என் மலர்tooltip icon

    சினிமா

    நவீனத் தளங்களிலும் பழமைவாதிகள் புகுந்து விட்டனர் : கமல்ஹாசன் தாக்கு
    X

    நவீனத் தளங்களிலும் பழமைவாதிகள் புகுந்து விட்டனர் : கமல்ஹாசன் தாக்கு

    நவீனத் தளங்களிலும் பழமைவாதிகள் புகுந்து விட்டனர் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
    தீவிர அரசியலில் ஈடுபட தயாராகி வரும் நடிகர் கமல்ஹாசன், இது தொடர்பாக வார இதழ் ஒன்றில் கட்டுரை எழுதி வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், நடிகர் கமல்ஹாசனிடம் ஒரு கேள்வி கேட்டுள்ளார். தமிழ்நாட்டில் இந்துத்துவ சக்திகள் மெல்ல ஊடுருவி திராவிட பண்பாட்டை பலவீனப்படுத்துவதை பார்க்க முடிகிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று அவர் கேட்டிருந்தார்.

    இதற்கு நடிகர் கமல் ஹாசன் அளித்துள்ள பதில் வருமாறு:-

    என் முயற்சியும் இலக்கும் தாங்கள் அறிந்ததே. தமிழகத்தின் திராவிடப் பாரம்பரியம் சமீப காலத்தையது அல்ல. பல ஆயிரம் ஆண்டுகள் தொட்டுத் தொடர்வது. 1000 வருடங்களுக்கு முன்னால் ராமானுஜரின் சமூகப் புரட்சி ஓர் அடையாளம், ஒரு முக்கியத் தருணம் என்று கூடச் சொல்லலாம்.

    நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் பழைய பதிப்புகளில் ‘திராவிட வேத சாகரம்’ என்றிருக்கும். அரசியலில் திராவிட இயக்கங்கள் வீறுகொண்டு எழுந்த வேளையில் அதை ஒருவேளை பதிப்பகத்தார் நீக்கினார்களோ என்னவோ.

    தாங்கள் குறிப்பிட்டது போல் பெரியாரின் இயக்கம் கேரளத்தில் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே அவருக்கு ஆரம்பக் காலத்தில் கொடுக்கப்பட்ட ‘வைக்கம் வீரர்’ என்ற பட்டம். அப்பெயர் கேரளத்திலும் தமிழகத்திலும் பிரபலம்.

    என்றும் இன்றும் சுபிட்சத்துடன் கூடவே அசட்டுத் துணிச்சலும் வரும் என்பதற்கு அடையாளமே உலகெங்கும் பாசிசத்தின்பால் சிலருக்கு ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பு.

    உலகையே வலக்கைப் பக்கம் திரும்ப வைக்கும் அம்முயற்சி வெல்ல வாய்ப்பில்லை. அவை ஒரு தற்காலிக பே‌ஷன், சிகையலங்காரம் போல ரொம்ப காலம் நீடிக்காது என்பதே என் நம்பிக்கை.

    சமூகம், சமச்சீர் அடைவதில் கலக்கம் கொள்ளும் பழைய தலைமுறையினர் (அதிலும் மேல் சாதியினரில் உள்ள பழந்தலை முறையினர்), இளைய சமுதாயத்தினருள் தங்கள் பழைமைவாதத்தை, சாதிய சனாதனக் கட்டுப்பாடுகளை நவீனத் தேன் தடவித்தர, திணிக்க முயற்சி செய்கின்றனர்.

    நான் நாத்திகன் அல்லன், பகுத்தறிய முற்படுபவன். நாத்திகன் என்ற பெயர்க் குறிப்பு ஆத்திகர்கள் செய்தது. அவர்கள் எனக்கு நாமகரணம் செய்வதை நான் விரும்பவில்லை. நாத்திகன், பகுத்தறிவு இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்று வாதம் செய்பவர்கள் இவ்விரண்டு நிலைகளையும் பகுத்தறியாத ஒரு பக்கவாதக்காரர்கள். இருவேறு கருத்துக்களை ஆராய்ந்து நிஜத்தை நெருங்க ஆவலுற்றிருப்பவரே பகுத்தறிவோர். அவர்களின் எண்ணிக்கை தானாகவே கூடிவிடும்.

