என் மலர்tooltip icon

    சினி வரலாறு

    தியேட்டர் அதிபர், திரைப்பட வினியோகஸ்தர், சினிமா தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்ட அபிராமி ராமநாதன், பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.

    தியேட்டர் அதிபர், திரைப்பட வினியோகஸ்தர், சினிமா தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்ட அபிராமி ராமநாதன், பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.

    திரை உலகில் பல முக்கிய பொறுப்புகளை வகிக்கும் அபிராமி ராமநாதனின் சினிமாப் பிரவேசம், எடுத்த எடுப்பில் நிகழ்ந்து விடவில்லை. என்ஜினீயருக்கு படித்து விட்டு தொழில் துறையில் அடியெடுத்து வைத்தவர், அடுத்து தியேட்டர் நிர்வாகத்துக்கு வந்தார். பட வினியோகத் தொழிலை ஆரம்பித்தார். பட அதிபராகவும் ஆனார்.

    அபிராமி ராமநாதனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூலாங்குறிச்சி. தந்தை சிவலிங்கம் செட்டியார். தாயார் மீனாட்சி ஆச்சி.

    திரை உலகுக்கு வந்தது எப்படி என்பது பற்றி அபிராமி ராமநாதன் கூறியதாவது:-

    "என் கலை உலக வாழ்க்கையை, அப்பாதான் ஆரம்பித்து வைத்தார். அப்பா 1956-ம் ஆண்டில் பல படங்களுக்கு `பைனான்ஸ்' செய்து வந்தார். படங்களை வாங்கி வெளியிடும் வினியோகத் துறையிலும் இருந்து வந்தார்.

    அப்பா இப்படி வினியோக முறையில் வாங்கி வெளியிட்ட முதல் படம் அப்போது ஜெமினியின் "வஞ்சிக்கோட்டை வாலிபன்'' இந்தப் படத்தை சென்னை நகர உரிமைக்கு அப்போதே 2 லட்சம் ரூபாய்க்கு `அவுட் ரேட்' முறையில் வாங்கினார் அப்பா. ஒரு லிட்டர் பெட்ரோல் 14 பைசாவாக இருந்த நாளில், ஒரு படத்தின் மீது நம்பிக்கை வைத்து 2 லட்ச ரூபாய்க்கு உரிமை வாங்கியிருந்தார் என்றால் தனது தொழிலின் மீது அப்பாவுக்கு எவ்வளவு நம்பிக்கை!

    சென்னையில் வெலிங்டன், பிரபாத், சரசுவதி ஆகிய தியேட்டர்களில் படத்தை திரையிட்டார். அப்போதெல்லாம் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் நாலணா, எட்டணாதான். ஆனால் வெலிங்டன் தியேட்டரில் மட்டும் 21/2 ரூபாய் கட்டணம். அந்த தியேட்டர் "பால்கனி'' அமைப்புடன் ரசிகர்களை கவரும் விதத்தில் இருந்ததே இதற்குக் காரணம்.

    அப்போது நான் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தேன். அப்போதே அப்பா வினியோகம் செய்த படங்கள் ஓடும் தியேட்டர்களுக்கு சென்று பார்ப்பேன். ரசிகர்கள் படத்தை எப்படி ரசிக்கிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனிப்பேன். இப்போது ஒரு படத்தை பார்த்ததும் அது எப்படி ஓடும் என்று என்னால் கணிக்க முடிகிறது என்றால், அது அன்றே எனக்குள் விழுந்த விதை. விவேகானந்தா கல்லூரியில் "பி.யூ.சி'' முடித்து விட்டு, கிண்டியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்தேன்.

    ஓமியோபதி மருத்துவப் படிப்பிலும் சேர்ந்து தேறினேன். பள்ளியில் படிக்கிற நாட்களிலேயே எனக்கு எழுதுவதில் ஆர்வம் வந்துவிட்டது. பத்தாவது படிக்கும்போது `ஸ்டூடண்ட்' என்ற மாணவர் பத்திரிகைக்கு ஆசிரியர் ஆனேன்.

    கல்லூரிக்கு வந்த பிறகு ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். அப்பா என் கைச்செலவுக்கு மாதம் 30 ரூபாய் அனுப்பி வைப்பார். என் தேவைகளுக்கு இன்னும் சம்பாதிக்க விரும்பியபோது எனக்கு கைகொடுத்தது ஒரு கேமரா. நான் ஏழாவது படித்த நேரத்தில் ஒரு கேமரா வாங்கித் தந்திருந்தார். அப்போது சினிமா ஸ்டில் போட்டோ கிராபராக இருந்த `அப்பர்' என்பவரிடம் கேமரா இயக்க கற்றுக்கொண்டேன்.

    இந்த கேமரா அனுபவம் எனக்கு கைகொடுத்தது. கல்லூரி விழாக்களை நான்தான் படம் எடுப்பேன். நண்பர்கள் வீட்டு திருமணங்களில் நான்தான் ஆஸ்தான போட்டோகிராபர்! இப்படி படிப்போடு, வருமானமும் எனக்கு உயர்ந்து வந்தது. என் சொந்த வருமானத்தில் ஒரு மோட்டார் பைக் வாங்கினேன்.

    இதெல்லாம் போதாதென்று நான் இருந்த ஹாஸ்டலிலும் பெட்டிக்கடை வியாபாரம் செய்தேன்! என் ரூம் ஜன்னல் வழியாகத்தான் வியாபாரம். சிகரெட், பாக்கு, பீடா, கடலை மிட்டாய் எல்லாம் கிடைக்கும்!

    சின்ன வயதில் அப்பா என்னிடம் "நேர்மையான முறையில் எதை வேண்டுமானாலும் செய்'' என்று கூறினார். எனவேதான் போட்டோகிராபர், பெட்டிக்கடை என்று என் `வியாபாரத்தை' விஸ்தரித்ததில், 1970-ல் என் பேங்க் பேலன்ஸ் 10 ஆயிரம் ரூபாயை தொட்டது. படிப்பிலும் நன்றாகவே தேறினேன்.

    கல்லூரி படிப்பு முடிந்த கையோடு அப்பா என்னை தொழில் துறையில் பழக்குவிக்க நினைத்தார். கீரனூரில் எங்களுக்கு ஆயில் மில் இருந்தது. அதில் என்னை சேர்த்து விடலாம் என்ற எண்ணத்தில் என்னிடம், "வேலைக்கு போகிறாயா? கம்பெனியில் சேருகிறாயா?'' என்று அப்பா கேட்டார். சொந்தமாய் தொழில் செய்ய விரும்புவதாகக் கூறினேன்.

    உன்னிடம் "முதல் (பணம்) இருக்கிறதா?'' என்று கேட்டார். "10 ஆயிரம் ரூபாய் இருக்கிறது'' என்று பெருமையாக கூறினேன்.அப்பா மறுபேச்சு பேசவில்லை. "சரி! செய்'' என்றார். சென்னை அசோக் நகரில் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்தேன். எனக்கு அனுபவமில்லாத அந்த தொழிலில் சறுக்கல் ஏற்பட, ஆறே மாதத்தில் 10 ஆயிரமும் நஷ்டம். விஷயத்தை அப்பாவிடம் சொல்லியாக வேண்டுமே. சொன்னேன்.

    "பூரா பணமும் போய்விட்டதா?'' என்று அப்பா கேட்டார். "ஆமாம்'' என்று நான் தலையசைத்ததும், "தொழிலை ஒழுங்காக கற்றுக்கொள்'' என்று சொல்லி விட்டு கீரனூரில் உள்ள எங்கள் ஆயில் மில்லுக்கு என்னை அனுப்பினார். அங்கு ஒரு வருடம் இருந்தேன். சமையல்காரர்கூட கிடையாது. என் தேவைகளை நானே கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதில் அப்பா கண்டிப்பாக இருந்தார்.

    சோதனையில் தேறிவிட்டதால், அடுத்தபடியாக ஆந்திராவில் இருந்த எங்கள் காட்டன் மில்லுக்கு என்னை அப்பா அனுப்பி வைத்தார். அங்கே ஜுனியர் என்ஜினீயர் என்ற நிலையில் ஆரம்பித்து, புளோர் என்ஜினீயர், புளோர் சூப்பர்வைசர், உதவி மானேஜர், மானேஜர், டைரக்டர் என்று படிப்படியாக உயர்ந்தேன்.

    இந்த நேரத்தில்தான் அப்பா சென்னை புரசைவாக்கத்தில் ஒரு இடத்தை வாங்கி, அங்கே தியேட்டர் கட்ட முடிவு செய்தார். என்னை அழைத்த அப்பா, "நீ என்ஜினீயருக்குத்தானே படிச்சே. நீயே தியேட்டர் வேலையை கவனி. சைட் என்ஜினீயரா இரு'' என்று கூறினார். அதனால், புரசைவாக்கத்தில் "அபிராமி'', "பாலஅபிராமி'' என 2 தியேட்டர்களைக் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டேன்.

    1974-ல் ஆரம்பித்த தியேட்டர் கட்டும் பணி 1976-ல் முடிந்தது. 1976 ஜுலை 2-ந்தேதி "அபிராமி''யை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திறந்து வைத்தார்.
    நடிகை குட்டி பத்மினி, கலை நிகழ்ச்சிக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார். அப்போது, அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பமே, சின்னத்திரைக்கு அவர் வரக் காரணமாக அமைந்தது.

    நடிகை குட்டி பத்மினி, கலை நிகழ்ச்சிக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார். அப்போது, அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பமே, சின்னத்திரைக்கு அவர் வரக் காரணமாக அமைந்தது.

    அதுபற்றி குட்டி பத்மினி கூறியதாவது:-

    "சிங்கப்பூர் நாதன் என்ற கலை நண்பர் மூலம் ஒரு "ஸ்டார் நைட்'' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், `மேஜிக்' ராதிகா உள்ளிட்ட குழுவினருடன் என்னையும் அழைத்திருந்தார்கள்.

    கலை நிகழ்ச்சியில் `மதி ஒளி' சண்முகம் எழுதிய "பட்டு மாமி கிட்டு மாமா'' என்ற நகைச்சுவை நாடகத்தில் நடித்தேன். நாடகத்தில் என் காமெடி நடிப்புக்கு கரகோஷம் கிடைத்தது. அதோடு அப்போது பிரபலமான தில்லானா மோகனாம்பாள் படப்பாடலான "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?'' என்ற பத்மினி பாடலுக்கும் நடனமாடுவேன்.

    சிங்கப்பூர், அப்போது சுதந்திரம் பெற்றிருந்த நேரம். லீ குவான் யூ முதல் பிரதமராக பொறுப்பேற்றிருந்தார். இந்த நேரத்தில் `ஸ்டார் நைட்' நிகழ்ச்சிக்கு போயிருந்தபோதுதான் என் வாழ்க்கையில் திருப்பம். நடன நிகழ்ச்சி முடித்துவிட்டு என் அறைக்கு வந்தபோது ஒரு சிறு பெட்டியை பார்த்தேன். அதில் இருந்த திரை மாதிரியான கண்ணாடியில் ஏதோ ஒரு நிகழ்ச்சி வந்து கொண்டிருந்தது. அதன் மூலம் சினிமா படங்களையும் பார்க்க முடியும் என்றிருந்தபோது ஆர்வத்தில் அது பற்றி விசாரித்தேன். அப்போதுதான் அது டெலிவிஷன் பெட்டி என்பது தெரியவந்தது. நான் ஆச்சரியத்தின் எல்லைக்கே போய்விட்டேன்.

    சிங்கப்பூர் தமிழ்ச் சங்கத்தை சேர்ந்த கோவிந்தராஜன் எங்கள் கலைக்குழுவினரிடம், "பிரதமர் ஒரு விழா நடத்துகிறார். அதில் நீங்களும் நிகழ்ச்சி நடத்தவேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

    எங்கள் நிகழ்ச்சிகள் முடிந்து இரண்டு நாளைக்குப் பிறகே அந்த விழா என்பதால் சிலர் பங்கேற்க முடியாது என்று தெரிவித்தார்கள். சிலர் பெரிய தொகை சம்பளமாக கேட்டார்கள். நான் மட்டும், "நான் நிகழ்ச்சியில் நடனமாடுகிறேன். எனக்கு சம்பளம் எதுவும் தேவையில்லை. ஆனால் ஒரே ஒரு கண்டிஷன். உங்கள் பிரதமரை நான் சந்தித்து பேச அனுமதி வேண்டும்'' என்றேன். அவரும், "உங்கள் கோரிக்கையை பிரதமரின் பார்வைக்கு கொண்டு சேர்க்கிறேன்'' என்றார்.

    விழா நடந்தது. என் நடனமும் நடந்தது. பிரதமர் பாராட்டிப் பேசும்போது என் பெயரைக் குறிப்பிட்டு, "என்னை நேரில் சந்தித்துப் பேச, தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கும் பத்மினி அனுமதி கோரியுள்ளார். அவர் என்னை சந்திக்க விரும்பிய காரணத்தை, இந்த மேடையிலேயே கூறலாம்'' என்று கூறினார்.

    கிடைத்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தில், "உங்கள் நாட்டில் பிரபலமாகியிருக்கும் டெலிவிஷன் என்னைக் கவர்ந்து விட்டது. அதன் தொழில் நுட்பம் பற்றி உங்கள் நாட்டில் தங்கி கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அதற்கு என்னை அனுமதிக்க வேண்டும்'' என்றேன்.

    பதிலுக்கு பிரதமர், "எங்கள் சுதந்திர நாட்டின் முதல் பிரகடனமே, "எல்லாருக்கும் கல்வி அறிவு புகட்டுவோம்'' என்பதுதான். இங்கே 6 மாதம் தங்கியிருந்து டெலிவிஷன் தொழில் நுட்பத்தை இலவசமாக கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்கிறேன்'' என்றார்.

    நான் இப்படி 6 மாதம் தங்கியிருந்ததில் அம்மாவுக்கு வருத்தம். கதாநாயகி வாய்ப்பு வந்து வந்து போகிறதே என்ற வருத்தம்தான். ஆனாலும் நான் விடாப்பிடியாக 6 மாத பயிற்சியில் டெலிவிஷன் தொழில் நுட்பம் கற்றுக்கொண்ட பிறகே சென்னையில் காலெடுத்து வைத்தேன்.''

    இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.

    சிங்கப்பூரில் 1971-ம் வருடம் இப்படி `டிவி' பற்றி தெரிந்து கொண்ட குட்டி பத்மினிக்கு 1975-ல் தமிழ்நாட்டில் உதயமான தூர்தர்ஷன் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. தூர்தர்ஷன் தொடங்கிய முதல் நாளில் ஒளிபரப்பான முதல் நாடகம் "அமுதசுரபி''யில் குட்டி பத்மினி நடித்திருந்தார். இந்த நாடகம்தான் சிவாஜி நடித்த முதல் சின்னத்திரை நாடகம். இந்த நாடகத்தில் ஒய்.ஜி.மகேந்திரனும் நடித்திருந்தார்.

    தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட டிவி நாடகங்களில் நடித்து பிஸியான சின்னத்திரை நட்சத்திரமானார் குட்டி பத்மினி. இதுபற்றி அவர் கூறும்போது, "சினிமாவில் கதாநாயகியாக நடித்தால் என்னென்ன கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தேனோ, அத்தனை விதவிதமான கேரக்டர்களும் எனக்கு சின்னத்திரையில் வாய்த்தன'' என்று முகம் மலர்கிறார்.

    டிவி நாடகத்தில் நடித்த அனுபவம் பற்றி அவர் தொடர்ந்து கூறியதாவது:-

    "சினிமா மாதிரி டிவியில் கட்டிப்பிடித்து நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. சினிமா கதாநாயகி என்றால் என்னதான் நடிப்புத்திறமை இருந்தாலும், கிளாமர் காட்சியில் தவிர்க்க முடியாமல் நடிக்க வேண்டி வரும். இப்படி நடிக்க எனக்கு விருப்பம் இல்லாததும், சினிமா கதாநாயகி வாய்ப்பை இயல்பாகவே எனக்கு தூரமாக்கி விட்டதாக இப்போது உணர்கிறேன்'' என்றார்.

