என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    பெரும்பாலும் மழை கிடைக்கப்பெறுவதும், தடுக்கப் படுவதும் மனிதக்கரங்களில் இருக்கின்றது. இறைவனின் நாட்டம் என்பது மேலதிக கருணை மட்டுமே.
    மழையின்மைக்கு மனிதன் கூறும் காரணங்களாவன: ஓசோனில் ஓட்டை... வெப்பம் அதிகரித்தல்.. பனி மலைகள் உருகுதல். மழை பொழியாமல் இருப்பதற்கு இன்றைய விஞ்ஞானமும் இவ்வாறு பல காரணங்களைக் கூறலாம். உண்மைதான்.

    ஆயினும், இஸ்லாம் இன்னொரு கோணத்தில் இதனைப் பார்க்கிறது.

    ஆம், மனிதன் செய்யும் பாவங்களும் பிழைகளும்கூட மழை பெய்யாமல் இருப்பதற்கான முக்கியக் காரணம் என்று இஸ்லாம் கூறுகின்றது.

    நல்லவன் ஒருவன் இந்தப் பூமியில் வாழ்கின்றான் என்றால் அவனால் சக மனிதன் நலம்பெறுவதுடன், ஏனைய உயிரினங்களும் நலம் பெறுகின்றன. அதேநேரம் தீயவன் ஒருவன் இருக்கின்றான் என்றால், அவனால் பாதிப்படைவது சக மனிதன் மட்டு மல்ல.. மாறாக, அவன் வாழும்பகுதி, கால்நடைகள், ஏன் மரங்கள்கூட பாதிப்படைகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

    ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக்கடந்து ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டுசெல்லப்பட்டது. அப்போது நபிகளார் (ஸல்), (இவர்) ஓய்வு பெற்றவராவார்; அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார் என்று சொன்னார்கள். மக்கள், “இறைத்தூதர் தூதர் அவர்களே! ஓய்வு பெற்றவர்; ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?” என்று கேட்டார்கள்.

    நபி (ஸல்) அவர்கள், “இறைநம்பிக்கை கொண்ட அடியார் (இறக்கும்போது) இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்தும் தொல்லையில் இருந்தும் நிம்மதிபெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார். பாவியான அடியான் (இறக்கும்போது) அவனி(ன் தொல்லைகளி)டமிருந்து மற்ற அடியார்கள், நாடு நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன நிம்மதி பெறுகின்றன” என்று சொன்னார்கள். (புகாரி, முஸ்லிம்)

    தீயவன் ஒருவன் உலகில் உயிர் வாழ்கின்றான் என்றால் அவன் தீயவனாக இருப்பதன் பாதிப்பு அவனுக்கு மட்டுமல்ல. மாறாக, அவன் வாழும் பகுதியில் இருக்கும் கால்நடைகள், மரம் செடிகொடிகள்கூட பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஆன்மிக ரீதியாகப் பார்க்கும்போது அவனது பாவத்தின் காரணத்தால் மழை தடுக்கப்படுகிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும். அதேவேளை, உலகிய ரீதியாகப் பார்க்கும்போது மழைக்குக் காரணமாக அமையும் மரம் செடி கொடிகளை அவன் அழிக்கின்றான் என்பது இந்த நபி மொழியின் இன்னொரு கோணம் ஆகும். எனவேதான், ‘கெட்டவன் இறக்கும்போது படைப்பினங்கள் அனைத்தும் நிம்மதி பெறுகின்றன’ என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    ஆக, மனிதர்கள் செய்யும் தவறுக்கு இயற்கையையும், இறை வனையும் குறை கூறுவது முறையற்ற செயல். வளர்ந்த மரங்களை எல்லாம் வெட்டிக்கொண்டே, ‘மரம் நடுவோம் மழை பெறுவோம்’ என்று வெற்றுக்கூச்சல் போடுவதால் என்ன பயன்? பசுமை மரங்களை வெட்டிச் சாய்த்துவிட்டு பசுமைவழிச் சாலைகள் அமைப்பதால் மழை நீர் தடுக்கப்படும் என்பதை ஏன் உணருவதில்லை.

    ‘விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர் துளி’ என்பது சாத்தியமாக வேண்டும் என்றால் மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இல்லையென்றால்.. மரங்களை அழிப்பவர்கள் இயற்கைச் சீற்றத்தால் அழிவதற்குள் இறைவனின் சீற்றத்தால் அழிவார்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

    “விண் இன்று பொய்ப்பின்விரிநீர் வியன் உலகத்து

    உள்நின்று உடற்றும் பசி”

    என்ற வள்ளுவன் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை.

    ஆம், மழை பெய்யாமல் பொய்படுமானால் கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும் என்று வள்ளுவன் கூறுகின்றான்.

    வான்மழை பொய்ப்பின் கடல் சூழ்ந்த உலகத்தினுள் பசி வருத்தும். மழை இல்லாவிடில் விளைச்சல் இருக்காது. அதனால் பஞ்சமும், பசியும் உலகத்தை வருத்தும் என்பது இதன் பொருள்.

    மரங்கள் அழிக்கப்படுவதன் மூலம் விண்ணின் மழைத்துளி தடுக்கப்படுவது ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் தனது பாவச்செயல்களாலும் மழையை மனிதன் வரவிடாமல் தடுக்கின்றான். ஆகவே இறைவனின் கோபப்பார்வை அவர்கள் மீது இறங்குகிறது.

    தத்தமது காலங்களில் பெரும் செல்வாக்குடன் விளங்கிய எத்தனையோ சமூகத்தாருக்கு வழங்கியிருந்த அருள் வளங்களை அழித்தது குறித்து இறைவன் இவ்வாறு கூறுகின்றான்:

    “மேலும், அவர்களுக்காக நாம் வானத்திலிருந்து நன்கு மழை பொழிய வைத்தோம். மேலும், அவர்களுக்குக் கீழே ஆறுகளையும் ஓடச் செய்தோம். ஆனால் இறுதியில் (அவர்கள் நன்றி கொன்ற போது) அவர்கள் செய்த பாவங்களினால் நாம் அவர்களை அழித்துவிட்டோம்”. (திருக்குர்ஆன் 6:6)

    இவர்கள் அழிக்கப்பட்டமைக்கான காரணம் என்ன? சுயநலம் கொண்ட தங்களது மோசமான செயல்களால் மழையைத் தடுத்தார்கள். நதிகளில் இருந்து தண்ணீரை உறிஞ்சி எடுத்தார்கள். தண்ணீர் இன்றி மக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளானார்கள். ஆகவே வாழ்ந்தது போதும் என்று ஆண்டவன் அவர்களை அழித்தான்.

    அதேவேளை மீண்டும் தண்ணீரைப் பெற்றுக்கொள்வதற்கான காரணத்தையும் இறைவனே கற்றுத்தருகின்றான். ஆம், செய்த செயல்கள் தவறுதான் என்று தெரிந்துவிட்டால் பாவ மீட்சி செய்யுங்கள். செய்த பிழையைத் திருத்துங்கள். தொடர் மழையைப்பெறலாம் என்றும் இறைவன் கூறுகின்றான்.

    “உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். ஐயமின்றி அவன் பெரிதும் மன்னிப்பவனாக இருக்கின்றான். அவன் உங்கள்மீது வானத்திலிருந்து நிறைய மழையைப் பொழியச் செய்வான். செல்வத்தையும் சந்ததிகளையும் உங்களுக்கு வழங்குவான். உங்களுக்காகத் தோட்டங்களை உருவாக்குவான். உங்களுக்காக ஆறுகளையும் ஓடச் செய்வான்” (71:10-12)

    தமிழகமெங்கும் பள்ளிவாசல்களில் பரவலாக மழைத்தொழுகையும், பிரார்த்தனைகளும் நடைபெறுவதை நாம் கவனித் திருக்கலாம். நல்ல விஷயம்தான். அதேவேளை இறைவன் கூறும் இந்த அழகிய உபதேசத்தையும் கொஞ்சம் கவனத்தில் இருத்தினால், மாதம் மும்மாரி பொழியாவிட்டாலும் போதுமான அளவுக்கு மழை கிடைக்கலாம் (இறைவன் நாடினால்).

    ஆக, பெரும்பாலும் மழை கிடைக்கப்பெறுவதும், தடுக்கப் படுவதும் மனிதக்கரங்களில் இருக்கின்றது. இறைவனின் நாட்டம் என்பது மேலதிக கருணை மட்டுமே.

    இதில் இன்னொரு நகைமுரண் என்னவென்றல்.. மழலையர் பள்ளிக்கூடங்களில் இருந்தே நமது குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்கும் பால பாடம், “மழையே.. மழையே தூரப்போ” என்ற ஆங்கிலப் பாடல். பின் எங்கிருந்து மழை வரும்..?

    குழந்தைகளின் பிரார்த்தனைகளைத்தானே இறைவன் வேகமாக அங்கீகரிப்பான்.. இல்லையா..?

    மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.

    எல்லாம் வல்ல அல்லாஹ் வானுலகில் சொர்க்கத்தையும், மலக்குகளையும், ஜின் இனத்தாரையும் படைத்தான். அதன்பிறகு இந்த உலகத்தையும், உலகில் உள்ள எல்லா உயிரினங்களையும் படைக்க நாடினான்.
    எல்லாம் வல்ல அல்லாஹ் வானுலகில் சொர்க்கத்தையும், மலக்குகளையும், ஜின் இனத்தாரையும் படைத்தான். அதன்பிறகு இந்த உலகத்தையும், உலகில் உள்ள எல்லா உயிரினங்களையும் படைக்க நாடினான்.

    முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்களை களிமண்ணால் இறைவன் படைத்தான். அடுத்து, அல்லாஹ் தன் ‘ரூஹானியத்தை’ (உயிர் மூச்சை) ஊதினான். தலையில் ஊதப்பட்ட உயிர் மூச்சுக்காற்று உடல் முழுதும் பரவி நாசித்துவாரத்தின் வழியாக வெளியானது. உயிர் பெறும் அந்த தருணத்தில், மூக்கின் வழியாக மூச்சு வெளியான போது ஆதம் (அலை) அவர்கள் தும்மினார்கள்.

    தும்மிய மறுகணமே ‘அல்ஹம்து லில்லாஹ்’ என்று அவர்கள் சொன்னார்கள். முதல் மனிதனின் முதல் வார்த்தை ‘எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே’ என்பதாகவே ஆரம்பம் ஆனது.

    அதனைச்செவியுற்ற அல்லாஹ் மனம் மகிழ்ந்தவனாக, “இர்ஹ்முக்க வ ரப்புக்க”, உங்கள் இறைவனின் அருட்கொடை உங்களுக்கு கிடைக்கட்டுமாக” என்று வாழ்த்துச் சொன்னான்.

    ஆதம் (அலை) அவர்களைப் படைப்பதற்கு முன்பாகவே, தன்னுடைய மலக்கு(வானவர்)களை ஒன்று திரட்டி, ‘மலக்கு, ஜின் என்ற இரண்டு படைப்புகளோடு மனிதன் என்ற இன்னுமொரு படைப்பையும் படைக்கப் போகிறேன்’ என்று அல்லாஹ் சொன்னான்.

    அப்போது மலக்குகள் எல்லாம், “எங்கள் இறைவனே! நாங்களோ பரிசுத்தமானவர்களாக இருக்கின்றோம். எந்நேரமும் உன் புகழைப் போற்றியவர்களாக உள்ளோம். எங்களைத் தவிர்த்து உலகில் சண்டை செய்து ரத்தம் சிந்தக்கூடியவர் களையா நீ படைக்க நாடுகிறாய்?” என்று கேட்டனர்.

    “மலக்குகளே! நான் அறிந்தவற்றை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று சொல்லி அவர்களுக்கு இறைவன் பதில் கூறினான்.

    அதன்பின், ஆதம் (அலை) அவர்களுக்கு உலகின் படைப்புகள் அத்தனையையும் சொல்லித்தந்தான். தொடர்ந்து, உலகப் பொருட்களை மலக்குகளிடம் காட்டி, ‘இதன் பெயர்களைக் கூறுங்கள்’ என்று சொன்ன போது “எங்கள் இறைவா! நீ எங்களுக்கு அறிவித்து தந்ததைத் தவிர்த்து நாங்கள் வேறு எதையும் அறிய மாட்டோம்” என்றார்கள்.

