என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    தக்கலை மெஞ்ஞான மாமேதை செய்கு பீர்முகம்மது சாகிபு ஒலியுல்லா(ரலி) ஆண்டுபெருவிழா இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது.
    தக்கலை மெஞ்ஞான மாமேதை செய்கு பீர்முகம்மது சாகிபு ஒலியுல்லா(ரலி) ஆண்டுபெருவிழா இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த விழா வருகிற ஏப்ரல் 2-ந் தேதி வரை தொடர்ந்து 15 நாட்கள் நடக்கிறது. அதன்படி, இன்று இரவு 9 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. 24-ந் தேதி இரவு ஜே.எம்.எச்.அரபிக் கல்லூரி மவுலனி முகம்மது இஸ்மாயில் பாசில் பாகவி இறைநேச செல்வர்கள் எனும் தலைப்பில் கருத்துரை நிகழ்த்துகிறார்.

    25-ந் தேதி இரவு 9 மணிக்கு இஸ்லாத்தில் பெண்ணுரிமை எனும் தலைப்பில் காரைக்குடி புதுவயல் பெரியபள்ளிவாசல் மவுலவி முகம்மது ரிழா பாகவியும், 29-ந் தேதி மரணத்துக்குப்பின் மனிதன் எனும் தலைப்பில் மேலப்பாளையம் மன்பவுல் பாக்கியா மகளிர் கல்லூரி நிறுவனர் மவுலவி காஜா மு.ஏ.னுத்தீன் பாகவியும், 30-ந்தேதி சமூக ஒற்றுமை காலத்தின் கட்டாயம் எனும் தலைப்பில் மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் ஹைதர் அலி மிஸ்பாவனியும் கருத்தரங்கம் நடத்துகிறார்கள்.

    பெருவிழாவில், 31-ந் தேதி இரவு 9 மணிக்கு மவுலவி முகம்மது சைப்புதீன் ஆலிம் ஸலாஹி தொடக்க உரையாற்றுகிறார். தொடர்ந்து, வலிமார்க்கமும், ஆன்மிக ஞானமும் எனும் தலைப்பில் காயல்பட்டினம் மக்ரைத்துல் காதியிய்யா அரபிக்கல்லூரி முதல்வர் எஸ். அல்செய்யது அப்துர்ரஹ்மான் பாகவி பாசில் அஹ்ளலி உரையாற்றுகிறார். ஏப்ரல் 1-ந் தேதி இரவு 9 மணி முதல் மறுநாள் அதிகாலை வரை ஞானப்புகழ்ச்சி பாடுதல் நடைபெறுகிறது.

    பெருவிழா ஏற்பாடுகளை நெல்லை வக்பு கண்காணிப்பாளர் முஹ்மூத் மற்றும் விழாக்கால தற்காலிக கமிட்டியினர் ஹாஜி என்.எஸ்.ஹமீது, ஜனாப் பி.எம்.அப்துல் கபூர், ஹாஜி தாஜீதீன், ஜனாப் ஷாகுல் அமீது, ஹாஜி பீர்முகம்மது, ஜனாப் அபூஹன்யா, ஹாஜி சிராஜூதீன், ஹாஜி ஹஸனார், ஹாஜி அப்துல் அஸீஸ், ஜனாப் ஜகபர் சாதிக், ஜனாப் முகமது சலீம், ஜனாப் எம்.பி.எம். மாகீன் மற்றும் நிர்வாக குழுவினர், வக்பு கண்காணிப்பாளர் அஞ்சுவண்ணம் பீர்முகம்மதியா முஸ்லிம் அசோசியேசன், தக்கலை தமிழ்நாடு வக்பு வாரிய நேரடி நிர்வாக குழுவினர் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    எல்லா உயிர்களிடமும் இரக்கமும் கருணையும் காட்டுவதே மனிதப்பண்பாகும். நபிகளாரின் வாழ்வெங்கும் இந்த கருணை பரந்து விரிந்திருந்தது.
    எல்லா உயிர்களிடமும் இரக்கமும் கருணையும் காட்டுவதே மனிதப்பண்பாகும். நபிகளாரின் வாழ்வெங்கும் இந்த கருணை பரந்து விரிந்திருந்தது.

    நபிகளாரின் மென்மையான குணத்தையும், மன்னிக்கும் தன்மையையும் திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

    “அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர் களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர் களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக. நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற் படுத்துவோரை நேசிக்கின்றான்” (3:159).

    நபிகளார் எல்லா உயிர்களிடத்தும் காட்டிய இரக்கமும் கருணையுமே அனைவரையும் ஈர்த்து நின்றது என்பதை மேற்சொன்ன இறை வசனம் நமக்கு சுட்டிக்காட்டுகின்றது. நபி களார் கருணை நிறைந்தவர்களாக விளங்கினார்கள் என்பதற்கு பல சான்றுகள் உண்டு. அவற்றில் ஒன்றை இங்கு காண்போம்.

    கிழட்டு ஒட்டகம் ஒன்று ஓடோடி மூச்சிறைக்க நபிகளாரின் முன்வந்து நின்றது. அதனை பிடித்து அறுப்பதற்காக ஒருவர் கத்தியுடன் வந்து நின்றார். அவரிடம், ‘என்ன காரணத்திற்காக இதனை விரட்டுகிறீர்’ என்றார்கள், அவரோ, ‘இந்த ஒட்டகம் வயதாகி கிழடாகி விட்டது. இதனால் பலன் ஏதும் இல்லை, ஆகவே இதனை அறுத்து உணவாக்கவே விரட்டி வந்தேன்’ என்றார்.

    அதற்கு நபிகளார், ‘இந்த ஒட்டகம் எவ்வளவு காலமாக உம்மிடம் இருக்கிறது. அதனால் நீர் என்ன பயன் அடைந்தீர்?’ என்று கேட்டார்கள். ‘இதன் தாய் இதனை எங்கள் வீட்டில் தான் ஈன்றது, குட்டியில் இருந்தே நாங்கள் தான் இதனை வளர்த்து வருகின்றோம், இது பல குட்டிகளை எங்களுக்கு ஈன்று தந்துள்ளது. அதிகமான பாலையும் தந்துள்ளது. விவசாயத்திற்கும் பயன்பட்டது, நல்ல வாகனமாகவும் இருந்தது’ என்றார்.

    அதற்கு காருண்ய நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இவ்வளவு உதவி செய்த இந்த கிழட்டு ஒட்டகத்திற்கு இது தான் நீர் செய்யும் கைமாறா?, அதனை அறுக்க கூடாது. இந்த ஒட்டகம் இயற்கையாக மரணிக்கும் வரை, அதற்கு உணவும், தண்ணீரும், உறைவிடமும் தந்து, அது இறந்த பின் நல்ல முறையில் அடக்கம் செய்வது உமது கடமை’ என்றார்கள்.

    மிருகங்களை அளவுக்கு மீறி கடினமாக வேலை வாங்குவதை நபிகளார் தடுத்தார்கள். அதன் உடம்பில் சூடுபோடுவது, அவைகளை ஊசி கொண்டு குத்துவது, வேகமாக விரட்டுவது போன்ற இரக்கமற்ற செயல்களை செய்யக்கூடாது என்றார்கள். மேலும் பறவைகள் கூட்டில் உறங்கி கொண்டிருக்கும்போது கல்லெறிந்து அதனை கலைப்பதை கண்டித்தார்கள். இதுபோன்று உயிரினங்கள் மீது கருணையுடனும் இரக்கத்துடனுமே நபிகள் நடந்து கொண்டார்கள்.

    ‘ஒரு மனிதன் நியாயம் இன்றி கொல்லப்பட்டால், அது முழு மனித சமுதாயமும் கொல்லப்பட்டதற்கு சமமாகும்’ என்று கருணையின் உச்சத்தை மனித குலத்திற்கு தொட்டு காட்டியவர் நபிகளார்.

    அசைபோட்டு உணவை உண்ணும் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றையும், அலகினால் தானியங்களை கொத்தி உண்ணும் கோழி, புறா, காடை போன்ற பறவை இனங்களையும் இஸ்லாம் சில கட்டுப்பாடுகளுடன் இறைவனின் பெயர் கூறி அறுத்து, ரத்தத்தை வெளியேற்றி உண்ண அனுமதி அளிக்கிறது. இது தவிர ஏனைய புலால் உண்ணும் மிருகங்களையோ, பறவைகளையோ உண்ணுவது ஆகாது என்கிறது இஸ்லாம்.

    இப்படி இஸ்லாம் அனுமதித்துள்ள விலங்குகளும், பறவைகளும் வேகமாக இனவிருத்தி செய்யக்கூடியவையாக இருக்கின்றன. இன்னும் இவற்றின் இறைச்சிகள், மனிதனின் உடல் நலத்திற்கும், பலத்திற்கும், தேவையாக இருக்கின்றது.

    எல்லாவற்றையும் நன்கு அறிந்துள்ள இறைவன், எதை நாம் உண்ண வேண்டும்?, எதை நாம் உண்ணக்கூடாது? என்று கூறுகின்றானோ, அது நிச்சயமாக மனித குலத்திற்கு நலம் தருவதாகவே உள்ளது.

    எந்த உயிரை எப்படி காப்பது, எந்த உயிரை எப்படி அழிப்பது, எந்த உயிரை காக்க எந்த உயிரை அழிக்க வேண்டும் என்பது போன்றவை இறைவன் நிர்ணயித்த காலச்சக்கரத்தின் படியே நடந்து வருகின்றது.

    அவரவர் விருப்பப்படி இறைவன் அனுமதித்ததை உண்டு வாழ்வதே பட்டினி சாவில் இருந்து மனித குலத்தை பாதுகாக்கும் வழியாகும்.

    அரக்க குணம் எவரிடம் இருப்பினும் அவர் கருணையை விட்டு மிக தூரமாக இருப்பதாகவே கருதப்படுவார். இரக்க குணம் எவரிடம் இருப்பினும் அவர் கருணைக்கு மிக நெருக்கமாக இருப்பதாகவே மதிக்கப்படுவார்.

    எல்லா உயிர்களிடத்திலும் இரக்கமும், கருணையும் வைக்கின்ற மனித பண்பையே என்றென்றும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.

    மு.முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.
    றப்புமிகு தஹஜ்ஜத் தொழுகையை நபிகள் நாதர் தன் வாழ்வில் இடைவிடாமல் நிறைவேற்றி வந்தார்கள். நம்மை நிறைவேற்றவும் சொன்னார்கள்.
    “போர்வையை போர்த்திக் கொண்டிருப்பவரே, நபியே இரவில் நீர் தொழுகைக்காக எழுந்து நிற்பீராக. முழு இரவிலும் அல்ல. அதிலொரு சொற்ப பாகம். அதாவது அதில் பாதி நேரம் அதில் நீர் சிறிது குறைத்தும் கொள்ளலாம் அல்லது அதில் சிறிது கூட்டியும் கொள்ளலாம். அதில் இந்த குர்ஆனை நன்கு திருத்தமாக ஓதுவீராக. நிச்சயமாக அதி சீக்கிரத்தில் மிக உறுதியான ஒரு வார்த்தையை உம்மீது இறக்கி வைப்போம்” (திருக்குர்ஆன் 73:1-6)

    அல்லாஹ்வின் மூலம் அண்ணலாருக்கு நபித்துவம் அளிக்கப்பட்டது. வானவர் ஜிப்ரீல் இந்த செய்தியை நபிகளிடம் சொல்லிவிட்டு மறைந்து விட்டார்கள். அதனைத் தொடர்ந்து பலநாட்கள் இறைத்தூதுச் செய்தி எதுவும் அண்ணலாருக்கு அறிவிக்கப்படவில்லை.