    பின்னாளில் குட்டி பத்மினி சின்னத்திரை தயாரிப்பாளராகவும் ஆனார். சென்னை தூர்தர்ஷனில் தொடர் தயாரிக்க விண்ணப்பித்து தொடர்ந்து மூன்றாண்டுகளாக `பதில்' இல்லாத நிலையில் டெல்லி போய் தூர்தர்ஷன் கதவை தட்டினார். அங்கே அவருக்கு கிடைத்ததோ `டெலிபிலிம்' தயாரிப்பதற்கான அனுமதி. அதற்கென கொடுக்கப்பட்ட 21/2 லட்ச ரூபாயில் `தராசு' என்ற டெலிபிலிமை தயாரித்தார். தரம் கருதி மேலும் 21/2 லட்சம் செலவழித்தார்.

    டெலிபிலிமை டைரக்டர் ஹரிகரன் இயக்கினார். (இவர் ரகுவரன் அறிமுகமான `ஏழாவது மனிதன்' படத்தை இயக்கியவர்) டெலிபிலிமில் டெல்லி கணேஷ் ஜோடியாக குட்டி பத்மினியே நடித்தார். சுஷ்மா அவுர்ஜா திரைக்கதை. இந்த டெலிபிலிம் அகில இந்திய அளவில் சிறந்த விருதை பெற்றது. புகழ் பெற்ற `ராபா' நிறுவனத்தின் விருதும் கிடைத்தது. தயாரிப்பில் இவரை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியது. வருமானவரி இலாகாவுக்கு இவர் தயாரிக்க கொடுத்த இந்தி சீரியல் "ஷாங்கஸ்.''

    "இந்தியாவிலேயே அதிகம் பேர் பார்த்த நாடகம் என்ற பெருமை இந்த சீரியலுக்கு இன்னும் இருக்கிறது'' என்கிறார், குட்டி பத்மினி.

    தூர்தர்ஷனைத் தொடர்ந்து தனியார் சேனல்களுக்கும் தொடர்களை தயாரித்து வழங்கி வரும் குட்டி பத்மினி, இப்போதும் புதிய தொடர் ஒன்றை தயாரிக்கும் பணியில் இருக்கிறார்.

    குட்டி பத்மினி காதல் திருமணம் செய்து கொண்டவர். கணவர் பிரபு நேபாலும் சீரியல் தயாரிப்பில் இருந்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு கீர்த்தனா, ரித்னிகா, ஆர்யா என மூன்று மகள்கள் உள்ளனர்.
    குட்டி பத்மினி, கையில் புலிக்குட்டியுடன் சிங்கத்தின் மீது சவாரி செய்யும் காட்சி ஒரு தெலுங்குப் படத்துக்காகப் படமாக்கப்பட்டது. குட்டி பத்மினியின் தாயாரை தந்திரமாக வெளியே அனுப்பிவிட்டு, இக்காட்சியை டைரக்டர் படமாக்கினார்.

    குட்டி பத்மினி, கையில் புலிக்குட்டியுடன் சிங்கத்தின் மீது சவாரி செய்யும் காட்சி ஒரு தெலுங்குப் படத்துக்காகப் படமாக்கப்பட்டது. குட்டி பத்மினியின் தாயாரை தந்திரமாக வெளியே அனுப்பிவிட்டு, இக்காட்சியை டைரக்டர் படமாக்கினார்.

    "இளங்கன்று பயமறியாது'' என்பார்கள். குட்டி பத்மினி, பாம்பு கொத்துகிற மாதிரியான காட்சிகளில் கூட நடித்தார்.

    ஆனால், அவருக்கே தெரிவிக்காமல் திடீரென ஒரு தெலுங்குப்படத்தில் சிங்கங்களுக்கு மத்தியில் அவரை நடிக்க வைத்தார்கள். அவரும் பயம் எதுவுமின்றி நடித்து முடித்தார்.

    சிங்கத்துடன் நடித்த அனுபவம் குறித்து குட்டி பத்மினி கூறியதாவது:-

    "சகுந்தலா'' என்ற தெலுங்குப் படத்தில், நடிகை சரோஜாதேவியின் மகளாக நடித்தேன். ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தது. ஐதராபாத்தில் மக்காச்சோளம் அதிகம். அம்மா மக்காச்சோளத்தை சுட்டு, மிளகாய் பொடி தூவி பக்குவமாக சாப்பிடத் தருவார். அம்மாவின் இந்த கைப்பக்குவத்துக்கு செட்டில் இருந்தவர்கள் ரசிகர்களாகி விட்டார்கள். இப்படி படப்பிடிப்பில் எல்லாருக்கும் தெரிந்தவராக, வேண்டியவராகி விட்ட அம்மாவை அன்றைய தினம் எங்கோ சுற்றிப் பார்க்க அழைத்துப்போய் விட்டார்கள்.

    அம்மாவை திட்டம் போட்டே வெளியே அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்பது பிறகுதான் தெரிந்தது. படத்தின் டைரக்டர் என்னிடம், "உனக்கு புலிக்குட்டின்னா பிடிக்கும்தானே?'' என்று கேட்டார்.

    எதற்காக கேட்கிறார் என்பது புரியாமல், "ஓ! ரொம்ப பிடிக்குமே என்றேன். அதன் பிறகுதான் என்னை செட்டின் இன்னொரு புறம் கூட்டிப் போனார்கள். எனக்கு கைநிறைய சாக்லெட் தந்தவர்கள், "இப்ப நீ புலிக்குட்டியை கையில் தூக்கிக்கிட்டு சிங்கத்தின் மேல் ஏறி வரப்போறே'' என்றார்கள்.

    சிங்கம், புலி போன்ற பயங்கர மிருகங்களை பயிற்றுவிக்கும் `புலி கோவிந்தராஜ்' அங்கிருந்தார். சுற்றிலும் ஒரு இரும்பு வேலி அமைத்து, ஐந்து சிங்கங்களையும், மூன்று புலிகளையும் உலவ விட்டிருந்தார்கள். எதற்குமே வாய் தைக்கவில்லை. `புலி கோவிந்தராஜ்' மாஸ்டர், அவற்றுக்கு பயிற்சி கொடுக்க அழைத்து வந்திருந்தார்.

    கொஞ்ச நேரத்தில் ஒரு ஆள் நுழையக்கூடிய வழியை திறந்து என்னை அந்த கூண்டுக்குள் அனுப்பினார்கள். சர்க்கசில்தான் ஒரே நேரத்தில் இத்தனை சிங்கம், புலிகள் பார்த்திருக்கிறேன். மாஸ்டர், அழகாக இருந்த ஒரு புலிக்குட்டியை என் கையில் கொடுத்து, "இதை கெட்டியா பிடிச்சுக்கோ'' என்றார். புலிக்குட்டியை பிடித்துக்கொண்டதும், அங்கிருந்த சிங்கத்தின் மீது என்னை உட்கார வைத்தார். சிங்கம் அந்த தடுப்பு வேலிக்குள் ரவுண்ட் அடிக்க, கையில் புலிக்குட்டியுடன் சிங்கத்தின் மீது நான்!

    வெளியே நின்று காட்சிகளை படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். படப்பிடிப்பு குழுவில் இருந்தவர்களை நான் சிங்கத்தின் மீது வலம் வந்தபடி பார்க்கிறேன். அவர்களில் ஒருவர் முகத்திலாவது சந்தோஷம் இல்லை. கொடூர குணம் படைத்த மிருகங்களாயிற்றே. எந்த நேரத்தில் என்ன செய்து வைக்கப்போகிறதோ?'' என்று அவர்கள் உள்ளூர கலங்கிக் கொண்டிருந்தார்கள்.

    அந்தப் பதட்டத்திலும் காட்சி படமாகிக் கொண்டிருக்க, அப்போதுதான் அம்மா செட்டுக்குத் திரும்பியிருக்கிறார். படப்பிடிப்பில் இருந்த மொத்தக் கூட்டமும் இமைக்காமல் இரும்பு வேலிக்குள் சிங்க ஊர்வலம் வரும் என்னைப் பார்த்துக் கொண்டிருந்ததை அம்மாவும் பார்த்து விட்டார். பெற்ற வயிறல்லவா! துடித்துப் போனார், அம்மா. "அய்யோ! இந்தக்காட்சியை எடுக்கணும்னுதான் என்னை வெளியே அனுப்பினீங்களா?'' என்று கதறினார்.

    நான் அங்கிருந்தபடியே, "அம்மா பயப்படாதீங்க! எனக்கு ஒண்ணும் ஆகாது'' என்று சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால் அவர் அழுகையை நிறுத்தவில்லை. அவசரமாய் அந்தக் காட்சியை படமாக்கி, மாஸ்டர் என்னை பத்திரமாக வெளியே அழைத்து வந்த பிறகுதான் அம்மாவுக்கு உயிரே வந்தது.

    அப்போது கூட எனக்கு கையெல்லாம் ஒரே வலி. நான் அசையாமல் தூக்கி வைத்திருந்தேனே புலிக்குட்டி. அது 5 கிலோவுக்கு மேல் எடை இருக்கும் போலிருக்கிறது. அதுதான் கை வலிக்கு காரணம்! ஆனால் இந்த வலியையெல்லாம் தாண்டி அந்தப் படத்தில் என் நடிப்புக்கு ஆந்திர அரசின் `சிறந்த பேபி நட்சத்திர விருது' கிடைத்தது.''

    இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.

    "குழந்தையும் தெய்வமும்'' படத்தில் குட்டி பத்மினியின் இரட்டை வேட நடிப்பை பார்த்து வியந்த பெருந்தலைவர் காமராஜர், தேர்தல் பிரசாரத்தில் குட்டி பத்மினியை காங்கிரஸ் கூட்டங்களில் பேச அனுமதித்தார். சென்னை மைலாப்பூரில் நடந்த காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் குட்டி பத்மினியை பேச வைத்தார். தொடர்ந்து படப்பிடிப்புக்கு இடையே காங்கிரசின் மேடைப் பேச்சாளராகவே மாறிப்போனார், குட்டி பத்மினி.

    காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்டபின், குட்டி பத்மினி தி.மு.க. கூட்டத்திலும், அதன் பிறகு அ.தி.மு.க. மேடைகளிலும் பேசினார். இதுபற்றி அவர் கூறும்போது, "நான் எந்த கட்சி மேடையில் பேசினாலும் நடந்து முடிந்த ஆட்சி பற்றி குறையெல்லாம் சொல்வதில்லை. நான் சார்ந்த கட்சி மக்களுக்கு என்ன மாதிரியான நல்ல காரியங்களெல்லாம் செய்யும் என்று மட்டுமே பேசுவேன். இதனால் மாற்றுக்கட்சிகாரர்கள் கூட என் பேச்சை கேட்டு ரசித்தார்கள்'' என்றார்.

    குட்டி பத்மினி 2 ஆங்கிலப் படங்களிலும் நடித்தார். `தி பிரின்ஸ் அண்ட் த பாப்பர்', `டார்சான் கோஸ் டு இந்தியா' என்ற இந்த படங்களுக்காக தனது 12-வது வயதில் காஷ்மீர் போயிருக்கிறார்.

    குட்டி பத்மினியிடம் மிகவும் அன்பு கொண்டவர் சவுகார் ஜானகி. "எங்களுக்கிடையே இருந்தது அம்மா - மகள் உறவு'' என்று சொன்ன குட்டி பத்மினி, அதுபற்றி கூறியதாவது:-

    "சவுகார் ஜானகியின் மகள் என்றே என்னை பலரும் நினைத்தார்கள். எங்களுக்குள் இருந்த முக ஒற்றுமை அவர்களை இப்படி நினைக்க தூண்டியிருக்கலாம். சவுகாரும் என்னை தனது மகள்களில் ஒருவராகவே நேசித்தார்.

    படப்பிடிப்புக்கு வரும்போது தன் கைப்பட சமைத்த சாப்பாட்டை எடுத்து வருவார். தனது கலையுலக நட்பு வட்டாரத்தில் யாருக்காவது பிறந்த நாள் என்றால் அதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு பரிசளிப்பார். என்னை அவருடைய மகள் என்று நினைத்த ரசிகர்கள் பல நேரங்களில் சவுகாரின் வீட்டுக்கே என் நடிப்பை பாராட்டி கடிதம் எழுதுவதும், அதை ஆன்ட்டி என்னிடம் கொடுப்பதும் தொடர்கதை மாதிரி போய்க்கொண்டிருந்தது.

    எனக்கு திருமணமாகி முதல் பிரசவத்தின்போது நிஜமாகவே எனக்கு அன்னையானார். பிரசவத்தின் போது உடனிருந்து தாயாக பார்த்துக்கொண்டார். மகள் பிறந்தபோது, குழந்தைக்கு தங்கக்காசு கொடுத்து வாழ்த்தினார்.

    சமீபத்தில் சவுகார் ஆன்ட்டிக்கு அவரது பெண்கள், பேரன், பேத்திகள், ஸ்டார் ஓட்டல் ஒன்றில் பெரும் விழா எடுத்தார்கள். அவரை வாழ்த்தி மைக்கில் பேசும்போது அழுது விட்டேன். சினிமா மூலம் எனக்கு கிடைத்த `அம்மா' அவர்.''

    இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.

    குழந்தை நட்சத்திரமாக 175 படங்களுக்கு மேல் நடித்து விட்டாலும், `கதாநாயகி'யாக குட்டி பத்மினி நடிக்கவில்லை! அதற்கான காரணம் குறித்து அவர் கூறியதாவது:-

    "சிறு வயதுப் பிராயம் தாண்டி 13 முதல் 15 வயதிலான கால கட்டத்தில் `சிறுமி'யாகவும் நடிக்க முடியாது. பெரிய பெண்ணாகவும் நடிக்க முடியாது. அப்படியான காலகட்டத்தில் குச்சிப்புடி, கதக் நடனங்கள் கற்றுக்கொண்டேன். அப்போது நாடக மேடையில் கிடைத்த கதாநாயகி வாய்ப்பை விடாமல் பற்றிக்கொண்டேன். மவுலி, எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரன், விசு என நாடக ஜாம்பவான்கள் அத்தனை பேரின் நாடகங்களிலும் தொடர்ந்து நடித்தேன்.

    இந்த காலகட்டத்தில் வருடம் தவறாமல், மயிலை ஆர்ட்ஸ் அகாடமியின் "சிறந்த நாடக நடிகை'' விருது எனக்கு கிடைத்து விடும். நாடக காட்சியின்போது ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்கான ஒரு நிமிடத்துக்கும் குறைவான இடைவெளியில் நான் வேறு புடவை மாற்றிக்கொண்டு நடிக்க வருவேன். இந்த வேகமான வித்தையை பார்த்து, நாடகத்துக்கு வந்த பெண்கள் ஆச்சரியப்பட்டார்கள். என்னிடம் நாடகம் முடிந்த நேரத்தில் இதுபற்றி பாராட்டி பேசியவர்களும் உண்டு.

    ஜெமினிகணேசன் சாரின் மனைவி புஷ்பவல்லியின் மகள் ரேகா, பின்னாளில் இந்தித் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். ரேகாவின் அண்ணன் பாபுஜியைத்தான் எனது இரண்டாவது அக்கா விஜயலட்சுமி திருமணம் செய்திருக்கிறார். இந்த பாபுஜி இயக்கிய `நயாபக்ரா' இந்திப்படத்தில்தான் நான் ஹீரோயின் ஆனேன். படத்தில் எனக்கு ஜோடி வினோத் மெஹ்ரா. முழுக்க காமெடிப் படமான இந்தப்படம் இந்தியில் நன்றாகவே ஓடியது.

