் இறைவன் அவருடைய தீமைகளை மன்னித்துச் சொர்க்கத்தில் நுழைய செய்துவிடுவானா என்றால் 'இல்லை' என்பதே பதில்.

    ஹதீஸ்களில் பல இடங்களில் 'இப்படி'ச் செய்தால் சொர்க்கத்தில் நுழைவார் என்றும், நிறைய இஸ்லாமிய பிரார்த்தனை புத்தகங்களில் இதனை 'இத்தனை' முறை ஓதினால் இறைவன் பாவங்களை மன்னித்துவிடுவான் என்றும் குறிப்பிட்டிருக்கும். அதன் பொருளை அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது.

    இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படையே மனதை தூய்மையாக வைத்திருப்பதும், நல்ல காரியங்களைப் புரிவதும், பிறருக்கு உதவுவதும், யாருக்கும் கெடுதல் நினைக்காமல் இருப்பதும், எல்லா நிலைகளிலும் இறைவனை நினைத்திருப்பதுமே நம்மை ஈருலகிலும் வெற்றியடையச் செய்யும்.

    அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களை மனனம் செய்வதோடு சிந்தித்து, புரிந்து அவற்றை ஏற்றுச் செயல்படுத்துவதே சிறந்தது. பெயர்களை மனனம் செய்ய அந்தப் பெயர்களைப் பாடல்களாகக் கவிதைகளாகக் கோர்த்து வாயில் முணுமுணுத்தாலே மனதில் பதிந்துவிடும். சில பெயர்களும், அதன் பொருள்களும்:

    1. அர்-ரஹ்மான்: அளவற்றஅருளாளன், 2. அர்-ரஹீம்: நிகரற்ற அன்புடையோன், 3. அல்-மலிக்கு: உண்மையான அரசன், 4. அல்-குத்தூஸ்: தூய்மையாளன், 5. அஸ்-ஸலாமு: சாந்தி அளிப்பவன், 6. அல்-முஉமின்: அபயமளிப்பவன், 7. அல்-முஹைமின்: பாதுகாவலன்.

    அதுமட்டுமின்றி, 'யார் அல்லாஹ்வை அழகிய முறையில் நினைவு கூறுகிறார்களோ அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன. அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!' என்றும் திருக்குர்ஆன் 13:28-ல் வந்துள்ளது.

    - ஜெஸிலா பானு. 
    ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சமுதாயத்தை நெறிப்படுத்துவதற்காக இறைவன் அவனுடைய தூதர்களை அனுப்பி வைத்தான்.
    மனித சமுதாயத்திலிருந்து தேர்ந்தெடுத்து ஒருவரை தூதராக்கினானே தவிர, அவர்கள் பிறக்கும் போதே இறைத்தூதர்களாகப் பிறக்கவில்லை ஈசா நபியை தவிர.

    யூதர், கிறிஸ்தவர், முஸ்லிம் என்று எல்லா மதத்தவர்களுக்கும் பரிச்சயமானவர் நபி இப்ராஹிம் (அலை).

    இப்ராஹிம் (அலை) அவர்கள், பூஜை புனஸ்காரம் என்று இருக்கும் மதகுரு குடும்பத்தில் பிறந்தவர். அவர்களின் மூதாதையர்களும் பெற்றோரும் சமுதாயத்தின் பண்டிதர்களாகப் பூசாரிகளாக இருந்தனர். மக்களும் தேவ தேவதைகளின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர். பூசாரிகளுக்கு தேவ தேவதைகளிடம் மிகுந்த செல்வாக்கு இருப்பதாக நம்பி மக்கள் மதகுருக்களின் விருப்பங்களுக்கேற்ப அடிபணிந்து கிடந்தார்கள்.

    இப்படியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இப்ராஹிம் (அலை) யார் இறைவன் என்ற ஆராய்ச்சியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

    இரவு நேரத்தில் ஒளிரும் நட்சத்திரத்தை பார்த்து வியந்தார்கள். மற்ற எல்லா நட்சத்திரங்களையும் விட அந்த ஒற்றை நட்சத்திரம் பெரியதாகவும், மற்றவைவிட அதிகமாக ஒளிர்வதாகவும் இருப்பதைக் கண்டு இதுதான் கடவுள் என்று நினைத்தார்கள். காலையில் நட்சத்திரம் தென்படவில்லை. "நட்சத்திரம் கடவுளாக இருக்க முடியாது" என்று தமக்குதாமே சொல்லி கொண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்கள். "நிலவுதான் தெய்வமோ?" என்று நினைத்தார்கள். அதுவும் நிலையானதாக இல்லை என்பதைக் கண்டு வியந்தார்கள். "கண்களைக் கூச செய்யும் எல்லாவற்றிலும் பெரியதான சூரியனோ என் கடவுள்?" என்று நின்று யோசிப்பதற்குள் அதுவும் அஸ்தனமாகியது. இப்படி ஒவ்வொரு பொருள் மீதும் ஆராய்ச்சியைச் செலுத்தி 'மனிதர்களால் படைக்கப்பட்ட சிலைகள் கடவுளாக இருக்க முடியாது' என்பதை விளங்கி கொண்டார்கள். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், இயற்கை வளங்கள் அத்தனையும் ஒருவருடைய கட்டுபாட்டில் உள்ளதாக உணர்ந்தார்கள்.

