என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    ஒருவர் தனது வாழ்க்கையை சீர்தூக்கிப் பார்த்து செம்மையாக்கவில்லை என்றால் அவர் எந்த காலத்திலும் எவற்றாலும் எந்தவொரு படிப்பினையையும் பெற முடியாது என்பது உறுதி.
    இறப்பில் இருந்து நாம் படிப்பினை பெறுவது என்பது, மற்றவர்களின் இறப்பிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினையைக் குறிப்பதாகும்.

    உயிரினங்கள் அனைத்துமே ஒரு நாள் அழிவை சந்திக்கக் கூடியவையே. உயிரினங்கள் மட்டுமின்றி உயிரற்றவைகள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. இறைவனால் படைக்கப்பட்ட அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்ட எல்லா பொருட்களும், இயந்திரங்களும் தங்களின் அசலான நிலையில் இருந்து உருமாறி, தேய்ந்து வருடங்கள் பல கடந்த பின் இல்லாமலேயே போய்விடும்.

    பெரும் பாறைகள், மலைகள், கடினமான பாகங்களைக் கொண்ட பொருட்கள் அனைத்துக்கும் இந்த நிலைமை என்றால் ரத்தமும், சதையும், விரைவில் மக்கிப் போகக் கூடிய எலும்புகளாலும் ஆன மனிதர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். இறைவன் தான் படைத்த உயிரினங்களுக்கு மட்டும் கூடவே காலக்கெடுவினையும் விதித் திருக்கிறான்.

    உறுப்புகள் பழுதடைந்து, கூன் விழுந்து முதுமை அடைந்தால்தான் இறப்பு வரும் என்று எவராலும் அறுதியிட்டுக் கூற முடியாது. எந்த நேரத்திலும் இறப்பு சம்பவிக்கலாம் என்பது எல்லா மனிதர்களுக்கும் தெரிந்த ஒன்றுதான். என்றாலும் பெரும்பாலான மனிதர்கள் திடீரென ஏற்படும் மரணங்களினால் நிலை தடுமாறித்தான் போய்விடுகின்றனர். எவ்வளவு பக்குவம் உள்ள மனிதர்களும் செய்வதறியாமல் விக்கித்துப் போய்விடுகின்றனர்.

    தம் உயிரைப் போன்று நேசித்த உறவுகளின் உயிர்கள் நோயினாலேயோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ இவ்வுலகை விட்டு நீங்கும் பொழுது தாங்கமுடியாத துயரத்திற்கு ஆளாகிறார்கள். இதுதான் இறைவன் நமக்கு விதித்தது என்று ஆறுதல் கொள்ள, காயங்கள் ஆற அவரவர் மன உறுதிக்கேற்ப, சிறிது காலமோ அல்லது நெடுங்காலமோ தேவைப்படுகிறது.

    “(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, ‘நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்’ என்று கூறுவார்கள்”. (திருக்குர்ஆன் 2 : 156).

    பிறப்பினை ஏற்றுக்கொள்ளும் நாம் இறப்பினையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இவ்வுலக வாழ்க்கை ஒரு பிரயாணம் போன்றது. பயணத்தொலைவை, படைத்தவன் மட்டுமே அறிவான். பயணம் நெடும் பயணமாகவோ, சட்டென்று முடிந்து போகக் கூடியதாகவோ இருக்கலாம்.

    பிரயாணத்தில் நம்முடன் பயணிப்பவர்கள் நம்முடைய சொந்தங்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டும். எந்த நேரத்திலும் நம்முடன் பயணிப்பவர்கள் நம்மை விட்டுச் சென்று விடுவார்கள். அது போல்தான் நம் வாழ்க்கையும். எதற்கும் தயாராக நாம்தான் இருக்க வேண்டும்.

    அதனால் இழப்புகளினால் ஏற்படும் வலியில் இருந்து நம்மை மீட்டுக் கொள்ளலாம். நம்முடைய நெருங்கிய சொந்தங்களின் மீது கட்டற்ற பாசம் வைக்கக் கூடாது. நமக்கு உயிரும், உடலும் தந்த இறைவன் மீதே அளப்பரிய அன்பு இருக்க வேண்டும். அவனிடம் இருந்து வருகிறோம், அவனிடமே திரும்பிச்செல்லக் கூடியவர்களாக இருக்கிறோம்.

    எனவே, ‘வாழும் காலத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட அவகாசம் எந்த நேரத்திலும் முடிவடையலாம், அதற்குள் எனக்கு இறைவனால் கடமையாக்கப்பட்ட விஷயங்களை நான் காலம் கடத்தாமல் செய்வேன்’ என்ற உறுதியுடன் நற்காரியங்களை நாம் செய்வதால் நம் முடைய பிறப்பு அர்த்தம் உடையதாக ஆகி விடுகிறது.

    மணம் வீசும் மலர்கள், பயன் பல தரக் கூடிய தாவரங்கள் போன்றவை தாங்கள் வாடி வீழும் வரை வாசனையைப் பரப்பிக் கொண்டிருப்பதாலும், பயன்கள் தருவதாலும் அவை மடிந்த பிறகும், அவற்றின் சிறப்புக் குணங்களை நாம் நினைவு கூர்கிறோம்.

    மனிதர்கள் பல சிறப்புகளை உடையவர்கள். தங்களின் அறிவு, ஆற்றல், சக்தி ஆகியவற்றை பிற மக்களின் உயர்வுக்காக பயன்படுத்த வேண்டும். கல்வி கற்ற மனிதர்கள் மற்ற மக்களுக்கு தாம் கற்ற கல்வியை, ஒழுக்க நெறிகளை போதிக்க வேண்டும். நாம் செய்யும் உதவி களுக்கு பிரதி பலனை எதிர்பார்க்காமல் செய்தால், நாம் எதிர்பார்க்காத தருணங்களில், நாம் தேவையுள்ளவர்களாக இருக்கும் நேரங்களில் இறைவனிடம் இருந்து உதவி கிடைக்கும்.

    ஏதோ பிறந்தோம், ஏதோ வாழ்ந்தோம் என்றில்லாமல் நம்மைச் சுற்றி யுள்ள மனிதர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை நாம் செய்ய வேண்டும். உதவி செய்யும் நிலையில் இல்லாதவர்கள் மற்றவர்களுக்கு எவ்வகையிலும் தொந்தரவு செய்யாமலாவது இருக்க வேண்டும்.

    நல்ல மனிதர்களை அவர்களின் நற்செயல்களுக்காக இவ்வுலகம் அவர்களின் மரணத்திற்குப் பின் கூட நல்ல விதத்தில் நினைவில் கொள்கிறது. ‘இப்படிப்பட்ட மனிதரை உலகம் இழந்து விட்டதே’ என்று வருந்துகிறது. தீயவர்களின் தீயசெயல்களை மக்கள் வெறுப்புடன் நினைவு கூர்கிறார்கள். ‘நல்ல வேளை போய்த்தொலைந்தான்’ என்று மகிழ்கிறது.

    நபி (ஸல்) அவர்களைக் கடந்து ஜனாஸா (பிரேதம்) ஒன்று கொண்டு செல்லப்பட்டது. அப்பொழுது அதைப் பற்றி புகழ்ந்து பேசப்பட்டது. இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் ‘உறுதியாகி விட்டது’ என்று மூன்று முறை சொன்னார்கள்.

    பின்னர் மற்றொரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டது. அது பற்றி இகழ்வாகப் பேசப்பட்டது. அப்போதும் நபியவர்கள் ‘உறுதியாகி விட்டது’ என்று மூன்று முறை கூறினார்கள்.

    அது பற்றி உமர் (ரலி) அவர்கள் கேட்டபோது, “நீங்கள் யாரைப் பற்றிப் புகழ்ந்து பேசினீர்களோ அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது. யாரைப் பற்றி இழிவாகப் பேசினீர்களோ அவருக்கு நரகம் உறுதியாகி விட்டது’ என்று நபி (ஸல்) அவர்கள் பதில் அளித்ததுடன், ‘நீங்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள் ஆவீர்கள்’ என்று மூன்று முறை கூறினார்கள்”. (ஹதீஸ்)

    குழந்தைகளுக்கு ஓரளவிற்கு பக்குவம் வந்த பின்னர் பிறப்பு, இறப்பு பற்றிய விளக்கங்களை அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் சொல்வதுடன், அவர்களை இறந்து போன மனிதரின் ஜனாஸாவைப் பார்க்க கூட்டிச்செல்லலாம். யாரையும் முழுக்க சார்ந்திருக்காமல் இருக்க வேண்டும் என்பதையும், ஒருவரின் இழப்பினால் இந்த உலகம் முடிவுக்கு வந்து விடப்போவதில்லை என்பதையும் பக்குவமாகச் சொல்லித் தர வேண்டும்.

    அத்துடன் இவ்வுலகில் வாழும் காலம் வரை யாருக்கும் எந்த வகையிலும் தீங்கு தராமல் நடந்து கொள்ள வேண்டும் என்பதை மனதில் பதியும்படி சொல்லிக் கொடுக்க வேண்டும். சான்றோர்களின் வாழ்க்கை பற்றிய புத்தகங்களை வாங்கிக் கொடுத்து அவர்களைப் படிக்கச் சொல்ல வேண்டும்.

    மற்றவர்களின் மரணம் நமக்கு எப்படி வாழ வேண்டும், என்பதையும் எப்படி வாழக்கூடாது என்பதையும் சொல்லித் தருகிற அருமையான புத்தகம் எனலாம். அப்படி ஒருவர் தனது வாழ்க்கையை சீர்தூக்கிப் பார்த்து செம்மையாக்கவில்லை என்றால் அவர் எந்த காலத்திலும் எவற்றாலும் எந்தவொரு படிப்பினையையும் பெற முடியாது என்பது உறுதி.

    ம. அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை-84.
    துன்பத்தில் இருப்பவர்கள், தொழுநோயாளிகள் ஆகியோரை உறுத்துப் பார்க்க வேண்டாம்; ஏனெனில் உங்கள் பார்வை அவர்களைச் சோகத்தில் ஆழ்த்தி அவமான உணர்வை உண்டு பண்ணும் என்றார்கள், நபிகள் நாயகம்.
    இறைவன் எல்லோருக்கும் எல்லாச் சிறப்புகளையும், வளங் களையும் ஒரு சேர வழங்கி விடுவதில்லை. அறிவு, அழகு, செல்வம், வீரம், திறமைகள், ஆற்றல்கள், உடல் உறுப்புகள் என எல்லாவற்றிலும் மனிதர்களுக்கிடையே வேறுபாடுகள் உள்ளன. “ஒன்றிற் பெரியர் ஒன்றிற் சிறியர்” என்பதே உண்மை நிலை.

    ஒரு காலத்தில் உடல் குறைபாடுகள் உள்ளவர்களை ‘ஊனமுற்றவர்கள்’ என்று அழைத்தனர். பின்னர் அவர்களுக்கு “சவால்களைச் சந்திப்பவர்கள்” என்று பெயரிட்டனர். இப்போது “மாற்றுத் திறனாளிகள்” என்ற பொருத்தமான பெயரைச் சூட்டியுள்ளனர். ஒரு விஷயத்தில் அவர்களிடம் குறை இருக்கலாம்; ஆனால் இன்னொரு விஷயத்தில் அவர்கள் திறமை மிக்கவர் களாகக் காணப்படுகின்றனர். இன்னும் நம்மில் சிலர் மாற்றுத் திறனாளிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறியாமலேயே உள்ளனர். அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமலும், ஒதுக்கி வைத்தும், அவர்களது தேவைகளுக்கு முன்னுரிமை தந்து நிறைவேற்றாமலும் கொடுமைப்படுத்துகின்றனர். தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக, சமூகத்தில் மாற்றுத் திறனாளிகள் குறித்த மக்கள் பார்வை மெல்ல மெல்ல மாறி வருகிறது.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாற்றுத் திறனாளிகளுடன் நடந்து கொண்ட விதம் குறித்து சில நிகழ்வுகளை நாம் பார்க்கலாம்.

    ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “பனு வாகிப் என்ற இடத்தில் வசிக்கும் பார்வையுள்ள மனிதரிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள்” என்று தமது தோழரிடம் கூறினார்கள். ஆனால் அந்த மனிதரோ பார்வையற்றவராக இருந்தார். (நூல்: பைஹகி)

    அவர் புறப்பார்வையில்லாத மனிதராக இருந்தாலும், அகப்பார்வை உடையவராக இருந்தார். எனவே அவரைக் கண்ணியப்படுத்தும் வகையில், அவரைப் ‘பார்வையுள்ளவர்’ என்று நபிகளார் குறிப்பிட்டார்கள். எனவே நாமும் குருடர், செவிடர், நொண்டி என்ற வார்த்தைகளினால் அழைத்து அவர்களைப் புண்படச் செய்யலாகாது.

