என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    தாவூத்(அலை)யிடம் நியாயமான தீர்ப்பு கிடைக்குமென்று நம்பி வந்திருந்த வழக்காளிகள்.
    தாவூத் (அலை) அவர்களுக்கு இறைவன் இரு பொறுப்புகளை வழங்கியிருந்தான். அரசனாக மிகவும் திறனுடன் ஆட்சி செய்து வந்த தாவூத் (அலை), மக்களை ஓர் இறைத்தூதராகவும் நல்வழிப்படுத்தி வந்தார். ஓரிறைக் கொள்கையைப் போதித்து, நல்லறங்கள் புரியவும் வலியுறுத்தி வந்தார்.

    தாவூத் (அலை) ஆட்சியாளராக எந்தத் தவறும் செய்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். வழக்குகளில் மிகவும் நியாயமான தீர்ப்புகளை வழங்கி வந்தார்கள்.

    ஒருநாள் தாவூத் (அலை) அவர்களின் தொழுகின்ற இடத்தைத் தாண்டி, இருவர் நுழைந்து விட்டதைக் கண்டு தாவூத் (அலை) திடுக்கிட்டார்கள்.

    அப்போது அவர்கள் “நாங்கள் வழக்காளிகள். எங்களுக்கு இங்கு நியாயமான தீர்ப்பு கிடைக்குமென்று நம்பி வந்திருக்கிறோம்” என்றார்கள்.

    தாவூத் (அலை) அவர்களும் “வழக்கென்ன?” என்று கேட்டார்கள்.

    அதில் ஒருவர் கூறினார் “என்னுடைய சகோதரரிடம் தொன்னூற்று ஒன்பது ஆடுகள் உள்ளன. எனக்கோ ஒரேயொரு ஆடுதான் உள்ளது. அதையும் தனக்கே தந்துவிடும்படி என் சகோதரர் கேட்டு வாதாடுகிறார்” என்றார்.

    அதைக் கேட்ட உடனே தாவூத் (அலை), “உனது ஆட்டையும் தனது ஆட்டுடன் சேர்க்க அவர் கேட்டதன் மூலம் அவர் உமக்கு அநீதி இழைத்துவிட்டார். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரைத் தவிர மற்றவர்கள் இப்படித்தான் அநீதி இழைக்கின்றனர்” என்று கூறினார்.

    உடனே வழக்காளிகளாக வந்தவர்கள் மறைந்துவிட்டனர். அதைக் கண்டதும் இறைவன் தம்மைச் சோதிக்கவே இவர்களை அனுப்பி வைத்திருக்கிறான், தாம் தவறான தீர்ப்பு வழங்கிவிட்டோம். ஒருவரின் வாதத்தை மட்டுமே கேட்டு, மற்றவர் அவருக்கு அநீதி இழைத்துவிட்டதாகப் பேசிவிட்டதை உணர்ந்து இறைவனிடம் உடனடியாக மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டார்கள்.

    இறைவன், தாவூத் (அலை) அவர்களை மன்னித்து, மனோ இச்சையைப் பின்பற்றித் தீர்ப்பு வழங்காமல் மக்கள் மத்தியில் நியாயமான தீர்ப்பு வழங்கும்படியும் கட்டளையிட்டார்கள்.

    “அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுப்போர், விசாரணை நாளை அதாவது மறுமை நாளை மறப்பவர்களுக்குக் கடுமையான வேதனை உண்டு” என்றும்  எச்சரித்த இறைவனின் வாக்கின்படி அதன்பிறகு தாவூத் (அலை) எல்லாச் சூழல்களிலும் இருவர் தரப்பு நியாயங்களையும் கேட்ட பிறகே தீர்ப்பு வழங்கினார்கள்.

    திருக்குர்ஆன் 38:20-26

    - ஜெஸிலா பானு.

    இறைப்பணிக்கு ஏசு வருவதற்கு முன்பே மனிதர்களுக்கு வந்த முதல் அழைப்பு மனந்திரும்புவதற்காகத்தான்.
    உலக வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் அடுத்த நிலைக்குச் செல்வதற்கென்று காலகட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பள்ளிப்படிப்பு, கல்லூரிக்கல்வி, திருமண வாழ்க்கை போன்றவற்றுக்கு வயது, மனது ஆகியவற்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும். இதில் குறைவுடையவர்களுக்கு அந்தந்த காலகட்டத்தில் அதற்கேற்ற பிரச்சினைகள் எழுவதை தவிர்க்க முடியாது.

    ஆன்மிகத்திலும் இதே நிலை உண்டு. முக்கிய நபர்களை சந்திக்கச் செல்வதற்கு முன்பு, அலங்காரம் போன்ற உடல் ரீதியான அம்சங்களிலும், எதுபற்றி பேச இருக்கிறோமோ அதுபற்றி மனரீதியாகவும் நாம் தயார்படுத்த வேண்டியதுள்ளது. அதுபோல இறைவனை நெருங்க விரும்புகிறவர்களும் தயார் நிலையை அடைய வேண்டியது அவசியம்.

    இறைவன் நோக்குவது உடலையல்ல, மனிதனின் மனதை மட்டுமே. இவ்வளவு காலம் உலகம் போன போக்கில் வாழ்ந்துவிட்டு, தன்னை நோக்கி வர விரும்பும் மனிதன், அதற் காகத் தன்னை எந்த விதத்தில் எல்லாம் தயார்படுத்தி இருக்கிறான் என்பதை உற்றுநோக்குகிறார்.

    ஆன்மிக வாழ்க்கையை வாழ முடிவு செய்த பிறகு, முந்தைய வாழ்க்கை நிலையை தன்னிடம் இருந்து முற்றிலும் அப்புறப்படுத்துவதற்கு அவன் மேற்கொள்ளும் உண்மையான உறுதிதான், இறைவன் விரும்பும் அம்சமாக உள்ளது. இதை வேதம் ‘மனம்திரும்புதல்’ என்று குறிப்பிடுகிறது. இந்த மனந்திரும்புதல்தான் ஆன்மிக வாழ்க்கையின் அஸ்திவாரமாக இருக்கிறது.

    மனந்திரும்புதல் என்பது, உடலளவில் செய்யும் ஏதோ சில கெட்ட பழக்கங்களை மட்டும் விட்டுவிடுதல் என்பதல்ல. 3 நிலைகளில் இருந்து மனந்திரும்புதல் நடந்தாக வேண்டும்.

    முதலாவது உடலளவில், அதாவது கண், செவி, வாய் உள்ளிட்ட அவயங்கள் மூலம் செய்யப்படும் பாவங்களை நிறுத்த முன்வர வேண்டும்.

    இரண்டாவதாக, உள்ளத்தில் இருந்து புறப்பட்டு வரும் பாவங்கள் என்று வேதத்தில் சொல்லப்படும், பொல்லாத சிந்தனைகள், கபடு, பெருமை போன்ற (மாற்கு 7;20,23) அனைத்தையும் வாழ்க்கையில் இருந்து அகற்றுவதற்கு உறுதி அளிக்க வேண்டும்.

    மூன்றாவதாக, கோபம், எரிச்சல், குறைகூறுதல் உட்பட பல்வேறு ‘ஜென்ம சுபாவங்கள்’ என்று அழைக்கப்படும் பிறவிக்குணங்களில் (1 கொரி.2;14) இருந்து விலக உறுதி அளிக்க வேண்டும்.

