search icon
என் மலர்tooltip icon

  ஆன்மிகம்

  இனிய பெருநாளே... ஈகைத்திருநாளே வருக...
  X

  இனிய பெருநாளே... ஈகைத்திருநாளே வருக...

  அல்லாஹ் இட்ட கட்டளைப்படியும், நபிகள் கோமான் சொல்லித்தந்த வழிமுறைகளின் படியும், ‘எவனொருவன் இந்த ரமலானைப் பயன்படுத்திக் கொண்டானோ, அவன் அச்சப்பட தேவையும் இல்லை, அதற்கான அவசியமும் இல்லை’.
  புண்ணியங்களைப் பொருத்திக் கொண்ட புனிதமிகு ரமலான் நிறைவு பெற்றுவிட்டது. இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது புனித ரமலான் நோன்பு.

  வானவர்கள் (மலக்குகள்) கூட்டம் கூட்டமாய் வந்து இறைவனின் அருட்கிருபைகளை அள்ளி வழங்கிய புனித இரவுகள் நம்மைவிட்டும் கடந்து சென்றுவிட்டன.

  மக்கள் வெள்ளங்களாய் நிரம்பி வழிந்த மஸ்ஜித்துக்கள், மக்கள் வரவை எதிர்பார்த்து ஏக்கம் கொள்ளும் நாட்கள் எட்டிப்பார்க்கின்றன. தான தர்மங்கள் செய்ததால் ஏற்பட்ட மனநிம்மதி, சந்தோஷம் சற்றுத்தள்ளிச் செல்ல எத்தனிக்கிறது. மகிழ்ச்சிகளால் நிறைந்திருந்த மனங் களில் வெறுமை வந்து குடியேற தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

  அல்லாஹ் இட்ட கட்டளைப்படியும், நபிகள் கோமான் சொல்லித்தந்த வழிமுறைகளின் படியும், ‘எவனொருவன் இந்த ரமலானைப் பயன்படுத்திக் கொண்டானோ, அவன் அச்சப்பட தேவையும் இல்லை, அதற்கான அவசியமும் இல்லை’.

  எல்லா நற்காரியங்களுக்கும் இதுதான் வெகுமதி என்று சொல்லித்தந்த அல்லாஹ் இந்த நோன்பிற்கான கூலியை மட்டும் தன்னகத்தே வைத்துக்கொண்டான். என்ன கொடுப்பான், எவ்வளவு கொடுப்பான், எப்படி கொடுப்பான் என்பதெல்லாம் இறைவன் வசமே உள்ளது. ஆனால் நிச்சயமாக அபரிமிதமான அருட் செல்வங்களை அளவின்றியே அள்ளிக் கொடுப்பான். அந்த நன்நாள் இந்நாள் தான்.

  ஈத்பெருநாள் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தரக்கூடிய நாள். எல்லா மக்களும் பேதங்கள் மறந்து இணைந்து கொண்டாடும் நாள். அந்நாளில் ஒருவர் கூட தன் ஏழ்மையின் காரணத்தால் அதனை கொண்டாடாமல் விட்டுவிடக் கூடாது என்பதற்காவே ‘ஈதுல் பித்ர்’ என்ற ஈகைத்திருநாளின் தர்மத்தையும் வலியுறுத்தினார்கள் கருணை நபியவர்கள்.

  ஜகாத் கொடுக்க தகுதி பெற்றவர்கள் ரமலான் பிறை மறைந்து ஷவ்வால் பிறை கண்டதும் அந்த இரவு முடிந்து வைகறை மலர்ந்து பெருநாள் தொழுகையை தொழுவதற்கு முன்பு அந்த தர்மத்தை நிறைவேற்றி விடவேண்டும் என்ற கட்டளையும் உண்டு. விடியற்காலை சுபுஹ் தொழுகையை அந்த ஏழை, பெருநாள் கொண்டாடுவதற்கு தேவையான அத்தனை வாழ்வாதாரங்களைப் பெற்ற நிலையிலே தான் தொழ வேண்டும்.

  இந்த எண்ணங்கள் முழுமையாக நிறைவேற வேண்டும் என்பதற்காகத் தான் இந்த கால இடைவெளி வரையறுக்கப்பட்டுள்ளது.

  நம்மில் பலர் தேவை உள்ளவர்களாக இருந்தாலும் கூட, வெட்கத்தின் காரணமாக அதனை வெளியில் சொல்லாமல் தன் தேவைகளை மறைத்து தவித்துக் கொண்டிருப்பார்கள்.

  அப்படிப்பட்டவர்களை கண்டறிந்து பிறருக்குத் தெரியாமல், அவர்களின் தன்மானம் பாதிக்கப்படாமல் வழங்குவதும் தர்மங்களில் மிகச்சிறந்த ஒன்றாகும்.

  இந்த ஈகைத் திருநாளை குடும்பத்தினரோடு குதூகலமாய் கொண்டாட வேண்டும். உறவுகளை நாடிச்சென்று உதவி செய்து அதனை கொண்டாட வேண்டும். நம்மிடம் வேலை செய்பவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து அவர்களின் சந்தோஷத்தோடு கொண்டாட வேண்டும்.

  நண்பர்களோடும், பக்கத்து வீட்டாரோடும், மாற்று மத சகோதரர்களோடும் நம் மகிழ்ச்சியை பகிர்ந்து மனமகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும்.

  ஏழை, எளியவர் என்ற வேறுபாட்டை களைந்து ஒருவரோடு ஒருவர் ஆரத்தழுவி சமத்துவத்தைப் பேணி இந்த நாளை கொண்டாட வேண்டும். இந்த நற்குணங்கள் என்றும் நம்மிடம் நிலைத்திருக்க வேண்டும்,

  ரமலானில் நாம் பெற்ற பயிற்சிகள் ஏனைய நாட்களிலும் நம்மோடு பயணிக்க கூடிய அளவிற்கு மனங்கள் பக்குவப்பட்டிருக்க வேண்டும். அந்த புண்ணிய நாட்களில் நாம் படித்த, கேட்ட, புரிந்த நல்லறங்கள் தொடர்ந்து வரவேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு இந்த நாளை நாம் கொண்டாட வேண்டும்.

  இந்த நல்லெண்ணங்களோடு ரமலானை வழிஅனுப்பி வைப்போம். வரும் வருடங்களில் அல்லாஹ் நாடினால் அதன் வரவை வழிமேல் விழி வைத்து காத்திருப்போம்.

  அனைவருக்கும் “ஈத் முபாரக்”. இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.

  - எம். முஹம்மது யூசுப், உடன்குடி.
  Next Story
  ×