    ஆனால் ஆதம் (அலை) அவர்களோ எல்லாவற்றின் பெயரையும் ஒன்றன்பின் ஒன்றாகச் சொன்னார்கள். இதனால் அல்லாஹ் மலக்குகளை விட மனிதர்களை அந்தஸ்த்தில் உயர்த்தி வைத்தான். இதுகுறித்து திருக்குர்ஆன் கூறுவதாது:-

    “நிச்சயமாக நான் உங்களைப் படைக்க கருதி, உங்களை அதாவது உங்கள் முதல் தந்தையாகிய ஆதமை உருவமைத்தோம். பின்னர் நாம் வானவர்களை நோக்கி ‘ஆதமிற்கு சிரம் பணியுங்கள்’ என்று கட்டளையிட்டோம். இப்லீஸைத் தவிர மற்ற வானவர்கள் அனைவரும் அவருக்கு பணிந்தார்கள், அவன் பணியவில்லை” (திருக்குர்ஆன் 7:11).

    மனிதன் மீது கொண்ட அபரிமிதமான அன்பின் காரணத்தால் மற்றைய படைப் பினங்களை மனிதனுக்கு சிரம் பணிந்து வணங்குமாறு அல்லாஹ் கட்டளையிட்டான். ஆனால் இப்லீஸ், அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்தான். அதனால் அவன் சபிக்கப்பட்ட சைத்தானாக சொர்க்கத்திலிருந்து வெளியில் வீசி எறியப்பட்டான்.

    இதுபற்றி திருக்குர்ஆன் கூறுவதாவது:-

    “ஆகவே இறைவன் இப்லீஸை நோக்கி, ‘நான் உனக்கு கட்டளையிட்ட சமயத்தில் நீ சிரம் பணியாதிருக்கும் படி உன்னைத் தடைசெய்தது எது?’ என்று கேட்க, அதற்கு இப்லீஸ், ‘நான் அவரை விட மேலானவன், ஏனென்றால் நீ என்னை நெருப்பால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்திருக்கிறாய். களிமண்ணை விட நெருப்பு உயர்ந்தது’ என்று இறுமாப்புடன் கூறினான்.” (திருக்குர்ஆன் 7:12)

    சொர்க்கத்தில் எத்தனை இன்பங்கள் இருந்தாலும் அவைகள் எல்லாம் ஒரு எல்லையை எட்டிவிட்ட பிறகு தனிமை என்ற கொடுமை வாட்டுவதை ஆதம் (அலை) அவர்கள் உணர்ந்தார். இதை அறிந்த அல்லாஹ், அவருக்கு தக்க துணை ஒன்றைப் படைக்க நாடினான்.

    ஒரு நாள் ஆதம் (அலை) அவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது அவரது விலா எலும்பை முறித்து “ஹவ்வா” என்ற பெண்ணைப் படைத்தான்.

    ஆதம் நபி கண்விழித்து பார்த்த போது, அவர் முன்பு அழகிய வடிவில் ஒரு உருவம் நிற்பதை கண்டார்கள். அந்த உருவத்தின் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.

    பின்னர் அந்த உருவத்திடம், ‘நீங்கள் யார்?’ என்று ஆதம் (அலை) வினவிய போது, ‘நான் தான் ஹவ்வா, உங்களுக்கு துணையாக நான் படைக்கப்பட்டுள்ளேன்’ என்றார்.

    எத்தனை இன்பங்கள் நம்மைச் சுற்றி இருந்தாலும், ஒரு மனிதனின் தனிமையைப் போக்கவும், அவன் மனதிற்கு நிம்மதியையும், சந்தோஷத்தையும், இன்பத்தையும் தரக்கூடியவர் மனைவி என்பதை இதன் மூலம் நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

    இதுபற்றி இறைவன் இவ்வாறு குறிப்பிடுகிறான்: “நாம் ஆதமிற்கு துணையாக அவர் மனைவியைப் படைத்து ஆதமை நோக்கி, ‘ஆதமே, நீர் உமது மனைவியுடன் சொர்க்கத்தில் வசித்திருப்பீராக. நீங்கள் இருவரும் இதில் விரும்பும் இடத்தில் விரும்பியவற்றை தாராளமாக புசியுங்கள். ஆனால் இந்த மரத்தை நெருங்காதீர்கள். நெருங்கினால் நீங்கள் இருவரும் உங்களுக்கு தீங்கிழைத்து கொண்டவர்களாவீர்கள்” என்று கூறினோம்.

    இறைவனின் கட்டளைப்படி ஆதம் (அலை) அவர்களும் அந்த மரத்தின் அருகில் செல்லாமல் தன்னைப் பாதுகாத்து கொண்டார்கள். ஆனால் இப்லீஸ் என்ற சைத்தான் இதைக்கெடுக்க முடிவுசெய்தான்.

    தான் பெற்றிருந்த உயர்ந்த பதவியில் இருந்து கீழிறக்கப்பட்டு இழி நிலைக்கு ஆளாக்கிய ஆதம் மீது சினம் கொண்டான். அவரையும், அவரது புனித தன்மையையும், எப்படியாவது கெடுத்து அவரை சிறுமைப்படுத்த வேண்டும் என்று காத்திருந்தான். அவன் ஏற்கனவே இறைவனிடம் இதுகுறித்து அனுமதியைப் பெற்றிருந்தான். திருக்குர்ஆன் அதை இவ்வாறு விவரிக்கின்றது.

    “இப்லீஸாகிய அவன் இறந்தவர்களை எழுப்பும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடு”என்று கேட்டான். அதற்கு இறைவன், நிச்சயமாகவே நீ அவ்வாறே அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறாய்” என்று கூறினான்.

    “அதற்கு இப்லீஸ் இறைவனை நோக்கி, நீ என்னைப் பங்கப்படுத்தியதால் ஆதமுடைய சந்ததிகளாகிய அவர்கள் உன் நேரான வழியில் செல்லாது தடை செய்ய வழிமறித்து அதில் உட்கார்ந்து கொள்வேன்” என்றான். (திருக்குர்ஆன் 7:14-16).

    இப்படி கூறிய இப்லீஸ், ஆதமை வழிகெடுக்க திட்டமிட்டான். எந்த மரத்தின் அருகே செல்லக்கூடாது என்று இறைவன் கட்டளையிட்டு இருந்தானோ, அதை பயன்படுத்தி, அவர்களை கெடுக்க முடிவு செய்தான். இதுதொடர்பாக, அவர்கள் மனதில் ஆசையை விதைக்க எண்ணி, அதில் வெற்றியும் பெற்றான்.
    உலகில் ஒருவர் கண்ணியத்தோடும் கவுரவத்தோடும் வாழவேண்டும் என்றால் மனக்கட்டுப்பாடு மிக அவசியம். அப்படிப்பட்ட மனத்தூய்மை தந்து, எல்லோரும் நல்வாழ்வு வாழ, எல்லாம் வல்ல இறைவன் கிருபை செய்வானாக, ஆமின்.
    அருள்மறையாம் திருக்குர்ஆனில் ‘அல் அஃராஃப்’ (சிகரங்கள்) என்ற அத்தியாயத்தில் சில வரலாற்றுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. அதில் ஒரு வசனத்தில் ‘பல் ஆம் இப்னு பாஊர்’ என்ற அறிஞரைப்பற்றிய தகவல் இடம்பெற்றுள்ளது.

    இறையச்சம், தீவிரமான வணக்க வழிபாடுகள் போன்றவற்றின் மூலம் இறைவனின் அருளைப்பெறும் ஒருவர், தனது நேர்வழியில் இருந்து தவறினால் என்ன ஆகும் என்று இந்த வரலாறு நமக்கு தெளிவுபடுத்துகிறது. அதுபற்றி இந்த வாரம் காண்போம்....

    கொடுங்கோல் அரசன் பிரவுன், மூஸா நபிகளையும், அவரது கூட்டத்தாரையும் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கி துன்புறுத்தினான். அல்லாஹ்வின் வல்லமையால் பிரவுனும், அவனது படைகளும் கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டனர். அதன்பின்னர் மூஸா நபியின் தலைமையில் மக்கள் அமைதியாய் வாழ்ந்திருந்த காலம் அது.

    அப்போது எகிப்தை சுற்றியிருந்த மற்ற நாடுகளில் உள்ளவர்கள் மூஸா நபிகள் கொண்டு வந்த தவ்ராத் வேதத்தையும், ஏக இறைவன் அல்லாஹ் மட்டுமே என்ற கொள்கையையும் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். அதோடு மூஸா நபிகளை பின்தொடர்ந்த மக்களுக்கும் தொல்லைகள் கொடுத்தனர்.

    அந்த மக்களின் அட்டூழியத்தை அடக்குவதற்காக அவர்கள் மேல் போர் தொடுக்க வேண்டும் என்ற கட்டளையை மூஸா நபிக்கு இறைவன் பிறப்பித்தான். இதன்படி முதலில் அவர் மிஸ்ரு என்ற நாட்டின் மீது படையெடுத்துச்சென்று போர் புரிந்து வெற்றி கொண்டார். அடுத்து, மூஸா நபிகள் போர் தொடுக்க திட்டமிட்ட நாடுகளில் ஒன்று ‘கன்ஆன்’.

    மூஸா நபிகள் தன் நாட்டின் மீது படையெடுத்து வந்தால் தன்னை சிறை பிடிப்பதோடு, தன் நாட்டையும் கைப்பற்றிக் கொள்வார் என்று அந்த நாட்டு மன்னன் பயந்தான்.

    இதையடுத்து கன்ஆன் நாட்டு மன்னன் சதி ஆலோசனை செய்தான். அவன் மந்திரிகளை அழைத்துப்பேசினான். அப்போது மந்திரிகள், தங்கள் ஊரில் வசிக்கும் பல்ஆம் இப்னு பஊரா என்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர் பற்றி மன்னனிடம் தெரிவித்தனர்.

    வேதத்தை தெளிவு பெற கற்றறிந்த மார்க்க மேதையாகவும், வழிபாடுகளை தவறாது நிறைவேற்றும் பக்திமானாகவும் பல்ஆம் விளங்கினார். இவரது பக்தியை மெச்சிய அல்லாஹ், அவருக்கு ‘இஸ்முல் அஹ்லம்’ என்ற உயர்ந்த அந்தஸ்த்தை வழங்கி கவுரவப்படுத்தியிருந்தான்.

    இதன்மூலம், தனக்கு எது தேவை என்றாலும் அதைத்தருமாறு இறைவனிடம் அவர் பிரார்த்தனை செய்தால் போதும், உடனே அவருக்கு அது கிடைத்துவிடும். அத்தகைய உயர்ந்த அந்தஸ்த்து தான் இஸ்முல் அஹ்லம் என்பது.

    பல்ஆம் இதை பயன்படுத்தி இறைவனிடம் தனது தேவை மட்டுமின்றி பிற மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றினார். இவரது ஆற்றலைப் பற்றி கேள்விப்பட்ட அந்த ஊரைச் சுற்றி வாழும் மக்கள் அவரை சந்திக்க திரண்டு வந்தனர். பலர் அங்கேயே தங்கியிருந்து அவரிடம் மார்க்க கல்வியும் கற்று வந்தனர். அந்த அளவிற்கு சிறந்த அறிஞராக அந்தஸ்த்தோடு வாழ்ந்து வந்தார்.

    இத்தனை சிறப்பு மிக்க அவரைப்பற்றி மந்திரிகள், மன்னனிடம் எடுத்துக்கூறினார்கள். மேலும், இஸ்முல் அஹ்லம் என்ற சிறப்புத்தன்மை பல்ஆம்மிடம் உள்ளது. இதனால், மூஸா நபிக்கு எதிராக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு அவரிடம் சொல்ல வேண்டும். அதை ஏற்று அவர் பிரார்த்தனை செய்தால் தான் மூஸா நபியின் படைகளிடம் இருந்து நாம் தப்பிக்க முடியும் என்று மந்திரிகள் மன்னனிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து, மன்னனும் மந்திரிகளும் அறிஞர் பல் ஆம் வீட்டுக்குச் சென்றனர். அவரிடம், ‘மூஸா நபி மூலம் தன் ஆட்சிக்கு வர இருக்கிற ஆபத்தை எடுத்துச் சொன்னார்கள். இந்த ஆபத்திலிருந்து கன்ஆன் நாடு காப்பாற்றப்பட வேண்டும் என்றால், மூஸா நபிக்கு எதிராக நீங்கள் இறைவனிடம் துஆச் செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

    ஆனால், பல்ஆம் இதை ஏற்க மறுத்து இவ்வாறு கூறினார்:

    “மூஸா நபி அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட நபி. அவர் தந்தது தான் தவ்ராத் வேதம். அதனை ஓதி செயல்படுத்தி வந்ததால் தான் எனக்கு இஸ்முல் அஹ்லம் என்ற சக்தியே இறைவனால் கொடுக்கப்பட்டது. அப்படி இருக்க நான் எப்படி ஒரு நபிக்கு எதிராக துஆச் செய்ய முடியும். மேலும் அது எப்படி அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படும். எல்லோருக்கும் நன்மை செய்கின்ற நல்ல துஆக்கள் தான் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படும். ஜின்கள், சைத்தான் போன்று கெட்ட விஷயங்களில் என்னை ஈடு படுத்திக் கொள்ளவோ, கெடுதல், சூனியம் செய்யவோ மாட்டேன் என்று மறுத்துவிட்டார்”.

