விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமண வரவேற்பில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி?

இருவீட்டார் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமண வரவேற்பு ஐதராபாத்தில் மார்ச் 4-ந்தேதி நடைபெறுகிறது.
விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமண வரவேற்பில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி?
Published on

நடிகை ராஷ்மிகா தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர். கீதா கோவிந்தம், புஷ்பா ஆகிய படங்களில் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர். தமிழில் விஜய்யுடன் வாரிசு படத்திலும், கார்த்தியுடன் சுல்தான் படத்திலும் நடித்தார். ராஷ்மிகாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது முதலே அவர்கள் இருவரும் காதல் வயப்பட்டனர்.

இருவரும் வெளிப்படையாக தங்களது காதலை அறிவிக்காதபோதும், பல நிகழ்ச்சிகளில் ஒன்றாகவே கலந்து கொண்டனர். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அவ்வப்போது செய்திகள் வந்தாலும், வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை.

இந்த நிலையில் மிக சமீபத்தில் அவர்களது திருமணம் பற்றிய தகவல் வெளிவந்தது. விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், இருவரது திருமணம் நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் அரண்மனை அருகேயுள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது.

இதில் இருவீட்டார் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். சரியாக நேற்று காலை 10.10 மணிக்கு இந்த திருமணம் நடந்தது. முதலில் விஜய் தேவரகொண்டா குடும்பத்து வழக்கப்படி தெலுங்கு பாரம்பரிய முறையிலும், அதனைத்தொடர்ந்து ராஷ்மிகா குடும்ப வழக்கப்படி கொடவா பாரம்பரிய முறையிலும் திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பிறகு விஜய் தேவரகொண்டாவின் தாய் மாதவி, தங்களின் பாரம்பரியப்படி மருமகள் ராஷ்மிகாவுக்கு பரம்பரை வளையல்களை பரிசாக வழங்கியுள்ளாராம்.

விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமண வரவேற்பு ஐதராபாத்தில் மார்ச் 4-ந்தேதி நடைபெறுகிறது. இதில் சினிமா, அரசியல் பிரபலங்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா தம்பதிக்கு திரையுலகினரும். ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே வருகிற 4-ந்தேதி நடைபெற உள்ள திருமண வரவேற்பில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர்.

திருமணத்திற்கு முன்பே டெல்லியில் பிரதமர் மோடியை அவரது அலுவலகத்திற்கு சென்ற இருவரும் சிறிது நேரம் உரையாடி புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

இதன்பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து திருமண வரவேற்பு அழைப்பிதழை வழங்கினர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எனவே மார்ச் 4இல் இவர்களது திருமண வரவேற்பில் பிரதமர் மோடி அல்லது அமித் ஷா கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com