என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    காந்தி டாக்ஸ்- திரைவிமர்சனம்
    X

    காந்தி டாக்ஸ்- திரைவிமர்சனம்

    ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை படத்தின் உயிர்.

    மும்பையில் ஒரு சாதாரண மனிதனாக விஜய் சேதுபதி வாழ்ந்து வருகிறார். வாழ்க்கையில் தொடர்ந்து சந்திக்கும் இழப்புகள், பண நெருக்கடி, மன அழுத்தம் ஆகியவற்றுக்கு நடுவே அவர் பயணம் தொடங்குகிறது. மறுபக்கம் பெரும் பணக்காரரான அரவிந்த் சாமி, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு தனது சொத்துக்களை இழக்கிறார்.

    இருவரும் ஒரு கட்டத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். அதன்பின் இவர்கள் வாழ்க்கை என்ன ஆனது? இவர்களின் நிலைமைக்கு என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் விஜய் சேதுபதி பார்வை, உடல் மொழி, முகபாவனை மூலம் கவர்ந்து இருக்கிறார். எந்த டயலாக் இல்லாமலும் ஒரு மனிதனின் வலி, கோபம், குழப்பம், அமைதி ஆகிய அனைத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இப்படத்தில் அவரது நடிப்பு தான் முக்கிய பலம்.

    அரவிந்த் சுவாமி, குறைந்த காட்சிகளில் வந்தாலும் கதைக்கு தேவையான அழுத்தத்தை கொடுக்கிறார். அதிதி ராவ், உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் அமைதியான நடிப்பை கொடுத்துள்ளார். அனைவருமே வசனம் இல்லாத இந்த உலகத்துக்குள் நன்றாக பொருந்தி நடித்துள்ளனர்.

    காந்தி டாக்ஸ் வழக்கமான வணிகப்படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமான முயற்சி. வசனமே இல்லாமல், காட்சிகள், முகபாவனைகள், இசை மூலமாக மட்டுமே கதை சொல்லப்பட்டிருக்கிறது.

    இயக்கம்

    இயக்குனர் கிஷோர் பாண்டுரங்கா பெலேக்கர், ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கை போராட்டத்தை மிக அமைதியாக சொல்ல முயற்சி செய்துள்ளார். சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும், படம் தன் பாதையை விட்டு விலகவில்லை.

    எல்லாவற்றையும் பார்வையாளரே உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையோடு படம் நகர்கிறது. காந்தி டாக்ஸ் எல்லோருக்குமான படம் அல்ல. வசனம், மாஸ் காட்சிகள், வேகமான திரைக்கதை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இது சவாலாக இருக்கலாம். ஆனால் வித்தியாசமான முயற்சி, நடிப்பை ரசிக்கும் பார்வையாளர்களுக்கு இது ஒரு புதிய அனுபவம்.

    இசை

    ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை படத்தின் உயிர். இவர் இசை இல்லாமல் இந்த படம் முழுமை பெறாது. ஒவ்வொரு காட்சிக்கும் தேவையான உணர்வை இசை மூலம் கொண்டு வந்துள்ளார்.

    ஒளிப்பதிவு

    கரண் பி.ராவத்தின் ஒளிப்பதிவு படத்தின் மனநிலையை அழகாக பதிவு செய்துள்ளது.

    ரேட்டிங்-3/5

    Next Story
    ×