    இருந்தாலும் அவர்கள் ஆழ்ந்த தியான நிலையில், தன்னைப் படைத்த இறைவனின் நோக்கம் குறித்து சிந்தித்துக் கொண்டே இருந்தார்கள். தன்னை இறைத்தூதராக்கிய இறைவனின் எண்ணங்கள் என்னவாய் இருக்கும்? அதனால் தன் பொறுப்பு என்ன? தான் அடுத்து செய்ய வேண்டிய வேலைகள் என்னென்ன என்பதெல்லாம் அவர்கள் மனத்திரையில் வந்துவந்து போய்க் கொண்டிருந்தன.

    அப்படி ஒருநாள் அவர்கள் வழக்கம் போல தனது தியானத்தை முடித்துவிட்டு குகையில் இருந்து வந்த போது, ஒரு குரல் அவர்களை ‘யா முஹம்மது?’ என்று அழைத்து அவர்களின் கவனத்தை கலைத்தது. குரல் வந்த திசையில் உற்று நோக்கினார்கள். அண்ணலாருக்கு எதுவும் தென்படவில்லை. சுற்றும் முற்றும் ஏறிட்டார்கள்.

    கடைசியில் மேல் வானத்தை நோக்கியவர்களுக்கு, அந்தரத்தில் ஒரு பலகையின் மீது அமர்ந்தவாறு வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் காட்சி அளித்தார்கள். இதைக்கண்டதும் அண்ணலாருக்கு மீண்டும் அச்சம் தலைதூக்கியது. அப்படியே உடம்பெல்லாம் வெட வெடுத்தவர்களாக ஓடோடி சென்று மீண்டும் போர்வையால் போர்த்திக் கொண்டு படுத்து விட்டார்கள்.

    அப்போது அல்லாஹ் வெளிப்படுத்திய வசனம் தான் இங்கே சொல்லப்பட்டுள்ளது. அதன்பின் ஒவ்வொரு கட்டளையாக அறிவிக்கத் தொடங்கினான்.

    அக்கால சூழ்நிலையில் அரபியர் மத்தியில் குடிகொண்டிருந்த அத்தனை பழக்க வழக்கங்களையும் இடித்துரைத்து தடை செய்யச்சொல்லிய கட்டளைகளை எப்படி அந்த மக்கள் ஏற்று கொள்வார்கள். மனிதனுக்கு இயல்பாகவே கேளிக்கை, கொண்டாட்டங்களில் உள்ள ஈர்ப்பு அலாதியானது. அதனை கைவிடுங்கள் என்றால் யார் தான் முன்வருவார்கள்.

    அதோடு மட்டுமில்லாமல், ஆண்டாண்டு காலமாய் கையாண்டு வந்த சிலை வணக்கத்தை தவிர்த்து, ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்பதை அவர்களால் ஏற்க முடியவில்லை.

    உருவமில்லாத இறைவனைப்பற்றி, கற்பனை செய்யவோ இப்படி தான் என்று அடையாளம் காட்டக்கூடாத ஒன்றை, மனஓர்மையோடு தாங்கள் சொல்லிய முறையில் தொழ வேண்டும் என்றால் அதனை மக்கள் எப்படி புரிந்து கொள்வார்கள்?. அதுவும் இரவில் தனிமையில் விழித்திருந்து இறைவனை தொழ வேண்டும் என்றால், தங்கள் சுகத்தைத் துறந்து இறைவனின் கட்டளைக்கு மக்கள் அடிபணிவார்களா?

    விடை தெரியாத இந்த கேள்விகளைப் பற்றி கவலைப்படாத அண்ணல் எம்பெருமானார் தங்கள் கடமையை செவ்வனே செய்ய முற்பட்டார்கள்.

    இறைச்செய்தியை அறிந்த உடனே ‘ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே, அவனது திருத்தூதராக முகம்மது (ஸல்) அவர்கள் உள்ளார். இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்’, என்று உறுதிமொழி கூறி தன்னை இஸ்லாமிய கோட்பாட்டில் இணைத்துக் கொண்ட முதல் பெண் என்ற பெருமை கதீஜா நாயகி அவர்களுக்கு கிடைத்தது.

    அதன்பின் அண்ணலாரின் அருமை நண்பர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள், ‘நபியே நீங்கள் உண்மையாளர். உண்மையைத் தவிர வேறு எதையும் சொல்லி அறியாதவர். நான் உங்களோடு பழகிய காலகட்டங்களில் உங்கள் நற்குணங்களில் என்னை இழந்துள்ளேன். எனவே நான் உங்களை இறைத்தூதராக ஒப்புக்கொள்கிறேன் என்று ‘கலிமா’ சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

    அதோடு மட்டுமல்லாமல் உங்களின் இந்த இறைப்பணியில் எல்லா நிலைகளிலும் உங் களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று உறுதிமொழியும் அளித்தார்கள்.

    அண்ணலாரின் மருமகன் அலி (ரலி) அப்போது சிறுவயதாக இருந்த போதும் கூட அண்ணல் எம்பெருமானாரின் அன்பால் ஈர்க்கப்பட்டவர்கள். அவர்களின் அறிவுரையும், அரவணைப்பும் அலி (ரலி) அவர்களின் வாழ்வில் எத்தனையோ மாற்றங்களைத் தோற்றுவித்தன. சிறுவர்களில் அலி (ரலி) அவர்கள் தான் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் பாக்கியம் பெற்றவர்கள்.

    இந்த கட்டளையின் முக்கிய பகுதியாக ‘நபியே, நீங்கள் இரவுத்தொழுகையை நிறைவேற்றுங்கள். இரவின் முற்பகுதியில் அதனை நிறைவேற்றுங்கள். கிட்டத்தட்ட பாதிநேரம் அல்லது அதில் சிறிது குறைத்தோ, அதிகரித்தோ நீங்கள் அந்த கடமையை நிறைவேற்றுங்கள். நல்லடியார்களுக்கு அதனை நிறைவேற்றும்படி கட்டளையிடுங்கள்’ என்றும் அல்லாஹ் உத்தரவிட்டான்.

    நபிகள் கூறியதாக அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், “இரவின் நடுநிசியை தாண்டிய பகுதியில், விடியலை நோக்கி நகரும் அந்த நேரத்தில் அல்லாஹ் ஏழாவது வானத்தின் அடியில் வந்து, ‘என் அடியார்களில் யாராவது என்னிடம் எதையாவது கேட்க நினைக்கிறார்களா? அவர்கள் வேண்டியது அத்தனையும் நான் வழங்க காத்திருக்கிறேன். செல்வம் வேண்டுமா, அறிவு வேண்டுமா, ஆரோக்கியம் வேண்டுமா, நோயிலிருந்து நிவாரணம் வேண்டுமா? கடனிலிருந்து நிவர்த்தி வேண்டுமா, பிள்ளைச் செல்வங்கள் வேண்டுமா? எந்த சுபிட்சம் வேண்டுமென்றாலும் அள்ளி வழங்க காத்திருக்கிறேன். இந்த நேரத்தில் எனக்கும் என் அடியாருக்கும் இடையில் எந்தவித திரையும் இல்லை. எனவே என்னிடமே கையேந்துங்கள்’ என்று அல்லாஹ் தன் அடியார்களை நோக்கி கூறுகிறான்”.

    இன்னுமொரு இடத்திலே குறிப்பிடும் போது, ‘என் அடியான் நான் கட்டளை இட்டேன் என்பதை நிறைவேற்றுவதற்காக, எனக்கு முற்றிலும் அடி பணிந்தவனாக சுகமான தூக்கத்தை, இதம் தரும் படுக்கையை, இதயம் குளிரச் செய்யும் மனைவியை எல்லாம் உதறி தள்ளி விட்டு என்னை தொழுவதற்காக எழுந்து நிற்கின்றான். அவனது இந்த செயல் என்னை ஆனந்தப்படுத்தியதால், அந்த நிலையில் அவன் எதை கேட்பினும் அது அவனுக்கு நன்மை தரும் என்றால் உடனேயும், சில சமயம் காலம் தாழ்த்தியும், சில சமயம் அதனை மறுமையிலும் வழங்குவேன். எல்லாமே அவன் நன்மையைக் கருதியே’ என்று இறைவன் உறுதியளிக்கிறான்.

    நபி பெருமானார் (ஸல்) சொன்னார்கள், ‘தஹஜ்ஜத்’ என்ற இரவுத்தொழுகையின் முக்கியத்துவத்தை அறிந்தால் ஒருவன் அதனை தொழாமல் இருக்கவே மாட்டான். அல்லாஹ் அதில் கொடுத்த முக்கியத்துவத்தை நினைத்தால், அதனையும் அவன் ஐந்து வேளை தொழுகை போல் கட்டாய கடமையாக்கி விடுவானே என்று சந்தேகப்பட்டேன், என்றார்கள்.

    அத்தகைய சிறப்புமிகு தஹஜ்ஜத் தொழுகையை நபிகள் நாதர் தன் வாழ்வில் இடைவிடாமல் நிறைவேற்றி வந்தார்கள். நம்மை நிறைவேற்றவும் சொன்னார்கள்.
    இவ்விரு நபிமொழிகளும் முதியோர்கள் எந்த அளவுக்கு மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை மிகத்துல்லியமாய் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
    மனிதனின் மூன்று பருவங்களில் முதுமைப் பருவமும் ஒன்று. இது ஒரு அற்புதமான பருவம். வயதில் நன்கு முதிர்ச்சியடைந்தவர்களை ‘பழுத்தபழம்’ என்பார்கள். அது உண்மையிலேயே மிகச்சரியான சொல் தான். ஒரு குழந்தையைப் போல இவர்கள் நடந்துகொண்டாலும் இவர் களுடன் முதிர்ந்த அனுபவமும் இணைந்திருக்கிறது என்பதை பல நேரங்களில் நாம் கவனிக்கத் தவறி விடுகிறோம்.

    ஆதிகாலத்தில் இருந்தே மூத்த குடிமக்களுக்கு தனிச்சிறப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதை திருக்குர்ஆன் வசனங்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றது:

    “அதற்கவர்கள் (யூசுபை நோக்கி, எகிப்தின் அதிபதியாகிய) ‘அஜீஸே! (அவரைப் பற்றி கவலைப்படக்கூடிய) முதிர்ந்த வயதுடைய தந்தை அவருக்கு உண்டு. (நீங்கள் அவரைப் பிடித்துக் கொண்டால் இத்துக்கத்தால் அவர் இறந்துவிடுவார்.) ஆகவே, அவருக்குப் பதிலாக எங்களில் ஒருவரை நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக நாம் உங்களைப் பெரும் உபகாரிகளில் ஒருவராகவே காண்கிறோம்’ என்று கூறினார்கள்”. (12:78)

    கன்ஆன் (கானான்) தேசத்தில் கடும் பஞ்சம் நிலவியபோது, உணவு தானியங்களைப் பெற்று வருவதற்காக எகிப்து நாட்டுக்கு யாகூப் நபியின் பிள்ளைகள் வந்தார்கள். வந்த இடத்தில் உணவுத்துறை அமைச்சரான யூசுப் நபி, தன் தம்பியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டு காணாமல் போன ஒரு குவளை வழக்கில் புன்யாமீன் (என்ற பெஞ்சமின்) மாட்டிக்கொண்டபோது நடந்த உரையாடல்தான் அது.

    இங்கு ‘வயது முதிர்ந்த எங்களது அன்புத் தந்தைக்காக அவரை விட்டு விடுங்கள்’ என்று அவர்கள் கெஞ்சுவதும் கதறுவதும், வயதான முதியோர்களை அவர்கள் முற்றிலும் மதிக் கிறார்கள் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

    இனிமையான இன்னொரு நிகழ்வும் இங்கு இணைத்துப் பார்க்கத்தக்கது.

