search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    உமேஷ் யாதவ், அஷ்வின் அபார பந்துவீச்சு: 227 ரன்களில் வங்காளதேசத்தை சுருட்டியது இந்தியா

    • வங்காளதேச அணியின் மொமினுல் ஹக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார்.
    • இந்தியா தரப்பில் உமேஷ் யாதவ், அஷ்வின் தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.

    மிர்பூர்:

    இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரை வங்காளதேசம் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் சட்டோ கிராமில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 188 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று காலை மிர்பூரில் தொடங்கியது. காயத்தால் முதல் டெஸ்டில் விளையாடாத இந்திய கேப்டன் ரோகித் சர்மா இந்த டெஸ்டிலும் விளையாடவில்லை. கேப்டன் பொறுப்பை லோகேஷ் ராகுல் ஏற்றார்.

    இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு பதில் ஜெய்தேவ் உனத்கட் இடம் பெற்றார். வங்காளதேச அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டது. யாசிர் அலி, எபடோட் ஹொனசர் ஆகியோருக்கு பதில் மொமினுல் ஹக், தஸ்கின் அகமது சேர்க்கப்பட்டனர்.

    டாஸ் ஜெயித்த வங்காளதேச அணி கேப்டன் ஷகீப்-அல்-ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். வங்காளதேசத்தின் தொடக்க வீரர்களாக ஜாகீர் ஹசன், நஜ்முல் ஹொசைன் களம் இறங்கினர். முதல் ஓவரை முகமது சிராஜ் வீசினார். இதில் 5-வது பந்தில் நஜ்முல் ஹொசைன் பவுண்டரி அடித்தார்.

    தொடக்க ஜோடி நிதானமாக விளையாடியது. இருவரும் விக்கெட்டை பறிகொடுத்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து பொறுமையாக விளையாடினார்கள். இதனால் வங்காளதேச அணியின் ரன் வேகம் மெதுவாக இருந்தது.

    15-வது ஓவரில் வங்காள தேசத்தின் முதல் விக்கெட் விழுந்தது. ஜெய்தேவ் உனத்கட் பந்தில் லோகேஷ் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஜாகீர் ஹசன் 15 ரன் எடுத்தார். அடுத்த ஓவரில் 2-வது விக்கெட் விழுந்தது. அஸ்வின் பந்து வீச்சில் நஜ்முல் ஹொசைன் (24 ரன்) எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.

    அடுத்து வந்த கேப்டன் ஷகீப்-அல்-ஹசன், 16 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், மொமினுல் ஹக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. முஷ்பிகுர் ரகிம் 26 ரன்கள், லித்தன் தாஸ் 25 ரன்கள், மெகிடி ஹசன் 15 ரன்கள், நூருல் ஹசன் 6 ரன்கள் மற்றும் தஸ்கின் அகமது 1 ரனில் ஆட்டமிழந்தனர். மொமினுல் ஹக் 84 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் வங்காளதேச அணி 227 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இந்தியா தரப்பில் உமேஷ் யாதவ், அஷ்வின் தலா 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினர். ஜெய்தேவ் உனத்கட் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, இன்றைய ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் சேர்த்துள்ளது.

    Next Story
    ×