    “உருவு கண்டு எள்ளாமை வேண்டும்” என்ற கருத்துக்கு ஒப்ப நபிகள் நாயகம் நடந்து கொண்ட விதத்தைப் பாருங்கள்.

    நபித்தோழர்களில் மிக உயர்வான இடத்தைப் பெற்றவர், இப்னு மசூத் (ரலி) என்பவர். அவர் குள்ளமானவராகவும், மெலிந்த கால்கள் உடையவராகவும் இருந்தார். ஒருமுறை அவர் பல் துலக்கும் குச்சியைப் பறிப்பதற்காக ஒரு மரத்தில் ஏறினார். அப்போது காற்று பலமாக வீசியதால், அவர் மரத்தில் இங்கும் அங்கும் ஆட வேண்டியதாயிற்று. அவரது மெல்லிய கால்களைக் கண்டு தோழர்கள் கேலியாகச் சிரித்தனர். நபிகள் நாயகம், தோழர்களை நோக்கி, “என் உயிர் எவன் கையில் இருக்கிறதோ, அந்த இறைவனின் மீது ஆணையாக! அந்த மெல்லிய கால்கள் இறைவனின் எடைத்தட்டில் உஹது மலையை விட கனம் பொருந்தியது” என்றார்கள். இப்னு மசூத் சிறந்த அறிஞராகவும், தூய்மையான வாழ்க்கை நடத்தியவராகவும் திகழ்ந்தார். எனவே தோற்றத்தை வைத்து ஒரு மனிதரை எடை போட வேண்டாம் என்பதே நபிகளார் தோழர்களுக்கு உணர்த்திய பாடம்.

    மாற்றுத் திறனாளிகளின் உணர்வுகளை மதித்து அவர்களது கோரிக்கைகளை ஏற்பதில் நபிகளார் கவனம் செலுத்தினார்கள். இத்பான்-பின்-மாலிக் என்ற நபித் தோழர், நபிகளாரிடம் முறையிட்டார். “இறைத்தூதரே! நான் பார்வைக் குறைவு உடையவன். நான் எனது பகுதியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகைக்குத் தலைமை தாங்கி நடத்துகிறேன். மழை வந்து விட்டால் தண்ணீர் தேங்கி பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே எனது வீட்டிலேயே தொழுகை நடத்திக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். நீங்கள் என் வீட்டிற்கு வந்து தொழுகையை நடத்தினால், அந்த இடத்தை நான் தொழுகைக்குரிய இடமாக ஆக்கிக் கொள்ள முடியும்” என்றார். நபிகளார் அவரது கோரிக்கையை ஏற்று, நெருங்கிய தோழரான அபூபக்கருடன் அங்குச் சென்று தொழுகை நடத்தினார்கள். (நூல்: புகாரி)

    ஜுலைபிப் என்ற நபித் தோழர், குள்ளமானவர், அழகற்றவர். மதீனா நகர மக்கள் அவரை ஒதுக்கி வைத்திருந்தனர். நபிகள் நாயகம் ஒரு குடும்பத்தாரை அணுகி அவருக்குப் பெண் கொடுக்கும்படி கோரினார்கள். பெற்றோர் மறுத்தார்கள். பெண்ணோ மணந்து கொள்ள தயாராக முன் வந்தார். ஒரு மாற்றுத் திறனாளிக்கு நல்ல மனைவியைப் பெற்றுத் தருவதை விட சிறந்த சேவை என்னவாக இருக்க முடியும்?

    மாற்றுத் திறனாளிகளை நபிகளார் பதவிகளில் அமர்த்தினார்கள். உஹதுப் போர் நடைபெற்ற வேளையில் ஆயிரம் பேர் மதீனா நகரில் இருந்து வெளியேறி போருக்குச் சென்றனர். அப்போது மதீனாவில் தொழுகைக்குத் தலைமை தாங்கும் பொறுப்பைப் பார்வையற்ற இப்னு-உம்மு-மக்தூம் என்பவரிடம் ஒப்படைத்தார்கள்.

    மாற்றுத் திறனாளிகளுடன் சமமாகப் பழகி, உறவாடுமாறு நபிகளார், தோழர்களைப் பணித்தார்கள். இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர், மதீனத்து மக்கள், பார்வையற்றவர்கள், நோயாளிகள் ஆகியோருடன் சேர்ந்து உணவருந்த மாட்டார்கள். நபிகள் நாயகம், “நம்பிக்கையாளர்களே! உங்களுடன் சேர்ந்து உணவு உண்பதில், பார்வையற்றோர், நடக்க முடியாதவர்கள், நோயாளிகள் மீது எந்தவிதக் குற்றமுமில்லை” (24:61) என்ற திருமறை வசனத்தை ஓதிக் காட்டி மக்கள் கண்ணோட்டத்தை மாற்றி, அனைவரும் சேர்ந்து உணவு உண்ணும் நிலையை ஏற்படுத்தினார்கள்.

    “துன்பத்தில் இருப்பவர்கள், தொழுநோயாளிகள் ஆகியோரை உறுத்துப் பார்க்க வேண்டாம்; ஏனெனில் உங்கள் பார்வை அவர்களைச் சோகத்தில் ஆழ்த்தி அவமான உணர்வை உண்டு பண்ணும்” என்றார்கள், நபிகள் நாயகம்.

    மாற்றுத் திறனாளியாக பிறந்தது அவர்கள் குற்றமல்ல; இது எவருக்கும் நிகழலாம். எனவே அவர்கள் மீது அன்பு கொண்டு, சமமாக பாவித்து, வாய்ப்புகளை வழங்கி, எல்லோரையும் போல அவர்களையும் வாழச் செய்வதே நாம் அவர்களுக்குச் செய்யும் சேவையாகும்.

    -டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத்
    நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை ஏற்று மன்னிப்பவனாகவும், மிக்கக் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான் என்ற இறை வசனம் அருளப்பட்டது.
    நபி(ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போருக்குத் தலைமையேற்றுச் செல்ல நாடினால் பெரும்பாலும் வேறெதற்கோ செல்வது போன்று பாசாங்கு செய்து அதை மறைப்பார்கள். தபூக் போரின் போது கடும் வெயிலில் நபி(ஸல்) அவர்கள் படையெடுத்துச் சென்றார்கள். முஸ்லிம்கள் தம் பகைவர்களின் நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்காகத் தம் எதிர்பார்ப்பான தொலைதூரப் பயணத்தையும் வெற்றியையும் அதிக எண்ணிக்கையிலான எதிரிகளைச் சந்திக்கவிருப்பதையும் முஸ்லிம்களுக்கு வெளிப்படையாக உணர்த்திவிட்டார்கள்.

    போரில் கலந்து கொள்ளாமல் தலைமறைவாகிவிடலாமென நினைக்கும் எந்த மனிதரும், அல்லாஹ்விடமிருந்து இறை அறிவிப்பு வஹீ வராத வரையில் போருக்கு வராதவர்களைப் பற்றி நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிய வராது என்று எண்ணும் அளவிற்குப் படையினரின் எண்ணிக்கை மிகுந்திருந்தது. பேரீச்சம் பழங்கள் பழுத்து மர நிழல்கள் அடர்ந்து நின்ற அறுவடைக் காலமான அந்த வெப்பம் மிகுந்த வெயில் காலத்தில் நபி(ஸல்) அவர்கள் அந்தப் போருக்குச் செல்ல ஆயத்தமானார்கள்.

    எல்லாரும் பயண ஏற்பாடுகளைச் செய்யும்போது இன்று செய்யலாம், நாளை செய்யலாம் என்று தனது பயண ஏற்பாட்டைத் தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தார்கள் கஅப் இப்னு மாலிக்(ரலி). முஸ்லிம்களை அழைத்துக் கொண்டு ஒரு காலை நேரத்தில் நபி(ஸல்) புறப்பட்டுவிட்டபோதும், பயண ஏற்பாடுகளைச் செய்து அவர்களை அடைந்துவிடலாம் என்று இருந்துவிட்டவர்கள். நிலை இழுபட்டுக் கொண்டே சென்று கடைசி வரை தபூக் போரில் கஅப் இப்னு மாலிக்(ரலி) கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்தார்கள். தபூக் போரைத் தவிர மற்ற எல்லாப் போரிலும் கலந்து கொண்டவர்கள் பத்ருப் போரிலும் கலந்து கொள்ளாதவர்.

    உடல் பலமும் பொருள் வசதியும் இருந்தும் கஅப் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் போரில் கலந்து கொள்ளவில்லை. எல்லாரும் போருக்குப் புறப்பட்ட பின்னரே அவர்கள் மதீனா நகரைச் சுற்றி வரும்போது கவனித்தார்கள் நயவஞ்சகர் எனச் சந்தேகப்பட்ட மனிதர்களையும், இறைவனால் சலுகை வழங்கப்பட்ட முதியோர், பெண்கள் போன்ற பலவீனர்களையும் தவிர வேறெவரும் மதீனாவிற்குள் இல்லை. தாம் தவறு செய்துவிட்டதை உணர்ந்த கஅப்(ரலி), நபி(ஸல்) வருகைக்காகக் காத்திருந்தார்கள். பொய்யான காரணம் எதையும் சொல்லி நபி(ஸல்) அவர்களிடமிருந்து ஒருபோதும் தப்பித்துக் கொள்ள முடியாது, என்பதை அறிந்த கஅப்(ரலி) உண்மையைச் சொல்ல காத்திருந்தார்கள்.

    நபி(ஸல்) வழக்கம்போல் பயணத்திலிருந்து திரும்பியவுடன் முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று அங்கு இரண்டு ரக்அத்கள் தொழுத பின் மக்களைச் சந்திப்பதற்காக அமர்ந்தார்கள்.

    தபூக் போரில் கலந்துகொள்ளச் செல்லாமல் பின்தங்கிவிட்டவர்கள் அவர்களிடம் வந்து, அவர்களுக்கு முன்னால் சத்தியமிட்டுத் தாம் போருக்கு வராமல் போனதற்குச் சாக்குப் போக்குக் கூறத் தொடங்கினர். நபி(ஸல்) அவர்கள், அவர்களின் வெளிப்படையான காரணங்களை ஏற்று அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தார்கள். அவர்களுக்காகப் பாவமன்னிப்பும் தேடினார்கள். அவர்களின் அந்தரங்கத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிட்டார்கள்.

    அப்போது, அங்குக் கஅப் இப்னு மாலிக்(ரலி) சென்று சலாம் கூறி அமர்ந்தார்கள். 'போரில் நீங்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை. நீங்கள் போருக்காக வாகனம் வாங்கி வைத்துகொண்டிருக்கவில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கஅப்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். “வாங்கி வைத்திருந்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! தாங்கள் அல்லாத வேறு எவரேனும் ஓர் உலகாயதவாதிக்கு அருகில் நான் அமர்ந்து கொண்டிருந்தால் ஏதாவது பொய்யான சாக்குப் போக்குச் சொல்லி அவருடைய கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள உடனடியாக வழி கண்டிருப்பேன்.

    எவராலும் வெல்ல முடியாத வாதத் திறன் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், தங்களிடம் ஏதாவது பொய்யைச் சொல்லி இன்று உங்களை நான் என்னைக் குறித்துத் திருப்தியடையச் செய்துவிட்டாலும், அல்லாஹ் வெகுவிரைவில் உண்மை நிலவரத்தைத் தங்களுக்குத் தெரியப்படுத்தி என் மீது தங்களைக் கடுங்கோபம்கொள்ளச் செய்து விடுவான் என்பதை நான் நன்கு அறிந்துள்ளேன்.

    அதே சமயம் தங்களிடம் நான் உண்மையைச் சொல்லிவிட்டால், தற்போது அது தொடர்பாக என் மீது தாங்கள் வருத்தப்படுவீர்கள். ஆயினும், அது விஷயத்தில் அல்லாஹ்வின் மன்னிப்பை நான் எதிர்பார்க்கிறேன். நான் போரில் கலந்து கொள்ளாததற்கு என்னிடம் எந்தக் காரணமும் இல்லை. தங்களைவிட்டு நான் பின்தங்கிவிட்டேன்“ என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் , “இவர் உண்மை சொல்லிவிட்டார்” என்று கூறிவிட்டு, “சரி! எழுந்து செல்லுங்கள். உங்களின் விஷயத்தில் அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான்” என்று கூறினார்கள்.

