என் மலர்
சினிமா

96, நோட்டா ரிலீசால் போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை - தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்
விஜய்சேதுபதியின் ‘96’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’ படங்கள் ரிலீசால் மற்ற படங்களுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #96TheMovie #NOTA
தமிழ் திரையுலகில் புதிய படங்களை திரையிடுவதில் ஒழுங்கற்ற நிலை இருந்தது. பெரிய படங்கள் தியேட்டர்களை ஆக்கிரமித்ததால் சிறு பட்ஜெட் படங்களை வெளியிடுவதில் சிரமங்கள் இருந்தன. அந்த படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் மாதக்கணக்கில் முடங்கின. இந்த குளறுபடிகளை தீர்க்க தயாரிப்பாளர்கள் சங்கம் படங்களை வெளியிடுவதில் புதிய வரைமுறைகளை வகுத்தது.
ஒவ்வொரு படத்துக்கும் சங்கமே தேதிகளை வெளியிட்டு ஒதுக்கி கொடுத்தது. இதன்படி வாரத்துக்கு 2, 3 படங்கள் திரைக்கு வந்தன. பெரிய நடிகர்கள் படங்களை வாரத்தின் முதல் இரண்டு வாரத்திலும், கடைசி வாரத்திலும் திரையிட தேதிகள் ஒதுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளதால் அந்த படங்களை வெளியிடுவதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசித்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்த வாரம் 5-ந் தேதி உதயா நடித்துள்ள உத்தரவு மகாராஜா, சமுத்திரக்கனியின் ஆண்தேவதை, ஜெய் நடித்துள்ள ஜருகண்டி, விஷ்ணு விஷாலின் ராட்சசன், விவேக்கின் எழுமின் ஆகிய 5 படங்களையும் திரைக்கு கொண்டுவர அனுமதி வழங்கி அவற்றுக்கு தியேட்டர்களும் ஒதுக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் விஜய்சேதுபதி-திரிஷா நடித்துள்ள ‘96’, விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘நோட்டா’ ஆகிய படங்களும் 5-ந் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டும் பெரிய படங்கள் என்பதால் மற்ற 5 படங்களுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்காமல் அவற்றை தள்ளிவைக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன. இந்த படங்களின் தயாரிப்பாளர்கள் சங்கத்தில், புகார் அளித்தனர்.
இதற்கிடையே விவேக்கின் எழுமின் படம் அக்டோபர் 18-ஆம் தேதிக்கும், உதயாவின் உத்தரவு மகாராஜா படம் அக்டோபர் 26-ஆம் தேதிக்கும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. #96TheMovie #NOTA #ProducersCouncil
Next Story






