என் மலர்
சினிமா செய்திகள்

23 காட்சிகள் நீக்கம்? மறுசீராய்வுக் குழுவை அணுகிய சுதா கொங்கரா... தள்ளிப்போகும் பராசக்தி ரிலீஸ்?
- இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தொடர்பான காட்சிகளை நீக்க பரிந்துரை
- திருத்தங்கள் படத்தின் கதை ஓட்டத்தை வெகுவாகப் பாதிக்கும்
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'பராசக்தி'. சிவகார்த்திகேயனின் 25வது படமான இதில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.10 வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஆனால் தற்போது வரை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் குறித்தநேரத்தில் படம் நாளை மறுநாள் வெளியாகுமா? என குழப்பம் நிலவியுள்ளது. இந்நிலையில் படத்தில் இருந்து 23 காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் (CBFC) பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக, இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தொடர்பான சில காட்சிகளுக்கு வாரியம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும், அவற்றை நீக்க அல்லது மாற்றியமைக்கப் பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து இந்தத் திருத்தங்கள் படத்தின் கதை ஓட்டத்தை வெகுவாகப் பாதிக்கும் என்றும், அதன் வரலாற்றுத் தன்மை வலுவிழந்துவிடும் என்றும் கூறி இயக்குநர் சுதா கொங்கரா, மும்பையிலுள்ள தணிக்கை வாரியத்தின் மறுசீராய்வுக் குழுவை (Revising Committee) அணுகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தற்போது வரை, படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுமா என்பது குறித்து இன்னும் எந்தத் தெளிவான தகவலும் வெளியாகவில்லை.
தணிக்கை சான்றிதழ் இழுபறியால் ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






