என் மலர்
இஸ்லாம்
அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் முற்றிலும் புரிந்து கொண்ட மக்கள், கூட்டம் கூட்டமாக இஸ்லாமில் வரத் தொடங்கினர்.
மக்கா வெற்றிக் கொள்ளப்பட்ட பின் முஸ்லிம்களின் உள்நாட்டுப் பிரச்னைகளும் சிரமங்களும் முற்றிலுமாக முடிவுற்றது. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் முற்றிலும் புரிந்து கொண்ட மக்கள், கூட்டம் கூட்டமாக இஸ்லாமில் வரத் தொடங்கினர். அல்லாஹ்வின் மார்க்கச் சட்டங்களைக் கற்றுக் கொண்டு மகிழ்ச்சியாகக் கடைப்பிடிக்கத் தொடங்கினர்.
ஆனால் அக்காலத்தில் உலகத்தில் மிகப் பெரிய வல்லரசாகத் திகழ்ந்த ரோமானியப் பேரரசு தன் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அரபுக் கோத்திரங்கள், தன் கட்டுப்பாட்டை விட்டு விலகி, முஸ்லிம்களுடன் சேர்ந்து கொள்வதை ரோமானிய மன்னர் கைஸரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்வதற்காகப் பெரும் படையொன்றைத் திரட்டி, அதில் ரோமர்களையும் ரோமர்களின் ஆதிக்கத்தில் இருந்த கஸ்ஸான் கிளையைச் சேர்ந்த அரபியர்களையும் சேர்த்துக் கொண்டு தீர்க்கமான ஒரு போருக்குத் தயாரானான்.
இச்செய்தி மதீனாவில் பரவலாகப் பேசப்பட்டது. முஸ்லிம்கள் மத்தியில் அச்சம் நிலவியிருந்தது. ஆனால் நபி(ஸல்) அவர்கள் “எவ்வளவுதான் சிரமம் ஏற்பட்டாலும் ரோமர்களது எல்லைக்கும் செல்லக் கூடாது அதே சமயம் இஸ்லாமிய எல்லையில் அவர்கள் படையுடன் நுழைய வாய்ப்பும் அளிக்கக் கூடாது” என்று திட்டவட்டமான, தீர்க்கமான ஒரு முடிவை எடுத்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் “நாம் ரோமர்களைச் சந்திக்க இருக்கிறோம் என்று மக்களுக்குத் தெளிவுபடுத்தி, அதற்குத் தேவையான முழுத் தயாரிப்புகளையும் செய்து கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தி, அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதற்கு ஆர்வமூட்டினார்கள். அல்லாஹ் அத்தியாயம் பராஆவின் ஒரு பகுதியை இறக்கி வைத்தான். துணிவுடன் எதிரிகளை எதிர்க்க வேண்டும் என்றும், அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதால் ஏற்படும் நன்மைகளை விளக்கியும், இந்த வசனங்களின் மூலம் அல்லாஹ் அவர்களைப் போருக்கு ஆயத்தமாக்கினான். நபி (ஸல்) அவர்களும் தர்மம் செய்வதின் சிறப்புகளையும், அல்லாஹ்வின் பாதையில் தங்களின் உயர்வான பொருட்களைச் செலவு செய்வதின் சிறப்புகளையும் கூறி தங்களின் தோழர்களுக்கு ஆர்வமூட்டினார்கள்.
உடனே முஸ்லிம்கள் நபியவர்களின் கட்டளைக்கிணங்க வெகு விரைவாகப் போருக்குத் தயாராகினர். மக்காவைச் சுற்றியுள்ள அரபி கோத்திரத்தார்கள் எல்லாம் பல வழிகளில் மதீனா வந்து குழுமினர். போருக்கான செலவுகளைச் செய்ய இயலாத வறுமையில் உள்ள நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நாங்களும் ரோமர்களுடன் போர் புரிய உங்களுடன் வருகிறோம். எங்களுக்கு வாகன வசதி செய்து தாருங்கள்” என்று கேட்டனர். நபி (ஸல்) மிக்கக் கவலையுடன் “உங்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் வாகனம் ஒன்றுமில்லையே” என்றார்கள்.
அந்தப் பதிலைக் கேட்ட தோழர்கள் “அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய எங்களிடம் வசதி இல்லையே!” என்று அழுதவர்களாகச் சபையிலிருந்து திரும்பிச் சென்றனர். அப்போது அல்லாஹ், “போருக்குச் செல்லத் தங்களுக்கு வாகனம் தேவைப்பட்டு உம்மிடம் வந்தவர்களிடம் “உங்களை நான் ஏற்றி விடக்கூடிய வாகனங்கள் என்னிடம் இல்லையே” என்று நீர் கூறிய போது, போருக்காகத் தாங்களே செலவு செய்து கொள்ள வசதியில்லையே என்று எண்ணித் துக்கத்தால் தங்களின் கண்களில் கண்ணீர் வடித்தவர்களாகத் திரும்பிச் சென்று விட்டார்களே! அவர்கள் மீதும் போருக்குச் செல்லாதது பற்றி எவ்வித குற்றமும் இல்லை” என்ற இறை வசனத்தை அருளினான்.
முஸ்லிம்கள் அனைவரும் தங்களால் முடிந்தளவு அல்லாஹ்வின் பாதையில் பொருட்களைச் செலவு செய்வதிலும், இயலாதவர்களுக்குக் கொடுத்து உதவுவதிலும் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டனர். குறைவாகவோ அதிகமாகவோ தங்களால் முடிந்ததை எவ்விதக் கஞ்சத்தனமுமின்றி மக்கள் அல்லாஹ்வின் பாதையில் வழங்கினார்கள். ஆனால் உள்ளத்தில் நயவஞ்சகத் தன்மை உள்ளவர்களோ அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் கருமித்தனம் செய்தனர்.
அப்போது “முஃமின்களில் தாராளமாகத் தர்மம் செய்பவர்களையும் வேறு பொருள் எதுவுமில்லாததால் தங்கள் உழைப்பை தானமாகக் கொடுப்பவர்களையும் குறை கூறி, ஏளனம் செய்கிறார்கள். இவர்களை அல்லாஹ் ஏளனம் செய்கிறான். இவர்களுக்கு நோவினை தரும் வேதனையும் உண்டு” என்ற இறைவசனம் அருளப்பெற்றது.
இவ்வாறு முடிந்தளவு முன்னேற்பாடுகளுடன் இஸ்லாமியப் படை மதீனாவிலிருந்து போருக்குப் புறப்பட்டது.
ஆதாரம்: அர்ரஹீக் அல்மக்தூம், திருக்குர்ஆன் 9:92, 9:79
- ஜெஸிலா பானு.
ஒருமுறை நபி(ஸல்) அவர்களுடன் அதீ பேசிக் கொண்டிருந்தபோது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து தன்னுடைய வறுமை நிலை பற்றி முறையிட்டார்.
அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அவர்கள் இஸ்லாமை ஏற்ற பிறகு, ஒருமுறை நபி(ஸல்) அவர்களுடன் அதீ பேசிக் கொண்டிருந்தபோது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து தன்னுடைய வறுமை நிலை பற்றி முறையிட்டார். மற்றொருவர் வந்து தம்மிடம் நடந்த வழிப்பறி பற்றி முறையிட்டார்.
அப்போது நபி(ஸல்) அவர்கள், “அதீயே! நீ ஹிராவைப் பார்த்ததுண்டா?” என்று கேட்டார்கள். “ஹீரா என்ற இடத்தை நான் பார்த்ததில்லை. ஆனால், அது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்று பதிலளித்தார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “நீ நீண்ட நாட்கள் வாழ்ந்தால் நிச்சயம் பார்ப்பாய். இறையில்லம் கஅபாவை வலம் வருவதற்காகவே ஹீராவிலிருந்து ஒரு பெண் பயணித்து வருவாள்.
அவள் வழியில் அல்லாஹ்வைத் தவிர வேறு ஒருவருக்கும் அஞ்ச மாட்டாள்” என்று கூறினார்கள். தொடர்ந்து நபி(ஸல்) அவர்கள் “'நீ நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ - பாரசீகப் பேரரசன் கிஸ்ராவின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதை நீ பார்ப்பாய். மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக்காரரான கிஸ்ரா இப்னு ஹுர்முஸ் தோற்கடிக்கப்படுவார்” என்றும் கூறினார்கள். மேலும் நபி(ஸல்) கூறினார்கள், “உனக்கு வாழ்நாள் நீண்டிருந்தால் ஒருவர் தன்னுடைய கை நிறையத் தங்கத்தை, அல்லது வெள்ளியை எடுத்துக்கொண்டு தர்மம் பெறுபவரைத் தேடியலைவார். ஆனால், அந்தத் தர்மத்தை ஏற்கும் எவரையும் அவர் காணமாட்டார். அதையும் நீ நீண்ட ஆயுளுடன் இருந்தால் பார்ப்பாய்” என்றார்கள்.
நபி(ஸல்) அவர்கள் தொடர்ந்து சொன்னார்கள், “உங்களில் ஒருவர் அல்லாஹ்வைச் சந்திக்கும் மறுமை நாளில், அவருக்கும் அவனுக்குமிடையே மொழிபெயர்த்துச் சொல்லும் மொழிபெயர்ப்பாளர் எவரும் இல்லாத நிலையில் அவனைச் சந்திப்பார். அப்போது அல்லாஹ், 'நான் உனக்கு ஒரு தூதரை அனுப்பினேனே, அவர் உனக்கு என் செய்தியை எடுத்துரைக்கவில்லையா?' என்று கேட்பான்.
அவர், 'ஆம், எடுத்துரைத்தார்' என்று பதிலளிப்பார். பிறகு அல்லாஹ், 'உனக்கு நான் செல்வத்தைத் தந்து உன்னை நான் மேன்மைப்படுத்தவில்லையா?' என்று கேட்பான். பிறகு அவர், 'ஆம் உண்மைதான்' என்பார். பிறகு அவர் தன் வலப்பக்கம் பார்ப்பார், அங்கு நரகத்தைத் தவிர வேறெதையும் காணமாட்டார். தன் இடப்பக்கம் பார்ப்பார், அங்கும் நரகத்தைத் தவிர வேறெதையும் காண மாட்டார். நான் உங்களுக்கு அறிவுறுத்துவதெல்லாம், பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தாவது நரகத்திலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். எவரிடம் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டு கூட இல்லையோ அவர் நல்ல சொல் ஒன்றைக் கொண்டாவது நரகத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளட்டும்' என்று சொன்னார்கள்.
