என் மலர்
சினிமா

குட்டி பத்மினிக்கு நழுவ இருந்த விருதை இந்திரா காந்தி கொடுத்தார்: கன்னத்தில் முத்தம் கொடுத்து பாராட்டு
"குழந்தையும் தெய்வமும்'' படத்தில் இரட்டை வேடத்தில் சிறப்பாக நடித்த குட்டி பத்மினிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது, கடைசி நேரத்தில் கை நழுவ இருந்தது. அதை இந்திரா காந்தி பெற்றுத்தந்ததுடன், கன்னத்தில் முத்தமிட்டுப் பாராட்டினார்.
"குழந்தையும் தெய்வமும்'' படத்தில் இரட்டை வேடத்தில் சிறப்பாக நடித்த குட்டி பத்மினிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது, கடைசி நேரத்தில் கை நழுவ இருந்தது. அதை இந்திரா காந்தி பெற்றுத்தந்ததுடன், கன்னத்தில் முத்தமிட்டுப் பாராட்டினார்.
ஏவி.எம். தயாரித்த "குழந்தையும் தெய்வமும்'', குட்டி பத்மினியின் வாழ்க்கையில் மிக முக்கிய படமாகும்.
அது தயாரானபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி, குட்டி பத்மினி கூறியதாவது:-
"ஏவி.எம்.மில் அப்போது நான், கமல், ரோஜா ரமணி ஆகியோர் குழந்தை நட்சத்திரங்கள். மூவருக்குமே ஏவி.எம். காண்ட்ராக்ட் போட்டு வைத்திருந்தார்கள். இதனால், படப்பிடிப்பு இருக்கிறதோ இல்லையோ காலை 8 மணிக்கெல்லாம் கமல், ரோஜா ரமணியும் என்னுடன் ஏவி.எம்.முக்கு வந்து விடுவார்கள்.
ஸ்டூடியோவில் எங்களுக்கு வசன உச்சரிப்பு பயிற்சி நடக்கும். தமிழில் வசனம் எப்படி பேசவேண்டும் என்று, லட்சுமி நாராயணன் சொல்லிக்கொடுப்பார். அது மாதிரி தெலுங்கு, இந்தி மொழிக்கும் தனித்தனி ஆசிரியர்கள் இருந்தார்கள்.
செட்டில் நானும் கமலும் ரொம்பச் செல்லங்கள். அங்கங்கே சுற்றி வருவோம். படப்பிடிப்பு இல்லையென்றால் நானும் கமலும் ஒவ்வொரு இடமாக சுற்றிக்கொண்டே இருப்போம். எடிட்டிங் ரூமைக்கூட விடுவதில்லை. அங்கு எடிட்டிங் செய்யப்பட்ட பிறகு பிலிம் ரோலை நாங்களே சுரண்டி ஒட்டுவோம். குழந்தையும் தெய்வமும் படத்தில் என் சுட்டித்தனம் பார்த்தே அந்த இரட்டை வேடத்தை எனக்கு கொடுத்தார்கள் என்பதற்காக இவ்வளவும் சொன்னேன்.
குழந்தையும் தெய்வமும் படத்தை இயக்கியவர்களும் இரட்டையர்களான கிருஷ்ணன் -பஞ்சு. இவர்களில் கிருஷ்ணன் சார் ரொம்ப அமைதியானவர். வேலை வாங்குவதிலும் அமைதியான அணுகுமுறைதான் இருக்கும். பஞ்சு சாருக்கோ `பட்பட்'டென கோபம் வரும். என்றாலும் சில நேரங்களில் பாசத்தையும் பொழிந்து விடுவார்.
கதையில் எனது இரட்டை வேடம் எப்படிப்பட்டது என்பதை முதலிலேயே தெளிவாக சொல்லியிருந்ததால் `லல்லி- பப்பி' என்ற அந்த இரண்டு கேரக்டர்களையும் சரியாக செய்ய முடிந்தது.''
இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.
"குழந்தையும் தெய்வமும்'' படம் தயாரான நேரத்தில் பெருந்தலைவர் காமராஜருக்கு அந்தப் படத்தை போட்டுக்காட்டினார், ஏவி.மெய்யப்ப செட்டியார். காமராஜருடன் குட்டி பத்மினியும் படம் பார்த்தார்.