    இந்த 3 வகையான பாவங்களிலும் இருந்து விலக முன்வர முடிவு செய்வதே, அதாவது மனந்திரும்புவதே ஆன்மிக வாழ்க்கையில் நுழைவதற்கான முதல்படியாக இருக்கிறது. இதில் ஒன்று குறைந்தாலும் மனந்திரும்புதலில் முழுமை இருக்காது. பிற்காலத்தில் மீண்டும் பழைய வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டுவிடுவார்கள்.

    இறைப்பணிக்கு ஏசு வருவதற்கு முன்பே மனிதர்களுக்கு வந்த முதல் அழைப்பு மனந்திரும்புவதற்காகத்தான். யோவான் ஸ்நானன் மூலம் அந்த அழைப்பை இறைவன் விடுத்தார்.

    ‘மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்து இருக்கிறது. மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், பாதைகளை செவ்வை பண்ணுங்கள்’ என்றெல்லாம் அவன் அழைப்பு விடுத்தான் (மத்.3).

    அதாவது, ஏசு என்ற இறைமகன் வருகிறார். அவர் உன்னிடத்தில் வர வேண்டும் என்றாலும், அல்லது நீ அவரிடத்துக்கு செல்ல வேண்டும் என்றாலும், மேற்கூறப்பட்ட 3 நிலைகளிலும் இருந்து மனந்திரும்புதல் என்ற ஒரே செயல்தான், இருவருக்கும் இடையே வழியை ஆயத்தம் செய்து கொடுக்கும். அப்படி, கடவுள் (கடந்து உள்ளே வருபவர்) உனது உள்ளத்துக்குள் வந்த பிறகு, உனது ஆத்துமா, பரலோக ராஜ்யத்தில் உள்ளதுபோல செழித்துவிடும் (உலக செழிப்பு வேறு, பரலோக செழிப்பு வேறு). மனந்திரும்பிவிட்டால், அந்த செழிப்பு மிக அருகில் வந்துவிடும் என்பதையே அந்த வசனங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

    பரலோக ராஜ்யத்தின் நிலை என்ன என்று கேட்டால், முதலில் அங்கு பாவம் கிடையாது. எனவே அங்கு தண்டனை, நிம்மதி இழப்பு போன்ற பாவத்தின் பிரதிபலனான துன்பங்கள் கிடையாது. உண்மையான மனந்திரும்புதலை அடைந்தால், உலகத்தில் வாழும் வாழ்க்கையிலேயே அதுபோன்ற ஒரு நிம்மதியான வாழ்வை (உலக செழிப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும்) அடையலாம்.

    இந்த உலகத்தில் ஒரு ராஜ்யத்தை ஒரு அரசன் அமைக்கும்போது, வெளியில் இருந்து செயல்படும் எதிரிகளின் நெருக்கடி, உள்ளே இருந்துகொண்டே செயல்படும் விரோதிகளின் போராட்டம் என பன்முனைத் தாக்குதலை எதிர்கொண்டாக வேண்டும். அது போலத்தான் பரலோக ராஜ்யத்தை பக்தனுக்குள் இறைவன் அமைக்கும்போதும் இதே போராட்டம் உண்டு.

    வெளியில் இருந்து நெருக்கடி கொடுக்கும் பொருளாசை, இச்சை போன்ற பாவங்கள்; உள்ளே இருந்துகொண்டு பாவங்களைச் செய்யத்தூண்டும் ஜென்ம சுபாவங்கள் என பல முனைகளில் இருந்து தாக்கும் பாவங்களால் கறைபட்டு விடாதபடி, எதிர்த்து போராடியே இறையரசை உள்ளத்தில் அமைக்க முடியும்.

    சந்தர்ப்பங்களின்போது, அநியாய ஆசைக்கும், சுபாவத்துக்கும் உட்படாமல், அதைவிட்டு விலகுவதற்கு முழு மனதோடு பக்தன் போராடினால், அப்போது அவனுக்குத் துணையாக இறைவன் வந்து, பலத்தைத் தந்து, அந்த பாவத்தை ஜெயிக்கச் செய்வார். இப்படி பாவங்களை துரத்தியடித்து வெற்றிபெற்றவனே இதயத்தில் பரலோக ராஜ்யம் என்ற இறையரசு அமையப்பெற்றவனாகிறான்.

    இப்படிப்பட்ட இறையரசு அமையப்பெற்றவன், எல்லா நிலையிலும் அமைதியாகவும், தன்னைச் சார்ந்தவர்களிடத்தில் எல்லா நிலைகளிலும் சாந்தத்தை பிரதிபலிப்பவனாகவுமே இருப்பான். நாம் எதை பிரதிபலிக்கிறோம்?
    அல்லாஹ் இட்ட கட்டளைப்படியும், நபிகள் கோமான் சொல்லித்தந்த வழிமுறைகளின் படியும், ‘எவனொருவன் இந்த ரமலானைப் பயன்படுத்திக் கொண்டானோ, அவன் அச்சப்பட தேவையும் இல்லை, அதற்கான அவசியமும் இல்லை’.
    புண்ணியங்களைப் பொருத்திக் கொண்ட புனிதமிகு ரமலான் நிறைவு பெற்றுவிட்டது. இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது புனித ரமலான் நோன்பு.

    வானவர்கள் (மலக்குகள்) கூட்டம் கூட்டமாய் வந்து இறைவனின் அருட்கிருபைகளை அள்ளி வழங்கிய புனித இரவுகள் நம்மைவிட்டும் கடந்து சென்றுவிட்டன.

    மக்கள் வெள்ளங்களாய் நிரம்பி வழிந்த மஸ்ஜித்துக்கள், மக்கள் வரவை எதிர்பார்த்து ஏக்கம் கொள்ளும் நாட்கள் எட்டிப்பார்க்கின்றன. தான தர்மங்கள் செய்ததால் ஏற்பட்ட மனநிம்மதி, சந்தோஷம் சற்றுத்தள்ளிச் செல்ல எத்தனிக்கிறது. மகிழ்ச்சிகளால் நிறைந்திருந்த மனங் களில் வெறுமை வந்து குடியேற தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

    அல்லாஹ் இட்ட கட்டளைப்படியும், நபிகள் கோமான் சொல்லித்தந்த வழிமுறைகளின் படியும், ‘எவனொருவன் இந்த ரமலானைப் பயன்படுத்திக் கொண்டானோ, அவன் அச்சப்பட தேவையும் இல்லை, அதற்கான அவசியமும் இல்லை’.

    எல்லா நற்காரியங்களுக்கும் இதுதான் வெகுமதி என்று சொல்லித்தந்த அல்லாஹ் இந்த நோன்பிற்கான கூலியை மட்டும் தன்னகத்தே வைத்துக்கொண்டான். என்ன கொடுப்பான், எவ்வளவு கொடுப்பான், எப்படி கொடுப்பான் என்பதெல்லாம் இறைவன் வசமே உள்ளது. ஆனால் நிச்சயமாக அபரிமிதமான அருட் செல்வங்களை அளவின்றியே அள்ளிக் கொடுப்பான். அந்த நன்நாள் இந்நாள் தான்.

    ஈத்பெருநாள் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தரக்கூடிய நாள். எல்லா மக்களும் பேதங்கள் மறந்து இணைந்து கொண்டாடும் நாள். அந்நாளில் ஒருவர் கூட தன் ஏழ்மையின் காரணத்தால் அதனை கொண்டாடாமல் விட்டுவிடக் கூடாது என்பதற்காவே ‘ஈதுல் பித்ர்’ என்ற ஈகைத்திருநாளின் தர்மத்தையும் வலியுறுத்தினார்கள் கருணை நபியவர்கள்.