    மன்னனும் அவரை தன் வழிக்கு கொண்டு வர எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை. எனவே குறுக்கு வழியில் அவரை வீழ்த்த திட்டமிட்டனர்.

    பல்ஆம் சிறந்த ஞானியாக இருந்த போதிலும் தனது அழகான மனைவி மீது அவருக்கு மோகம் அதிகமாக இருந்தது. அந்த பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினான் மன்னன். இதையடுத்து அந்தப்பெண்ணை அழைத்து தனது திட்டத்தை விவரித்தான். அந்தப்பெண்ணுக்கு, அவர் விரும்பிய அத்தனை பரிசுப் பொருட்களையும் அளவில்லாமல் கொடுத்து ‘பல்ஆமை, மூஸா நபிக்கு எதிராக துஆச் செய்ய சம்மதிக்க வைக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டான்.

    அந்தப்பெண்ணும், பரிசுப்பொருட்களுக்கு மயங்கி, தன் கணவனின் பலவீனத்தை பயன்படுத்தி அவரின் உறுதியை குலைத்தாள், மனதை கலைத்தாள். பெண்ணாசையில் மதிமயங்கிய பல்ஆம், மூஸா நபிகளுக்கு எதிராக இறைவனிடம் பிரார்த்தனை செய்ய முன்வந்தார்.

    நல்ல செயலுக்காக கொடுக்கப்பட்ட ஒரு சக்தியை தவறாக பயன்படுத்த முன்வந்ததால் அது இறைவனுக்கு கோபம் மூட்டியது. உடனே பல்ஆம்முக்கு அளித்த சிறப்புத்தன்மையை அவரிடம் இருந்து இறைவன் அகற்றினான்.

    அது மட்டுமல்லாமல், மூஸா நபிக்கு எதிராக பிரார்த்தனை செய்ய ஒப்புக்கொண்ட அவரது நாக்கு மிக நீளமாக வளர்ந்தது. நாயின் நாக்கு எப்படி நீளமாக வெளியே தொங்கிக்கொண்டு இருக்குமோ, அப்படி அவரது நாக்கு வாய்க்கு வெளியே தொங்கியது. இந்த நிகழ்வு குறித்து திருக்குர்ஆனில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது:

    “(நபியே!) நீங்கள் அவர்களுக்கு (“பல்ஆம் இப்னு பாஊர்” என்னும்) ஒருவனுடைய சரித்திரத்தை ஓதிக்காண்பியுங்கள். அவனுக்கு நாம் நம்முடைய அத்தாட்சிகளைக் கொடுத்(து கண்ணியமாக்கி வைத்)திருந்தோம். எனினும் அவன் (பாம்பு தன் சட்டையை விட்டு வெளியேறுவதைப் போல) அதிலிருந்து முற்றிலும் வெளியேறிவிட்டான். ஆகவே, சைத்தான் அவனைப் பின்தொடர்ந்து சென்றான்; (அவனுடைய சூழ்ச்சிக்குள் சிக்கி) அவன் வழிதவறி விட்டான்”. (திருக்குர்ஆன் 7:175)

    ‘நாம் எண்ணியிருந்தால் நம் அத்தாட்சிகளின் காரணமாக அவனை நாம் உயர்த்தியிருப்போம். எனினும் அவன் இவ்வுலக வாழ்க்கையை நிரந்தரம் என எண்ணி தன் சரீர இச்சையை பின்பற்றிவிட்டான். அவனுடைய உதாரணம் ஒரு நாயின் உதாரணத்தை ஒத்திருக்கிறது’ (திருக்குர் ஆன் 7:176).

    இந்த வசனங்களின் மூலம் அல்லாஹ் கோடிட்டு காட்டுவது என்னவென்றால், மார்க்க அறிவில் சிறந்தவர்களும், மேதைகளும் கூட உலக இன்பங்களில் குறிப்பாக மண்ணாசை, பெண்ணாசை போன்றவற்றில் சிக்கி தங்கள் கவனத்தை சிதறடித்தால் நிச்சயமாக அது அவர்களுக்கு வழிகேடாகவே அமையும். தங்களுடைய சிறப்பு தன்மையை, ஞானத்தை, காத்துக்கொள்ள வேண்டும் என்றால் சிற்றின்பம் என்ற சிந்தனையைக் களைந்து மிக கவனத்துடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் வெற்றிகரமான வாழ்க்கை இவ்வுலகிலும், மறுவுலகிலும் கிடைக்கும்.

    உலகில் ஒருவர் கண்ணியத்தோடும் கவுரவத்தோடும் வாழவேண்டும் என்றால் மனக்கட்டுப்பாடு மிக அவசியம். அப்படிப்பட்ட மனத்தூய்மை தந்து, எல்லோரும் நல்வாழ்வு வாழ, எல்லாம் வல்ல இறைவன் கிருபை செய்வானாக, ஆமின்.
    உங்களுடன் பணி புரிபவர்கள் ஏதாவது நெருக்கடியில் இருந்தால் அவர்களுக்கு உதவுவதற்கு முயற்சி செய்யுங்கள், இல்லையென்றால் ஆறுதல் வார்த்தைகள் கூறி, அவர்களுக்காக இறைவனிடம் கையேந்துங்கள்.
    இஸ்லாம் கூறும் நற்பண்புகளுள் சக மனிதர்களுடனான உறவு மிகவும் முக்கியமானதாகும். சக மனிதர்கள் நம் உறவினர்களாக இருக்கலாம் அல்லது அண்டை வீட்டினராக இருக்கலாம், அல்லது நம்முடன் பணி புரிபவர்களாக இருக்கலாம். இன்னும் நம்முடன் பயணம் செய்பவர்களாகவோ, அல்லது வழிப்போக்கர்களாகவோ இருக்கலாம். யாராக இருந்தாலும் அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

    ‘உங்களில் எனக்கு மிகப் பிரியமானவரை, மறுமை நாளில் எனக்கு மிக நெருக்கமானவரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ‘ஆம்’ என்றதும், ‘உங்களில் நற்குணமுடையவரே’ என்று அருளினார்கள்.

    ‘மறுமையில் ஒரு அடியானின் தராசில் நற்குணத்தை விடவும் கனமானது எதுவும் கிடையாது’ என்றும் பெருமான் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

    பிறருக்கு உதவி செய்வது மட்டுமல்ல, இன்முகத்துடன் இருப்பது, அடுத்தவர்களை வார்த்தைகளால் புண்படுத்தாமல் இருப்பது, கோபம் வரும் பொழுது அதை அடக்குதல் என்று நற்குணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

    ‘நற்குணங்களை நிறைவு செய்வதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

    ‘ஒரு முறை அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு, அறிவுரை வழங்கும் பொழுது, உன்னைத் துண்டித்து வாழ்பவருடன் நீ சேர்ந்து வாழ், உனக்கு அநீதம் செய்தவரை மன்னித்து விடு, உனக்குத் தர மறுத்தவருக்கு நீ கொடு, இவையே நற்குணங்களாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    ‘இன்னும் இரவெல்லாம் நின்று வணங்குபவர்களுக்கும், பகலெல்லாம் நோன்பு வைத்து வருபவர்களுக்கும் கொடுக்கப்படும் அந்தஸ்து இப்படிப்பட்ட அழகிய நற்குணங்களைப் பெற்றவர்களுக்கும் கொடுக்கப்படும்’ என்றும் மொழிந்துள்ளார்கள்.

    ‘எந்தக் காரணமாக இருந்தாலும் மற்றவர்களுடனான நம் உறவைத் துண்டித்துக் கொள்ளக்கூடாது’ என்பதை இறைவன் மட்டுமல்லாது, நபி (ஸல்) அவர்களும் விரும்புகிறார்கள்.

    இன்று எத்தனையோ பேர் பெரிதாக எந்தக் காரணமும் இன்றி உறவுகளைத் துண்டித்து வாழ்கிறார்கள். பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களிடம் கொண்ட பிணக்கு காரணமாக, அவர்களைப் பிரிந்து வாழ்வது மிகவும் வருத்தம் தரும் விஷயமாகும். இன்னும் உடன்பிறப்புகளிடம் சண்டை போட்டு எதிர் எதிரே சந்தித்துக் கொண்டாலும் ஒருவரையொருவர் அறியாத மனிதர்கள் போன்று பொது இடங்களிலும், திருமணம் போன்ற வைபவங்களிலும் நடந்து கொள்கிறார்கள்.

    ஒருவருக்கொருவர் குறைந்த பட்சம் ‘ஸலாம்’ கூட சொல்வதில்லை. ‘தான்’ என்னும் அகங்காரம் மக்களைப் பாடாய்ப் படுத்துவதே இதற்குக் காரணம்.

    நபி (ஸல்) அவர்கள் ‘மக்களே ஸலாம் சொல்லும் பழக்கத்தை உங்களுக்குள் பரவலாக்குங்கள், உணவளியுங்கள், உறவினர்களுடன் சேர்ந்து வாழுங்கள், இரவில் மக்கள் உறங்கும்பொழுது நீங்கள் எழுந்து தொழுங்கள், நீங்கள் நிம்மதியாக சுவனம் செல்வீர்கள்’ என்று உபதேசம் செய்துள்ளார்கள்.

    உறவினர்களுள் வறுமையில் வாடுபவர்களைக் கண்டால் எங்கே நம்மிடம் பண உதவி கேட்டு விடுவார்களோ என்று எண்ணி ஒதுங்கிச் செல்லும் மனப்பான்மை மிகவும் மோசமானது. விருந்து, உபசாரங்களில் கூட வறிய நிலையில் உள்ள உறவினர்களைத் தவிர்த்து, செல்வ நிலையில் உள்ள உறவினர்கள் அழைக்கப்படும் வழக்கத்தைக் காண்கிறோம்.

    நற்குணம் உடையவர்களே, சக மனிதர்களை பாரபட்சமின்றி நடத்துவர். செல்வச்செழிப்புடன் வாழ்பவர்கள் வறுமையில் வாடும் உறவினர்களுக்கு, தொழில் கற்றுக் கொடுத்து, தொழில் தொடங்குவதற்கு உதவி செய்தால் அவர்களும் வாழ்க்கையில் உயர்ந்து தங்களைப் போன்றவர்களுக்கும் உதவும் நிலை ஏற்படும்.

    நம்முடன் அலுவலகத்தில் சேர்ந்து பணி புரிபவர்களுடன், அனுசரணையுடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களுடன் அடிக்கடி வாதம் செய்வது அல்லது தர்க்கம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

    அது போலவே மற்றவர்கள் பேசும் பொழுது ஆர்வத்துடன் கவனிப்பதுடன், அவர்கள் சொல்வது சரியாக இருந்தால் ஆமோதிக்கவும் வேண்டும். ஒவ்வொரு பேச்சுக்கும் எதிர் வாதம் செய்வதால் நம்முடன் பேசுவதற்கு மற்றவர்கள் தயங்குவார்கள். நம்முடன் பேசுவதையே குறைத்தும் கொள்ளலாம்.

    அவ்வாறு இல்லாமல், பிற மனிதர்களுடனான நட்பை நாம் மேம்படுத்திக் கொள்வதால், நம்மை நாடி வரும் மனிதர்களின் முகத்தில் மலர்ச்சியும், நிம்மதியும் தெரியும். கேலிப்பேச்சுகளும், ஏளனப் பார்வையும் சக மனிதர்களை நம்மை விட்டும் விலக்கி விடும்.