நபி(ஸல்) அவர்களின் வாக்குப்படி நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பிவிட்ட 'தய்யி' குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் இல்லாமலிருந்தார்கள். ‘ஒட்டகச் சிவிகையில் இருக்கும் பெண் ஒருத்தி ஹீராவிலிருந்து கஅபாவை வலம் வருவதற்காக அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாதவளாகப் பயணம் செய்து வருவதை என் கண்களால் பார்த்தேன் என்றும், பாரசீக மன்னன் கிஸ்ரா இப்னு ஹுர்முஸின் கருவூலங்களை வென்றவர்களில் தானும் ஒருவனாக இருந்தேன் என்றும் அதீ இப்னு ஹாத்திம்(ரலி) பிற்காலத்தில் சாட்சியம் சொன்னார்கள்.
அதேபோல் “நீங்கள் நீண்ட நேரம் வாழ்ந்தால் 'ஒருவன் தங்கத்தையோ வெள்ளியையோ கைநிறைய அள்ளிக்கொண்டு அதைத் தர்மமாக ஏற்றுக் கொள்பவரைத் தேடியலைவதை நீ பார்ப்பாய்' என்று அபுல் காஸிம் நபி(ஸல்) அவர்கள் சொன்னதையும் நீங்கள் நிச்சயம் நடை முறையில் காண்பீர்கள்” என்றும் அதீ இப்னு ஹாத்திம்(ரலி) வலியுறுத்தினார்கள்.
ஸஹீஹ் புகாரி 4:61:3595
- ஜெஸிலா பானு.
நபிகளார் நமக்கு எல்லாவற்றிலும் முன்மாதிரியாக இருப்பதைப் போல நகைச்சுவை, விளையாட்டு கலந்த இயல்பான வாழ்க்கைக்கும் சிறந்த வழிகாட்டுதலை வழங்கியுள்ளார்கள்.
'‘புன்னகை பூப்பதும் ஓர் அறமே!’’ என்று கூறினார்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். இது மிக எளிதான, எவரும் அன்றாடம் செய்யக்கூடிய ஓர் சிறந்த அறச்செயல் ஆகும். இதற்கு எந்தச் செலவும், உழைப்பும் தேவையில்லை. இதற்குத் தேவைப்படுவது மனித நேயம் மட்டுமே. நம்மில் பலருக்கும் முகத்தில் எளிதாக புன்னகை வந்து விடுவதில்லை. சந்திக்கும் மனிதர்களின் பதவி, செல்வம், புகழ் ஆகியவற்றைக் கணக்குப் போட்டுப் பார்த்து, பலத்த யோசனைக்குப் பிறகு புன்முறுவல் பூப்பார்கள். தம்மை விட அந்தஸ்தில் குறைந்தவர்களைப் பார்த்து எளிதில் சிரித்து விட மாட்டார்கள். ஆட்சியாளர்கள், ஆன்மிகவாதிகள், சிந்தனையாளர்கள் மக்களுடன் எளிதில் கலந்து விடுவதில்லை; நகைச்சுவையாகப் பேசுவதும் இல்லை. ஆனால் மனித நேயம் கொண்டவர்கள், எவரைப் பார்த்தாலும், எவ்வித தயக்கமும் இல்லாமல் புன்னகை புரிவார்கள்.
நபிகள் நாயகம் ஆன்மிகத் தலைவர், ஆட்சியாளர், படைத்தளபதி, தத்துவஞானி எனப் பல பரிமாணங்களைக் கொண்டிருந்தாலும், எப்பொழுதும் சிரித்த முகத்துடனும், கலகலப்பாகவும் காணப்படுவார்கள்.
* ‘‘நபிகளாரின் வாழ்வு புன்முறுவல் கலந்த ஒன்றாக இருந்தது. வளத்திலும் வறுமையிலும், இன்பத்திலும் துன்பத்திலும், வீட்டிலும் வெளியிலும், பிரயாணத்திலும் போரிலும், பள்ளிவாயிலிலும் ஏன் நோயில் வீழ்ந்திருந்தபோதிலும்! இப்படி எல்லா நிலைகளிலும், சந்தர்ப்பங்களிலும் நபிகளார் சிரிக்க மறந்ததில்லை’’ என்கின்றார், நபித்தோழர் அபூ ஹுரைரா (ரலி) (நூல்: பைஹகி)
* வெள்ளிக் கிழமைகளில் பள்ளிவாயிலில் நபிகளார் உணர்ச்சியோடு உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோதிலும், அதை இடை மறித்து கோரிக்கை வைத்தவருக்கு பதிலளித்தது மாத்திரம் அல்லாமல் புன்னகைக்கவும் செய்திருக்கிறார்கள் என்று அனஸ் பின் மாலி என்ற நபித்தோழர் கூறுகிறார்.
* நபிகள் நாயகம் இறக்கும் தறுவாயிலும் புன்னகை பூப்பவராக இருந்தார். நபிகளார் நோயுற்றிருந்த காரணத்தினால் அவரது இறுதி நாட்களில் பள்ளிவாயிலுக்குச் சென்று தொழுகை நடத்த முடியாமல் போகவே, தனது நெருங்கிய தோழரான அபூபக்கர் (ரலி) அவர்களை தொழுகைக்குத் தலைமை தாங்கி நடத்துமாறு பணித்திருந்தார். நபிகள் நாயகம் திங்கட்கிழமை அன்று முற்பகலில் மரணம் அடைந்தார். அதே நாளில் வைகறைத் தொழுகையை மக்கள், அபூபக்கரின் தலைமையில் தொழுவதைத் தமது அறையில் இருந்து பார்த்து ஆனந்தமாக சிரித்தார்.
இவ்வாறு வாழ்வில் எல்லாத் தருணங்களிலும் நபிகள் நாயகம் புன்னகை பூத்தவராகவே இருந்தார்.
நபிகளாரின் நகைச்சுவை
தலைவர்களும், அறிவு ஜீவிகளும் எப்போதும் அழுத்தமாகவே இருக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் நம்மிடத்தில் உள்ளது. நபிகளாரின் வாழ்க்கையோ இதற்கு மாறாக உள்ளது. புன்னகை பூத்த முகத்தோடு வாழ்ந்ததோடு, நகைச்சுவை உணர்வும் ததும்பப் பெற்றவராக இருந்தார்.
* ஒருவர் நபிகளாரிடம் தாம் சவாரி செய்வதற்கு ஒரு ஒட்டகம் தர வேண்டும் என்று கேட்டார். அதற்கு நபிகளார், ‘‘நான் ஒரு ஒட்டகக் குட்டியின் மீது உம்மை சவாரி செய்ய வைக்கிறேன்.’’ என்றார்கள். அதற்கு அவர், ‘‘இறைவனின் தூதரே! ஒட்டகக் குட்டியை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்?’’ என்று கேட்டார். ‘‘எல்லா ஒட்டகமும் தன் தாய்க்குக் குட்டிதானே!’’ என்று நபிகளார் கூறினார்கள். (நூல்: திர்மிதி)
* நபிகளாரிடம் ஒரு கிழவி வந்து, ‘‘இறைத்தூதரே! இறைவன் என்னை சொர்க்கத்தில் நுழையச் செய்ய வேண்டும் என இறைஞ்சுங்கள்’’ எனக் கேட்டார். அதற்கு நபிகளார், ‘‘இன்னாரின் தாயே! சொர்க்கத்தில் கிழவிகள் நுழைவது இல்லையே!’’ என்றார்கள். அந்தக் கிழவி உடனே அழ ஆரம்பித்து விட்டாள். ‘‘எந்தப் பெண்களும் கிழவியாகச் சொர்க்கத்தில் நுழையப் போவதில்லை. (எல்லாப் பெண்களும் கன்னியராகவே சொர்க்கத்தில் நுழைவார்கள்)’’ என்று கூறி அதற்கு ஆதாரமான குர்ஆன் வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள். (56: 36,37)
* உம்மு அய்மன் என்ற பெண் நபிகளாரிடம் சென்று, ‘‘என் கணவர் உங்களை அழைக்கிறார்’’ என்று சொன்னபோது, நபிகளார், ‘‘யார் அவர்? கண்ணிலே வெண்மை இருக்குமே, அவரா?’’ என்று கேட்டார்கள். அந்தப் பெண், ‘‘இறைவன் மீது ஆணையாக, அவரது கண்ணில் வெண்மை இல்லையே’’ என்றாள். நபிகளார், ‘‘இல்லை, அவர் கண்ணில் வெண்மை உள்ளது’’ என்று சொல்ல, மீண்டும் அப்பெண், ‘‘சத்தியமாக இல்லை’’ என்று சொல்ல, நபிகள் நாயகம், ‘‘கண்ணில் வெள்ளைப் பகுதி இல்லாத நபரே இல்லை’’ என்றார்கள்.
இன்னும் இதுபோன்ற பல நகைச்சுவையான நிகழ்வுகள் நபிகள் நாயகத்தின் வாழ்வில் நிகழ்ந்துள்ளன. ஆனால் அவை அனைத்தும் மனிதனுக்கு நன்மை பயப்பதாகவும், மகிழ்ச்சி தருவதாகவும் அமைந்திருந்தன.
நகைச்சுவைக்கும் சில கட்டுப்பாடுகள் உண்டு என்பதையும் நபிகளார் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
* நகைச்சுவைக்காக பொய் பேசக் கூடாது.
‘‘நகைச்சுவை உணர்வோடு எங்களுடன் உரையாடுகின்றீர்கள் என்பதை நாங்கள் காண்கிறோம்’’ என்று தோழர்கள் நபிகளாரிடம் கூறியபோது, ‘‘ஆம்! அப்போதும் நான் உண்மையைத் தவிர வேறெதுவும் சொல்வதில்லை.’’ என்று பதில் அளித்தார்கள். (நூல்: திர்மிதி)
* மக்களை மகிழ்விப்பதற்காக பொய் பேசி சிரிக்க வைப்பவனுக்குக் கேடு உண்டாகும்.
* நகைச்சுவையாக பேசுகிறோம் என்ற பெயரில், கேலி, கிண்டலான வார்த்தைகளைக் கூறக் கூடாது.
ஆக, நபிகளார் நமக்கு எல்லாவற்றிலும் முன்மாதிரியாக இருப்பதைப் போல நகைச்சுவை, விளையாட்டு கலந்த இயல்பான வாழ்க்கைக்கும் சிறந்த வழிகாட்டுதலை வழங்கியுள்ளார்கள்.
டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத்
எவரிடத்திலும், எதற்காகவும் கையேந்துவதில்லை என்ற உறுதிமொழியை எவரேனும் எனக்கு அளித்தால், நான் அவர் சொர்க்கம் செல்வதற்கான உறுதிமொழியை அளிக்கிறேன். (நூல்: அபூ தாவூத்)
“தனி மனிதனின் உயர்வுக்கும், ஒரு நாட்டின் உயர்வுக்கும் உழைப்பே மூலதனம். இயற்கை வளம் இல்லாத பல நாடுகள், மனித வளத்தின் மூலமாக முன்னேற்றம் கண்டுள்ளன. மாறாக இயற்கை எல்லா வளங்களை அருளியிருந்தும், மனித வளம் இல்லாமையால் பல நாடுகள் பின் தங்கியுள் ளன. நாம் எத்தனை பொருளாதாரத் திட்டங்களைத் தீட்டினாலும், மக்களிடை யே நேர்மை, கடின உழைப்பு, பணித்திறன் இல்லையாயின் பெரிய மாற்றம் எதுவும் நிகழாது”
ஒரு தோழர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களி டம், “இறைத்தூதரே! எனக்கு நீங்கள் உதவ வேண்டும்; குழந்தைகளுக்கு உணவளிக்க வீட்டில் எதுவும் இல்லை” என்றார்.
