search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அணியாக இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என நம்புகிறோம்- ஹர்திக் பாண்ட்யா

    • போல்ட் முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • 20 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது மும்பை அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

    இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியால் 125 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

    அந்த அணிக்கு தொடக்கத்தில் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. போல்ட் வீசிய முதல் ஓவரில் ரோகித் சர்மா, நமன் திர் ரன் ஏதும் எடுக்காமல் தாங்கள் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தனர். அந்த அணி 20 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. அதிலிருந்து மீண்டு வர முடியவில்லை. இதனால் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    பின்னர் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 15.3 ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. அந்த அணியின் ரியான் பராக் சிறப்பாக விளையாடி 39 பந்தில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி தான் விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. மேலும் சொந்த மைதானத்தில் தோல்வியை தழுவியுள்ளது.

    இந்த தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் ஆர்சிவி-க்கு அடுத்தப்படியாக சொந்த மைதானத்தில் தோல்வியை சந்தித்த அணியாக மும்பை திகழ்கிறது.

    இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது-

    ஆமாம்... இன்றைய இரவு மிகவும் கடினமானது. நாங்கள் தொடங்க விரும்பியது போல் எங்களுக்கு தொடக்கம் அமையவில்லை. நான் அடித்து விளையாட விரும்பினேன். 150 முதல் 160 ரன்கள் வரை நாங்கள் எடுத்திருந்தால் அது ஒரு நல்ல நிலையாக இருந்திருக்கும்.

    ஆனால் என்னுடைய விக்கெட் அவர்களை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு சேர்த்துவிட்டது. நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக முயற்சி எடுத்து இருக்க வேண்டும். நாங்கள் இதுபோன்று ஆடுகளத்தை எதிர்பார்க்கவில்லை ஆடுகளம் எப்போதும் ஒரு பேட்ஸ்மேனுக்கே சாதகமாக இருக்கும் என கூற முடியாது. இந்த ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு நல்ல வகையில் அமைந்தது.

    எல்லா விஷயங்களையும் சரியாக செய்யக்கூடியது பற்றியது இது. சில நேரங்களில் அதற்கான முடிவுகள் கிடைக்கும். சில நேரங்களில் கிடைக்காமல் இருக்கும். ஒரு அணியாக இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என நாங்கள் நம்புகிறோம். ஆனால் இன்னும் கொஞ்சம் அதிகமான வகையில் சிறப்பாக விளையாடுதல் மற்றும் அதிகமான தைரியத்தை வெளிப்படுத்துவது எங்களுக்கு அவசியம்.

    இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா தெரிவித்தார்.

    வெற்றி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:-

    டாஸ் போட்டியை மாற்றக்கூடியதாக அமைந்தது என்று நான் நினைக்கிறேன். அனுபவம் வாயந்த போல்ட், பர்கர் எங்களுக்கு உதவினார்கள். போல்ட் 10 முதல் 15 வருடங்கள் விளையாடி கொண்டிருக்கிறார். புதுப்பந்தில் என்ன எதிர்பார்க்கிறோம் என்பது அவருக்கும் தெரியும்.

    நாங்கள் 4 அல்லது 5 விக்கெட் விழும் என எதிர்பார்க்கவில்லை. ஆனால், எங்கள் பந்து வீச்சாளர்கள் அதைச் செய்வார்கள் என்பது எங்களுக்கு தெரிந்தது. எங்கள் அணியில் தனிப்பட்ட திறமையான வீரர்கள் உள்ளனர் என்பதை எங்களுக்குத் தெரியும். ஆனால் நாங்கள் தனித்து நிற்கும் இடத்தில் ஒவ்வொருவரும் தங்கள் பங்கை உணர்ந்து, அதைச் செய்து முன்னேறுகிறார்கள்.

    ஆவேஷ் கான் மற்றும் சாஹல் நாங்கள் பவர்பிளேயில் சிறப்பாக செயல்பட்டோம் என்பதை உணர்ந்தார்கள். விக்கெட்டை எதிர்பார்க்காமல் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பந்து வீசினார்கள். சாஹல் இந்த ஐபிஎல் தொடரில் தீயாக பந்து வீசுகிறார் என்று நினைக்கிறேன். கடந்த 2-3 வருடங்களாக எங்களுக்கு சிறப்பான வகையில் விளையாடி வருகிறார்.

    இவ்வாறு சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×