    இந்த நேரத்தில் எனக்கு 16 வயது. எம்.ஜி.ஆர். சார் அப்போது "உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தை தயாரிக்க வெளிநாடுகளுக்கு போவதாக இருந்தார். படத்தின் ஒரு கதாநாயகியாக என்னை நடிக்க வைக்கும் நோக்கில் என்னை அழைத்து வரச்செய்தார் எம்.ஜி.ஆர். அம்மாவுடன் போய் அவரை பார்த்தேன். எங்களிடம் நலம் விசாரித்த அவர், "படத்தின் 2 மாத படப்பிடிப்பு ஜப்பான், ஆங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் நடக்கிறது. எனவே, பயணச் செலவில் கூடுதல் செலவை தவிர்க்கும் விதத்தில் `கதாநாயகி' மட்டுமே வரவேண்டும்'' என்றார்.

    பெண்ணை 2 மாத காலம் தனியாக அனுப்ப அம்மாவுக்கு மனதில்லை. அதனால் வீட்டில் கலந்து பேசிவிட்டு முடிவை சொல்கிறோம்'' என்று சொல்லி விட்டு வந்தார். வீட்டிலும் சகோதரர்களுக்கு என்னை தனியாக அனுப்ப மனதில்லாதிருந்ததால் அந்த வாய்ப்பை `மிஸ்' பண்ணி விட்டேன். சில நேரங்களில் தவறாக எடுக்கும் ஒரு முடிவு கூட எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதற்கு என் விஷயத்தில் என் குடும்பம் எடுத்த இந்த முடிவும் ஒரு உதாரணம்.

    தொடர்ந்து நாடகத்திலும் நடித்து வந்ததால் சில கதாநாயகி வாய்ப்புகள் `மிஸ்' ஆயின. இப்படி டைரக்டர்கள் கே.பாலசந்தர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பி.மாதவன் ஆகியோர் படங்களுக்கு கேட்டு வந்த கதாநாயகி வாய்ப்பை நாடகத்துக்கு ஏற்கனவே கொடுத்த தேதிகள் கெடுத்தன. ஒரு டைரக்டர், "உனக்கு சினிமா முக்கியமா? நாடகம் முக்கியமா?'' என்று கேட்டு கோபப்பட்டதும் உண்டு. நான் இப்படி மிஸ் பண்ணின சில படங்களில் ஜெயசித்ரா, ஸ்ரீபிரியா நடித்தார்கள். பின்பு எம்.ஜி.ஆர். சாரின் தங்கையாக "நான் ஏன் பிறந்தேன்'' படத்திலும், சிவாஜி சாரின் மருமகளாக "நல்லதொரு குடும்பம்'' படத்திலும் நடித்தேன்.

    இப்படி சினிமா என்னை விட்டுப் போயிருந்தாலும், சின்னத்திரையில் நான் வலுவாக காலூன்ற அது ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது.
    குழந்தை நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்கிய குட்டி பத்மினி, எம்.ஜி.ஆருடனும், சிவாஜிகணேசனுடனும் பல படங்களில் நடித்தார்.

    குழந்தை நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்கிய குட்டி பத்மினி, எம்.ஜி.ஆருடனும், சிவாஜிகணேசனுடனும் பல படங்களில் நடித்தார்.

    சிவாஜியுடன் நடித்த அனுபவங்கள் குறித்து குட்டி பத்மினி கூறியதாவது:-

    "நடிப்பில் சிவாஜி சார் இமயம் என்று தெரியும். ஆனால், அப்போது பேபி நட்சத்திரமாக இருந்த எனக்கு, இது தெரிந்திருக்க வாய்ப்பில்லையே.

    ஏ.பி.நாகராஜன் அங்கிள் அப்போது எடுத்த "திருவருட்செல்வர்'' படத்தில் சிவாஜி சார் நடித்தார். இந்தப் படத்தில் சிவாஜி சாருடன் விவாதம் செய்யும் ஒரு காட்சியில் நடிக்க என்னை `புக்' செய்தார்கள். புராணப்படம் என்பதால் தூய தமிழில் பேச ஏ.பி.நாகராஜன் அங்கிள் வீட்டில் ஒரு வாரம் எனக்கு `சுத்தத் தமிழ்' கற்றுத் தந்தார்கள். இந்த ஒரு வாரத்தில் ஏ.பி.என். அங்கிளின் பிள்ளைகளும் எனக்கு `பிரண்ட்ஸ்' ஆகிவிட்டார்கள்.

    சிவாஜி சாருடன் நான் நடிக்க வேண்டிய காட்சி படமாகும் நாளும் வந்தது. அப்போதெல்லாம் எனக்கு `நடிப்பு' பற்றி பயமே இருந்ததில்லை. படத்தில் திருமலை மன்னராக வரும் சிவாஜி சாருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அவருக்கு கடவுள் நம்பிக்கை ஏற்படுத்தும் சிறுமியாக நான் வந்தேன். கடவுள் நம்பிக்கை பற்றி நான் அவரிடம் பேசப்போக, அவரோ "கடவுள் இருக்கிறார் என்றால், அவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?'' என்று கேட்பார்.

    "இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமானால் என்னை திருமலை மன்னராக்கி அரியணையில் அமர வைக்கவேண்டும்'' என்பேன்.

    உடனே திருமலை மன்னர் என்னை அரியணையில் அமர்த்தி மன்னராக மகுடம் சூட்டுவார். அடுத்த கணம் நான், "யாரங்கே! இதுவரை திருமலை மன்னராக இருந்த இவரை பிடித்து சிறையில் அடையுங்கள்'' என்பேன். அப்படி உத்தரவிட்டு விட்டு, "கடவுள் இப்போது இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்'' என்பேன்.

    இதன் பிறகு திருமலை மன்னர் கடவுள் நம்பிக்கை உடையவராக திருந்துவதுடன் அந்தக் காட்சி முடியும். இந்தக் காட்சியில் திருமலை மன்னராக நடிக்கும் சிவாஜி சார் உணர்ச்சி வேகத்தில் பேசிவிட்டு, என் காலில் விழுவதாக அந்தக் காட்சி முடியும்.

    இந்தக்காட்சி பற்றி சிவாஜி சாரிடம் விளக்கிய உதவி இயக்குனர்கள், கடைசியில் `கடவுள் ஞானம்' கொடுத்த சிறுமியின் காலில் விழுவதுடன் காட்சி முடியும் என்பதை தயங்கித் தயங்கி சொன்னார்கள். ஆனால் சிவாஜி சார் அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. காட்சியில் உணர்ச்சிகரமாக பேசிக் கொண்டு வந்தவர், "அம்மா நீ சிறு பெண்ணல்ல; என் அறிவுக்கண் திறக்க வந்த தெய்வம்'' என்று சொல்லி என் கால் பக்கமாக விழுந்து விட்டார்.

    டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அங்கிள் `கட்' செய்யவும் மறந்து ஒரு கணம் பிரமித்து நின்று விட்டார். காட்சியின் கனம் கருதி எந்த நடிப்புக்கும் தயாராக இருந்த சிவாஜி சாரை நினைத்தால் இப்போதும் அவர் மீது ஒரு மரியாதை ஏற்படுகிறது. இந்தப்படம் பற்றி அப்போது விமர்சனம் எழுதிய ஒரு பத்திரிகை, இந்தக் காட்சி பற்றி குறிப்பிடும்போது "திமிங்கலத்தை சின்ன மீன் விழுங்கிவிட்டது'' என்று வர்ணித்திருந்தது.

    அதுமாதிரி, "திருமால் பெருமை'' படத்திலும் ஒரு உணர்ச்சிமயமான காட்சி சிவாஜி சாருக்கும் எனக்கும் இருந்தது. படத்தில் குட்டி ஆண்டாளாக வரும் நான் திருமாலுக்கு என் தந்தை (சிவாஜி) சூடிய மாலையை என் கழுத்தில் எடுத்து போட்டுக்கொள்வேன். ஆத்திரமாகும் அப்பா என் மீது கோபப்படுவதாக காட்சி. இந்தக் காட்சியின்போது நான் கொஞ்சமும் எதிர்பாராமல் சிவாஜி சார் என் கன்னத்தில் ஓங்கி விட்டார் ஒரு அறை. அந்த அறையின் வேகத்தில் என் காதில் இருந்த கம்மல் தெறித்து விழுந்தது. பொறி கலங்கிப்போனேன். என்றாலும் நான் தொடர்ந்து பேசவேண்டிய வசனத்தை பேசி முடித்தேன்.

    காட்சி முடிந்ததும் சிவாஜி சார் ஓடிவந்து என் கன்னத்தை தடவி விட்டார். பிறகு அம்மாவிடம் அந்தக் காட்சிக்கான விளக்கம் சொன்னார். "இந்தக் காட்சியில் நான் கன்னத்தில் அறைவதை முதலிலேயே சொல்லியிருந்தால் உங்கள் பெண், நான் அடிக்கும்போது கன்னத்தை திருப்பியிருப்பாள். அப்படிச் செய்திருந்தால் அந்தக்காட்சி இயல்பாக அமையாது. அதனால்தான் அடிப்பதை முன்கூட்டியே சொல்லவில்லை. ஆனால் இப்படி சொல்லாமல் கன்னத்தில் அடித்தும், நடிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து அழுதுகொண்டே வசனம் பேசி நடித்த உங்கள் பெண் என்னை ரொம்பவே கவர்ந்து விட்டாள்'' என்று சொன்னவர், "உங்க கையை நீட்டுங்க'' என்றார், அம்மாவிடம்.

    அம்மா `எதற்கு' என்று புரியாமல் பார்த்த நேரத்தில், "எனக்கு சத்தியம் பண்ணிக் கொடுங்க. உங்க பொண்ணு ஹீரோயினா நடிக்கிற கால கட்டத்துல என்கூட தான் முதல்ல நடிக்கணும்'' என்றார்.

    அம்மா அப்படியே நெகிழ்ந்து போய்விட்டார். பெண்ணின் நடிப்பு மீது அந்த மகா கலைஞர் வைத்த நம்பிக்கையும், சிறு குழந்தை மாதிரி அவர் கேட்ட சத்தியமும் அம்மாவை ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.''

    இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.

    குட்டி பத்மினி `பேபி'யாக நடித்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்த `நம் நாடு' படம் முக்கியமானது. இந்தப் படத்தில் குட்டி பத்மினியும், பேபி ஸ்ரீதேவியும் நடித்திருந்தனர். படத்தில் இருவரும் எம்.ஜி.ஆரின் அண்ணன் டி.கே.பகவதியின் மகள் - மகனாக (ஸ்ரீதேவிக்கு பையன் வேடம்) நடித்தனர்.

    எம்.ஜி.ஆருடன் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம் பற்றி குட்டி பத்மினி கூறியதாவது:-

    "அப்போது நான் தொடர்ந்து பல படங்களில் மற்ற மொழிப் படங்களில் பிசியாக இருந்ததால் எம்.ஜி.ஆர். சாரின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு பெரும்பாலும் வந்து வந்து கைநழுவிப் போகும். காரணம் அவர் படம் என்றால் நிறைய நாட்களை மொத்தமாக கேட்பார்கள். ஆனால் படத்தை தயாரித்த நாகிரெட்டி அங்கிள் "இந்தப் படத்தில் குட்டி பத்மினி இருந்தேயாக வேண்டும்'' என்று சொல்லி விட்டதால், என் வாய்ப்பு உறுதியானது.

    எம்.ஜி.ஆர். சார் எனக்கு உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவம் பற்றி வகுப்பே எடுப்பார். தினமும் காலையில் என்னைப் பார்த்ததும், "ஸ்கிப்பிங் பண்ணினாயா?'' என்று கேட்பார். "இல்லை'' என்று சொன்னால் தன் காரில் இருக்கும் ஸ்கிப்பிங் கயிறை எடுத்து வரச்செய்து, `ஷாட்' இல்லாத நேரத்தில் பயிற்சி எடுக்கச் செய்வார்.

    மதியம் சாப்பாட்டு நேரத்தில் அவருடனே சாப்பிடச் செய்வார். சாப்பிட்டு முடிந்ததும் ஒரு மணி நேரம் ஆகும் வரை தண்ணீர் சாப்பிடக்கூடாது என்பார். சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது தவறில்லை என்பார். ஒருமுறை செட்டில் அம்மாவிடம் கோபமாக பேசிவிட்டேன். இதை கவனித்த எம்.ஜி.ஆர். என்னை அழைத்தார்.

    "அம்மாவை மட்டும் எப்போதும் மரியாதையாய் பேசணும். "தாயிற் சிறந்ததோர் கோவிலும் இல்லை''ன்னு பெரியவங்க எதுக்காக சொல்லி இருக்காங்க? அந்த அளவுக்கு அம்மாங்கறவங்க தெய்வத்துக்கு சமமானவங்க. எனக்கு எங்கம்மா இருந்தப்ப அவங்களோட அருமை தெரியலை. அவங்க இல்லாதப்பதான் `தெய்வத்தை அல்லவா இழந்திருக்கிறோம்'னு புரிஞ்சுது. அம்மா என்கூட இல்லைங்கறது இப்ப வரைக்கும் எனக்கு இழப்புதான். அதனால் ஒருநாளும் அம்மா கிட்ட முகம் சுளிக்கிற மாதிரி கூட பேசக்கூடாது'' என்றார்.

    இதை அவருக்கே உரிய பாசக்குரலில் அவர் சொன்னபோது, `அம்மா'வின் அன்பு எனக்கும் புரிந்தது. அதன் பிறகு அம்மாவிடம் கொஞ்சம் குரல் உயர்த்தி பேசுவதைக்கூட விட்டுவிட்டேன்.

    நான் பார்த்தவரை அவரைப் பார்த்து உதவி கேட்க, எப்போதும் யாராவது வந்து கொண்டே இருப்பார்கள். இதற்கென்றே அவரது மானேஜராக இருந்த பத்மனாபன் பணத்துடன் தயாராக இருப்பார். அத்தியாவசிய உதவி என்றால் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது கொடுப்பார். ஆயிரம் ரூபாய் என்பது அப்போது மிகப்பெரிய தொகை. யாராவது `ஸ்கூல் பீஸ்' கேட்டு வந்தால், "முகவரி கொடுத்திட்டுப் போங்க. பணம் அனுப்புகிறேன்'' என்பார். அது மாதிரி உதவி பெற்ற பலர் அவரை சந்தித்து கண் கலங்க நன்றி சொல்வதையும் பார்த்திருக்கிறேன்.

    இப்படி ஒரு தர்மத்தலைவரை என் சிறு வயதில் பார்த்ததால்தான் நானும் வளர்ந்த நேரத்தில் "மித்ராலயா'' டிரஸ்ட் என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கி என்னாலான உதவிகளை ஓசைப்படாமல் செய்து வருகிறேன்.''

    இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.
    "குழந்தையும் தெய்வமும்'' படத்தில் இரட்டை வேடத்தில் சிறப்பாக நடித்த குட்டி பத்மினிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது, கடைசி நேரத்தில் கை நழுவ இருந்தது. அதை இந்திரா காந்தி பெற்றுத்தந்ததுடன், கன்னத்தில் முத்தமிட்டுப் பாராட்டினார்.

    "குழந்தையும் தெய்வமும்'' படத்தில் இரட்டை வேடத்தில் சிறப்பாக நடித்த குட்டி பத்மினிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது, கடைசி நேரத்தில் கை நழுவ இருந்தது. அதை இந்திரா காந்தி பெற்றுத்தந்ததுடன், கன்னத்தில் முத்தமிட்டுப் பாராட்டினார்.

    ஏவி.எம். தயாரித்த "குழந்தையும் தெய்வமும்'', குட்டி பத்மினியின் வாழ்க்கையில் மிக முக்கிய படமாகும்.