நபிகள் நாயகம்: விற்பனை செய்வதற்காக உம்மிடத்தில் பொருள் ஏதும் உண்டா?
தோழர்: என்னிடம் ஒரு படுக்கை விரிப்பு மட்டுமே உள்ளது. அதில் ஒரு பாதியைப் படுக் கையாகவும், மீதியைப் போர்வையாகவும் பயன்படுத்துகிறேன். தண்ணீர் குடிப்பதற்கான ஒரு குவளையும் என்னிடம் உள்ளது.
நபிகள் நாயகம்: இவ்விரண்டையும் கொண்டு வாரும்.
நபித் தோழர் அப்பொருட்களைக் கொண்டு வந்ததும், தமது தோழர்களை நோக்கி, “இப்பொருட்களை விலைக்கு வாங்குவோர் யாரும் உண்டா?” என்று கேட்டார்கள்.
ஒரு தோழர், “நான் ஒரு திர்ஹமிற்கு வாங்கிக் கொள்கிறேன்” என்றார்.
இன்னொரு தோழரோ, “நான் இரண்டு திர்ஹம் தருகிறேன்” என்றார்.
நபிகள் நாயகம் அதை இரண்டு திர்ஹமிற்கு விற்று, அதை உதவி கேட்டு வந்தவரிடம் கொடுத்து, “இதில் ஒரு திர்ஹமை உம்முடைய குழந்தைகளுக்கு உணவு வாங்க வைத்துக் கொள்ளும்; இன்னொரு திர்ஹத்தைக் கொண்டு கயிறும் கோடரியும் வாங்கி வருவீராக!” என்று கூறினார்கள்.
தோழர் வாங்கி வந்த கோடரிக்கு, தம் கரங் களாலேயே பிடியும் அமைத்துக் கொடுத்தார் கள் நபிகள் நாயகம். பின் “இவற்றைக் கொண்டு மரங்களை வெட்டி, நகரத்தில் விற்று பிழைப்பீ ராக” என்று கூறினார்கள்.
அந்த நபித்தோழர், நபிகள் நாயகம் கூறியவாறு செய்தார். பதினைந்து நாட்களுக்குப் பின்னர் பத்து திர்ஹத்துடன் திரும்பினார்.
“இறைத்தூதரே! நீங்கள் சொன்ன நாளில் இருந்து நீங்கள் சொன்னபடியே விறகு வெட்டி விற்றேன். இப்போது எனது அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்த பின்னரும் பத்து திர்ஹம்கள் உள்ளன” என்றார்.
நபிகள் நாயகம், “உமது குழந்தைகளுக்குத் துணியும், உணவும் வாங்கிக் கொள்வீராக!” என்றார்கள்.
“பிச்சை எடுப்பதனால் மறுமையில் நெற்றியில் ஏற்படும் அவமானச் சின்னத்தை விட, இது (உழைப்பு) சிறந்ததல்லவா?” என்று கேட்டார் கள்.
இதனைக் கேட்ட மற்ற நபித் தோழர் கள், “இனி நாங்கள் எவரிடமும், எதற்காகவும் கையேந்த மாட்டோம்; கடினமாக உழைப்போம்” என்று உறுதியளித்தார்கள். (நூல்: அபூ தாவூத், திர்மிதி)
*பள்ளிவாசலில் ஒருவர் எப் போதும் வழிபாடுகளில் திளைத் திருந் தார். இதனைக் கண்ணுற்ற நபியவர்கள், “இவருக்கு உண வளிப் பது யார்?” என்று வினவினார்கள்.
“இவரது சகோதரரே இவருக்கு உதவுகிறார்” என்று தோழர்கள் பதில் அளித்தார்கள். இதனைக் கேட்ட நபிகளார், “இவரை விட அவரே சிறந் தவர்” என்றார்கள்.
* ஒரு நபித்தோழர், நபிகளாரைக் காண வந்தார். அவரை உட்காரச் சொல்லி, அவரது கரங்களை உற்று நோக்கினார்கள். தோழரின் கைகளில் கறுப்புக் கொப்பளங்கள் இருந்தன. கறுப்பு மையினால் அவரது கரத்தில் ஏதோ எழுதப் பட்டது போன்று காணப்பட்டது. “உமது கரங்களில் என்ன எழுதப்பட்டுள்ளது” என்று நபிகள் நாயகம் வினவினார்கள்.
அத்தோழர் சிரித்து விட்டு, “இவை எழுத்துகள் அல்ல; கொப்பளங்கள். நான் ஒரு தொழிலாளி. சுத்தியலால் பெரிய கற்களை உடைத்து அவற்றை அள்ளிப் போடுகிறேன். அதனாலேயே இக்கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளன” என்றார். நபிகளார் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, அவரை அருகில் அழைத்து, அவர் கரங்களை முத்த மிட் டார்கள்.
நபிகளாரின் இந்த செயல்கள் நமக்குப் பல உண்மைகளை உணர்த்துகிறது.
* உழைக்கும் திறனுள்ளவர்கள் பிச்சை எடுப் பதை இழிவாகக் கருத வேண்டும். பிச்சை கேட்க வருபவர்களை உழைக்குமாறு தூண்ட வேண்டும்.
* உழைக்காமல் வழிபாடுகளில் ஈடுபடுவது எந்த வகையிலும் சிறந்ததல்ல. உழைக்க வேண்டிய நேரத்தில் உழைக்க வேண்டும். வணங்க வேண்டிய சமயத்தில் வணங்க வேண்டும்.
* உழைக்காதவர்கள், இம்மையிலும், மறுமையிலும் இழிநிலையை அடைவார்கள்.
* தவறான முறையில் பொருளீட்டுவதைத் தவிர, எந்தத் தொழிலும் இழிவானதல்ல.
* கடின உழைப்பைப் போற்றவும், மதிக்கவும் வேண்டும்.
தனி மனிதனின் உயர்வுக்கும், ஒரு நாட்டின் உயர்வுக்கும் உழைப்பே மூலதனம். இயற்கை வளம் இல்லாத பல நாடுகள், மனித வளத்தின் மூலமாக முன்னேற்றம் கண்டுள்ளன. மாறாக இயற்கை எல்லா வளங்களை அருளியிருந்தும், மனித வளம் இல்லாமையால் பல நாடுகள் பின் தங்கியுள்ளன. நாம் எத்தனை பொருளாதாரத் திட்டங்களைத் தீட்டினாலும், மக்களிடையே நேர்மை, கடின உழைப்பு, பணித்திறன் இல்லையாயின் பெரிய மாற்றம் எதுவும் நிகழாது.
உழைப்பின் மேன்மை குறித்து, நபிகளார் கூறிய கருத்துகள்:
* தமது கரங்களால் உழைத்து பெற்ற செல் வத்தில் இருந்து உண்ணுவதை விட சிறந்த உணவு எதுவும் இல்லை. ( நூல்: புகாரி)
* எவரிடத்திலும், எதற்காகவும் கையேந்துவதில்லை என்ற உறுதிமொழியை எவரேனும் எனக்கு அளித்தால், நான் அவர் சொர்க்கம் செல்வதற்கான உறுதிமொழியை அளிக்கிறேன். (நூல்: அபூ தாவூத்)
* வசதி படைத்தோரும், உடல் வலிமை உள்ளோரும் தர்மம் பெற அனுமதியில்லை.
- டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத்
ஒவ்வொரு பொருளின் மேன்மையைக் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்தவும் விவரிக்கவும் இறை வசனங்களை மட்டுமல்ல, அதனைப் பின்பற்றும் இறைத்தூதரையும் இறைவன் நமக்கு அருளினான்.
[06:37, 1/8/2018] Asif Meeran: இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியார் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடம், அவர்களின் அறையில் தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் அதிக நேரம் தங்கிவிடுவார்கள். இதைப் பிடிக்காத நபியவர்களுடைய மற்ற துணைவியரான ஆயிஷா(ரலி) அவர்களும், ஹஃப்ஸா(ரலி) அவர்களும் நபிகளாரின் மற்ற மனைவிகளுடன் கூடிப் பேசி ஒரு முடிவு செய்துகொண்டனர்.
தேன் சாப்பிட்ட பின், நபி(ஸல்) அவர்கள் முதலில் யாருடைய வீட்டிற்கு வந்தாலும் சரி, அவர் மீது துர்வாடை வருகிறது என்று கூற வேண்டுமென்று பேசிக் கொண்டனர்.
வழக்கம் போல் ஸைனபின் வீட்டிலிருந்து தேன் சாப்பிட்டுவிட்டு, நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்தபோது அவர்கள் பேசி வைத்திருந்தபடி, “நீங்கள் கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? உங்களிடமிருந்து, பிசினின் துர்வாடை வருகிறதே” என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “இல்லை நான் பிசின் சாப்பிடவில்லை.
ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் அவரின் அறையில் தேன் குடித்து விட்டுத்தானே வந்தேன்” என்றார்கள். அதற்கு ஆயிஷா(ரலி), “இதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்துவிட்டு, தேனை உறிஞ்சிக் கொண்டு வந்திருக்கலாம். எனவேதான் வாடை வருகிறது” என்று உறுதி செய்யும் விதமாகப் பேசினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் “இனிமேல், சத்தியமாக நான் அதை ஒருபோதும் குடிக்கமாட்டேன்” என்று கூறிவிட்டார்கள்.
இது குறித்தொரு இறை வசனம் அருளப்பெற்றது, “நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்கக் கிருபையுடையவன்” என்று தொடங்கி “நீங்கள் இருவரும் - இதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அது உங்களுக்கே நன்று” என முடியும் (திருக்குர்ஆன் 66:1-4) வசனங்களை அல்லாஹ் அருளினான்.
நபி(ஸல்) அவர்களுக்கு உண்மை தெரிந்தது. இது பற்றி நபி(ஸல்) தம் மனைவிகளிடம் வினவ, “உங்களுக்கு இதைத் தெரிவித்தவர் யார்?” என்று அவர்கள் நபிகளாரிடம் கேட்டபோது “யாவற்றையும் நன்கறிந்தோனும் உணர்ந்தோனும் ஆகிய அல்லாஹ் எனக்குத் தெரிவித்தான்” என்று பதில் கூறினார்கள் நபி(ஸல்). இதற்காக ஆயிஷா மற்றும் ஹப்ஸாவை அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரும்படியும் சொன்னார்கள்.
