என் மலர்
சினிமா செய்திகள்

மோகன் ஜியால் தெறி ரீ-ரிலீசும் தள்ளிப்போகிறது? - விஜய் ரசிகர்களுக்கு சோதனை மேல் சோதனை
- திரௌபதி 2 வெளியாகும் அதே நாளில் மங்காத்தா, தெறி ஆகிய 2 படங்கள் ரீ- ரிலீஸ் ஆகவுள்ளது
- தெறி படத்தின் தயாரிப்பாளரிடம் மட்டும் மோகன் ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியான படம் 'தெறி'. அட்லி இயக்கத்தில் உருவான இப்படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படம் இந்தியிலும் வருண் தவான் நடிப்பில் பேபி ஜான் என்ற பெயரில் கடந்த வருடம் ரிலீஸ் ஆனது.
இந்த நிலையில், தமிழில் தெறி படம் பொங்கலை ஒட்டி ஜனவரி 15 அன்று ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக தயாரிப்பாளர் தாணு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தார்.
ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படதிற்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டதால் அப்படம் குறித்தபடி ஜனவரி 9 வெளியாகாதது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.
எனவே தெறி படம் பொங்கலை ஒட்டி ரீரிலீஸ் ஆவது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த சூழலில் தயாரிப்பாளர் தாணு வெளியிட்ட எக்ஸ் பதிவில், "வரவிருக்கும் படங்களின் தயாரிப்பாளர்களின் கோரிக்கைக்கு இணங்க , 'தெறி' படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்." என்று அறிவித்தார்.
இந்நிலையில், தெறி படம் வரும் 23ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு அறிவித்தார். தற்போது தெறி ரீ-ரிலீஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், தெறி படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைக்கவேண்டும் என்று கலைப்புலி எஸ். தாணுவிற்கு திரௌபதி 2 பட இயக்குநர் மோகன் ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "கலைப்புலி எஸ். தாணு சார், எங்களைப் போன்ற வளர்ந்து வரும் குழுவினர்களுக்கு ஆதரவளித்து, வரும் ஜனவரி 23ஆம் தேதி வெளியாகவிருக்கும் 'தெறி' திரைப்படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் புதிய தயாரிப்பாளர்களுக்கும் வளர்ந்து வரும் இயக்குநர்களுக்கும் நிறைய நன்மைகளைச் செய்துள்ளீர்கள். எனவே, எங்கள் திரௌபதி 2 திரைப்படம் முக்கிய திரையரங்குகளில் வெளியாக ஆதரவளித்து, ஒரு பிரம்மாண்டமான வெளியீட்டிற்கு எங்களுக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பகிர்ந்த கலைப்புலி எஸ். தாணு, "புதிய இயக்குனர்கள், நல்ல படைப்புகள் மற்றும் வளரும் தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதே V Creations நிறுவனத்தின் தலையாய பொறுப்பு. அந்த நோக்கத்தை முன்னிட்டு "தெறி" திரைப்படத்தின் வெளியீட்டின் முடிவு நாளை அறிவிக்கப்படும். நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
திரௌபதி 2 வெளியாகும் அதே நாளில் மங்காத்தா, தெறி ஆகிய 2 படங்கள் ரீ- ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், தெறி படத்தின் தயாரிப்பாளரிடம் மட்டும் மோகன் ஜி கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் ஜன நாயகன் ரிலீசாகாத விரக்தியால் இருக்கும் விஜய் ரசிகர்கள் தெறி படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைக்கப்படலாம் என்ற தகவலை கேட்டு கடுப்பாகியுள்ளனர்.