    அது தயாரானபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி, குட்டி பத்மினி கூறியதாவது:-

    "ஏவி.எம்.மில் அப்போது நான், கமல், ரோஜா ரமணி ஆகியோர் குழந்தை நட்சத்திரங்கள். மூவருக்குமே ஏவி.எம். காண்ட்ராக்ட் போட்டு வைத்திருந்தார்கள். இதனால், படப்பிடிப்பு இருக்கிறதோ இல்லையோ காலை 8 மணிக்கெல்லாம் கமல், ரோஜா ரமணியும் என்னுடன் ஏவி.எம்.முக்கு வந்து விடுவார்கள்.

    ஸ்டூடியோவில் எங்களுக்கு வசன உச்சரிப்பு பயிற்சி நடக்கும். தமிழில் வசனம் எப்படி பேசவேண்டும் என்று, லட்சுமி நாராயணன் சொல்லிக்கொடுப்பார். அது மாதிரி தெலுங்கு, இந்தி மொழிக்கும் தனித்தனி ஆசிரியர்கள் இருந்தார்கள்.

    செட்டில் நானும் கமலும் ரொம்பச் செல்லங்கள். அங்கங்கே சுற்றி வருவோம். படப்பிடிப்பு இல்லையென்றால் நானும் கமலும் ஒவ்வொரு இடமாக சுற்றிக்கொண்டே இருப்போம். எடிட்டிங் ரூமைக்கூட விடுவதில்லை. அங்கு எடிட்டிங் செய்யப்பட்ட பிறகு பிலிம் ரோலை நாங்களே சுரண்டி ஒட்டுவோம். குழந்தையும் தெய்வமும் படத்தில் என் சுட்டித்தனம் பார்த்தே அந்த இரட்டை வேடத்தை எனக்கு கொடுத்தார்கள் என்பதற்காக இவ்வளவும் சொன்னேன்.

    குழந்தையும் தெய்வமும் படத்தை இயக்கியவர்களும் இரட்டையர்களான கிருஷ்ணன் -பஞ்சு. இவர்களில் கிருஷ்ணன் சார் ரொம்ப அமைதியானவர். வேலை வாங்குவதிலும் அமைதியான அணுகுமுறைதான் இருக்கும். பஞ்சு சாருக்கோ `பட்பட்'டென கோபம் வரும். என்றாலும் சில நேரங்களில் பாசத்தையும் பொழிந்து விடுவார்.

    கதையில் எனது இரட்டை வேடம் எப்படிப்பட்டது என்பதை முதலிலேயே தெளிவாக சொல்லியிருந்ததால் `லல்லி- பப்பி' என்ற அந்த இரண்டு கேரக்டர்களையும் சரியாக செய்ய முடிந்தது.''

    இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.

    "குழந்தையும் தெய்வமும்'' படம் தயாரான நேரத்தில் பெருந்தலைவர் காமராஜருக்கு அந்தப் படத்தை போட்டுக்காட்டினார், ஏவி.மெய்யப்ப செட்டியார். காமராஜருடன் குட்டி பத்மினியும் படம் பார்த்தார்.

    படம் முடிந்து வெளியே வந்ததும் நடந்த சுவாரசிய சம்பவம் பற்றி குட்டி பத்மினி கூறியதாவது:-

    "படம் பார்த்து முடிந்ததும் என்னைப் பார்த்த காமராஜர் அங்கிள், "பப்பி இங்கே இருக்கே! லல்லி எங்கே?'' என்று கேட்டார். அவரிடம், "இரண்டுமே நான்தான் அங்கிள்'' என்றேன். அவர் நம்பவில்லை. "என்னை ஏமாத்த முடியாதுண்ணேன்'' என்றார்.

    பெருந்தலைவர் அதிகம் சினிமா பார்க்காதவர். அதனால் இரட்டைக் குழந்தைகளே படத்தில் நடித்திருப்பதாக நினைத்தார். சரவணன் சாரும், முருகன் சாரும் அதன் பிறகு "லல்லி -பப்பியாக இரட்டை வேடத்தில் வருவது இந்த சின்னப்பெண்தான்'' என்று கூறி, இரட்டை வேடம் படமாக்கப்படும் விதத்தையும் விவரித்தனர்.

    சிறுவயதில் இருந்தே எனக்கு தைரியம் அதிகம். பாம்பு என்றால் பயப்படமாட்டேன். "குழந்தையும் தெய்வமும்'' படத்தில் கூட பாம்பு காட்சி வரும். நான் பயப்பட்டதில்லை.

    ஆனால், சில குழந்தை நட்சத்திரங்கள் பாம்பைக் கண்டால் ரொம்பவே பயப்படுவார்கள். "சத்ய ஹரிச்சந்திரா'' என்ற கன்னடப்படத்தில் நான் அரிச்சந்திரனின் மகன் லோகிதாசனாக நடித்தேன். இந்தக் கதையில் லோகிதாசனை பாம்பு தீண்டுவது போல் காட்சி வரும். இந்த படம் எடுக்கப்பட்ட நேரத்தில் இதே கதையை தெலுங்கிலும் எடுத்தார்கள். அந்தப் படத்தில் லோகிதாசனாக நடித்த சிறுவன், பாம்பு தீண்டுவதாக எடுக்கவிருந்த காட்சியில் மட்டும் நடிக்க மறுத்துவிட்டான். பாம்பைப் பார்த்ததுமே அவன் ஓட ஆரம்பித்தான்!

    ஏவி.எம். ஸ்டூடியோவில்தான் இந்த பாம்புக் காட்சி எடுக்க இருந்தார்கள். அப்போது கன்னட ஹரிச்சந்திரா படத்தில் லோகிதாசனாக நடித்த குழந்தை யார் என்று விசாரித்து, நான் இருந்த படப்பிடிப்பு தளத்துக்கு தேடி வந்துவிட்டார்கள். நான் நடித்துக் கொண்டிருந்த டைரக்டரிடம் கேட்டு, பக்கத்து ப்ளோரில் நடந்த தெலுங்கு படப்பிடிப்புக்கு அழைத்துப் போனார்கள். பாம்பு கடிக்கிற அந்த சீனில் என் கால் மட்டும் நடித்தது! லோகிதாசனாக நடித்த அந்தப்பையன் இந்தக்காட்சி படமானபோது என்னை ஒருவித மிரட்சியுடனே பார்த்துக் கொண்டிருந்தான்.

    தமிழில் "குழந்தையும் தெய்வமும்'' படத்தில் நடித்த நேரத்தில் தெலுங்கில் "ஆஸ்தி பருகுலு'', கன்னடத்தில் "சத்ய ஹரிச்சந்திரா'' படங்களிலும் நடித்து முடித்தேன். மூன்று படங்களுமே அந்த வருடத்திலேயே வெளியானது.

    சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான மத்திய அரசு தேர்வுக்குழு மூன்று மொழிகளுக்கும் சிறந்த பேபி நட்சத்திரமாக என்னை தேர்ந்தெடுத்தது. ஆனால் எந்த மொழியிலாவது ஒரு படத்துக்குத்தான் தேசிய விருது கொடுக்க முடியும் என்ற நிலை வந்தபோது, அவர்கள் கலந்தாலோசித்து "குழந்தையும் தெய்வமும்'' படத்துக்கு அறிவித்தார்கள்.

    விருது வாங்குவதற்காக டெல்லிக்கு விமானத்தில் போனோம். அப்போது தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரியாக இருந்த இந்திரா காந்தி விருதுகளை வழங்க இருந்தார்.

    "குழந்தையும் தெய்வமும்'' படத்தில் என் அப்பா- அம்மாவாக நடித்திருந்த ஜெய்சங்கர் - ஜமுனா, டைரக்டர்கள் கிருஷ்ணன் - பஞ்சு ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தனர்.

    அதில்தான் சிக்கல். படத்தின் டைரக்டர் கிருஷ்ணன் பஞ்சு என்றதும், அவர்களை ஒருவர் என்று எண்ணி ஒரு கேடயத்தை மட்டும் தயார் செய்துவிட்டார்கள். இப்போது டைரக்டருக்கு இரண்டு விருது கொடுத்தாக வேண்டிய கட்டாயம் நேர்ந்ததால், என்னை தவிர்த்திருக்கிறார்கள். இது எனக்குத் தெரியாது.

    விழா நடக்கும் நாளில் விருது பெற இருந்தவர்களை தனி வரிசையில் உட்கார வைத்திருந்தார்கள். என்னை பொதுவான பார்வையாளர்கள் இருக்கும் இடத்தில் உட்கார வைத்தார்கள். என்னால் தாங்க முடியவில்லை. என்னை அழைத்து வந்திருந்த ஏவி.எம்.முருகன் அவர்களிடம் காரணம் கேட்டேன். அவர் உண்மையை சொல்லிவிட்டார்.

    நிர்வாகக்குழு செய்த தவறுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? 3 மொழிப்படங்களிலும் நடித்ததற்காக மூன்றுமே விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு, தமிழ்ப்படத்துக்கு உறுதிப்படுத்தப்பட்டு அழைத்தும் வந்த பிறகு எனக்கு இல்லை என்றால் எனக்கு எப்படி இருக்கும்?

    விழாவில் விருதுகளை வழங்கி முடித்து விட்டு, இந்திரா காந்தி புறப்பட்டுக் கொண்டிருந்தார். நான் நேராக அவரை நோக்கி ஓடினேன். பாதுகாப்பையும் தாண்டி அவரை நெருங்கியதும் அவரை அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டேன்.

    உடனே இந்திரா காந்தி என்னிடம் பரிவுடன், "என்ன வேணும்மா உனக்கு?'' என்று விசாரித்தார். அவர் கேட்டதுதான் தாமதம்... நான் கடகடவென்று 3 மொழிகளிலும் சிறந்த பேபி நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தேசிய விருது பெற வந்தது வரை சொல்லிவிட்டேன். பொறுமையாக கேட்டவரிடம், "நேரு மாமா இருந்தா எனக்கும் கொடுத்திருப்பாரே'' என்றேன்.

    இந்திரா காந்தி, என்னை தட்டிக்கொடுத்தார். "குழந்தையும் தெய்வமும்'' படத்தைப் பார்க்க விரும்புவதாக தேர்வுக்குழுவினரிடம் தெரிவித்தார். அன்றிரவே சென்னையில் இருந்து "குழந்தையும் தெய்வமும்'' படப்பெட்டி அனுப்பப்பட, மறுநாளே படம் பார்த்தார்.

    படம் பார்த்து முடித்ததும் எனக்கான விருதை உறுதிபடுத்திய இந்திரா காந்தி, மறுநாள் நடக்கும் விருதின்போது விருது வழங்கப்படும் என்று தகவல் அனுப்பினார்.

    இரண்டு தினங்களுக்கு முன் நடந்த விழாவில் ராஜ்கபூர் - நர்கீஸ் இருவரும் விருது பெற வர இயலவில்லை. அவர்கள் வந்த விமானத்தில் பறவை மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பயணத்தை தவிர்த்திருந்தார்கள். எனவே மறுநாள் நடந்த விருதின்போது ராஜ்கபூர், நர்கீசுடன் எனக்கும் விருது வழங்கினார் இந்திரா காந்தி.

    எனக்கு விருது கொடுத்தபோது, "பிரமாதமா நடிச்சிருக்கே'' என்று சொன்னதோடல்லாமல் எனக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்து பாராட்டினார்.''

    இவ்வாறு கூறினார், குட்டி பத்மினி.
    "நெஞ்சில் ஓர் ஆலயம்'' இந்தியில் தயாரிக்கப்பட்டபோது, தமிழில் குட்டி பத்மினி நடித்த வேடத்தில் இந்தி குழந்தை நட்சத்திரம் நடிப்பதாக இருந்தது. ஆனால், முடிவில் குட்டி பத்மினிக்கே அந்த வாய்ப்பு கிடைத்தது.

    "நெஞ்சில் ஓர் ஆலயம்'' இந்தியில் தயாரிக்கப்பட்டபோது, தமிழில் குட்டி பத்மினி நடித்த வேடத்தில் இந்தி குழந்தை நட்சத்திரம் நடிப்பதாக இருந்தது. ஆனால், முடிவில் குட்டி பத்மினிக்கே அந்த வாய்ப்பு கிடைத்தது.

    ஸ்ரீதர் இயக்கிய "நெஞ்சில் ஓர் ஆலயம்'' படம் வெளிவந்து மகத்தான வெற்றி பெற்றது. காதலின் இலக்கணத்தை மூன்றே மூன்று கேரக்டர்கள் மூலம் நெஞ்சைத் தொடும் விதத்தில் சொன்ன ஸ்ரீதர், இந்திய அளவில் பேசப்படும் இயக்குனர் ஆகி விட்டார்.

    இந்தப் படத்தின் வெற்றி, அதை இந்திக்கும் கொண்டு சென்றது. இந்தியில் அப்போது பிரபலமாக இருந்த ராஜேந்திரகுமார் - மீனாகுமாரி நடித்தார்கள். ஸ்ரீதரே இயக்கினார். படத்துக்கு "தில் ஏக் மந்திர்'' என்று பெயர் வைத்தார் ஸ்ரீதர்.

    தமிழில் செய்த அதே கேரக்டரை இந்தியிலும் குட்டி பத்மினியே செய்தார். ஆனால் இந்த கேரக்டரில் நடிக்க அவர் ஒரு போராட்டத்தை சந்திக்க வேண்டியிருந்தது. அதுபற்றி குட்டி பத்மினி கூறுகிறார்:-

    "ராஜேந்திரகுமார் இந்தியில் பிரபல நடிகர். தமிழ்ப்படத்தை பார்த்ததும் ஆர்வமாக நடிக்க ஒப்புக்கொண்டவர், நான் நடித்த குழந்தை கேரக்டரில் அப்போது இந்தியில் பிரபலமாக இருந்த `பரீதா' என்ற குழந்தை நட்சத்திரம் நடிக்கவேண்டும் என்று கூறிவிட்டார்.

    ஸ்ரீதர் சாருக்கோ என்னைத்தான் அந்த கேரக்டரில் போடவேண்டும் என்று ஆசை. ஆனால், படத்தின் ஹீரோ விருப்பம் வேறு மாதிரி இருக்கிறதே! "நாம் பணம் போடுகிறோம். ஆனால், நம் இஷ்டப்படி நடிகர்களை தேர்வு செய்ய முடியவில்லையே!'' என்று அம்மாவிடம் வருத்தப்பட்டவர், "உங்கள் பெண்ணையும் செட்டுக்கு அழைத்து வந்து விடுங்கள். ஆனதை பார்க்கலாம்'' என்று சொல்லிவிட்டார்.

    இந்திப்படத்தின் படப்பிடிப்பும் சென்னையில்தான் நடந்தது. செட்டுக்கு வந்ததும் நடிகை மீனாகுமாரியிடம் ஒட்டிக்கொண்டேன். அந்த ஆன்ட்டிக்கு குழந்தை கிடையாது. அதனால் என் மீது அதிக பாசம் காட்டினார்கள். படப்பிடிப்பு இடைவேளையில் என்னைக் கொஞ்சிக் கொண்டிருப்பார்கள்.

    அதே நேரத்தில், தமிழில் நான் நடித்த கேரக்டரில் அந்தப் பெண் பரீதாவே இந்தியில் நடித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீதர் சாராலும் எதுவும் செய்யாத நிலை.

    ஆனால் இந்த நிலைக்கும் ஒரு முடிவு வந்தது. நடிகர் மகமூத் (தமிழில் நாகேஷ் செய்த வேடம்) அந்தப் பெண்ணுடன் நடித்துக் கொண்டிருந்த ஒரு கட்டத்தில் காட்சி சரியாக அமையவில்லை. பரீதா 15 டேக் வரை போய்விட்டார். அப்போது டைரக்டர் ஸ்ரீதரை நோக்கிப்போன மீனாகுமாரி, என்னை சுட்டிக்காட்டி, "தமிழில் இந்தப் பொண்ணுதானே செய்தது? இதை ஒரு தரம் `ட்ரை' பண்ணிப் பாருங்களேன்!'' என்றார்.