தேனின் மேன்மையைக் குறித்து மற்றொரு இறை வசனத்தில் “நீ எல்லாவிதமான கனிகளின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் காட்டித் தரும் எளிதான வழிகளில் உன் கூட்டுக்குள் ஒடுங்கிச் செல்” என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான். அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் அதாவது தேன் வெளியாகிறது; அதில் மனிதர்களுக்குப் பிணி தீர்க்க வல்ல சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது” என்றும் அருளப்பெற்றது.
ஒவ்வொரு பொருளின் மேன்மையைக் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்தவும் விவரிக்கவும் இறை வசனங்களை மட்டுமல்ல, அதனைப் பின்பற்றும் இறைத்தூதரையும் இறைவன் நமக்கு அருளினான்.
ஸஹீஹ் புகாரி: 5:65:4912, 6:68:5267, திருக்குர்ஆன் 66:1, 16:69
- ஜெஸிலா பானு.
‘யாருக்குமே தெரியாத விஷயத்தைப் பற்றி இவருக்குத் தெரிகிறது என்றால் நிச்சயமாக இவர் அல்லாஹ்வின் தூதர்தான்’ என்று அறிந்து கொண்டார் அதீ இப்னு ஹாதிம்.
நபி முஹம்மது (ஸல்) அவர்களின் தோழர்கள் ‘ஹாத்திம்’ குடும்பத்தினரிடம் சண்டையிட்டு நிறையக் கால்நடைகளைக் கைப்பற்றி அவர்களில் பலரைக் கைது செய்தனர். அங்கு, 'தய்ம்' கிளையினரின் தலைவராக இருந்த அதீ இப்னு ஹாதிம் தப்பித்து ஷாம் நாட்டை அதாவது சிரியாவை நோக்கி ஓடிவிட்டார்.
அவருடைய சகோதரி நபி(ஸல்) அவர்களைச் சந்தித்துப் பேசியபோது, நபி(ஸல்) அவர்களின் நற்பண்புகள் அவருக்கு விளங்கியதால், அப்பெண்மணி தனது சகோதரரைச் சந்திக்க நபி(ஸல்) அவர்களிடமே வாகனத்தை ஏற்பாடு செய்து தரும்படி கேட்டார். நபி(ஸல்) அவர்களும் ஏற்பாடு செய்து தந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் பெருந்தன்மையைப் பற்றி, தமது சகோதரர் அதீ இப்னு ஹாதிமுக்கு விளக்கினார்.
அவரும் எந்தப் பாதுகாப்புமின்றித் தனியாகத் துணிவுடன் நபியவர்களைச் சந்திக்க வந்தார். நபி(ஸல்) அவர்களை நபியின் இல்லத்திலேயே வந்து சந்தித்தார். அவருடைய அருகில் அமர்ந்த நபி(ஸல்) அவர்கள் அவர்தான் அதீ என்பதை அறிந்துக் கொண்டார்கள். அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு தமது பேச்சைத் தொடங்கினார்கள்.
“அதீய்யே! நீ இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாமல் ஓடுவதற்குரிய காரணம் என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு அதீ, “நானும் ஒரு மார்க்கத்தைப் பின்பற்றுபவன்தான்” என்று பதிலளித்தார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “லா இலாஹ் இல்லல்லாஹ் – வழிப்பாட்டிற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று கூறுவதற்குப் பயந்தா நீ ஓடிவிட்டாய்? உனது மார்க்கத்தை உன்னைவிட நான் நன்கறிவேன்” என்று சொல்லிவிட்டு, “நீ ‘ரகூஸி’யாக இருப்பவன் அல்லவா?” என்றார்கள். ரகூஸி என்பது கிறிஸ்தவம் மற்றும் நட்சத்திரங்களை வணங்குபவர்கள்.
‘தம்மைப் பற்றி இவருக்குத் தெரிகிறதே’ என்ற ஆச்சர்யப்பட்டார் அதீ இப்னு ஹாதிம். தொடர்ந்து நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ்வைத் தவிர வேறோர் இறைவன் இருக்கிறான் என்று உன் அறிவுக்கு எட்டுகிறதா?” என்றும், “உமது கூட்டத்தினருக்குச் சொந்தமான கனீமா (போரில் கிடைத்த பொருட்கள்) பொருட்களின் 1/4 பங்கை அனுபவித்து வந்தீர்கள் அல்லவா? உமது இந்தச் செயல் உமது மார்க்கத்தில் ஆகுமானதில்லையே?” என்றும் வினவினார்கள்.
‘யாருக்குமே தெரியாத விஷயத்தைப் பற்றி இவருக்குத் தெரிகிறது என்றால் நிச்சயமாக இவர் அல்லாஹ்வின் தூதர்தான்’ என்று அறிந்து கொண்டார் அதீ இப்னு ஹாதிம்.
தன் முன்பு இருப்பது இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) என்பதை உணர்ந்தவராக அதீ, “நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை. வழிப்பாட்டிற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை” என்று சொல்லி ஓர் இறைக் கொள்கையான இஸ்லாமில் மனமுவந்து இணைந்தார்.
ஆதாரம்: இப்னு ஹிஷாம், முஸ்னது அஹ்மத், அர்ரஹீக் அல்மக்தூம்
- ஜெஸிலா பானு.
அல்லாஹ் நம்மை கொடுக்கின்ற நிலையில் வைத்திருக்கின்றான். கொடுப்பதற்கான நல்ல மனதை தந்திருக்கின்றான். அவர்களுக்குரிய வாழ்வாதாரத்தையும் நம்மிடமே தந்து வழங்கச் சொல்கிறான்.
பல ஏற்ற தாழ்வுகள் நிறைந்தது தான் இந்த சமூகம். பணத்திலும், ஈகை குணத்திலும் மாறுபட்ட மனம் கொண்டவர்களாக மனிதர்கள் உள்ளனர். இருந்தாலும், அவை எல்லாம் குறிப்பிட்ட வர்களால் உணரப்படாமல் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்கின்ற ஓர் உன்னத வாழ்வுமுறையை இறைவன் ஏற்படுத்தியுள்ளான்.
விவசாயி இல்லை என்றால் மனிதன் உணவுக்கு எங்கே செல்வான்? தொழிலாளி இல்லை என்றால் உபகரணங்களுக்கு எங்கே செல்வான்? உணவையோ, உபகரணத்தையோ வாங்குவதற்கு ஒருவன் இல்லை என்றால், விவசாயி, தொழிலாளி வாழ்வாதாரம் செழிப்பது எப்படி?. இவ்வாறு ஒருவரை ஒருவர், ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் முறையில் இந்த உலகை படைத்துள்ளான் இறைவன்.
அல்லாஹ்வும் தன் திருமறையில் சொல்கின்றான்: ‘வானங்கள், பூமியின் பொக்கிஷங்களின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவன் விரும்பியவர்களுக்கு உணவை விரிவாக்குகிறான். அவன் விரும்பியவர்களுக்கு சுருக்கி விடுகின்றான். நிச்சயமாக அவன் சகல வஸ்துகளையும், மக்களின் தன்மைகளையும் நன்கறிந்தவன். ஆகவே அவர்களின் தகுதிக்கு தக்கவாறு கொடுக் கிறான்’. (42:12)
‘மனிதனின் தகுதியையும் தன்மையையும் அறிந்து கொடுக்கின்றேன்’ என்று சொல்வதன் மூலம் தன் அடியானுக்கு கொடுப்பதை தன் வசம் தான் அல்லாஹ் வைத்துள்ளான் என்பது நிரூபணம் ஆகிறது.
சகோதர, சகோதரிகளுக்கோ அல்லது பிற உறவுகளுக்கோ நாம் ஏதாவது உதவி செய்கிறோம் என்றால், அதற்கு நம்மை பொறுப்பேற்கச் செய்த அல்லாஹ்விற்கே நன்றி செலுத்த வேண்டும். அந்த சமயங்களில் நாம் உதவி செய்கிறோம் என்ற மமதையில் அவர்கள் மனம் வருந்தும் வகையில் எந்தவித வார்த்தைகளையும் சொல்லக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
ஆனால் அந்த உயர்ந்த அந்தஸ்தை உணர்ந்து கொள்ளாதவன், ‘நான் தான் உதவி செய்கிறேன். என்னால் தான் இந்த காரியம் நிறைவேறுகிறது’ என்று பிறரை இகழ்வாய் நினைத்தால், அல்லாஹ் அவனைக் கொண்டு நாடிய அந்த நன்மையை நிறுத்தி விடுவான்.
காரணம், அது உன்னால் கொடுக்கப்பட்டது அல்ல. உன் தேவைக்குப் போக, உன்னைச் சார்ந்த பிறரின் தேவையையும் உன்னுடைய அருளில் சேர்த்தே வழங்கியதை நீ அறிந்திருக்கவில்லை. நீ இல்லை என்றால் கூட இன்னொருவரைக் கொண்டு அவனுக்கு வழங்க வேண்டியதை வழங்க கூடிய வல்லமை பெற்றவன் அல்லாஹ்.
உறவினர்களோடு உரையாடும் சந்தர்ப்பத்தில், அது பிடிக்காத காரணத்தால் ஸஹத் இப்னு அபி வக்காஸ் (ரலி) என்ற நபித்தோழரின் வார்த்தைகளும் சற்று தடம்புரண்டு விட்டது. இதனை அறிந்த நபியவர்கள், அவர்களைக் கூப்பிட்டு கடிந்து கொண்ட வரலாறு உண்டு.
ஒருவன் உதவி கேட்டு உங்களிடம் வருகிறான் என்றால் அதற்கான ஏற்பாட்டை அல்லாஹ் ஏற்கனவே உங்கள் மூலம் செய்து விட்டான் என்பது தான் பொருள். உங்களின் அந்த கடமையை நிறைவேற்ற உதவி செய்வதற்காகத் தான் அவன் நம்மிடம் வருகிறான் என்று நம்பி நிறைவாய் நன்மையைச் செய்ய வேண்டும். மேலும் நமது கடமையை நிறைவேற்ற உதவி செய்த அவனுக்கும் அல்லாஹ்விற்கும் நன்றி செலுத்த வேண்டும். அது நம்பிக்கையாளர்களின் அடையாளங்களில் ஒன்று.