    நம்முடைய அருகாமை மற்றவர்களுக்கு மகிழ்ச்சியையும், பாதுகாப்பு உணர்வையும் கொடுக்கும் விதத்தில் நம்முடைய நடைமுறைகளை மாற்றுதல், அவர்களுக்கு மட்டுமல்லாமல் நமக்கும் நன்மைகளை அள்ளித் தரும். சக மனிதர்களிடம் நம்முடைய இனிமையான வார்த்தைகள் நரகத்தை விட்டும் நம்மைப் பாதுகாக்கும். இன்னும் நல்ல வார்த்தைகள் தர்மம் செய்வதற்கு சமம்.

    ‘அண்டை வீட்டினர் பசியோடு இருக்கும் பொழுது யார் வயிறு நிரம்பச் சாப்பிடுகிறாரோ அவர் இறை நம்பிக்கை உடையவராக இருக்க மாட்டார் என்றும், அண்டை வீட்டினரை நிம்மதியற்று இருக்கச் செய்பவர்கள் சுவனம் செல்ல மாட்டார்கள்’ என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

    அதுபோலவே உங்களுடன் பயணம் செய்பவர்களுடன் அன்புடன் உரையாடுங்கள், உணவினை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுடன் பணி புரிபவர்கள் ஏதாவது நெருக்கடியில் இருந்தால் அவர்களுக்கு உதவுவதற்கு முயற்சி செய்யுங்கள், இல்லையென்றால் ஆறுதல் வார்த்தைகள் கூறி, அவர்களுக்காக இறைவனிடம் கையேந்துங்கள்.

    இப்படிப்பட்ட பண்புகள் சக மனிதர்களை உங்களின் பக்கம் ஈர்க்கும். அவர்களின் சுக, துக்கங்களில் பங்கு பெறுவதால் உங்களின் மீதும் அவர்கள் அன்பு கொள்வார்கள். இதனால் மற்ற மக்களுடனான சகோதரத்துவமும், உறவும் பலப்படும். இன்ஷா அல்லாஹ் இவற்றை நாம் வாழ்க்கையில் கடைபிடிக்கும்பொழுது நம்முடைய வாழ்வும் மகிழ்ச்சியாக அமையும்.

    ம. அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை-84
    நமக்கு ஏராளமான உபகாரங்களை இறைவன் செய்திருக்கிறான். நமக்கு அவன் செய்திருப்பதைப் போல் பிறருக்கு நாமும் உபகாரம் செய்து வாழவேண்டும்.
    நமக்கு ஏராளமான உபகாரங்களை இறைவன் செய்திருக்கிறான். நமக்கு அவன் செய்திருப்பதைப் போல் பிறருக்கு நாமும் உபகாரம் செய்து வாழவேண்டும். இதையே திருக்குர்ஆன் (28:77) இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பது போன்றே நீயும் நல்லதை செய்’.

    வாழ்க்கையில் நாம் செய்யும் எந்த ஒரு சிறிய உபகாரத்தையும், சாதாரணமாக எடை போடாமல் பெரும் நன்மை தரும் காரியமாக புரிந்து கொண்டு, முடிந்தளவு உபகாரம் செய்ய பழகிக்கொள்ள வேண்டும். உபகாரம் செய்யவில்லையென்றாலும் உபத்திரமாவது செய்யாமலிருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

    ‘உபகாரம் என்றால் என்ன?’

    உபகாரம் என்பது நமக்கும், மற்றவர்களுக்கும் நன்மையைச் செய்தல். நன்மையான காரியங்கள் அனைத்தும் உபகாரமே.

    உபகாரம் இரு வகைப்படும். அதில் ஒன்று, ‘நமக்கு நாமே செய்யும் உபகாரம்’. நம் சொல், செயல் மற்றும் வணக்க வழிபாடுகள், வாழ்க்கை நெறிமுறைகள் இவைகளை நல்லவிதமாக செயல்படுத்துதல். மேலும் நம் உயிர்க்கும், உடலுக்கும் செய்ய வேண்டிய உரிமைகளையும், கடமைகளையும் மிகச்சரியாகச் செய்தல்.

    அடுத்தது, ‘நாம் பிறருக்குச் செய்யும் உபகாரம்’. நாம் பிறர் நலன்களை பேணி, பிறரிடம் நல்லவிதமாக நடந்து கொள்வதும், அவர்களுக்கு செய்யவேண்டிய நன்மையான அனைத்து காரியங்களை செய்வதும் ஆகும்.

    உபகாரங்கள் எவை?

    உபகாரம் என்பது பல அர்த்தங்களை உள்ளடக்கியது. பொருளால் மட்டும்தான் உபகாரம் செய்ய முடியும் என்பதில்லை. பாதை தெரியாதவருக்கு சரியான பாதையைக் காட்டுவது, வழி தவறியவருக்கு நேர்வழி காட்டுவது, பொதுமக்களுக்கு இடையூறு தரும் பொருட்களை நடைபாதையிலிருந்து அகற்றுவது, நன்மையை ஏவி தீமையை தடுப்பது, நோயாளிகளை நலம் விசாரிப்பது, பிறரின் இன்ப துன்பங்களிலும், லாப நஷ்டங்களிலும் பங்கு கொள்வது.

    பசித்தவனின் பசியை போக்குவது, தாகித்தவனின் தாகத்தை தீர்ப்பது, ஆடையில்லாதவனுக்கு ஆடை அணிவிப்பது, கடனாளியின் கடனை தள்ளுபடி செய்வது, அல்லது கடனின் தவணையை நீட்டுவது, பெற்றோருக்கும், ஊனமுற்றோருக்கும் உதவி செய்வது, வயதானவர்களுக்கு ஒத்தாசை செய்வது, சிறியவர்களிடம் இரக்கம் காட்டுவது, எதிரியை மன்னிப்பது, இன்னும் இதுபோன்ற நன்மையான காரியங்கள் அனைத்தும் விலை மதிக்க முடியாத உபகாரங்களாகும்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அறிவிப்பதாவது:-

    ‘உங்களுடைய சகோதரரைப் பார்த்து நீங்கள் புன்னகை புரிவதும் தர்மம். நீங்கள் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதும் தர்மம். வழி தவறியவருக்கு வழிகாட்டுவதும் தர்மம். பார்வையற்றோருக்கு வழிகாட்டுவதும் தர்மம். கல், முள், எலும்பு போன்றவைகளை நடைபாதையிலிருந்து அகற்றுவதும் தர்மம். உங்கள் வாளியிலிருந்து உங்களது சகோதரனின் வாளியில் தண்ணீர் நிரப்புவதும் தர்மம் என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்: திர்மிதி)

    பெற்றோருக்கு செய்யும் உபகாரம்

    ‘பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் உபகாரம் செய்யுங்கள்’ என்பது திருக்குர்ஆன் (2:83) கட்டளையாகும்.

    ‘மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள், அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும் பெற்றோருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பயணம் தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்’ என்றும் திருக்குர்ஆன் (4:36) குறிப்பிடுகிறது.

    ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து வாழ்வதுதான் மனித வாழ்க்கை, மனித நேயம். பிள்ளைகள் பெற்றோருக்கும், செல்வந்தர்கள் ஏழைகளுக்கும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கும், கணவன்-மனைவிக்கும், மனைவி-கணவனுக்கும், உபகாரம் செய்து வாழவேண்டும்.

    உபகாரம் செய்வதற்கு ஜாதி, மதம், இனம், நிறம், மொழி, நாடு, இவைகள் யாவும் தடை கற்களாக இருக்கக்கூடாது. மனிதநேயம் அடிப்படையில் தெரிந்தவர், தெரியாதவர், அறிமுகமானவர், அறிமுகமில்லாதவர், நண்பன், எதிரி, அண்ணன், தம்பி இப்படி பாகுபாடில்லாமல் உபகாரம் செய்து வாழவேண்டும்.

    அநியாயம் செய்தவனுக்கும் உபகாரம் செய்

    ‘உனக்கு அநியாயம் செய்தவனுக்கும் உதவி செய்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதுகுறித்து ஹூதைபா (ரலி) அறிவிப்பதாவது:-

    “நீங்கள் மற்றவர்களின் நடைமுறையைப் பார்த்து அவர்களைப் போல் நடந்து கொள்ளாதீர்கள். ‘மக்கள் நமக்கு நல்லது செய்தால், நாமும் அவர்களுக்கு நல்லது செய்வோம். மக்கள் நமக்கு அநியாயம் செய்தால், நாமும் அவர்களுக்கு அநியாயம் செய்வோம்’ என்று சொல்லாதீர்கள். மக்கள் உங்களுக்கு நல்லது செய்தால், நீங்களும் நல்லது செய்வது, மக்கள் தவறான முறையில் நடந்து கொண்டாலும், நீங்கள் அநியாயம் செய்வதில்லை என்ற குணத்தின் மீது உங்களை நீங்களே நிலைப்படுத்திக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்”. (நூல்: திர்மிதி)

    உஹத் போர்க்களத்தில் நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தை ஹம்ஸா (ரலி) கொல்லப்பட்ட போதும், நபிகளாரை இறை மறுப்பாளர்கள் காயப்படுத்திய போதும், அவர்களுக்கு எதிராக இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்படி தோழர்களில் ஒருவர் நபிகளாரிடம் கேட்டுக்கொண்டார்.

    அப்போது நபிகளார் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்: ‘இறைவா, என் சமுதாயத்தை மன்னித்து விடு. அவர்கள் அறியாத மக்கள்’.

    அநியாயக்காரர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் உபகாரம் செய்தது வரலாற்றில் தங்க எழுத்துக்களால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

    உபகாரம் செய்தவனுக்கு பதில் உபகாரம் செய்

    ‘நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா? (திருக்குர்ஆன் : 55:60)

    நமக்கு உபகாரம் செய்தவனுக்கு நாமும் பதில் உபகாரம் செய்வது மிக நன்று.

    ஒரு நாள் உமர் பின் அப்துல் அஜீஸ் தன் பணிப்பெண்ணிடம் ‘விசிறி எடுத்து வீசு நான் தூங்கப் போகிறேன்’ என்றார். அவள் வீசியதும் உமர்பின் அப்துல் அஜீஸ் தூங்கிவிட்டார். சிறிது நேரத்தில் அந்தப்பெண்ணுக்கும் தூக்கம் வரவே அவளும் தூங்கிவிட்டாள்.

    உமர் பின் அப்துல் அஜீஸ் விழித்த பொழுது தனது பணிப்பெண் தூங்கிக்கொண்டிருப்பதை கண்டார். வெப்பம் அதிகமாக இருந்ததால் அருகில் கிடந்த விசிறியை எடுத்து அந்தப்பெண்ணுக்கு வீசினார். தன் மீது திடீரென்று காற்று வீசுவதை உணர்ந்த பணிப்பெண் விழித்த பொழுது, எஜமானர் தனக்கு வீசிக் கொண்டிருந்ததை கண்டதும் பயத்தில் நடுங்கினாள்.

    உடனே உமர்பின் அப்துல் அஜீஸ் ‘நீயும் என்னைப் போன்ற மனித இனம் தான். என்னை தாக்கியது போன்றே உன்னையும் வெப்பம் தாக்கியது. எனவே நீ எனக்கு வீசியது போன்றே நானும் உனக்கு வீச பிரியப்பட்டேன்’ என்றார்.

    இங்கே பணிப்பெண்ணுக்கு உபகாரம் செய்வதற்கு எஜமான் என்ற பதவி தடையாக அமையவில்லை. எனவே முதலாளிக்கு தொழிலாளி உழைத்துக் கொடுத்து உபகாரம் செய்வது போல, முதலாளியும் தொழிலாளியின் நலன்கள் மீது அக்கறை எடுத்துக்கொண்டு உபகாரம் புரிய வேண்டும். முதலாளி தொழிலாளி என்ற வித்தியாசம் பெயரளவில் தான் இருக்கவேண்டுமே தவிர மனதளவில் இருக்கக்கூடாது.