    “நயவஞ்சகர்களே! நீங்கள் இருக்கும் இந்த நிலைமையில் நல்லவர்கள் இன்னாரென்றும் தீயவர்கள் இன்னாரென்றும் பிரித்தறிவிக்கும் வரையில் உங்களுடன் கலந்திருக்க அல்லாஹ் நம்பிக்கையாளர்களை விட்டுவைக்க மாட்டான்” என்ற இறை வசனமும், 'நீங்கள் அவர்களிடம் திரும்பி வரும்போது அவர்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடவேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிலையில் அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்வார்கள். எனவே, நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்து விடுங்கள்.

    ஏனென்றால் அவர்கள் அசுத்தமானவர்கள்; அவர்கள் சேருமிடம் நரகமாகும். அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீயவற்றுக்கு இதுவே பிரதிபலனாகும். நீங்கள் அவர்களின் மீது திருப்தியுறவேண்டும் என்பதற்காக உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்களின் மீது திருப்தி கொண்டாலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான இத்தகைய மக்களின் மீது ஒருபோதும் திருப்திகொள்ளமாட்டான்' எனும் வசனங்களும் அருளப்பெற்றபோது அந்தப் பொய்யர்கள் அழிந்து போனார்கள்.

    கஅப் இப்னு மாலி(ரலி) அவர்களைப் போன்றே ஆனால் பத்ருப்போரில் கலந்துகொண்ட முராரா இப்னு ரபீஉ அல் அம்ரீ அவர்களும், ஹிலால் இப்னு உமய்யா அல் வாக்கிஃபீ அவர்களும் உண்மையை உரைத்தவர்கள். இவர்களும் வேறு காரணங்களுக்காகத் தபூக் போரில் கலந்து கொள்ள முடியாமல் அல்லாஹ்வின் தீர்ப்புக்காகக் காத்திருந்தனர். மூவரிடமும் யாரும் பேசவில்லை, மக்கள் தவிர்த்தனர். இதே நிலையில் அவர்கள் ஐம்பது நாள்கள் இருந்தனர். அப்போது கஅப்(ரலி) அவர்களுக்கு 'ஃகஸ்ஸான்' நாட்டின் அரசனிடமிருந்து அவருடன் இணைய அழைப்பு வந்தது. கஅப்(ரலி) மறுத்துவிட்டு அல்லாஹ்வின் தீர்ப்புக்காகக் காத்திருந்தார்.

    “அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து விட்டு வைக்கப்பட்டிருந்த மூவரையும், அல்லாஹ் மன்னித்து விட்டான்; பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும், அது அவர்களுக்கு நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் கஷ்டமாகி விட்டது - அல்லாஹ்வின் புகழ் அன்றி அவனைவிட்டுத் தப்புமிடம் வேறு அவர்களுக்கு இல்லையென்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள் - ஆகவே, அவர்கள் பாவத்திலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு, அவர்களை அல்லாஹ் மன்னித்தான்; நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை ஏற்று மன்னிப்பவனாகவும், மிக்கக் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்” என்ற இறை வசனம் அருளப்பட்டது.

    உடனே கஅப்(ரலி), “இறைத்தூதர் அவர்களே! என் பாவம் மன்னிக்கப்பட்டதற்காக என் செல்வத்தின் மீதான என்னுடைய உரிமையைவிட்டுவிட்டு அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் அதைத் தர்மமாக அளித்துவிடுகிறேன்” என்று சொன்னார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் செல்வத்தில் சிறிதளவை உங்களுக்காக வைத்துக்கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது' என்று கூறினார்கள்.

    ஸஹீஹ் புகாரி 3:56:2948, 3:55:2757, 5:64:4418, 5:65:4676, திருக்குர்ஆன் 3:179, 09:95, 96

    - ஜெஸிலா பானு, துபாய்
    “உன்னுடைய தண்ணீரிலிருந்து எதையும் நாங்கள் குறைக்கவில்லை. அல்லாஹ்தான் எங்களுக்குத் தண்ணீர் புகட்டினான் என்பதைத் தெரிந்து கொள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் பயணத்தில் இருந்தபோது, இரவின் கடைசி நேரம் எட்டியதும் எல்லோருக்கும் தூக்கம் வரவே, பயணக் களைப்பில் தூங்கிவிட்டனர். காலையில் ஒவ்வொருவராகத் தூக்கத்திலிருந்து எழுந்தனர். நபி(ஸல்) அவர்களின் தூக்கத்திலேயே அவர்களுக்குச் செய்தி வரும் என்பதால் நபி(ஸல்) அவர்கள் தூங்கினால் அவர்களைத் தூக்கத்திலிருந்து தாமாகவே விழிக்கும் வரை அவர்களை யாருமே எழுப்பமாட்டார்கள்.

    நபி(ஸல்) அவர்களின் தோழர் உமர்(ரலி) தூக்கத்தைவிட்டு எழுந்து ஸுப்ஹ் தொழுகை அதாவது காலை நேரத் தொழுகை தவறிப்போனதை உணர்ந்தவர்களாக ‘அல்லாஹு அக்பர்! அல்லாஹ் மிகப் பெரியவன்’ என்று சப்தமாக முழங்கிக் கொண்டே இருந்தார். அந்தச் சப்தத்தைக் கேட்டு நபி(ஸல்) அவர்களும் தூக்கத்திலிருந்து எழுந்தார்கள்.

    தொழுகை தவறியதைப் பற்றிச் சொன்னதும், ‘அதனால் எந்தப் பாதிப்புமில்லை. இங்கிருந்து புறப்படுவோம்’ என்று சொல்லி அங்கிருந்து அனைவரும் புறப்பட்டனர். சிறிது தூரம் சென்றதும் அங்கே தங்கி இருக்கும் தண்ணீரை வைத்து ஒதுச் செய்தனர். தொழுகைக்கான அழைப்புக் கொடுக்கப்பட்டு, மக்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகையை நடத்தினார்கள்.

    தொழுகையை முடித்துவிட்டு திரும்பிப் பார்த்தபோது, அங்கு ஒருவர் கூட்டத்துடன் தொழாமல் தனியாக இருந்தார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் ‘எல்லாருடனும் சேர்ந்து கூட்டுத் தொழுகையில் நீ ஏன் கலந்துக் கொள்ளவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த நபர் “எனக்குக் குளிப்புக் கடமையாகிவிட்டது. என்னைச் சுத்தப்படுத்திக் கொள்ளத் தண்ணீர் இல்லை” என்று கூறினார். “மண்ணில் தயம்மும் செய். அதுவே உனக்குப் போதுமானது” என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள்.

    பின்னர்ப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். அப்போது மக்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்று “தாகமாக இருக்கிறது, தண்ணீர் இல்லை” என முறையிட்டனர். உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்திலிருந்து இறங்கி, இரு தோழர்களை அழைத்து, “நீங்கள் சென்று தண்ணீரைத் தேடுங்கள்” என்று கூறினார்கள். அவர்கள் சென்று தேடும்போது, வழியில் ஒரு பெண்ணைச் சந்தித்தார்கள்.

    அவள் ஓர் ஒட்டகத்தின் மீது இரண்டு தோல் பைகளில் தண்ணீர் வைத்துக் கொண்டு அதற்கிடையில் அமர்ந்திருந்தாள். “தண்ணீர் எங்கே கிடைக்கிறது?” என்று அவ்விருவரும் அப்பெண்ணிடம் கேட்டனர். “தண்ணீர் ஒரு நாள் பயணத் தூரத்தில் இருக்கிறது” என்றாள். “அப்படியானால் நீ அல்லாஹ்வின் தூதரிடம் புறப்படு” என்று அவ்விருவரும் அப்பெண்ணிடம் கூறினார்கள். “மதம் மாறியவர் என்று கூறப்படுகிறாரே அவரிடத்திலா?” என்று அப்பெண் கேட்டாள். “ஆம்” என்று கூறிவிட்டு அவளை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்து வந்து நடந்ததைக் கூறினார்கள்.

    “அந்தப் பெண்ணை அவளுடைய ஒட்டகத்திலிருந்து இறங்கச் செல்லுங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி, அந்த இரண்டு தோல் பைகளிலிருந்த தண்ணீரைப் பாத்திரங்களில் நிரப்பினார்கள். பின்னர் அந்த இரண்டு தோல் பைகளின் அடிப்புற வாயைக் கட்டிவிட்டுத் தண்ணீர் செலுத்தும் மேற்புற வாயைக் கட்டாமல்விட்டுவிட்டார்கள். 'எல்லோரும் வந்து தண்ணீர் குடியுங்கள். சேகரித்து வையுங்கள்' என்று மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.

    விரும்பியவர்கள் குடித்தார்கள்; விரும்பியவர்கள் பாத்திரங்களில் எடுத்து வைத்தார்கள். குளிப்புக் கடமையானவர் கடைசியாக வந்தார், அவருக்கு ஒரு பாத்திரம் தண்ணீர் கொடுத்து, 'இதைக் கொண்டு போய் உம் மீது ஊற்றிக் கொள்ளும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தப் பெண் தன்னுடைய தண்ணீர் எந்தெந்த வகையிலெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கவனித்துக் கொண்டே நின்றாள். அவளுடைய உள்ளத்தில் நபி(ஸல்) மீது இருந்த வெறுப்பு நீங்கியது.

    அந்த இரண்டு தோல் பைகளிலிருந்து முதலில் தண்ணீரை எடுக்கும்போது இருந்ததை விட அதிகமான தண்ணீர் அத்தோல் பையில் இருப்பது போன்றும் தண்ணீர் குறையாதது போன்றும் இருந்தது. “அந்தப் பெண்ணுக்கு ஏதாவது சேகரித்துக் கொடுங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவளுக்காகப் பேரீச்சம் பழம், மாவு போன்றவற்றைச் சேகரித்தார்கள். அவளுக்குப் போதுமான உணவு சேர்ந்தது. அதைத் துணியில் வைத்துக் கட்டி அவளை ஒட்டகத்தின் மீது அமரச் செய்து உணவுப் பொட்டலமுள்ள துணியை அவளுக்கு முன்னால் வைத்தார்கள். பின்னர், அந்தப் பெண்ணிடம் “உன்னுடைய தண்ணீரிலிருந்து எதையும் நாங்கள் குறைக்கவில்லை. அல்லாஹ்தான் எங்களுக்குத் தண்ணீர் புகட்டினான் என்பதைத் தெரிந்து கொள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அந்தப் பெண் தன்னுடைய குடும்பத்தினரிடம் சென்று நிகழ்ந்த ஆச்சரியமான விஷயத்தை விவரித்தாள். அவள் சந்தித்தவர் இந்த வானத்திற்கும் இந்தப் பூமிக்கும் இடையிலுள்ள சூனியக்காரர்களில் அவர் மிகச் சிறந்தவராக இருக்க வேண்டும். அல்லது அல்லாஹ்வின் இறைத்தூதராக இருக்க வேண்டும் என்றாள்.

    பின்னர் முஸ்லிம்கள் அந்தப் பெண்ணைச் சுற்றி வாழ்ந்தவர்களை எதிர்த்துப் போராடினார்கள். அப்போது அந்தப் பெண்ணின் குடும்பத்தை அணுகி “நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா?” என்று கேட்டபோது அவர்கள் எல்லோரும் அப்பெண்ணின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு இஸ்லாத்தில் இணைந்தார்கள்

    இஸ்லாமின் அற்புதங்களால் இஸ்லாத்தை மக்கள் ஏற்றனர், போற்றினர்.

    ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 1:7:344

    - ஜெஸிலா பானு.
    நபிகள் நாயகம், சொன்னதைச் செய்தார்; அதையும் முதலிலேயே அவர்தான் செய்வார்; மக்களுக்குக் கட்டளையிட்டதை விட அதிகமாகச் செய்வார்.
    ‘‘சொன்னதைச் செய்- அதை நீயே முதலில் செய். மாற்றம் உன்னில் இருந்தே தொடங்கப்படும்’’ - இக்கோட்பாட்டைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே வாழ்வில் வெற்றி பெற முடியும்; சமூகத்தில் தாக்கங்களை ஏற்படுத்த முடியும். ஊருக்கு உபதேசம் செய்யும் உத்தமர்களால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 23 ஆண்டுகளில் அரேபிய மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டார்கள். அரேபிய சமூகத்தில் முழுமையான மாற்றங்களைக் கொண்டு வந்தார்கள். அதற்கான காரணங்களில் ஒன்று, தாம் சொல்லியதைச் செய்வார். எல்லோருக்கும் முன்னதாக அவரே செய்வார். சமயக் கடமைகள், நற்பண்புகள், சமூக சேவை, அநீதிகளுக்கு எதிரான போராட்டம் என எல்லாவற்றிலும் அவரே முதல் ஆளாக நிற்பார். இதற்குச் சான்றாக அவரது வாழ்வில் இருந்து சில நிகழ்வுகளைக் காணலாம்.

