என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வாழ்வை புனிதப்படுத்தும் கிறிஸ்துமஸ்
    X

    வாழ்வை புனிதப்படுத்தும் கிறிஸ்துமஸ்

    ஒரு தெய்வம் தாமே முன்வந்து தம்மையே பாவ பரிகாரமாக கொடுக்க வந்தார். அவர் தான் இயேசு கிறிஸ்து. அவரது பிறப்பே உலகம் முழுமையும் கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகையாகும்.
    மனிதன் மகிழ்நிறை வாழ்வு வாழ ஆசை கொள்கிறான். ஆனால் அந்த ஆசை நிராசை ஆகிறது. அவனது வாழ்வில் ஏற்படும் சலனங்களும், தீமைகள் செய்வதால் வரும் விளைவுகளும், மனதின் மகிழ்ச்சியையும், அமைதியையும் கெடுத்து விடுகின்றன.

    தான் இழந்து போன சந்தோஷத்தையும், சமாதானத்தையும் பெற புண்ணிய காரியங்களையும், தான தர்மங்களையும், புனித பயணங்களையும் மேற்கொண்டு அந்நிறைவை பெற்றுக் கொள்ளலாம் என்று வாஞ்சிக்கிறான். அவ்விருப்பமோ நிறைவேறாமல் தடுமாற்றம் அடைகின்றான். அவைகளை போக்க பல வழிகளை கையாளுகின்றான். பயனில்லை. அப்படிப்பட்ட மனிதனும் புனித வாழ்வு பெற்று அகமும், முகமும் மலர ஆன்மிக பாடம் புகட்டுகின்றார் சாது சுந்தர்சிங்.

    அவர் ஒரு சமயம் கங்கை நதிக்கரைக்கு சென்றார். அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் குளித்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் தங்கள் இருதயத்தில் தூய்மையை பெற்றுக் கொள்ளவும், அந்த இருதயத்தை ஆளுகை செய்யும் பாவத்தின் தன்மையில் இருந்து விடுதலையை பெற்றுக் கொள்ளவும் அந்நதியில் நீராடிக் கொண்டு இருந்தனர். இருதயத்தின் இருள் போக்க அவர்களது அறியாமையின் செயல் கண்டு, சாது வருந்தினார். அவர்களோடு உரையாடினார், உறவாடினார்.

    அறியாமையில் மூழ்கி கிடக்கும் மக்கள் அவருக்கு செவி கொடுக்கவில்லை. இச்செயலை அவர்களுக்கு உணர்த்தி காட்டுவதற்காக, அவர்களுடன் தானும் சேர்ந்து நீராட நதியில் இறங்கினார். தன் கரத்தில் இருந்த பெட்டியை அவர்கள் முன் திறந்தார். பின் தனது அழுக்கு படிந்த ஆடைகளை அவர்கள் முன்பாகவே அந்த பெட்டிக்குள் வைத்து பூட்டினார். பின்னர் பெட்டியை தண்ணீருக்குள் முக்கி எடுத்து அதன் மேல் சோப்பு போட்டார். இதை பார்த்தவர்கள், அவரிடம் என்ன செய்கிறாய்? என்று கேட்டனர். நான் என் ஆடைகளை சுத்தப்படுத்துகிறேன் என்றார்.

    அதை கேட்டவர்கள் சத்தமாக சிரித்து விட்டனர். பெட்டிக்குள் இருக்கும் ஆடைகளுக்கு போடாமல், பெட்டிக்கு சோப்பு போட்டால் எப்படி அழுக்கு நீங்கும்? ஆடையில் அல்லவா சோப்பு போட வேண்டும் என்றனர். சாது அவர்களை பார்த்து பின்வருமாறு சொன்னார்.

    நீங்கள் உங்கள் பாவ பரிகாரத்துக்காக இந்த நதிக்குள் மூழ்கி நீராடுவது உங்கள் சரீர அழுக்கை போக்கும். ஆனால் உங்கள் ஆன்மிக அழுக்கை போக்காது. உங்கள் மாசு படித்த இதய அழுக்கை புனிதப்படுத்துவதற்கு ஒரு தெய்வம் உங்களுக்காக ரத்தம் சிந்தினார். அவர் தான் இயேசு கிறிஸ்து. அவரின் ரத்தத்தால் உங்கள் பாவங்கள் நீங்கி உள்ளம் புனிதமாகும். உங்கள் வாழ்வில் நீங்கள் எதிர்பார்க்கும் அமைதியும், மகிழ்ச்சியும் உண்டாகும் என்று கூறினார். அந்த நதிக்கரையில் அநேகர் இயேசுவை ஏற்றுக் கொண்டார்கள்.

    ஒரு தெய்வம் தாமே முன்வந்து தம்மையே பாவ பரிகாரமாக கொடுக்க வந்தார். அவர் தான் இயேசு கிறிஸ்து. அவரது பிறப்பே உலகம் முழுமையும் கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகையாகும்.

    - பாஸ்கர் கனகராஜ்,

    சேகர ஆயர், சுவிசேஷபுரம்.
    Next Story
    ×