    “(எகிப்திலிருந்து சென்ற மூசா நபி) மத்யன் நகரத்தி(ன் வெளியி)லிருந்த ஒரு கிணற்றின் சமீபமாக வந்த பொழுது ஒரு கூட்டத்தினர் (தங்கள் ஆடு, மாடுகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பதையும், அதற்கருகில் இருபெண்கள் (தங்கள் ஆட்டு மந்தையை) வளைத்து(த் தடுத்து நிறுத்தி)க் கொண்டிருப்பதையும் கண்டு (அப்பெண்களை நோக்கி) ‘உங்கள் விஷயமென்ன? (எதற்காக நீங்கள் தயங்கி நிற்கிறீர்கள்?’) என்று கேட்டார். அதற்கு அவ்விரு பெண்களும் ‘இம்மேய்ப்பர்கள் (தங்கள் கால்நடைகளுக்கு தண்ணீர் புகட்டிக் கொண்டு இங்கிருந்து) விலகும் வரையில் நாங்கள் (எங்கள் ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது. எங்கள் தந்தையோ மிகவும் வயதான கிழவர். (அவர் இங்கு வரமுடியாததால் நாங்களே இவைகளை ஓட்டிக் கொண்டு வந்திருக்கிறோம்)” என்றார்கள். (28:23)

    எகிப்து தேசத்தில் கொடுங்கோல் ஆட்சி புரிந்த அரசன் பிர்அவ்னின் கொடுமைகளை தாங்க முடியாமல் தான் மூசா நபி மத்யன் நகர் நோக்கி நகர்ந்தார். அவர் அங்கு வந்தபோது நடந்த உரையாடல் தான் இது.

    இதில் ‘எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்’ என்று அவரது பெண் மக்கள் இருவரும் தயங்கித்தயங்கி கூறுவது கவனிக்கத்தக்கது.

    இதனால் தான் வயது முதிர்ந்த தமது பெற்றோர்களை ‘ச்சீ’ என்று கூட ஏளனப் படுத்திக் கூறாதீர்கள் என்று திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது:

    “(நபியே) உங்களது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்கூடாதென்று (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும் படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். உங்களுடன் வாழும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை விரட்டவும் வேண்டாம்; அவர்களை (வெறுத்து) ‘ச்சீ’ என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறினாலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங்கள்”. (17:23)

    வயோதிக காலம் என்பது நம்மில் பலரும் நினைப்பது போல் அது ஒரு வாழக்கூடாத காலமல்ல, வாழ்ந்துகாட்ட வேண்டிய காலம். அது ஒரு வேதனைக் காலமல்ல, சாதனைகள் பல படைத்துக் காட்ட வேண்டிய ஒரு பக்குவமான காலம். ஆக மொத்தத்தில் இது ஒரு அற்பமான காலமல்ல, இது ஒரு அற்புதமான காலம். திருக்குர்ஆன் வசனம் ஒன்று இப்ராகிம் நபியின் வயோதிகக் காலத்தைப்பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கு உரியது; அவன்தான் இவ்வயோதிக (கால)த்தில் இஸ்மாயிலையும் இஸ்ஹாக்கையும் எனக்கு(ச் சந்ததிகளாக) அளித்தான். நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனைகளை (கருணையுடன்) செவியுறுபவனாக இருக்கிறான். (14:39)

    இப்ராகிம் நபி எண்பது வயதைக் கடந்த பின்னரே இஸ்மாயில் மற்றும் இஸ்ஹாக் என இரண்டு பிள்ளைச் செல்வங்களை ஹாஜரா, சாரா என்ற இரண்டு மனைவியரின் வழியாகப் பெற்றெடுக்கும் பேற்றைப் பெற்றார்கள். மேலும், ‘எப்போது கேட்டாலும் அவர்களது பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்’ என்ற சிறப்பு அந்தஸ்த் தையும் தங்களது வயோதிகத்தின் மூலம் பெற்றார்கள் என்பதையும் அறிய முடி கிறது.

    முதுமைப்பருவம் என்பது நாம் நினைப்பது போல் சாதாரணமான பருவமல்ல. அது, நற்செயல்களுக்கு ஏற்ற பருவம் என்றுரைக்கிறது திருக்குர்ஆன். குறிப்பாக ‘துஆ’ எனும் பிரார்த்தனைகளுக்கு உரிய முக்கியமான காலம் அது. நமது இறைவனிடம் நமது இறைஞ்சுதல்களை, கோரிக்கைகளை, வேண்டுதல்களை தனக்காகவும், பிறருக்காகவும் வைக்கவேண்டிய நேரமிது.

    நபிகள் நாயகம் கூறினார்கள்: ‘எந்தவொரு வாலிபர் முதிர்ந்த வயதுடையவரை கண்ணியப்படுத்துகிறாரோ, அவர் முதியவராக ஆகும் போது நிச்சயமாக அவரை கண்ணியப்படுத்தும் விதமாக இன்னொருவரை ஏற்படுத்தாமல் அவரை இறைவன் மரணிக்கச் செய்வதில்லை’. (நூல்: மிஷ்காத்)

    ‘எவர் சிறுவர்களுக்கு கருணை காட்டவில்லையோ, மேலும் வயது முதிர்ந்தவர்களை கண்ணியப்படுத்தவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல’. (நூல்: மிஷ்காத்)

    இவ்விரு நபிமொழிகளும் முதியோர்கள் எந்த அளவுக்கு மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை மிகத்துல்லியமாய் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. எனவே இனியேனும் நம்மைச்சுற்றி வாழும் முதியோர்களை நன்முறையில் மதித்து, நற்பேறுகள் பலதும் பெற்று பெருவாழ்வு வாழ்வோமாக.

    மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு.
    இறைவனின் இந்த கட்டளைகள் அனைத்தும் மனிதன் இவ்வுலக வாழ்வில் நேர்வழியையும், மேன்மையையும் பெற்றுக்கொள்வதை அடிப்படையாக கொண்டுள்ளது என்பதை அறியும் போது இஸ்லாம் எத்தகைய உன்னத மார்க்கம் என்பது புரியும்.
    “நபியே! வஹியின் அதிர்ச்சியால் போர்வையை போர்த்திக் கொண்டிருப்பவரே! நீர் எழுந்து நின்று மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! உமது இறைவனை பெருமைப்படுத்துவீராக! உமது ஆடையை பரிசுத்தமாக வைத்துக் கொள்வீராக! அசுத்தங்களை வெறுத்து விடுவீராக. எவருக்கும் நீர் நன்மை உபகாரம் செய்து அதைவிட அதிகமாய் அவரிடம் பெற்றுக்கொள்ள கருதாதீர். உமது இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக சிரமங்களை பொறுத்திருப்பீராக!” (திருக்குர்ஆன் 74:1-7)

    இந்த வசனங்களைச் சொன்ன வானவர் தலைவர் ‘அண்ணல் முகம்மதே! அல்லாஹ் உங்களைத் தன் நபியாக, தன் வஹியை எடுத்துச் சொல்லும் தூதுவனாக தேர்ந்தெடுத்துள்ளான்’ என்று நற்செய்தியை கூறிவிட்டு மறைந்துவிட்டார்கள்.

    முகம்மது (ஸல்) அவர்களுக்கு இந்த ஆன்மிக அதிர்ச்சியிலிருந்து விடுபடுவதற்கு சற்று அவகாசம் தேவைப்பட்டது. வானவர் தலைவரின் உண்மையான தோற்றம், அவர்கள் உள்ளத்தில் மாபெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதயம் நடுங்கியவர்களாக ஹீரா குகையிலிருந்து தன் இல்லம் நோக்கி விரைந்தார்கள்.

    ஜிப்ரீல் (அலை) அவர்களின் இறுக்கமான அணைப்பு இதயத்தை நடுங்கச்செய்துவிட்டது. உள்ளமெல்லாம் பதற, குளிர்வாட்டி வதைக்க இல்லம் வந்தடைந்த நபிகளார், தன் மனைவி கதீஜா நாயகத்திடம், ‘அருமை கதீஜாவே, என்னைப் போர்த்திவிடுங்கள், என்னை போர்த்தி விடுங்கள்’ என்று படபடப்புடன் கூறினார்கள். கதிஜா அம்மையார் போர்வையால் போர்த்திவிட்டபின் நபி அவர்கள் அமைதியாக உறங்கிவிட்டார்கள்.

    சிறிது நேரம் சென்று விழித்தவர்கள் “அருமை கதீஜாவே, நான் எப்போதும் போல் ஹீரா குகையிலே தியானத்தில் ஈடுபட்ட நிலையில் இன்றைக்கு ஓர் அதிசயம் நிகழ்ந்தது. தன்னை ‘ஜிப்ரீல்’ (வானவர் தூதுவர்களின் தலைவன்) என்று அறிமுகப்படுத்திய, ஆஜானுபாகுவான இறக்ைககள் கொண்ட தூதுவர் ஒருவர் என் முன்னே தோன்றினார். ‘அல்லாஹ்வின் கட்டளை, உங்களை அவனின் தூதுவனாக ஏற்றுக் கொண்டுள்ளான். இனிமேல் அவன் அனுப்பும் ‘வஹி’யை உங்களிடம் நான் வந்து தெரிவிப்பேன். அந்த கட்டளைகளை மனித குலம் முழுவதுக்கும் நீங்கள் எடுத்துச்சொல்லி அவர்களை நேர்வழிப் படுத்த வேண்டும்’ என்று சொல்லிவிட்டு ‘இக்ரஹ்’ (ஓதுவீராக) என்று கட்டளையிட்டார்கள்”.

    “நான் படிப்பறிவில்லாவதன்! என்னை எதை ஓதச்சொல்கிறீர்கள், என்று நான் கூறியபோது, அவர் தன் உருவத்தை சுருக்கி, என் அருகில் வந்து, என்னை ஆரத்தழுவி ‘உங்கள் இறைவனின் பெயரைச்சொல்லி இப்போது ஓதுவீராக’ என்று சொன்னார்கள். அவர்களின் அணைப்பின் கதகதப்பில் நான் என்னை அறியாமல் ஓதத்தொடங்கினேன். அதன்பின் அவர் மறைந்துவிட்டார். சற்று சிந்தித்து பார்த்தபோது அவர்களின் உருவம் மற்றும் அவர்களின் உரையாடல்களை நான் வினோதமாக உணர்ந்தேன். ஆனால், அதில் உண்மைத்தன்மையையும் அறிந்து கொண்டேன். அதனை உணர்ந்தபோது என்னை குளிர் வாட்டி வதைத்துவிட்டது. அதனால் தான் உங்களை என்னைப்போர்த்தி விடும்படிச் சொன்னேன்” என்று நடந்த விஷயங்கள் அத்தனையையும் அருமை மனைவியிடம் அழகாக விவரித்தார்கள்.

    ‘அப்படியா சொல்கிறீர்கள், நீங்கள் இதுவரை பொய் சொல்லி நான் அறியேன். நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை என்று நம்புகிறேன். அல்லாஹ்வின் கட்டளையைக் கொண்டு உங்களை நான் அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்றுக்கொள்கிறேன்’ என்றார்கள்.

    அண்ணலார் கொண்டு வந்த அற்புத கலிமாவை இந்த உலகில் ஏற்றுக்கொண்ட முதல் நல்லடியார் அன்னை கதீஜா நாயகி தான்.

