என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இன்னும் 100 சதவீதம் இல்லை... ஆனால் என உறுதி அளித்த ரிஷப் பண்ட்
- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்.
- இன்று நடைபெறும் ஏலத்தில் நேரடியாக கலந்து கொள்ள இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ரிஷப் பண்ட். இவர் கடந்த ஆண்டு விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். இதனால் கடந்த ஐ.பி.எல். தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெறாமல் இருக்கிறார். தற்போது காயத்தில் இருந்து ஏறக்குறைய குணம் அடைந்துவிட்டார். இதனால் வருகிற ஐ.பி.எல். தொடரில் விளையாடுவார் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதற்கு ஏற்றபடி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இன்று மதியம் 2024 சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் ரிஷப் பண்ட் கலந்து கொள்ள இருக்கிறார்.
ஐ.பி.எல். போட்டியில் விளையாட இருக்கும் ரிஷப் பண்ட்-யிடம் உடல் தகுதி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில் "ஐ.பி.எல். ஏலத்தில் கலந்து கொள்ள இருப்பது புதிய அனுபவம். மேலும் உற்சாகமாக உள்ளது. இதற்கு முன்னதாக ஐ.பி.எல். ஏலத்தில் கலந்து கொள்ளவில்லை. அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
சில மாதங்களுக்கு முன்னதாக நான் செய்து கொண்டிருந்ததை விட (கிரிக்கெட் பயிற்சி) தற்போது சிறந்த வகையில் செய்து கொண்டிருக்கிறேன். 100 சதவீதத்திற்கு இன்னும் உடற்தகுதி பெற வேண்டியுள்ளது. ஆனால் இன்றும் சில மாதங்கள் உள்ளது. அதற்குள் நான் முழு உடற்தகுதியை எட்டி விடுவேன்" என்றார்.






