என் மலர்tooltip icon

    சினிமா

    சின்னப்பதேவர் அழைப்பை ஏற்று சினிமாவில் நடிக்க சம்மதித்த கே.ஆர்.விஜயா
    X

    சின்னப்பதேவர் அழைப்பை ஏற்று சினிமாவில் நடிக்க சம்மதித்த கே.ஆர்.விஜயா

    திருமணத்துக்குப்பின் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருந்த கே.ஆர்.விஜயா, பட அதிபர் சின்னப்பதேவர் அழைப்பை தட்ட முடியாமல் "அக்கா - தங்கை'' படத்தில் நடிக்க சம்மதித்தார். இந்தப்படம் வெற்றி பெறவே, திரை உலகில் கே.ஆர்.விஜயாவின் இரண்டாவது "ரவுண்ட்'' தொடங்கியது.
    திருமணத்துக்குப்பின் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருந்த கே.ஆர்.விஜயா, பட அதிபர் சின்னப்பதேவர் அழைப்பை தட்ட முடியாமல் "அக்கா - தங்கை'' படத்தில் நடிக்க சம்மதித்தார். இந்தப்படம் வெற்றி பெறவே, திரை உலகில் கே.ஆர்.விஜயாவின் இரண்டாவது "ரவுண்ட்'' தொடங்கியது.

    தொழில் அதிபர் வேலாயுத நாயரை மணந்து கொண்டு, சினிமாவில் நடிப்பதை அறவே நிறுத்திவிட்ட கே.ஆர்.விஜயா, கணவரோடும், ஒரே குழந்தை ஹேமாவுடனும் அமைதியாக குடும்பம் நடத்தி வந்தார். சினிமா உலகத்துடன் அவர் உறவு அறவே துண்டிக்கப்பட்டு விட்டது.

    இந்நிலையில், சாண்டோ சின்னப்பதேவர் அடுத்து தயாரிக்க இருந்த "அக்கா - தங்கை'' படத்தில் யார் யாரை நடிக்க வைக்கலாம் என்று கதை - வசன ஆசிரியர் ஆரூர்தாசுடன் ஆலோசனை நடத்தினார்.

    "அக்கா வேடத்திற்கு பத்மினி அல்லது சவுகார் ஜானகியைப் போடலாம். தங்கை வேடத்துக்கு கே.ஆர்.விஜயாதான் பொருத்தமாக இருப்பார்'' என்றார், ஆரூர்தாஸ்.

    "அந்தப்பெண்தான் திருமணத்துக்குப் பின் நடிப்பதில்லையே!'' என்றார், தேவர்.

    "நீங்கள் கேட்டுப் பாருங்கள். நீங்கள் நேரில் சென்று பேசினால் ஒருவேளை சம்மதிக்கலாம் அல்லவா?'' என்றார், தாஸ்.

    தேவர் சற்று யோசித்தார். "நீ சொல்வது சரிதான். எதற்கும் முயற்சி செய்து பார்ப்போம்'' என்றார்.

    தேவர் பிலிம்ஸ் கட்டிடத்துக்கு அடுத்த தெருவில்தான் கே.ஆர்.விஜயாவின் வீடு இருந்தது. அங்கு நடந்தே போனார், தேவர்.

    அப்போது, தோட்டத்தில் ஒரு நாற்காலியில் விஜயா உட்கார்ந்திருந்தார். எதிரே ஒரு ஊஞ்சலில் வேலாயுத நாயர் குழந்தையுடன் அமர்ந்திருந்தார்.

    தேவர் வருகையை அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவரைப் பார்த்ததும் வியப்பும், திகைப்பும், மகிழ்ச்சியும் பொங்க எழுந்து சென்று, வரவேற்றனர். உள்ளே அழைத்துச்சென்று சோபாவில் அமரச் செய்தனர்.

    தேவர், நேரடியாக விஷயத்துக்கு வந்தார். "அடுத்தபடியாக சகோதரிகளின் பாசத்தை மையமாக வைத்து, `அக்கா - தங்கை' என்று ஒரு படம் எடுக்கிறேன். கதை - வசனம் ஆரூர்தாஸ். தங்கை வேடத்தில் விஜயா நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்று தாசும், நானும் நினைக்கிறோம். நீங்க அனுமதிக்க வேண்டும்'' என்று வேலாயுத நாயரைப் பார்த்துக் கூறினார்.