    ஜகாத் கொடுக்க தகுதி பெற்றவர்கள் ரமலான் பிறை மறைந்து ஷவ்வால் பிறை கண்டதும் அந்த இரவு முடிந்து வைகறை மலர்ந்து பெருநாள் தொழுகையை தொழுவதற்கு முன்பு அந்த தர்மத்தை நிறைவேற்றி விடவேண்டும் என்ற கட்டளையும் உண்டு. விடியற்காலை சுபுஹ் தொழுகையை அந்த ஏழை, பெருநாள் கொண்டாடுவதற்கு தேவையான அத்தனை வாழ்வாதாரங்களைப் பெற்ற நிலையிலே தான் தொழ வேண்டும்.

    இந்த எண்ணங்கள் முழுமையாக நிறைவேற வேண்டும் என்பதற்காகத் தான் இந்த கால இடைவெளி வரையறுக்கப்பட்டுள்ளது.

    நம்மில் பலர் தேவை உள்ளவர்களாக இருந்தாலும் கூட, வெட்கத்தின் காரணமாக அதனை வெளியில் சொல்லாமல் தன் தேவைகளை மறைத்து தவித்துக் கொண்டிருப்பார்கள்.

    அப்படிப்பட்டவர்களை கண்டறிந்து பிறருக்குத் தெரியாமல், அவர்களின் தன்மானம் பாதிக்கப்படாமல் வழங்குவதும் தர்மங்களில் மிகச்சிறந்த ஒன்றாகும்.

    இந்த ஈகைத் திருநாளை குடும்பத்தினரோடு குதூகலமாய் கொண்டாட வேண்டும். உறவுகளை நாடிச்சென்று உதவி செய்து அதனை கொண்டாட வேண்டும். நம்மிடம் வேலை செய்பவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து அவர்களின் சந்தோஷத்தோடு கொண்டாட வேண்டும்.

    நண்பர்களோடும், பக்கத்து வீட்டாரோடும், மாற்று மத சகோதரர்களோடும் நம் மகிழ்ச்சியை பகிர்ந்து மனமகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும்.

    ஏழை, எளியவர் என்ற வேறுபாட்டை களைந்து ஒருவரோடு ஒருவர் ஆரத்தழுவி சமத்துவத்தைப் பேணி இந்த நாளை கொண்டாட வேண்டும். இந்த நற்குணங்கள் என்றும் நம்மிடம் நிலைத்திருக்க வேண்டும்,

    ரமலானில் நாம் பெற்ற பயிற்சிகள் ஏனைய நாட்களிலும் நம்மோடு பயணிக்க கூடிய அளவிற்கு மனங்கள் பக்குவப்பட்டிருக்க வேண்டும். அந்த புண்ணிய நாட்களில் நாம் படித்த, கேட்ட, புரிந்த நல்லறங்கள் தொடர்ந்து வரவேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு இந்த நாளை நாம் கொண்டாட வேண்டும்.

    இந்த நல்லெண்ணங்களோடு ரமலானை வழிஅனுப்பி வைப்போம். வரும் வருடங்களில் அல்லாஹ் நாடினால் அதன் வரவை வழிமேல் விழி வைத்து காத்திருப்போம்.

    அனைவருக்கும் “ஈத் முபாரக்”. இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.

    - எம். முஹம்மது யூசுப், உடன்குடி.
    நோன்பை முழுமைப்படுத்தும் வகையில் 'ஸக்காத்துல் பித்ர்' எனும் கட்டாய ஈகையை நிறைவேற்ற வேண்டும்.
    நோன்பை முழுமைப்படுத்தும் வகையில் 'ஸக்காத்துல் பித்ர்' எனும் கட்டாய ஈகையை நிறைவேற்ற வேண்டும்.

    தொழுகையில் நாம் ஏதேனும் மறந்துவிட்டால் அதாவது ஓர் 'ரக்அத்தை' மறந்துவிட்டால் அல்லது என்ன ஓதினோம் என்பதை மறந்துவிட்டால் இறுதியில் மறுபடியும் 'இரு சஜ்தாக்கள்' செய்து அந்தப் பிழை மன்னிக்கக் கோருவோம். அதேபோல் நோன்பில் நாம் அறிந்து அறியாமல் செய்யும் தவறை ஈடுசெய்வதற்காகவும், ஈகைத் திருநாளில் யாரும் பட்டினியோடு இல்லாமல் உண்டு பசி தீர்த்து மகிழ்ந்திருக்க வேண்டும் என்பதற்காகவும், இறைவனுக்காக நோன்பு இருந்து அதனை முழுமைப்படுத்தியதற்கு நன்றி செலுத்துவதற்காகவும் கட்டாயம் 'ஸக்காத்துல் பித்ரை' நாம் நிறைவேற்ற வேண்டும்.

    நோன்பு நோற்ற அனைவரும் அவர்களின் பொறுப்பிலும் பராமரிப்பிலும் உள்ள பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் அனைவர் மீதும் இந்த ஈகைக் கடமையாகும். உங்கள் வீட்டில் உங்களுக்குப் பணிவிடை செய்யும் பணியாள் இருந்தாலும் அவர் உங்கள் பொறுப்பில் வருவதால் அவருக்கும் சேர்த்து 'ஸக்காத்துல் பித்ர்' தருவது மிகவும் சிறப்பான செயலாகும்.

    நமது நாட்டில் நாம் பிரதான உணவாகக் கொள்ளுகின்ற அரிசியில் அல்லது கோதுமையில் இருந்து ஒருவருக்கு மூன்று கிலோ வீதம் இதனை வறியவர்களுக்கு வழங்க வேண்டும். நோன்பு நோற்றவர்கள் பெருநாள் தொழுகைக்குச் செல்லும் முன் இதனை நிறைவேற்றியே ஆக வேண்டும். இது கட்டாயக் கடமையாகும்.

    நம்முடைய செல்வத்தின் மீது கொடுக்கப்படும் ஸகாத் வேறு ஈகைத் திருநாளின் தொழுகைக்கு முன்பு கொடுக்கப்படும் 'ஸக்காத்துல் பித்ர்' வேறு. இந்த 'ஸக்காத்துல் பித்ரை' நோன்பு 28 அல்லது 29 அல்லது 30-ஆவது நோன்பில் அல்லது பெருநாள் காலையில் தொழுகைக்கு முன்பு கூடக் கொடுத்தால் போதுமானது.

    கொடுக்கப்படும் அந்த 'ஸக்காத்துல் பித்ரை' ஒரே ஒருவருக்கோ அல்லது பிரித்து வெவ்வேறு நபருக்கோ கொடுக்கலாம். ஆனால் இது ஏழ்மையான நிலையில் இருப்பவருக்கு மட்டுமே போய்ச் சேர வேண்டியதாகும்.

    வெளிநாட்டில் வேலையில் இருப்பவர்கள் அந்த நாட்டிலுள்ள பிரதான உணவை அங்குள்ள ஏழைகளுக்குத் தரலாம் அல்லது தம் நாட்டில் அதைவிட ஏழைகள் இருப்பதாக நினைத்தால் அதற்குரியப் பணத்தைத் தன்னுடைய பெற்றோருக்கோ, சகோதரருக்கோ குழந்தைகளுக்கோ அனுப்பி, தன்னுடைய தொழுகைக்கு முன் ஸக்காத்துல் பித்ரை நிறைவேற்றிவிடச் சொல்ல வேண்டும்.