    இப்படியொரு வாய்ப்பைத்தானே ஸ்ரீதர் சார் எதிர்பார்த்தார்! இப்போது அந்த சீனில் நான் நடித்துக்காட்ட வேண்டும். காட்சி ஓ.கே. என்றால் தொடர்ந்து நானே நடிக்கலாம்!

    ஸ்ரீதர் சாரிடம் உதவி இயக்குனர்களாக இருந்த டைரக்டர் மாதவன், டைரக்டர் சி.வி.ராஜேந்திரன் இருவரும், "ஒரே டேக்ல ஓ.கே. பண்ணிடு! தமிழ்நாட்டு மானத்தை காப்பாற்று'' என்றார்கள்.

    நான் அந்தக் காட்சியை ஒரே டேக்கில் சரியாகச் செய்தேன். இப்படியாக நான்தான் நடிக்க வேண்டும் என்று ஸ்ரீதர் சார் ஆசைப்பட்டது நிறைவேறிவிட்டது.

    இந்தப் படத்துக்காக "பிலிமாலயா''வின் சிறந்த குழந்தை நட்சத்திர விருது எனக்கு கிடைத்தது.

    அப்போதெல்லாம் குழந்தை நட்சத்திரங்களுக்கென்று படத்தில் ஒரு பாட்டு நிச்சயம். நாங்கள் பாடாவிட்டாலும் எங்களை மையமாக வைத்தாவது பாட்டு இருக்கும். "நெஞ்சில் ஓர் ஆலயம்'' படத்தில் தேவிகா என்னை தூக்கி வைத்துக்கொண்டு "முத்தான முத்தல்லவோ...'' என்று பாடுவார்.

    "குழந்தையும் தெய்வமும்'' படத்தில் எனக்கு 2 பாட்டுகள். "கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே'', "குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று'' என்று 2 பாட்டுகளுமே மிகப்பிரபலம். நவராத்திரி படத்தில் சாவித்திரி என்னை வைத்துக்கொண்டு "சொல்லவா, கதை சொல்லவா'' என்று பாடுவார்.

    நான் நடித்த முதல் கன்னடப்படம், முதல் மலையாளப்படம் இரண்டையுமே தயாரித்தவர் டைரக்டர் பி.ஆர்.பந்துலுதான். இந்த வகையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளிலும் நடிக்கும் "பேபி நட்சத்திரம்'' என்ற பெயர் எனக்கு வந்து சேர்ந்தது.

    5 மொழிகளிலும் நடிக்க வேண்டி வந்ததால் மொழிப் பிரச்சினை - அதாவது உச்சரிப்புப் பிரச்சினை ஏற்படவே செய்யும். அதைத் தவிர்க்க, அம்மா எனக்கு ஒவ்வொரு மொழியிலும் "டியூஷன்'' வைத்தார்கள். அந்தந்த மொழியின் உச்சரிப்பு முறைகளை அர்த்தத்துடன் புரிந்து நடிக்க இது உதவியாக இருந்தது.

    "நவராத்திரி'' படத்தில் நடிக்கும்போது நான் ரொம்ப சின்னக்குழந்தை. இதனால் `லஞ்ச்' சமயத்தில் சாவித்திரியம்மாவே எனக்கு வெள்ளிக் கிண்ணத்தில் சாதம் ஊட்டி விடுவாங்க.

    அப்போதெல்லாம் பிரபல நடிகைகளுக்குள் நடிப்பில் மட்டுமே போட்டி இருந்தது. நடிப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் நல்ல தோழிகளாக இருப்பார்கள். ஒரு சமயம், வாகினி ஸ்டூடியோவில் நடந்த படப்பிடிப்பில் இருந்தேன். அங்கே நடந்த படப்பிடிப்புகளில் பத்மினி, சாவித்திரி, விஜயகுமாரி, ராஜசுலோசனா ஆகியோர் தனித்தனி செட்களில் இருந்தார்கள். `லஞ்ச்' சமயத்தில் எல்லோருமே சாவித்திரியின் ரூமுக்கு வந்துவிடுவார்கள். ஒன்றாகவே சாப்பிடுவார்கள். இன்றைய முன்னணி நட்சத்திரங்களிடம் இந்த அன்யோன்யம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

    அதுமாதிரி பத்மினி கேரளா போனால் சக நடிகைகளுக்கு புடவை எடுத்துக் கொடுப்பார். சாவித்திரி மும்பை போனால் விதவிதமான காஸ்ட்லி ஹேண்ட்பேக் வாங்கி வந்து பரிசளிப்பார்.

    சிறுவயதிலேயே `பேபி' பத்மினி என்ற பெயரில் நடிக்க வந்து விட்டதால், என் படிப்பு பாதிக்கப்பட்டு விடக்கூடாதே என்ற கவலை அம்மாவுக்கு இருந்தது. அதனால் என்னை தி.நகரில் உள்ள வித்யோதயா பள்ளியில் சேர்த்தார்கள். அங்கே, போதிய நாட்கள் நான் ஆஜராகவில்லை என்பதற்காக, திருப்பி அனுப்பி விட்டார்கள். அடுத்து ஹோலி ஏஞ்சல்ஸ் கான்வென்ட். அங்கும் இதுதான் நடந்தது.

    இதனால் அம்மா ஒரு காரியம் செய்தார். காலையில் 7 மணிக்கு தானே ஷூட்டிங். அதிகாலை 4 மணிக்கே என்னை எழுப்பி விடுவார். 6 மணிக்கு இந்தி பிரசார சபாவில் நடந்த இந்தி வகுப்புக்கு அழைத்துப்போவார். இந்தியில் வலுவாக வளரத் தொடங்கியதற்கு, இந்த அதிகாலைப் பயிற்சி உதவிகரமாக இருந்தது. பின்னாளில் இந்தியில் "பி.ஏ'' தேறினேன்.''

    இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.
    இந்தியாவிலேயே -ஏன், அகில உலகத்திலேயே -எந்தக் குழந்தை நட்சத்திரத்துக்கும் கிடைத்திராத பெருமை, குட்டி பத்மினிக்கு உண்டு. குழந்தை நட்சத்திரமாக 175-க்கு மேற்பட்ட படங்களில் நடித்தவர்! "குழந்தையும் தெய்வமும்'' படத்தில், இரட்டை வேடங்களில் பிரமாதமாக நடித்து குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்றவர்.
    இந்தியாவிலேயே -ஏன், அகில உலகத்திலேயே -எந்தக் குழந்தை நட்சத்திரத்துக்கும் கிடைத்திராத பெருமை, குட்டி பத்மினிக்கு உண்டு. குழந்தை நட்சத்திரமாக 175-க்கு மேற்பட்ட படங்களில் நடித்தவர்! "குழந்தையும் தெய்வமும்'' படத்தில், இரட்டை வேடங்களில் பிரமாதமாக நடித்து குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்றவர்.

    சிறு வயதிலேயே விருதுகள் பெற்ற `குட்டி' பத்மினி, இப்போது சின்னத்திரை தொடர் தயாரிப்பாளராக தனது கலைப்பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

    சினிமாவில், குழந்தை நட்சத்திரமாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி?

    `குட்டி' பத்மினி கூறியதாவது:-

    "குடும்ப வழியில்தான் எனக்கும் நடிப்பு வந்தது.

    தாத்தாவுக்கு மதுரை பக்கம் சொந்த ஊர். ஆயில் மில் வேலைக்காக `பெர்ஷியா' நாட்டுக்கு போனார். அங்கே பாட்டிக்கும், தாத்தாவுக்கும் காதல் ஏற்பட, இந்தக் காதல் திருமணத்தில் முடிந்தது.

    தாத்தா, பாட்டியுடன் சொந்த ஊர் மதுரைக்கு திரும்பி வந்தபோது, அம்மாவுக்கு 17 வயது. அம்மாவுக்கும் காதல் திருமணம்தான். மைசூரைச் சேர்ந்த சீனிவாசன் சக்ரவர்த்தி அய்யங்காரை காதலித்து மணந்து கொண்டார். அப்பாவின் அப்பா மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் பேஷ்கராக இருந்தவர்.

    எனக்கு 2 அக்கா. 2 அண்ணன்கள். வீட்டில் நான்தான் கடைக்குட்டி. சிறு வயதிலேயே குறும்பு அதிகம் என்று அம்மா சொல்வார்கள்.

    அப்பாவுக்கு சினிமாத்துறை மீது நாட்டம் ஏற்பட்டு சொந்தமாக படம் தயாரிக்கத் தொடங்கினார். அப்போது அம்மாவுக்கும் நடிக்க வாய்ப்புகள் வந்தன. சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்தார். பின்னாளில் சில படங்களில் அம்மா, அக்கா வேடங்களையும் ஏற்றார். `ஜெமினி'யின் பெரும்பாலான படங்களில் அம்மா இருப்பார்.

    நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அம்மாவுக்கும் நடிகை சாவித்திரிக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு ஆழமானபோது சாவித்திரியின் `ஹேர் டிரஸ்ஸராகவும்' அம்மா இருந்தார். நான் மூன்று மாதக் குழந்தையாக இருந்த நேரத்தில் அம்மா `பாக்யலட்சுமி' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தின் ஒரு பாடல் காட்சியில் நடிக்க 3 மாதக் குழந்தை ஒன்று தேவைப்பட்டிருக்கிறது. குழந்தையை கொண்டு வருவதாகச் சொன்னவர்கள் வரத் தாமதமாக, அதற்கு மேல் பொறுமையில்லாத டைரக்டர் பார்வையில் நான் பட்டிருக்கிறேன்.

    "இது யார் குழந்தை?'' என கேட்டிருக்கிறார். அம்மா "இது என் குழந்தைதான்'' என்று சொல்ல, "குழந்தையை தொட்டிலில் போட்டு இன்றைய பாடல் காட்சியை எடுத்து விடலாமா?'' என்று கேட்டிருக்கிறார். அம்மாவும் சம்மதம் சொல்ல, அந்தப் பாடல் காட்சிதான் சினிமாவில் நான் வந்த முதல் காட்சி.

    கொஞ்சம் வளர்ந்த நிலையில் "காத்திருந்த கண்கள்'', "பாசமலர்'' படங்களில் குட்டி சாவித்திரியாக வந்ததும் நான்தான். இப்படி `நடிப்பு' என்றே தெரியாமல் இரண்டொரு படங்களில் நடித்த நிலையில் வந்த வாய்ப்புதான் டைரக்டர் ஸ்ரீதரின் "நெஞ்சில் ஓர் ஆலயம்'' பட வாய்ப்பு. ஸ்ரீதர் சார் படத்தில் நடிக்க குழந்தை நட்சத்திரம் தேவைப்படுகிறது என்று தெரிய வந்ததும் நிறைய தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் படக்கம்பெனிக்கு படையெடுத்திருக்கிறார்கள். அம்மா என்னை அழைத்துப் போயிருக்கிறார்.

    குழந்தை நட்சத்திரத் தேர்வுக்கு, பின்னாளில் குணச்சித்ர நடிகையாக பரிமளித்த ஸ்ரீவித்யாவும் வந்திருந்தார். ஆனால், தேர்வு செய்யப்பட்டது நான்தான்!

    இந்தத் தேர்வின்போது டைரக்டர் ஸ்ரீதர் சார், கேமரா மேன் வின்சென்ட், பி.மாதவன் உள்பட தனது குழுவினருடன் அறைக்குள் இருந்தார். அந்த அறைக்கு இருந்த தள்ளு கதவு மூலம் அறைக்குள் நடப்பதை பார்க்க முடியும். நான் கீழே குனிந்து "என்னை எப்ப கூப்பிடப் போறீங்க அங்கிள்?'' என்று கேட்டேன். `அட யாரது? சரியான சுட்டிக் குழந்தையாக இருக்கிறதே' என்று என்னைப் பார்த்து ஸ்ரீதருடன் இருந்த பி.மாதவன் வியந்தார். அறைக்குள் நான் அழைக்கப்பட்டதும் மாதவன் சார் எனக்கு டயலாக் சொல்லிக் கொடுத்து பேசச் சொன்னார். அப்படியே பேசினேன். செலக்ட் ஆனேன்.

    பின்னாட்களில் நடிகையாகி விட்ட ஸ்ரீவித்யா என்னைப் பார்க்கும் போதெல்லாம் "எனக்கு கிடைக்க வேண்டிய `நெஞ்சில் ஓர் ஆலயம்' பட வாய்ப்பு உனக்கு வந்திருச்சு'' என்று கலாட்டா செய்து கொண்டிருப்பார்.

    இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக விஜயா வாகினி ஸ்டூடியோவில் ஆஸ்பத்திரி செட் போட்டிருந்தார்கள். காலை 6 மணிக்கு செட்டுக்கு போனால் படப்பிடிப்பு முடிய இரவு 9 மணி ஆகிவிடும்.

    படப்பிடிப்பில் நடிகர் நாகேஷ் சார் என்னிடம் ஏதாவது கலாட்டா பண்ணிக்கொண்டே இருப்பார். கல்யாண்குமார், தேவிகா இருவரும் என் மீது ரொம்ப பாசமாக இருப்பார்கள். முத்துராமன் சார் அதிகம் பேசாமல் அமைதியாக இருப்பார். செட்டில் எனக்கு பிஸ்கெட், சாக்லெட் தருவார்கள். நடிக்கிற நேரம் தவிர மற்ற நேரம் என் கையில் பிஸ்கெட் அல்லது சாக்லெட் இருக்கும்.

    டைரக்டர் ஸ்ரீதர் சார் ஒரு நாள் படப்பிடிப்புக்கான செலவு கணக்கு நோட்டை பார்த்திருக்கிறார். அதில் என் பெயரைப் போட்டு தினமும் 7 பிஸ்கெட் பாக்கெட் என எழுதப்பட்டு இருந்திருக்கிறது. "ஒரு சின்னக்குழந்தை எப்படி தினமும் 7 பிஸ்கெட் பாக்கெட்டுகள் சாப்பிடும்?'' என்று ஸ்ரீதர் சாருக்கு சந்தேகம் எழ, "நிஜமாகவே தினமும் 7 பிஸ்கெட் பாக்கெட் நான் காலி பண்ணுகிறேனா?'' என்று பார்க்க ஆள் வைத்திருக்கிறார்.

    மறுநாள் என் கையில் புரொடக்ஷனில் இருந்து 2 பிஸ்கெட் பாக்கெட்டுகள் கொடுத்தார்கள். அடுத்த வினாடியே அங்கு வந்த நாகேஷ் சார், அதில் ஒரு பாக்கெட்டை என்னிடம் இருந்து பறிக்காத குறையாக வாங்கிக் கொண்டார். பாக்கெட்டை பிரித்து அவர் `கறுக் மொறுக்' என்று தின்றதோடல்லாமல் தன் ïனிட் நண்பர்களுக்கும் ஆளுக்கு இரண்டு பிஸ்கெட் கொடுத்து பாக்கெட்டை காலி செய்தார். இந்த தகவல் ஸ்ரீதர் சாருக்கு போனது. அவர் நாகேஷ் சாரை அழைத்து, "அடப்பாவி! சின்னக் குழந்தை கிட்ட இருந்து பிஸ்கெட்டை பிடுங்கி சாப்பிடுறது நீதானா?'' என்று கேட்டார். இந்த வகையில் தினம் 7 பிஸ்கெட் பாக்கெட் என்ற பிரச்சினை முடிவுக்கு வந்தது.''

    இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.
    திருமணத்துக்குப்பின் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருந்த கே.ஆர்.விஜயா, பட அதிபர் சின்னப்பதேவர் அழைப்பை தட்ட முடியாமல் "அக்கா - தங்கை'' படத்தில் நடிக்க சம்மதித்தார். இந்தப்படம் வெற்றி பெறவே, திரை உலகில் கே.ஆர்.விஜயாவின் இரண்டாவது "ரவுண்ட்'' தொடங்கியது.
    திருமணத்துக்குப்பின் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருந்த கே.ஆர்.விஜயா, பட அதிபர் சின்னப்பதேவர் அழைப்பை தட்ட முடியாமல் "அக்கா - தங்கை'' படத்தில் நடிக்க சம்மதித்தார். இந்தப்படம் வெற்றி பெறவே, திரை உலகில் கே.ஆர்.விஜயாவின் இரண்டாவது "ரவுண்ட்'' தொடங்கியது.

    தொழில் அதிபர் வேலாயுத நாயரை மணந்து கொண்டு, சினிமாவில் நடிப்பதை அறவே நிறுத்திவிட்ட கே.ஆர்.விஜயா, கணவரோடும், ஒரே குழந்தை ஹேமாவுடனும் அமைதியாக குடும்பம் நடத்தி வந்தார். சினிமா உலகத்துடன் அவர் உறவு அறவே துண்டிக்கப்பட்டு விட்டது.

    இந்நிலையில், சாண்டோ சின்னப்பதேவர் அடுத்து தயாரிக்க இருந்த "அக்கா - தங்கை'' படத்தில் யார் யாரை நடிக்க வைக்கலாம் என்று கதை - வசன ஆசிரியர் ஆரூர்தாசுடன் ஆலோசனை நடத்தினார்.

    "அக்கா வேடத்திற்கு பத்மினி அல்லது சவுகார் ஜானகியைப் போடலாம். தங்கை வேடத்துக்கு கே.ஆர்.விஜயாதான் பொருத்தமாக இருப்பார்'' என்றார், ஆரூர்தாஸ்.

    "அந்தப்பெண்தான் திருமணத்துக்குப் பின் நடிப்பதில்லையே!'' என்றார், தேவர்.

    "நீங்கள் கேட்டுப் பாருங்கள். நீங்கள் நேரில் சென்று பேசினால் ஒருவேளை சம்மதிக்கலாம் அல்லவா?'' என்றார், தாஸ்.

    தேவர் சற்று யோசித்தார். "நீ சொல்வது சரிதான். எதற்கும் முயற்சி செய்து பார்ப்போம்'' என்றார்.

    தேவர் பிலிம்ஸ் கட்டிடத்துக்கு அடுத்த தெருவில்தான் கே.ஆர்.விஜயாவின் வீடு இருந்தது. அங்கு நடந்தே போனார், தேவர்.

    அப்போது, தோட்டத்தில் ஒரு நாற்காலியில் விஜயா உட்கார்ந்திருந்தார். எதிரே ஒரு ஊஞ்சலில் வேலாயுத நாயர் குழந்தையுடன் அமர்ந்திருந்தார்.

    தேவர் வருகையை அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவரைப் பார்த்ததும் வியப்பும், திகைப்பும், மகிழ்ச்சியும் பொங்க எழுந்து சென்று, வரவேற்றனர். உள்ளே அழைத்துச்சென்று சோபாவில் அமரச் செய்தனர்.

    தேவர், நேரடியாக விஷயத்துக்கு வந்தார். "அடுத்தபடியாக சகோதரிகளின் பாசத்தை மையமாக வைத்து, `அக்கா - தங்கை' என்று ஒரு படம் எடுக்கிறேன். கதை - வசனம் ஆரூர்தாஸ். தங்கை வேடத்தில் விஜயா நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்று தாசும், நானும் நினைக்கிறோம். நீங்க அனுமதிக்க வேண்டும்'' என்று வேலாயுத நாயரைப் பார்த்துக் கூறினார்.

    கே.ஆர்.விஜயாவின் கண்கள் கலங்கின. அவர் தேவர் காலில் விழுந்து, "அண்ணே! என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு சினிமாவே மறந்து போச்சு. இனிமேல் நடிப்பே எனக்கு வராது. உங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்று வருத்தப்படாதீர்கள்!'' என்று கெஞ்சினார்.

    சற்று நேரம் ஆழ்ந்த அமைதி நிலவியது. திடீரென்று வேலாயுதநாயர் எழுந்தார். "விஜயா! என்ன பேசுறே நீ! அண்ணன் எவ்வளவு பெரியவர்! அவர் நம் வீடு தேடி வந்து கேட்கிறார். அவர் வார்த்தையை மீறலாமா!'' என்று கோபத்துடன் கூறினார். பிறகு தேவர் பக்கம் திரும்பி, "அண்ணே, நீங்க போங்க. விஜயா உங்கப் படத்தில் நடிப்பாள்!'' என்றார்.

    தேவர் மகிழ்ச்சியுடன் திரும்பினார்.

    நீண்ட இடைவெளிக்குப்பின், ஸ்டூடியோவுக்குள் அடியெடுத்து வைத்தார், விஜயா.

    அக்காவாக சவுகார் ஜானகியும், தங்கையாக கே.ஆர்.விஜயாவும் நடித்தனர். கதாநாயகன் ஜெய்சங்கர்.

    நடித்து வெகு நாளாகிவிட்ட காரணத்தால் நடிக்கவும், வசனம் பேசவும் மிகவும் சிரமப்பட்டார், விஜயா. இயல்பாக நடிக்கவும், உணர்ச்சியுடன் வசனம் பேசவும் அவருக்கு ஆரூர்தாஸ் பயிற்சி அளித்தார்.

    பண்பட்ட நடிகையாதலால், விஜயா வெகு விரைவிலேயே முன்போல் உணர்ச்சி வேகத்துடன் நடிக்கத் தொடங்கினார். நாளுக்கு நாள் நடிப்பில் மெருகேறி, கோர்ட்டில் வாதாடும் இறுதிக் கட்டங்களில் அதி அற்புதமாக நடித்தார்.

    1969 பிப்ரவரி 28-ந்தேதி "அக்கா தங்கை'' வெளியாயிற்று. படம் வெற்றி பெற்று நூறு நாள் ஓடியது. கே.ஆர்.விஜயாவின் நடிப்பை எல்லோரும் போற்றிப் புகழ்ந்தனர்.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த கே.ஆர்.விஜயா, மீண்டும் படங்களில் நடிக்கலானார். இந்த இரண்டாவது ரவுண்டில், பல முக்கியமான படங்களில் அவர் நடித்தார்.

    சிவாஜிகணேசனுடன் அவர் நடித்த தங்கப்பதக்கம், பாரதவிலாஸ், ராமன் எத்தனை ராமனடி, நான் வாழவைப்பேன் ஆகிய படங்கள் மகத்தான வெற்றி பெற்றன. குறிப்பாக "நான் வாழ வைப்பேன்'' படத்தில் ரஜினிகாந்த் ஒரு முக்கிய வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். இது, கே.ஆர்.விஜயா சொந்தமாகத் தயாரித்த படம்.

    எம்.ஜி.ஆருடன் நடித்த "நல்ல நேரம்'', "நான் ஏன் பிறந்தேன்'' ஆகியவை பெரும் வெற்றிப்படங்கள்.

    தன்னால் எந்தப் பட அதிபரும் நஷ்டம் அடையக்கூடாது என்று நினைப்பவர், கே.ஆர்.விஜயா.

    டைரக்டர் மாதவன் தயாரித்த "முகூர்த்தநாள்'' என்ற படம் சரியாக ஓடவில்லை. அவர் நஷ்டம் அடைந்தார்.

    எனினும், கே.ஆர்.விஜயாவுக்கு பேசியபடி பணத்தைக் கொடுக்க அவர் முன்வந்தார். பணத்தை வாங்கிக்கொண்டு பூஜை அறைக்கு சென்ற விஜயா, சாஸ்திரத்துக்கு ஒரு சிறு தொகையை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதியை மாதவனிடமே கொண்டு வந்து கொடுத்துவிட்டார். இந்த நிகழ்ச்சியை, மாதவனே நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

    தன்னையும், தன் நடிப்பையும், புன்னகையையும் ரசிகர்கள் இன்னமும் விரும்புகிறார்கள் என்பதால் சின்னத்திரையில் நடித்து வருகிறார், கே.ஆர்.விஜயா.
    கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் "கற்பகம்'' படத்தில் நடித்துப் புகழ் பெற்ற கே.ஆர்.விஜயா, எம்.ஜி.ஆருடனும், சிவாஜிகணேசனுடனும் பல படங்களில் நடித்து புகழின் சிகரத்தை தொட்டார். குறுகிய காலத்தில் 400 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தார்.
    கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் "கற்பகம்'' படத்தில் நடித்துப் புகழ் பெற்ற கே.ஆர்.விஜயா, எம்.ஜி.ஆருடனும், சிவாஜிகணேசனுடனும் பல படங்களில் நடித்து புகழின் சிகரத்தை தொட்டார். குறுகிய காலத்தில் 400 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தார்.

    டைரக்டரும், கதை - வசன கர்த்தாவுமான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், அவர் தயாரித்த "கற்பகம்'' படத்துக்கு ஒரு புதுமுகத்தை தேடி வந்தார். கே.ஆர்.விஜயா பற்றி அறிந்து, அவரை அழைத்து வரச்சொல்லி நேரில் பார்த்தார்.

    தன்னுடைய கற்பகம் கதாபாத்திரத்துக்கு மிகப்பொருத்தமானவர் என்று தீர்மானித்து, கே.ஆர்.விஜயாவை ஒப்பந்தம் செய்தார்.

    படத்தில் ஜெமினிகணேசனும், சாவித்திரியும் இருந்தார்கள். எனினும், விஜயாவுக்கு மிக முக்கியமான கதாபாத்திரம். அதை சிறப்பாக செய்தார், கே.ஆர்.விஜயா.

    "கற்பகம் வெளிவந்து மகத்தான வெற்றி பெற்றது. அந்தப் படத்தின் மூலம், நட்சத்திர அந்தஸ்து பெற்றார், கே.ஆர்.விஜயா.

    "மன்னவனே அழலாமா, கண்ணீரை விடலாமா'' என்ற பாடல் காட்சியில், ரசிகர்களை கண் கலங்க வைத்தார்.

    பொதுவாக, விஜயாவின் தோற்றமும், புன்னகையும் அனைவரையும் கவர்ந்தன. "கற்பகம்'' ஒரே படத்தின் மூலம், ரசிகர்களின் உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டார்.

    "கற்பகம்'' 1963 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகியது. அதே சமயத்தில், எம்.ஜி.ஆர். நடித்த "பரிசு'', சிவாஜிகணேசன் நடித்த "அன்னை இல்லம்'' ஆகிய படங்களும் வெளிவந்தன.

    இந்தக் கடும் போட்டியை சமாளித்து, வசூலிலும் வெற்றி கண்டது "கற்பகம்.''

    கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் "கற்பகம்'' என்ற ஸ்டூடியோவை உருவாக்குவதற்கு, இந்தப்படம் அடைந்த வெற்றிதான் காரணம்.

    கே.ஆர்.விஜயாவுக்கு ஏக காலத்தில் பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழ்ப்பட உலகில் அவருடைய `சீசன்' தொடங்கியது என்றே கூறலாம்.

    சிவாஜிகணேசனுடன் "கை கொடுத்த தெய்வம்'' படத்தில் இணைந்து நடித்தார். இப்படம், 1964 ஜுலையில் வெளியாகியது.

    சின்னப்பதேவர் தயாரித்த "தொழிலாளி'' படத்தில், எம்.ஜி.ஆருடன் கே.ஆர்.விஜயா இணைந்து நடித்தார். இப்படம் 1964 செப்டம்பரில் வெளியாகியது.

    தொடர்ந்து சிவாஜியுடன் "செல்வம்'', "சரஸ்வதி சபதம்'', "கந்தன் கருணை'', "நெஞ்சிருக்கும்வரை'', "இருமலர்கள்'' முதலிய படங்களில் நடித்தார். "இருமலர்கள்'' படத்தில் பத்மினியும் நடித்திருந்தாலும், சிவாஜியை மணக்கும் முறைப்பெண்ணாக விஜயா நடித்தார்.

    சிவாஜி, பத்மினி, கே.ஆர்.விஜயா மூவரும் போட்டி போட்டு நடித்த அற்புத படம் "இருமலர்கள்.''

    எம்.ஜி.ஆருடன் நடித்த "பணம் படைத்தவன்'', "விவசாயி'' ஆகிய படங்களும் பெரிய வெற்றி பெற்றன.

    பிரபல பட அதிபர் நாகிரெட்டி, "இதயக்கமலம்'' படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டார்.

    முதலில், சிவாஜிகணேசன், சரோஜாதேவியை வைத்து கறுப்பு - வெள்ளையில் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டார்கள். பின்னர், புதுமுகங்களைப் போட்டு, கலரில் எடுக்க முடிவு செய்தார்கள். அதன்படி, கே.ஆர்.விஜயாவும், ரவிச்சந்திரனும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

    இதில் கே.ஆர்.விஜயாவுக்கு இரட்டை வேடம். பிரமாதமாக நடித்தார்.

    ஆரூர்தாஸ் வசனம் எழுதிய இப்படத்திற்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்தார்.

    "உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல'', "தோள் கண்டேன் தோளே கண்டேன்'', "மலர்கள் நனைந்தன பனியாலே...'' முதலான பாடல்கள் ஹிட் ஆயின.

    "பஞ்சவர்ணக்கிளி'', "ராமு'', "பட்டணத்தில் பூதம்'', "தங்கை'' என்று கே.ஆர்.விஜயாவுக்கு வெற்றிப்படங்கள் தொடர்ந்தன.

    திருச்சியில் நடந்த விழாவில், கே.ஆர்.விஜயாவுக்கு "புன்னகை அரசி'' என்ற பட்டம் வழங்கப்பட்டது.

    சில படங்களில், அம்மன் வேடத்தில் சிறப்பாக நடித்தார்.

    புகழின் உச்சியில் இருந்த கே.ஆர்.விஜயா, திருமணம் செய்து கொண்டு, இல்லற வாழ்வில் ஈடுபட முடிவு செய்தார்.

    முடிக்க வேண்டியிருந்த படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு, பிரபல தொழில் அதிபர் வேலாயுத நாயரை மணந்தார்.

    அதன்பின் படங்களில் நடிப்பதில்லை என்று தீர்மானித்தார். ஏராளமான வாய்ப்புகள் வந்தும், அவற்றை உதறித் தள்ளினார்.
    தன் வசீகரப் புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயத்தில் தனி இடம் பிடித்தவர் "புன்னகை அரசி'' கே.ஆர்.விஜயா.
    குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்த புன்னகை அரசி கே.ஆர்.விஜயா

    தன் வசீகரப் புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயத்தில் தனி இடம் பிடித்தவர் "புன்னகை அரசி'' கே.ஆர்.விஜயா.

    இவரது பூர்வீகம் திருச்சூர். இயற்பெயர் தெய்வநாயகி.

    தந்தை சித்தூரில் நகைக்கடை வைத்திருந்தார். விஜயா தன் தாயாருடன் திருச்சூரில் வசித்து வந்தார்.

    தந்தைக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், குடும்பம் பழனிக்கு குடியேறியது.

    பழனிக்கு வரும் பக்தர்களுக்கு விஜயாவின் தந்தை உதவிகள் புரிவார். தந்தையைப் பார்க்க, மலை உச்சிக்கு தினமும் ஐந்தாறு முறை ஏறிச்செல்வார், விஜயா.

    பழனியில் அம்மன் கோவில் ஒன்று இருக்கிறது. விஜயா பத்து வயதாக இருக்கும்போது, அங்கு நடைபெற்ற ஒரு நாடகத்தில் நடனம் ஆடினார்.

