என் மலர்
சினிமா

சஞ்சய் தத் வாழ்க்கை படத்துக்கு தணிக்கைகுழு அனுமதி
ராஜ்குமார் இரானி இயக்கத்தில் ரன்பீர் கபூல் நடிப்பில் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் ‘சஞ்சு’ படத்திற்கு தணிக்கை குழு அனுமதி வழங்கியது. #Sanju #RanbirKapoor
பிரபல நடிகர் சஞ்சய் தத் வாழ்க்கை கதை இந்தியில் படமாகி உள்ளது. அவரது சிறுவயது சம்பவங்கள், சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்தது, மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறை தண்டனை அனுபவித்தது உள்ளிட்ட விஷயங்களை இதில் காட்சிப்படுத்தி உள்ளனர்.
ராஜ்குமார் இரானி ‘சஞ்சு’ என்று பெயரிட்டுள்ள இந்த படத்தில் சஞ்சய் தத் வேடத்தில் ரன்பீர் கபூரும், அவரது தாய் நர்கீஸ் வேடத்தில் மனிஷா கொய்ராலாவும் நடித்துள்ளனர். படம் திரைக்கு வர தயாராக உள்ளது. இந்த படத்துக்கு எதிராக சமூக ஆர்வலர் பிரித்வி மஸ்கி என்பவர் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தில் புகார் அளித்தார்.
அந்த மனுவில், “சஞ்சய்தத் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள சஞ்சு படத்தில் சிறையில் கழிவறை நிரம்பி வழிவது போன்ற காட்சி உள்ளது. இந்த காட்சி மூலம் சிறைச்சாலையை மோசமாக சித்தரித்து உள்ளனர். இதனால் மக்களுக்கு சிறைத்துறை மீதும் சிறை அதிகாரிகள் மீதும் தவறான எண்ணம் ஏற்படும். இந்த காட்சிகள் தொடர்பாக தணிக்கை வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் சஞ்சு படத்தை தணிக்கை குழுவினர் பார்த்து படம் வெளியாக அனுமதி வழங்கி உள்ளனர். கழிப்பறை நிரம்பி வழியும் காட்சியை மட்டும் திருத்தம் செய்யும்படி படக்குழுவினரிடம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் வருகிற 29-ஆம் தேதி ரிலீசாகிறது. #Sanju #RanbirKapoor #SanjayDutt
Next Story