    தன்னுடைய வாழ்வும் மரணமும் ஒரு மனிதரிடமோ, சிலைகளிடமோ, சூரியன், சந்திரன், நெருப்பு, நட்சத்திரம் என்று எதன் கைகளிலும் இல்லாத போது தான் ஏன் இதற்கு முன்பு நின்று சிரம் தாழ்த்த வேண்டும், அடிபணிய வேண்டுமென்று என்று சிந்திக்கத் தொடங்கி இப்ராஹிம் (அலை) "இறைவனுக்கு இணை வைக்கும் ஒவ்வொன்றையும் விட்டு நான் விலகி விட்டேன்" என்று உறுதியுடன் கூறி இறைவனிடம் தன்னை வழிநடத்த வேண்டுமென்று பிரார்த்திக்களானார்கள். இறைவன் இப்ராஹிமை இறைத்தூதராக்கினான். (திருக்குர்ஆன் 6:76-83)

    -ஜெஸிலா பானு.
    குர் ஆனில் பல வசனங்களில் இறைவன் நேரடியாகப் பொருள் தராமல் ஒரு விஷயத்தை உறுதியாகத் தெரிவிக்க அதனை மறுத்து பின்பு உறுதிப்படுத்துகிறான்.
    இஸ்லாமியர்களின் முதல் கலிமாவான `லா இலாஹ இல் லல்லாஹ்` என்பதின் பொருளை கூர்ந்து கவனித்தால் `வழிபடுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை` என்பதாகும்.

    `லா இலாஹ` அதாவது வழிபாட்டிற்குரியவன் யாருமில்லை என்று கூறும் போதே வழிபாட்டிற்குரிய தகுதி யாருக்கும் எவருக்கும் இல்லை என்று முதலில் மறுத்துச் சொல்லிவிட்டு, பின்பு `இல் லல்லாஹ்` - அல்லாஹ்வைத் தவிர என்று அதனை அழுத்தமாக உறுதிப்படுத்துகிறான். இதிலிருந்து தகுதி அல்லாஹ்விற்கு மட்டுமே உள்ளது, அவனுக்கு இணையாக யாரும் எதுவும் இல்லை என உறுதிப்படுத்துவதே இஸ்லாமின் அஸ்திவாரமாகும்.

    இந்தக் கலிமாவை மனதார மொழிந்தவர்களுக்கு நரகம் தடுக்கப்பட்டதாகிவிடுகிறது.

    ``யார் தமது உள்ளத்தில் ஓர் அணுவளவு நன்மை இருக்கும் நிலையில் `லா இலாஹ இல் லல்லாஹ்` என்று சொன்னாரோ அவர் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார்`` என்று ஸஹீஹான ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

    இதுவே இறைத்தூதர்களின் இஸ்லாமிய அழைப்பிற்கான திறவுகோலாக இருந்தது.

    வெறும் வாய் வார்த்தையாக மொழிவதல்லாமல் பொருள் உணர்ந்து, உறுதியாகத் தெளிந்த உள்ளத்துடன், முழுமையான நம்பிக்கையுடன் இதைக் கூற வேண்டும்.

    -ஜெஸிலா பானு.
    இறைவன் அருளிய திருக்குர்ஆன் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டுதலாக வந்த திருமறை.
    இறைவன் அருளிய திருக்குர்ஆன் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டுதலாக வந்த திருமறை. அந்தத் திருமறை ஒரே புத்தகமாக ஒரே நாளில் ஒரே தருணத்தில் இறைவனிடமிருந்து அருளப்பட்டதல்ல.

    வெவ்வேறு தருணங்களில் வாழ்க்கையின் கேள்விகளுக்குப் பதிலாக அருளப்பட்ட வசனங்களை, பின்னாட்களில் ஒரே முழு நூலாக்கப்பட்டது. புனித நூலின் ஒவ்வொரு வசனமும் முகமது நபிக்கு (ஸல்) 'வஹி'யாக இறை அறிவிப்பாக வானவர் ஜிப்ரீல் (அலை) மூலம், நபிகளாரின் நாற்பதாவது வயது முதல் அவர் இறக்கும் வரை இருபத்தி மூன்று வருடங்களாக அருளப்பட்ட இறை அறிவிப்பை மனனம் செய்தும், எழுதி பத்திரப்படுத்தியும் வைக்கப்பட்டிருந்ததை நபிகளாருக்கு பிறகு அபூபக்கர் (ரலி) ஆட்சி காலத்தில் திரட்டப்பட்டிருந்தாலும், அதனை உதுமான் (ரலி) காலத்தில்தான் முழுமையாக்கப்பட்டு இன்று நம் கைகளில் தவழும் முழுமைப் பெற்ற திருக்குர்ஆனாகத் திகழ்கிறது.

    திருக்குர்ஆனை மொழிப்பெயர்க்கப்படாத மொழியே இல்லை எனலாம். உலகில் அதிகப்படியாகத் தேடி படிக்கப்படும் புத்தகமாகக் குர்ஆன் திகழ்கிறது. உலகில் அதிகப்படியாக ஆராயப்பட்ட நூலில் குர்ஆனும் ஒன்று. அதில் மொத்தம் 114 சூரா உள்ளது. ஓவ்வொரு சூராவுக்கும் வெவ்வேறு தலைப்புகள் உள்ளன.

    குர்ஆனின் மூலம் நாம் அந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்தவற்றை அறிந்து கொள்ள முடிவதோடு, அப்போதிருந்த கலாச்சாரத்தைப் பற்றியும் உணர்ந்து கொள்ள முடிகிறது. இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆன் இறைவனின் அறிவிப்புகள் என்றும் கட்டளைகள் என்றும் இஸ்லாமியர்களின் நம்பிக்கை. அதன் காரணமாகவே இஸ்லாமிய சட்டதிட்டங்களான `ஷரியத் சட்டம்` குர்ஆனை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. தொழுகையில் ஒவ்வொரு நிலைகளிலும் குர்ஆனின் வசனங்களே ஓதப்படுகிறது. குர்ஆன் என்றாலே `ஓதுதல்` என்று பொருட்படும்.