    'ஸக்காத்துல் பித்ரை' பொருளாகத் தருவது சிறப்பு, தவிர பணமாகச் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலும் சரி, அதற்குப் பிறகு வாழ்ந்த கலிஃபாக்களும் இந்த முறையையே கடைப்பிடித்தார்கள் என்று வரலாற்றுக் குறிப்புகளில் உள்ளது. பொருளாதாரத்தில் மேம்பட்டிருந்த காலத்திலும் அவர்கள் பெருநாள் பித்ராவை பொருளாகத் தந்து மகிழ்ந்தார்களே தவிர, பணமாகத் தரவில்லை.

    நீங்கள் தங்கியிருக்கும் இடத்தில் அல்லது வேலையில் இருக்கும் நாட்டில் பொருளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய ஏழைகள் இல்லை என்று நீங்கள் எண்ணினால், அதற்கான பணத்தை உங்கள் சொந்த நாட்டிலோ அல்லது ஏழைகள் வசிக்கும் வேறு இடத்திற்கோ முன்கூட்டியே பணத்தை அனுப்பி அங்கு உங்களுக்காகப் பித்ராவைச் செலுத்திடச் சொல்லலாம். அதற்கும் வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் நம்பகமான தொண்டு நிறுவனங்களுக்குப் பணத்தைச் செலுத்திவிடுவதில் குற்றமில்லை.

    தொழில்நுட்பம் பெருகிவிட்ட காலத்தில் தமக்கும் தம் பராமரிப்பில் இருப்பவர்களுக்குமான தொகையைக் கணக்கிட்டு, இருந்த இடத்திலிருந்து இணையத்தின் மூலம் தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பிவிடலாம். ஆனால் தமக்குத் தெரிந்த ஓர் ஏழைக்கு நேரடியாகப் பித்ராவைத் தருவது மிகச்சிறப்பானது ஏற்றமிக்கது.

    கடமையான ஈகையை நிறைவேற்றி ஈகைத் திருநாளைக் கொண்டாடுவோம். ரமதான் மாதத்தின் இன்னுமொரு வருகையை நம் எல்லோருக்கும் எல்லாம் வல்ல இறைவன் நற்பேறாக வழங்குவானாக!!

    ஈத் முபாரக்!

    ஸஹிஹ் புகாரி 2:24:1503-1512, ஸஹிஹ் முஸ்லிம்: 12:1789-1802

    - ஜெஸிலா பானு.
    ஒருவகையில் நாம் வைக்கும் இந்தப் புனித நோன்பு கூட நாம் அல்லாஹ்வுக்கு செய்யும் நன்றிதான்.
    ஒருவகையில் நாம் வைக்கும் இந்தப் புனித நோன்பு கூட நாம் அல்லாஹ்வுக்கு செய்யும் நன்றிதான்.

    அல்லாஹ் திருக்குர்ஆனில் இதுபற்றி இவ்வாறு கூறுகிறான்: ‘எவர் நன்றி செலுத்துகிறாரோ அவர் நன்றி செலுத்துவதெல்லாம் அவருக்கே (நற்பயன் உள்ளதாக) ஆகும். எவன் நன்றி மறக்கிறானோ அது அவனுக்கே கேடாகும்’ (27:40).

    ‘நீங்கள் நன்றி செலுத்தினால் திட்டமாக உங்களுக்கு (என்னருளை) நான் அதிகப் படுத்துவேன். நீங்கள் நிராகரித்தால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடினமானது’ (14:07).

    ‘அல்லாஹ்வை நீங்கள் வணங்குபவர்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள்’ (2:172).

    ‘(அல்லாஹ்வாகிய) எனக்கு நன்றி செலுத்துங்கள். எனக்கு மாறு செய்யாதீர்கள்’ (2:152).

    ‘அல்லாஹ்வின் அருட்கொடைக்கு, அவனையே நீங்கள் வணங்குபவர்களாக இருந்தால் நீங்கள் நன்றி செலுத்துங்கள்’ (16:114).

    இப்படியாக நன்றியைக் குறித்த இறைவசனங்கள் நிறையவே உண்டு. அல்லாஹ் நம்மிடம் மிகவும் எதிர்பார்ப்பது சிறிதளவு நன்றியைத் தான்.

    நபிகளார் தமது பாதம் வீங்கும் அளவுக்கு தொழுதார்கள். ‘இறைத்தூதரே ஏன் இப்படி?’ என்று கேட்கப்பட்ட போது நபியவர்கள் கூறினார்கள், ‘நான் நன்றியுள்ள அடியானாக ஆக வேண்டாமா?’

    மதீனத்துப் பள்ளியைச் சுற்றிலும் அவரவர் வசதிக்கேற்ப சீக்கிரம் பள்ளிக்கு வந்து சேர்வதற்காக வாசல் அமைத்துக் கொண்டனர். நாளடைவில் நுழைவாசல்கள் அதிகரிக்கவே ‘அபூபக்கர்(ரலி)யின் வாசலைத்தவிர அனைத்து வாசல்களையும் அடைத்து விடுங்கள்’ என்று கட்டளையிட்டார்கள்.

    அப்போது நபிகளாரிடம் இதுபற்றி கேட்கப்பட்ட போது, ‘அன்று ஒருநாள் அவர் என்னுடன் மக்கா நகரில் இருந்து மதீனா நகருக்கு இடம்மாறிச் சென்றபோது தவ்ர் குகையில் இருந்த இருப்புக்கு எதுவும் ஈடாகாது. அந்தச்சிறு நன்றிக்காகத்தான் நான் அவரது வாசலை அடைக்க வேண்டாம் என்று கட்டளையிட்டேன்’ என்றார்கள்.

    கவனித்தீர்களா! நபிகளாரின் நன்றி அல்லாஹ்வோடும் சரி, அடியார்களோடும் சரி மிக உயர்ந்த நிலையில்தான் இருந்திருக்கிறது. இன்றைக்கு நாம் எப்படி இருக்கிறோம்?

    நாம் வாய்திறந்து நன்றி நன்றி என்று சொல்லும் போது அல்லாஹ்வும் மகிழ்ச்சியடைகிறான், அடியார்களும் மகிழ்ச்சியடைகின்றனர். புனித ரமலான் நமக்கு அதைத்தான் கற்றுத் தருகிறது.

    இறைவனுக்கு நன்றி சொல்லி வாழ்வோம், நன்றே சொல்லி அனைவரும் உயர்வோம்!

    மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு.

    இப்தார்: மாலை 6.45 மணி நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.06 மணி
    வாழ்வில் மிகவும் திருப்தியை அடைந்தவராக, தன்னுடைய மரணத்தைப் பற்றி தெரிந்து அதனை வரவேற்று, இறைவனை சந்திக்கப் போகிறோமென்று அமைதியான மனநிலையில் உயிரை துறந்தவர்.
    மூஸா (அலை) அவர்களிடம் உயிர் பறிக்கும் வானவரான ‘மலக்குல் மவ்த்’ அனுப்பப்பட்டார். மூஸா (அலை), அந்த வானவரை அவருடைய கண் முழி பிதுங்கும் அளவுக்கு முகத்தில் அறைந்துவிட்டார்கள்.