    ‘உபகாரம் செய்ததை சொல்லிக்காட்டாதே’

    ‘நம்பிக்கையாளர்களே, இறைவனின் மீதும், இறுதிநாளின் மீதும், நம்பிக்கை கொள்ளாமல் மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப் போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும், உங்கள் தர்மங்களை பாழாக்கிவிடாதீர்கள்’ (திருக்குர்ஆன் 2:264)

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அறிவிப்பதாவது:

    ‘மூன்று மனிதர்களிடம் இறைவன் பேசவும் மாட்டான், இன்னும் இறுதிநாளில் அவன் அவர்களை கருணையுடன் பார்க்கவும் மாட்டான். அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான். மேலும், அவர்களுக்கு நோவினை மிக்க வேதனையும் உண்டு (திருக்குர்ஆன் 3:77) என்ற வசனத்தை நபி (ஸல்) மூன்று முறை ஓதினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே, நஷ்டமடைந்துவிட்ட, தோல்வியடைந்துவிட்ட அம்மக்கள் யார்?’ என அபூதர் (ரலி) கேட்டார்கள். ‘தமது கீழ் ஆடையைக் கரண்டைக் காலுக்குக் கீழே தொங்கவிடுபவர், உபகாரம் செய்து விட்டுச் சொல்லிக் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து தமது பொருளை விற்பவர்’ என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்:முஸ்லிம்)

    அன்பர்களே, நண்பர்களே, உபகாரம் செய்து, அதை சொல்லிக்காட்டி, செய்த உபகாரத்தை பாழ்படுத்துவதை விட்டுவிட்டு, உபகாரமே செய்யாமல் இருங்கள். அல்லது உபகாரம் செய்துவிட்டு சொல்லிக்காட்டாமல் யாரையும் புண்படுத்தாமல் வாழ்ந்து காட்டுங்கள்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.
    அல்லாஹ்வையும், திருக்குர்ஆனையும், அண்ணல் நபிகளையும் தங்கள் வாழ்க்கையில் பின்பற்றி நடந்து நற்கதி அடைந்தார்கள் என்பதையும் அறிய முடிகிறது.
    அல்லாஹ் மூன்று வகையான படைப்புகளை தன் ஆற்றலின் மூலமாக படைத்தான். அவற்றில் முதல் வகை படைப்புகள், சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் மற்றும் விண்வெளியில் சுற்றிவரும் பிற கோள்கள்.

    அடுத்தது, மலக்குகள் மற்றும் ஜின்கள். மலக்குகளை ஒளியினாலும், ஜின்களை கொழுந்து விட்டு எரியும் நெருப்பு ஜூவாலைகளாலும் இறைவன் படைத்தான்.

    மூன்றாவது, உயிரினங்கள். இதில் மனிதன், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என பூமியில் மட்டுமின்றி இந்த அண்டத்தில் வாழும் அனைத்து உயிரினங்களையும் இறைவன் படைத்தான்.

    இந்த மூன்று படைப்புகளும் இறைவனின் கட்டளைப்படி அவனை வணங்கி, தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்கின்றன.

    இதன்படி, அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து, அவனை எந்த நிலையிலும் வணங்குபவர்களாகவும், தொடர்ந்து அவனைப் புகழ்ந்தவர்களாகவும் மலக்குகள் உள்ளனர். அந்த மலக்குகளில் சிறந்த மலக்குகளை அல்லாஹ் தேர்ந்தெடுத்து, சில குறிப்பிட்ட பணிகளை அவர்களிடம் கொடுத்து, அதனை செய்யுமாறு கட்டளையிட்டுள்ளான்.

    அத்தகைய சிறப்பு பெற்ற மலக்குகளில் குறிப்பிடத்தக்கவர் ஜிப்ரில் (அலை). நபிகளுக்கு ‘வஹி’யை (இறைச்செய்தியை) அறிவிக்கும் பணியை இவர் செய்தார்.

    மனிதர்களின் உயிரை கைப்பற்றுவதற்காக நியமிக்கப்பட்ட மலக்கின் பெயர் இஸ்ராயில். மறுமைநாள் ஏற்படுவதை அறிவிக்க ‘சூர்’ என்ற குழல் ஊதுபவராக இஸ்ராபீல் என்ற மலக்கும், காற்று மழையை கட்டுப்படுத்துபவராக மீக்காயீல் என்ற மலக்கும் இறைவனால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அன்றாடம் மனிதன் செய்யும் பாவ புண்ணியங்களை எழுதும் பணியை கிராமுன், காத்தீபன் என்ற மலக்குகளிடமும், ஒரு மனிதன் மரணித்த பின் மண்ணறையில் அவனிடம் கேள்வி கேட்கும் பணியை முன்க்ர், நக்கீர் என்ற மலக்குகளிடமும் இறைவன் ஒப்படைத்துள்ளான்.

    மலக்குகளைத் தொடர்ந்து, ஜின்களை அல்லாஹ் படைத்தான். ஜின்களின் தலை வனாக ‘இப்லீஸ்’ என்ற ஜின்னை நியமித்து, அவனுக்கு பல சிறப்பு அம்சங்களைக் கொடுத்தான்.

    ஜின்களைத் தொடர்ந்து, முதல் மனிதரான ஆதமை களிமண்ணினால் அல்லாஹ் படைத்தான். அவரின் வழித்தோன்றலாய் ஆண்-பெண் கொண்ட மனித இனத்தை உருவாக்கினான். எல்லா மலக்குகளையும், ஜின்களையும் மனிதனுக்கு சிரம் பணிந்து வணங்குமாறு அல்லாஹ் கட்டளையிட்டான்.

    அல்லாஹ்வின் ஆட்சியின் கீழ் இருந்த போதிலும், தன் கர்வத்தின் காரணமாக இதை ஏற்க ஜின்களின் ஒருவனான இப்லீஸ் மறுத்தான். இதையடுத்து, அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி சொர்க்கத்தை விட்டு தூக்கி எறியப்பட்டான்.

    இதுகுறித்த திருக்குர்ஆன் வசனங்கள் வருமாறு:-

    “காய்ந்தபின் ‘கன் கன்’ என்று சப்தம் கொடுக்க கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால், நிச்சயமாக நாமே உங்கள் மூலப் பிதாவாகிய முதல் மனிதனைப் படைத்தோம்” (திருக்குர்ஆன் 15:26).

    “அதற்கு முன்னதாக ஜின்களை கொடிய உஷ்ணமுள்ள நெருப்பிலிருந்து படைத்தோம்” (திருக்குர்ஆன் 15:27)

    “அவ்வாறே வானவர்கள் அனைவரும் அவருக்கு மரியாதை செலுத்த சிரம் பணிந்தார்கள், இப்லீஸைத் தவிர. அவன் சிரம் பணிந்தவர்களுடன் சேர்ந்து சிரம் பணியாது விலகிக் கொண்டான்” (திருக்குர்ஆன் 15:30,31).

    “அதற்கு உமது இறைவன் இப்லீஸை நோக்கி, இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடன் சேர்ந்து நீயும் சிரம் பணியாத காரணமென்ன? என்று கேட்டான்” (திருக்குர்ஆன் 15:32)

    “அதற்கு அவன், ‘காய்ந்த பின் சப்தம் கொடுக்க கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் நீ படைத்த மனிதனுக்கு, நெருப்பால் படைக்கப்பட்ட நான் சிரம் பணிய தயாரில்லை. ஏனென்றால் நான் அவனை விட மேலானவன்’ என்று கூறினான்” (திருக்குர்ஆன் 15:33).

    ‘தான்’ என்ற கர்வம், இப்லீசை அழிவுப் பாதையில் தள்ளியது. இறைக்கட்டளைக்கு மாறு செய்ததால் ‘சைத்தான்’ என்ற பெயர் அவனுக்கு கிடைத்தது.

    மனிதர்கள் போன்றே ஜின் வர்க்கத்திலும் நல்லவர்கள் கெட்டவர்கள் உண்டு. மனிதர் களுக்கென பூமியை இருப்பிடமாக படைத்த இறைவன் ஜின்களுக்கென இருப்பிடம் எதனையும் படைக்காமல் மரங்களிலும், மலை களிலும், வானவெளிகளிலும் சஞ்சரிக்க கூடியதாக அமைத்தான்.

    அதே சமயம் மனிதனை விட ஜின்களை அதிக ஆற்றலும், சக்தியும் கொண்டவர் களாக இறைவன் படைத்தான். காற்று, ஒளியை விட மிக விரைவில் தான் விரும்பிய இடங்களுக்குச் செல்லும் ஆற்றலை அவர்களுக்கு அல்லாஹ் அளித்திருந்தான்.

    மூஸா நபி காலத்திலும், சுலைமான் நபி காலத்திலும் ஜின்கள் மனிதர்களுக்கு கட்டுபட்டவர்களாக, அவர்கள் இடும் கட்டளைக்கு அடி பணிந்தவர்களாகவும் இருந்தனர்.

    மூஸா நபி காலத்தில் பரவலாகவும், வெளிப்படையாகவும் ஜின்கள் பற்றிய விவரங்களை மக்கள் அறிந்திருந்தனர். ஆனால், ஜின்களை பயன்படுத்தி தங்கள் எதிர்காலத்தை அறிந்து கொள்ளவே பலரும் முயன்றனர். இறுதியில் அவர்களை தெய்வங்களாக வணங்கவும் முற்பட்டனர். இறை சக்தியில்லாத ஒன்றுக்கு இறைவன் அந்தஸ்த்தை கொடுத்து இணை வைத்தனர். அதனையும் திருக்குர்ஆன் மிக கடுமையாக கண்டித்தது. இதுபற்றிய திருக்குர்ஆன் வசனம் வருமாறு:-

    “எங்கள் இறைவனே, நீ மிக பரிசுத்தமானவன். நீதான் எங்கள் பாதுகாவலன். மாறாக அவர்கள் ஜின்னை வணங்கி கொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள், அந்த ஜின்களையே நம்பிக்கை கொண்டும் இருந்தார்கள் என்று வானவர்கள் கூறுவர்” (திருக்குர்ஆன் 34:41).

    ஜின்களிலும் அல்லாஹ்வை அறிந்து கொண்ட நல்லவர்களும், மனித இனத்தை கெடுக்கும் தீமைகளைச் செய்யும் தீயவர்களும் இருந்தனர். அந்த நல்லவர்கள், திருக்குர்ஆன் வசனங்களை செவியுற்று தன் இனத்தாருக்கு அறிவுரை வழங்கியதாகவும் திருக்குர்ஆன் இவ்வாறு அறிவிக்கிறது:

    “நபியே! இந்த குர்ஆனை கேட்கும் பொருட்டு ஜின்களில் சிலரை நாம் உம்மிடம் வருமாறு செய்து, அவர்கள் வந்த சமயத்தில், அவர்கள் தங்கள் மக்களை நோக்கி, ‘நீங்கள் வாய்பொத்தி இதைக் கேட்டுக்கொண்டு இருங்கள்’ என்று கூறினார்கள். இது ஓதி முடிவு பெறவே தங்கள் இனத்தாரிடம் சென்று அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய முற்பட்டனர்” (திருக்குர்ஆன் 46:29)

    அதுமட்டுமல்ல, ‘திருக்குர்ஆன் உண்மையான வேதம், அதன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்’ என்று ஜின்கள் தன் இனத்தாருக்கு அறிவுரை வழங்கியது. அது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “எங்கள் இனத்தாரே, நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தை செவியுற்றோம். அது மூஸாவிற்கும் பின்னர் அருளப்பட்டிருக்கிறது. அது தனக்கு முன்னுள்ள வேதத்தையும் உண்மைப்படுத்துகிறது. அது சத்தியத்திலும் நேரான வழியிலும் செலுத்துகிறது” (திருக்குர்ஆன் 46:30),

    “எங்கள் இனத்தாரே அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் அவரை நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான். துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களை காப்பாற்றுவான்” (திருக்குர்ஆன் 46:31).

    திருக்குர்ஆனை ஏற்றுக் கொண்டு, அதன்படி நடந்து, நல்ல செயல்களைச்செய்யும் ஜின்கள் மற்ற ஜின்களுக்கு இந்த அறிவுரைகளை வழங்கி திருக்குர்ஆனை ஏற்றுக்கொண்டு, நேர்வழியில் வருமாறு வேண்டின.

    ஜின்கள் அல்லாஹ்வை ஈமான் கொண்ட நிகழ்வு ‘சூரத்துல் அல்ஜின்னு’ என்ற அத்தியாயத்தில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வரலாற்று செய்தியின் மூலம் ஜின் இனத்தாரிலும் நல்லவர்கள், கெட்டவர்கள் உண்டு. அவர்கள் அல்லாஹ்வையும், திருக்குர்ஆனையும், அண்ணல் நபிகளையும் தங்கள் வாழ்க்கையில் பின்பற்றி நடந்து நற்கதி அடைந்தார்கள் என்பதையும் அறிய முடிகிறது.
    நியாயமாக ஆட்சி செய்வதும், தனக்கு கீழ் உள்ளவர்களுக்கான பொறுப்பை நியாயமாக நடத்துவதும் மனித நேயம் வளரவும், மக்களின் அமைதியான வாழ்க்கைக்கும் வழி வகுக்கும்.
    ‘அதிகாரம்’ என்பதை ‘ஆள்வது’ என்ற பொருளில் மட்டுமே மக்கள் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் அதிகாரம் என்பது ‘சேவை செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு’ என்பதுதான் உண்மை.