படம் முடிந்து வெளியே வந்ததும் நடந்த சுவாரசிய சம்பவம் பற்றி குட்டி பத்மினி கூறியதாவது:-
"படம் பார்த்து முடிந்ததும் என்னைப் பார்த்த காமராஜர் அங்கிள், "பப்பி இங்கே இருக்கே! லல்லி எங்கே?'' என்று கேட்டார். அவரிடம், "இரண்டுமே நான்தான் அங்கிள்'' என்றேன். அவர் நம்பவில்லை. "என்னை ஏமாத்த முடியாதுண்ணேன்'' என்றார்.
பெருந்தலைவர் அதிகம் சினிமா பார்க்காதவர். அதனால் இரட்டைக் குழந்தைகளே படத்தில் நடித்திருப்பதாக நினைத்தார். சரவணன் சாரும், முருகன் சாரும் அதன் பிறகு "லல்லி -பப்பியாக இரட்டை வேடத்தில் வருவது இந்த சின்னப்பெண்தான்'' என்று கூறி, இரட்டை வேடம் படமாக்கப்படும் விதத்தையும் விவரித்தனர்.
சிறுவயதில் இருந்தே எனக்கு தைரியம் அதிகம். பாம்பு என்றால் பயப்படமாட்டேன். "குழந்தையும் தெய்வமும்'' படத்தில் கூட பாம்பு காட்சி வரும். நான் பயப்பட்டதில்லை.
ஆனால், சில குழந்தை நட்சத்திரங்கள் பாம்பைக் கண்டால் ரொம்பவே பயப்படுவார்கள். "சத்ய ஹரிச்சந்திரா'' என்ற கன்னடப்படத்தில் நான் அரிச்சந்திரனின் மகன் லோகிதாசனாக நடித்தேன். இந்தக் கதையில் லோகிதாசனை பாம்பு தீண்டுவது போல் காட்சி வரும். இந்த படம் எடுக்கப்பட்ட நேரத்தில் இதே கதையை தெலுங்கிலும் எடுத்தார்கள். அந்தப் படத்தில் லோகிதாசனாக நடித்த சிறுவன், பாம்பு தீண்டுவதாக எடுக்கவிருந்த காட்சியில் மட்டும் நடிக்க மறுத்துவிட்டான். பாம்பைப் பார்த்ததுமே அவன் ஓட ஆரம்பித்தான்!
ஏவி.எம். ஸ்டூடியோவில்தான் இந்த பாம்புக் காட்சி எடுக்க இருந்தார்கள். அப்போது கன்னட ஹரிச்சந்திரா படத்தில் லோகிதாசனாக நடித்த குழந்தை யார் என்று விசாரித்து, நான் இருந்த படப்பிடிப்பு தளத்துக்கு தேடி வந்துவிட்டார்கள். நான் நடித்துக் கொண்டிருந்த டைரக்டரிடம் கேட்டு, பக்கத்து ப்ளோரில் நடந்த தெலுங்கு படப்பிடிப்புக்கு அழைத்துப் போனார்கள். பாம்பு கடிக்கிற அந்த சீனில் என் கால் மட்டும் நடித்தது! லோகிதாசனாக நடித்த அந்தப்பையன் இந்தக்காட்சி படமானபோது என்னை ஒருவித மிரட்சியுடனே பார்த்துக் கொண்டிருந்தான்.
தமிழில் "குழந்தையும் தெய்வமும்'' படத்தில் நடித்த நேரத்தில் தெலுங்கில் "ஆஸ்தி பருகுலு'', கன்னடத்தில் "சத்ய ஹரிச்சந்திரா'' படங்களிலும் நடித்து முடித்தேன். மூன்று படங்களுமே அந்த வருடத்திலேயே வெளியானது.
சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான மத்திய அரசு தேர்வுக்குழு மூன்று மொழிகளுக்கும் சிறந்த பேபி நட்சத்திரமாக என்னை தேர்ந்தெடுத்தது. ஆனால் எந்த மொழியிலாவது ஒரு படத்துக்குத்தான் தேசிய விருது கொடுக்க முடியும் என்ற நிலை வந்தபோது, அவர்கள் கலந்தாலோசித்து "குழந்தையும் தெய்வமும்'' படத்துக்கு அறிவித்தார்கள்.
