search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மினராக்களின் உச்சியில் கொடி பறப்பதை படத்தில் காணலாம்.
    X
    மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மினராக்களின் உச்சியில் கொடி பறப்பதை படத்தில் காணலாம்.

    நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
    நாகை மாவட்டம் நாகூரில் பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. மதநல்லிணக்க வழிபாட்டு தலமாக விளங்கும் இந்த தர்காவில் அமைதி வழியில் தனது அன்பு அழைப்பால் எண்ணற்ற மக்களை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வந்த நாகூர் ஆண்டவரின் மறைந்த தினம் ஆண்டுதோறும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் தொடக்கமாக கொடி ஊர்வலம் நடந்தது. நாகை மீராப்பள்ளி ரதத்தடியில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட கொடிகள் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. மொத்தம் 5 கொடிகள் பெரிய ரதம், சின்ன ரதம், டீஸ்டா கப்பல், செட்டி பல்லக்கு, கப்பல் ஆகியவற்றில் எடுத்து செல்லப்பட்டன. ஊர்வலத்தில் மினரா, சிறிய கப்பல், நகராமேடை, சாம்பிராணிசட்டி, பிறை, படகு போன்ற வடிவங்களில் அலங்காரம் செய்யப்பட்டிருந்த ரதங்கள் அணி வகுத்து சென்றன.

    நாகை புதுப்பள்ளிதெரு வழியாக யாஹுசைன் தெரு, நூல்கடை தெரு, வெங்காய கடை தெரு, பெரியகடை தெரு, நீலா கீழவீதி, தெற்குவீதி, வடக்கு வீதி, தேரடி தெரு, புதுத்தெரு, சர்அகமது தெரு, கொட்டுப்பாளைய தெரு, அண்ணாசிலை, பப்ளிக் ஆபீஸ் சாலை வழியாக நாகூரில் ஊர்வலம் நிறை வடைந்தது.

    கொடிகள் வைக்கப்பட்டிருந்த ரதங்கள் நாகை வீதிகளில் ஊர்வலமாக வந்தபோது வீட்டு மாடிகளிலும், வீதிகளிலும் திரண்டிருந்த பொதுமக்கள் பூக்களை தூவி பிரார்த்தனை செய்தனர். குட்டிக்கப்பல் போன்ற ரதங்களை சிறுவர்கள் உற்சாகமாக இழுத்து சென்றனர். அலங்கார ரதங்களில் இருந்து எலுமிச்சை பழம், இனிப்புகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. ஊர்வலம் நாகூர் ஆண்டவர் தர்கா அலங்கார வாசலை சென்றடைந்ததும், தர்காவின் 5 மினராக்களின் உச்சிக்கு நாகை முஸ்லிம் ஜமாத்தார்கள் கொடிகளை கொண்டு சென்றனர்.

    இதையடுத்து தர்காவின் பரம்பரை கலிபா பாத்திஹா ஓதினார். அப்போது மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்து கொண்டிருந்த 5 மினராக்களிலும் கொடிகள் ஏற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. கொடியேற்றத்தை தர்காவை சுற்றி கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந்து பிரார்த்தனை செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தர்காவின் தற்காலிக நிர்வாகிகள் அக்பர், அலாவுதீன் மற்றும் நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டிகள் செய்திருந்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாகையில் உள்ள அபிராமி அம்மன் திருவாசலில் இருந்து இரவு 7 மணிக்கு தாபூத்து எனப்படும் சந்தனக்கூடு புறப்பட்டு மறுநாள் 5-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு நாகூர் தர்காவை வந்தடைகிறது. பின்னர் நாகூர் தர்காவில் ஆண்டவருக்கு சந்தனம் பூசப்படும். முன்னதாக வாண வேடிக்கை, பீர்வைக்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கந்தூரி விழாவையொட்டி நாகூரில் ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    Next Story
    ×