    அந்த வானவர் வந்த வழியே திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் “இறைவா! மரணிக்க விரும்பாத ஓர் அடியாரிடம் என்னை நீ அனுப்பிவிட்டாய்” என்று கூறினார். அல்லாஹ் அந்த வானவரின் கண்ணைச் சரிப்படுத்திவிட்டு, “நீ மீண்டும் அவரிடம் திரும்பிச் சென்று, அவரின் கையை ஒரு காளை மாட்டின் முதுகின் மீது வைக்கச் சொல். மூஸாவின் கை காளை மாட்டின் முதுகிலுள்ள எத்தனை முடிகளை அடக்கிக் கொள்கிறதோ, அத்தனை ஆண்டுகள் அவருடைய ஆயுட்காலம் நீட்டிக்கப்படும். அதாவது ஒவ்வொரு முடிக்குப் பதிலாக ஓர் ஆண்டென்று கணக்கிட்டு அத்தனை ஆண்டுகள் இந்த உலகில் வாழ அவருக்கு அனுமதி உண்டு என்று சொல்” எனக் கூறி அந்த வானவரை மீண்டும் மூஸா (அலை) அவர்களிடம் இறைவன் அனுப்பி வைத்தான்.

    அவ்வாறே அந்த வானவர் மூஸா (அலை) அவர்களிடம் திரும்பிச் சென்று இறைவன் சொன்னதை கூறியபோது, அதற்கு மூஸா (அலை) “இறைவா! அத்தனை காலம் வாழ்ந்து முடித்த பிறகு என்ன நடக்கும்?” என்று கேட்டார்கள்.

    அதற்கு அல்லாஹ், “மரணம்தான்” என்று பதிலளித்தான். உடனே மூஸா (அலை) அவர்கள் “அப்படியென்றால் இப்போதே என் உயிரை எடுத்துக் கொள்” என்று கூறிவிட்டு, அல்லாஹ்விடம் ‘பைத்துல் முகத்தஸ்’ என்னும் புனித பூமிக்கு அருகில், அதிலிருந்து கல்லெறியும் தூரத்தில் தம் அடக்கத்தலம் அமைந்திடச் செய்யுமாறு வேண்டினார்கள்.

    இந்த நிகழ்வை பற்றித் தம் தோழர்களுக்கு இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) சொன்னபோது, “நான் மட்டும் இப்போது பைத்துல் முகத்தஸில் இருந்திருந்தால் சாலையோரமாக செம்மண் குன்றின் கீழே அவரின் மண்ணறை இருப்பதை உங்களுக்குக் காட்டியிருப்பேன்” என்று கூறியதாக ஸஹிஹ் புகாரி நூலில் பதிவாகியுள்ளது.

    மூஸா (அலை) அல்லாஹ்விடம் நேரடியாகப் பேசிய பாக்கியத்தைப் பெற்றவர். வாழ்வில் மிகவும் திருப்தியை அடைந்தவராக, தன்னுடைய மரணத்தைப் பற்றி தெரிந்து அதனை வரவேற்று, இறைவனை சந்திக்கப் போகிறோமென்று அமைதியான மனநிலையில் உயிரை துறந்தவர். இறைவனின் சாந்தியும் சமாதானமும் மூஸா (அலை) அவர்கள் மீது உண்டாவதாக.

    ஸஹிஹ் புகாரி 2:23:1339, 4:60:3407

    - ஜெஸிலா பானு.
    மூஸா(அலை) அவர்களைப் பற்றி இஸ்ராயீலர்கள் சொன்ன குறைகளிலிருந்து அவர் தூய்மையானவர் என்று நிரூபித்திட அல்லாஹ்வே விரும்பினான்.
    மூஸா (அலை), இறைவனுக்காக இஸ்ராயீலர்கள் செய்த அனைத்துக் கொடுமைகளையும் இடையூறுகளையும் சகித்து வந்தார்கள். அதில் ஒன்று இஸ்ராயீலர்கள் மூஸா (அலை) அவர்களைப் பற்றி விதவிதமான வதந்திகளைப் பரப்பியது.

    பனூ இஸ்ராயீல்கள் வெட்கமில்லாமல் ஒருவரை ஒருவர் நிர்வாணமாகப் பார்த்தவர்களாகவே குளிக்கும் பழக்கமுடையவர்களாக இருந்தனர். ஆனால் மூஸா (அலை) அவர்கள் மிகவும் வெட்கப்படுபவர்களாகவும், தன் அங்கத்தை யாரும் பார்த்துவிடாதபடி மறைவாக, தனித்தே குளிப்பவர்களாகவும் இருந்தார்கள்.

    மூஸா (அலை) அவர்களுக்கு மனவேதனையைத் தர விரும்பிய இஸ்ராயீலர்கள், மூஸா (அலை) அவர்களுக்கு சரீரத்தில் குறைபாடுள்ளது என்றும் விரை வீக்கமுடையவர் என்றும் தொழு நோய் என்றும் அதன் காரணமாகவே மூஸா (அலை) அவர்களுடன் சேர்ந்து குளிப்பதில்லை என்றும் வதந்திகளைப் பரப்பி சிரித்து மகிழ்ந்தனர்.

    ஒரு முறை மூஸா (அலை) அவர்கள் குளிப்பதற்காகச் சென்றபோது, அவர்களுடைய ஆடைகளைக் கழற்றி ஒரு கல்லின் மீது வைத்துவிட்டு மறைவான இடத்தில் நின்று குளித்தார்கள். குளித்து முடித்தவுடன் மீண்டும் அவர்களுடைய ஆடையை எடுக்க வரும்போது அந்தக் கல் அவர்களின் ஆடையோடு ஓடியது.

    மூஸா (அலை) அவர்கள், தடியை எடுத்துக் கொண்டு கல்லை விரட்டிப்பிடிக்க முயற்சித்தார்கள். அந்தக் கல்லை தொடர்ந்தவர்களாக ‘கல்லே நில்! என்னுடைய ஆடை! என்று சப்தமிட்டவர்களாக அதை விரட்டிச் சென்றார்கள். இறுதியில் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாரின் தலைவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அங்குக் கூடி இருந்தவர்கள் மூஸா (அலை) அவர்களை ஆடையில்லாத கோலத்தில் கண்டார்கள்.

    அல்லாஹ்வின் படைப்புகளிலேயே அழகானவர்களாகவும் எந்தக் குறைபாடும் இல்லாத தூய்மையானவர்களாகவும் மூஸா (அலை) இருப்பதைப் பார்த்தார்கள். கல் ஓடாமல் நின்றது. உடனே, மூஸா (அலை) அவர்கள், தம் ஆடையை எடுத்துக் கொண்டு தம் கைத்தடியால் அந்தக் கல்லை பலமுறை அடித்தார்கள்.

    இந்த நிகழ்ச்சியைத் தான், 'இறை நம்பிக்கையாளர்களே! மூஸாவுக்குத் துன்பம் தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் (இட்டுக் கட்டிக்) கூறியவற்றிலிருந்து மூஸா தூய்மையானவர் என்று அல்லாஹ் நிரூபித்துவிட்டான். மேலும், அவர் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவராக இருந்தார்' என்ற திருக்குர்ஆனின் 33:69 இறைவசனம் குறிக்கிறது.

    மூஸா(அலை) அவர்களைப் பற்றி இஸ்ராயீலர்கள் சொன்ன குறைகளிலிருந்து அவர் தூய்மையானவர் என்று நிரூபித்திட அல்லாஹ்வே விரும்பினான்.