    உள்ளத் தூய்மைக்கும் ஆத்மாவின் ஆரோக்கியத்திற்கும் திருக்குர்ஆனை தினமும் ஓதுவோம்.

    -ஜெஸிலா பானு.
    நபிகளார் வாழ்வில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட 'நம் நாயகம்' நூலில் இருந்து.
    ஒருமுறை நாயகம் (ஸல்) பயணக் களைப்பில அசந்துபோயி ஒரு மரத்தடியில தூங்கிட்டாங்க.

    அப்ப எதிரிப்படையைச் சேர்ந்த ‘கவ்ராத்’ங்கறவரு நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்தவுடன் ‘இதுதான் நமக்குக் கிடைச்ச வாய்ப்பு’ன்னு தன் கையிலிருந்த வாளோடு நாயகம் (ஸல்) அவர்களை நெருங்கினாரு.

    நாயகம் கண் விழிச்சுப் பார்க்கிறாங்க. கவ்ராத் “உங்களை யார் இப்ப காப்பாத்துவாங்க?”ன்னு சொல்லியபடியே நாயகத்தைக் கொல்ல வராரு…

    உடனே நாயகம் (ஸல்) அவர்கள் உறுதியான குரலில் “என்னைப் படைச்ச இறைவன் நிச்சயம் என்னைக் காப்பாத்துவான்”னு சொல்றாங்க.

    அவங்க அவ்வளவு உறுதியாச் சொன்ன விதத்தைப் பார்த்து கவ்ராத்துக்கு கை நடுங்கிடுச்சு… கவ்ராத் கையிலிருந்த வாள் அவரையறியாமலே கீழே விழுந்துடுச்சு.

    நாயகம் (ஸல்) உடனே கீழே விழுந்த அந்த வாளை எடுத்து “இப்ப உங்களை யாரு காப்பாத்துவாங்க?”ன்னு கவ்ராத்தைப் பார்த்துக் கேட்கிறாங்க.

    உடனே கவ்ராத் பயந்தே போயிட்டாரு… கையெல்லாம் நடுநடுங்குது… முகமெல்லாம் வேர்த்து, பதறியபடியே “என்னைக் காப்பாத்த யாருமே இல்லை… நாயகமே நீங்கதான் என்னைக் காப்பாத்தணும்”ன்னு கெஞ்சியிருக்காரு.

    அதுக்கு நாயகம் (ஸல்) அமைதியா  “அப்படிச் சொல்லாதீங்க நண்பரே! உங்களைக் காப்பாத்தறதுக்கும் இறைவன் இருக்கான்”னு சொல்லி அந்த வாளை கவ்ராத்தோட கையிலேயே திருப்பிக் கொடுத்திடுறாங்க.

    இந்தச் சின்ன சம்பவத்தின் மூலமா நமக்கு என்ன தெரியுதுன்னா… நாயகம் (ஸல்) எந்த ஒரு கஷ்டத்திலயும் அல்லாஹ்வை மறக்கவே இல்லை…

    தனக்கு ஆபத்து வந்தவுடனே பயந்து ஓடாமலும், தன்னைக் காப்பாத்துன்னு எதிரிகிட்ட கேட்காமலும், நம்மைப் படைச்ச இறைவன் நம்மைக் காப்பாத்துவான்னு நம்பறவங்களுக்கு இறைவன் எப்பவும் துணையாக இருப்பான்ங்கிறது இதுல இருந்து நமக்குப் புரியுது.

    எவ்வளவு பெரிய ஆபத்தாய் இருந்தாலும் உறுதியான எண்ணத்தோடு அல்லாஹ்வை நினைத்தால், அல்லாஹுத்தஆலா நமக்கு அதை லேசாக்கித் தருவான்.

    - ஜெஸிலா பானு.
     
    இறைகட்டளையை நிறைவேற்றல், அழகிய முறையில் செயலாற்றல் என்பதை இஹ்சான் என்போம்.
    அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் நபி (ஸல்) அல்லாஹ்வின் இறைத்தூதர் என்றும் உறுதியாக இருப்பது. அதுமட்டுமின்றி இறைவனின் கட்டளைகளைச் சரிவரச் செய்தல் அதாவது, தொழுகை, ஸகாத் (தர்மம்) செய்தல், ரமதான் மாதத்தில் நோன்பு இருத்தல், சென்றுவர இயன்றால் மட்டுமே இறையில்லமான கஅபாவிற்குச் சென்று 'ஹஜ்' செய்தல் என்பது இஸ்லாமென்றால், ஈமான் என்ற இறைநம்பிக்கையின் அடிப்படையானது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நம்புவதும், நன்மை- தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நம்புவதுமாகும்.

    இறைகட்டளையை நிறைவேற்றல், அழகிய முறையில் செயலாற்றல் என்பதை இஹ்சான் என்போம்.

    இஹ்சான் என்றால் அல்லாஹ்வை பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். ஏனெனில், இறைவன் நாம் பார்க்க முடியாவிட்டாலும் அவன் நம்மைப் பார்க்கின்றான் என்ற உணர்வுடன் உளதூய்மையுடன் வழிபடுவது.