நபித்தோழர் அபூபக்கர் சீத்தீக் (ரலி) அவர்கள் தங்களின் உறவினர்கள் பலருக்கு பல ஆண்டுகாலமாக உதவிகளைச் செய்து வந்தார்கள். அவர்களில் மிஸ்த்தா என்பவர் ஒரு சந்தர்ப்பத்தில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி ஒரு தவறான செய்தியை பரப்புவதில் முன்னிலை பெற்றிருந்தார். இந்த காரணத்தில் அவர் மீது கோபம் கொண்டு, ‘நான் உனக்கு செய்யும் உதவியை இன்றோடு நிறுத்திவிடுவேன்’ என்று சொல்லி விட்டார்கள். அவர்களின் அந்த செயலை அல்லாஹ் விரும்பாத காரணத்தால் அவர்களை கண்டித்து திருமறையில் ஒரு வசனத்தை இறக்கி விட்டான்.
“உங்களில் செல்வந்தரும், பிறருக்கு உதவி செய்ய இயல்புடையவரும் தங்கள் பந்துக்களுக்கோ, ஏழைகளுக்கோ அல்லாஹ்வுடைய பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ தர்மம் கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். அவர்களால் உங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால் அதை நீங்கள் மன்னித்து புறக்கணித்து விடவும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவன் கருணையுடையவன் ஆவான்” (24:22)
சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் என்று நன்மாராயம் சொல்லப்பட்ட நபித்தோழர்களையே இது போன்ற சந்தர்ப்பங்களில் கடிந்து கொள்ளும் அல்லாஹ், நாம் அனாவசியமாய் தரம் தாழ்ந்து உறவினர்களைப் பழிப்பதை எப்படி ஏற்றுக்கொள்வான்? எனவே நம் போன்றவர்களுக்கு அருள்மறையின் மூலம் ஒரு செய்தியைச் சொல்கிறான்.
‘தர்மம் செய்து அதை வாங்கியவனுக்கு துன்பம் தொடரும் படியாகச் செய்யும் தர்மத்தை விட, அன்புடன் சொல்லும் இனிய சொல்லும், மன்னிப்பும் மிக்க மேலானதாகும். அல்லாஹ் எத் தேவையும் அற்றவன்மிக்க பொறுமையாளன் ஆவான்’ (2:263).
அல்லாஹ் நம்மை கொடுக்கின்ற நிலையில் வைத்திருக்கின்றான். கொடுப்பதற்கான நல்ல மனதை தந்திருக்கின்றான். அவர்களுக்குரிய வாழ்வாதாரத்தையும் நம்மிடமே தந்து வழங்கச் சொல்கிறான். இப்படிப்பட்ட நல்ல நிலையில் பொருந்திக் கொண்ட அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி, அந்த நன்மையின் காரணமாக பாவமன்னிப்பு கோரியவர்களாக அல்லாஹ்விடம் சரணடைய வேண்டும். இதை விட்டுவிட்டு ‘நாம் கொடுக்கிறோம்’ என்ற காரணத்தால் பிறரை தாழ்வாக எண்ணி இகழ்வதையோ, ‘என்னால் தான் எல்லாம் உனக்கு கிடைக்கிறது’ என்று தன் இறுமாப்பையோ அவர்களிடம் காட்டுவது தவறானது. அதனை தவிர்க்க வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ், நம் எல்லோருக்கும் அத்தகைய நல்ல குணத்தை தர கிருபை செய்வானாக, ஆமீன்.
எம். முஹம்மது யூசுப். உடன்குடி.
இந்த உலகின் செல்வம் இனிமையானதாகும். இதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செலவிடுகிறவருக்கு அது நல்லுதவியாக அமையும்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஹுனைன் போரிலிருந்து திரும்பி வந்தபோது சில கிராம மக்கள் நபியவர்களைச் சூழ்ந்து தர்மம் கேட்கலானார்கள். ஒரு கருவேல முள் மரம் வரை நபி(ஸல்) அவர்களை நெருக்கித் தள்ளிவிட்டார்கள். நபியவர்களின் சால்வை முள்மரத்தில் சிக்கிக் கொண்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் “என் சால்வையை என்னிடம் கொடுத்துவிடுங்கள். இந்த முள் மரங்களின் எண்ணிக்கையில் ஒட்டகங்கள் இருந்திருந்தாலும் அவற்றை நான் உங்களிடையேதானே பங்கிட்டிருப்பேன். பிறகு நீங்கள் என்னைக் கருமியாக, பொய்யனாக, கோழையாகக் காணமாட்டீர்கள்” என்று சொன்னதும் கிராமத்து மக்கள் விலகிச் சென்றனர்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு சில மக்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கி அதிகமாகப் போரின் பங்குப் பொருட்களைப் பிரித்துத் தந்ததாக மதீனாவாசிகள் பேசிக் கொண்டனர். இவ்விஷயம் நபி(ஸல்) அவர்களின் காதுகளுக்கு எட்டியது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீதியுடன் நடந்து கொள்ளாவிட்டால் வேறு யார் தான் நீதியுடன் நடந்து கொள்வார்கள்? மூஸா நபியும் இத்தகைய மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள்.
அவர்களைப் போல் நானும் சகித்துக் கொள்கிறேன்” என்று சொல்லி நபி(ஸல்) அவர்களைப் பற்றித் தவறாகப் பேசிய அன்சாரிகளில் சிலரை ஒன்றுகூட்டி, தமது அரசியலை விளக்கினார்கள் நபி(ஸல்). “குறைஷிகள், அறியாமைக் கொள்கையை இப்போதுதான் கைவிட்டுப் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்கள். இஸ்லாத்தை ஏற்றதால் அவர்களுக்கு நேரும் சோதனைகளுக்கு அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், இஸ்லாத்துடன் அவர்களுக்கு இணக்கத்தை ஏற்படுத்தவும் விரும்பினேன்.
அதனாலேயே புதிதாக இஸ்லாமைத் தழுவிய குறைஷித் தலைவர்களுக்கும் ஏனைய குறைஷிகளுக்கும் அதிகமாக வாரி வழங்கினேன். அவர்கள் உலகச் செல்வத்தைப் பெற்றுக் கொண்டு திரும்பிச் செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதருடனேயே உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதை நீங்கள் விரும்ப வில்லையா?" என்று கேட்டார்கள். "ஆம் அதைத் தான் விரும்புகிறோம்" என்று நபி(ஸல்) அவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அன்சாரிகள் பதிலளித்தனர்.
வேறொருநாள் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையில் அமர்ந்திருந்தபோது, “நபியே! உலகச் செல்வங்கள் நமக்கு நன்மை தீமையை உருவாக்குமா?” என்று கூட்டத்திலிருந்த ஒருவர் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் “நன்மையால் நன்மையே விளையும். இந்த உலகின் செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும்.
வாய்க்கால் மூலம் விளைகின்ற பயிர்கள் ஒவ்வொன்றும் கால்நடைகளை, வயிறு புடைக்கத் தின்னவைத்துக் கொன்று விடுகின்றன அல்லது கொல்லும் அளவுக்குச் சென்றுவிடுகின்றன. மாறாக, பசுமையான புல்லைத் தின்னும் கால்நடைகள் மடிவதில்லை. ஏனெனில், அவை புல்லைத் தின்று வயிறு நிரம்பிவிடும்போது சூரியனை நோக்கிப் படுத்துக் கொண்டு அசை போடுகின்றன. இதனால் நன்கு சீரணமாகி சாணமும் சிறுநீரும் வெளியேறுகின்றன.
பின்னர் வயிறு காலியானவுடன் மறுபடியும் சென்று மேய்கின்றன. இந்த உலகின் செல்வம் இனிமையானதாகும். இதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செலவிடுகிறவருக்கு அது நல்லுதவியாக அமையும். இதை முறையற்ற வழிகளில் சம்பாதிக்கிறவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார்” என்று உதாரணத்துடன் மக்களுக்குப் புரிகின்ற வகையில் விளக்கினார்கள்.
ஸஹீஹ் புகாரி 3:56:2821, 3:57:3150, 4:64:4334, 7:81:6427
-ஜெஸிலா பானு.
‘மனைவிக் குச் சிறந்தவனே மனிதனில் சிறந்தவன். நான் என் மனைவிக்குச் சிறந்தவனாக இருக்கிறேன்’ என்று கூறினார்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
‘மனைவிக் குச் சிறந்தவனே மனிதனில் சிறந்தவன். நான் என் மனைவிக்குச் சிறந்தவனாக இருக்கிறேன்’ என்று கூறினார்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். நமக்குத் தூரமானவர்களிடம் இருந்து எளிதில் நாம் நல்ல பெயர் வாங்கி விடுகிறோம். அவர்கள் நமது திறமை, ஆற்றல், செல்வம், பதவி ஆகியவற்றை வைத்து நம்மை எடை போடுகிறார்கள்.
எனவே அவர்களிடம் நல்ல பெயர் வாங்குவது ஒன்றும் அவ்வளவு கடினமானதல்ல. ஆனால் நமக்கு நெருக்கமானவர்கள் தான் நம்மைப் பற்றி நன்கு அறிவார்கள். நமது நிறைகளையும் குறைகளையும் தெளிவாக அறிந்தவர்கள். நமது கணவன், மனைவி, பிள்ளை, பெற்றோர், உறவினர், அண்டை வீட்டினர், நண்பர்கள் தரும் சான்றிதழே உண்மையானது. ஊர் மக்கள் மெச்சும்படியாக வாழ்வது இருக்கட்டும்; உன் மனைவி மெச்சும்படியாக வாழ்ந்து காட்டுவதே சிறப்பு மிக்கதாகும்.
நபிகள் நாயகம் அவர்கள் தனது 25-வது வயதில் தன்னை விட 15 வயது மூத்த கதீஜா என்ற பெண்மணியை மணந்து அப்பெண் இறக்கும் வரை, 25 ஆண்டு காலம் இனிமையான இல்லற வாழ்க்கை நடத்தினார்கள். கதீஜா இறந்து பல ஆண்டுகள் ஆகியும் அவரின் நினைவாகவே இருந்தார்கள். கதீஜாவுக்குப் பிறகு நபிகளார் ஆயிஷா என்ற பெண்ணை மண முடித்தார்கள். ஆயிஷாவிடத்திலும், தனது பழைய மனைவியைப் பற்றி எப்பொழுதும் புகழ்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள்.
ஒருமுறை ஆயிஷா, “எப்போதோ இறந்து விட்ட, பல் விழுந்த அந்தக் கிழவியை இன்னும் நினைவு வைத்திருக்கிறீர்களே, இறைவன் உங்களுக்கு அவரை விட சிறந்த மனைவியை தரவில்லையா?” என்று கேட்டார். இதனைக் கேட்ட நபிகள் நாயகத்தின் முகம் கவலையில் ஆழ்ந்தது. “இறைவன் அவரை விட சிறந்த மனைவியை எனக்குத் தரவில்லை. நான் போதித்த மார்க்கத்தை மக்கள் ஏற்க மறுத்தபோது அவள் ஏற்றுக் கொண்டாள். மற்றவர்கள் என்னைப் பொய்யன் என்று சொன்னபோது, அவள் என்னை நம்பினாள்.