    ஸஹிஹ் புகாரி 1:5:278, 4:60:3404

    - ஜெஸிலா பானு.
    மூஸா (அலை) யின் அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்த கித்று (அலை).
    கித்று (அலை) அறிவார்ந்தவர் என்று அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வந்தும், அவர் செய்த எந்தக் காரியத்திலும் எந்த நியாயத்தையும் பார்க்காததால் மூஸா (அலை) அவர்களுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. எனவே அவர்கள் செய்த ஒவ்வொரு காரியத்தைப் பற்றியும் பொறுமையில்லாமல் கேள்விகள் கேட்டு வாக்குறுதி தவறினார்கள் மூஸா (அலை).

    கித்று (அலை) அவர்கள் செய்த செயலிற்கான காரணங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு மாணவர் தன் குருவிடம் பாடம் கற்றுக் கொள்வதுபோல் மூஸா (அலை) உட்கார்ந்து கித்று (அலை) சொல்வதைக் கேட்டார்கள்.

    கித்று (அலை) விளக்கமளிக்கத் தொடங்கினார்கள் “நாம் பயணித்த அந்த மரக்கலத்தில் சிறிய ஓட்டை போட்டது நினைவிருக்கலாம். அந்த மரக்கலம் கடலில் வேலை செய்யும் சில ஏழைகளுக்குச் சொந்தமானது. அவர்களை ஆட்சி செய்யும் கொடுங்கோல் அரசன் பழுதில்லாத நல்ல நிலையில் உள்ள மரக்கலங்களையெல்லாம் பலவந்தமாக ஏழை மக்களிடமிருந்து எடுத்துக் கொள்கிறான். ஆகையால் நான் அதில் ஓர் ஓட்டையிட்டுப் பழுதாக்கிவிட்டேன். அப்படிச் செய்ததால் அந்த ஏழைகளின் மரக்கலம் காப்பாற்றப்படும் என்பதற்காக” என்றார்கள்.

    உடனே மூஸா (அலை) “இது தெரியாமல் நான் அவசரப்பட்டு உங்களைத் தவறாக நினைத்துவிட்டேன்” என்று சொன்னார்கள்.

    கித்று (அலை) தொடர்ந்தார்கள், “அடுத்து, அந்தச் சிறுவனுடைய தாய்- தந்தையர் இருவரும் இறைநம்பிக்கையாளர்கள். ஆனால் அந்த சிறுவன் வாலிபனானால் அவ்விருவரையும் வழிகேட்டிலும், தவறான பாதையிலும் சேர்த்துவிடுவான் என்பதை நான் அறிந்ததால் அவனைக் கொன்றேன். அதுமட்டுமின்றி அவ்விருவருக்கும் தூய்மையான, பெற்றோரிடம் அன்பு செலுத்தக்கூடிய சிறந்த ஒரு மகனை இறைவன் இவனுக்குப் பதிலாகக் கொடுப்பான்” என்றார்கள் உறுதியாக.

    உடனே மூஸா (அலை) “இறைவனின் கட்டளையில்லாமல் நீங்கள் அப்படிச் செய்திருக்க மாட்டீர்கள். அது தெரியாமல் நான் தவறாகப் பேசிவிட்டேன் மன்னித்து விடுங்கள்” என்றார்.

    இறுதியாக, அந்தச் சுவரைப் பற்றிக் கூறினார்கள் கித்று (அலை) “அந்த ஊரில் இரு அநாதைச் சிறுவர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய தந்தை நல்ல நேர்மையான மனிதராக இருந்தார். அவர் அவர்களுக்காக விட்டுச் சென்ற புதையல் அந்தச் சுவருக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. சுவர் விழுந்துவிட்டால் அந்தப் புதையல் தவறான கைகளுக்குச் சென்றுவிடுமென்று நான் அந்தச் சுவரை சரி செய்தேன். அந்தச் சிறுவர்களுக்கு உரிய நேரத்தில் அந்தப் புதையல் கிடைக்கும்.

    நான் செய்த ஒவ்வொரு காரியமும் இறைவன் நாடிய செயல். என் விருப்பு வெறுப்பின்படி நான் எந்தக் காரியத்தையும் செய்யவில்லை. இப்படிதான் பெரும்பாலானோர் இறைவனின் காரியத்தைப் பற்றி அறியாமல் பொறுமையிழந்து இருப்பார்கள்” என்று கூறினார்கள்.

    மூஸா (அலை) அவர்களுக்குத் தெளிவு பிறந்தது. இறைவனின் ஒவ்வொரு செயலிலும் நமக்குப் புரியாத விளங்கிக்கொள்ள முடியாத நியாயம் இருக்கும். நாம் மேலோட்டமாகப் பார்த்து எதையுமே கணிக்கக்கூடாது. எல்லா விஷயங்களுக்கும் வேறு பக்கம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அது இறைவனுக்கு மட்டுமே வெளிச்சம் அவன் நமக்கு நன்மையை நாடுகிறான் என்று நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும்.

    அதுமட்டுமின்றி, பிரதிபலனை எதிர்பார்க்காமல் பிறருக்கு நன்மையைத் தயங்காமல் செய்ய வேண்டும் என்பதையும் மூஸா (அலை) கித்று (அலை) மூலம் புரிந்துக் கொண்டார்கள்.

    மூஸா (அலை) பார்த்துக் கொண்டிருக்கும் போதே கித்று (அலை) தொலைதூரம் நடந்து சென்றுவிட்டார்கள்.

    திருக்குர் ஆன் 18:79-82

    - ஜெஸிலா பானு.
    வெற்றியாளர்களுக்குப் பரிசளிக்கும் விழா ஜூன் 25ஆம் தேதி சனிக்கிழமையன்று அல் மம்ஜாரில் உள்ள கலாச்சார மற்றும் அறிவியல் சங்கத்தில் நடைபெற்றது.
    அமீரகத்தின் துணை ஜனாதிபதியும் பிரதமரும் மற்றும் துபாயின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ராஷீத் அல் மக்தூம் அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்ற இருபதாவது துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது போட்டிக்கான விருதுகளும், சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான இந்த ஆண்டின் விருதும் மறைந்த `ஷேக் ரஷீத் பின் முகமது அல் மக்தூம்` அவர்களின் பெயரில் வழங்கப்பட்டது.

    வெற்றியாளர்களுக்குப் பரிசளிக்கும் விழா  ஜூன் 25ஆம் தேதி சனிக்கிழமையன்று அல் மம்ஜாரில் உள்ள கலாச்சார மற்றும் அறிவியல் சங்கத்தில் நடைபெற்றது.

    முகமது பின் ரஷித் அல் மக்தூம் அறக்கட்டளை மற்றும் தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவரான மாண்புமிகு ஷேக் அஹமது பின் முகமது பின் ராஷீத் அல் மக்தூம் இந்நிகழ்ச்சிக்குத் தலைமைத்தாங்கி பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார்.



    போட்டியாளர்களிலிருந்து மூன்று பேரின் ‘கிரா அத்'தோடு இந்நிகழ்ச்சி தொடங்கியது.

    கலாச்சார மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான துபாய் ஆட்சியாளரின் ஆலோசகரும் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது விழாவின் தலைவருமான மாண்புமிகு இப்ராஹிம் முஹம்மது பூ மெல்ஹா இருபது வருடங்களாகத் தொடர்ந்து நடைபெறும் இவ்விழாவின் பின்னணி பற்றியும், அதில் பங்கேற்றப் போட்டியாளர்கள் பற்றியும், வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்த முறைகள் பற்றியும் விளக்கியதோடு, நாட்டில் அமைதி பரவவும், பாதுகாப்பு நிலவவும் வந்திருந்த வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தப் போட்டியாளர்கள் பிரார்த்தித்ததையும் குறிப்பிட்டார்.