    தன் கணவருக்கு இப்போது ஆறுதல் தேவைப்படுகிறது, அதிர்ச்சியில் உறைந்துள்ளவரை நிஜ உலகிற்கு திரும்ப கொண்டு வருவதில் மனைவியான தனக்கு மிகுந்த பொறுப்பு இருக்கிறது என்பதை கதீஜா அம்மையார் உணர்ந்துகொண்டார். உடனே கணவரை ஆசுவாசப்படுத்தி இவ்வாறு கூறினார்கள்-

    ‘அல்லாஹ் உங்களை ஒரு போதும் கைவிடமாட்டான். நீங்கள் ‘அல்அமீன்’ (உண்மையாளர்). உங்கள் உறவினர்கள் எப்படிப்பட்டவர்களாயினும் அவர்களை அனுசரிக்கிறீர்கள். பிறர் கஷ்டப்பட்டால் அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறீர்கள். அவர்களின் பாரங்களை நீங்கள் சுமக்கிறீர்கள். பலவீனமானவர்களுக்கு உதவுகிறீர்கள். விருந்தினர்களை இன்முகத்தோடு உபசரிக்கிறீர்கள். பிறரின் பாதிக்கப்பட்ட உரிமைகளை மீட்டுத்தருகிறீர்கள். இப்படிப்பட்ட நற்குணங்கள் கொண்ட உங்களை அல்லாஹ் ஒருபோதும் கை விடமாட்டான்’ என்று ஆறுதல் கூறி தேற்றினார்கள்.

    அதன்பின் ‘இன்ஜீல்’ வேதத்தை ஓதித்தேர்ந்த நவ்பல் என்பவரிடம் நபிகளாரை அழைத்துச்சென்று, அத்தனை செய்திகளையும் சொன்னார்கள் கதீஜா நாயகி அவர்கள்.

    அத்தனையையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட நவ்பல் ‘இவர் இன்றைய காலகட்டத்திற்காக அறிவிக்கப்பட்ட இறைத்தூதர் முகம்மது என்பவர். இந்த நிகழ்வுகளும், இவரைப்பற்றிய குறிப்புகளும் முந்தைய வேதங்கள் அனைத்திலும் தெளிவாய் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் மக்களை நேர்வழியின் பக்கம் அழைப்பதில் மிகுந்த சிரமத்திற்குள்ளவார். இவரின் சொந்தங்களே இவரை தங்கள் ஊரை விட்டு வெளியேற்றும். நான் உயிருடன் இருந்தால் அந்த காட்சிகளை கட்டாயம் காண்பேன். இவர் தான் வேதங்கள் அத்தனையும் ஒப்புக்கொண்ட இறுதி நபி’ என்றார்.

    அவர் சொல்லில் தெரிந்த உண்மை அண்ணலாரின் உள்ளத்தை உறுதி செய்தது. நடந்த நிகழ்ச்சிகள் அத்தனையும் உண்மை தான் என்று நம்பினார்கள்.

    உள்ளம் உறுதி பெற்றதும் தன் கடமையை உணர்ந்தார்கள். கட்டளையை நிறைவேற்ற ஆயத்தமானார்கள். கட்டளைகளில் எதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதைக் கொண்டே எப்படிப்பட்ட நேர்மையான மார்க்கம் இஸ்லாம் என்பதைப்புரிந்து கொள்ளமுடியும்.

    இறைவனைப் பெருமைப்படுத்தச்சொன்ன முதல் வசனத்தை அடுத்து சுத்தத்தை வலியுறுத்துகிறது. அசுத்தத்தை வெறுத்து ஒதுக்கச் சொல்கிறது. மனம், குணம், செயல்கள், சொற்கள் எல்லா வற்றிலும் சுத்தத்தை கடைப்பிடிக்கச்சொல்கிறது.

    என்னுடைய கட்டளையை நிறைவேற்ற அதிக சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்பதை முதலிலேயே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அடுத்ததாக கொடுக்கல்-வாங்கலில் எதிர்பார்ப்பைத்தடை செய்கிறது. ‘ஒருவனுக்கு ஒரு நன்மையைச் செய்தால் அவனிடம் இருந்து எதனையும் எதிர்பார்க்காதீர்கள்’ என்று வலியுறுத்துகிறது.

    இறைவனின் இந்த கட்டளைகள் அனைத்தும் மனிதன் இவ்வுலக வாழ்வில் நேர்வழியையும், மேன்மையையும் பெற்றுக்கொள்வதை அடிப்படையாக கொண்டுள்ளது என்பதை அறியும் போது இஸ்லாம் எத்தகைய உன்னத மார்க்கம் என்பது புரியும்.
    ஏழை-பணக்காரன் இருவருக்கும் தர்மம் செய்யும் வாய்ப்பினை இஸ்லாம் வெவ்வேறு வழிகளில் வழங்கி இருவரையும் சமநிலைப்படுத்துகிறது.
    இஸ்லாம் கூறும் தர்ம சிந்தனைகள் வித்தியாசமானவை. அதன் வழிகள் விசாலமானவை. பணம் மற்றும் காசுகளை தானம் கொடுப்பது மட்டும் தர்மம் அல்ல. இதையும் கடந்து சின்னச்சின்ன நற்கருமங்களும் இஸ்லாத்தின் பார்வையில் தர்மங்களே.

    வசதி படைத்தவர் தங்களிடம் உள்ள செல்வங்களை தர்மம் செய்கிறார்கள். வசதியற்றவர்கள், தாங்கள் செய்யும் நற்கருமங்களின் வழியே தர்மம் செய்கிறார்கள். இவ்வாறு ஏழை-பணக்காரன் இருவருக்கும் தர்மம் செய்யும் வாய்ப்பினை இஸ்லாம் வெவ்வேறு வழிகளில் வழங்கி இருவரையும் சமநிலைப்படுத்துகிறது.

    ‘இறைவன் உனக்கு நல்லதைச் செய்திருப்பது போன்றே நீயும் நல்லதை செய்’ என்பது திருக்குர்ஆன் (28:77) வசனமாகும்.

    ‘உங்களுடைய சகோதரரைப் பார்த்து நீங்கள் புன்னகை புரிவதும் தர்மம். நீங்கள் நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதும் தர்மம். வழி தவறியவருக்கு வழிகாட்டுவதும் தர்மம். பார்வையற்றோருக்கு வழிகாட்டுவதும் தர்மம். கல், முள், எலும்பு போன்றவற்றை நடைபாதையிலிருந்து அகற்றுவதும் தர்மம். உங்களது வாளியிலிருந்து உங்களது சகோதரனின் வாளியில் தண்ணீர் நிரப்புவதும் தர்மமே’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூதர் (ரலி), நூல் : திர்மிதி)

    மேற்கூறப்பட்ட நபிமொழியில் பலவிதமான தர்ம சிந்தனை கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றுகூட பொருள் சம்பந்தப்பட்டது கிடையாது. தர்மம் என்றால் இஸ்லாத்தின் பார்வையில் பொருளுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. அது பரந்த மனப்பான்மையுடன் தொடர்புடையது என்பதை இதன் மூலம் அறியலாம்.

    உணவை தானம் செய்வதும் தர்மமே

    ‘ஒரு பெண், வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும்; அது போன்றே கருவூலக்காப்பாளருக்கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்து விடமுடியாது’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

    ‘தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதும் தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால் ....?’ எனக் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) ‘ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன்மூலம் பலனடைந்து, தர்மம் செய்ய வேண்டும்’ என்றார்கள். தோழர்கள் ‘அதுவும் முடியவில்லையாயின்...’ எனக் கேட்டதற்கு, ‘தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர் களுக்கு உதவவேண்டும்’ என பதிலளித்தார்கள். தோழர்கள், ‘அதுவும் இயலாவிடின்’ என்றதும் நற்காரியத்தைச் செய்து, தீமையிலிருந்து தம்மைத் தடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே அவர் செய்யும் தர்மமாகும்’ எனக் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூமூஸா (ரலி), நூல்:புகாரி)

    ‘மனிதர்கள் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தம்முடைய ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும். ஒருவர் தமது வாகனத்தின் மீது ஏறி அமர உதவுவதும், அல்லது அவரது பயணச்சுமைகளை அதில் ஏற்றிவிடுவதும் தர்மமாகும். இன்சொல்லும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தர்மமாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    “நபித்தோழர்களில் (ஏழைகளான) சிலர் நபியவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே, வசதி படைத்தோர் நன்மைகளை (தட்டி)க் கொண்டு போய்விடுகின்றனர். நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர்; நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர்; (ஆனால் அவர்கள்) தங்களது அதிகப்படியான செல்வங்களைத் தான தர்மம் செய்கின்றனர் (அவ்வாறு தான தர்மங்கள் செய்ய எங்களிடம் வசதி இல்லையே)’ என்று கூறினர்.

    அதற்கு நபியவர்கள் ‘நீங்களும் தர்மம் செய்வதற்கான (முகாந்தரத்)தை இறைவன் உங்களுக்கு ஏற்படுத்தவில்லையா? இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ் என்று கூறுவது) தர்ம மாகும்; இறைவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு (அல்லாஹூ அக்பர்) சொல்லும் தர்மமாகும். ஒவ்வொரு புகழ் மாலையும் (அல்ஹம்துலில்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு ஓரிறை உறுதிமொழியும் (லாஇலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; நல்லதை ஏவுதலும் தர்மமே; தீமையைத் தடுத்தலும் தர்மமே; உங்களில் ஒருவர் தமது பாலுறுப்பி(னைப் பயன்படுத்துகின்ற விதத்தி)லும் தர்மம் உண்டு” என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் அபூதர் (ரலி), நூல்: புகாரி)

    ‘உன் சகோதரனைப் பார்த்து புன்னகை புரிவதும் தர்மமே’ என்பது நபிமொழி ஆகும்.

    ‘உன் மனைவியின் வாயில் ஒரு கவளம் உணவு ஊட்டுவதும் தர்மம் ஆகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : ஸஃதுபின் அபிவக்காஸ் (ரலி), நூல் : புகாரி)

    ‘செவிடருக்கும், வாய் பேச முடியாதவருக்கும் அவர்கள் விளங்கும் வரைக்கும் கேட்க வைப்பதும் தர்மமே. அநீதி இழைக்கப்பட்டவன் அவன் உதவி தேடும்போது அவனுக்காக விரைந்து செல்வதும் தர்மமே. பலவீனமானவருக்காக உதவி புரிய உனது கையை உயர்த்துவதும் தர்மமே’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூதர் (ரலி), நூல்: அஹ்மது)

    இதுபோன்ற தர்ம சிந்தனைகளை இஸ்லாம் அதிகம் அதிகம் விதைத்திருக்கிறது. தேவையுடையவர்களை வைத்து தர்மத்தின் நிலைகளும் மாறிவிடுகிறது. அதை செல்வத்துடன் மட்டும் இஸ்லாம் சுருக்கி மட்டுப்படுத்தவில்லை. எனவே தேவையானவர்களுக்கு தேவையான சமயத்தில் வழங்கும் சின்ன சின்ன நற்கருமங்களும் தர்மங்களே. இத்தகைய விசாலமான தர்மசிந்தனைகளை வாழ்வில் கடைப்பிடித்து தர்மசீலர்களாக வாழ வல்லோன் அல்லாஹ் கிருபை செய்வானாக, ஆமின்.

