என் மலர்
சினிமா செய்திகள்

'ரவுடித்தனம், குண்டர் கலாச்சாரம்' - தனிநபர் தாக்குதல்களை தொடுக்கும் விஜய் ரசிகர்களை கடுமையாக விமர்சித்த சுதா கொங்கரா!
- அண்ணா (விஜய்) ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு, 'மன்னிப்புச் சான்றிதழ்' வாங்கு
- ஒரு படத்தின் வெற்றிக்காக மற்றொன்றின் தோல்வியை விரும்புவது சினிமாத்துறைக்கு ஆரோக்கியமானதல்ல
விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சனையால் திட்டமிட்டப்படி வெளியாகாத நிலையில், அந்த கோபத்தை விஜய் ரசிகர்கள் பராசக்தி மீது காட்டுவதாக இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.
பராசக்தி படம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், அடையாளம் தெரியாத சமூக வலைதள கணக்குகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, படத்தைப் பற்றித் தவறான கருத்துகளைப் பரப்புவதும், தனிநபர் தாக்குதல் நடத்துவதும் மிக மோசமான செயல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளப்பக்கம் ஒன்றின் பெயரை குறிப்பிட்டு பேசிய அவர், அடையாளம் தெரியாத கணக்குகளுக்கு பின்னால் ஒளிந்துகொண்டு, மிக மோசமான வகையிலான அவதூறுகளும், தனிநபர் தாக்குதல்களும் நடக்கின்றன. நாம் அதை எதிர்கொள்ள வேண்டும். அது எங்கிருந்து வருகிறது என்று உங்களுக்கே தெரியும்.
"Blasting Tamil Cinema" என்ற எக்ஸ் பக்கத்தில் நான் பார்த்த ஒரு விஷயத்தை வாசிக்கிறேன். "தணிக்கை குழுவிடம் சான்றிதழ் வாங்குவது பெரிய விஷயம் இல்லை.. அண்ணா (விஜய்) ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு, 'மன்னிப்புச் சான்றிதழ்' வாங்கு.. இன்னும் ஒரு வாரம் இருக்கிறது, அவர்கள் மன்னித்துவிட்டால் #பராசக்தி திரைப்படம் ஓடும்." எனக் குறிப்பிட்டுள்ளனர் என அந்தப் பதிவை வாசித்தார்.
மேலும் தனது படம் வெளியாகிவிடக்கூடாது என்பதற்காகச் சிலர் செய்யும் இத்தகைய செயல்களை "ரவுடித்தனம் மற்றும் குண்டர் கலாச்சாரம்" என்றும் சுதா கொங்கரா கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் ஒரு படத்தின் வெற்றிக்காக மற்றொன்றின் தோல்வியை விரும்புவது சினிமாத்துறைக்கு ஆரோக்கியமானதல்ல என்றும், ஆரோக்கியமான போட்டியை ரசிகர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.