    எழுபது முக்கியமான புத்தகங்களை எழுதியவரும், இருநூறுக்கும் மேலான தொண்டு திட்டங்களுக்குச் சேவை செய்தவருமான, 96 வயது நிரம்பிய அமீரக அறிஞர் மாண்புமிகு ஷேக் முஹம்மது அலி சுல்தான்–அல்-உலாமா அவர்களின் மனிதாபிமானத்தைப் பாராட்டும் வகையில் இந்த வருடத்திற்கான ‘சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான’ விருது வழங்கப்பட்டது.



    பத்து நாட்களாக நடந்து முடிந்த திருக்குர்ஆன் மனனப்போட்டிக்கான முடிவுகளை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தபோது தேர்வான முதல் பத்து போட்டியாளர்களைப் பற்றி அறிவிக்கப்பட்டது.

    துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப்போட்டியின் முதல் பரிசை தட்டிச்சென்றவர்  சவுதி அரேபியாவைச் சேர்ந்த 20 வயது நிரம்பிய துர்கி பின் முக்ரின் பின் அஹமது அல் அப்துல்முனிம். அதற்கு அடுத்த இடங்களை தாகெஸ்தான் நாட்டைச் சேர்ந்த 17 வயது நிரம்பிய பிலால் அப்துல்கலிக்கோவ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது நிரம்பிய அதீன் ஷஹ்ஸாத் ரஹ்மான் தட்டிச் சென்றனர்.



    வெற்றியாளர்களுக்கு மாண்புமிகு ஷேக் அஹமது பின் முகமது பின் ராஷீத் அல் மக்தூம் பரிசுகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியின் நிறைவாக ஊடகவியலாளர்களுக்கும், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் மாண்புமிகு இப்ராஹிம் முஹம்மது பூ மெல்ஹா நன்றி தெரிவித்து விழாவை நிறைவு செய்தார்.

    - ஜெஸிலா பானு.
    புனித ரமதான் மாதத்தில் பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது போட்டி நிறைவடைந்தது.
    இருபது ஆண்டுகளாக, புனித ரமதான் மாதத்தில் பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது போட்டி நிறைவடைந்தது. இப்போட்டிக்கான விருதுகள் மறைந்த `ஷேக் ரஷீத் பின் முகமது அல் மக்தூம்` அவர்களின் பெயரில் வழங்கப்படுகிறது.

    திருக்குர்ஆனை மனனம் செய்வதோடு மட்டுமல்லாமல் சரியான உச்சரிப்போடு மிக அழகாக ஓதுவது என்று எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியதுதான் இப்போட்டி.



    இந்த ஆண்டு 81 நாடுகளிலிருந்து பங்கேற்பாளர்கள் பங்கேற்று, இறுதியாக வெறும் எட்டு நாடுகள் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றன. அவை தாய்லாந்து, பனாமா, பஹ்ரைன், செனிகல், துருக்கி, வங்காளதேசம், லிபியா மற்றும் நைஜர் குடியரசு.

    வியாழன் இரவு நடந்த குரல் வளத்திற்கான இறுதிச் சுற்றில் பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த இருபத்தி இரண்டு வயது நிரம்பிய ஜாஸிம் கலிஃபா இப்ராஹிம் கலிஃபா ஹம்தான் 85 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதல் பரிசை வென்றார்.

    81.8 சதவீத மதிப்பெண்களைப் பெற்று இரண்டாவது இடத்தை வங்காளதேசத்தைச் சேர்ந்த அப்துல்லாஹ் அல் மாமுன் வென்றார்.

    திருக்குர்ஆனை மனனம் செய்தது தனக்கு மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையையும், சுயமதிப்பையும் அளித்ததாகவும். திருக்குர்ஆனால் மட்டுமே தன்னுடைய உலக வாழ்வையும் மறுமை வாழ்வையும் ஒளிர செய்ய முடியுமென்று நம்புவதாகக் கூறினார் இப்போட்டியின் வெற்றியாளர் ஜாஸிம் ஹம்தான்.



    எதிர்காலத்தில் ஒரு போதகராக விரும்பும் ஜாஸிம் ஹம்தான், இஸ்லாமிய மற்றும் அரபு ஆய்வுகள் பற்றிப் பயிலும் பஹ்ரைன் பல்கலைக்கழகத்தின் மாணவர். திருக்குர்ஆனோடான தனது பயணத்தை, தமது ஏழாவது வயதில் தொடங்கியதாகவும் குறிப்பிட்டார்.

    முன்னதாக, துபாய் சர்வதேச திருக்குர்ஆன் போட்டியின் 32 அரசாங்க மற்றும் தனியார் அனுசரணையாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் துபாய் சர்வதேச மரெய்ன் கிளப்பின் தலைவர் மாண்புமிகு ஷேக் மன்சூர் பின் முஹம்மது பின் ராஷீத் அல் மக்தூம் நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார். ‘மாலை மலரின்’ சார்பாக திருமதி.ஜெஸிலா பானு நினைவுப்பரிசைப் பெற்றுக் கொண்டார்.



    கலாச்சார மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான துபாய் ஆட்சியாளரின் ஆலோசகரும் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது விழாவின் தலைவருமான மாண்புமிகு இப்ராஹிம் முஹம்மது பூ மெல்ஹா அவர்களும் உடனிருந்து பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.

    சிரியாவைச் சேர்ந்த ஷேக் அய்மன் ருஷ்டி சுவைத் அவர்களின் பிரார்த்தனைகளோடு இவ்விழா நிறைவடைந்தது. அத்தோடு வழக்கம்போல் குலுக்கல் முறையில் பார்வையாளர்களிலிருந்து ஒரு வெற்றியாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு இலவசமாக உம்ரா பயணம் மேற்கொள்ள வாய்ப்பும் தரப்பட்டது. இந்தப் பரிசு துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முஹம்மது பின் ராஷித் அல்மக்தூம் அவர்களின் மனைவி மாண்புமிகு ஷேக்கா ஹிந்த் பின்த் மக்தூம் அவர்களால் வழங்கப்படுகிறது.

    துபாய் ஊடகப் பிரிவின் தலைவரும், நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான திரு. அஹமத் அல் ஸாஹித் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

    - ஜெஸிலா பானு.
    கித்ரு (அலை), மூஸா (அலை)க்கும் இடையே நடந்த உரையாடல்கள்.
    அந்தரங்கத்தை அறிந்து கொள்ளும் சக்தியைப் பெற்ற கித்ரு (அலை), மரக்கலத்தில் ஓர் ஓட்டை போட்டதை கண்டு பதறிய மூஸா (அலை) அவர்களிடம், தாமாக விளக்கம் தரும் வரை அது பற்றிக் கேட்கக் கூடாது என்பதை கித்ரு (அலை) நினைவுப்படுத்தியதும். மேலும் கேள்விகள் கேட்கக் கூடாது என்று உறுதியெடுத்து, பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

    இருவரும் நடந்து கொண்டு வரும்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளில் ஒரு பையனை மட்டும் குறிப்பாகக் கொன்றுவிடுகிறார்கள் கித்ரு (அலை). மூஸா (அலை) ஆவேசமாக “எந்தக் குற்றமும் செய்யாத ஓர் அப்பாவி பையனைக் கொலை செய்துவிட்டீர்களே!? நீங்கள் கண்டிப்பாக ஒரு பயங்கரமான காரியத்தைச் செய்துவிட்டீர்கள்” என்று சொன்னார்கள்.