    பின்னர், கே.பி.தங்கமணி என்பவர் நடத்தி வந்த நாடகக்குழுவில் சேர்ந்தார். வால்பாறை, தாராபுரம், காங்கேயம் முதலிய இடங்களில் நடந்த நாடகங்களில் பங்கு கொண்டார்.

    இந்த சமயத்தில், பிரபல நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலு நாடகங்களில் நடிப்பதற்காக பழனிக்கு வந்தார். நாடகம், நடனம் ஆகியவற்றில் கே.ஆர். விஜயாவுக்கு உள்ள திறமை பற்றி நண்பர்கள் மூலம் அறிந்தார். விஜயாவை பார்க்க விரும்பினார். அப்போது, திருச்சூரில் இருந்த தன் பாட்டி வீட்டுக்கு அவர் சென்றிருந்தார்.

    "அதனால் என்ன? எப்போது வேண்டுமானாலும் நீங்கள் சென்னை வந்து என்னைப் பார்க்கலாம்'' என்று விஜயாவின் தந்தையிடம் தெரிவித்தார், தங்கவேலு.

    திருச்சூரில் இருந்து கே.ஆர்.விஜயா திரும்பியதும், நடந்ததை அவரிடம் கூறினார், அவர் தந்தை. தக்க சமயத்தில் சென்னைக்குச் செல்வதென்று இருவரும் முடிவு செய்தனர்.

    இந்த சமயத்தில் பழனியில் பொருட்காட்சி நடந்தது. அப்போது பிரபல திரைப்பட நடிகராக விளங்கிய எஸ்.எம்.குமரேசன் (ஜுபிடரின் `அபிமன்ï' படத்தில் கதாநாயகனாக நடித்தவர்) பழனி பொருட்காட்சியில் நாடகம் நடத்த வந்திருந்தார். அவருடைய "வள்ளித் திருமணம்'' நாடகத்தில் துணை நடிகையாக நடிக்கும் வாய்ப்பு கே.ஆர்.விஜயாவுக்கு கிடைத்தது.

    விஜயாவின் புன்னகையும், நடிப்பும் குமரேசனை கவர்ந்தன. "சென்னைக்கு வரும்போது என்னைப் பாருங்கள். என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன்'' என்று விஜயாவிடம் கூறினார்.

    இதைத்தொடர்ந்து, 1961-ம் ஆண்டு கடைசியில், கே.ஆர்.விஜயாவின் குடும்பம் சென்னையில் குடியேறியது.

    அப்போது, கதாசிரியர் விருதை ந.ராமசாமி ஒரு நாடகக் குழுவை நடத்தி வந்தார். அதில் கே.ஆர்.விஜயா சேர்ந்து சில நாடகங்களில் நடித்தார்.

    பி.ஏ.குமார் தயாரித்த "மகளே உன் சமத்து'' என்ற படத்தில், கே.ஆர்.விஜயாவுக்கு சிறு வேடம் கிடைத்தது.

    நிïடோன் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்தது. எம்.ஆர்.ராதா நடித்த காட்சி படமாகிக் கொண்டிருந்தது. அவருக்கு இரண்டு பக்கமும், இரண்டு பெண்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் கே.ஆர்.விஜயா.

    அவரைப் பார்த்த எம்.ஆர்.ராதா, "உன் பெயர் என்ன?'' என்று கேட்டார்.

    "தெய்வநாயகி'' என்று மெல்லிய குரலில் கூறினார், விஜயா.

    "தெய்வநாயகியா? நோ... நோ...! இதெல்லாம் ஓல்டு மாடல் பெயர். சினிமாவுக்கு எடுபடாது. விஜயா... கிஜயா... இப்படி ஏதாவது பெயர் வைத்துக்கொள்!'' என்றார், ராதா.

    அவர் கருத்தை விஜயாவின் தந்தை அப்படியே ஏற்றுக்கொண்டார். அன்றே தெய்வநாயகி, கே.ஆர்.விஜயாவாக மாறினார்.

    இதன்பின், நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தயாரித்த "முத்து மண்டபம்'' படத்தில், ஊனமுற்ற பெண்ணாக நடிக்கும் வாய்ப்பு கே.ஆர்.விஜயாவுக்கு கிடைத்தது.

    பின்னர் "விளக்கேற்றியவள்'' படத்திற்கு ஒப்பந்தம் ஆனார்.

    இதன் இடையே, மலையாளப்பட உலகில் இருந்து அழைப்பு வந்தது. "கால்பாடுகள்'' என்ற மலையாளப்படத்தில் சிறு வேடத்தில் நடித்தார்.

    இந்த சமயத்தில், கே.ஆர்.விஜயாவின் வாழ்க்கையில் மாபெரும் திருப்பம் ஏற்பட்டது.
    தஞ்சை ராமையாதாஸ், "ராணி லலிதாங்கி'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார். கதாநாயகனாக, எம்.ஜி.ஆர். நடித்தார். கிட்டத்தட்ட பாதி படம் தயாரான நிலையில் இருவருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட, கதாநாயகனாக சிவாஜிகணேசனை நடிக்க வைத்து படத்தை முடித்தார்.
    தஞ்சை ராமையாதாஸ், "ராணி லலிதாங்கி'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார். கதாநாயகனாக, எம்.ஜி.ஆர். நடித்தார். கிட்டத்தட்ட பாதி படம் தயாரான நிலையில் இருவருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட, கதாநாயகனாக சிவாஜிகணேசனை நடிக்க வைத்து படத்தை முடித்தார்.

    தஞ்சை ராமையாதாசின் மகள் ஆர்.விஜயராணி தனது தந்தை பற்றி கூறியதாவது:-

    சினிமாவில் பாட்டெழுதி வந்தாலும், காங்கிரஸ் தலைவர்களின் அப்பாவுக்கு நெருக்கமான நட்பு இருந்தது. பெருந்தலைவர் காமராஜர், கக்கன் போன்ற காங்கிரஸ் தலைவர்களிடம் அப்பாவுக்கு நெருக்கமான நட்பு இருந்தது. கலைஞர் மு.கருணாநிதி தனது வசனங்கள் மூலம் சினிமாவில் பிரபலமான நேரத்தில் அப்பாவுக்கும் நெருங்கிய நண்பராகி இருக்கிறார். 1965-ல் அப்பா காலமாகும்வரை அந்த நட்பு நீடித்தே வந்தது. லட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனுடனும் அப்பாவுக்கு நல்ல நட்பு தொடர்ந்தது.

    கருத்தாழ பாடல்கள் மட்டுமின்றி தமாஷான பாடல்கள் எழுதுவதிலும் அப்பா திறமையானவர். "சிங்காரி''யில் "ஒரு சாண் வயிறு இல்லாட்டா உலகத்தில் ஏது கலாட்டா'' என்கிற பாட்டை எழுதினது அப்பாதான்.

    "மதுரை வீரன்'' படத்தில் அப்பா எழுதின "வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க'' பாடல், அவருக்கு ரொம்பவும் புகழைத் தேடித்தந்தது.

    ஏற்கனவே நாடகத்துக்கு கதை எழுதியிருந்ததால், சினிமாவிலும் கதை முடிவாகும்போது அப்பாவிடம் கலந்து பேசுவார்கள். அப்பாவிடம் பாடல் எழுதும் திறமை மட்டுமின்றி, கதை ஞானமும் இருப்பதை தெரிந்து கொண்ட டைரக்டர் ராமண்ணா, "எம்.ஜி.ஆருக்காக ஒரு கதை தரமுடியுமா?'' என்று கேட்டார்.

    அப்பாவும் அப்போதே ஒரு கதை சொன்னார். அந்தக்கதை பிடித்துப்போக ராமண்ணா அதை எம்.ஜி.ஆரிடம் சொல்ல அவரும் இதையே படமாக்குவோம் என்றார். இப்படி எம்.ஜி.ஆரையும் கவர்ந்த அந்தக்கதைதான் `குலேபகாவலி' என்ற பெயரில் வெளிவந்தது.

    இந்தப் படத்துக்கு அப்பா முதலில் எழுதிய பாடல், "சொக்கா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு.'' இந்தப்பாடல் எம்.ஜி.ஆருக்கு ரொம்பப் பிடித்து, இதற்கு சிறப்பாக நடனக்காட்சி அமைக்க வேண்டும் என்று ராமண்ணாவிடம் சொல்லியிருக்கிறார்.

    இதே படத்துக்கு அப்பா எழுதி காலத்துக்கும் மறக்க முடியாத காதல் பாடலாகிவிட்ட பாடல், "மயக்கும் மாலைப்பொழுதே நீ போபோ'' பாடல். அப்பாவின் பாட்டெழுதும் வேகம் பார்த்த எம்.ஜி.ஆர். அப்பாவை "எக்ஸ்பிரஸ் கவிஞர்'' என்று பெருமையுடன் அழைப்பாராம்.

    இப்படி அப்பாவின் பாடல்களால் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆருடனேயே ஒரு கட்டத்தில் அப்பா மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.''

    கொள்கை விஷயத்தில் அப்பா நெஞ்சுறுதி மிக்கவர். எதற்காகவும், யாருக்காகவும் வளைந்து போகாதவர். `லலிதாங்கி' என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்க முடிவு செய்த அப்பா, எம்.ஜி.ஆரை கதாநாயகனாக போட்டார். பானுமதியையும் ஒப்பந்தம் செய்தார். படம் 10 ஆயிரம் அடிவரை வளர்ந்த நிலையில் எம்.ஜி.ஆருக்கும் அப்பாவுக்கும் இடையே ஒரு பிரச்சினை எழுந்தது.

    கதைப்படி எம்.ஜி.ஆருக்கு பக்தியுடன் கூடிய இளைஞர் வேடம். எனவே படத்தின் ஒரு பாடல் காட்சியில் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து வரவேண்டும்.

    இந்த காட்சிக்காக ஒரு பாடலையும் அப்பா எழுதினார்:

    "ஆண்டவனே இல்லையே

    தில்லை தாண்டவனே உன்போல்

    ஆண்டவனே இல்லையே''- இதுதான் பாட்டு.

    இந்த பாடல், அப்போது தி.மு.க.வில் இருந்த எம்.ஜி.ஆருக்கு உடன்பாடாக இல்லை. தான் சார்ந்த கட்சியின் `கடவுள் மறுப்புக் கொள்கை'க்கு முரணானது என்று கருதினார். அதனால் இந்தப் பாடல் காட்சியில் நடிக்கமாட்டேன் என்று மறுத்துவிட்டார்.

    அப்போதே எம்.ஜி.ஆர். பட உலகில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். எனவே, "எம்.ஜி.ஆரை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துப் போங்கள்'' என்று கலை நண்பர்கள் பலரும் அப்பாவை கேட்டுக்கொண்டார்கள்.

    ஆனால் அப்பா அதுபற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அதுவரை எடுத்த 10 ஆயிரம் அடி பிலிமையும் தூக்கிப்போட்டு விட்டு, அதே கதையை "ராணி லலிதாங்கி'' என்ற பெயரில் சிவாஜி -பானுமதியை வைத்து எடுத்து முடித்தார். இந்தப்படத்தில்தான் அதுவரை `பிரமிளா'வாக இருந்த நடிகை "தேவிகா'' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டார்.

    தான் நடித்து வந்த படத்தை பாதியில் விட்டு, சிவாஜியை வைத்து எடுத்தது எம்.ஜி.ஆருக்கு கோபம் ஏற்படுத்தவே செய்தது. உடனே தனது வக்கீல் மூலம் அப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அப்பா பதிலுக்கு தனது வக்கீல் மூலம் பதில் நோட்டீஸ் அனுப்பினார். அதில், "நான் "லலிதாங்கி'' என்று எம்.ஜி.ஆரை வைத்து எடுத்தது வேறு படம். இப்போது சிவாஜியை வைத்து எடுப்பது வேறு படம். இதற்குப் பெயர் "ராணி லலிதாங்கி'' என்று கூறியிருந்தார்.

    அப்பா இப்படி செய்த பிறகும்கூட எம்.ஜி.ஆர். அவரிடம் கோபித்துக்கொள்ளவில்லை. "நமக்குள் நடந்தது கொள்கை ரீதியிலான மோதல். அவரவர் கொள்கையில் உறுதியாக இருக்கும்போது இதுமாதிரியான நிகழ்வுகள் சகஜம்'' என்று பெருந்தன்மையாக கூறியதோடு, தொடர்ந்து தனது படங்களில் அப்பாவுக்கு பாட்டெழுதவும் வாய்ப்பு அளித்தார்.''

    இவ்வாறு விஜயராணி கூறினார்.

    தஞ்சை ராமையாதாஸ் நாடகத்துறையில் இருந்தபோது அவரது மாணவராக இருந்தவர் ஏ.பி.நாகராஜன். இவர் குரு எழுதும் நாடகங்களில் வில்லனாக நடித்து வந்ததோடு நடன நிகழ்ச்சியையும் இயக்கி வந்தார்.

    தஞ்சை ராமையாதாஸ் பாடல்களில் சில கருத்துக்களை துணிச்சலாக சொன்னார். அதனால் சிறு சிறு சர்ச்சைகள் எழுந்து அடங்கின. அதுபற்றி விஜயராணி கூறுகிறார்:-

    "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' என்ற பாடலில் அப்பா சொன்ன கருத்துக்கள், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. அப்பா அரசியலிலும் இருந்ததால், மாற்றுக் கட்சியினரை வசைபாடவே இந்த பாடலை எழுதினார் என்றும் சொல்லப்பட்டது. அதனால் அரசியல்வாதிகளுக்கும் புத்தி சொல்கிற மாதிரி "ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா? எண்ணிப் பாருங்க'' என்று எழுதினார். தூக்குத்தூக்கி படத்தில் அவர் எழுதிய "ஆனந்தக்கோனாரே'' பாடலும் சர்ச்சைக்குள்ளானது.

    சினிமாவில் அப்பா தயாரிப்பாளரானதுதான் அவர் செய்த தவறு. "ஆளைக் கண்டு மயங்காதே'' படம் பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியது. பாட்டெழுதி சம்பாதித்து வடபழனி பேசும்படம் அலுவலகம் அருகில் பெரிய பங்களாவை வாங்கினார். தயாரிப்பில் ஏற்பட்ட நஷ்டத்தில் அந்த பங்களாவை விற்றுவிட்டார்.''

    இவ்வாறு கூறினார், விஜயராணி.

    தமிழில் மிக அதிகப்படங்களுக்கு (சுமார் 500) வசனம் எழுதிய ஆரூர்தாசுக்கு, தஞ்சை ராமையாதாஸ்தான் ஆசான்.

    இதுபற்றி ஆரூர்தாஸ் கூறுகையில், "நான் 1953-ல் திரை உலகில் அடியெடுத்து வைத்தேன். `நாட்டியதாரா' என்ற படத்துக்கு தஞ்சை ராமையாதாசுக்கு உதவியாளராகப் பணிபுரிந்தேன். எனக்கு மாதம் 50 ரூபாய் சம்பளம் கொடுத்தார். ஜேசுதாஸ் என்ற என் பெயரை ஆரூர்தாஸ் என்று மாற்றியவர் அவரே. வசனம் எழுதுவதற்கான வழிமுறைகளை எனக்குக் கற்றுக் கொடுத்தார். இந்த அளவுக்கு நான் சாதனை புரிவதற்கு அடிப்படை அமைத்தவர் அவரே'' என்று நன்றி பெருக்குடன் குறிப்பிட்டார்.

