என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆசிய கோப்பையில் சுப்மன் கில், ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்குமா? -  வெளியான தகவல்
    X

    ஆசிய கோப்பையில் சுப்மன் கில், ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்குமா? - வெளியான தகவல்

    • 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி தொடங்குகிறது.
    • இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

    இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந் தேதி துபாயிலும், ஓமனை செப்டம்பர் 19 ஆம் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28-ந் தேதி துபாயில் அரங்கேறுகிறது.

    அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்யும் வீரர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஆகியோர் 20 ஓவர் அணியில் இடம்பெற வாய்ப்பு இல்லை. இதேபோல சாய் சுதர்சனுக்கும் வாய்ப்பு குறைவு. அதே சமயம் டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில்லுக்கு டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் 20 ஓவர் போட்டியில் சிறப்பாக ஆடி வருகிறார்கள். முதல் 5 வரிசையில் இருக்கும் இவர்களை மாற்ற கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கே.எல்.ராகுலுக்கு 20 ஓவர் அணியில் இடம் கிடைக்காது என்றே கருதப்படுகிறது. ஜெய்ஸ்வால் கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டி யில் ஆடினார். கே.எல்.ராகுல் கடைசியாக 2022-ம் ஆண்டு நவம்பரில் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் ஆடினார். இந்த இருவரும் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடக்க வரிசையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரித் பும்ரா ஆசிய கோப்பையில் ஆடமாட்டார் என்று முதலில் தகவல் வெளியானது. தற்போது அவர் இந்த போட்டியில் விளையாடலாம் என்று கூறப்படுகிறது. அவர் அணியில் தேர்வானால் துணை கேப்டன் பதவி வழங்கப்படும். தற்போது அக்ஷர் படேல் 20 ஓவர் அணிக்கு துணை கேப்டனாக உள்ளார்.

    ஆசிய கோப்பை போட் டிக்கான இந்திய அணியில் இடம்பெறலாம் என்று எதிர் பார்க்கப்படும் வீரர்கள் விவரம்:-

    சூர்யகுமார் யாதவ் (கேப் டன்), சுப்மன் கில், அபி ஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்சித் ராணா அல்லது பிரசித் கிருஷ்ணா, ஜிதேஷ் சர்மா அல்லது துருவ் ஜூரல்.

    இந்திய அணி கடைசி யாக கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் ஆடியது. 5 போட்டிக்கொண்ட தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

    Next Story
    ×