    மதீனாவாசிகள் ஒருநாள் இரவு ஒரு பலத்த ஓசையைக் கேட்டு அச்சமுற்றனர். ஓசை வந்த திசையை நோக்கி மக்கள் விரைந்து சென்றனர். ஆனால் நபிகள் நாயகம் அதற்கு முன்பே ஓசை வந்த இடத்திற்குச் சென்று, அதன் விவரத்தை அறிந்து திரும்பிக் கொண்டிருந்தார்கள். குதிரையில் எந்தவித சேணமும், கடிவாளமும் இன்றி சென்று வந்தார்கள். மக்களைப் பார்த்து, ‘‘நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை’’ என்று கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)

    ஒரு பயணத்தின்போது, சமையல் செய்வதற்காக தோழர்கள் விறகுகளைப் பொறுக்கப் புறப்பட்டனர். நபிகள் நாயகம் அவர்களோடு இணைந்து கொண்டார்கள். தோழர்கள், நபிகளாரை வர வேண்டாம் என்று தடுத்தும் அதனை அவர்கள் பொருட் படுத்தவில்லை. ‘‘நான் உங்களில் ஒருவன்; என்னை நீங்கள் தனிமைப்படுத்தி விடாதீர்கள்’’ என்றார்கள்.

    அன்றொரு நாள் ஒரு கிராமவாசி பள்ளிவாசலில் சிறுநீர் கழித்து விட்டார். தோழர்கள், அம்மனிதரை அடிக்க முற்பட்டபோது, நபிகளார் அவர்களைத் தடை செய்து, ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வரச் செய்து, தமது கரங்களாலேயே துப்புரவு செய்தார்கள். இப்பணியைச் செய்யும்படி தோழர்களை நபி களார் ஏவியிருந்தால் அவர்கள் முண்டியடித்துச் செய்வதற்குத் தயாராக இருந்தனர்.

    பள்ளிவாசல் கட்டும் பணியிலும் அவர் பங்கேற்றார். மக்காவில் இருந்து புலம் பெயர்ந்து நபிகளார் மதீனா சென்ற பின் செய்த முதற்பணி பள்ளிவாசல் கட்டியதே. இரண்டு அநாதை களுக்குச் சொந்தமான இடத்தை விலை கொடுத்து வாங்கி பள்ளிவாசல் கட்டும் பணி தொடங்கியது. தோழர்களோடு தோழராக தாமும் பள்ளிவாசல் கட்டுவதற்கு மண் சுமந்தார்.

    சில வேளைகளில் நபிகளார், போர்க்களங்களைச் சந்திக்கும் கட்டாயத்திற்கு உள்ளானார். போரிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டால், முதலாவதாக போர்க் கவசம் தரிப்பது அவராகத்தான் இருக்கும்.

    ஒரு போரில் எதிரிகளின் முன்னேற்றத்தைத் தடுக்க அகழ் தோண்டுவது என்று முடிவு எடுக்கப்பட்டது. அகழ் தோண்டும் பணியில் தோழர்களோடு தம்மையும் இணைத்துக் கொண்டார், நபிகளார்.

    23 ஆண்டு கால பணிக்குப் பின்னர், அவரது மறைவுக்கு மூன்று மாதத்திற்கு முன்னர், மக்காவில் உள்ள அரபா பெரு வெளியில் திரண்டிருந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான தோழர்களிடையே இறுதி உரை ஆற்றினார்.

    ‘‘அறிந்து கொள்ளுங்கள்! (இஸ்லாத்திற்கு முந்தைய) அறியாமைக் காலத்து அநாகரிக பழக்க வழக்கங்கள் அனைத்தும் இப்போது எனது காலடியின் கீழ் மிதிக்கப்படுகின்றன. அறியாமைக் காலத்தில் நடந்த கொலைகளுக்கு நீங்கள் பழி வாங்குவதை விட்டு விட வேண்டும். முதலாவதாக எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபிஆ - இப்னு - ஹாரிசின் மகனுக்காக பழி வாங்குவதை நான் விட்டு விடுகிறேன்.

    வட்டி இன்றோடு தடை செய்யப்படுகிறது. முதலை மட்டும் நீங்கள் வசூலித்துக் கொள்ளலாம். முதலில் என் குடும்பத்தைச் சேர்ந்த அப்பாஸ்- இப்னு- அப்துல் முத்தலிபிற்கு வர வேண்டிய வட்டி பாக்கியை தள்ளுபடி செய்கிறேன்’’

    இவ்வாறு எல்லா விஷயங்களிலும் தாம் சொன்னதைச் செய்ததோடு, அதைத் தானே முதலில் செய்பவராகவும் இருந்தார்.

    இதனைத் தாண்டியும் அவரிடத்தில் இன்னொரு சிறப்பம்சம் இருந்தது. அது மக்களுக்கு அவர் ஏவியதை விட அதிகமாகவே செய்வார்.

    ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுமாறு மக்களுக்கு கட்டளையிட்டார். ஆனால் அவரோ எட்டு முறை தொழுதார். இரவில் மூன்றில் ஒரு பகுதி விழித்து வணங்கினார். நபிகளாரின் மனைவி ஆயிஷா ஒருமுறை, ‘‘இறைவன் உங்களுடைய எல்லாப் பாவங்களையும் மன்னித்து விட்ட பிறகு உங்களை ஏன் நீங்கள் சிரமத்திற்குள்ளாக்குகிறீர்கள்?’’ என்று வினவியபோது நபிகளார், ‘‘நான் ஒரு நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டு மல்லவா?’’ என்று பதில் அளித்தார்.

    ஆண்டில் ஒருமுறை 30 நாட்கள் நோன்பு நோற்பது கடமை என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவர் வாரத்தில் இரண்டு நாட்கள் உபரியாக நோன்பு நோற்றார். இடைவெளியின்றி தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டாமென மக்களுக்கு அறிவுரை பகர்ந்தார். ஆனால் அவரோ இரவில் கூட உணவு அருந்தாமல் தொடர்ந்து நோன்புகள் நோற்றார்.

    வருமானத்தில் ஒரு சிறிய பகுதியை தானமாகக் கொடுக்க வேண்டுமென மக்களைப் பணித்தார். ஆனால் அவரோ, தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளாமல் அனைத்தையும் தானமாக வழங்கினார். ‘‘உஹது மலையே தங்கமாக மாற்றி என்னிடம் கொடுக்கப்பட்டாலும், மூன்று நாட்களுக்குள் அதனை நான் தானமாக வழங்கி விடுவேன். அதில் இருந்து ஒரு தினார் கூட என்னிடத்தில் இருப்பதை நான் விரும்ப மாட்டேன்’’ என்று கூறினார்.

    இவ்வாறு நபிகள் நாயகம், சொன்னதைச் செய்தார்; அதையும் முதலிலேயே அவர்தான் செய்வார்; மக்களுக்குக் கட்டளையிட்டதை விட அதிகமாகச் செய்வார்.

    இப்பண்புகளை கொண்டிருந்த மாத்திரத்தினாலேயே, அவரால் சிறந்த தலைவராகவும், வழிகாட்டியாகவும் திகழ முடிந்தது.

    நபிகளாரின் இந்த முன்மாதிரியைப் பின்பற்றி வாழ்ந்தால், நம்மையும் உயர்த்தலாம்; நாட்டையும் உயர்த்தலாம்.

    -டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத்
    எல்லாத் தடைகளையும் தாண்டி தபூக்கிலிருந்து நபி (ஸல்) மதீனா வந்தடைந்தார்கள். இதுவே நபி (ஸல்) கலந்து கொண்ட இறுதிப் போராகும்.
    ரோமர்கள் முஸ்லிம்களின் படைபலத்தை உணர்ந்தனர். இனி முஸ்லிம்களுக்குத்தான் பணிய வேண்டுமென்றும் புரிந்துக் கொண்டனர். இஸ்லாம் வளர்ந்து ரோம ராஜ்ஜியத்தைத் தொட்டது.

    இதற்கிடையில் தூமத்துல் ஜந்தலின் தலைவரான உகைதிரை காலித் பின் வலீத்(ரலி) அவர்கள் தமது படையுடன் சென்று சூழ்ந்து பிடித்துவிட்டனர். உகைதிர் தனது உயிரைப் பாதுகாப்பதற்காக இரண்டாயிரம் ஒட்டகங்கள், நானூறு கவச ஆடைகள், நானூறு ஈட்டிகள், எண்ணூறு அடிமைகளும், ஒவ்வொரு ஆண்டும் வரி கட்டுவதாகவும் ஒப்பந்தம் செய்தார்.

    நபி(ஸல்) அவர்கள் மற்றவர்களுக்குச் செய்த ஒப்பந்தம் போலவே உகைதிருடனும் செய்து கொண்டார்கள். மகிழ்ந்த உகைதிர் நபி(ஸல்) அவர்களுக்குப் பட்டு மேலங்கித் துணி ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். ஆண்களுக்குப் பட்டாடை அணிவது தடை செய்யப்பட்டிருந்தது. மக்களோ அந்த மேலங்கியின் தரம் மற்றும் மென்மையைக் கண்டு வியந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், “சொர்க்கத்தில் சஅத் பின் முஆத் அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் இதைவிட அழகானவை ஆகும்” என்று சொல்லி அலீ(ரலி) அவர்களிடம் அந்தப் பட்டாடையைத் தந்து இதை முக்காடுகளாக வெட்டி, ஃபாத்திமாக்களிடையே பங்கிட்டு விடுங்கள்” என்று சொன்னார்கள்.

    இஸ்லாமிய ராணுவம் எந்தச் சண்டையுமின்றி வெற்றியுடன் தபூக்கிலிருந்து மதீனாவிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். வழியிலேயே நபி(ஸல்) அவர்களைக் கொன்றுவிட வேண்டுமென்று ஒரு கூட்டத்தினர் முடிவு செய்து கூட்டமில்லாத நேரம் பார்த்து முகமூடி அணிந்த பன்னிரெண்டு நபர்கள் நபி(ஸல்) அவர்களைச் சூழ்ந்துக் கொண்டனர்.

    அப்போது நபி(ஸல்) அவர்களுடன் இருந்தது அம்மார் மற்றும் ஹுதைஃபா(ரலி) மட்டுமே. சமயோசிதமாக ஹுதைஃபா(ரலி) தனது வளைந்த கைத்தடியால் சூழ்ச்சியாளர்களின் வாகனங்களின் முகத்தை நோக்கி சுழற்றி அடித்தார். அந்த நயவஞ்சகக் கும்பலுக்குப் பயம் கவ்வியது, தப்பி ஓட்டம்பிடித்தனர். முஸ்லிம்களின் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து விட்டனர்.

    இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ‘நபியின் அந்தரங்கத் தோழர்’ என்ற பெயரைப் பெற்றார் ஹுதைஃபா(ரலி). அப்போது அல்லாஹ்விடமிருந்து, “உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதி அவர்கள் தங்களால் சாத்தியப்படாமல் போனதொரு காரியத்தைச் செய்யவும் முயற்சித்தனர்” என்ற இறை வசனம் அருளப்பட்டது.

    எல்லாத் தடைகளையும் தாண்டி தபூக்கிலிருந்து நபி (ஸல்) மதீனா வந்தடைந்தார்கள். இதுவே நபி (ஸல்) கலந்து கொண்ட இறுதிப் போராகும்.

    ஆதாரம்: அர்ரஹீக் அல்மக்தூம், ஸஹீஹ் முஸ்லிம் 44:4873, 37:4209, ஸஹீஹ் புகாரி: 3:51:2616, திருக்குர்ஆன் 9:74
    நம்மைப் படைத்த இறைவனை நினைவில் இருத்தி, ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே) என்று நெஞ்சார, வாயார அவனைப் புகழ்ந்து நன்றி செலுத்தக் கூடிய மக்களாக நாம் இருக்க வேண்டும்.
    மனிதர்கள் ஒருவருக்கொருவர் நன்றி என்னும் வார்த்தையை அடிக்கடி பரிமாற்றம் செய்து கொள்வதை நாம் பார்க்கிறோம். நன்றி செலுத்தும் வழக்கம் மனிதர்களுக்கு இயல்பிலேயே இருக்கும் உணர்ச்சியாகும்.