    இறைவன் நம் வாழ்வில் இஸ்லாத்தை ஈமானுடன் இஹ்சானுடன் பின்பற்ற அருள்வானாக. ஆமீன்!!

    - ஜெஸிலா பானு.

    நபிகளார் வாழ்வில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட 'நம் நாயகம்' நூலில் இருந்து சில வரிகள்
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நாற்பது வயது ஆவதற்கு மூணு வருடங்கள் இருந்துச்சு.

    அப்ப நாயகத்திற்குத் தூக்கத்தில, இறைச்செய்தி நல்ல கனவுகளா வந்திருக்கு. அதிகாலைப் பொழுதோட விடியலைப் போல அந்தக் கனவெல்லாம் தெள்ளத் தெளிவா இருந்துச்சாம். அந்தக் கனவுகளுக்கு விளக்கம் புரியாம நாயகம் (ஸல்) தனிமையை விரும்பியிருக்காங்க. தண்ணீரையும், சத்து மாவையும் எடுத்துக்கிட்டு, மக்காவிலிருந்து இரண்டு மைல் தூரமிருக்கிற நூர் மலைக்குப் போயி, அங்குள்ள ஹிரா குகையில தங்கி இந்தப் புவிய இயக்குற சக்திய பற்றிய நினைப்பாவே இருப்பாங்களாம்.

    தமக்குத் தெரிஞ்ச வணக்க வழிபாடுகளைச் செஞ்சு, இந்தப் பூமியைத் தாண்டி, இந்தப் பிரபஞ்சத்தையே இயக்குற அபார சக்தியைப் பற்றியும், மறைபொருளைப் பற்றியும் ஆழமாய்ச் சிந்திக்கறதுலேயுமே ஈடுபடுவாங்களாம். ஒவ்வொரு ரமதான் மாதத்திலும் அந்த இடத்துலேயே இருப்பாங்களாம்.

    அப்போதான் அந்தச் சம்பவம் நடந்தது…

    நாயகத்துக்கு நாற்பது வயது முடிவடையுது. வழக்கம் போல ரமதான் மாதத்திலே, மனைவி கதீஜாவிடம் சொல்லிட்டு ஹிரா குகைக்குப் போறாங்க. இறைவனைப் பற்றிய சிந்தனையில் இருக்கும்போது அவர்களின் முன்னால் ஒரு வானவர் தோன்றி இருக்காங்க.

    நாயகத்தைப் பார்த்துச் சொல்லி இருக்காங்க “ஓதுங்க"ன்னு.

    அப்ப நாயகம் (ஸல்) சொல்லி இருக்காங்க “எனக்கு ஓத எல்லாம் தெரியாதே"ன்னு. உடனே அந்த வானவர் என்ன பண்ணி இருக்காங்க, நாயகத்தைக் கட்டிப் பிடிச்சு அணைச்சிருக்காங்க.

    அணைச்சுட்டு, “இப்ப ஓதுங்க"ன்னு சொல்லி இருக்காங்க.

    அதுக்கு நாயகம் (ஸல்) திரும்பவும் சொல்லி இருக்காங்க “எனக்கு ஓதத் தெரியாதுங்களே!"ன்னு.

    இரண்டாவது முறையும் முன்ன செஞ்சது மாதிரியே சிரமம் தர்ற அளவுக்கு அந்த வானவர், நாயகத்தை இறுகக் கட்டி அணைச்சிருக்காங்க. திரும்பவும் சொல்லி இருக்காங்க “இப்ப ஓதுங்க"ன்னு.

    மறுபடியும் நாயகம் (ஸல்) சொல்லி இருக்காங்க “எனக்கு ஓதத் தெரியாதுங்க"ன்னு.

    மீண்டும் அந்த வானவர் ஜிப்ரீல் (அலை) மூன்றாவது முறையா நாயகத்தை இறுக்கமாகக் கட்டி அணைச்சுட்டு, அல்லாஹ்கிட்ட இருந்து வந்த வசனத்தை, செய்தியைச் சொல்றாங்க.

    “நபியே! எல்லாவற்றையும் படைச்ச இறைவனோட திருப்பெயரால் திருக்குர்ஆனை நீங்க ஓதுங்க. இறைவன்தான் மனிதனைக் கருவிலே இருந்து படைச்சான். ஓதுவீராக! உம்முடைய இறைவன் கண்ணியமிக்கவன்"ன்னு சொல்லி திருக்குர்ஆனில் வர்ற 'சூரத்துல் அலக்' அப்படிங்கற வசனத்தை ஓதிக் காட்டினாங்க.

    ‘அலக்’னா கருவுற்ற சினைமுட்டைன்னு அர்த்தம். ஏன்னா அதுல இருந்துதான் உயிர் உண்டாகுதுங்கறதால அந்த அத்தியாயத்திற்கு அந்தப் பெயர் வந்தது. நாயகமும் அவங்க சொன்னபடியே ஓதுறாங்க. அவங்களால ஓத முடியுது… அவங்களுக்கே ஆச்சர்யமா இருக்கு.