    மக்களுக்காக சேவை செய்ய இறைவன் தேர்ந் தெடுத்துள்ளவரே தலைவராவார். அவர் ‘தலைவர்’ என்பதையும் தாண்டி ‘பொறுப்பாளர்’ என்பதே சரியானதாகும்.

    இவர்கள் மட்டுமல்ல, யார் யாரெல்லாம் யார் யாருக்கு சேவகம் செய்ய விதிக்கப்பட்டு இருக் கிறார்களோ அவரவர்கள் தங்கள் கடமையை பொறுப்பாக செய்ய வேண்டும்.

    இறையச்சம் கொண்ட ஒருவர், தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை அதிகாரத்திற்காக பயன் படுத்த மாட்டார். மாறாக, சேவையாகவே அந்த வாய்ப்பை பயன்படுத்துவார்.

    ‘அதிகாரம்’ என்ற சொல் நாட்டை ஆள்பவர்களை மட்டும் குறிப்பதல்ல. மாறாக, குடும்ப தலைவர் களையும் குறிக்கும்.

    ‘நாடோ, வீடோ, எங்கு ஆள்பவராக இருந்தாலும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்று மறுமை நாளில் கேள்வி கேட்கப்படும்’ என்று இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    ‘நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித்தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் தன் குடும்பத்தாருக்கு பொறுப்பாளர் ஆவார். அவர் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவார். பெண் தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவார். அவள் அது குறித்து விசாரிக்கப்படுவாள். ஒரு பணியாள் தன் எஜமானனின் செல்வத்திற்கு பொறுப்பாளியாவான், அவன் அதுகுறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க. உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்’. (புகாரி)

    அதிகாரம் என்பது பொறுப்பை நிறைவேற்ற கொடுக்கப்பட்டுள்ள அமானிதமாகும். அதை எக்காரணம் கொண்டும் தவறாக பயன்படுத்தக் கூடாது.

    ஒருவருக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு குறித்து மறுமைநாளில் விசாரிக்கப்படும் என்பதால், பொறுப்பை எடுத்துக்கொள்ள யார் ஆசைப்படுகிறார்களோ அவர் களுக்கு முகம்மது நபி (ஸல்) அவர்கள் கூறும் அறிவுரை என்னவெனில், ‘நீங்கள் ஆட்சிப்பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை(தரும் சுகங்)களிலேயே பதவி(ப்பால்)தான் இன்பமானது. பாலை மறக்கவைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது தான்) மோசமானது’ (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), புகாரி).

    ஆட்சிப்பொறுப்பை நாமாக விரும்பி கேட்பதை முகம்மது நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறியதாக அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) குறிப்பிட்டு இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

    ‘நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) அப்துர் ரஹ்மானே, ஆட்சிப்பொறுப்பை (நீங்களாக)க் கேட்காதீர்கள். ஏனெனில் நீங்கள் கேட்டு அது உங்களுக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீங்கள் (தனியாக) விடப் படுவீர்கள். கேட்காமல் உங்களுக்கு அது அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உங்களுக்கு (அல்லாஹ்வின்) உதவி கிடைக்கும். நீங்கள் ஒரு சத்தியம் செய்து அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீங்கள் கருதினால் உங்களது சத்தியத்(தை முறித்துவிட்டு, முறித்த)திற்கான பரிகாரத்தைச் செய்துவிடுங்கள். சிறந்தது எதுவோ அதைச் செயல்படுத்துங்கள் என்று சொன்னார்கள்’. (புகாரி)

    நியாயமாக ஆட்சி செய்வதும், தனக்கு கீழ் உள்ளவர்களுக்கான பொறுப்பை நியாயமாக நடத்துவதும் மனித நேயம் வளரவும், மக்களின் அமைதியான வாழ்க்கைக்கும் வழி வகுக்கும்.

    வி.களத்தூர் கமால் பாஷா.
    “நிச்சயமாக அல்லாஹ் தான் என் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இது தான் நேரான வழி என்றும் கூறினார்” (திருக்குர்ஆன் 3:51)
    திருக்குர்ஆனில் ஆலஇம்ரான் என்ற மூன்றாம் அத்தியாயத்தில் மர்யம் (அலை) அவர்களைப் பற்றியும், ஈஸா (அலை) அவர்களைப் பற்றியும் மிக சுருக்கமாகச் சொன்னாலும் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இம்ரான்-ஹன்னா வாரிசாக பிறந்தவர் மர்யம் (அலை). ஹன்னா, ஆண் பிள்ளை பெற விரும்பி அல்லாஹ்விடம் நேர்ச்சை செய்தார். அந்த நிகழ்வு குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “இம்ரானுடைய மனைவி (கர்ப்பமான பொழுது ஆண் குழந்தை பெற விரும்பி இறைவனை நோக்கி) ‘என் இறைவனே, நிச்சயமாக நான் என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணம் செய்துவிட நேர்ச்சை செய்து கொண்டேன். ஆதலால், (அதனை) என்னிடமிருந்து நீ அங்கீகரித்துக் கொள்வாயாக. நிச்சயமாக நீதான் (பிரார்த் தனைகளை) செவியுறுபவனும், (மனதில் உள்ளவற்றை) நன் கறிபவனாகவும் இருக்கின்றாய்’ என்று (பிரார்த்தித்துக்) கூறினார்”.

    “அவர் (தன் விருப்பத்திற்கு மாறாக) ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தபோது ‘என் இறைவனே, நான் ஒரு பெண்ணையே பெற்றேன்’ என்று கூறினார். ஆயினும் (அவர் விரும்பிய) ஆண், இந்தப் பெண்ணைப் போன்றல்ல என்பதை அல்லாஹ் (தான்) நன்கறிவான். (பிறகு இம்ரானின் மனைவி) நிச்சயமாக நான் அதற்கு ‘மர்யம்’ எனப் பெயரிட்டேன். அதனையும், அதன் சந்ததியையும் விரட்டப்பட்ட சைத்தானி(ன் வஞ்சனைகளி)லிருந்து நீ காப்பாற்ற உன்னிடம் பிரார்த்திக்கின்றேன்’ என்றார்”. (திருக்குர்ஆன் 3:35,36).

    பெண் குழந்தையைப் பெற்றெடுத்த போதும் அன்னை ஹன்னா தான் செய்த நேர்ச்சையை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டினார். அந்த நோக்கத்தின் அடிப்படையில் அந்த பெண் மகவை ‘பைத்துல் முகத்தஸ்’ என்ற ஆலயத்தில் ஒப்படைத்து விட்டார். அப்போது அதன் தலைவராக இருந்த ஜக்கரிய்யா நபிகளிடம் மர்யம் (அலை) அவர்கள் ஒப்படைக்கப்பட்டார்.

    அக்கால வழக்கப்படி அந்த குழந்தை யார் பராமரிப்பில் விடப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய, எழுதுகோல்களை பெயர் சொல்லி ஆற்றில் வீசி எறிய வேண்டும். யார் பெயர் சொல்லி எறியப்பட்ட எழுதுகோல் எதிர்நீச்சலிட்டு வீசியவரிடமே திரும்பி வருகிறதோ, அவர் அந்தக்குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்.

    அப்படி செய்த போது ஜக்கரிய்யா நபிகளின் பெயர் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் மற்றவர்கள் அதை ஏற்க மறுத்ததால் மீண்டும் இரண்டு முறை எழுதுகோல் ஆற்றில் எறியப்பட்டது. மூன்று முறையும் ஜக்கரிய்யா நபிகளின் பெயருக்கே அனுமதி கிடைத்தது. அதன் அடிப்படையில் மர்யம் (அலை) ஜக்கரிய்யா நபியிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    ஜக்கரிய்யா நபிகளின் பராமரிப்பில் மர்யம் (அலை) சீரும் சிறப்புமாக வளர்ந்து வாலிபப்பருவத்தை அடையவே, அல்லாஹ் ஈஸா நபியை படைக்க நாடினான். இறை வனின் இந்த கட்டளையை வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மனித உருவில் தோன்றி அன்னை மர்யமிடம் சொன்னார்கள். அதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “மர்யமே, நிச்சயமாக அல்லாஹ் தன் ‘ஆகுக’ என்ற ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு ஒரு குழந்தையை அளிக்க நற்செய்தி கூறுகிறான் என்றும், அதன் பெயர் அல்மஸீஹ் ஈஸா இப்னு மர்யம் என்பதாகும். அவர் இம்மை மறுமையில் மிக்க கம்பீரமானவராகவும், இறைவனுக்கு மிக்க நெருங்கிய ஒருவராகவும் இருப்பார்” என்று கூறினார்கள். (திருக்குர்ஆன் 3:45)

    இந்த செய்தி கேட்டு மர்யம் (அலை) அவர்கள் திடுக்கிட்டார். என்னை ஒரு ஆடவனும் தீண்டாதிருக்க எனக்கு எப்படி குழந்தை ஏற்படும். என் கன்னித்தன்மையின் புனிதம் கெட்டதாக போய் விடுமே. மேலும் எனக்கு களங்கமும், அவதூறும் வந்து சேருமே என்று பயந்தார்கள். வானவர் தலைவர் அவருக்கு ஆறுதல் சொன்னார். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “இப்படி தான் அல்லாஹ் தான் நாடியதை படைக்கின்றான். அவன் ஒரு பொருளை படைக்க நாடினால் அதை ஆகுக என அவன் கூறிய உடனே அது ஆகி விடும்” என்று கூறினார்கள் (திருக்குர்ஆன் 3:47).

    அல்லாஹ்வின் அருள் வாக்குப்படி, அவன் நாடியபடியே நடந்தது. ஈஸா நபிகளும் பிறந்தார். ஊரார்கள் வசைபாடி தூற்றிய போது, ஈஸா நபிகள், தொட்டில் குழந்தையாக-பிறந்த பாலகனாக இருந்த போதே பேசத் தொடங்கினார்கள். தன் தாயின் புனித தன்மை பற்றி அத்தாட்சி கூறினார்கள்.

    பிறந்த பிள்ளை பேசும் அதிசயம் கண்டு, அல்லாஹ்வின் வல்லமையை அறிந்து மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். அல்லாஹ்வும் தன் அருள்மறையிலே ஈஸா நபியின் அதிசயப் பிறப்பை பற்றிச் சொல்லும் போது, ஆதியில் முதல் மனிதனாக ஆதம் (அலை) அவர்களைப் படைக்கும் போது, களிமண்ணால் மனித உருவைச் செய்து அதில் அல்லாஹ்வின் மூச்சுக்காற்றை ஊதி முதல் மனிதனைப் படைத்தான். அதே பாரம்பரியத்தில் ஈஸாவை தகப்பனின்றி படைக்க நாடிய அல்லாஹ் மர்யம் (அலை) அவர்களின் கர்ப்பத்தில் தனது மூச்சுக்காற்றை ஊதினான். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “நிச்சயமாக அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதமுடைய உதாரணத்தைப் போன்றதே. அவன் அவரை மண்ணால் உற்பத்தி செய்து மனிதனாக ஆகுக என்று கூறினான், உடனே அப்படி ஆகி விட்டது” (திருக்குர்ஆன் 3:59).

    இப்படி ஈஸா நபியைப் படைத்து எல்லா ஞானங்களையும், மூஸா நபிக்கு அருளிய தவ்ராத் வேதத்தின் அறிவையும், அவர்களுக்கென பிரத்யேகமாக இன்ஜீல் என்ற வேதத்தையும் இறைவன் அருளினான்.

