search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மும்பைக்கு செல்லும் ஹர்திக் பாண்ட்யா: பென் ஸ்டோக்ஸை ரிலீஸ் செய்யும் சிஎஸ்கே- வதந்தியா? உண்மையா?
    X

    மும்பைக்கு செல்லும் ஹர்திக் பாண்ட்யா: பென் ஸ்டோக்ஸை ரிலீஸ் செய்யும் சிஎஸ்கே- வதந்தியா? உண்மையா?

    • ஐ.பி.எல். 2024 சீசனுக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடைபெற இருக்கிறது.
    • வருகிற 26-ந்தேதிக்குள் தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணிகளும் தெரிவிக்க வேண்டும்.

    போட்டியில் வெற்றி அல்லது தோல்வி என்பது இயல்பே. அதையெல்லாம் கடந்து செல்வதுதான் விளையாட்டின் இயல்பு. இந்திய அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததை ரசிகர்களால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. தோல்வியில் இருந்து இன்னும் வெளியே வர முடியாத நிலையில், கிரிக்கெட் போட்டி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

    இன்று இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்குகிறது. இந்திய சீனியர் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விவிஎஸ் லட்சுமண் நியமிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    இந்த நிலையில்தான் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    2024 ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 19-ந்தேதி துபாயில் நடைபெறுகிறது. அதற்கு முன் ஒவ்வொரு அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறது என்ற விவரத்தை நவம்பர் 26-ந்தேதிக்குள் ஐபிஎல் நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அணிகள் தங்களுடைய வீரர்களை பரஸ்பர மாற்றம் செய்து கொள்ளலாம்.

    இந்த வகையில், அதிகாரப்பூர்வமாக லக்னோ சூப்பர் செயின்ட்ஸ் அணி ஆவேஷ் கானை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கொடுக்கிறது. அதற்குப் பதிலாக தேவ்தத் படிக்கல்லை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெறுகிறது.

    டெல்லி அணி சர்பராஸ் கான், மணிஷ் பாண்டே ஆகியோரை வெளியேற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் பென் ஸ்டோக்ஸை வெளியிட விரும்புகிறது. பென் ஸ்டோக்ஸை 16.25 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இந்த பெரும் தொகையை தக்கவைத்துக் கொண்டு ஏலத்தில் வீரர்களை வாங்க சி.எஸ்.கே. திட்டமிட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் 2023 சீசனில் காயம் காரணமாக இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

    இதைவிட மிகப்பெரிய செய்தி ஒன்று இணைய தளத்தில் உலா வருகிறது. அது ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் திரும்ப இருக்கிறார் என்பதுதான்.

    ஐபிஎல் தொடரில் மேலும் இரண்டு அணிகள் இணைக்கப்பட்டபோது, புதிதாக ஏலம் விடப்பட்டது. அப்போது ஹர்திக் பாண்ட்யா குஜராத் லயன்ஸ் அணிக்கு சென்றார். ஹர்திக் பாணட்யா தலைமையில் குஜராத் அணி 2-வது இடம பிடித்தது.

    இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை மீண்டும் அணியில் இணைக்க விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்குப் பதிலாக ஜாஃப்ரா ஆர்சர் அல்லது ரோகித் சர்மாவை கொடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது வதந்தி செய்தியாக கூட இருக்கலாம்.

    தற்போதைய நிலையில் இரண்டு அணிகளுமே தங்களுடைய தலைசிறந்த கேப்டன்களை வெளியிடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    வருகிற 26-ந்தேதிக்குள் அனைத்து அணிகளும் வீரர்களை பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது. தக்கவைத்துள்ளது என்பது தெரியவரும்.

    Next Story
    ×