    அதற்கு கித்ரு (அலை) “நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என்று நான் உமக்குச் சொல்லவில்லையா?” என்றார்கள் விளக்கம் தராமலே. அதை உணர்ந்தவர்களாக மூஸா (அலை) “இதன் பிறகு நான் உங்களிடம் எதைப் பற்றியாவது கேள்வி கேட்டால், என்னை நீங்கள் மன்னிக்க வேண்டாம், என்னை உங்கள் தோழனாகவும் வைத்துக் கொள்ள வேண்டாம்” என்று மறுபடியும் உறுதியளித்தார்கள்.

    அதனையேற்றுக் கொண்டு மறுபடியும் இருவரும் பயணத்தைத் தொடர்ந்து ஒரு கிராமத்தை அடைந்தார்கள். அவர்களிடம் சாப்பிட ஏதுமில்லை. பணமும் இல்லை. இருவரும் பசி மிகுதியில் கிராமத்து மக்களிடம் உணவு கேட்டார்கள். ஆனால் அம்மக்கள் அவர்களுக்கு உதவி செய்ய மறுத்துவிட்டனர்.

    மறுபடியும் நடக்க ஆரம்பிக்கும் போது அங்கே உடைந்து விழும் நிலையில் ஒரு சுவரை அவ்விருவரும் கண்டனர். உடனே கித்ரு (அலை) அச்சுவரைப் பூசி சரி செய்தார்கள். இடிந்துவிழ வேண்டிய சுவர் உறுதியாக நின்றதைக் கண்ட மூஸா (அலை) “நம்மிடம் பணமில்லை, பசியால் வாடுகிறோம். நீங்கள் இந்தச் சுவரை சரி செய்ததற்காவது இவர்களிடம் கூலியைப் பெற்றிருக்கலாமே?” என்று கேட்டார்கள்.

    புன்னகையுடன் கித்ரு (அலை) மூஸா (அலை) அவர்களிடம் “நாம் இருவரும் பிரிவதற்கான நேரம் வந்துவிட்டது. என்னிடம் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டீர்கள் என்ற உறுதியின்பேரில் நம் பயணத்தைத் தொடங்கினோம். ஆனால் என் செயலிற்கான காரணங்கள் புரியாமல் ஆர்வ மிகுதியில் பொறுமை இழந்தவராக நீங்கள் கேள்விகளைக் கேட்டுவிட்டீர்கள். இனி தாமதிக்காமல் என் செயலுக்கான காரணத்தை உங்களுக்கு விளக்குகிறேன்” என்றார்கள்.

    அக்காரணங்கள் என்னவாக இருக்குமென்று மிகுந்த ஆவலுடன் மூஸா (அலை) இருந்தார்கள்.

    திருக்குர்ஆன் 18:74-78

    - ஜெஸிலா பானு.
    இந்த புனித ரமலானில் இறைத் தொடர்பு பெற முயற்சிப்போம், நன்மைகளை அடைவோம்.
    புனித ரமலானின் இறுதி பத்து நாட்கள் இன்று முதல் இனிதே ஆரம்பித்து விட்டன. இஃதிகாப் (பள்ளிவாசலில் தங்கி) இருத்தல், நரக விடுதலை-பாவமன்னிப்பு தேடுதல், புனித லைலத்துல் கத்ர் இரவைத்தேடுதல், ஜகாத், ஸதகா கொடுத்தல், குர்ஆன் ஓதி முடித்தல் என அனைத்து விதமான நல் அமல்களுக்கு நாம் தயாராக வேண்டியதிருக்கிறது.

    நபிகளார் நவின்றார்கள்: ரமலானின் இறுதிப்பத்து நாட்களில் லைலத்துல் கத்ர் எனும் புனித இரவை தேடுங்கள் (நூல்: புகாரி).
    ரமலானின் இறுதிப்பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் புனித இரவைத் தேடுங்கள் (நூல்:புகாரி).

    இறுதிப்பத்து நாட்கள் வந்து விட்டால் நபிகளார் தமது ஆடையை இடுப்பில் இறுக்கமாகக் கட்டிக்கொள்வார்கள்; தம் குடும்பத்தார்களை எழுப்பி விடுவார்கள் (நூல்: புகாரி).

    நபிகளார் ரமலானின் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாப் (பள்ளிவாசலில் தங்குபவர்களாக) இருந்தார்கள். நபிகளார் தாம் மரணித்த வருடத்தில் இறுதி இருபது நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள். (நூல்:புகாரி)

    இப்படியாக அனைத்து வகையான நல் அமல்களுக்கும் நபிமொழிகள் பல நமக்கு நல்வழி காட்டுகின்றன. முயற்சியும், பயிற்சியும் தரும் ஒரு அற்புதமான மாதம் தான் இந்த புனித ரமலான் மாதம்.

    அல்லாஹ் கூறுகிறான் : நிச்சயமாக மனிதனுக்கு அவன் முயற்சி செய்ததைத் தவிர வேறெதுவும் அவனுக்கு கிடைப்பதில்லை, நிச்சயமாக அவனது முயற்சி(யின் பலன்) விரைவில் அவனுக்கு காண்பிக்கப்படும். (திருக்குர்ஆன் 53:39,40)

    எனவே நமது முயற்சியின் பலன் என்ன என்பதைப் பற்றி ரமலான் நமக்கு நிச்சயம் காட்டித்தருகிறது. மனத்தெளிவு, அமல்களில் ஆர்வம், ஒற்றுமைப்பண்பு, உதவிசெய்தல் என பன்முகத் தன்மைகள் நமக்குள் குடிகொண்டு, தீய பழக்கங்கள் நம்மை விட்டு விலகி நமது வாழ்க்கையை மேம்படுத்துகிறது.

    மேற்கண்ட அமல்களை சற்று நிதானமாக யோசித்துப் பாருங்கள் அவை யாவுமே நற்பண்புகளை இனிதே நமக்கு போதிப்பவை. ஒரு சராசரி நோன்பாளி நிச்சயம் நல்லொழுக்கம் உள்ளவனாகத்தான் மாற்றம் பெறுவான்.

    அதற்காகத்தான் அவன் பள்ளிவாசலில் பொதுமக்களின் தொடர்பு இல்லாமல் இறைத் தொடர்பில் இணைந்திருக்கிறான். அதனால் தான் நபிகளார் நீங்கள் பள்ளிக்குள் நுழையும் போதெல்லாம் இஃதிகாப் நிய்யத் வைத்துக்கொள்ளுங்கள் என்றார்கள். பள்ளிவாசலில் தங்கியிருப்பவர் நிச்சயம் அல்லாஹ்வின் நேரடித்தொடர்பில் இருக் கிறார். ஒருவர் இறைத்தொடர்பைப் பெற்றுவிட்டால், அவருக்கு அதைவிட வேறு சிறந்த பாக்கியம் எதுவும் இருக்காது.

    எனவே இந்த புனித ரமலானில் இறைத் தொடர்பு பெற முயற்சிப்போம், நன்மைகளை அடைவோம்.
    ×