    ஈஸா நபிகள் தனக்கு அருளிய இன்ஜீல் என்ற வேதத்தை மக்கள் முன் போதித்து, ‘அல்லாஹ் ஒருவன் தான் வணக்கத்திற்குரிய இறைவன், நான் அவனால் அனுப்பப்பட்ட தூதுவன். எனக்கு எந்த இறை சக்தியும் கிடையாது, நான் இறைவனின் மகனும் அல்ல, என்னை நீங்கள் வணங்காதீர்கள். என் போதனைகளைச் செவிமடுத்து அல்லாஹ்வை வணக்கத்திற்குரிய இறைவனாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “நிச்சயமாக நான் உங்கள் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட ஒரு தூதர். அதற்காக உங்களுக்கு ஓர் அத்தாட்சி கொண்டு வந்திருக்கிறேன். உங்களுக்காக களிமண்ணில்இருந்து பறவை போல் செய்து அதில் நான் ஊதுவேன். அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது பறக்கும் பறவையாக ஆகிவிடும். பிறவி குருடனையும், வெண் குஷ்ட ரோகியையும் நான் குணப்படுத்துவேன். அல்லாஹ்வின் அனுமதி கொண்டு மரணித்தோரையும் நான் உயிர்ப்பிப்பேன். நீங்கள் புசித்தவற்றையும் உங்கள் வீட்டில் நீங்கள் சேகரித்து வைத்திருப்பவற்றையும் நான் உங்களுக்கு அறிவிப்பேன்” என்று சொன்னார். (திருக்குர்ஆன் 3:49)

    “நிச்சயமாக அல்லாஹ் தான் என் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இது தான் நேரான வழி என்றும் கூறினார்” (திருக்குர்ஆன் 3:51)

    இவ்வசனங்கள் நமக்கு சொல்வதெல்லாம் ஈஸா நபிகள் அல்லாஹ்வின் வல்லமையால் படைக்கப்பட்டார்களே தவிர அவர்கள் இறைவனும் அல்ல, இறைவனின் மகனும் அல்ல. அவர் மிக பரிசுத்தமானவர் என்பதைத்தான்.

    நான் அல்லாஹ்வின் தூதன் தான். மனிதர்களே, நேர்வழி பெற அல்லாஹ்வையே வணங்குங்கள் என்று அவர் கூறினார். இதன் மூலம் அல்லாஹ் ஏக இறைவன் என்பதை அவர் உண்மைப்படுத்தி இருக்கிறார்.
    பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதைமுன்னிட்டு நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கீழுர் ஜமாஅத்தில் இருந்து நிறைபிறை கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பள்ளிவாசல் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. பின்னர் சிறப்பு துஆ ஓதப்பட்டது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் வருகிற 17-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு பச்சைக்களை ஊர்வலம் நடக்கிறது. 18-ந் தேதி காலை 10 மணிக்கு சுவாமி கம்முத்தவல்லி இனாம்தார் எஸ்.பி.ஷா இல்லத்தில் ராத்திபு ஓதும் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு அரண்மனை கொடியேற்றமும், 2 மணிக்கு மேலூர் ஜமாஅத்தில் இருந்து 10-ம் இரவு கொடி ஊர்வலம் தொடங்கி மாலை 6 மணிக்கு கொடியேற்றமும் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு ரவணசமுத்திரத்தில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெறுகிறது.

    வருகிற 19-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பள்ளிவாசலில் இனாம்தார் எஸ்.பி.ஷா மூலஸ்தானத்தில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு தீப அலங்காரத்திடலில் தீப அலங்காரமும் நடைபெறுகிறது. 21-ந் தேதி மாலையில் ராத்திபு ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி தலைவர் எஸ்.பி.ஷா, கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
    இவ்வாறு வணக்கம் குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு பார்வை கொண்டுள்ளனர். இஸ்லாத்தின் பார்வையில் வணக்கம் என்பது எது? இறைவன் கூறுகின்றான்...
    வணக்கத்தை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் வைத்தே அனேகமானவர்கள் பார்க்கின்றனர். பள்ளிவாசலில் குனிந்து எழும்புவது மட்டுமே வணக்கம் என்று ஒருசிலர் கருதுகின்றனர். அத்துடன் நமது கடமை முடிந்துவிட்டது என்று வேறுசிலர் கருதுகின்றனர்.

    இவ்வாறு வணக்கம் குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு பார்வை கொண்டுள்ளனர். இஸ்லாத்தின் பார்வையில் வணக்கம் என்பது எது?

    இறைவன் கூறுகின்றான்:

    “நான் ஜின்களையும், மனிதர்களையும், என்னை வணங்க வேண்டும் என்பதற்காகவேயன்றி வேறு எதற்கும் படைக்கவில்லை” (திருக்குர்ஆன் 51:56)

    இந்த வசனத்தைப் படித்தபின் அனேகமானவர்களின் எண்ணங்களில் வெறும் தொழுகை, நோன்பு, ஜகாத் போன்றவை மட்டுமே வணக்கம் என்பதான ஒரு பிம்பமும் தவறான கற்பிதமும் தோன்றும். யோசித்துப் பார்த்தால்... இவற்றை மட்டும் நிறைவேற்றுவதற்கா இறைவன் நம்மைப் படைத்தான் என்ற ஐயமும் கூடவே எழும்.

    இவைதான் வணக்கம் என்று நாம் கருதும் இந்தத் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகியவற்றுக்கு அன்றாட வாழ்வின் ஒருநாளில் எத்தனை மணி நேரங்களை நாம் ஒதுக்குகின்றோம் என்பதை யோசித்துப் பார்த்தாலே, வணக்கம் என்பது இவை மட்டுமல்ல என்பது தெரியவரும்.

    உண்மையில் ஐந்து வேளை தொழுகைக்காக 24 மணி நேரத்தில் 5 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. எனில் மீதி நேரம்..?

    மாதங்களைக் கணக்கிட்டால் 8.5 சதவீதம் மட்டுமே நோன்புக்காக ஒதுக்கப்படுகிறது. எனில் மீதி நேரம்?

    ஜகாத் என்பதோ வருடத்தில் ஒரு முறை மட்டுமே. எனில் மீதி நேரம்..?

    வாழ்நாளில் ஒரு முறை தான் ஹஜ். எனில் மீதி நேரம்?

    ‘என்னை வணங்க வேண்டும் என்பதற்காகவேயன்றி உங்களை நான் படைக்கவில்லை’ என்ற இறைக்கூற்றின் அடிப்படையில் பார்த்தால்; 24 மணி நேரமும் தொழுது கொண்டோ, நோன்பு நோற்றுக்கொண்டோ அல்லது ஜகாத் கொடுத்துக்கொண்டோ அல்லவா இருந்திருக்க வேண்டும்?

    இதுநடைமுறை சாத்தியம் அல்ல என்பது அனைவரும் அறிந்ததே. எனவே வணக்கம் என்பது வெறும் தொழுகையும் நோன்பும் மட்டுமல்ல. மாறாக அறிந்துகொள்ளுங்கள்...

    ஓர் ஏழைக்கு உணவளிக்கும்போது நீங்கள் வணக்கத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.

    மத, இன, மொழி வேறுபாடு பார்க்காமல் கவலை சூழ்ந்த மனிதனின் கண்ணீர் துடைக்கும்போது நீங்கள் வணக்கத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.

    அமானிதம் பேணி, அடுத்தவர் உரிமையில் கை வைக்காமல் இருக்கும்போது நீங்கள் வணக்கத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.

    நாவால் பிறர் மனதை நோகடிக்காமல் இருக்கும்போது நீங்கள் வணக்கத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.

    மலர்ந்த முகத்துடன் மக்களைச் சந்திக்கும்போது நீங்கள் வணக்கத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.

    தேவையற்றை கோபத்தையும் அவசியமற்ற ஆத்திரத்தையும் கட்டுப்படுத்தும்போதும் நீங்கள் வணக்கத்தில்தான் ஈடுபட்டுள்ளீர்கள்.

    லஞ்சம் வாங்க மறுக்கும் லட்சியவாதியாக மாறும்போது நீங்கள் வணக்கத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.

    உண்மையை உரக்கச் சொல்லும்போது நீங்கள் வணக்கத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.

    வியாபாரத்தின்போதும், கொடுக்கல் வாங்கலின்போதும் நீதியுடனும் விட்டுக்கொடுக்கும் மனோபாவத்துடனும் நடந்துகொள்ளும்போது நீங்கள் வணக்கத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.

    உங்கள் வேலையையும் உங்களது பணியையும் ஈடுபாட்டுடனும் பொறுப்புடனும் செய்யும்போதும், வாங்கும் ஊதியத்திற்கு உகந்த முறையில் உழைக்கும்போதும் நீங்கள் வணக்கத்தில் தான் ஈடுபட்டுள்ளீர்கள்.

    உண்ணும் உணவும் அருந்தும் பானமும் அனுமதிக்கப்பட்ட வழிமுறையினூடாக இருந்தால் அதுவும் வணக்கமே.

    அணியும் ஆடையும், அத்தியாவசியப் பொருட்களும் அனுமதிக்கப்பட்ட முறையில் சம்பாதித்தவையாக இருந்தால் அதுவும் வணக்கமே.

    இதைவிட ஆச்சரியம் என்னவென்றால் வாழ்க்கைத் தேவையை நிறைவேற்றுவதற்காகவும் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகவும் உழைப்பதும் சிலபோது வணக்கத்தில் கட்டுப்படும்.

    வயலில் உழைப்பவரும், தொழிற்சாலையில் இயங்குபவரும், கடைவிரிக்கும் வியாபாரியும், அலுவலகத்தில் பணி செய்யும் ஊழியரும், துறைசார் நிபுணர்களும் தங்களுடைய பணிகளை வணக்கமாகவும், மறுமை வெற்றிக்கான ஆதாரமாகவும் மாற்றிக்கொள்ள முடியும்.

    ஆயினும் அதற்கென சில நிபந்தனைகள் உள்ளன.

    ஒன்று: இஸ்லாம் அனுமதித்த தொழிலாக அது இருக்க வேண்டும்.

    இரண்டு: நோக்கம் (நிய்யத்) நல்லதாக இருக்க வேண்டும்.

    மூன்று: செய்வன திருந்தச் செய்ய வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் ஒரு செயலைச் செய்தால் அதைச் செவ்வனே செய்வதை இறைவன் விரும்புகின்றான்”. (பைஹகி).

    நான்கு: அந்தப் பணியில் இறை வரம்புகளை மீறக்கூடாது. (மோசடி, திருட்டு, துரோகம் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது).

    ஐந்து: இறைக் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு அந்தப் பணி தடையாக இருக்கக் கூடாது.

    இந்த வரம்புகளை பேணும்போது யார் எப்பணி செய்தாலும் அப்பணியை வணக்கமாகவே இஸ்லாம் கருதுகிறது.

    பலசாலியான ஒரு மனிதர் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் கடந்து சென்றார். அப்போது தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவர் மட்டும் இறைப் பாதையில் போராட முன்வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?” என்று கூறினர்.

    அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அறிந்துகொள்ளுங்கள்! தமது குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இவர் உழைக்கச் செல்கின்றார் என்றால் இவரும் இறைப்பாதையிலேயே இருக்கின்றார். தமது வயதான பெற்றோரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இவர் உழைக்கச் செல்கின்றார் என்றால் அப்போதும் இவர் இறைப்பாதையிலேயே இருக்கின்றார். அடுத்தவரிடம் கையேந்தாமல் தமது சுயமரியாதையைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உழைக்கச் செல்கின்றார் என்றால், அப்போதும் இவர் இறைப்பாதையிலேயே இருக்கின்றார். ஒருவர் பெருமைக்காகவும், பகட்டுக்காகவும் உழைக்கச் செல்கின்றார் என்றால் அப்போதுதான் இவர் சைத்தானின் பாதையில் இருக்கின்றார்”. (தபரானி)

    இஸ்லாத்தின் பார்வையில் வணக்கம் இப்படித்தான் பட்டியலிடப்படுகிறதே தவிர, வெறும் தொழுகையையும் நோன்பையும் மட்டும் வைத்தல்ல.

    இந்த வணக்கங்கள் தான் மற்றவர்களைக் கவர்ந்திழுக்குமே தவிர, வெறும் பரப்புரைகளும், பேருரைகளும் அல்ல.

    மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
    திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றம் நேற்று நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் ‘நாரே தக்குபீர் அல்லாகு அக்பர்‘ என கோஷம் எழுப்பினர்.
    நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தர்காக்களில் திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசலில் உள்ள சேகு முகம்மது (ஒலி), சையதலி பாத்திமா (ரலி) தர்காவும் ஒன்றாகும். இங்கு ஆண்டு தோறும் கந்தூரி விழா வெகு சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கொடியேற்றம் நேற்று நடந்தது.