    சினிமாவுக்கு பாட்டு, வசனம், தயாரிப்பு என்று பிஸியாகவே இருந்த நேரத்திலும், "திருக்குறள் இசையமுதம்'' என்ற புத்தகத்தை எழுதினார், தஞ்சை ராமையாதாஸ். திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தில் இருந்தும் ஒரு திருக்குறளை எடுத்து, அதை பல்லவியாக்கி அந்தந்த அதிகாரத்தின் முழுக்கருத்தையும் எதிரொலிக்கிற பாடல்களை எழுதினார். பாடல்களுக்கான இசையை, ராகத்துடன் புத்தகமாக வெளியிடவும் செய்தார்.

    1962-ம் ஆண்டில் இந்த குறள் காவியம் புத்தகமாக வெளிவந்தபோது, தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனார் அதற்கு முன்னுரை எழுதியிருக்கிறார். அதில், "இசை கற்கும் ஒவ்வொருவரும் இந்தப் பாடல்களை கற்று சுரம் உணர்ந்து பாடி கலை இன்பம் பெறவேண்டும்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    இந்த இசை நூலை நடிகர் சங்கத் தலைவராக இருந்த எம்.ஜி.ஆர். மூலம் வெளியிட்டார். கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் "திருக்குறள் இசையமுதம்'' எழுதியபோது அவரது உணர்வுகள் எத்தகையதாக இருந்தது? அதுபற்றி மகன் ரவீந்திரன் கூறுகிறார்:-

    "நாங்களெல்லாம் படங்களுக்கு பக்கம் பக்கமாக பாட்டெழுதுகிறோம். இரண்டே அடியில் ஒரு குறளை எழுதி, அதற்கு இரண்டு பக்க விளக்கவுரை சொல்லும் அளவுக்கு மக்களிடம் பதிந்து போனவர் திருவள்ளுவர். என் வாழ்நாளில் நான் செய்த கலைச் சேவைகளில் மிகப்பெரியதாக இந்தப் படைப்பை உணருகிறேன்'' என்று அப்பா சொன்னார்.

    திருவள்ளுவர் பற்றி எழுதி முடித்த பிறகு மூன்றாண்டுகள் வரையே இருந்தார். அப்பா மறைந்தது கூட 1965-ல் ஜனவரி 16-ந்தேதி திருவள்ளுவர் தினத்தில்தான்.

    45 வருடங்களுக்கு முன்பே அப்பா தந்த திருக்குறள் இசையமுதம் புத்தகத்தைப் படித்த சில கவிஞர்கள், "இதை இசைக் கல்லூரியில் பாடமாக வைக்கலாம்'' என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார்கள்.

    இவ்வாறு ரவீந்திரன் கூறினார்.

    கவிஞர் தஞ்சை ராமையாதாசுக்கு தாயாரம்மாள், ரங்கநாயகி என 2 மனைவிகள். வாரிசுகளும் ரவீந்திரன், விஜயராணி என இருவரே. ரவீந்திரன் பிரசாத் லேபில் சினிமா எடிட்டராக பணியாற்றுகிறார்.

    விஜயராணி குடும்பத்தலைவி. கணவர் நடராஜன் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த தம்பதிகளுக்கு விஸ்வராஜ் என்று ஒரே வாரிசு விஸ்வராஜ், என்ஜினீயரிங் படித்தவர்.

    சினிமா பாடலாசிரியர்களில் கவிஞர் தஞ்சை ராமையாதாசுக்கு தனியிடம் உண்டு. எம்.ஜி.ஆர். நடித்த குலேபகாவலி படத்திற்கு "மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ! இனிக்கும் இன்ப இரவே நீ வாவா'' பாடலும் தருவார். மாயாபஜார் படத்துக்கு "கல்யாண சமையல் சாதம்'' பாடலும் தருவார்.
    சினிமா பாடலாசிரியர்களில் கவிஞர் தஞ்சை ராமையாதாசுக்கு தனியிடம் உண்டு. எம்.ஜி.ஆர். நடித்த குலேபகாவலி படத்திற்கு "மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ! இனிக்கும் இன்ப இரவே நீ வாவா'' பாடலும் தருவார். மாயாபஜார் படத்துக்கு "கல்யாண சமையல் சாதம்'' பாடலும் தருவார்.

    காதலை நெஞ்சில் பதிக்கும் "மணாளனே மங்கையின் பாக்கியம்'' படப்பாடலான "அழைக்காதே! நினைக்காதே! அவை தனிலே என்னை நீ ராஜா''வும் தருவார்.

    நாட்டு நடப்புக்கு என்றும் பொருந்தும் "மலைக்கள்ளன்'' படப்பாடலான "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' பாடலும் தருவார்.

    புரியாத மொழியில் `ஜிகினா' வார்த்தைகளை கோர்க்கும் இன்றைய கவிஞர்களுக்கும் இவர் அன்றே முன்னோடியாக இருந்திருக்கிறார். அமரதீபம் படத்தில் "ஜாலியோ ஜிம்கானா'' பாடலை எழுதியதும் இவரே.

    கிராமத்து திருமண வீடுகளில் இப்போதும் மணப்பெண்ணுக்கு அவள் அண்ணன் புத்திமதி சொல்கிற மாதிரி அமைந்த "புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே! தங்கச்சி கண்ணே'' பாடலை போடுவார்கள். "பானை பிடித்தவள் பாக்கியசாலி'' படத்துக்காக இந்தப்பாடலை எழுதியதும் இவர்தான்.

    இப்படி காலத்தால் அழியாத பாடல்களை தந்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நின்று கொண்டிருப்பவர் தஞ்சை ராமையாதாஸ்.

    1939-ல் வெளிவந்த "மாரியம்மன்'' படத்தில் இவர் எழுதிய பாடல்தான் சினிமா உலகுக்கு இவரை கவிஞராக அறிமுகம் செய்தது. தொடர்ந்து 250 படங்களுக்கு மேல் எழுதியவர். எழுதிய பாடல்கள் இரண்டாயிரத்துக்கும் மேல்.

    தஞ்சையில் உள்ள மானம்பூச்சாவடி சொந்த ஊர். அங்குள்ள சென்ஸ் பீட்டர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது முடித்தவர், தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்கத்தில் படித்து "புலவர்'' பட்டம் பெற்றார். அதோடு ஆசிரியர் பயிற்சிப் படிப்பையும் முடித்தார். தஞ்சை ஆட்டுமந்தைத் தெருவில் உள்ள ஆரம்ப பாடசாலையில் ஆசிரியராக சேர்ந்தார்.

    பள்ளி ஆசிரியராக இருந்தவர், சினிமாவுக்கு பாட்டெழுத வந்தது எப்படி?

    கவிஞரின் மகன் ரவீந்திரன் இதற்கு பதில் சொல்கிறார்:-

    அப்பாவுக்கு அப்போதே பாட்டெழுதும் ஆர்வம் இருந்திருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அப்போது தஞ்சை சரஸ்வதி மகாலில் அடிக்கடி புலவர்கள் கூடி பாடல்கள் பற்றி விவாதிப்பது வழக்கம். இதில் ராஜாவின் அரண்மனைப் புலவர்களாக இருந்தவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சபையில் நடந்த பாட்டுப்போட்டியில் அரண்மனைப் புலவர்களும் ஆச்சரியப்படும் விதத்தில் அப்பா முதல் பரிசான தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறார்.

    அப்பா காங்கிரசில் இருந்தார். கட்சியில் ரொம்பவும் ஈடுபாடு. சுதந்திரப் போராட்ட காலத்தில் கட்சியின் கட்டளையை ஏற்று போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

    சுதந்திரம் கிடைத்த பிறகு "சுதந்திர போராட்ட தியாகி'' என்ற வகையில் கிடைத்த பட்டயம், பதக்கம் இரண்டையும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

    ஆசிரியப் பணியை தொடரும்போதே நாடகத் துறையிலும் நாட்டம் ஏற்பட, ஒரு நாடகக்குழு அவரை தன் சபாவில் வாத்தியாராக ஏற்றுக்கொண்டது. நாடக கதை - வசன - பாடலாசிரியருக்கு `வாத்தியார்' என்ற பெயர் நிலைத்து விடும். இந்த வகையில் நாடகத் துறையிலும் `வாத்தியார்' ஆனார். மச்சரேகை, பகடை, பவளக்கொடி, விதியின் வெற்றி, அல்லி அர்ஜ×னா, வள்ளி திருமணம் போன்ற நாடகங்களையும் நடத்தி வந்தார்.

    ஊர் ஊராக நாடகம் போட்டு வந்த அப்பாவை ராமசாமி பாவலர் என்பவர் சேலத்தில் நாடகம் போட அழைத்து வந்தார். அதே ஊரில் அறிஞர் அண்ணாவின் "வேலைக்காரி'', ''ஓர் இரவு'' போன்ற நாடகங்களை கே.ஆர்.ராமசாமி நடத்தி வந்தார். இரண்டு குழு நாடகங்களுக்கும் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்தது.

    அப்பாவின் வசனமும் பாடல்களும் நாடக மேடையில் பிரபலம் என்பதால், அவரது புகழ் சினிமாத்துறையிலும் பரவ ஆரம்பித்தது.

    இதனால் அப்பாவுக்கு சினிமாவில் பாட்டெழுதும் வாய்ப்பு வந்தது. இவரை சிறந்த கவிஞராக கண்டுகொண்ட சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அப்போது தயாரித்து வந்த "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி'' படத்துக்கு பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தது. அப்பா அந்தப் படத்துக்காக "வெச்சேன்னா வெச்சதுதான்'' என்று ஒரு பாடலை எழுதிக்கொடுக்க, அது அவர்களுக்கு பிடித்துப்போனது.

    அப்பாவை நாடகம் மூலமாக ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த நடிகர் டி.ஆர்.மகாலிங்கம், அப்பாவை மாடர்ன் தியேட்டர்சில் கவிஞராக பார்த்தபோது வியந்திருக்கிறார். அப்பாவின் கதை-வசனம் இயக்கத்தில் "மச்சரேகை'' நாடகம் 200 தடவை மேடையேறியிருப்பதை தெரிந்து கொண்ட டி.ஆர்.மகாலிங்கம் அதை தனது கம்பெனிக்காக படமாக்கித்தர முடியுமா? என்று கேட்க, அப்பாவும் சந்தோஷமாய் சம்மதித்திருக்கிறார்.

    இந்த வகையில் சினிமாவுக்காக அப்பா சென்னை வர காரணமாக இருந்தவர் டி.ஆர்.மகாலிங்கம்தான். அப்பாவின் பாட்டெழுதும் திறமையை முதலில் கண்டு கொண்டது நாகிரெட்டியாரின் விஜயா - வாகினி நிறுவனமே. 1951 முதல் 1960 வரை அந்த நிறுவனம் தயாரித்த "பாதாள பைரவி'', "மிஸ்ஸியம்மா'', "மாயாபஜார்'' போன்ற பல படங்களுக்கு வசனம், பாடல்கள் அப்பாதான். விஜயா - வாகினியின் ஆஸ்தான கவிஞர் என்ற தகுதியிலும் நிலைத்தார்.

    அன்று இசையுலகில் கொடிகட்டிப் பறந்த இசை மேதைகள் சி.ஆர்.சுப்பராமன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, ஜி.ராமநாதன், எஸ்.வி.வெங்கட்ராமன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்டசாலா, எஸ்.ராஜேஸ்வரராவ், ஆதிநாராயணராவ் ஆகியோரின் இசை அமைப்பில் அப்பா பாடல்கள் எழுதினார்.

    ஒரு சமயம் டைரக்டர் ஸ்ரீதர் "அமரதீபம்'' படத்துக்கு பாட்டெழுதி வாங்க அப்பாவிடம் வந்திருக்கிறார். பாடலுக்கான சூழ்நிலையை ஸ்ரீதர் விவரித்ததும் அப்பா, "நம்பினா நம்புங்க! நம்பாகாட்டி போங்க'' என்ற பல்லவியை சொன்னார். பதறிப்போன ஸ்ரீதர், "வாத்தியாரய்யா! இது எனது முதல் படம். அதோட படத்துக்கு நான் பதிவு பண்ணப்போற முதல் பாட்டும் இதுதான். இப்படி பாட்டு கிடைச்சா, படத்தை யாரும் வாங்காமல் போய்விடுவார்களே'' என்று கலக்கமாய் கூறியவர், "வேற ஒரு பாட்டு ஜாலியாய் வர்ற மாதிரி எழுதிக்கொடுங்க'' என்று கேட்டிருக்கிறார்.

    அப்பாவும் உடனே தமாஷாக, "ஜாலிலோ ஜிம்கானா, டோலிலோ கும்கானா'' என்று எழுதிக் கொடுத்திருக்கிறார்.

    "இதுக்கு என்ன அர்த்தம்?'' என்று ஸ்ரீதர் முழிக்க, அப்பாவோ, "கதைப்படி இது குறவன் - குறத்தி பாடற பாட்டு. குறவர்கள் பாஷை எனக்கும் தெரியாது. உனக்கும் தெரியாது. போய் தைரியமாய் ரிக்கார்டிங் செய். படம் அமோகமாக வெற்றி பெறும்'' என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். படம் வெற்றி பெற்றதோடு அப்பாவுக்கு "டப்பாங்குத்து பாடலாசிரியர்'' என்ற பெயரும் வந்து சேர்ந்தது. ஆனால் அப்பா அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது பாணியில் பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார்.

    கலைஞர் மு.கருணாநிதி அப்போது தங்கள் மேகலா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வந்த "குறவஞ்சி'' படத்துக்கு பாடல்கள் எழுத அப்பாவை அழைத்தார். அப்பா அப்போது மதுவுக்கு பழக்கப்பட்டுப் போயிருந்த நேரம். அதனால் அதை பாட்டிலேயே வரிகளாக்கி "எந்நாளும் `தண்ணி'யிலேயேதான் எங்க பொழப்பு இருக்குது ரா... ரா.... ரா...'' என்று எழுதினார்.

    சினிமாவில் `கேட்டது கிடைக்கும்' என்பது அப்பாவிடம்தான். இயக்குனர்கள் எந்த மாதிரி விரும்புகிறார்களோ, அந்த மாதிரி பாடல்களை கொடுப்பார். ஒருமுறை லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தனது "தங்கரத்தினம்'' படத்துக்கு ஒரு பாட்டு கேட்டார். பல்லவியில் "உதயசூரியன்'' என்ற வரி வரும்படி கேட்டுக் கொண்டார். அப்பாவும் "எதையும் தாங்கும் மனசு, என்னை ஏமாத்தப் பாக்குது வயசு, என் இதயவானிலே உதயசூரியன் எழுந்ததுதான் புதுசு'' என்று எழுதிக் கொடுத்தார்.

    அப்பா பிசியான கவிஞராக இருந்த நேரத்தில் கவிஞர் கண்ணதாசனும் பாட்டெழுத வந்து விட்டார். அவர் அப்போது "மாலையிட்ட மங்கை'' என்ற படத்தையும் தயாரித்தார். அந்தப் படத்திற்கு பாட்டு எழுத அப்பாவை கேட்டார். ஆனால் அப்பா இருந்த `பிஸி'யில் அவரால் பாட்டெழுதி கொடுக்க முடியாமல் போயிற்று. இதில் கண்ணதாசனுக்கு அப்பா மீது வருத்தம்.

    அந்தக் காலத்தில் `கதை, வசனம், பாடல்கள் ஒருவரே' என்ற நிலையை துவக்கி வைத்த முதல் கவிஞர் அப்பாதான். அதோடு நாடக உலகின் தந்தை என கொண்டாடப்படும் சங்கரதாஸ் சுவாமிகளை தமிழ் மண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்தவரும் அவர்தான். சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் `பபூன்' வேடமிட்ட சங்கரய்யரை கடைசி வரை ஆதரித்தார்.

    பின்னாளில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் சமாதிக்கு சென்று குருபூஜை நடத்தி, தன்னை சங்கரதாஸ் சுவாமிகளின் `ஏகலைவன்' என்றும் அழைத்துக் கொண்டார்''

    இவ்வாறு ரவீந்திரன் கூறினார்.
    ×