    மவுலவி. அ. செய்யது அலி மஸ்லஹி,

    பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.
    மனித படைப்பின் உள்ளார்ந்த விஞ்ஞான செய்திகளை அன்றே சொன்ன திருக்குர்ஆன் ஆச்சரியத்திலும் ஆச்சரியம் என்பது அகிலம் அறிந்த உண்மை.
    நபியே! அனைத்தையும் படைத்த உமது இறைவனின் பெயரால் அவனது கட்டளைகள் அடங்கிய திருக்குர்ஆனை ஓதுவீராக. அவனே மனிதனை ரத்தக்கட்டியிலிருந்து படைக்கிறான். நபியே, மேலும் நீர் ஓதுவீராக, உமது இறைவன் மாபெரும் கொடையாளி. அவன்தான் எழுதுகோலைக்கொண்டு எழுத கற்றுக்கொடுத்தான். அதன் மூலம் மனிதன் அறியாதவற்றை எல்லாம் அவனுக்கு கற்று கொடுக்கின்றான். (திருக்குர்ஆன் 96:1-5)

    இருண்ட காலம் மடமை இருள் உலகெங்கும் தலை விரித்தாடியது. மக்கள் விலங்கினங்களுக்கு இணையாக தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, தான் தோன்றித்தனமாய் வாழ்வைச் சுவைத்துக்கொண்டிருந்தார்கள். குறிகேட்டல், குடி, கும்மாளம், சூதாட்டம், கொலை, கொள்ளை, மது, மாது போன்ற கேளிக்கைகள் தான் வாழ்வியல் என்று எண்ணி மனிதர்கள் மாக்களாய் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

    ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இறைத்தூதர்களை அனுப்பியும், உலகை வெள்ள பிரளயத்தால், இடி முழக்கத்தால், இயற்கை சீற்றத்தால், தலைகீழாய் கவிழ்த்துப்போட்டும் மனிதன் தன்னை திருத்தி கொள்ளாத நிலை நீடித்தது. மனித இனம் முழுவதுமாய் அழிந்துவிடலாகாது என்பதற்காக ஏற்கனவே சபூர், இன்ஜீல், தவ்ராத் போன்ற எல்லா இறைவேதங்களிலும் குறிப்பிட்டபடி இறுதி நபி முஹம்மதுவை இந்த உலகிற்கு அனுப்ப அல்லாஹ் நாடினான்.

    மக்காவில் பனூ ஹாஸிம் என்ற குலத்தில் அப்துல்லாஹ்- ஆமினா தம்பதியரின் மகனாக பிறந்தார்கள். நபி பெருமானார் (ஸல்) அவர்களை அன்னை ஆமினா கர்ப்பமுற்றிருந்த போதே நபிகளாரின் தந்தை அப்துல்லா காலமாகி விட்டார்கள். அதன்பின் பல சிரமங்களுக்கு மத்தியில் அன்னை ஆமினா அண்ணலாரை பெற்றெடுத்தார்கள். அன்னையின் மெலிந்த உடல்வாகும், ஏழ்மை நிலையும் பிள்ளைக்கு போதிய அளவு தாய்ப்பால் கொடுக்கும் சக்தியை வழங்கவில்லை. எனவே ஹலீமா என்ற செவிலித்தாய் மூலம் பாலூட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.

    நபி பெருமானார் (ஸல்) அவர்கள் ஆறு வயதை எட்டியபோது அன்னை ஆமினா கடும் நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்தார்கள்.

    தன் ஆறு வயது இளம் பருவத்திலேயே நபிகளார் தாய்-தந்தை இருவரையும் இழந்து அனாதையானார்கள். தனது எட்டாம் வயதிலேயே பாட்டனார் அப்துல் முத்தலிப்யையும் இழந்து தன்சிறிய தந்தை அபூதாலிப் அவர்களின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்கள்.

    குழந்தைப்பருவம் முதல் ஒவ்வொரு செயலிலும் நல்லொழுக்கத்துடன் வளர்ந்தார் நபிகள் பெருமான். உலகில் உள்ள மொத்த ஞானத்தையும், இனிவரும் காலங்களில் தோன்றவிருக்கும் அறிவின் மொத்தத்தையும் சேர்த்து அன்றே இறைவன் அண்ணலாருக்கு வழங்கியதால் அவர்கள் யாரிடமும் கல்வி கற்கவில்லை. கற்றுகொடுக்கப்படவும் இல்லை. கடைசி காலம் வரை ‘உம்மி நபி’யாக வாழ்ந்தாலும் ஞானத்தின் திறவு கோலாய்த் திகழ்ந்தார்கள்.

    அண்ணல் எம்பெருமானாருக்கு 12 வயது ஆகும்போது ஆடுகளை மேய்க்கும் பொறுப்பை ஏற்றார்கள். பின்னர் கடைவீதிகளுக்குச்சென்று சிறுசிறு வியாபாரங்களில் ஈடுபட்டார்கள். தான் சம்பாதித்த பணத்தில் மூன்றில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு தானம் செய்தார். இரண்டாவது பகுதியை தனக்கும் குடும்பத்திற்கும் செலவுக்கு கொடுத்தார். மூன்றாவது பகுதி பணத்தை வியாபாரத்தில் மீண்டும் முதலீடு செய்ய பயன்படுத்தினார். நபிகள் பெருமான், அந்த ஏழ்மை நிலையிலும் அதிக தர்மசிந்தனை உடையவர்களாகத் திகழ்ந்தார்கள். மக்கா குரைஷியரிடையே ‘அல் அமீன்’ (நம்பிக்கையாளர்) என்ற பெயரை பெற்றிருந்தார்கள்.

    அந்த காலகட்டத்தில் அரேபிய இளைஞர்களை ஒன்று திரட்டி ‘ஹிஸ்புல் புலூல்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் உரிமைகள் பறிக்கப்பட்டவர்கள், அடிமைகள், அனாதைகள், ஆதரவற்றவர்கள் ஆகியோரின் பாதிப்புகளை களைய அரும்பாடுபட்டு வந்தார்கள்.

    ஏமன் நாட்டிலிருந்து வந்த ஜூஹைதி கிளையைச் சேர்ந்த ஒரு வியாபாரி தான் கொண்டு வந்த வணிகப்பொருட்கள் மொத்தத்தையும் அபூஜஹிலிடம் விற்று பணத்திற்காக காத்திருந்தார். பலமுறை முயன்றும், ஊர்த்தலைவர்களிடம் முறையிட்டும் அந்த வியாபாரிக்கு நியாயம் கிடைத்தபாடில்லை. இதனை அறிந்த அண்ணலார் ஹிஸ்புல் புலூல் இயக்கத்தோழர்களுடன் அபூஜஹில் வீடு சென்று வாதாடி அந்த வியாபாரிக்கு கிடைக்க வேண்டிய பணத்தை பெற்றுத்தந்தார்.

    அண்ணலாரின் நேர்மை, நன்னடத்தை, வியாபாரத்தில் நுண்ணறிவுடன் கொண்ட ஈடுபாடு ஆகியவற்றை கேள்விப்பட்ட அன்னை கதீஜா (ரலி) அவர்கள் அண்ணலாரை அழைத்து தன் வியாபாரத்தை கவனித்துக்கொள்ளும் பொறுப்பில் அமர்த்திக்கொண்டார்கள். ஒரு முறை பெரும் வியாபார பொருட்களுடன் சிரியா சென்ற அண்ணலார் சிறந்த ஒரு வணிகத்தை முடித்து அதிக லாபத்துடன் திரும்பி வந்தது அன்னை கதீஜா (ரலி) அவர்களை மிகவும் கவர்ந்தது.

    அன்னை கதீஜா (ரலி) அவர்கள் அப்போது கணவனை இழந்த கைம்பெண். பெரும் செல்வசீமாட்டி. அண்ணலை விட வயது அதிகம் கொண்டவர். அவர்களை மணம் முடிப்பதற்கு பெரும் பெரும் வணிகர்கள் எல்லாம் காத்திருந்தனர். ஆனால், அண்ணலாரிடம் கண்ட நேர்மையை மெச்சி அவரை மணமுடிக்க எண்ணினார் கதீஜா அம்மையார். நபிகளும் இதற்கு சம்மதம் தெரிவிக்கவே திருமணம் ஒருமனதாய் நிறைவேறியது. இல்லற வாழ்க்கையை இசைபட வாழ்ந்து பல குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள். அவற்றில் ஆண் குழந்தைகள் யாருமே உயிர் வாழவில்லை. பெண் பிள்ளைகள் மட்டுமே உயிர் வாழ்ந்தார்கள்.

    அண்ணலார் தம் 40-ம் வயதில் உலக வாழ்க்கையில் ஈர்ப்பு குறைந்து தனிமையை நாடினார்கள். எதையோ தேடினார்கள். படைப்பின் நோக்கம் என்ன? படைத்தவனின் ஆற்றல் என்ன? ஏன் இந்த படைப்பு? என்று விடைதெரியாத எத்தனையோ கேள்வி களுக்கு விடை தேடி மக்காவின் அருகில் உள்ள ஹீரா மலைக்குகையை அடைந்து தனிமையில் அமர்ந்து தியானத்தில் திளைத்திருந்தார்கள்.

    அப்போது, வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அண்ணலார் முன்தோன்றி, “நான் தான் ‘ஜிப்ரீல்’. இறைவனால் அனுப்பப்பட்ட வானவத் தூதன். அண்ணலே அல்லாஹ்வின் கட்டளைப்படி ஓதுவீராக! இக்ரஹ்....” என்று கூறினார்கள்.

    அண்ணலோ, ‘நான் கற்றறியாதவன்! எனக்கு எப்படி ஓதத்தெரியும்’ என்றார்கள்.

    வானவத்தலைவரும் தன் உருவைச் சுருக்கி, அண்ணலின் அருகில் வந்து, குனிந்து அவர்களை நெஞ்சோடு அணைத்து, ‘இப்போது ஓதுங்கள், உம்மைப் படைத்த இறைவன் பெயரால் ஓதுவீராக’ என்றார்கள்.

    தன்னுள் உன்னத உணர்வு தோன்றுவதை நபிகளார் உணர்ந்தார்கள். தன்னை அறியாமலேயே அவர்கள் நாவு அசையத் தொடங்கியது. தங்குதடையின்றி ஓதத்தொடங்கினார்கள். வான்மறையின் வசனங்கள் இறைச்செய்தியாக இறங்கத் தொடங் கியது. அத்தனையும் நபிகளார் மனதில் ஆழமாய் பதிந்தது.

    வான்மறையின் முதல் வசனமே மனித படைப்பு குறித்த அறிவியலைச் சொல்லித்தந்தது. மனித படைப்பின் உள்ளார்ந்த விஞ்ஞான செய்திகளை அன்றே சொன்ன திருக்குர்ஆன் ஆச்சரியத்திலும் ஆச்சரியம் என்பது அகிலம் அறிந்த உண்மை.
    முஸ்லிம்களுக்கு ஹஜ்ஜத்துல் வதாவுக்கு அதாவது இறுதி ஹஜ்ஜுக்கு முந்தைய வருடம் ஹஜ்ஜை தலைமையேற்று நடத்தும்படி நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை மக்கா அனுப்பினார்கள்.
    முஸ்லிம்களுக்கு ஹஜ்ஜத்துல் வதாவுக்கு அதாவது இறுதி ஹஜ்ஜுக்கு முந்தைய வருடம் ஹஜ்ஜை தலைமையேற்று நடத்தும்படி நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை மக்கா அனுப்பினார்கள். அந்த வருடம் துல்ஹஜ் பிறை பத்தாம் நாள், நபி(ஸல்) அவர்கள் அபூபகர் (ரலி) அவர்களை, “எச்சரிக்கை! இந்த ஆண்டிற்குப் பின்னர் இணைவைப்பவர்கள் யாரும் ஹஜ் செய்யக்கூடாது.

    கஅபாவை நிர்வாணமாக வலம்வரக் கூடாது' என அறிவிக்கச் செய்தார்கள். ஏனெனில் மடமைக் காலத்தில் மக்கள் நிர்வாணமாகவே கஅபாவை வலம் வந்துள்ளனர். ஹும்ஸ் கிளையார்களைத் தவிர. ஹும்ஸ் என்றால் குறைஷியர்களும் அவர்களின் சந்ததியர்களுமாவர். இந்த ஹும்ஸ் கிளையார்கள் மக்களுக்கு நற்பணி புரிபவர்களாவர். அவர்களில் ஓர் ஆண் இன்னொரு பெண்ணுக்கு, தவாஃபு செய்வதற்காக ஆடை கொடுப்பார். இந்த ஹும்ஸ் கிளையார் யாருக்கு ஆடை கொடுக்க வில்லையோ அவர் நிர்வாணமாக வலம் வருவார்.