    ஒரு மனிதருக்கு சக மனிதரிடம் இருந்து பயன் கிடைக்கும் பொழுது அகமும், முகமும் மலர தன் நன்றியைத் தெரிவிக் கிறார். உதவி கிடைத்தவுடன் நன்றி செலுத்தும் மனிதன், தனக்கு உதவி செய்த ஒரு மனிதர் துன்பத்தில் இருக்கும் பொழுது அல்லது அவருக்கு உதவி தேவைப்படும் பொழுது கண்டுகொள்ளாமல் உதாசீனம் செய்யும் போது ‘நன்றி கெட்ட மனிதன்’ என்ற அவப்பெயரை சம்பாதித்துக் கொள்கிறான்.

    ஐந்தறிவு படைத்த விலங்கினங்களே தம்மைப் பராமரிப்பவருக்கோ அல்லது ஒரு வேளை உணவு தருபவருக்கோ நன்றி விசுவாசத்துடன் இருக்கும் பொழுது, இந்தப்பண்பு நம்மிடம் இல்லை என்றால் நாம் ஆறறிவு படைத்தவர்கள் என்று சொல்லத் தகுதியற்றவர்கள். இன்னும் நாம் மனிதர்களே அல்லர் என்று கூட சொல்லலாம்.

    ‘யார் மனிதர்களுக்கு நன்றி செலுத்தவில்லையோ, அவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவராக மாட்டார். ஒரு மனிதருக்குப் பிற மனிதர்கள் மீதுள்ள கடமைகளில் முக்கியமானது, தமக்கு நன்மை செய்தவருக்கு நன்றி தெரிவிப்பதாகும்’.

    இதில் இன்னும் ஒன்றையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். உதவி செய்தவர்களை நினைவில் வைத்து தங்களால் முடிந்த பிரதி உபகாரம் செய்ய முடியவில்லை என்றாலும், அவர்களுக்காக பிரார்த்தனை செய்வது ஒரு ஒழுங்கு. அதுபோலவே பிறருக்கு உதவி செய்பவர்கள் தங்களால் பயன் அடைந்த மக்கள், தங்களுக்கும் ஏதாவது ஒரு உதவி செய்தே ஆக வேண்டும் என்றோ, தங்கள் காலடியில் கிடக்க வேண்டு மென்றோ அல்லது தங்கள் சொல் கேட்டு நடக்க வேண்டும் என்றோ நினைப்பது தவறு.

    ஒரு மனிதருக்கு மற்றொரு மனிதர் மூலம் உதவி கிடைக்கும் பொழுது, அந்த உதவி அல்லாஹ்வின் நாட்டப்படியே கிடைத்த தென்றும், இறைவன் நாடியிருக்காவிட்டால், இன்ன மனிதரிடம் இருந்து இந்த உதவி எனக்குக் கிடைத்திருக்காது என்றும் உறுதியாக நம்பவேண்டும்.

    உதவி செய்த மனிதருக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில் இறைவனுக்கு நன்றி செலுத்த மறந்து விடக்கூடாது. உதவி தேவைப்படும் நேரங்களில் எந்த மனிதரையும் நாடிச் செல்லாமல் இறைவனிடமே அழுது புலம்ப வேண்டும். உன்னைத் தவிர எனக்கு வேறு கதி இல்லையென்று மன்றாடிக் கேட்க வேண்டும். எந்தக் காரணத்தினாலும் மனிதர்கள் முன் அழுது கையேந்தக் கூடாது.

    உள்ளத்தில் நாம் மறைத்து வைத்திருக்கும் அனைத்தையும் அறியும் வல்லமை படைத்த அந்த இறைவனிடத்தில் இருந்து நமக்கு எப்படியும் உதவி கிடைக்கும் என்ற உறுதி நம் உள்ளத்தில் எப்பொழுதும் நிலைத்திருக்க வேண்டும்.

    கடினமான நேரங்களில் இரு கரம் ஏந்தி இறைவனிடம் உதவி கேட்கும் பெரும்பாலான மனிதர்கள், உதவி கிடைத்தவுடனோ அல்லது மகிழ்ச்சியான தருணங்களிலோ இறைவனை மறந்து விடுவதுடன் அவனைத் துதி செய்வதுமில்லை.

    இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்: ‘(மனிதர்களே) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித் தந்தோம். எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்ப மேயாகும்’ (7:10).

    சிறு, சிறு உதவிகள் கிடைக்கும் பொழுது உதவி செய்யும் மனிதர்கள் மீது பரிவும், பாசமும் காட்டும் நாம், நம்மை இந்த உலகத்தில் பிறக்கச் செய்து, நமக்கு உறவுகளுடன், உணவு, உடை, இருப்பிடம், செல்வம், நோயற்ற நாட்கள் என எவ்வளவோ அருட்கொடைகளை அள்ளி, அள்ளி வழங்கியுள்ள இறைவனுக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதையும், அவன் மீதே அளவற்ற அன்பையும், நன்றியறிதலையும் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

    இறைவன் நமக்குத் தந்த அருட்கொடைகளுக்காக, நம் வாழ்வையே அர்ப்பணிக்கச் சொல்லி கட்டளை இடவில்லை. நமது கடமைகளான குடும்பத்தை நிர்வகித்தல், சம்பாத்தியம், உண்ணுதல், உறங்குதல். பொழுதுபோக்குகள், இயற்கை கடன்கள் கழித்தல் போன்ற தேவையான விஷயங் களுக்கு நம்முடைய நேரத்தை செலவிடுதல் தவறல்ல.

    அதே நேரத்தில் இவ்வுலக விஷயங்களிலேயே மூழ்கி விடாமல், ஐவேளைத் தொழுகைகளை உரிய நேரத்தில் தொழுவதுடன், நேரம் கிடைக்கும் போது உபரியான தொழுகைகளையும் நிறைவேற்றி நம்முடைய இறைவனுக்கு நம் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். இன்னும் ஏழைகள், அநாதைகள், தேவையுடைய உறவினர்கள், உறவினர் அல்லாத மக்கள் ஆகியோருக்கு உதவிகள் செய்தல் போன்ற நற்செயல்களை செய்வது, இறைவனின் அருட் கொடைகளுக்காக நாம் நன்றி செலுத்துதல் போல் ஆகும்.

    ‘நபி (ஸல்) அவர்கள் தங்கள் கால்கள் வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டபோது, நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா? என்று பதில் அளித்தார்கள்’ (புகாரி).

    பாவங்களுக்கு அப்பாற்பட்ட நபி (ஸல்) அவர்களே தங்களை வருத்திக்கொண்டு தொழுது, தங்களின் நன்றியை இறைவனுக்கு செலுத்தக் கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள் என்றால், மிகச்சாதாரண மனிதர்களான நாம் எவ்வளவு நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும். அத்துடன் நம்மைப் படைத்த இறைவனை நினைவில் இருத்தி, ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே) என்று நெஞ்சார, வாயார அவனைப் புகழ்ந்து நன்றி செலுத்தக் கூடிய மக்களாக நாம் இருக்க வேண்டும்.

    ம. அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை-84.
    பெண்களின் மாண்பை உயர்த்தும் வகையில் பல கருத்துகளைச் சமூகத்தில் பதிய வைத்து, பெண்களைப் பற்றிய கண்ணோட்டத்தை நபிகள் நாயகம் மாற்றி அமைத்தார்கள்.
    பெண்கள் மனித இனத்தில் சரி பாதியாக உள்ளனர். பெண்களை மதிக்காத, அவர்களுக்குச் சம உரிமை வழங்காத ஒரு சமூகம் முன்னேற்றப் பாதையில் நடைபோட முடியாது. உலகம் இன்று விஞ்ஞானம், தொழில்நுட்பம் என எல்லாத் துறைகளிலும் கொடி கட்டிப் பறந்தாலும், பெண்களை இழிவாக, சுமையாக, போகப் பொருளாக பார்க்கும் நிலை நீடிக்கிறது. பெண்களைச் சுமையாகப் பார்த்ததன் விளைவாக இந்த நூற்றாண்டிலும் கருக்கொலை, சிசுக்கொலை தொடர்கிறது. இதன் காரணமாக நமது நாட்டில் நாளுக்கு நாள் பெண்களின் விகிதாச்சாரம் குறைந்து கொண்டே வருகிறது. இன்று ஆயிரம் ஆண்களுக்கு 940 பெண்கள் என்ற நிலை உள்ளது.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த ஏழாம் நூற்றாண்டிலும் பெண்களைச் சுமையாகப் பார்க்கும் நிலை இருந்தது. “என் மகள் என் முன்னே இறக்க வேண்டும்; அவள் என்னை இழிவில் இருந்து காக்க வேண்டும்; மகளைப் புதைப்பது புனித செயல்” என்ற கருத்துகள் மக்களிடையே இருந்தன. பெண் குழந்தைகள் பிறந்தால், அதனை அவமானமாகக் கருதுவார்கள்; சினமுறுவார்கள். அந்தக் குழந்தைகளை உயிரோடு வைத்துக் கொள்வதா அல்லது புதைத்து விடுவதா என்று குழம்பி நிற்பார்கள். சமூகத்தை விட்டு ஒளிந்து கொள்வார்கள்.

    நபிகள் நாயகம் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வைப் பாருங்கள்.

    நபிகளார் தோழர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலத்து பேச்சு எழுந்தது. ஒரு தோழர் தன் அடி மனதில் உறைந்து கிடந்த நிகழ்வைச் சொல்லத் தொடங்கினார்.

    “இறைத் தூதரே! அந்த அறியாமைக் காலத்தில் என் மனைவி நிறை மாதக் கர்ப்பிணியாக இருந்த நேரம். நான் வியாபார விஷயமாகப் பயணம் செல்ல வேண்டிய கட்டம். என் மனைவியிடம், ‘ஆண் குழந்தை பிறந்தால் பத்திரமாகப் பார்த்துக் கொள். பெண் குழந்தை பிறந்தால் கொன்று புதைத்து விடு’ என்று சொன்னேன். பிறகு நான் பயணத்தில் இருந்து திரும்பியபோது மனைவி என்னிடம், ‘நமக்குப் பெண் குழந்தை பிறந்தது. நல்லவேளை அது இறந்து விட்டது’ என்று சொன்னாள்.

    சில ஆண்டுகள் சென்றன. ஒருநாள் என் வீட்டிற்கு ஒரு அழகான பெண் குழந்தை வந்து விளையாடுவதைக் கண்டு, ‘யாரவள்?’ என்று திடுக்கிட்டுக் கேட்டேன். அதற்கு என் மனைவி, ‘பக்கத்து வீட்டுக் குழந்தை’ என்றாள். அந்தக் குழந்தை என்னிடம் பழகத் தொடங்கியது. குழந்தைக்கும் எனக்கும் இடையே இருந்த பாசத்தைக் கண்ட என் மனைவி, ‘இந்தக் குழந்தை மீது உங்களுக்கு அவ்வளவு பாசமா?’ என்று கேட்டாள். ‘ஆம்.. இவள் என் உயிரல்லவா?’ என்றேன். அப்போது என் மனைவி, ‘அன்று நான் சொன்னது பொய். இது பக்கத்து வீட்டு குழந்தை அல்ல. நம் குழந்தைதான். உங்களுக்குப் பயந்து நான் அப்படிச் சொன்னேன்’ என்றாள்.

    நான் மகிழ்ச்சியில் நனைந்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் அறியாமைக் காலத்து வெறித்தனத்தில் நான், அந்தக் குழந்தையைக் கொல்ல முடிவு செய்தேன். ஆனாலும் பாசம் என்னை விடவில்லை. பாசத்திற்கும், அறியாமைக் கால சிந்தனைகளுக்கும் இடையே நடந்த போராட்டத்தில் பாசம் தோற்றது.

    ஒருநாள் என் அன்பு மகளைப் பாலை வெளிக்கு அழைத்துச் சென்றேன். என்னுடன் அவள் விளையாடிக் கொண்டும், கதை பேசிக் கொண்டும் இருந்தாள். ஒரு இடத்தில் குழி தோண்டினேன். பாலை வனத்தின் மணல் என் தாடியில் பதிந்தன. அந்தச் செல்ல மகள் ஏதும் அறியாமல், தன் பிஞ்சு விரல்களால் என் தாடியில் உள்ள மணலைத் தட்டி விட்டாள். இறைத்தூதரே! நான் கல்நெஞ்சக்காரன். என் மகளைக் குழியில் தள்ளி மணலைப் போட்டு, உயிரோடு புதைத்து விட்டேன்” என்று நபித் தோழர் சொன்னபோது, நபிகளார் அழ ஆரம்பித்து விட்டார்.

