search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    8-வது முறையாக 10 விக்கெட்டுக்கு மேல் எடுத்தார்- கும்ப்ளே சாதனையை அஸ்வின் சமன் செய்தார்
    X

    8-வது முறையாக 10 விக்கெட்டுக்கு மேல் எடுத்தார்- கும்ப்ளே சாதனையை அஸ்வின் சமன் செய்தார்

    • கும்ப்ளே 132 டெஸ்டில் விளையாடி 8 தடவை 10 விக்கெட்டுக்கு மேல் எடுத்தார்.
    • வெஸ்ட் இண்டீஸ் மைதானத்தில் இது 4-வது சிறந்த பந்து வீச்சாகும்.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீரர் அஸ்வினின் பந்து வீச்சு மிகவும் அற்புதமாக இருந்தது. சென்னையை சேர்ந்த 36 வயதான அவர் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் சாய்த்தார். நேற்றும் அஸ்வின் பந்து வீச்சில் அனல் பறந்தது. இதனால் 2-வது இன்னிங்சில் அவர் 7 விக்கெட் வீழ்த்தினார்.

    உலகின் முதல் வரிசை பந்து வீச்சாளரான அஸ்வின் இந்த டெஸ்டில் 12 விக்கெட் (முதல் இன்னிங்சில் 5, 2-வது இன்னிங்சில் 7) கைப்பற்றினார்.

    அஸ்வின் 8-வது முறையாக டெஸ்டில் 10 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார். இதன் மூலம் அவர் கும்ப்ளேயின் சாதனையை சமன் செய்தார். அவர் தனது 93-வது டெஸ்டில் இந்த சாதனையை தொட்டார். கும்ப்ளே 132 டெஸ்டில் விளையாடி 8 தடவை 10 விக்கெட்டுக்கு மேல் எடுத்தார்.

    அதிக முறை 10 விக்கெட் எடுத்த வீரர்களில் கும்ப்ளேவுடன் இணைந்து அஸ்வின் 5-வது இடத்தில் உள்ளார்.

    முரளிதரன் (இலங்கை) 22 முறையும், வார்னே (ஆஸ்திரேலியா) 10 தடவையும், ஹேட்லி (நியூசிலாந்து), ஹெராத் (இலங்கை) தலா 9 முறையும் 10 விக்கெட்டுக்கு மேல் எடுத்து முறையே முதல் 4 இடங்களில் உள்ளனர்.

    அஸ்வின் ஒரு இன்னிங்சில் 34-வது தடவையாக 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்தார். இதன் மூலம் ஹெராத்துடன் அவர் இணைந்தார்.

    முரளிதரன் 67 முறையும், வார்னே 37 தடவையும், ஹேட்லி 36 முறையும், கும்பளே 35 தடவையும் ஒருஇன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றி உள்ளனர். இந்த வரிசையில் அஸ்வின் 5-வது இடத்தில் உள்ளார்.

    மேலும் அஸ்வின் 6-வது தடவையாக இரண்டு இன்னிங்சிலும் 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்தார். முரளிதரன் (11), ஹெராத் (8) ஆகியோருக்கு அடுத்தபடியாக அவர் இருக்கிறார்.

    அஸ்வின் 2-வது இன்னிங்சில் 71 ரன் கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றினார். வெஸ்ட் இண்டீசில் இந்திய வீரர்களின் சிறந்த பந்து வீச்சு இதுவாகும். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு இஷாந்த் சர்மா 83 ரன் கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்து வீச்சாக இருந்தது.

    அஸ்வின் இந்த டெஸ்டில் மொத்தம் 131 ரன் கொடுத்து 12 விக்கெட் வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் மைதானத்தில் இது 4-வது சிறந்த பந்து வீச்சாகும்.

    Next Story
    ×