என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அமானிதம் என்ற கட்டளை
    X

    அமானிதம் என்ற கட்டளை

    ‘மனிதனால் பெறப்பட்டு பாதுகாக்க வேண்டிய ஒரு பொருள்’ என்பது ‘அமானிதம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
    அமானிதம் இருவகைப்படும். 1) மனிதனின் மீது கொண்ட அபரிமிதமான அன்பின் பொருட்டால் அல்லாஹ் வழங்கியவை, 2) மனிதர்கள் தங்களுக்குள்ளாக பரிமாறிக் கொண்ட அமானிதங்கள்.

    அல்லாஹ் மனிதனுக்கு அருளியவை காற்று, ஆகாயம், நிலம், நீர், நெருப்பு. இதில் ஏதாவது ஒன்று இல்லாவிட்டால் கூட மனிதனால் உயிர் வாழ்வது கடினம். இவற்றை நாம் இலவசமாக பெற்றதால் அதன் முக்கியத்துவத்தை அறியாமல் அதனை பாதுகாக்க தவறிவிட்டோம்.

    நன்றி கெட்ட மனிதனின் செயல்களால் ‘ஓசோன்’ படலத்தின் ஓட்டை நாளுக்குநாள் பெரிதாகிறது. அதனால் ஊதா கதிர்களின் ஊடுருவலை தடுக்க முடியாமல் உயிர் கொல்லி நோய்களை சந்தித்து கொண்டிருக்கின்றான். காற்று மண்டலத்தில் மாசுக்களை குவித்துக் கொண்டிருப்பதால் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக நுரையீரல் நோய்களால் பாதிப்புக்குள்ளாகின்றான்.

    கழிவு நீரை குடிநீரில் கலக்கச் செய்கின்றான். பணத்தாசையால் நிலத்தடி நீரை கூறுபோட்டு விற்கின்றான். வயல்களில் மீத்தேன் வாயு குழாய்கள் பதித்து நம் எதிர்கால சந்ததியரின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி செல்கின்றான். நிலம் பாழ்பட்டு போனதால் விளைச்சல் இல்லை.

    இவ்வாறு அல்லாஹ் அருளிய இயற்கை வளங்களான அமானிதத்தை பாதுகாக்க தவறிவிட்டதால் பாதிப்புக்கு உள்ளாக்கி தவிக்கிறோம்.

    அல்லாஹ்வால் நம் உடம்பில் நமக்குள்ளே நமக்காக அமைக்கப்பட்ட அமானிதங்கள்: மூளை, இதயம், கண், செவி, நாக்கு, கை, கால்கள் என்று பல உறுப்புகள் உள்ளன.

    இவை ஒவ்வொன்றையும் அல்லாஹ் கூறிய வழியில் பயன்படுத்தும்போது தான் அதற்குரிய அமானிதத்தை நிறைவேற்றியவர்கள் ஆவோம்.

    நல்லவற்றைப் பார்ப்பது, நல்லவற்றை கேட்பது, நல்லவற்றை சொல்வது, நல்லவைகளே சிந்தித்து செயல்படுத்துவது, நல்லவற்றை கடைப்பிடித்து நல்லவை நோக்கி நகர்வது... போன்றவை மூலம் சமுதாயத்திற்கு நன்மை செய்ய வேண்டும். இதைச் செய்ய தவறும் போது அந்த உறுப்புகளே நமக்கு எதிராக சாட்சி சொல்லும்.

    இதையே திருக்குர்ஆன் (41:20) இவ்வாறு எச்சரிக்கிறது:

    ‘‘அச்சமயம் பாவம் செய்த அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய (உடல்) தோல்களும் அவர்கள் அவற்றின் மூலம் செய்தவற்றைப் பற்றி சாட்சி கூறும்’’.

    ‘வாய்களுக்கு முத்திரையிடப்பட்டு மற்றைய உறுப்புகள் பேசத்தொடங்கும் அந்த மறுமை நாளை பயந்து கொள்ளுங்கள்’ என்ற வாக்குகள் உண்மைப்படுத்தப்படும். அன்றைய தினம் அமானிதங்களுக்கு அநியாயம் செய்தவன் சொர்க்கத்தின் வாசலையும் நெருங்க முடியாது, சொர்க்கத்தின் வாடையையும் நுகர முடியாது.