    இதையொட்டி நேற்று அதிகாலை கத்முல் குர்ஆனுடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து பள்ளிவாசல் இமாம் முகம்மது யூசுப் தலைமையில் குர்ஆன் தமாம் செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு அரண்மனை புலிமான்குளத்தில் இருந்து யானை மீது கொடி, சந்தனகுடம் ஆகியன பரம்பரை டிரஸ்டி ஹபிபுர் ரகுமான் பிஜிலி தலைமையில் ஊர்வலமாக தர்காவுக்கு புறப்பட்டது.

    11.45 மணிக்கு கொடி ஊர்வலம் தர்காவை அடைந்தது. பரம்பரை டிரஸ்டி ஹபிபுர் ரகுமான் பிஜிலி யானையில் இருந்தவாறு பள்ளிவாசல் முன்பு கொடியேற்றினார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் ‘நாரே தக்குபீர் அல்லாகு அக்பர்‘ என கோஷம் எழுப்பினர். அதை தொடர்ந்து தர்காவில் சந்தனம் மெழுகுதல் நடந்தது.

    பின்னர் தர்காவில் பச்சை நிற போர்வை போர்த்தப்பட்டு பூ அணிவிக்கப்பட்டு சிறப்பு துவா ஓதப்பட்டது. மாலையில் மவ்லூது ஷரீப் ஓதுதல், ராத்திப்புத்துல் காதிரிய்யா திக்று மஜ்லீஸ் ஓதுதல் நடந்தது. இரவில் இஸ்லாமியர்களின் மார்க்க சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி நடந்தது. இதில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து மட்டுமில்லாமல் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் நன்றி நவிலல், சிறப்பு துவா ஓதுதல், நேர்ச்சை வினியோகம் ஆகியன நடக்கிறது. கந்தூரி விழாவை முன்னிட்டு நெல்லை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    விழா ஏற்பாடுகளை பள்ளிவாசல் பரம்பரை டிரஸ்டிகள் நயாஸ் அகமது பிஜிலி, ஹபிபுர் ரகுமான் பிஜிலி ஆகியோர் செய்திருந்தனர்.
    நாம் பெறும் படிப்பினை என்னவென்றால் அல்லாஹ் எதனை அனுமதித்தானோ அதை தடை செய்வதற்கோ, அல்லது எதை தடை செய்தானோ அதனை ஏற்றுக் கொள்வதற்கோ எந்த மனிதருக்கும் உரிமையில்லை.
    ஆதிபிதா ஆதம் (அலை) அவர்களைப் படைத்து அதன்மூலம் உலகில் மனித இனத்தைப் பல்கி பெருகச் செய்தான், அல்லாஹ். ஒவ்வொரு காலகட்டத்திலும் அல்லாஹ் பற்றிய அறிவை அந்த மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக அவ்வப்போது அவனுடைய அதிகாரம் பெற்ற தூதுவர்களை அனுப்பி வைத்தான். கிட்டதட்ட ஒரு லட்சத்து 24 ஆயிரம் தூதுவர்களை இறைவன் அனுப்பி வைத்துள்ளான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    உலகின் ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு கூட்டத்தாருக்குமாக ஒரு தூதரை இறைவன் அனுப்பி வைத்தான். ஒவ்வொரு தூதரை அனுப்பும் போதும், அம்மக்களுக்கு அக்கால கட்டத்தில் பொருந்தக்கூடிய நல்வாழ்வியல் தத்துவத்தைப் போதித்து வந்தான். எந்த கட்டளையை எடுத்து செயல்படுத்த வேண்டும், எதனை தடுத்து, விடுத்து வாழ வேண்டும் என்றெல்லாம் கூட ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வந்தன. அத்தனை நபிமார்களும் ஏதோ ஒரு கூட்டத்திற்காகவோ, ஏதோ ஒரு ஊருக்காகவோ அனுப்பப்பட்டவர்கள்.

    ஆது, சமூது, மத்யன் வாசிகள், எகிப்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்கள் என்று பல கூட்டத்திற்கான நபிமார்கள் வந்தனர். ஆனால் இறுதி நபி முகம்மது (ஸல்) அவர்களை, உலகில் வாழும் அத்தனை மக்களுக்கும் நல்வழியை எடுத்துச் சொல்லும் நபியாக இறைவன் அனுப்பி வைத்தான். ‘முகம்மது நபியை படைக்கவில்லை என்றால், இந்த உலகத்தையே படைத்திருக்க மாட்டேன்’ என்று திருக்குர்ஆனில் ஓர் இடத்தில் இறைவன் குறிப்பிடுகின்றான்.

    அப்படிப்பட்ட பூரணத்துவம் வாய்ந்த நபிகள் நாயகத்திற்கு திருக்குர்ஆனை இறுதி வேதமாகவும் அருளினான். அதில் சொல்லப்பட்ட அத்தனை கட்டளைகளும் மறுமைநாள் ஏற்படும் வரை எல்லோராலும் பின்பற்றப்பட வேண்டும்.

    அதே சமயம் நபி பெருமானார் (ஸல்) அவர்கள், தன் சுய விருப்பத்தின் பேரில் சிலவற்றை வேண்டுமென்றோ, சிலவற்றை வேண்டாம் என்றோ ஒதுக்குவதற்கு கூட அவர்களுக்கு உரிமைத் தரப்படவில்லை. அது போன்ற சம்பவம் ஒன்று அண்ணலாரின் வாழ்வில் நடந்தது. அதுபற்றி காண்போம்...

    அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் பல திருமணங்களை முடித்தார்கள். அதற்கு காரணம் விவாகத்தின் மீதுள்ள விருப்பம் அல்ல. மாறாக, திருமணம் குறித்த சில சட்டதிட்டங்களை வழிமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான். அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர நபிகளாரின் அத்தனை மனைவிகளும் விதவைகள். சிலர் நபிகள் நாதரை விட அதிக வயதுடையவர்கள்.

    போர் காலங்களில் ஏற்படும் இழப்புகள், மற்றும் வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் பிரச்சினைகளால் தனித்து தவித்துக் கொண்டிருக்கும் பெண்களை ஆதரிக்க வேண்டும் என்ற உயர் நோக்கத்தில் தான் அத்தனை திருமணங்களை தன் வாழ்வில் ஏற்றுக்கொண்டார்கள். சட்டங்களைச் சொல்வது மட்டுமல்ல, சட்டங்களை வாழ்வில் ஏற்று வாழ்ந்து காட்டிய ஒரே மார்க்கப் போதகர் நபிகள் நாயகம் மட்டும் தான்.

    தன் வாழ்நாள் முழுவதும் அத்தனை மனைவிகளிடமும் ஒரே மாதிரியாய் அன்பும் பாசமும் கொண்டு அவர்களிடையே நீதி செலுத்தி வாழ்ந்தார்கள். மனைவியர், தனித்தனி வீடுகளில் இருந்தாலும் ஒவ்வொரு நாளை ஒருவருக்காக ஒதுக்கி அவர்களோடு தங்கி அவர்கள் சுக துக்கங்களில் பங்கேற்று வந்தார்கள்.

    அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் அஸர் தொழுகைக்குப் பின் ஒவ்வொரு மனைவியரையும் சந்தித்து அவர்களோடு அளாவளாவி அன்றைய தினம் ஏதாவது முக்கிய பிரச்சினை இருந்தால் அதைத்தீர்த்து வைப்பதிலும் ஆர்வம் காட்டி வந்தார்கள்.

    அதுபோன்று ஒவ்வொரு நாளும் நபிகளார் அன்னை ஜைனப் பின் ஜஹல் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்லும் போது அவர்களின் உபசரிப்பில் மகிழ்ந்தவர்களாக கொஞ்சம் அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள். அது மட்டுமல்லாமல் அவர்கள் வீட்டில் பரிமாறப்படும் தேனை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். இது அன்றாட நிகழ்வாய் நடந்தேறி வந்தது.

    ஆனால் இது நபிகளாரின் மற்ற மனைவியரான, ஆயிஷா (ரலி), ஹப்ஸா (ரலி) ஆகியோருக்குப் பிடிக்கவில்லை. எனவே இருவரும் அதை எப்படியாவது தடை செய்து விட வேண்டும் என்ற கருத்தில் ஆலோசனை செய்தனர்.

    “நாயகம் உங்கள் வீட்டிற்கு வரும் போது நீங்கள் நபிகளிடம் ‘உங்கள் வாயிலிருந்து விரும்பத் தகாத மணம் ஒன்று வீசுகிறதே, என்ன சாப்பிட்டீர்கள்?’ என்று கேளுங்கள், என் வீட்டிற்கு வரும் போதும் அதே கேள்வியை நான் கேட்கிறேன். அதனால் அருமை கணவர் நம்மை திருப்திப்படுத்தும் நோக்கில், ஜைனப் (ரலி) வீட்டில் தேன் அருந்துவதை நிறுத்தி விடுவார்கள்” என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். அதன்படியே நபிகளாரிடம் கேட்கவும் செய்தார்கள். இதையடுத்து நபிகளார் இவ்வாறு கூறினார்கள்: ‘ஹப்ஸாவும் இதையே சொன்னார், ஆயிஷாவே நீங்களும் இதையே சொல்கிறீர்கள். நான் தேனருந்துவதால் உங்களுக்கு இப்படி ஒரு சங்கடம் விளைகிறது என்றால் நான் இனிமேல் தேன் அருந்த மாட்டேன்’ என்று சத்தியம் செய்து விட்டார்கள்.

    நபிபெருமானார் (ஸல்) அவர்கள் தேன் அருந்துவதை நிறுத்தி விட்டால் அனைவரும் அதனையே பின்பற்றுவர். தேனின் அற்புத குணத்தைப் பற்றி அல்லாஹ் சொன்னது அத்தனையும் வீணாகிடுமே. இந்த நிலையில் அதனை மறுத்து அல்லாஹ் உடனே இந்த இறைச்செய்தியை இறக்கினான்.

    “நபியே! நீர் உமது மனைவிகளின் திருப்தியைக் கருதி, அல்லாஹ் உமக்கு ஆகுமாக்கி வைத்ததை எடுத்துக் கொள்வது இல்லை என்று நீர் ஏன் சத்தியம் செய்து அதை ஹராம் என்று விலக்கி கொண்டீர். அல்லாஹ் மிக மன்னிப்பவனும் மகாகிருபையுடையவனும் ஆவான்” (திருக்குர்ஆன் 66:1)

    அதாவது, ‘நான் ஹலாலாக்கிய தேனை நபிகளார் எப்படி ஹராமாக்கி கொண்டு சத்தியம் செய்ய முடியும். உடனே அந்த சத்தியத்திற்கான பரிகாரம் செய்து சத்தியத்திலிருந்து மீண்டு விடுங்கள்’ என்று இதன் மூலம் நபிகளுக்கு இறைவன் கட்டளையிட்டான். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “ஆகவே உங்கள் அந்த சத்தியத்திற்கு நீங்கள் பரிகாரம் கொடுத்து அதை நீக்கிவிடுமாறு நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான். அல்லாஹ் தான் உங்கள் எஜமானன் அவன் அனைவரையும் நன்கறிந்தவனும் ஞானமுடையவனும் ஆவான்.” (திருக்குர்ஆன் 66:2)

    கண்மணி நாயகம் சத்தியத்திலிருந்து மீண்டதும். தன் மனைவிமார்கள் தங்களுக்குள் பேசிக்கொண்ட ரகசியத்தையும் அல்லாஹ் அவர்களுக்கு வெளிப்படுத்திக் காட்டினான்.

    இதன் மூலம் நாம் பெறும் படிப்பினை என்னவென்றால் அல்லாஹ் எதனை அனுமதித்தானோ அதை தடை செய்வதற்கோ, அல்லது எதை தடை செய்தானோ அதனை ஏற்றுக் கொள்வதற்கோ எந்த மனிதருக்கும் உரிமையில்லை.

    ஷரிஅத் சட்டதிட்டங்கள் மிக நுட்பமாக அல்லாஹ்வால் அருள்மறையில் அருளப்பட்டது. அதன் நுணுக்கங்களை ஆழமாக அறிந்து அதன்படி செயலாற்றும் போது வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் உண்டு. மாறு செய்யும் போது மறுமையில் நிச்சயம் தண்டனையுண்டு. இதனை முழுமையாய் உணர்ந்து வாழும் போது தான் ஒருவன் உண்மை முஸ்லிமாக முடியும். அப்படிப்பட்ட நற்பாக்கியத்தை நம் எல்லோருக்கும் அல்லாஹ் அருளி கிருபை செய்வானாக, ஆமின்.

    மு. முஹம்மது யூசுப்,
    உடன்குடி.
    ×