    மேலும், மக்கள் அரஃபாவிலிருந்து திரும்பி விடுவார்கள். ஆனால், குறைஷிகளோ எல்லாம் முடிந்த பின்பு முஸ்தலிஃபாவிலிருந்துதான் திரும்புவார்கள். 'மேலும் மற்றவர்கள் திரும்புகிற (அரஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்' என்ற திருக்குர்ஆனின் வசனம் குறைஷிகளுக்காகவே அருளப்பட்டது.

    பின்னர் நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களை அனுப்பி, திருக்குர்ஆனின் 9-வது அத்தியாயத்தில் ஒப்பந்த முறிவு பற்றிக் கூறப்படும் முதல் இருபது வசனங்களை அறிவிக்குமாறு கட்டளையிட்டார்கள். அதில் “ஒப்பந்தங்கள் அனைத்தும் இன்றுடன் முடிந்து விட்டன” என்பதை அறிவித்தார்கள். மேலும், நான்கு மாதங்கள் தவணையளித்தார்கள். ஒப்பந்தமில்லாதவர்களுக்கும் நான்கு மாத தவணை கொடுத்தார்கள். உடன்படிக்கை செய்தவர்கள் அதனை மீறாமலும் முஸ்லிம்களுக்கு எதிராகப் பிறருக்கு உதவி செய்யாமலும் இருந்தால் அவர்களது ஒப்பந்தக் காலம் முடியும் வரை தவணையளிக்கப்படும் என்றும் அறிவித்தார்கள்.

    இதெல்லாம் அரபுலகம் முழுவதும் சிலை வணக்கம் ஒழிந்தது என்ற முகமாக அறிவிக்கப்பட்டது.

    முஸ்லிம்களுக்கு மக்காவில் கிடைத்த வெற்றி, மூளையை மழுங்கச் செய்த சிலை வணக்கக் கலாச்சாரத்தை வேரோடு கலைத்து விட்டது. இவ்வெற்றியால் பொய்யிலிருந்து மெய்யை, அசத்தியத்திலிருந்து சத்தியத்தை மக்கள் பிரித்து அறிந்து கொண்டனர். அவர்களின் சந்தேகங்கள் நீங்கின. எனவே, இஸ்லாமை ஏற்றுக் கொள்ள விரைந்தனர்.

    மக்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாக நுழைந்தனர். தபூக் போர் முடிந்து நபி (ஸல்) ஹஜ்ஜுக்காக மக்கா பயணமான போது முஸ்லிம்களின் ஒரு கடலே அவர்களுடன் இருந்தது. அதாவது தஸ்பீஹ், தக்பீர், தஹ்லீல் முழக்கங்கள் விண்ணை முட்ட ஓர் இலட்சம் அல்லது ஓர் இலட்சத்து நாற்பதாயிரம் நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களைப் புடை சூழச் சென்றனர்.

    அதேபோல் நபி (ஸல்) தபூக் போரிலிருந்து மதீனா வந்த பின் யமன் நாட்டு ஹிம்யர் பகுதி அரசர்களின் கடிதம் நபி (ஸல்) அவர்களுக்கு வந்தது. அரசர்களான அல்ஹாரிஸ் இப்னு அப்து குலால், நுஅய்ம் இப்னு அப்து குலால், நுஃமான் போன்றோர் மாலிக் இப்னு முர்ரா ரஹாவியை நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி, தாங்கள் இணைவைத்தலையும் இணைவைப்பவர்களையும் விட்டு விலகி இஸ்லாமை ஏற்றோம் என்று தெரிவித்தனர்.

    நபி (ஸல்) அந்த அரசர்களின் இஸ்லாமிய வருகையை ஏற்றுக் கொண்டு அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அதில் முஸ்லிம்களின் சலுகைகள், அவர்களின் கடமைகள் முதலியவற்றை விவரித்தார்கள். மேலும், முஆத் இப்னு ஜபல் (ரலி) தலைமையில் தம் தோழர்களை மார்க்கக் கல்விப் பணிக்காக அம்மக்களிடம் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். அபூமூஸா அஷ்அயை யமனின் கீழ்புறத்தில் உள்ள ஜுபைத், மஃரப், ஜமா, ஸால் ஆகிய பகுதிகளுக்குப் பொறுப்பாளியாக்கினார்கள். “நீங்கள் இருவரும் இஸ்லாமை மக்களுக்கு எளிமையாக்குங்கள் கடினமாக்காதீர்கள். நற்செய்தி நவிலுங்கள் வெறுப்பூட்டாதீர்கள். இணக்கமாக இருங்கள் பிணங்கிக் கொள்ளாதீர்கள்” என நபி (ஸல்) அழகிய அறிவுரை கூறியனுப்பினார்கள்.

    ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 2:25:1622, 1:8:369, 2:25:1665, திருக்குர்ஆன் 2:199, அர்ரஹீக் அல்மக்தூம்

    - ஜெஸிலா பானு.
    நாகூர் தர்கா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக் கூடு ஊர்வலம் நடந்தது. இதில் திரளானபக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நாகப்பட்டினத்தை அடுத்த நாகூரில் உலக பிரசித்திபெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவில் நாகூர் ஆண்டவர் என போற்றி அழைக்கப்படும் சாகுல்ஹமீது காதிர் நாயகம் மறைந்த நினைவு நாளையொட்டி கந்தூரி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 461-வது கந்தூரி விழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று இரவு நடந்தது. சந்தனக்கூடு நாகையில் உள்ள அபிராமி அம்மன் திருவாசலில் இருந்து இரவு 7 மணிக்கு தாரை, தப்பட்டை உள்ளிட்ட வாத்திய முழக்கங்களுடன் புறப்பட்டது. அப்போது சாம்பிராணி சட்டி ரதம், நகராமேடை மற்றும் பல்வேறு மின் அலங்கார தட்டிகள் சந்தன கூட்டின் முன்னும், பின்னும் அணிவகுத்து சென்றன. சந்தன கூடு ஊர்வலம் நாகை புதுப்பள்ளிதெரு வழியாக யாஹீசைன் தெரு, நூல்கடைத் தெரு, வெங்காயகடைத் தெரு, பெரிய கடைத் தெரு, சர்அகமது தெரு உள்ளிட்ட தெருக்களில் பவனி வந்தது.

    பின்னர் அண்ணாசிலை, பப்ளிக் ஆபீஸ் ரோடு வழியாக சந்தனகூடு நாகூர் சென்றடைந்தது. சந்தனகூடு நாகை வீதிகளில் ஊர்வலமாக வந்த போது வீட்டு மாடிகளிலும், வீதிகளிலும் ஆங்காங்கே ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று சந்தனகூட்டை கண்டு மகிழ்ந்தனர். சந்தனகூடு ஊர்வலத்தின்போது சாலையின் இருபுறங்களிலும் மக்கள் திரளாக கூடி நின்று பெரிய ரதத்தின் மீது பூக்களை வீசி பிரார்த்தனை செய்தனர்.

    சந்தனக்கூடு ஊர்வலம் நாகூர் மெயின்ரோட்டை வந்தடைந்ததும் அங்குள்ள கூட்டுப்பாத்திகா மண்டபத்தில் பாத்திகா ஓதி பின்னர் நாகூர் பெரிய கடைத்தெரு, குஞ்சாலி மரைக்காயர் தெரு, மியான் தெரு, ரெயிலடி தெரு, நூல் கடைத்தெரு வந்து அங்குள்ள பாரம்பரிய முறைகாரர் வீட்டில் சந்தனக் குடத்தை வாங்கி கூட்டில் வைத்து மினரா வடப்புறத் தெரு, அலங்கார வாசல், செய்யது பள்ளித்தெரு சந்தன மகாலை வந்தடைந்தது.

    பின்னர் நியூ பஜார் லைன் வழியாக தர்காவின் கால்மாட்டு வாசல் வழியாக சந்தனக்குடம் தர்காவின் உள்ளே கொண்டு செல்லப்பட்டது. சந்தன குடத்தை இறக்கியதும் கூடு மீண்டும் தர்காவின் அலங்கார வாசலை சென்றடைந்தது. இதனையடுத்து அதிகாலை 4.30 மணியளவில் சந்தனகுடங்கள் தர்காவில் உள்ள ஆண்டவரின் சமாதி அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தர்கா பரம்பரை கலிபா கலிபாமஸ்தான்சாகிபு துவா செய்து ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசினார்.

    விழாவில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் இன, மத பேதமின்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி நாகூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப் பட்டன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர் தேஷ்முக் தலைமையில் 1,200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
    நெருக்கமானவர்கள் போற்றும்படி வாழ வேண்டும், எதிரிகள் குறை காண முடியாத அளவிற்கு செம்மையாக வாழ வேண்டும். அதுவே அர்த்தமுள்ள வாழ்க்கை, பயனுள்ள வாழ்க்கை.
    ஒருவர் நல்லவர், நம்பகமானவர், வாய்மையாளர் என்று அறியப்பட முக்கியமான இரு தரப்பினரின் சான்றிதழ் தேவை.

    ஒன்று, அவருக்கு மிக நெருக்கமானவர்கள் தரும் சான்றிதழ். ஒருவரைப் பற்றிய உண்மை நிலையை சரியாக அறிந்தவர்கள் அவருக்கு நெருக்கமாக வாழ்கின்ற மனைவி, கணவன், பிள்ளைகள், உறவினர், நண்பர், அண்டை வீட்டார், பணியாட்கள் ஆகியோரே.

    தூரத்தில் இருப்பவர்களுக்கு ஒருவரைப் பற்றி மேலோட்டமாகத்தான் தெரியும். அவரது திறமைகள், ஆற்றல்கள், சேவை, தியாகம் ஆகியவை பற்றி அவர்கள் அறிந்திருப்பார்கள். ஆனால் அவரைப் பற்றிய நுணுக்கமான விஷயங்கள் நெருக்கமானவர்களுக்கே தெரியும்.

    நெருக்கமானவர்களை அடுத்து, எதிரிகள் தரும் சான்றிதழும் முக்கிய இடத்தைப் பெறுகிறது. எதிரிகள் எப்போதும் குறை காண்பதிலேயே கவனமாக இருப்பார்கள். துப்பறியும் அதிகாரி போல துருவித்துருவி குறைகளை ஆராய்வார்கள். ‘எப்போது இவன் தவறு செய்வான்’ என்று காத்திருப்பார்கள்.

    எனவே ஒருவரது எதிரி அவரை நல்லவர் என்றால் அது அவருக்கு கிடைக்கும் மிகப்பெரும் விருதாகும்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இவ்விரு தரப்பினரிடம் இருந்தும் மிக எளிதாக நற்பெயர் பெற்றார்கள்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவரது நாற்பதாவது வயதில்தான் இறைத்தூதராக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    சாதாரண மனிதராக வாழ்ந்து கொண்டிருந்த ஒருவர், திடீரென தம்மை இறைத்தூதர் என்று அழைக்க ஆரம்பித்தால் எவர்தான் நம்புவர்? ஆனால் அவரது மனைவி கதீஜா, உற்ற நண்பர் அபூபக்கர், உதவியாளர் ஜைத், மருமகன் அலி இன்னும் அவருக்கு மிக நெருக்கமான தோழர்கள் எவ்வித கேள்வியுமின்றி அவரை இறைத்தூதராக ஏற்றுக்கொண்டனர்.

    ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) ஒருமுறை கூடப் பொய் சொல்லி அவர்கள் கேட்டதில்லை. நபிகள் நாயகத்தின் வாய்மையிலும், நேர்மையிலும் அவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.

    மக்கா நகர மக்களும் அவரது வாய்மையில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தனர். இறை மார்க்கத்தை மக்களுக்கு அறிவிப்பதற்காக அக்கால முறைப்படி, மக்காவிலுள்ள ஸபா குன்றின் மீது ஏறி நின்று மக்களை நோக்கி கேட்பார், “மக்களே! இம்மலைக்குன்றின் பின் புறமுள்ள கணவாயில் உங்களைத் தாக்க குதிரை வீரர்கள் காத்திருக்கின்றார்கள் என நான் கூறினால் நம்புவீர்களா?” எனக் கேட்பார். மக்கள் ஒரே குரலில், “ஆம், நம்புவோம், நீர் பொய்யுரைத்து நாங்கள் கேட்டதில்லை” என்று நபிகள் நாயகத்தின் நேர்மைக்கு சான்று பகர்ந்தனர்.

    இனி, எதிரிகள் நபிகள் நாயகத்தின் நேர்மைக்கு வழங்கிய சான்றுகளை பார்ப்போம்.

    நபிகள் நாயகம் போதித்த “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற கோட்பாட்டை மூர்க்கத்தனமாக எதிர்த்தவர்கள், அவரை நோக்கி ‘சூனியக்காரர், கவிஞர், பைத்தியக்காரர்’ என்று கூறினார்களே தவிர, அவரைப் பொய்யர் என்று ஒருபோதும் தூற்றியதில்லை. அவரது வாய்மை குறித்து எந்த சந்தேகத்தையும் கிளப்பியதில்லை.

    நபிகளாரின் பரம எதிரியான அபூஜஹல், ஒருமுறை நபிகளாரை நோக்கி, “முஹம்மதே! நீர் பொய்யர் அல்ல, நீர் கொண்டு வந்துள்ள செய்திதான் பொய்யானது” என்றார்.

    நபிகள் நாயகத்தின் இன்னொரு எதிரி, நபிகளாரின் நேர்மைக்கு வழங்கும் சான்றைப் பார்ப்போம்.

    இஸ்லாத்தை ஏற்கும்படி ரோமானியப் பேரரசர் ஹெராகுலியஸ் என்பவருக்கு நபிகள் நாயகம் கடிதம் எழுதினார்கள்.

    சக்கரவர்த்தியாகிய தனக்கே கடிதம் எழுதத் துணிந்த முஹம்மத் எப்படிப்பட்டவர் என்பதை அறிய ஹெராகுலியஸ் விரும்பினார்.

    அவ்வேளையில் மக்காவிலிருந்து ரோம தேசத்திற்கு வணிகராக வந்திருந்த நபிகள் நாயகத்தின் கடும் பகைவரான அபூசுப்யான் என்பவரை அழைத்து மன்னர் விசாரணை செய்தார்.

    ஹெராகுலியஸ்: ‘எத்தகைய மக்கள் முஹம்மதை பின்பற்றுகின்றனர்? ஏழைகளா?, செல்வாக்கு மிக்கவர்களா?’

    அபூசுப்யான்: பலவீனமானவர்களும், கதியற்றவர்களும்.

    ஹெராகுலியஸ்: அவர்கள் எண்ணிக்கை பெருகி வரு கிறதா, குறைந்து வருகிறதா?

    அபூசுப்யான்: பெருகி வருகிறது

    ஹெராகுலியஸ்: அவர் எப்போதாவது பொய்யுரைத்தது உண்டா?

    அபூசுப்யான்: இல்லை

    ஹெராகுலியஸ்: அவர் மோசடி செய்ததுண்டா?

    அபூசுப்யான்: இதுவரை இல்லை, இனிமேல் என்ன செய்வார் என்பதை பார்க்க வேண்டும்.

    ஹெராகுலியஸ்: அவர் உங்களுக்கு என்ன போதிக்கிறார்?

    அபூசுப்யான்: ஒரே இறைவனை வணங்க வேண்டும், அவனைத் தொழ வேண்டும், நேர்மையாக இருங்கள், உண்மை பேசுங்கள், உறவினர்களின் உரிமைகளை வழங்கி விடுங்கள்.

    இதனைக் கேட்ட ஹெராகுலியஸ் “தம் சொந்த விஷயத்தில்கூட பொய் சொல்லாத மனிதர், மத விஷயத்தில் ஏன் பொய் சொல்லப் போகிறார்?” என்று வியந்து கூறினார்.

    ஆக, நபிகள் நாயகத்தின் வாழ்க்கைக்கு நெருக்கமானவர்களும் சான்று பகர்ந்தார்கள், எதிரிகளும் சான்று பகர்ந்தார்கள். நபிகள் நாயகத்தின் வெற்றிக்கு அவரது வாய்மையான வாழ்க்கையும் முக்கிய காரணமாகும்.

    தொடக்கத்தில் அவரது கொள்கைகளை தீவிரமாக எதிர்த்தவர்களும் காலப்போக்கில் அந்த எதிர்ப்பை கைவிட்டனர். காரணம் என்னவெனில் நபிகள் நாயகம் போதிக்கும் கொள்கைகள் அவரது சுயநலத்திற்காக அல்ல, மாறாக மனித குலத்தின் மேன்மைக்காகவே என்பதை உணர்ந்து கொண்டார்கள்.

    நமது வாழ்க்கையும் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையைப் போன்றே அமைய வேண்டும். நெருக்கமானவர்கள் போற்றும்படி வாழ வேண்டும், எதிரிகள் குறை காண முடியாத அளவிற்கு செம்மையாக வாழ வேண்டும். அதுவே அர்த்தமுள்ள வாழ்க்கை, பயனுள்ள வாழ்க்கை.

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத், சென்னை.
    நபித் தோழர்கள், முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் இறைவனிடம் எப்படிப் பிரார்த்திப்பது என்று கேட்டபோது நபி(ஸல்) ஒரு சம்பவத்தைச் சொல்லி விளக்கினார்கள்.
    நபித் தோழர்கள், முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் இறைவனிடம் எப்படிப் பிரார்த்திப்பது என்று கேட்டபோது நபி(ஸல்) ஒரு சம்பவத்தைச் சொல்லி விளக்கினார்கள்.

    மூன்று நண்பர்கள் சென்று கொண்டிருந்தபோது, பெரும் மழை பிடித்ததால், அம்மூவரும் மலைப் பகுதியில் அமைந்திருந்த குகை ஒன்றில் தஞ்சம் புகுந்தனர். எதிர் பாராதவிதமாகப் பெரும்பாறை ஒன்று மலையிலிருந்து உருண்டு வந்து அந்தக் குகையின் வாயிலை மூடிவிட்டது.

    பீதியடைந்தவர்கள் இறைவனைப் பிரார்த்தித்தனர். அல்லாஹ்வின் திருப்திக்காக மட்டும் செய்த, தூய்மையான நற்செயல்களை நினைத்து, அவற்றை வசீலாவாக அதாவது துணைச் சாதனமாகக் கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம் என்று முடிவெடுத்தனர். தூய்மையான நற்செயலுக்காக அல்லாஹ் தங்களுக்கு உதவுவான் என்று நம்பினர்.

    முதலாம் நபரின் பிரார்த்தனையானது “இறைவா! எனக்கு முதிர்ந்த வயதுடைய தாய் தந்தையர் இருந்தனர். சிறு குழந்தைகளும் இருந்தனர். அவர்களைப் பராமரிப்பதற்காக நான் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன். மாலையில் நான் திரும்பி வந்தபின் ஆட்டின் பாலைக் கறந்து கொண்டுவந்து என் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு முன்பாக என் பெற்றோருக்கு அதைப் புகட்டுவேன்.

    ஒரு நாள், நான் வீட்டிற்குத் தாமதமாகத் திரும்பி வந்தேன். இரவாகிவிட்டதால் என் தாய் தந்தை இருவரும் உறங்கி விட்டனர். வழக்கமாக நான் கறந்து வந்ததைப் போன்றே அன்றைக்கும் ஆட்டுப் பாலைக் கறந்து எடுத்துக் கொண்டு வந்தேன். அவர்களைத் தூக்கத்திலிருந்து எழுப்பிட மனமில்லாமல் அவர்களின் தலைமாட்டில் நின்று கொண்டேன்.

    என் பெற்றோருக்கு முதலில் புகட்டாமல் என் குழந்தைகளுக்கு முதலில் புகட்டிட எனக்கு விருப்பமில்லை. என் குழந்தைகளோ என் காலுக்கு அடியில் பாலுக்காக அழுது பரிதவித்துக் கொண்டிருந்தனர். இதே நிலையில் வைகறை நேரம் உதயமாகிவிட்டது. நான் இச்செயலை அல்லாஹ் உன் திருப்தியை நாடியே செய்திருக்கிறேன் என்று நீ கருதினால் எங்களுக்கு இந்தப் பாறையைச் சற்றே நகர்த்திக் கொடுப்பாயாக! அதன் வழியாக நாங்கள் வானத்தைப் பார்த்துக் கொள்வோம்.
    அவ்வாறே அல்லாஹ் அவர்களுக்குச் சிறிதளவு மட்டும் நகர்த்தித் தந்தான். அதன் வழியாக அவர்கள் வானத்தைப் பார்த்தார்கள்.

    மற்றொருவர் மன்றாடிப் பிரார்த்தனை புரிய ஆரம்பித்தார் “இறைவா! எனக்கு என் முறைப்பெண் ஒருத்தி இருந்தாள். ஆண்கள் பெண்களை எப்படி ஆழமாக நேசிப்பார்களோ அப்படி நான் அவளை நேசித்தேன். நான் அவளிடம் என்னுடன் உடலுறவு கொள்ள வருமாறு அழைத்தேன். நான் அவளுக்கு நூறு தீனார்கள் பொற்காசுகள் கொடுத்தாலே தவிர என்னுடன் உறவு கொள்ள முடியாது என்று அவள் மறுத்தாள்.

    நான் அந்தப் பணத்தை மிகவும் சிரமப்பட்டுச் சேகரித்தேன். நான் அந்தப் பணத்துடன் சென்று அவளுடைய இரண்டு கால்களுக்கும் இடையே அமர்ந்தபோது அவள், 'அல்லாஹ்வின் அடியானே! அல்லாஹ்வுக்கு அஞ்சு. முத்திரையைக் கற்பு உறுப்பை அதற்குரிய மணப் பந்த உரிமையின்றித் திறக்காதே' என்று கூறினாள். உடனே நான் உடலுறவு கொள்ளாமல் எழுந்து விட்டேன். இறைவா! உன் அச்சத்தால் நான் புரிந்த இந்த நற்செயலை நான் உன் திருப்தியைப் பெற விரும்பியே செய்ததாக நீ கருதினால் இந்தப் பாறையை எங்களைவிட்டு இன்னும் சற்று நீக்கி விடுவாயாக!” என்று சொன்னதும் உடனே, பாறை இன்னும் சற்று விலகியது.

    மூன்றாமவர் உருக்கமாக மன்றாடிப் பிரார்த்தித்தார் “இறைவா! நான் ஒரு ஃபரக் அளவு நெல்லைக் கூலியாக நிர்ணயித்துக் கூலியாள் ஒருவரை வேலை செய்ய அழைத்துச் சென்றேன். அவர் தம் வேலை முடிந்தவுடன், 'என்னுடைய உரிமையைக் கூலியைக் கொடு' என்று கேட்டார். நான் நிர்ணயம் செய்திருந்த அவரின் கூலியை அவர் முன் வைத்தேன்.

    அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். அவர் சென்றபின் அதை நான் தொடர்ந்து நிலத்தில் விதைத்து விவசாயம் செய்து வந்தேன். எதுவரையென்றால் அதன் வருவாயிலிருந்து பல மாடுகளையும் இடையர்களையும் நான் சேகரித்து விட்டேன். சில காலங்களுக்குப் பிறகு அதே கூலியாள் என்னிடம் வந்து, 'அல்லாஹ்வுக்கு அஞ்சு' என்று கூறினார். நான் அவரிடம், 'அந்த மாடுகளிடமும் இடையர்களிடமும் சென்று அவற்றை எடுத்துக்கொள்' என்றேன்.

    அதற்கு அம்மனிதர், 'அல்லாஹ்வுக்கு அஞ்சு என்னைப் பரிகாசம் செய்யாதே' என்று கூறினார். நான், 'உன்னை நான் பரிகாசம் செய்யவில்லை. நீ இவற்றை எடுத்துக் கொள் என்று பதிலளித்தேன். அவர் அவற்றை எடுத்துச் சென்றார். நான் இந்த நற்செயலை உன் திருப்தியைப் பெற விரும்பியே செய்திருந்ததாக நீ கருதினால் மீதமுள்ள பாறையின் அடைப்பையும் நீக்குவாயாக!” என்றார். இந்தப் பிரார்த்தனைக்காக அல்லாஹ் அப்பாறையை முழுவதுமாக அகற்றி மீதியிருந்த அடைப்பையும் நீக்கிவிட்டான்.

    நபி(ஸல்) அவர்கள் பகிர்ந்த இந்தச் சம்பவங்களின் மூலமாக நபித் தோழர்கள் பல விஷயங்களைப் புரிந்து கொண்டனர்.

    ஸஹீஹ் புகாரி 2:41:2333

    - ஜெஸிலா பானு.
    நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்த காலகட்டத்தில் அவர்களோடு வாழ்ந்த பல அறிஞர் பெருமக்கள், அந்த வசனங்களின் பின்னணியாய் நபிகளார் சொன்ன வரலாற்றுச் சம்பவங்களை விளக்கி இருக்கிறார்கள்.
    எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே. அத்தகைய இறைவனின் அருட்கொடைகளில் குறிப்பிடத்தக்கது திருக்குர்ஆன்.

    6666 வசனங்கள் கொண்ட திருக்குர்ஆன், ‘வஹி’ என்னும் இறைச்செய்தியாக முகம்மது நபிகள் (ஸல்) அவர்கள் மூலம் இந்த உலகிற்கு அருளப்பட்டது.

    23 ஆண்டு கால இடைவெளியில் பல்வேறு காலகட்டங்களாக, அவ்வப்போது நிகழ்கின்ற சூழ்நிலைக்கேற்ப, படிப்பினைகளாக அல்லது தீர்ப்புகளாக அல்லது கேள்வியின் பதிலாக நபிகளார் மூலம் அருளப்பட்டவை தான் இந்த வசனங்கள்.

    திருக்குர்ஆன் அருளப்பட்டு 1400 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், அது எப்படி அருளப்பட்டதோ அதிலிருந்து ஒரு புள்ளி கூட மாற்றம் பெறாமல் இத்தனை ஆண்டுகாலம் தலைமுறைகளை எல்லாம் தாண்டி நிலைத்திருக்கிறது. இது திருக்குர்ஆனின் சிறப்பு அம்சங்களில் ஒன்று.

    திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள அத்தனை வசனங்களுமே இந்த மனித சமுதாயத்தை நேர்வழிப்படுத்த உதவுகிறது. ஒரு மனிதன் பிறந்ததில் இருந்து உயிரோடு இருக்கும் காலம் வரை உள்ள உலக வாழ்க்கை, அவனது மரணத்திற்குப்பின் உள்ள மண்ணறை மற்றும் மறுமை வாழ்க்கை என்று மனித வாழ்க்கையின் வாழ்வியல் தத்துவங்கள், மார்க்க வழிபாடுகள் போன்றவற்றை உள்ளடக்கிய வேதம் இது.

    அதுமட்டுமல்ல, இன்றைய விஞ்ஞானம் கண்டுகொண்ட அதிசயங்களை எல்லாம் அன்றே சொன்னது திருக்குர்ஆன். எந்தவித அறிவோ, ஆற்றலோ, திறனோ இல்லாத அன்றைய காலத்திலேயே இந்த விஞ்ஞான உண்மைகள் சொல்லப்பட்டது. அப்போது, அது அறிவுக்கு எட்டாத ஒரு கற்பனை செய்தியாக கருதப்பட்டது.

    திருக்குர்ஆன் அருளப்பட்டு பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆராய்ச்சிகளால் இந்த உண்மைகள் கண்டறியப்பட்டன. தாங்கள் கண்டுபிடித்த விஞ்ஞான உண்மைகள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மிகத்தெளிவாக திருக்குர்ஆனில் பதிவு செய்யப்பட்டுள்ளதை விஞ்ஞான உலகம் ஒப்புக்கொண்டது.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைசி ஹஜ்ஜின் அரபாவுடைய நாளிலே மாலை நேரத்தில் தன் ‘கஸ்பா’ என்ற ஒட்டகத்தின் மேல் ஏறி அரபா மலையின் சற்று உயரமான இடத்தில் இருந்து கொண்டு ‘நான் இன்றைய தினம் உங்களுக்கு என்னுடைய இறைவனின் கட்டளைக்கிணங்க, இஸ்லாம் என்ற ஏகத்துவ மார்க்கத்தை, உங்களின் வாழ்வின் வழிகாட்டியை முழுமை செய்துவிட்டேன். அதற்கெல்லாம் நீங்கள் சாட்சியாக இருங்கள்’ என்று சொல்லிவிட்டு, ‘நண்பர்களே எனக்கு நீங்கள் உங்கள் இறைவனிடம் சாட்சி சொல்வீர்களா?’ என்று வினவினார்கள்.

    கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேலான நபித்தோழர்கள் அங்கே கூடியிருந்தனர். அவர்கள் அனைவரும், ‘இறைத்தூதர் அவர்களே, உங்களுக்கு அல்லாஹ் அளித்த கட்டளையை முழுமையாக நிறைவேற்றி விட்டீர்கள்’ என்று ஒருமித்த குரலில் உரக்கச்சொன்னார்கள்.

    நபிகள் (ஸல்) அவர்கள், தங்களின் ஆள்காட்டி விரலை வானத்தை நோக்கி நீட்டியவர்களாக, ‘இறைவனே இதற்கு நீயே சாட்சி’ என்று மூன்று முறை சொன்னார்கள்.

    அவர்களின் சொல்லை முழுமையாக அங்கீகரித்து கொண்ட அல்லாஹ் உடனே கீழ்கண்ட வசனத்தை இறக்கினான்:

    ‘இன்றைய தினம் நான் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து, என் அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டேன். உங்களுக்காக இந்த இஸ்லாமை மார்க்கமாக திருப்தி அடைந்தேன். அங்கீகரித்து கொண்டேன்’ (திருக்குர்ஆன் 5:3).

    அதுவே வான்மறையின் கடைசி வஹியாய் வந்த வசனம். இப்படி முழுமைபெற்ற அருள்மறை, அண்ணல் நபிகள் (ஸல்) இவ்வுலகை விட்டு பிரிந்து சென்று விட்ட நிலையிலும் அப்படியே பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வந்தது.

    அந்தக்காலத்தில் திருக்குர்ஆன் வசனங்கள் அனைத்தும் மிருகங்களின் தோல், எலும்பு, மரச்சட்டங்கள் போன்றவற்றில் எழுதப்பட்டு பாதுகாக்கப்பட்டது. அதுவும் ஒன்றிரண்டு பிரதிகளாகவே இருந்தன.

    நபிகளாருக்கு பிறகு அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் கலீபாவாக பொறுப்பு ஏற்றார். அப்போது திருக்குர்ஆன் வசனங்களை தொகுப்பது குறித்து விவாதம் எழுந்தது. அப்போது அவர், நபிகள் (ஸல்) அவர்கள் செய்யத்துணியாத ஒரு காரியத்தை நான் செய்வதற்கு அச்சப்படுகிறேன்’ என்று கூறினார்கள்.

    அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களுக்குப்பின் கலீபா பொறுப்பு ஏற்ற உமர் கத்தாப் (ரலி) அவர்கள் காலத்தில் திருக்குர்ஆன் வசனங்களை தொகுப்பது காலத்தின் கட்டாயமாக ஆனது. உமர் (ரலி) ஆட்சிக்காலத்தில் தான் பாரசீகம், ரோம் போன்ற பெரும் வல்லரசுகள் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது. அங்கு பலர் ஏகத்துவத்தின் சிறப்பை உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்வந்த போது, இறை கட்டளைகளை ஓதி உணர்வதற்கு நிறைய திருகுர்ஆன் பிரதிகளின் தேவை அவசியமாயிற்று.

    எனவே உமர் கத்தாப் (ரலி) கால ஆட்சியில் எல்லாப்பிரதிகளும் ஒன்று திரட்டப்பட்டது. நபிகளார் காலத்திலேயே திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த பெருமைக்குரிய சஹாபாக்களை ஒன்று கூட்டி ஒரு குழு அமைக்கப்பட்டது.

    திருக்குர்ஆன் வசனங்களை தொகுத்து முறைப்படுத்தி அத்தியாயங்களாய் பிரித்து இன்றுள்ள குர்ஆன் போல் வடிவமைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை அதே நிலையிலேயே பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    மிருக தோல்களிலும், எலும்புகளிலும், ஈச்சம் பட்டைகளிலும், பலகைகளிலும் உருவேறிய திருக்குர்ஆன், லட்சக்கணக்கான மக்களின் மனங்களிலும் மனப்பாடமாக குடியேறியது. எத்தனை பிரதிகள் அழிந்து போனாலும் திருக்குர்ஆனை மனப்பாடம் செய்த ஒருவர் உள்ளவரை அது மீண்டும் உயிர் பெற்று உருவெடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

    திருக்குர்ஆனில் சொல்லப்படாத செய்திகளே இல்லை என்கின்ற அளவிற்கு அது முழுமைபெற்றதாகும். பல நபிமார்களின் வரலாறு இதில் இடம்பெற்றுள்ளது. ‘அழகிய சரித்திரம்’ என்ற அடைமொழியோடு யூசுப் நபிகள் சரித்திரம் முழுவதும் சொல்லப்பட்டுள்ளது. இது தவிர பல வரலாற்றுக் குறிப்புகள், வாழ்வியல் தத்துவங்கள், நன்னெறி சிந்தனைகள், நற்பண்புகள் என்று மனித வாழ்க்கைக்கு தேவைப்படும் அனைத்தும் இதில் இடம்பெற்றுள்ளது.

    அந்த வான்மறையில் சில செய்திகள் ஒற்றை இரட்டை வசனங்களாகவே மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்த காலகட்டத்தில் அவர்களோடு வாழ்ந்த பல அறிஞர் பெருமக்கள், அந்த வசனங்களின் பின்னணியாய் நபிகளார் சொன்ன வரலாற்றுச் சம்பவங்களை விளக்கி இருக்கிறார்கள்.

    அதன் அடிப்படையில், அப்படிப்பட்ட வசனங்களின் வரலாற்று பின்னணிகளை விளக்கமாக எழுதினால், அதைப்பற்றி அறியாத மக்களுக்கு அது ஒரு விழிப்புணர்வாக அமையும் என்ற எண்ணத்தில் வெளிவரும் தொகுப்பே இந்த ‘திருக்குர் ஆன் வசனங்களின் வரலாற்று பின்னணி’.

    இனி தொடர்ந்து வசனங்களின் வரலாற்று செய்திகளைப் பார்ப்போம்.
    ×