என் மலர்
ஆன்மிகம்

கிறிஸ்து பிறப்பு எப்படி?
இயேசுவின் பிறப்பு மனித இனத்திற்கே கிடைத்த மாபெரும் அதிசயம் ஆகும். அவர் கொண்டு வந்த அன்பையும், சமாதானத்தையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் ஒரு குடும்பத்திற்குக் கிடைக்கின்ற ஒரு அதிசயம். பாலன் இயேசுவின் பிறப்பு மனித இனத்திற்கே கிடைத்த மாபெரும் அதிசயம் ஆகும். அந்த அதிசயத்தையும் அவர் கொண்டு வந்த அன்பையும், சமாதானத்தையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
வரலாற்றில் வலம் வந்த எத்தனையோ பேர் இம்மண்ணிலிருந்து மறைந்து விட்டார்கள் ஏன்? மனித மனங்களிலிருந்தும் மறைந்து விட்டார்கள். ஆனால் உலகிற்கு ஒளியாக, வாழ்வுக்கு வழியாக, உண் மைக்கு சான்றாக, கன்னிமரியின் மகனாக இம்மண்ணில் பிறந்த இயேசு இன்றும் இம் மண்ணில், மனித மனங்களில் வாழ்ந்து வருகிறார்.
“மடமை என உலகம் கருதுவதை, வலுவற்றது என உலகம் கருதுவதை, தாழ்ந்தது என உலகம் கருது வதை, இகழ்ந்தது என உலகம் தள்ளுவதைக் கடவுள் தேர்ந்து கொண்டார்” (1 கொரி. 1:27-29) ஆம் கடவுள் அடிமையின் வடிவை ஏற்று மனித உருவில் தோன்றிய நாள். மனிதர்களின் பாவங்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு விண்ணுலக வாழ்வைப்பெற வழி ஏற்படுத்திய நல்ல நாள். மனித உள்ளங்களில் தோன்றிய தீய எண்ணங்கள் ஒழிக்கப் பட்டு அமைதியும், சமாதானமும் விதைக்கப்பட்ட நாள்.
உலக வரலாற்றிலே காலத்தை இரண்டாகப் பிரித்த நாள் (கி.மு., கி.பி.). இந்த நல்ல நாளிலே இந்த உலகில் வாழும் நாம், நம்மிடையே உள்ள அனைத்து தீய பாவச் செயல்களை விலக்கி, அன்பும், பாசமும், மன்னிப்பும், பகிர்வும் நிறைந்த அமைதியான உலகை உருவாக்க முயற்சிப்போம். இயேசு கிறிஸ்து ஒரு இனத்திற்கோ அல்லது ஒரு மதத்திற்கோ, அல்லது ஒரு பிரிவினருக்கோ சொந்தமானவர் என்ற வீண்விவாதத்தில் ஈடுபடாமல், முழு மனித இனத்தையும் மீட்க வந்தவர் என்ற எண்ணத்தோடு வாழ்வோம்.
மனிதமும், புனிதமும் ஒன்றிணைந்த இந்த கிறிஸ்து பிறப்பு நன்நாளிலே மனிதர்களாகிய நாம் புனிதமான வாழ்வு வாழ இயேசு நம்மை அழைக்கிறார். நம் உள்ளத்தை தாழ்ச்சியும், எளிமையும் நிறைந்த இடமாக மாற்றுவோம். பாலன் இயேசுவை தம் உள்ளங்களில் வரவேற் போம். வானதூதர்களைப் போல ஆடிப்பாடி மகிழ்வோம், இன்பமாக வாழ்வோம்.
அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு விழா நல்வாழ்த்துக்கள். பாலன் இயேசு கொண்டுவந்த அன்பும், அமைதியும், சமாதானமும் உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் நிறைவாக இருப்பதாக மலர விருக்கும் புத்தாண்டு ஒவ் வொருவரின் வாழ்விலும் புதிய உற்சாகத்தையும், புதிய வாய்ப்புகளையும், புதிய வளங்களையும் வாரி வழங்கும் புதிய ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களும், ஆசீரும் உரித்தாகுக.
அருட்பணி. மைக்கிள் S. மகிழன், பங்குத்தந்தை, காவல்கிணறு
Next Story