    நாயகம் (ஸல்) வேகமாக வீட்டிற்கு வந்து தம் மனைவி கதீஜாவிடம் நடந்ததைச் சொல்லி “எனக்கு ஏதோ ஆகப் போகுதுன்னு பயம்மா இருக்கு"ன்னு சொல்றாங்க. அதை எல்லாம் கவனமாகக் கேட்ட கதீஜா (ரலி) சொல்றாங்க “இறைவன் உங்களை இழிவுபடுத்த மாட்டான். ஏன்னா நீங்க உறவினர்களோட இணங்கி வாழக் கூடியவங்க. கஷ்டப்படுறவங்களோட கஷ்டத்தை எல்லாம் உங்க கஷ்டமா நெனச்சு அதை நீங்க தாங்கக் கூடியவங்க. நீங்க உழைச்சு ஏழைகளுக்குக் கொடுக்குறீங்க. வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளை நீங்க உபசரிக்கக் கூடியவங்க. சோதனை வர்றவங்களுக்கு நீங்களா தேடிப்போயி உதவி செய்யக் கூடியவங்க. அப்படிப்பட்ட உங்களை எப்பவுமே இறைவன் இழிவுபடுத்த மாட்டான்"னு. அப்புறம் கதீஜா (ரலி), அவர்கள் தந்தையுடன் பிறந்த நவ்ஃபல் அப்படிங்கறவருடைய மகன் வராக்கா கிட்ட அழைச்சிட்டுப் போறாங்க.

    வராக்கா அந்தக் காலத்திலேயே ரொம்பப் படிச்சவரு. கிறிஸ்தவச் சமயத்தைத் தழுவி இருந்தவரு. அவரு ஹீப்ரு மொழியிலே பைபிளை எழுதக் கூடிய அளவுக்கு ஆற்றல் நிறைந்தவரு. கண்பார்வை இல்லாதவரு, ரொம்பவும் வயதானவரு.
    ஹிரா குகையில் நடந்ததையெல்லாம் நாயகம் (ஸல்) வராக்கா கிட்ட சொல்றாங்க. அதை அவர் ரொம்பவும் கூர்மையாகக் கேட்டுட்டு, சொல்றாங்க “கண்டிப்பா நீங்க சந்திச்சது அதே வானவர்தான்… மூஸாவிடம் இறைவன் அனுப்பிய வானவர்” அப்படின்னு சொல்லிட்டு “உங்களுடைய சமூகத்தார் உங்கள நாட்டை விட்டு வெளியேற்றும்போது நான் உயிரோட இருப்பேனா இல்லையான்னு எனக்குத் தெரியாது. அப்படி நான் உயிரோடு இருந்தேன்னா அப்ப உங்களுக்கு நான் உதவி செய்வேன்"ன்னு சொல்றாங்க.

    உடனே நாயகம் (ஸல்) “என்ன? என்னை இந்த நாட்டை விட்டு அனுப்பிச்சிருவாங்களா?"ன்னு கேட்கிறாங்க

    அதுக்கு வராக்கா சொல்றாங்க “ஆமா… சத்திய வார்த்தையக் கொண்டு வந்த எந்த மனிதரையும் இறைத்தூதர்களையும் மக்கள் பகைச்சிக்காம இருந்ததில்ல"ன்னு. ஆனா நாயகத்தை மக்காவாசிகள் துரத்தியபோது நாயகத்துக்கு உதவி செய்ய வழியில்லாமல் அதுக்கு முன்னாடியே வராக்கா இறந்திடுறாங்க.

    இறைவனிடம் இருந்து இரண்டாவது செய்தி நாயகத்துக்கு வருது. அப்ப இதே மாதிரி ஹிரா குகையில இருந்து நாயகம் (ஸல்) வெளியே நடந்து வரும்போது, நாயகத்தை யாரோ கூப்பிட்ட சப்தம் கேட்குது.

    திரும்பித் திரும்பிப் பார்க்குறாங்க. யாருமே இல்லை. தலையை உயர்த்தி வானத்தைப் பார்க்குறாங்க.

    வானத்துக்கும் பூமிக்கும் நடுவிலே ஒரு பெரிய நாற்காலி போட்டு, பிரமாண்டமான உருவத்திலே ஜிப்ரீல் (அலை) இருக்காங்க. ஹிரா குகையிலே பார்த்த அதே வானவர்தான். ஆனா இவ்வளவு பிரமாண்டமா பார்த்துட்டு, நாயகம் (ஸல்) மயக்கம் போட்டு தரையிலே விழுந்துடுறாங்க. அப்புறம் தானாகவே மயக்கம் தெளிஞ்சு, வேக வேகமாகப் போறாங்க.

    வீட்டுக்குள் நுழைஞ்சதுமே நாயகம் (ஸல்) மனைவி கதீஜாவைப் பார்த்து, “என்னைப் போர்த்துங்க… என்னைப் போர்த்துங்க"ன்னு நடுக்கத்துடன் சொல்றாங்க. கதீஜா (ரலி) அவர்களும் நாயகம் (ஸல்) சொன்னபடி போர்த்தி விடுறாங்க. அப்ப ஜிப்ரீல் (அலை) வந்து அல்லாஹ்வுடைய வசனத்தைச் சொல்றாங்க.

    அந்த வசனம் என்ன சொல்லுதுன்னா “போர்த்திக் கொண்டு இருப்பவரே, எழுந்திருங்க! நீங்கதான் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யணும். உங்களுடைய இறைவனைப் பெருமைப் படுத்துங்க. உங்களுடைய ஆடையைப் பரிசுத்தமாக்கி வெச்சுக்குங்க. அசுத்தங்களை வெறுத்துடுங்க. உங்க இறைவன் கட்டளைகளை நிறைவேற்றுவதற்காகக் கஷ்டங்களை நீங்க பொறுத்துக்குங்க" அப்படின்னு திருக்குர்ஆன்ல வர்ற 'சூரத்துல் முத்தஸ்ஸீர்'ல உள்ள வசனத்தைச் சொல்றாங்க. 'முத்தஸ்ஸீர்'னா ‘போர்த்திக் கொண்டிருப்பவர்’ன்னு அர்த்தம்.