    அருகில் இருந்த தோழர்கள், அந்தத் தோழரைப் பார்த்து, “என்ன காரியம் செய்தீர்? நபிகளாரையே அழச் செய்து விட்டீரே!” என்றபோது, நபிகள் நாயகம், “அந்தக் காலம் மறைந்து விட்டது. நாம் பாவமன்னிப்பைத் தேடி மீண்டு விட்டோம்” என்று கூறியவண்ணம் தனது தாடி நனையும் அளவு அழுதார்கள்.

    பின்னர் நபிகள் நாயகம் கூறினார்கள்: “நாம் எவ்வளவு கல் நெஞ்சகர்களாய் இருந்துள்ளோம். (இஸ்லாத்தின் வருகைக்கு முந்தைய) அறியாமைக் காலத்தில் செய்த செயல்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்து விடுவான். ஆகவே உமது நற்செயல்களை புதுப்பித்துக் கொள்வீராக!” என்று அத்தோழரைப் பார்த்துக் கூறினார்கள்.

    நபிகள் நாயகம் தாம் வாழ்ந்த காலத்திலேயே பெண் குழந்தைகளைப் புதைக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். “வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தை களைக் கொல்லாதீர்கள்” (6:151) என்ற இறை வசனத்தை ஓதிக் காட்டினார்கள். மறுமையில் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையிடம், “எந்தக் குற்றத்திற்காக நீ கொல்லப்பட்டாய்?” (81:8) என்று கேட்கப்பட்டு, குற்றம் புரிந்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என்பதைக் கூறி மக்களை எச்சரித்தார்கள்.

    “ஒருவன் தன் பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்காமலும், கொடுமைப்படுத்தாமலும், ஆண் குழந்தைகளுடன் ஒப்பிட்டு வேறுபாடு காட்டாமலும் இருந்தால், இறைவன் அவனைச் சொர்க்கத்தில் நுழையச் செய்வான்” என்று நபிகள் நாயகம் கூறினார்கள். (நூல்: அபூதாவூத்)

    “ஒருவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்து, அவர்களைச் சிறந்த முறையில் வளர்த்து, கருணை புரிந்து, எந்தவிதக் கேடும் செய்யாமல் இருந்தால் அவருக்குச் சொர்க்கம் நிச்சயம்” என்றார்கள், நபிகள் நாயகம்.

    அருகில் இருந்த நபித்தோழர் கேட்டார்: “இறைத்தூதர் அவர்களே! இரு பெண் குழந்தைகள் என்றால்...?” அதற்கு நபிகளார், “இரு பெண் குழந்தைகள் என்றாலும் சரியே!” என்றார்கள்.

    ஆண்களும், பெண்களும் ஒரே மூலத்தில் இருந்தே படைக்கப்பட்டார்கள். எனவே இருவருமே கண்ணியத்திற்குரியவர்கள், சமமானவர்கள்.

    இவ்வாறு பெண்களின் மாண்பை உயர்த்தும் வகையில் பல கருத்துகளைச் சமூகத்தில் பதிய வைத்து, பெண்களைப் பற்றிய கண்ணோட்டத்தை நபிகள் நாயகம் மாற்றி அமைத்தார்கள். பெண் சிசுக் கொலையை நிறுத்தியதோடு பெண்களுக்குப் பல உரிமைகளையும் வழங்கினார்கள். மண விலக்குப் பெறும் உரிமை, மறுமண உரிமை, பொருளீட்டும் உரிமை, சொத்துரிமை, வாரிசுரிமை, கல்வி உரிமை, அரசியலில் பங்கேற்கும் உரிமை என ஆண்களுக்குரிய எல்லா உரிமைகளையும் பெண்களுக்கும் வழங்கினார்கள்.

    நமது நாட்டில் தொடரும் கருக் கொலை களையும், சிசுக் கொலைகளையும் தடுத்து நிறுத்தாவிடில், பெண்களின் எண்ணிக்கையில் மிகப் பெரும் சரிவு ஏற்பட்டு, பல சமூக பிரச்சினைகள் உருவாகும். இத்தீமைக்கு மூல காரணமான வரதட்சணை, சீர் வரிசைகள் ஆகியவற்றுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம், பெண்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்து நிறுத்த முடியும்.

    பெண்கள் சுமையல்ல; அவர்கள் சுமைதாங்கிகள்.

    - டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத்
    இறைவன் ஒருவனே! அவன் (எவரிடத்திலும்) தேவையற்றவன், அவன் (எவரையும்) பெறவுமில்லை, (எவராலும்) பெறப்படவுமில்லை, (அத்தனித்தவனுக்கு) ஒப்பாக எதுவும் இல்லை’ (112:1-4).
    அண்ணல் நபி (ஸல்) அவர்கள், எழுதவும் படிக்கவும் பழகாதவர்கள். இருப்பினும் உலக விஷயங்களை உணர்ந்து தெரிந்து கொள்வதில் அதிக ஆற்றல் மிக்கவர்களாக விளங்கினார்கள். அதனால் அவர்கள் ‘உம்மி நபி’ என்று அழைக்கப்பட்டார்கள்.

    தனது உலக வருகை மிக உன்னதமானது என்பதை இளம் வயதிலேயே நபிகளார் புரிந்து கொண்டார்கள். இதனால் அவர்களது தேடல் பரந்து விரிந்து இருந்தது. ‘இந்த பிரமாண்ட மான பிரபஞ்சம் யாரால் உருவானது, நான் எங்கிருந்து புறப்பட்டு வந்தேன், எங்கே சென்று சேரப்போகின்றேன், எனது இறைவன் யார்?’ என்ற கேள்விகளுக்கு விடை காண அயராத முயற்சியில் ஈடுபட்டார்கள்.

    உயரிய இந்த சிந்தனைகள், உண்மையாளராகவும், நம்பிக்கைக்கு உரியவராகவும், ஒழுக்கம் மிக்கவர்களாகவும், நீதியை கடைப்பிடிக்கக் கூடியவர்களாகவும், அனைவரையும் அரவணைக்கும் அன்பாளராகவும் நபிகளாரை மிளிரச் செய்தது.

    அந்த காலகட்டத்தில் மக்களிடம் காணப்பட்ட, மத இன வேறுபாடுகள், பல கடவுள் கொள்கைகள், மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் அறியாமை, பெண் குழந்தைகள் பிறந்தால் உயிரோடு மண்ணில் புதைத்திடும் மடமை, வட்டி என்னும் ஆயுதம் கொண்டு வறுமையில் வாடும் மனிதர்களை வதைத்தது, போகப்பொருளாக பெண்களை பயன்படுத்தியது போன்ற கொடுஞ்செயல்களை கண்டித்தார்கள். இத்துடன் மது மயக்கத்தில் வீழ்ந்து கிடந்த மனித சமுதாயத்தை மீட்டெடுத்து நேர்வழிகாட்ட விரும்பினார்கள்.

    அதற்காக ‘ஹீரா’ என்ற மலைக்குகையில் தனிமையை நாடி சிந்தனையில் ஆழ்ந்தார்கள், தனது 40-ம் வயதில் இறையருளால் நிறை நிலையை அடைந்த நபிகளார், இறைச்செய்தியை பெறத்தொடங்கினார்கள். இறைச்செய்தியின் மூலம் நேர் வழியின் பக்கமும், சத்தியத்தின் பக்கமும், சமத்துவத்தின் பக்கமும் மக்களை அழைத்தார்கள்.

    ‘(இந்த குர்ஆன்) மனிதர்களுக்கு (உண்மையின்) விளக்கமாகவும். நேர்வழி காட்டியாகவும், பயபக்தியுடைய மக்களுக்கு நற்போதனையாகவும் உள்ளது’ என்பது திருக்குர்ஆன் வசனமாகும். (3:138)

    இந்த சத்தியத்தை கண்ட எதிர்மறை சிந்தனையாளர்கள் இடி விழுந்ததைப் போன்று திகைத்து நின்றார்கள். ஆதிக்க சக்திகள் அதிர்ந்து போனார்கள். இந்த சத்திய ஜோதியை தங்களது வாயால் ஊதி அணைத்திட சதி செயல்களிலும், அழிச்சாட்டியத்திலும் ஈடுபட்டார்கள். ஆனால், அண்ணலாரின் அகிம்சையின் முன்பு இவை அனைத்தும் தோல்வியை தழுவின.

    ‘அழகிய பெண்ணை மணமுடித்து தருகிறோம். ஆட்சி அதிகாரத்தையும் தருகிறோம். அளவற்ற செல்வத்தை அள்ளித் தருகிறோம். முஹம்மதே, கடவுள் ஒருவரே என்பதையும், இறைவனின் முன்னிலையில் அனைவரும் சமம் என்ற சமத்துவத்தையும் கைவிட்டால் நீங்கள் விரும்பியதை நாங்கள் தருகிறோம்’ என நபிகளாரிடம் ஆசை வார்த்தை கூறினார்கள்.

    உலகத்தின் இயல்பை நன்கு புரிந்து கொண்ட நபிகளார் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ‘சூரியனையும், சந்திரனையும் என் கையில் கொண்டு வந்து தந்தாலும், நான் உணர்ந்த உண்மையான ஓர் இறைக்கொள்கையை ஒரு போதும் கைவிட மாட்டேன்’ என்றார்கள். மேலும் அந்தக்கொள்கையில் உறுதியுடனும் நின்றார்கள்.

    நல்லோர்கள் அனைவரின் ஒட்டுமொத்த அடையாளமாக திகழ்ந்த நபிகளார், இவ்வுலகில் பூரணமான ஒரு நிறை நிலை வாழ்வை வாழ்ந்து வழி காட்டினார்கள். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

    ‘தன்னுடைய அடியார்களில் தான் நாடியவர்கள் மீது (‘வஹீ’ என்ற இறைச் செய்தியை) தன்னுடைய அருட்கொடையால் இறைவன் இறக்கி வைத்தற்காக (அவர்கள்) பொறாமை கொண்டு, அவன் இறக்கி வைத்த (இந்த குர்ஆனை) நிராகரித்து (கொண்டு) உலக இச்சைகளுக்கு பகரமாக தங்களது ஆன்மாக்களை விற்று (உலகில்) விடுகிறார்களோ, அச்செயல் மிகவும் கெட்டதாகும். (அதனால்) இறைவனின் கோபத்திற்கு (அவர்கள்) ஆளாகி விட்டார்கள். இறைவனை நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனை உண்டு’. (2:90)

    இந்த பேரண்ட பெருவெளியில் இருப்பவை அனைத்தும் ஓர் இறையாற்றல் கொண்டே வெளியாகி இருக்கின்றது. அந்த இறையாற்றல் இல்லாமல் எதுவும் இங்கு இல்லை. நுண்ணறிவு கொண்டு ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்க்கும் போது, இந்த இறையாற்றல் இல்லாமல் எதனாலும் இயங்க முடியாது. அது அசையும் பொருளாக இருந்தாலும் சரி, அசையாத பொருளாக இருந்தாலும் சரி, அவனது ஆற்றலின்றி எதுவும் இயங்காது.

    நபிகளார் வலியுறுத்தும் ஓர் இறைக்கொள்கை மிகவும் போற்றத்தக்க ஒன்றாகும். ‘உருவமற்ற இறைவனுக்கு நீங்கள் உண்மையாக நடந்து கொள்ளுங்கள்’ என்று மக்களுக்கு போதனை செய்தார்கள். ‘தொடக்கமும் முடிவும் இல்லாத பேராற்றல் ஒன்றே. அனைத்தையும் உருவாக்கியதும் அந்த பேராற்றலே. எல்லா ஆற்றல்களுக்கும் மூல காரணமாக இருப்பதும் அவ்வாற்றலே. கூடுதல் குறைவின்றி என்றும் நிலையாக நிலைத்து இருப்பதுவும் அந்த பேராற்றலே’ என்றார்கள்.

    அந்த பேராற்றலுக்கு உருவமே இல்லை என்கிறபோது அதற்கு பிறப்பும் இல்லை. பிறப்பே இல்லை என்கின்றபோது அதற்கு பெற்றோர்களும் இல்லை. பிறவாமல் நின்று அனைத்தையும் பிறக்கச் செய்கின்றது. அனைத்தின் தேவைகளையும் அளிக்கின்ற அந்த இறையாற்றலுக்கோ எந்த தேவையும் இல்லை. அதனை குர் ஆன் இவ்வாறு கூறுகின்றது:

    ‘நபியே! நீர் கூறுவீராக: இறைவன் ஒருவனே! அவன் (எவரிடத்திலும்) தேவையற்றவன், அவன் (எவரையும்) பெறவுமில்லை, (எவராலும்) பெறப்படவுமில்லை, (அத்தனித்தவனுக்கு) ஒப்பாக எதுவும் இல்லை’ (112:1-4).

