என் மலர்
சினிமா செய்திகள்

அந்த அளவுக்கு மோசமில்லை! - கூலி படம் குறித்து பேசிய அஷ்வின்
- கூலி படம் முதல் 4 நாட்களில் உலகளவின் மொத்தம் ரூ.404 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்தது.
- எதிர்மறை விமர்சனங்களால் கூலி படத்தின் வசூல் வெகுவாக குறைந்தது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் முதல் 4 நாட்களில் உலகளவின் மொத்தம் ரூ.404 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்தது. தமிழ் சினிமாவில் ரூ.1000 கோடி வசூலை குவித்த முதல் படம் என்ற சாதனையை கூலி படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்மறை விமர்சனங்களால் இப்படத்தின் வசூல் வெகுவாக குறைந்தது. மொத்தத்தில் இப்படம் உலக அளவில் 518 கோடி ரூபாய் தான் வசூல் செய்தது. ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.500 கோடி வசூலை மட்டுமே குவித்து ஏமாற்றம் தந்தது.
இந்நிலையில், கூலி படம் நன்றாக தான் இருந்தது என்று சமீபத்திய பேட்டியில் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்தார்.
அந்த நேர்காணலில் பேசிய அஸ்வின், "கூலி படம் நன்றாக இல்லை என்ற கருத்து அதிகப்படியாக வந்தது. அந்தப் படம் ஓடிடியில் வந்த பின்பு நான் பார்த்தேன். என்னை பொறுத்தவரை ஒரு படத்தை முழுவதுமாக ஒரே அமர்வில் பார்க்க முடிகிறதா என பார்ப்பேன். என்னால் 'கூலி' படத்தை ஒரே அமர்வில் பார்க்க முடிந்தது.
அதனை பார்த்து முடித்த பின் ஒரே ஒரு கேள்வி தான் என்னை நானே கேட்டுக் கொண்டேன். 'இணையத்தில் வரும் விஷயங்களை அப்படியே ஏற்றுக் கொள்ள பழகிவிட்டேனா?'. ஒரு விமர்சகராக அந்தப் படத்தில் 10 குறைகள் கூட கண்டுபிடிக்கலாம். ஆனால் இவர்கள் சொன்ன அளவு அந்தப் படம் மோசமில்லை" என்று தெரிவித்தார்.






