search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்று: இந்தியா-பாகிஸ்தான் நாளை மோதல்
    X

    ரோகித் சர்மா

    ஆசிய கோப்பை கிரிக்கெட் 'சூப்பர் 4' சுற்று: இந்தியா-பாகிஸ்தான் நாளை மோதல்

    • இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கடந்த 28-ம் தேதி மோதி இருந்தன.
    • ஒரு வாரத் துக்குள் இரு அணிகளும் மீண்டும் மோத இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

    துபாய்:

    15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த ஆகஸ்டு 27-ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்கி நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடர் 20 ஓவர் கிரிக்கெட்டாக நடத்தப்பட்டது.

    நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. இதன் முடிவில் 'ஏ' பிரிவில் இருந்து இந்தியா-பாகிஸ்தான், 'பி' பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெற்றன.

    சூப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குள் நுழையும். சூப்பர் 4 சுற்று இன்று தொடங்குகிறது. சார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் இலங்கை தோல்வி அடைந்தது. இதனால் பதிலடி கொடுக்க இலங்கை முயற்சிக்கும். அதே வேளையில் லீக் சுற்றில் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது.

    சூப்பர் 4 சுற்றில் நாளை நடக்கும் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. துபாயில் நடக்கும் இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    ரோகித் சர்மா தலைமை யிலான இந்திய அணி, லீக் சுற்றில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

    இந்திய அணி பேட்டிங்கில் விராட் கோலி, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அசத்தி வருகிறார்.

    கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பந்து வீச்சில் புவனேஸ்வர்குமார், அர்ஷ்தீப்சிங், சஹல், ஆவேஷ்கான் ஆகியோர் உள்ளனர். காயம் காரணமாக விலகியுள்ள ஜடேஜாவுக்கு பதில் அக்சர் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான், பஹர் ஜமான், குஷ்தீல்ஷா, இப்திகார் அகமது ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    பந்து வீச்சில் நசீம்ஷா, ஹரிஸ் ரவுப், ஷதப் கான், முகமது நவாஸ், தகானி ஆகியோர் உள்ளனர். லீக் சுற்றில் தோல்வி அடைந்ததால் அதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் முயற்சிக்கும். இதனால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியா-பாகிஸ்தான் அணி கடந்த 28-ம் தேதி மோதி இருந்தன. ஒரு வாரத் துக்குள் இரு அணிகளும் மீண்டும் மோத இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

    Next Story
    ×