மக்கள் எனக்கு ஆதரவு தர மறுத்தபோது, அவள் தனது செல்வத்தினால் ஆதரவு கரம் நீட்டினாள். இறைவன் அவள் மூலமாகவே எனக்குக் குழந்தைகளையும் தந்தான். இறைவன் மீது ஆணையாக அவளைப் புகழ்வதைத் தவிர வேறெதனையும் நான் கூற மாட்டேன்” என்றார்கள். நபிகளார் முன் கதீஜாவின் பெயர் கூறப்பட்டால் உடனே மனைவியைப் புகழ்ந்து பேச ஆரம்பித்து விடுவார். அதில் சோர்வடைய மாட்டார். அவருக்காக பிரார்த்தனையும் புரிவார்.
கதீஜா மரணமடைந்து 14 வருடங்களுக்குப் பிறகு நபிகளார், மக்காவை வெற்றி கொண்டார்கள். வெற்றி வீரராக மக்காவிற்குள் நுழைகிறார்கள். மக்காவில் தங்குவதற்கு அவர்களுக்கு தற்போது வீடில்லை. எதிரிகள் அவரது வீட்டை எடுத்துக் கொண்டார்கள். அதனால் இப்போது நபிகளாருக்கு ஒரு கூடாரம் தான் அமைக்க வேண்டும். “இறைத்தூதர் அவர்களே! நீங்கள் தங்குவதற்கு எங்கு கூடாரம் அமைக்க வேண்டும்?” என்று தோழர்கள் கேட்டனர். “கதீஜாவின் மண்ணறைக்குப் பக்கத்தில் எனக்குக் கூடாரம் அமையுங்கள். எனது கவலைகளில் அவர் பங்கு கொண்டதைப் போன்று எனது மகிழ்ச்சியிலும் பங்கு கொள்ளட்டும்” என்றார்கள்.
இறந்த பின்பும் தம் மனைவி மீது இத்தனை நேசம் செலுத்தும் ஒருவர், மனைவி உயிரோடு இருக்கும்போது எவ்வளவு நேசித்திருப்பார்?
“ஒரு இறைநம்பிக்கையாளன் இறை நம்பிக்கை கொண்ட தன் மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு குணம் அவனுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் அவளுடைய இன்னொரு குணம் அவனுக்குப் பிடிக்கலாம்” என்று நபிகளார் கூறினார்கள். இனிக்கும் இல்லறத்திற்கு இதைவிட சிறந்த அறிவுரை தேவையில்லை. மனைவி அழகு குறைந்தவளாக இருக்கலாம்; ஆனால் பண்பில் சிறந்தவளாகத் திகழலாம். மனைவி அறிவில் குறைந்தவளாக இருக்கலாம்.; ஆனால் அன்பு செலுத்துவதில் சிறந்தவளாகத் திகழலாம். இவ்வாறு ஒரு குறையை இன்னொரு நிறை சமப்படுத்தும். உலகில் எல்லாச் சிறப்புகளும் ஒருசேர அமையப் பெற்ற மனிதர் என்று ஒருவரும் கிடையாது. குறைகளும், நிறைகளும் அனைவரிடமும் உண்டு. இதைப் புரிந்து கொண்டால் இல்லறம் நல்லறமாகும்.
நபிகள் நாயகம் அரேபியாவின் அதிபதி; ஆன்மிகத் தலைவர்; படைத் தளபதி; நீதிபதி; மதபோதகர் எனப் பல பொறுப்புகளை வகித்தபோதும், வீட்டு வேலைகளில் தம் மனைவியருக்கு உதவியாக இருந்தார். வீட்டு வேலைகளில் பங்கேற்பார்; துணிமணிகளைத் தைப்பார்; பால் கறப்பார்; அவரே மனைவியருக்கு அதனை வழங்குவார்; துணிகளைக் கழுவுவார்; காலணிகளை செப்பனிடுவார். நபிகளார் வீட்டில் என்ன செய்வார் என்று அவர் மனைவி ஆயிஷாவிடம் கேட்டபோது, “வீட்டு வேலைகளில் மனைவியருக்கு உதவுவதில் ஆர்வமாக ஈடுபடுவார்; தொழுகைக்கான நேரம் வந்து விட்டால் உடனே புறப்பட்டு விடுவார்” என்று கூறினார். (நூல்: புகாரி)
இன்று பெண்களும் வேலைக்குச் செல்கின்ற சூழ்நிலையில் ஆண்கள், பெண்களுக்குத் துணை புரிந்தால் மனைவியின் சுமை குறைவதோடு, மண வாழ்க்கையும் இனிக்கும்.
இல்லறம் நல்லறமாக அமைய நபிகள் நாயகம் எவ்வாறு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள் என்பதைப் பார்த்தோம். அதோடு இல்லறம் இனிக்க நபிகளார் கூறிய வழிகாட்டுதல்களையும் காண்போம்.
* ஒருவரையொருவர் நேசிப்பதற்கு திருமணத்தை விட சிறந்த வழி எதுவுமில்லை. (நூல்: இப்னுமாஜா)
* ஒரு பெண், அவளது செல்வம், அழகு, குடும்பம், மார்க்கப் பற்று (ஒழுக்கம்) என நான்கு விஷயங்களுக்காக மண முடிக்கப்படுகிறாள். எனினும் மார்க்கப்பற்றுள்ள பெண்ணையே மணமுடித்து வெற்றி பெறுவீராக. (நூல்: புகாரி, முஸ்லிம்)
* எந்த ஆணின் மார்க்கப் பற்றையும் நற்பண்பையும் நீங்கள் விரும்புகின்றீர்களோ, அத்தகைய மனிதர் திருமண உறவு கேட்டு வந்தால் அவருக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக்கொடுத்து விடுங்கள். நீங்கள் இப்படிச் செய்யாவிடில் குழப்பமும் கேடும் விளையும். (நூல்: திர்மிதி)
* மனைவியின் வாயில் ஒரு கவளம் சோறு ஊட்டுவதும் ஒரு அறமே. (நூல்: புகாரி)
* கணவன் பார்க்கும்போது அவனை மகிழ்விப்பவள், கணவனுக்குக் கீழ்படிந்து நடப்பவள், தன் விஷயத்திலும், பொருளைச் செலவிடும் விஷயத்திலும் கணவனுக்கு விருப்பமில்லாத போக்கை மேற்கொள்ளாதவள் ஆகிய இப்பண்புகளை உடையவளே சிறந்த மனைவியாவாள். (நூல்: நஸாயி)
டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத்
நல்லோர்களைக் கண்டால் மலர்ந்த முகத்துடன் புன்முறுவல் பூப்பதும், தீயோரைக் கண்டால் முகம் சுளிப்பதும் நமது உணர்வுகளை நாம் கட்டுப்பாட்டிற்குள் தான் வைத்திருக்கிறோம் என்பதற்கு நல்லடையாளம்.
மனமகிழ்ச்சியின் மறுஅடையாளம் தான் நமது புன்சிரிப்பு. எப்போதுமே நாம் ‘உம்’ என்ற முகத்துடன் சும்மா இருப்பதை எவர்தான் விரும்புவார்.?
இதனால் தான் ‘மலர்ந்த முகத்துடன் ஒருவரை நீங்கள் வரவேற்பது தர்மச் செயல்’ என்று கூறுகிறது இஸ்லாம்.
நமது சிரிப்புகளில் ஆனந்தச்சிரிப்பு, ஆணவச் சிரிப்பு, அகங்காரச் சிரிப்பு, அநியாயச் சிரிப்பு, அட்டகாசச் சிரிப்பு, ஏளனச் சிரிப்பு, எகத்தாளச் சிரிப்பு, ஏமாளிச் சிரிப்பு, ஏமாற்றுச் சிரிப்பு, வஞ்சகச் சிரிப்பு, வைராக்கியச் சிரிப்பு என தான் எத்தனை எத்தனை வகை? அத்தனையிலும் இந்த மென்சிரிப்பான புன்சிரிப்புக்கு ஈடுஇணை இல்லை.
‘நீங்கள் குறைவாகச் சிரியுங்கள்; அதிகமாக அழுங்கள்’ என்று திருக்குர்ஆன் கூறுவதிலிருந்தே சின்னஞ்சிறிய சிரிப்பு, அது புன்னகைச் சிரிப்புதான் என்று எவரும் எளிதில் புரிந்துகொள்ளலாம். புன்னகையை அரபி மொழியில் ‘தபஸ்ஸும்’ என்பார்கள். இச்சொல் திருக்குர்ஆனிலும் இடம்பெற்றிருக்கிறது.
இப்பேருலகை ஆண்ட அரசர்களில், பேரறிவாளரான சுலைமான் நபியும் ஒருவர். ஒருமுறை அவர் தமது படைகளுடன் சென்று கொண்டிருந்த போது, பாதையின் குறுக்கே ராணி எறும்பு பேசியதைக் குறித்து திருக்குர்ஆன் கூறுகிறது இப்படி:
“இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) ‘எறும்புகளே, நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; சுலைமானும் அவருடைய படைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கிவிடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)’ என்று கூறிற்று. அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், ‘என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள்புரிவாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக’ என்று பிரார்த்தித்தார்”. (27:18,19)
எறும்புகள் முன்னெச்சரிக்கை விடுத்ததை செவியுற்ற சுலைமான் நபி புன்னகைத்துச் சிரித்தார் என்றும், அந்நேரத்தில் நல்லதொரு பிரார்த்தனை ஒன்றையும் செவ்வனே செய்து கொண்டார் என்றும் குர்ஆன் கோடிட்டுக்காட்டிச் செல் கிறது.
எனவே, புன்முறுவல் என்பது எவருக்கும் விதிவிலக்கான ஒன்றல்ல. எந்தவொரு அற்புதங்களை காணும் போதும், அந்த இறைவனின் அற்புதப் படைப்புகளை அதன் ஆற்றல்களைக் கண்டு சற்று பிரமிக்கும் வேளையில் கொஞ்சம் புன்முறுவலை அங்கே சிந்தித்துச் சிந்துவதும் வரவேற்கத்தக்கதே. கூடவே மனமகிழ்ச்சியுடன் உள்ள அந்த ஒரு நல்ல நேரத்தை பெரும்வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு இறைவனிடத்தில் பிரார்த்தனையும் செய்து கொள்ளவும் வேண்டும்.
இறுக்கமான வறுவல் முகத்தை நமது புன்முறுவல் சிரிப்புத் தான் மென்மைப் படுத்தியும், மேன்மைப் படுத்தியும் வைக்கும் என்றால் அது மிகையல்ல.
நமது வாழ்வாதாரமான வியாபாரத்தை விரிவுபடுத் திக் கொள்ளவும், நமது வாடிக்கையாளர்களை வசப்படுத்திக் கொள்ளவும் பெரிதும் துணைபுரிவது இந்த புன்னகை தான். வணிக நுணுக்கங்களிலும், நுண் வணிகங்களிலும் இப்புன்னகை தான் பெரும் பங்கு வகிக்கிறது என்று புள்ளி விவரங்கள் பல புலப்படுத்துகின்றன.
