என் மலர்
சினிமா

நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு
நடிகை கடத்தப்பட்டு ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பெண் நீதிபதியை நியமிக்க கோரிய நடிகை தரப்பின் கோரிக்கையை, கேரள கோர்ட் நிராகரித்தது. #ActressAbductionCase #Dileep
கேரளாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந் தேதி பிரபல நடிகை ஓடும் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். நடிகையை கடத்தி சென்றதாக பல்சர் சுனில் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு எர்ணாகுளம் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று எர்ணாகுளம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது பாதிக்கப்பட்ட நடிகை தரப்பில் இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு கோர்ட்டு அமைத்து பெண் நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.
இதனை எர்ணாகுளம் செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி ஏற்க மறுத்தார்.
இதையடுத்து திலீப் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் நகல்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரினர். இதற்கு எந்தெந்த ஆவணங்கள் தேவை என பட்டியலிட்டு கோர்ட்டில் மனு செய்யும் படியும், அதனை பரிசீலித்து கோர்ட்டு நடவடிக்கை எடுக்கும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இது போல நடிகை கடத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களையும் தர வேண்டும் என்று நடிகர் திலீப் தரப்பில் மனு செய்யப்பட்டது. இதுகுறித்து நீதிபதி கூறும் போது, குற்றம் சாட்டப்பட்டோர் மற்றும் அவர்களின் வக்கீல் கோர்ட்டு அறையில் வீடியோ ஆதாரங்களை பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.
தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். #ActressAbductionCase #Dileep
Next Story