விருது வாங்குவதற்காக டெல்லிக்கு விமானத்தில் போனோம். அப்போது தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரியாக இருந்த இந்திரா காந்தி விருதுகளை வழங்க இருந்தார்.
"குழந்தையும் தெய்வமும்'' படத்தில் என் அப்பா- அம்மாவாக நடித்திருந்த ஜெய்சங்கர் - ஜமுனா, டைரக்டர்கள் கிருஷ்ணன் - பஞ்சு ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தனர்.
அதில்தான் சிக்கல். படத்தின் டைரக்டர் கிருஷ்ணன் பஞ்சு என்றதும், அவர்களை ஒருவர் என்று எண்ணி ஒரு கேடயத்தை மட்டும் தயார் செய்துவிட்டார்கள். இப்போது டைரக்டருக்கு இரண்டு விருது கொடுத்தாக வேண்டிய கட்டாயம் நேர்ந்ததால், என்னை தவிர்த்திருக்கிறார்கள். இது எனக்குத் தெரியாது.
விழா நடக்கும் நாளில் விருது பெற இருந்தவர்களை தனி வரிசையில் உட்கார வைத்திருந்தார்கள். என்னை பொதுவான பார்வையாளர்கள் இருக்கும் இடத்தில் உட்கார வைத்தார்கள். என்னால் தாங்க முடியவில்லை. என்னை அழைத்து வந்திருந்த ஏவி.எம்.முருகன் அவர்களிடம் காரணம் கேட்டேன். அவர் உண்மையை சொல்லிவிட்டார்.
நிர்வாகக்குழு செய்த தவறுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? 3 மொழிப்படங்களிலும் நடித்ததற்காக மூன்றுமே விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு, தமிழ்ப்படத்துக்கு உறுதிப்படுத்தப்பட்டு அழைத்தும் வந்த பிறகு எனக்கு இல்லை என்றால் எனக்கு எப்படி இருக்கும்?
விழாவில் விருதுகளை வழங்கி முடித்து விட்டு, இந்திரா காந்தி புறப்பட்டுக் கொண்டிருந்தார். நான் நேராக அவரை நோக்கி ஓடினேன். பாதுகாப்பையும் தாண்டி அவரை நெருங்கியதும் அவரை அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டேன்.
உடனே இந்திரா காந்தி என்னிடம் பரிவுடன், "என்ன வேணும்மா உனக்கு?'' என்று விசாரித்தார். அவர் கேட்டதுதான் தாமதம்... நான் கடகடவென்று 3 மொழிகளிலும் சிறந்த பேபி நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தேசிய விருது பெற வந்தது வரை சொல்லிவிட்டேன். பொறுமையாக கேட்டவரிடம், "நேரு மாமா இருந்தா எனக்கும் கொடுத்திருப்பாரே'' என்றேன்.
இந்திரா காந்தி, என்னை தட்டிக்கொடுத்தார். "குழந்தையும் தெய்வமும்'' படத்தைப் பார்க்க விரும்புவதாக தேர்வுக்குழுவினரிடம் தெரிவித்தார். அன்றிரவே சென்னையில் இருந்து "குழந்தையும் தெய்வமும்'' படப்பெட்டி அனுப்பப்பட, மறுநாளே படம் பார்த்தார்.
படம் பார்த்து முடித்ததும் எனக்கான விருதை உறுதிபடுத்திய இந்திரா காந்தி, மறுநாள் நடக்கும் விருதின்போது விருது வழங்கப்படும் என்று தகவல் அனுப்பினார்.
இரண்டு தினங்களுக்கு முன் நடந்த விழாவில் ராஜ்கபூர் - நர்கீஸ் இருவரும் விருது பெற வர இயலவில்லை. அவர்கள் வந்த விமானத்தில் பறவை மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பயணத்தை தவிர்த்திருந்தார்கள். எனவே மறுநாள் நடந்த விருதின்போது ராஜ்கபூர், நர்கீசுடன் எனக்கும் விருது வழங்கினார் இந்திரா காந்தி.
எனக்கு விருது கொடுத்தபோது, "பிரமாதமா நடிச்சிருக்கே'' என்று சொன்னதோடல்லாமல் எனக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்து பாராட்டினார்.''
இவ்வாறு கூறினார், குட்டி பத்மினி.
Next Story