புன்னகையற்றவர்களால் நிச்சயம் பொன்னகைகளை சம்பாதிக்க முடியாது. இது வணிகத்திற்கு மட்டும் அல்ல, நமது அன்றாட வாழ்க்கைக்கும் கூட மிகச் சரியாகவே பொருந்தும். ஆம், எந்த ஒரு நேர்முகச்சந்திப்பு அறிமுகமும் அந்த ஒரு ஒற்றைப் புன்சிரிப்பில் தானே அடியெடுத்து வைக்கிறது.
‘நபிகள் நாயகம் அவர்கள் அதிகமதிகம் புன்முறுவல் பூப்பவர்களாக இருந்தார்கள்’ என்று அவர்களது வாழ்வியல் வரலாறு கூறுவதிலிருந்தே அவர்கள் தங்களது இறுதி 23 ஆண்டுகளுக்குள் லட்சக்கணக்கான தோழர்களை எப்படிப்பெற்றார்கள் என்று அறிய முடிகிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அது இப்புன்னகை வழியாகத்தான் தெரியும் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?. இருவேறு கூறாக உடைந்து நொறுங்கிப் போன இருவேறு உள்ளங்களை உடனடியாக ஒன்றிணைப்பதற்கு ஒரே ஒரு ஒற்றைச் சிரிப்பு மட்டும் நமக்கு போதுமல்லவா?.
நமது இதயங்களைப் புண்படுத்தும் ‘புண்சிரிப்பு’ நமக்கு கூடாதே தவிர நமது இதயங்களை பண்டுத்தும் ‘புன்சிரிப்பு’ நமக்கு என்றைக்குமே மிகமிக அவசியமான ஒன்றுதான்.
இதனால் தான் ‘உன் நண்பனைச் சந்திக்கும் போது, நீ புன்முறுவல் பூப்பது ஒரு தர்மம்’ என்றார்கள் நபிகள் நாயகம் அவர்கள். ‘தர்மம் தலைகாக்கும்’ என்பது உண்மையானால், இந்தப் புன்னகையும் கூட நிச்சயம் உயிர்காக்கும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. தர்மம் அது ஒரு புன்னகையாகக் கூட இருக்கலாம் என்று எவ்வளவு எளிமைப்படுத்திச் சொல்லிச்சென்றிருக்கிறார்கள் நமது நபிகள் நாயகம் அவர்கள்.
ஆனால் இன்றைக்கு நம்மில் பலரிடம் அந்த புன்னகை தர்மம் இருக்கிறதா என்ன? அல்லது தர்மம் செய்யும் போதாவது ஒரு துளி புன்னகை அவர் முகத்தில் இருக்கிறதா என்ன?
இரண்டுமே இன்றைக்கு இல்லை என்பது தான் வருத்தத்திற்குரியது.
‘நீங்கள் தர்மம் செய்யும் போது சற்று புன்னகையுடன் தர்மம் செய்யுங்கள். இல்லையெனில், புன்னகையைக் கூட தர்மம் செய்யத் தயங்காதீர்கள்’ என்று நபிகளார் சொல்வது கூர்ந்து கவனிக்கத்தக்கது.
மனிதன் தன்னுடல் எங்கும் அணியும் தங்க, வெள்ளி நகைகளை விட அவன் தன் முகத்தில் அணியும் அந்த ஒரு புன்னகைக்கு அதிக ஆற்றலுண்டு. பொன்னகைக்கு மயங்காதவர்கள் கூட இந்தப் புன்னகைக்கு நிச்சயம் மயங்குவார்கள்.
சிரிப்பு கூட சில சமயம் பொய்த்துப் போய்விடலாம். ஆனால், இதழோரம் கசியும் அந்த ஒரு சிறுபுன்னகை என்றைக்கும் பொய்ப்பதே இல்லை. எனவே தான் நம் இறைத்தூதரின் இனிய வழியான இந்தப்புன்னகையை நீங்கள் விட்டு விடாது என்றென்றைக்கும் ஏற்று நடங்கள் என்கிறது மனித நேயம் போற்றும் புனித இஸ்லாம்.
இப்புன்னகை வழியாக இன்னொரு செய்தியையும் நபிகளார் நமக்கு உணர்த்திச் செல்கிறார்கள் இப்படி:
‘புன்னகை என்பது அதுவொரு அன்பின் வெளிப்பாடு, பாச உணர்வின் ஊற்று. இப்படிப்பட்ட இனிமையான இந்த நல்லுணர்வுகளை நாம் மிகச்சரியாக நமது ஆளுகையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். நல்லோர்களைக் கண்டால் மலர்ந்த முகத்துடன் புன்முறுவல் பூப்பதும், தீயோரைக் கண்டால் முகம் சுளிப்பதும் நமது உணர்வுகளை நாம் கட்டுப்பாட்டிற்குள் தான் வைத்திருக்கிறோம் என்பதற்கு நல்லடையாளம். அதை நாம் என்றும் இழந்து விடக்கூடாது. ஒரு மனிதனின் நல்லிலக்கணமும் அதுதானே!
வாருங்கள், புன்னகையை போற்றுவோம்!
வன்னகையை மாற்றுவோம்!
மவுலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
நல்ல வீடும், நல்ல வாகனமும் இருந்தால் மட்டும் போதாது. நல்ல அண்டை வீட்டுக்காரரும் அமைதியான வாழ்விற்கு அவசியம் தேவை.
ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர், தனது அண்டை வீட்டார் தனக்குத் தொல்லை தருவதாக முறையீடு செய்தார். ‘பொறுமையாக இருங்கள்’ என்று கூறி அவரை அனுப்பி வைத்தார்கள். நபிகளாரின் அறிவுரைக்கேற்ப அவர் பொறுமை காத்தார். ஆனால் தொல்லை தொடரவே செய்தது. அவர் மீண்டும் நபிகளாரிடம் முறையிட்டார். பொறுமையாக இருக்கும்படி அவருக்கு மீண்டும் அறிவுரை வழங்கினார்கள். இவ்வாறு பலமுறை அவர் முறையீடு செய்த வேளைகளில் பொறுமை காக்கும்படியே கூறி வந்தார்கள். இறுதியில் அவர், ‘இறைத்தூதர் அவர்களே! தொல்லை அதிகரித்துக் கொண்டே போகிறதே ஒழிய குறைந்த மாதிரி தெரியவில்லையே’ என்றார்.
‘தோழரே! அப்படியானால் உன்னுடைய வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் வெளியே எடுத்துப் போட்டு தெருவில் அமர்ந்து கொள்’ என்று நபிகளார் கூறினார்கள். அவரும் அவ்வாறே செய்தார்.
வருவோர் போவோரெல்லாம் என்னவென்று விசாரிக்கத் தொடங்கினார்கள். அவர் நடந்தவற்றைச் சொன்னார். அதனைக் கேட்ட மக்கள், அவருக்குத் தொல்லை கொடுத்த அந்த நபரை ஏசவும், சபிக்கவும் செய்தார்கள். இதைக் கேட்ட அந்த நபர் நபிகளாரிடம் ஓடோடிச் சென்று நடந்ததைச் சொல்கிறார். அவர் தனது அண்டை வீட்டாருக்குக் கொடுத்த தொல்லைகளை நபிகளார் கண்டித்தார்கள். ‘அண்டை வீட்டினரிடம் நீ நடந்து கொண்ட முறை கண்டு மக்கள் சபிக்குமுன் இறைவனும் உன்னைச் சபிக்கிறான்’ என்று கூறினார்கள்.
உடனே அவர், ‘இறைத்தூதர் அவர்களே! இனி ஒருபோதும் நான் அண்டை வீட்டினருக்கு நோவினை செய்ய மாட்டேன்’ என்றார்.
பாதிக்கப்பட்ட மனிதரை நபிகளார் அழைத்து, ‘பொருட்களை உள்ளே எடுத்து வை. இதுவே அவருக்குப் போதுமானது. உனக்கு அவருடைய தொந்தரவு இருக்காது’ என்று கூறினார்கள். (நூல்: பைஹகீ 8924)
பொதுவாகவே அண்டை வீட்டாரிடம் இருந்து பிரச்சினைகள் வந்தால் நாம் அதனை ஒரு கவுரவப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு சண்டைக்குத் தயாராகி விடுகிறோம். வாக்குவாதத்தில் ஈடுபடுகிறோம். தொல்லை தந்த அவருக்கு நாமும் தொல்லை தர ஆரம்பிக்கிறோம். இது நிரந்தரப் பகையாக மாற அமைதியை இழந்து விடுகிறோம். சில வேளைகளில் பிரச்சினை முற்றிப் போய் காவல்துறை, நீதிமன்றம் என்று அலைய ஆரம்பித்து விடுகிறோம். இதற்கு மாற்றாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய நடைமுறையைச் செய்து பார்க்கலாமே!
நபிகளார் கூறியது போல் முதலில் பொறுமையாக இருந்து பிரச்சினையைத் தீர்க்க பார்க்கலாம். பல சமயங்களில் பொறுமை பலன் அளிப்பதை நாம் பார்க்கிறோம். பொறுமை இழந்து ஏட்டிக்குப் போட்டியாக நாமும் செயல்களில் இறங்கி விடும்போது நிலைமை இறுக்கமாக மாறி விடுகிறது. எனவே முதலில் பொறுமையை மேற்கொள்வோம்.
பொறுமை பலன் அளிக்காவிடில் பிரச்சினையை மக்களின் கவனத்திற்குக் கொண்டு வரலாம். மக்கள் தலையிட்டு அதற்குத் தீர்வு தரலாம். பொதுவாக பலர் மறைவில் தவறுகளைச் செய்வார்கள். ஆனால் அது எவருக்கும் தெரிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். இத்தகையோரை வழிக்கு கொண்டு வர பிரச்சினைகளை மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்வதே சிறந்த வழியாகும். இறைவனுக்கு அஞ்சாவிட்டாலும், சமூகத்திற்கு அஞ்சியாவது தம்மை மாற்றிக் கொள்வார்கள். இதனையே மேற்கண்ட நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.