    ‘நான்’ என்ற அகங்காரமே, இப்பிரபஞ்ச பேராற்றலின் நுண் இயக்கத்தை உணர விடாமல் மனிதனை தடை செய்கிறது. அவனது நுண்ணறிவு செயல்படும்போது, எங்கும் ஏகமாய் நிரம்பி இயங்குவது இறையாற்றல் ஒன்றே என தெரிந்து கொள்ள முடியும்.

    மு. முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை.
    நபி (ஸல்) படையெடுத்துப் போருக்கு ஆயத்தமாக வந்து விட்டார்கள் என்ற செய்தியை ரோமர்களும் அவர்களது நண்பர்களும் கேட்டவுடன் திடுக்கிட்டனர்.
    இஸ்லாமியப் படை, ரோமர்களைச் சந்திக்க மதீனாவிலிருந்து போருக்குப் புறப்பட்ட காலம் கடுமையான வெயில் காலம். மக்கள் மிகுந்த சிரமத்திலும், பஞ்சத்திலும், வாகனப் பற்றாக்குறையிலும் இருந்தனர். செல்ல வேண்டிய இடம் மிகத் தொலைவில் இருந்ததுடன், அந்தப் பாதையும் கரடுமுரடானதாக இருந்தது. இருப்பினும், முஸ்லிம்கள் நபியவர்களின் கட்டளைக்கிணங்க விரைவாகப் போருக்குத் தயாராகினர். 

    படைக்காக மக்கள் எவ்வளவுதான் செலவு செய்திருந்தாலும் வீரர்கள் பெரும்படையாக -  கிட்டத்தட்ட முப்பதாயிரம் இருந்ததால் - அதற்கேற்ப வாகன வசதியும், உணவும் இல்லாமலிருந்தது. உணவுப் பற்றாக்குறையால் இலை தழைகளைச் சாப்பிட்டதால் வாய் புண்ணாகி விட்டன. அதனால் இப்படைக்கு ‘ஜய்ஷுல் உஸ்ரா (வறுமைப் படை) என்று பெயர் வந்தது. 

    முன்பொரு காலத்தில் ஸமூது கூட்டத்தினர் வசித்திருந்த இடத்திற்கு வந்தடைந்தனர். நபி (ஸல்) அவர்கள் அந்த இடத்தில் ஸாலிஹ் (அலை) அவர்களின் ஒட்டகம் தண்ணீர் குடித்த கிணற்றிலிருந்து மட்டும் நீரை சேமித்துக் கொள்ளும்படி சொன்னதோடு, சபிக்கப்பட்ட இடத்தில் அமைந்த கிணற்றிலிருந்து தண்ணீரைக் குடிக்க வேண்டாமென்று தடுத்தார்கள். 

    படைக்குத் தண்ணீர் தேவை அதிகமாக இருந்தது. நபியவர்களிடம் வந்து முறையிட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், "அல்லாஹ் நாடினால், நாளை நீங்கள் தபூக் ஊற்றுக்குச் செல்வீர்கள். முற்பகலுக்கு முன் நீங்கள் அங்கு சென்றுவிடாதீர்கள். நான் வருவதற்கு முன் உங்களில் எவரும் அங்கு சென்றுவிட்டால், அங்குள்ள தண்ணீரில் கை வைத்துவிட வேண்டாம்" என்று கூறினார்கள். 

    அவ்வாறே மக்கள் அங்கு சென்றனர். இருவர் முந்திக்கொண்டு அந்த ஊற்றை நோக்கிச் சென்றனர். செருப்பு வார் அளவுக்கு அந்த ஊற்றில் தண்ணீர் சிறிதளவே சுரந்துகொண்டிருந்தது. நபி(ஸல்) அவர்கள் வந்துசேர்ந்தார்கள். இருவரிடமும் "அதன் தண்ணீரில் கை வைத்தீர்களா?" என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். இருவரும் "ஆம்" என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் கண்டித்தார்கள். பிறகு மக்கள் தம் கைகளால் அந்த ஊற்றிலிருந்து சிறிது சிறிதாகத் தண்ணீர் அள்ளி ஓரிடத்தில் சேர்த்தனர். 

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தத் தண்ணீரில் தமது கையையும் முகத்தையும் கழுவி அந்த ஊற்றிலேயே அந்தத் தண்ணீரை விட்டார்கள். அப்போது ஊற்றிலிருந்து ஏராளமான தண்ணீர் ‘பீறிட்டு’ நிறைந்து ஓடியது. மக்கள் அனைவரும் தண்ணீர் அருந்தினர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "முஆதே! எனக்குப் பிறகு நீங்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்தால், இவ்விடத்தில் தோட்டங்கள், குடியிருப்புகள் ஆகியவை நிறைந்திருப்பதைக் காண்பீர்கள்" என்று முன்னறிவிப்பாகக் கூறினார்கள். 

    பிறகு போர் வீரர்களிடம் நபி(ஸல்) அவர்கள், "இன்றிரவு உங்கள்மீது கடுமையான காற்று வீசும். அப்போது உங்களில் எவரும் எழுந்திருக்க வேண்டாம். உங்களில் ஒட்டகம் வைத்திருப்பவர் அதைக் கயிற்றால் கட்டிவைக்கட்டும்" என்று கூறினார்கள். அவ்வாறே அன்றிரவு கடுங்காற்று வீசியது. அப்போது ஒருவர் எழுந்தார். அக்காற்று அவரைத் தூக்கிச் சென்று, "தய்யி" குலத்தாரின் இரு மலைகளுக்கிடையே போட்டுவிட்டது. 

    இப்படியாக நபி(ஸல்) சொல்வதெல்லாம் நடந்தேறிக் கொண்டே இருந்தது. படை வீரர்களும் எதிரிகளைச் சந்திப்பதற்கு எந்நேரமும் ஆயத்தமாக இருந்தனர். நபி (ஸல்) எழுந்து நின்று வீரத்திற்கு உரமூட்டும் பேருரை நிகழ்த்தி, ஆன்மாக்களுக்கு வலிமை ஊட்டினார்கள். பொருளாதாரத்தாலும் தயாரிப்புகளாலும் பின்தங்கியுள்ளோம் என எண்ணியிருந்த முஸ்லிம்களிடமிருந்து தாழ்வு மனப்பான்மையையும் சோர்வையும் இந்தப் பிரச்சாரத்தின் மூலமாக அகற்றினார்கள். 

    நபி (ஸல்) படையெடுத்துப் போருக்கு ஆயத்தமாக வந்து விட்டார்கள் என்ற செய்தியை ரோமர்களும் அவர்களது நண்பர்களும் கேட்டவுடன் திடுக்கிட்டனர். அவர்கள் தங்களது பயணத்தைத் தொடர்வதற்கும் இஸ்லாமியப் படையைச் சந்திப்பதற்கும் துணிவின்றித் தங்களது நாட்டுக்குள் பல திசைகளிலும் சிதறி ஓடிவிட்டனர். இஸ்லாமியப் படைக்கு அஞ்சி ரோமர்கள் ஓடிவிட்ட செய்தி முஸ்லிம்களுக்கு மேன்மேலும் புகழ் சேர்த்தது, அரபியத் தீபகற்பத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முஸ்லிம்களின் ராணுவ வலிமையை உயர்த்தியது. 

    ஸஹீஹ் புகாரி 5:64:4419, ஸஹீஹ் முஸ்லிம் 43:4582, 4583, அர்ரஹீக் அல்மக்தூம்

    - ஜெஸிலா பானு.
    பணியாட்கள் உங்களுக்கு ஒத்து வரவில்லையெனில் அவர்களை வேலையில் இருந்து நிறுத்தி விடுங்கள். இறைவனது படைப்புகளை கொடுமைப்படுத்தாதீர்கள்.
    “நான் பத்தாண்டுகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பணியாளராக இருந்தேன். அவர்கள் என்னை ஒருபோதும் அடித்ததில்லை.; ஏன் இப்படிச் செய்தாய்? ஏன் இதைச் செய்யவில்லை? என்று கேட்டதில்லை. என்னைப் பார்த்து ‘சீ’ என்று கூட சொன்னதில்லை” என்று கூறுகிறார், நபிகளாரிடம் பணியாற்றிய அனஸ் மாலிக் (ரலி).

    அபூ மசூத் என்ற நபித் தோழர் கூறுகிறார்: “நான் எனது வேலைக்காரனைப் பிரம்பினால் அடித்துக் கொண்டிருந்தேன். பின்னர், ‘அபூ மசூதே, அறிந்து கொள்’ என்ற குரலைக் கேட்டேன். எனக்கிருந்த கோபத்தில் அது எவருடைய குரல் என்பதைக் கவனிக்கத் தவறி விட்டேன். பின்னர் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் என்னை நெருங்கியதும், அவர்கள் நபிகள் நாயகம் என்பதை அறிந்தேன். பெருமானாரைப் பார்த்ததும் எனது பிரம்பைத் தூக்கி எறிந்தேன். ‘அறிந்து கொள்! அபூ மசூதே, இந்த வேலையாள் மீது நீ பெற்றிருக்கும் அதிகாரத்தை விட இறைவன் உன் மீது அதிக அதிகாரத்தைப் பெற்றிருக்கின்றான்’ என்று நபிகள் நாயகம் கூறினார்கள். அதனைக் கேட்ட நான் அந்த வேலையாளுக்கு விடுமுறை அளித்து விட்டேன்.

    நபித் தோழரின் முடிவைக் கேட்ட நபிகளார், “நீர் அவ்வாறு விடுதலை செய்யவில்லையாயின் நரக நெருப்பு உம்மைத் தீண்டி இருக்கும்” என்றார்கள். அன்று முதல் நான் வேலைக்காரர்களை அடிப்பதை நிறுத்தி விட்டேன்” என்றார், அபூ மசூத்.

    அடிமைகளை அடித்தால் அதற்குரிய பரிகாரம் அவரை விடுதலை செய்வதாகும்.

    தனது அதிகாரத்தின் கீழ் உள்ளவர்களை ஒருவர் எப்படி நடத்துகிறார் என்பதை வைத்து அவரை எடை போடலாம். பணியாட்கள் பாராட்டும் அளவிற்கு பலர் நடந்து கொள்வதில்லை. வேலையாட்களை அற்பமாகவும், துச்சமாகவும் மதிப்பது, தகாத சொற்களினால் அவர்களை ஏசுவது, அவர்களுடைய உணர்வுகளைக் காயப்படுத்துவது, அவர்களுடைய சக்திக்கு அதிகமான வேலைகளைத் தருவது, உரிய கூலியை உரிய நேரத்தில் வழங்காதிருப்பது, என்று தொழிலாளர்கள் மீது பல கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன. இத்தகையோருக்கு நபிகளாரின் வாழ்வில் இருந்து பல வழிகாட்டுதல்கள் உள்ளன.

    * உங்கள் பணியாள் வெப்பத்தையும், புகையையும் சகித்துக் கொண்டு உணவு சமைத்து உங்களுக்குக் கொண்டு வருகிறார். அவரை அருகில் அமர வைத்து, அவர்களுடன் உணவு அருந்துங்கள். ஒருவேளை உணவு குறைவாக இருந்தால் ஒரு கவளம் அல்லது இரண்டு கவளமாவது அவர்களுக்கு அளியுங்கள்.

    நீங்கள் உண்ணுவதைப் போன்ற உணவையும், உடுத்துவதைப் போன்ற உடையையும் அவர்களுக்கு வழங்குங்கள்.

    பணியாட்களின் சக்திக்கு அதிகமான வேலைகளை வழங்காதீர்கள். அவ்வாறு வழங்கினால் அவர்களது பணிகளில் ஒத்தாசை செய்யுங்கள்.

    வேலையாட்கள் நோயுற்றிருந்தால் நபிகள் நாயகம் அவர்களை நேரில் சென்று பார்ப்பார்கள். நபிகளாரிடம் பணியாற்றிய ஒரு யூதச் சிறுவன் நோயுற்றிருந்தபோது, அவனுடைய வீட்டுக்குச் சென்று விசாரித்தார்கள்.