    விஞ்ஞானமும் ஞானமும், முன்னேற்றத்தின்பால் மனித குலத்திற்கே உள்ள ஈர்ப்பும், பகுத்தறிவாதிகளின் எண்ணிக்கையை எதிர்ப்பாளர்களையும், மீறிக் கூட்டியே தீரும். இந்த உலக நியதி தன்னிச்சையாய் செயல்படக் காத்திராமல் தமிழகத்தைப் பாதுகாக்கும் பணியில் இளைஞர் சமுதாயம் இறங்கி விட்டது.

    பழையன கழியும், புதியன புகும். பழைய கலாசாரத்தில் போற்றப்பட வேண்டிய மேற்கோள்களைக் காட்டாமல் அவற்றை மறைத்தும், மறந்தும் செயல்படுகின்றனர், பழைமை விரும்பிகள். விவசாயத்தை அழித்து நிலத்தடி வாயுக்களை வர்த்தகம் செய்ய முயற்சி செய்வதும் புராணக் கதைகளைச் சரித்திரமாக்க முயற்சி செய்வதும் இவர்கள் காலகாலமாக செய்யும் அயராத்தீய பணிகள்.

    முன்பெல்லாம் அமைதியாக நடந்த பல பண்டிகைகளில் ஆர்ப்பாட்டம் அதிகமாகி, பக்தியையும் தாண்டிய வர்த்தகமாக அவை மாறி வருகின்றன. இதைத் தமிழக மக்கள் பல ஆண்டுகளாக கவனித்து வருகிறார்கள்.

    ஒரு தலைமுறையே சாதிய வித்தியாசங்கள் தெரியாமல் வளர்ந்து வரும் வேளையில் இத்தலை முறையினர் உலவும் நவீனத்தளங்களிலும் பழைமைவாதிகள் புகுந்து சாதி வித்தியாசங்களைப் போதிக்க தொடங்கி விட்டார்கள். அதன் பிரதிபலிப்பாக இணைய தளத்தில் சினிமாக் கலைஞர்களை சாதி வாரியாக பிரித்துப் பட்டியலிடும் வேலைகள் பகிரங்கமாக நடக்கின்றன.

    முன்பெல்லாம் இத்தகைய இந்து வலது சாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் தாங்கள் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர். ஆனால் இந்தப் பழைய சூழ்ச்சி தோற்க ஆரம்பித்ததும், யுக்தியால் முடியாததை சக்தியால் செய்யத் தொடங்கி விட்டனர்.

    அவர்களும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர். ‘எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள்?’ என்ற சவால் இனி அவர்கள் விட முடியாது. அந்த அளவுக்கு அவர் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவியிருக்கிறது.

    இந்தத் தீவிரவாதம் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு எவ்விதத்திலும் வெற்றியோ முன்னேற்றமோ அல்ல. வாய்மை வெல்லும் என்ற நம்பிக்கை போய், வலிமை வெல்லும் என்ற ஒரு நமபிக்கை நம் அனைவரையும் காட்டுமிராண்டிகளாக்கி விடும்.

    மாறாது நடப்பது மாற்றம் மட்டுமே. எத்தனை பேர் முயன்று அதைப் பின்னோக்கித் தள்ளினாலும், சுழலும் இவ்வுலகின் ஈர்ப்பு அதை முன்னோக்கித் தள்ளி விடும். மீண்டும் தமிழகம் சமூகத் சீர்திருத்தத்திற்கு முன்னுதாரணமாகும் நாள் வெகுதொலைவில் இல்லை.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
    Next Story
    ×