அண்டை வீட்டினரால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க இது ஒன்றுதான் வழியென்பது இல்லை. தீமைக்குப் பதிலாக நன்மை செய்யுங்கள். அவ்வாறு செய்தால் உங்கள் பகைவர்களும் உற்ற நண்பர்களாக ஆகி விடுவார்கள். ‘(நபியே!) நன்மையும், தீமையும் சமமாகாது. மிகச் சிறந்த நன்மையைக் கொண்டு நீர் தீமையைத் தடுப்பீராக. அப்போது உம்முடன் கடும் பகைமை கொண்டிருந்தவர்கள்கூட உற்ற நண்பராய் ஆகி விடுவதைக் காண்பீர்’ (41:34) என்று குர்ஆனில் இறைவன் கூறுகின்றான். நாமாகவே அவரிடம் வலியச் சென்று உரையாடுவது, பரிசுகள் கொடுப்பது ஆகியவற்றின் மூலம் உறவுகளைச் சரி செய்யலாம். சில வேளைகளில் இருவருக்கும் தெரிந்த நபர்கள் மூலம் சமரச முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் இறை நம்பிக்கையாளரின் தேவையானவை மூன்று. 1. விசாலமான வீடு 2. நல்ல அண்டை வீட்டுக்காரர் 3. நல்ல வாகனம் (நூல்: அஹமத்)
நல்ல வீடும், நல்ல வாகனமும் இருந்தால் மட்டும் போதாது. நல்ல அண்டை வீட்டுக்காரரும் அமைதியான வாழ்விற்கு அவசியம் தேவை. எனவே நாமும் நல்ல அண்டை வீட்டுக்காரர்களாக வாழ்வோம்.
பொய் சொல்லக் கூடாது
நம்மில் பலர் குழந்தைகளிடம் பொய் சொல்வதைத் தவறு என்று எண்ணுவதில்லை. அடம் பிடிக்கும் குழந்தை, அழுது புரளும் குழந்தைகளைச் சமாளிக்க அப்போதைக்கு ஒரு பொய்யைச் சொல்லி அடக்கி வைக்கிறார்கள். ‘உனக்கு அதை வாங்கித் தருவேன்; இங்கே அழைத்துப் போவேன்’ என்று பொய் சொல்வார்கள். பின்னர் குழந்தைகளுக்குக் கொடுத்த வாக்குறுதியை மறந்து விடுவார்கள். ஆனால் குழந்தைகளோ அந்த வாக்குறுதிகளை மறப்பதில்லை. வாக்குறுதி நிறைவேற்றப்படுவதை ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். நிறைவேற்றப்படாதபோது ஏமாற்றமும், விரக்தியும் அடைகின்றனர். இதனால் பெற்றோர்களின் மீதுள்ள மரியாதையும் குறைகிறது.
குழந்தைகளிடம் மட்டுமல்ல, எந்த நிலையிலும் யாரிடமும் பொய் சொல்லக் கூடாது என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.
தோழர்களிடம் நபிகள் நாயகம் நகைச்சுவையாகப் பேசுவதுண்டு. ‘ஒரு இறைத்தூதர் நகைச்சுவையாகப் பேசலாமா?’ என்று வினவியபோது, ‘நான் பிறரைச் சிரிக்க வைப்பதற்காக ஒருபோதும் பொய் உரைத்ததில்லை’ என்று பதில் அளித்தார்கள். ‘வேடிக்கையாக பேசும்போதும், பொய் பேசுவதைக் கை விட்டவனுக்கு சொர்க்கத்தின் நடுவில் ஒரு வீட்டைக் கட்டித் தர நான் பொறுப்பேற்கிறேன்’ என்று நபிகள் நாயகம் கூறினார்கள். (நூல்லபூ தாவூத்)
குழந்தைகளிடமும் பொய் சொல்ல வேண்டாம்.
சம்பிரதாயத்திற்காகவும் பொய் சொல்ல வேண்டாம்.
பிறரைச் சிரிக்க வைப்பதற்காகவும் பொய் சொல்ல வேண்டாம்.
வாய்மையே என்றும் வெற்றி பெறும்.
-டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத்.
குர்ஆனின் நேர்வழிகாட்டுதலின் படி நடந்து மகத்தான வாழ்வை பெறுவோம். பாவமான காரியங்களில் நடப்பதற்காகவே, நீதியை நாம் தவறவிடுகின்றோம்.
மனித குலம் நாட்டின் பெயரால் மதத்தின் பெயரால், நிறத்தின் பெயரால், இனத்தின் பெயரால் மொழியின் பெயரால் உலகில், அதிகமான அழிவை சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இந்த அழிவிற்கும் அமைதி இன்மைக்கும் என்ன காரணம்? என்று பார்க்கும்போது, அது நீதி செலுத்துவதில் ஏற்பட்ட பின்னடைவே ஆகும்.
எங்கெல்லாம் நீதி நசுக்கப்படுகின்றதோ, அங்கெல்லாம் அழிவு என்பது தானாகவே வந்து விடுகின்றது. அத்தகைய அழிவை இறைவன் இயற்கையின் சீற்றத்தைக் கொண்டும் ஏற்படுத்தி விடுகின்றான்.
பாரபட்சமின்றி நீதி செலுத்துவதும், அதனை நிலை நாட்டுவதும், உண்மைக்கு சாட்சியாக இருப்பதும், அதனை நேசிக்கும் மனிதர் களுக்கு கட்டாயம் இருக்க வேண்டும். அது தனக்கோ தன்னைச் சார்ந்தவர்களுக்கோ, பெரும் பாதிப்பை ஏற்படுத்திய போதிலும் நீதி தவறக்கூடாது என்பதையும் திருக்குர் ஆன் இவ்வாறு வலியுறுத்துகின்றது:
‘முமின்களே! நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும், அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்’. (4:135)
நீதியை வலியுறுத்தும் திருக்குர்ஆன் ஒரு நாட்டினருக்கோ, ஒரு மொழியினருக்கோ, ஒரு மதத்தினருக்கோ, ஓர் இனத்திற்கோ உரியது அல்ல. அது உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது.
‘குர்ஆன்’ என்ற வார்த்தைக்கு ‘ஓதப்படுவது’ என்பது பொருளாகும். அத்தகைய திருக்குர்ஆன் உலகில் உள்ள அனைவராலும் ஓதப்பட வேண்டும், அதன் வழிகாட்டுதலின் படி யாவரும் நேர்வழி பெற வேண்டும் என்பதே அதன் உள்ளார்ந்த கருத்தாகும்.
திருக்குர்ஆன், ‘ஓ மனிதர்களே’ என்றழைக்கின்றது. ‘ஆத முடைய மக்களே’ என உலக மக்களை அழைத்து பேசுகின்றது. ‘வேதத்தையுடையவர்களே’, ‘விசுவாசம் கொண்ட முமின்களே’ என்றெல்லாம் கூறி நேர்வழியின் பக்கம் மனித குலத்தை திருக்குர்ஆன் அழைத்துக் கொண்டே இருக்கின்றது.
திருக்குர்ஆனின் மேன்மை குறித்து அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதை ஹசரத் அலி (ரலி) அவர்கள் இவ்வாறு அறிவிக்கின்றார்கள்:
‘திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வேதமாகும், அது உலகில் ஏற் படும் குழப்பங்களுக்கு தீர்வு காண்பதற்கு சிறந்த வழியாக இருக்கின்றது’.
‘உங்களுக்கு முன்னர் நடந்துள்ள செய்திகளும், உங்களுக்கு பின்னர் நடக்க போகின்ற நிகழ்வுகளும் அதில் உள்ளது. சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக் கூடிய குர்ஆன் பரி காசமானது அல்ல’.
‘அதனை பெருமை கொண்டு (பின்பற்றாது) எவர் விடுவாரோ, அவரை அல்லாஹ் துண்டு துண்டாக்கி விடுவான். குர்ஆனை விட்டு விட்டு, அது அல்லாததில் நேர்வழியை தேடுபவரை (அல்லாஹ்) வழிதவறச் செய்து விடுவான். ஞான உபதேசமான குர்ஆன் அல்லாஹ்வின் உறுதியான கயிறு ஆகும்’.
‘இதனை திரும்ப திரும்ப ஓதுவதால் சடைவு ஏற்படாது, குர்ஆனுடைய ஆச்சரியங்கள் முடிவடைந்து விடாது, இதனை ஓதுகின்ற நாவுகள் பிசகி விடாது, இதனை உறுதி கூறியவர் உண்மை சொல்லிவிட்டார்’.
‘இதனை செயல்படுத்தியவர் நன்மை வழங்கப்பட்டவராவார், இதனை கொண்டு தீர்ப்பு செய்தவர் நீதி செலுத்திவிட்டார், இதனை கொண்டு (மக்களை) நேர் வழியில் பக்கம் அழைத்தவர் நேர் வழிகாட்டிவிட்டார்’. (நூல்: மிஷ்காத்).
தன் அறிவை பெரிதாக மதித்து பெருமையுடன் குர்ஆனின் நல்லுபதேசத்தை யார் புறக்கணிக்கின்றார்களோ, அவர்களின் நிலை குறித்து குர்ஆன் இவ்வாறு பேசுகின்றது:
‘எந்த மனிதன், கருணைமிக்க இறைவனின் அறிவுரையை விட்டு விட்டு அலட்சியமாக இருக்கின்றானோ, அவன் மீது ஒரு ஷைத்தானை நாம் ஏவிவிடுகின்றோம். அவன் இவனுக்கு நண்பனாகி விடுகின்றான்’. (43:36)
சைத்தான் ஒருவருக்கு நெருங்கிய நண்பனாகிவி்ட்டால் அழிவை தவிர அவர் எதிர்கொள்ளபோவது வேறொன்றுமில்லை. சைத்தானோ பேரழிவில் கொண்டுபோய் சேர்த்து விடுவான்.
எனவே குர்ஆனின் நேர்வழிகாட்டுதலின் படி நடந்து மகத்தான வாழ்வை பெறுவோம். பாவமான காரியங்களில் நடப்பதற்காகவே, நீதியை நாம் தவறவிடுகின்றோம். அதனால் ஏற்படும் நாசம், தரையிலும், கடலிலும் பரவி விட்டதையும், அதன் வேதனையை கண்ட பின்னராவது மனிதன் மனம் திருந்தி இறைவன் பக்கம் திரும்ப வேண்டும் என்பதையும் குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது:
‘மக்கள் தங்கள் கைகளால் எதைச் சம்பாதித்தார்களோ, அதன் காரணமாக தரையிலும், கடலிலும் அராஜகமும் குழப்பமும் தோன்றிவிட்டிருக்கின்றன; அவர்கள் செய்த சில செயல்களின் விளைவை அவர்கள் சுவைப்பதற்காக! (அதனால்) அவர்கள் விலகிவிடக் கூடும்’. (30:41)
நியாயமாக நடப்பவர்கள் இறைவனை தவிர்த்து வேறு எதற்காகவும் அஞ்சுவதில்லை, நிம்மதியை இழப்பதில்லை. தன்னை சுற்றி எந்தச் சூழ்நிலை ஏற்பட்டாலும் அவர்கள் அதனை கண்டு பயப்படுவதில்லை. அத்தகைய நீதி மிக்கவர்களாக நாம் மாறுவோம், மனம் திருந்துவோம், நிம்மதியை பெறுவோம்!
மு.முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.