    இந்த மாதிரி ஒவ்வொரு வசனமா நாயகத்திற்கு இறக்கப்பட்டு மொத்தம் 114 அத்தியாயங்கள் (சூரா) நமக்குக் கிடைச்சிருக்கு. முதல்ல இறங்கின சூரத்துல் அலக்கில் உள்ள வசனத்தில் உயிர் உண்டாகுதுங்கறதப் பத்தி 1400 வருடங்களுக்கு முன்பே திருக்குர்ஆன் மூலமா நமக்கு இறைவன் சொல்லியிருக்கான்!

    இன்றைய காலகட்டத்துல அறிவியல் பூர்வமா நிறைய விஷயங்களை நாம தெரிஞ்சிக்கிறோம். ஆனா 1400 வருடங்களுக்கு முன்பே பலநூறு அறிவியல் செய்திகளை நாம திருக்குர்ஆன்ல பார்க்க முடியுது.

    இறைவன் நமக்குத் திருக்குர்ஆன் என்ற இறைநெறியைக் கொடுத்து, அதுல தந்திருக்கிற கட்டளைப்படி நம்மால் வாழ முடியுமான்னு நமக்குச் சந்தேகம் வரக் கூடாதுன்னு… அப்படி வாழ முடியும்ன்னு வாழ்ந்து காட்டிய, நமக்கெல்லாம் முன்மாதிரியா இருந்த நாயகத்தையும் அனுப்பி வைச்சான். ஒவ்வொரு வசனமும் இறைவன் நமக்காக, நம்மை வழி நடத்தறதுக்காகக் கொடுத்திருக்கான்.

    அந்தத் திருக்குர்ஆன்ல வர்ற ஒவ்வொரு வசனத்தையும் புரிஞ்சு, இறைவன் நமக்காகக் கொடுத்த விஷயம்னு தெரிஞ்சு நாம திருக்குர்ஆனை ஓதிப் பயனடையணும்.

    எழுதுபவர் ஜெஸிலா பானு
    வானங்களையும், பூமியையும், மலைகளையும், இயற்கையையும், மிருகங்களையும், மனிதர்களையும், சர்வ சிருஷ்டிகளையும் படைத்தவன் இறைவன்.
    வழிப்பாடுக்குரியவன் வேறில்லை 'அல்லாஹ்'வை தவிர. 'அல்லாஹ்' என்ற அரபு வார்த்தைக்கு இறைவன் என்று பொருள். அதன் முழுமையான பொருள் 'வழிப்பாடுக்குரிய இறைவன் ஒருவனே' என்பதாகும்.

    அல்லாஹ் என்றால் இறைவன் என்ற பொருள் மட்டுமே தவிர அது இறைவனுடைய பெயராகாது. அதனாலேயே அரபு நாடுகளில் வாழும் பல்வேறு மதத்தினவர்களும் மிகச் சரளமாக 'இன் ஷா அல்லாஹ்', 'ஸுப்ஹானல்லாஹ்', 'அல்லாஹ்' என்று பேச்சு வழக்கிலேயே பயன்படுத்துகிறார்கள்.

    நடக்கவிருக்கும் விஷயங்களைப் பற்றிப் பேசும் போது 'இன் ஷா அல்லாஹ்' அதாவது 'இறைவன் நாடினால்' என்பதைச் சேர்த்தே பேசுகிறார்கள். காரணம், அடுத்த நிமிடம் நமக்கானதில்லை, என்ன நடக்குமென்று தெரியாத நாம் எல்லாக் காரியங்களிலும் இறைவனை நினைத்து கொள்ளுதல் வேண்டும் என்பதாக.

    அழகான அல்லது பிரமிப்பானா ஏதாவது ஒரு விஷயத்தைக் கண்டால் இறை நம்பிக்கையுடையவன் மொழிவது 'ஸுப்ஹானல்லாஹ்' அதன் விளக்கம் இறைவன் பரிசுத்தமானவன், தூயவன் என்பதாக.

    இஸ்லாம் என்பது ஒரு மதம் அல்ல அது ஒரு மார்கம் வழிகாட்டுதல். இறைவன் இவ்வகையான வழிகாட்டுதலை இவ்வுலகத்தைப் படைத்த நாள் முதல் மனித சமுதாயத்தின் வாழ்வு சீர்பெற அவர்களை நெறிப்படுத்த ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைவனுடைய தூதுவனை அனுப்பியிருந்தான். 'இஸ்லாம்' என்ற அரபு வார்த்தைக்குப் பணிதல், கட்டுப்படுதல், வழிப்படுதல், சமாதானம் என்ற கருத்துக்களைப் பொதிந்துள்ளது. ஒரு மனிதன் இஸ்லாமிய/ அரபிய பெயர் வைத்திருந்தால், முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்திருந்தால் மட்டுமே முஸ்லிமாகிவிட முடியாது. இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நல்லொழுக்கத்தோடு அவனுடைய கட்டளைகளை ஏற்றுப் பின்பற்றி நடப்பவனே 'முஸ்லிம்'.

    இஸ்லாமின் அடிப்படை கடமைகள் ஐந்து தூண்களால் நிறுவப்பட்டுள்ளது. அதில் முதலாவது வழிபாடிற்குத் தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை என்பதும் நபி முஹம்மது (ஸல்)* அவர்கள் மனித சமுதாயங்கள் அனைத்திற்கும் இறைவனால் அனுப்பப்பட்ட இறுதித்தூதர் என்றும் சாட்சியம் கூறுதல். இதை அரபியில் 'ஷஹாதா' என்பார்கள்.

