என் மலர்
சினிமா செய்திகள்

காதல் கதை சொல்லவா- திரைவிமர்சனம்
படத்தில் நடிகராகவே வரும் விஜய்சேதுபதி தான் நடிக்கும் காதல் கதை செல்லவா என்கிற படத்தின் பர்ஸ்ட் லுக் ஒன்றை வெளியிடுகிறார். அந்த படத்தின் கதையை மக்களிடமே கேட்க நினைக்கும் விஜய் சேதுபதி, ரேடியோ எப்.எம் மூலம் பொது மக்களிடம் காதல் கதைகளை கேட்கிறார்.
அப்படி விஜய்சேதுபதிக்கு இரண்டு பெண்கள் போன் செய்கிறார்கள். அதில் ஒருவர் நிகிதா. வங்கியில் வேலை செய்கிறார். அதே வங்கியில் செக்யூரிட்டியாக வேலைசெய்கிறார் ஜெய்ராம். இவர்களுடைய காதல் கதையை சொல்கிறார்.
விஜய்சேதுபதியிடம் பேசும் மற்றொரு பெண், நகுலிடம் தனக்கு ஏற்பட்ட பழக்கத்தை பற்றி கூறுகிறார். இவர்களுக்கு சில ஆலோசனைகளையும் விஜய்சேதுபதி கூறுகிறார்.
கடைசியில், இருவர் வாழ்க்கையிலும் என்ன ஆனது? விஜய்சேதுபதி கதையை தேர்ந்தெடுத்தாரா? என்பது படத்தின் மீதிக்கதை..
நடிகர்கள்
விஜய் சேதுபதி வழக்கம் போல தனது எதார்த்தமான நடிப்பால் முத்திரை பதிக்கிறார். அதிக ஆர்ப்பாட்டம் இல்லாத வசன உச்சரிப்பும், கண்கள் வழியே கடத்தும் உணர்வுகளும் படத்திற்குப் பலம்.
ஜெயராம், தனது பரந்த அனுபவம் மற்றும் கலைஞரான திறமையால் இந்த காதல் கதையின் உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார்.
துடிப்பான இளைஞராகவும், அதே சமயம் காதலில் உருகும் காதலனாகவும் நகுல் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். படத்தின் நாயகிகள் கதையின் காதல் கோணத்தை மிக நுட்பமாக வெளிப்படுத்துகின்றனர்.
இயக்கம்
ஒரு மென்மையான, அழகான காதல் கவிதையை இயக்க முயற்சியிருக்கிறார் இயக்குனர் சனில் களத்தில். கதைக்களம் நன்றாக இருந்தாலும், சில இடங்கள் நாம் ஏற்கனவே பார்த்த பழைய காதல் படங்களை நினைவுபடுத்துகின்றன. படத்தின் வேகம் சில இடங்களில் தொய்வடைகிறது. இரண்டாம் பாதியில் வரும் சில காட்சிகள் சற்று இழுவையாகத் தோன்றுகிறது.
இசை
படத்தின் பாடல்கள் மெலடி ரகமாக அமைந்துள்ளன. காதலைச் சொல்லும் காட்சிகளுக்குப் பின்னணி இசை கூடுதல் பலம்.
ஒளிப்பதிவு
காதலின் ஆழத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஒளிப்பதிவு அமைந்துள்ளது.
ரேட்டிங்- 2.5/5