    பணியாட்கள் தமது தேவைகளை தம்மிடம் நேரடியாகக் கேட்குமாறு நபிகள் நாயகம் கூறினார்கள். நபிகளாரிடம் பணியாற்றிய ரபியா என்பவர் கூறுகிறார்: “ஒருநாள் நான் நபிகளாருடன் இரவில் உடன் இருந்தேன். தொழுகைக்காக உடலைச் சுத்தம் செய்வதற்கு தண்ணீர் கொண்டு வந்தேன். அவருக்குத் தேவையான மற்ற பொருட்களையும் கொண்டு வந்தேன். நபிகளார் என்னை நோக்கி, “உனது தேவையை என்னிடத்தில் கேள்” என்றார்கள். அதற்கு நான், “மறுமையில் நான் உங்களுடன் சொர்க்கத்தில் இருக்க வேண்டும் என்பதை மட்டும் கேட்கிறேன்” என்றேன். “இதற்கு மேலும் உனக்கு வேறேதும் தேவைகள் உண்டா?” என்று நபிகளார் கேட்டார்கள். “இதற்கு மேல் எனக்குத் தேவைகள் இல்லை” என்று பதில் அளித்தேன்.” (நூல்: முஸ்லிம்)

    வியர்வை உலருமுன் கூலியைக் கொடுத்து விடுங்கள் என்பது ஒரு நபிமொழி.

    மறுமையில் மூன்று பேருக்கு எதிராக நான் இறைவனிடம் வாதிடுவேன் என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.

    1. எனது பெயரால் ஓர் ஒப்பந்தம் செய்து விட்டு அதை முறிப்பவன்.

    2. ஒரு சுதந்திர மனிதனை விற்று அவனை அடிமை ஆக்குபவன்.

    3. ஒருவனிடம் வேலை வாங்கி விட்டு அவனுடைய ஊதியத்தைத் தர மறுப்பவன்.

    பணியாட்கள் செய்த தவறுக்கு ஏற்ப தண்டனை வழங்க வேண்டும். அதிக தண்டனை வழங்குவது பாவமாகும்.

    நபிகளாரிடம் ஒருமனிதர், “இறைத்தூதர் அவர்களே! என்னிடத்தில் இரண்டு அடிமைகள் உள்ளனர்; அவர்கள் பொய்யுரைக்கின்றனர்; எனக்குத் துரோகம் இழைக்கின்றனர்; எனது கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுக்கின்றனர். அதற்குப் பதிலாக நான் அவர்களைச் சபிக்கிறேன். அடிக்கிறேன். மறுமையில் இறைவன் முன்னால் எனது நிலை எப்படி இருக்கும்?” என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம், “அவர்கள் செய்த தவறுகளும், நீர் கொடுத்த தண்டனைகளும் எடை போட்டு பார்க்கப்படும். இரண்டும் சமமாக இருப்பின் உமக்குச் சாதகமாகவோ, பாதகமாகவோ எதுவும் இராது. நீர் கொடுத்த தண்டனையின் அளவு குறைவாக இருப்பின் அது உமக்கு நன்மையாக முடியும். நீர் கொடுத்த தண்டனையின் அளவு அதிகமாக இருப்பின் உமக்குத் தண்டனை வழங்கப்படும்; அவர்களுடைய தவறுகள் குறைக்கப்படும்” என்றார்கள்.

    ஒருவர் நபிகளாரிடம், “இறைத்தூதரே! எனது பணியாள் மிகவும் மோசமாகவும், நியாயமின்றியும் நடந்து கொள்கிறார். நான் அவரை அடிக்கலாமா?” என்று கேட்டார். இதைக் கேட்ட நபிகளார் மவுனமாக இருந்தார். மீண்டும் அவர் அதே கேள்வியைக் கேட்டார். அப்போதும் மவுனமாக இருந்தார்கள். மூன்றாவது முறையாகக் கேட்டபோது, “அவர்கள் செய்யும் தவறுகளை எழுபது முறை மன்னியுங்கள்” என்றார்கள்.

    அடிமைகளை நோக்கி, “அடிமைகளே!” என்று அழைக்காதீர்கள். ஏனெனில் நாம் அனைவரும் இறைவனின் அடிமைகளே! மாறாக “சிறுவனே, சிறுமியே, எனது குழந்தையே” என்று அழையுங்கள்.

    வேலைக்காரர்கள் தனது முதலாளியை, “அதிபரே” என்று அழைக்காதீர்கள். மாறாக “எங்களது பாதுகாவலரே” என்று அழையுங்கள்.

    பணியாட்கள் உங்களுக்கு ஒத்து வரவில்லையெனில் அவர்களை வேலையில் இருந்து நிறுத்தி விடுங்கள். இறைவனது படைப்புகளை கொடுமைப்படுத்தாதீர்கள்.

    தொழிலாளி, முதலாளி உறவுகளுக்கு நபிகள் நாயகத்தின் வாழ்வும் வாக்கும் மிகச் சிறந்த அடிப்படையாக விளங்குகின்றன.

    - டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத்.
    வெயிலின் கொடுமையை வெறுப்பவர் உண்டு. நிழலை விரும்பாதவர் எவரேனும் உண்டா? அதிலும் குறிப்பாக இறைவன் தரும் நிழலை விரும்பாதவர் யார் இருக்கிறார்?
    வெயிலின் கொடுமையை வெறுப்பவர் உண்டு. நிழலை விரும்பாதவர் எவரேனும் உண்டா? அதிலும் குறிப்பாக இறைவன் தரும் நிழலை விரும்பாதவர் யார் இருக்கிறார்?

    உலகில் கிடைக்கும் சாதாரண நிழலை பெறுவதற்காக ஓடி இடம் தேடும் நம்மில் பலர், இறைவனின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் அந்த நிழலை பெறுவதற்காக நாம் என்ன முயற்சிகள் செய்தோம் என்று ஒரு நொடி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    ‘மறுமை நாளில் சூரியன் படைப்பினங்களுக்கு மிகவும் சமீபமாக இருக்கும். சூரியனுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு மைல் தூரம் தான் இடைவெளி இருக்கும். (அதன் வெப்பத்தால்) மக்கள் தங்களுடைய செயல்களுக்குத் தக்கவாறு வியர்வையில் மூழ்கி இருப்பார்கள். ஒருவரின் செயல் எந்தளவு தீயதாக இருக்குமோ, அந்தளவுக்கு வியர்வை அதிகமாக இருக்கும். சிலரின் வியர்வை கரண்டைக்கால் வரை இருக்கும். இன்னும், சிலரின் வியர்வை முழங்கால் வரை இருக்கும். இன்னும், சிலரின் வியர்வை இடுப்பு வரை இருக்கும். இன்னும், சிலரின் வியர்வை வாய் வரை இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் தமது வாயின் பக்கம் கையால் சமிக்கை செய்து காட்டி கூறுவார்கள்’. (அறிவிப்பாளர்: மிக்தாத் (ரலி), நூல் : முஸ்லிம்)

    பூமியில் இருந்து ஒரு மைல் தூரத்தில் சூரியன் உதிக்கும் மறுமை நாளில் சூரிய வெப்பத்தில் இருந்தும், வியர்வையில் இருந்தும் மனிதர்கள் தப்பிக்க ஒரே வழி, இறைவனுடைய நிழல் மட்டுமே. அப்போது வேறெந்த நிழலும் இருக்காது. மரங்கள் கருகிவிடும். மலைகள் தூள் தூளாக ஆகிவிடும். பூமியும் தூள் தூளாகத் தகர்க்கப்படும் என்று திருக்குர்ஆனும், நபிமொழி போதனைகளும் பின்வருமாறு கூறுகிறது:

    ‘இன்னும், பூமியும், மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவை இரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால், அந்த நாளில் தான் நிகழவேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும்’ (69 : 14, 15)

    ‘வானமும் பிளந்து, அந்நாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்துவிடும்’ (69 : 16)

    மேலும், ஒரு மைல் தொலைவில் சூரியன் மிகச் சமீபமாக இருக்கும் நேரத்தில் அதன் வெப்பத்தால் கடல்களின் நிலை எப்படி இருக்கும்? என்பதை திருக்குர்ஆன் கூறுவதை பார்ப்போம்.

    ‘பொங்கும் கடலின் மீது சத்தியமாக’ (52:6), ‘கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது’ (82:3), ‘கடல்கள் தீ மூட்டப்படும் போது’ (81:6).

    ‘மறுமை நாள் நெருங்கும்போது கடல் நீர் கொந்தளித்து கடலில் ஒரு சொட்டு நீர் கூட இருக்காது’ என இமாம் ஹஸன் பஸரீ (ரஹ்) கூறுகிறார். (புகாரி)

    இத்தகைய சிரமமான சமயத்தில் இறைவனின் நிழல் இளைப்பாறுவதற்காக தேவைப்படுகிறது. அத்தகைய இறைவனின் நிழல் ஏழு நபர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. அந்த 7 நபர்கள் யார் தெரியுமா?

    1) நீதிமிக்க ஆட்சியாளர்: ‘ஓர் அடியானுக்கு குடிமக்களின் பொறுப்பை இறைவன் வழங்கியிருக்க, அவன் அவர்களின் நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான்’ என நபி (ஸல்) கூறினார்கள் (அறிவிப்பாளர் : மஅகில் (ரலி), நூல்: புகாரி)

    2) இறைவழிபாட்டில் வளர்ந்த இளைஞன்: ‘மறுமை நாளில் நான்கு கேள்விகள் கேட்கப்படும் வரை எந்த ஒரு அடியானின் இரண்டு கால்களும் அந்த இடத்தைவிட்டு நகராது. அவை: அவன் தமது ஆயுளை எவ்வாறு கழித்தான், அவன் தமது வாலிபத்தை எவ்வாறு செலவழித்தான், அவன் பொருளை எவ்வாறு சம்பாதித்து, எவ்வாறு செலவு செய்தான், அவன் கற்றபடி எவ்வாறு அமல் செய்தான்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : முஆத்பின் ஜபல் (ரலி) நூல் : பைஹகீ)

    3) பள்ளிவாசலுடன் தொடர்புடைய இதயமுடையவர்: ‘ஊர்களில் இறைவனுக்கு மிகவும் பிடித்தமானது, அதில் அமைந்திருக்கும் பள்ளிவாசல்களாகும். ஊர்களில் இறைவனுக்கு மிகவும் வெறுப்பு தரக்கூடியது அங்கு அமைந்திருக்கும் கடைவீதிகளாகும்’ என நபி (ஸல்) கூறினார்கள். (நபிமொழி)

    4) இறைவனுக்காகவே நேசித்து, அவனுக்காகவும் பிரியும் இருவர்: ‘எவர் அல்லாஹ்விற்காக மட்டும் பிறருக்கு கொடுக்கிறாரோ, மேலும், அல்லாஹ்விற்காக மட்டும் கொடுப்பதை நிறுத்துகிறாரோ, மேலும் அவரை அல்லாஹ்விற்காக மட்டும் நேசிக்கிறாரோ, மேலும் அவர் அவரை அல்லாஹ்விற்காக மட்டும் வெறுக்கிறாரோ, அத்தகைய மனிதரின் இறை நம்பிக்கை பரிபூரணம் அடைந்து விட்டது’ என நபி (ஸல்) கூறினார்கள். (நூல் : திர்மிதி)

    5) பாதுகாக்கும் பொறுப்பு: ‘எவர் தமது இரு தொடைகளுக்கு மத்தியிலுள்ள மறைவிடத்தையும், தமது இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ள நாவையும் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறாரோ, அவருக்கு சொர்க்கம் உண்டு என்பதை நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் ஸத் (ரலி), நூல்: புகாரி)

    6) தமது இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம் அறியாத வகையில் ரகசியமாகத் தர்மம் செய்தவர்: ‘தமது செல்வங்களை இரவிலும், பகலிலும், ரகசியமாகவும், வெளிப்படையாகவும் செலவிடுவோருக்கு தமது இறைவனிடம் அவர்களுக்கான கூலி உண்டு. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்’ (திருக்குர்ஆன் 2:274).

    7) தனிமையில் இறைவனை நினைத்து கண்ணீர் சிந்திய மனிதர்: ‘இரண்டு கண்களை நரகம் தீண்டாது, 1) இறையச்சத்தால் அழுத கண், 2) இறைவழியில் விழித்திருந்து பாதுகாத்த கண்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : திர்மிதி)

    மறுமையில் நிழலே இல்லாத அந்த நாளில் இறைவனுடைய நிழலில் இளைப்பாறும் பாக்கியமும், சுவன பாக்கியமும், சொர்க்கத்தின் சகலவிதமான பாக்கியங்களும், நற்பேறுகளும் இந்த ஏழு அம்சங்கள் நிறைந்த மனிதர்களுக்கு கிடைக்கும்.

    நாமும் இந்த ஏழு அம்சங்களைப் பெற்ற பாக்கியவான்களாக மாற, மாசற்ற முறையில் முயற்சிக்க வேண்டும், ஆமீன்.

    -மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, திருநெல்வேலி.
    ×