    கே.ஆர்.விஜயாவின் கண்கள் கலங்கின. அவர் தேவர் காலில் விழுந்து, "அண்ணே! என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு சினிமாவே மறந்து போச்சு. இனிமேல் நடிப்பே எனக்கு வராது. உங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்று வருத்தப்படாதீர்கள்!'' என்று கெஞ்சினார்.

    சற்று நேரம் ஆழ்ந்த அமைதி நிலவியது. திடீரென்று வேலாயுதநாயர் எழுந்தார். "விஜயா! என்ன பேசுறே நீ! அண்ணன் எவ்வளவு பெரியவர்! அவர் நம் வீடு தேடி வந்து கேட்கிறார். அவர் வார்த்தையை மீறலாமா!'' என்று கோபத்துடன் கூறினார். பிறகு தேவர் பக்கம் திரும்பி, "அண்ணே, நீங்க போங்க. விஜயா உங்கப் படத்தில் நடிப்பாள்!'' என்றார்.

    தேவர் மகிழ்ச்சியுடன் திரும்பினார்.

    நீண்ட இடைவெளிக்குப்பின், ஸ்டூடியோவுக்குள் அடியெடுத்து வைத்தார், விஜயா.

    அக்காவாக சவுகார் ஜானகியும், தங்கையாக கே.ஆர்.விஜயாவும் நடித்தனர். கதாநாயகன் ஜெய்சங்கர்.

    நடித்து வெகு நாளாகிவிட்ட காரணத்தால் நடிக்கவும், வசனம் பேசவும் மிகவும் சிரமப்பட்டார், விஜயா. இயல்பாக நடிக்கவும், உணர்ச்சியுடன் வசனம் பேசவும் அவருக்கு ஆரூர்தாஸ் பயிற்சி அளித்தார்.

    பண்பட்ட நடிகையாதலால், விஜயா வெகு விரைவிலேயே முன்போல் உணர்ச்சி வேகத்துடன் நடிக்கத் தொடங்கினார். நாளுக்கு நாள் நடிப்பில் மெருகேறி, கோர்ட்டில் வாதாடும் இறுதிக் கட்டங்களில் அதி அற்புதமாக நடித்தார்.

    1969 பிப்ரவரி 28-ந்தேதி "அக்கா தங்கை'' வெளியாயிற்று. படம் வெற்றி பெற்று நூறு நாள் ஓடியது. கே.ஆர்.விஜயாவின் நடிப்பை எல்லோரும் போற்றிப் புகழ்ந்தனர்.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த கே.ஆர்.விஜயா, மீண்டும் படங்களில் நடிக்கலானார். இந்த இரண்டாவது ரவுண்டில், பல முக்கியமான படங்களில் அவர் நடித்தார்.

    சிவாஜிகணேசனுடன் அவர் நடித்த தங்கப்பதக்கம், பாரதவிலாஸ், ராமன் எத்தனை ராமனடி, நான் வாழவைப்பேன் ஆகிய படங்கள் மகத்தான வெற்றி பெற்றன. குறிப்பாக "நான் வாழ வைப்பேன்'' படத்தில் ரஜினிகாந்த் ஒரு முக்கிய வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். இது, கே.ஆர்.விஜயா சொந்தமாகத் தயாரித்த படம்.

    எம்.ஜி.ஆருடன் நடித்த "நல்ல நேரம்'', "நான் ஏன் பிறந்தேன்'' ஆகியவை பெரும் வெற்றிப்படங்கள்.

    தன்னால் எந்தப் பட அதிபரும் நஷ்டம் அடையக்கூடாது என்று நினைப்பவர், கே.ஆர்.விஜயா.

    டைரக்டர் மாதவன் தயாரித்த "முகூர்த்தநாள்'' என்ற படம் சரியாக ஓடவில்லை. அவர் நஷ்டம் அடைந்தார்.

    எனினும், கே.ஆர்.விஜயாவுக்கு பேசியபடி பணத்தைக் கொடுக்க அவர் முன்வந்தார். பணத்தை வாங்கிக்கொண்டு பூஜை அறைக்கு சென்ற விஜயா, சாஸ்திரத்துக்கு ஒரு சிறு தொகையை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதியை மாதவனிடமே கொண்டு வந்து கொடுத்துவிட்டார். இந்த நிகழ்ச்சியை, மாதவனே நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

    தன்னையும், தன் நடிப்பையும், புன்னகையையும் ரசிகர்கள் இன்னமும் விரும்புகிறார்கள் என்பதால் சின்னத்திரையில் நடித்து வருகிறார், கே.ஆர்.விஜயா.
    Next Story
    ×