என் மலர்
சினிமா செய்திகள்

தமிழிலிருந்து தான் கன்னடம் தோன்றியது என்ற கருத்தை அவர்களால் ஏற்க முடியவில்லை- திருமாவளவன்
- திருக்குறள் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.
பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை 'காமராஜ்' என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை " Welcome Back Gandhi " என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த 'ரமணா கம்யூனிகேஷன்ஸ்' நிறுவனம், தற்போது திருக்குறளை வைத்து மிகப் பிரம்மாண்டமாகத் 'திருக்குறள்' என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தை இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
இம்மாதம் 27 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
எனக்கு முன்னர் பேசிய அனைவரும் திருக்குறளை பற்றியும், திருவள்ளுவரை பற்றியும் மிக ஆழமாக நுட்பமாக பல்வேறு கருத்துக்களை நம் முன்னால் எடுத்து வைத்திருக்கிறார்கள்.
இயக்குநர் அவர்கள் ஏற்கனவே இரண்டு படங்களை தயாரித்து, இயக்கி வெளியிட்டிருக்கிறார். ஒரு படத்தின் பெயர் காமராஜ், இன்னொரு படத்தின் பெயர் வெல்கம் பேக் காந்தி, என்று இரண்டு மாமனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தயாரித்த பெருமைக்குரியவர்.
இந்த திரைப்படத்திற்கு ஒரு மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து பெயர் சூட்டி இருக்கிறார். காமராஜ், காந்தி என்று பெயர் வைத்தவர், இந்த திரைப்படத்திற்கு திருவள்ளுவர் என்று பெயர் வைத்திருக்கலாம். ஏன் அப்படி வைக்கவில்லை என்று நான் யோசித்துப் பார்த்தேன். இதற்கு திருக்குறள் என்று அவர் பெயர் சூட்டி இருக்கிறார்.
கருத்தியலுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்கிற பார்வை அவரிடத்தில் மேலோங்கி இருப்பதாக நான் பார்க்கிறேன்.
திருவள்ளுவரை விடவும் அவர் முன்வைத்த வாழ்வியல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவே, திருக்குறள் என்றே இதற்கு பெயர் வைப்போம் என அவர் முடிவெடுத்திருக்கலாம் என்று நான் நம்புகிறேன்.
இந்த பார்வை பாராட்டுதலுக்குரியது. இந்த சிந்தனை போற்றுதலுக்குரியது. தனி நபரை முன்னிறுத்துவதை விட, அவர் சொன்ன கருத்தியலை, முன்னிறுத்த வேண்டும், உயர்த்தி பிடிக்க வேண்டும், வெகு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும், என்கிற பார்வை முக்கியம்.
நம் சமகாலத்தில் வாழ்ந்து, மக்களுக்கு தொண்டாற்றி பெரும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஆளுமைகள், பெருந்தலைவர் காமராஜர் மகாத்மா காந்தியடிகள். ஆகவே அவர்களை முன்னிறுத்துவது, இன்றைக்கும் தேவையானதாக இருக்கிறது.
இன்றைக்கு கமல்ஹாசன் அவர்கள் பேசிய ஒரு பேச்சுக்கு பெரிய எதிர்ப்பு கர்நாடகாவிலே அவருடைய திரைப்படத்தையே திரையரங்குகளில் ஓட்ட விட மாட்டோம் என்றெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
தமிழிலிருந்து தான் கன்னடம் தோன்றியது என்ற கருத்தை அவர்களால் ஏற்க முடியவில்லை. ஆனால் 1800 12ல் எல்லிஸ் அவர்களும் 1852லே ஹென்ரி ஹயசிங்டன் என்பவரும், அவர்கள் எல்லாம் பிரிட்டிஷ் குடிமக்கள் ஆங்கிலேயர்கள் அவர்கள் தமிழை கற்று, தமிழை ஆய்ந்து, தமிழ் அறிஞர்களோடு உரையாடி அவர்கள் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துலு போன்ற மொழிகளை எல்லாம் ஒப்பீடு செய்து அதன் அடிப்படையில் அவர்கள் முன்வைத்த கருத்து இந்த மொழிகளுக்கெல்லாம் மூலமொழி தமிழ் என்ற கருத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
கணினிக்கு ஏற்ப தமிழ் தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கான செறிவை பெற்றிருப்பதால் செம்மை அடைந்திருப்பதால் அது செம்மொழி.
இவ்வாறு அவர் கூறினார்.






