search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மேல்மலையனூர் அங்காளம்மன்
    X
    மேல்மலையனூர் அங்காளம்மன்

    பில்லி சூனியத்தை விலக்கும் எலுமிச்சை பழம்

    மேல்மலையனூரில் அங்காளம்மனுக்கு உகந்தது எலுமிச்சை பழம் ஆகும். இந்த பழத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் எந்தவித தீய சக்திகளும் வீட்டுக்குள் அண்டாது.
    மேல்மலையனூரில் அங்காளம்மனுக்கு உகந்தது எலுமிச்சை பழம் ஆகும். இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் தங்களது கையில் எலுமிச்சை பழங்கள் மற்றும் மாலையாகவும் கொண்டு வருகிறார்கள். இதற்காக கோவிலின் முன்பு எலுமிச்சை பழம் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. எலுமிச்சை பழத்தில்தான் அதிக சக்தி இருப்பதாக கூறப்படுகிறது.

    எலுமிச்சை பழத்தை அம்மனின் காலில் வைத்து வழிபட்டு செல்லும் பக்தர்கள் அதனை வீட்டுக்கு கொண்டு செல்கிறார்கள். இந்த பழத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் எந்தவித தீய சக்திகளும் வீட்டுக்குள் அண்டாது. மேலும் பலர் எலுமிச்சை பழத்தை வீட்டின் தலைவாசலில் கட்டி தொங்க விடுகிறார்கள். இதன் மூலம் கண்திருஷ்டி விலகும் என்பது ஐதீகமாக உள்ளது.

    அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தின் போது அங்காளம்மன் கோவிலை சுற்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் எலுமிச்சை பழம் மற்றும் மாலைகளை வாங்கி கொண்டு தரிசனம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு அமாவாசை அன்றும் கோவிலில் எங்கு பார்த்தாலும் எலுமிச்சை பழங்களாக காட்சி அளிக்கும்.

    பேய், பிசாசு, பில்லி, சூனியம் மற்றும் கண்திருஷ்டி போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு எலுமிச்சை பழம் பயன்படுகிறது. இவர்கள் அம்மனின் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை கோவிலின் முன்பு கொண்டு செல்கிறார்கள்.

    அங்கு நிற்கும் பூசாரி பாலா என்பவரிடம் வழங்குகிறார்கள். அவர் அந்த எலுமிச்சை பழத்தை கையில் வாங்கி கொண்டு பூஜித்து அதனை கொடுத்த பக்தர்களின் தலையை 3 முறை சுற்றி காலால் மிதிக்கும் படி கூறுகிறார். அதன்படி பக்தர்கள் அந்த எலுமிச்சை பழத்தை காலால் மிதித்து செல்கிறார்கள். இதனால் அவர்கள் உடலில் புகுந்திருந்த கெட்ட ஆவிகள் பறந்து விடுகிறது. பில்லி, சூனியமும் விரட்டப்படுகிறது. இதனால் அங்காளம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலானோர் எலுமிச்சை பழம் வழிபாட்டை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×