என் மலர்tooltip icon

    சினிமா

    நடிகை அமலாபால் மீது நடவடிக்கை - போலீசார் முடிவு
    X

    நடிகை அமலாபால் மீது நடவடிக்கை - போலீசார் முடிவு

    சொகுசு கார் முறைகேடு வழக்கில், நடிகை அமலாபால் கொச்சி காவல் நிலையத்தில் ஆஜராகி ஆவணங்களை தாக்கல் செய்த நிலையில், அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
    கேரளாவில் ஆடம்பர சொகுசு கார்களை பதிவு செய்ய கூடுதல் வரி வசூலிக்கப்படுகிறது.

    ஆனால், புதுச்சேரி மாநிலத்தில் சொகுசுகார்களை மிக குறைந்த கட்டணத்தில் பதிவு செய்யலாம். எனவே கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகர், நடிகைகள் அவர்களின் சொகுசு கார்களை புதுச்சேரியில் பதிவு செய்துவிட்டு, அதனை கேரளாவில் ஓட்டி வந்தனர்.

    இதன் மூலம் கேரள போக்குவரத்து துறைக்கு வரி இழப்பு ஏற்படுவதாகவும், எனவே இத்தகைய முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், கேரள மாநில போக்குவரத்து துறை முடிவு செய்தது.

    அதன்படி சொகுசு கார்களை பதிவு செய்ததில் வரிஏய்ப்பு செய்ததாக பிரபல நடிகை அமலாபால், நடிகர் பகத்பாசில், நடிகரும், பாரதீய ஜனதா எம்.பி.யுமான சுரேஷ்கோபி ஆகியோர் மீது கேரள குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அவர்கள் மீது போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். இதில் நடிகர் பகத்பாசில், சுரேஷ்கோபி ஆகியோர் கைதாகி, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த புகார் தொடர்பாக போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க நடிகை அமலாபால் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதில் சினிமா படப்பிடிப்புக்காக புதுச்சேரியில் வாடகை வீட்டில் தங்கி இருந்ததாகவும், அந்த முகவரியிலேயே சொகுசு காரை பதிவு செய்திருப்பதாகவும் கூறியிருந்தார்.



    இதனை விசாரித்த கோர்ட்டு நடிகை அமலாபாலுக்கு முன்ஜாமீன் வழங்கியதோடு அவர் 10 நாட்களுக்குள் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டது. அதன்படி நேற்று முன்தினம் நடிகை அமலாபால் கொச்சியில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜரானார்.

    நடிகை அமலாபாலிடம் கொச்சி குற்றப்பிரிவு போலீஸ் எஸ்.பி. சந்தோஷ்குமார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடிகை அமலாபால், கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த விபரங்களையே கூறினார்.

    ஆனால் போலீசார் இதை ஏற்கவில்லை. அமலாபால், புதுச்சேரியில் தங்கி இருந்ததாக கூறப்பட்ட முகவரியில், 3 மாடி குடியிருப்பு உள்ளது. அங்கு ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். அந்த குடியிருப்பில் பல சொகுசு கார்கள் உள்ளன. மேலும் அந்த குடியிருப்பு முகவரியில் பல சொகுசு கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அமலாபாலின் சொகுசு கார் எந்த முகவரியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். எனவே அவரது வாடகை ஒப்பந்த ஒரிஜினல் ஆவணங்களை போலீசாரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.



    போலீசாரின் விசாரணைக்கு பின்னர் நடிகை அமலாபால் போலீஸ் நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.

    இதற்கிடையே அமலாபாலிடம் நடத்தப்பட்ட விசாரணை விபரங்கள் மற்றும் தகவல்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்பிறகு நடிகை அமலாபால் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

    Next Story
    ×