    இரண்டாவது தொழுகையை நிலைநாட்டுவது, மூன்றாவது ஜக்காத் கொடுப்பது அதாவது தர்மம் செய்வது, நான்காவது தூண்தான் ரமதான் மாதத்தில் நோன்பு நோற்பது. காலை சூரியன் உதயத்திலிருந்து மாலை சூரியன் மறையும் வரை உண்ணாமல், பருகாமல், புறம் பேசாமல், கோபம் கொள்ளாமல், உடல் உறவு கொள்ளாமல் இருத்தல். ஐந்தாவது ஹஜ் செய்வது.

    இந்த ஐந்து தூண்களில் நம் வாழ்வை நிறுவ இறைவன் நமக்கு அருள்வானாக. ஆமீன்.

     *ஸ்ல் - 'ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்' என்பதன் சுருக்கமாகும். இதன் பொருள் "நபிகள் நாயகத்தின் மீது அல்லாஹ் கருணையும் சாந்தியும் பொழிவானாக" என்பதாகும். எழுத்தில் ஸல் என்று கூறப்பட்டாலும் வாசிக்கும் போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று வாசிக்க வேண்டும். நாயகத்தின் பெயருக்குப் பின் சில இடங்களில் ஸல் என்று குறிப்பிடாமல் இருந்தாலும் அவர்களுக்காக ஸலவாத் கூற வேண்டும், அதாவது அவர்களுக்காக இறையருள் வேண்டி துஆ செய்ய வேண்டும்.

     - எழுதுபவர் ஜெஸிலா பானு, துபாய்
    ‘மனிதனால் பெறப்பட்டு பாதுகாக்க வேண்டிய ஒரு பொருள்’ என்பது ‘அமானிதம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
    அமானிதம் இருவகைப்படும். 1) மனிதனின் மீது கொண்ட அபரிமிதமான அன்பின் பொருட்டால் அல்லாஹ் வழங்கியவை, 2) மனிதர்கள் தங்களுக்குள்ளாக பரிமாறிக் கொண்ட அமானிதங்கள்.

    அல்லாஹ் மனிதனுக்கு அருளியவை காற்று, ஆகாயம், நிலம், நீர், நெருப்பு. இதில் ஏதாவது ஒன்று இல்லாவிட்டால் கூட மனிதனால் உயிர் வாழ்வது கடினம். இவற்றை நாம் இலவசமாக பெற்றதால் அதன் முக்கியத்துவத்தை அறியாமல் அதனை பாதுகாக்க தவறிவிட்டோம்.

    நன்றி கெட்ட மனிதனின் செயல்களால் ‘ஓசோன்’ படலத்தின் ஓட்டை நாளுக்குநாள் பெரிதாகிறது. அதனால் ஊதா கதிர்களின் ஊடுருவலை தடுக்க முடியாமல் உயிர் கொல்லி நோய்களை சந்தித்து கொண்டிருக்கின்றான். காற்று மண்டலத்தில் மாசுக்களை குவித்துக் கொண்டிருப்பதால் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக நுரையீரல் நோய்களால் பாதிப்புக்குள்ளாகின்றான்.

    கழிவு நீரை குடிநீரில் கலக்கச் செய்கின்றான். பணத்தாசையால் நிலத்தடி நீரை கூறுபோட்டு விற்கின்றான். வயல்களில் மீத்தேன் வாயு குழாய்கள் பதித்து நம் எதிர்கால சந்ததியரின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி செல்கின்றான். நிலம் பாழ்பட்டு போனதால் விளைச்சல் இல்லை.

    இவ்வாறு அல்லாஹ் அருளிய இயற்கை வளங்களான அமானிதத்தை பாதுகாக்க தவறிவிட்டதால் பாதிப்புக்கு உள்ளாக்கி தவிக்கிறோம்.

    அல்லாஹ்வால் நம் உடம்பில் நமக்குள்ளே நமக்காக அமைக்கப்பட்ட அமானிதங்கள்: மூளை, இதயம், கண், செவி, நாக்கு, கை, கால்கள் என்று பல உறுப்புகள் உள்ளன.

    இவை ஒவ்வொன்றையும் அல்லாஹ் கூறிய வழியில் பயன்படுத்தும்போது தான் அதற்குரிய அமானிதத்தை நிறைவேற்றியவர்கள் ஆவோம்.

    நல்லவற்றைப் பார்ப்பது, நல்லவற்றை கேட்பது, நல்லவற்றை சொல்வது, நல்லவைகளே சிந்தித்து செயல்படுத்துவது, நல்லவற்றை கடைப்பிடித்து நல்லவை நோக்கி நகர்வது... போன்றவை மூலம் சமுதாயத்திற்கு நன்மை செய்ய வேண்டும். இதைச் செய்ய தவறும் போது அந்த உறுப்புகளே நமக்கு எதிராக சாட்சி சொல்லும்.

    இதையே திருக்குர்ஆன் (41:20) இவ்வாறு எச்சரிக்கிறது:

    ‘‘அச்சமயம் பாவம் செய்த அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய (உடல்) தோல்களும் அவர்கள் அவற்றின் மூலம் செய்தவற்றைப் பற்றி சாட்சி கூறும்’’.

