என் மலர்
சினிமா செய்திகள்

பிரபல சீரியல் நடிகை ராஜேஸ்வரி தற்கொலை
சென்னை முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. 39 வயதான இவர் தொலைக்காட்சிகளில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகி வரும் தொடர் ஒன்றிலும் இவர் நடித்துள்ளார். சைதாப்பேட்டையைச் சேர்ந்த இவர் திருமணமாகி முத்தியால் பேட்டையில் வசித்து வந்தார்.
ராஜேஸ்வரிக்கும் அவரது கணவருக்கும் இடையே நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்து உள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பும் இதுபோன்று கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதால் ராஜேஸ்வரி கோபித்துக் கொண்டு சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
அங்கிருந்தபடியே அவர் டிவி தொடர்களில் நடிப்பதற்கான படப்பிடிப்புகளுக்கு சென்று வந்தார். கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்த ராஜேஸ்வரி தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு ராஜேஸ்வரி சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்தபோது அதிக அளவில் மாத்திரைகளை சாப்பிட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் ராஜேஸ்வரியின் உயிரை காப்பாற்றுவதற்காக தீவிர சிகிச்சை மேற்கொண்டனர்.
இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் சைதாப்பேட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டிவி நடிகை ராஜேஸ்வரி உயிரிழந்தது தொடர்பாக அவரது உறவினர்களிடமும், மற்ற தொலைக்காட்சி நடிகைகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி தற்கொலை செய்ததாக கூறப்படும் நிலையில் அது தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
இந்த விசாரணை முடிவில்தான் நடிகை ராஜேஸ்வரி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றிய முழு விவரங்களும் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