    அடுத்து, அல்லாஹ்வால் நமக்கு அருளப்பட்ட அமானிதங்கள், நமது பெற்றோர், மனைவி மற்றும் பிள்ளைகள். நம்மை பெற்று வளர்த்து ஆளாக்கி உயர்ந்த நிலைக்கு கொண்டு வர எத்தனையோ தியாகங்களை செய்து, நமக்காக வாழ்ந்தவர்கள் தான் நமது பெற்றோர்கள். வயோதிகத்தினால் நம்மிடம் அடைக்கலமாக, அமானிதமாக இருக்கும் அவர்களை கருணைக்கண் கொண்டு பார்க்க வேண்டும். அவர்களின் மனப்பொருத்தத்தில் தான் நமது வாழ்வின் மேன்மை அடங்கியிருக்கிறது என்பதை உணர்ந்து அவர்களிடம் பாசமாக நடந்து கொள்ள வேண்டும்.

    பெற்றோர், உற்றார், உறவினர்களை உதறிவிட்டு புது உறவாய் வந்து அடைக்கலம் ஆகும் மனைவி கூட அமானிதம். பிள்ளை பெற்று குடும்ப வாரிசை உருவாக்குவதில் பெண்களின் தியாகம் மிகப்பெரியது. அப்படிப்பட்ட பெண்களுக்கு நாம் உரிய மரியாதைகளையும், உரிமைகளையும் வழங்க வேண்டும். மகிழ்ச்சியான மணவாழ்க்கையை தரக்கூடிய மனைவிக்கு அவளுக்குரிய உரிமையை கொடுப்பது தான் அவளின் அமானிதத்தை நிறைவேற்றியதாக அமையும்.

    பிள்ளைகள் நமக்கு கண் குளிர்ச்சி மட்டுமல்ல, உலகில் நம் பாரம்பரியமிக்க பரம்பரையைச் சொல்ல வந்த வாரிசு சொத்துக்கள். பிறந்ததிலிருந்து வளர்ந்து தனக்கொரு வாழ்வை அமைத்துக் கொள்வது வரை, அவர்கள் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்கள். நம் வருங்காலத்தின், வயோதிகத்தின் காவல் தூண்கள். அவர்களில் உரிமைகளும் பேணப்பட வேண்டும்.

    நமது பதவிகள், பொறுப்புகள், ஒப்படைக்கப்பட்ட வேலைகள் இவைகளும் கூட அமானிதங்கள் தான். ஒருவர் தன் பதவியின் மூலம் எந்த நன்மைகளை பிற மக்களுக்கு செய்ய வேண்டுமோ அதனைச் செய்ய தவறும் போது பதவிக்கான அமானிதத்திற்கு மோசம் செய்கின்றான்.

    அதனால் தான் அருள்மறை திருக்குர்ஆன் நம்பிக்கையாளர்களை நோக்கி இவ்வாறு கூறுகிறது:

    ‘‘நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள். மேலும் நீங்கள் செய்வது அநியாயம் என அறிந்து கொண்டே உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களுக்கு மோசம் செய்யாதீர்கள்’’. (8:27)

    அமானிதங்களுக்கு மோசம் செய்வது அல்லாஹ்விற்கும், அவன் தூதருக்கும் மோசம் செய்வதற்கு ஒப்பானது. நாளை மறுமையில் ஒருவன் எவ்வளவோ நன்மைகள், நல்லறங்களோடு அல்லாஹ்வை சந்தித்தாலும், அவன் அமானிதத்திற்கு செய்த சிறு அநீதிக்காக கேள்வி கணக்குகளுக்கு நிச்சயமாக உள்ளாக்கப்படுவான்.

    ஆனால் ஒருவன் அமானிதங்களை பேணிக்காக்கும் போது அவனுக்கு சொர்க்கம் பரிசாக அளிக்கப்படுவது மட்டுமல்ல, அங்கு அவனுக்கு மிகுந்த கண்ணியமும் காத்திருக்கிறது. ‘ஜன்னத்துல் பிர்தவ்ஸ்’ என்ற உயர்வான சொர்க்கத்தில் அவன் கண்ணியப்படுத்தப்படுவான் என்பது இறைவாக்கு.

    ‘‘இன்னும் எவர்கள் தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதப்பொருட்களையும் தாங்கள் செய்த வாக்குறுதிகளையும் பேணி யோக்கியமாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் சொர்க்கத்தில் மிக்க கண்ணியப்படுத்தப்படுவார்கள்’’. (திருக்குர்ஆன்–70:32)

    தனக்குத் தானே கொண்டுள்ள அமானிதத்தைப் பேணியவன் வெளி அந்தரங்கத்தில் பிறர் மூலம் பெறப்படும் பொருட்களையும் மிகக்கவனத்தோடு பாதுகாத்து எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஒப்படைக்க வேண்டும் என்றும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

    ‘‘நம்பிக்கையாளர்களே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருட்களை அதன் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடும்படி நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகின்றான்’’. (திருக்குர்ஆன்–4:58)

    எனவே அமானிதங்களை பேணுவோம், அமைதியான வாழ்வை பெற்றுக்கொள்வோம்.

    Next Story
    ×