    ‘வாய்களுக்கு முத்திரையிடப்பட்டு மற்றைய உறுப்புகள் பேசத்தொடங்கும் அந்த மறுமை நாளை பயந்து கொள்ளுங்கள்’ என்ற வாக்குகள் உண்மைப்படுத்தப்படும். அன்றைய தினம் அமானிதங்களுக்கு அநியாயம் செய்தவன் சொர்க்கத்தின் வாசலையும் நெருங்க முடியாது, சொர்க்கத்தின் வாடையையும் நுகர முடியாது.

    அடுத்து, அல்லாஹ்வால் நமக்கு அருளப்பட்ட அமானிதங்கள், நமது பெற்றோர், மனைவி மற்றும் பிள்ளைகள். நம்மை பெற்று வளர்த்து ஆளாக்கி உயர்ந்த நிலைக்கு கொண்டு வர எத்தனையோ தியாகங்களை செய்து, நமக்காக வாழ்ந்தவர்கள் தான் நமது பெற்றோர்கள். வயோதிகத்தினால் நம்மிடம் அடைக்கலமாக, அமானிதமாக இருக்கும் அவர்களை கருணைக்கண் கொண்டு பார்க்க வேண்டும். அவர்களின் மனப்பொருத்தத்தில் தான் நமது வாழ்வின் மேன்மை அடங்கியிருக்கிறது என்பதை உணர்ந்து அவர்களிடம் பாசமாக நடந்து கொள்ள வேண்டும்.

    பெற்றோர், உற்றார், உறவினர்களை உதறிவிட்டு புது உறவாய் வந்து அடைக்கலம் ஆகும் மனைவி கூட அமானிதம். பிள்ளை பெற்று குடும்ப வாரிசை உருவாக்குவதில் பெண்களின் தியாகம் மிகப்பெரியது. அப்படிப்பட்ட பெண்களுக்கு நாம் உரிய மரியாதைகளையும், உரிமைகளையும் வழங்க வேண்டும். மகிழ்ச்சியான மணவாழ்க்கையை தரக்கூடிய மனைவிக்கு அவளுக்குரிய உரிமையை கொடுப்பது தான் அவளின் அமானிதத்தை நிறைவேற்றியதாக அமையும்.

    பிள்ளைகள் நமக்கு கண் குளிர்ச்சி மட்டுமல்ல, உலகில் நம் பாரம்பரியமிக்க பரம்பரையைச் சொல்ல வந்த வாரிசு சொத்துக்கள். பிறந்ததிலிருந்து வளர்ந்து தனக்கொரு வாழ்வை அமைத்துக் கொள்வது வரை, அவர்கள் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்கள். நம் வருங்காலத்தின், வயோதிகத்தின் காவல் தூண்கள். அவர்களில் உரிமைகளும் பேணப்பட வேண்டும்.

    நமது பதவிகள், பொறுப்புகள், ஒப்படைக்கப்பட்ட வேலைகள் இவைகளும் கூட அமானிதங்கள் தான். ஒருவர் தன் பதவியின் மூலம் எந்த நன்மைகளை பிற மக்களுக்கு செய்ய வேண்டுமோ அதனைச் செய்ய தவறும் போது பதவிக்கான அமானிதத்திற்கு மோசம் செய்கின்றான்.

    அதனால் தான் அருள்மறை திருக்குர்ஆன் நம்பிக்கையாளர்களை நோக்கி இவ்வாறு கூறுகிறது:

    ‘‘நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள். மேலும் நீங்கள் செய்வது அநியாயம் என அறிந்து கொண்டே உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களுக்கு மோசம் செய்யாதீர்கள்’’. (8:27)

    அமானிதங்களுக்கு மோசம் செய்வது அல்லாஹ்விற்கும், அவன் தூதருக்கும் மோசம் செய்வதற்கு ஒப்பானது. நாளை மறுமையில் ஒருவன் எவ்வளவோ நன்மைகள், நல்லறங்களோடு அல்லாஹ்வை சந்தித்தாலும், அவன் அமானிதத்திற்கு செய்த சிறு அநீதிக்காக கேள்வி கணக்குகளுக்கு நிச்சயமாக உள்ளாக்கப்படுவான்.

    ஆனால் ஒருவன் அமானிதங்களை பேணிக்காக்கும் போது அவனுக்கு சொர்க்கம் பரிசாக அளிக்கப்படுவது மட்டுமல்ல, அங்கு அவனுக்கு மிகுந்த கண்ணியமும் காத்திருக்கிறது. ‘ஜன்னத்துல் பிர்தவ்ஸ்’ என்ற உயர்வான சொர்க்கத்தில் அவன் கண்ணியப்படுத்தப்படுவான் என்பது இறைவாக்கு.

    ‘‘இன்னும் எவர்கள் தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதப்பொருட்களையும் தாங்கள் செய்த வாக்குறுதிகளையும் பேணி யோக்கியமாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் சொர்க்கத்தில் மிக்க கண்ணியப்படுத்தப்படுவார்கள்’’. (திருக்குர்ஆன்–70:32)

    தனக்குத் தானே கொண்டுள்ள அமானிதத்தைப் பேணியவன் வெளி அந்தரங்கத்தில் பிறர் மூலம் பெறப்படும் பொருட்களையும் மிகக்கவனத்தோடு பாதுகாத்து எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஒப்படைக்க வேண்டும் என்றும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

    ‘‘நம்பிக்கையாளர்களே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருட்களை அதன் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடும்படி நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகின்றான்’’. (திருக்குர்ஆன்–4:58)

    எனவே அமானிதங்களை பேணுவோம், அமைதியான வாழ்வை பெற்றுக்கொள்வோம்.

    ×