என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    அதர்வாவின் ‘செம போத ஆகாத’ படத்தில் நடித்து வரும் பெங்காலி நடிகை மிஷ்டி தனுசுடன் டூயட் பாடி நடிக்க ஆசை என தெரிவித்தார்.
    அதர்வாவின் ‘செம போத ஆகாத’ படத்தில் நடிப்பவர் மிஷ்டி. இவர் பெங்காலி நடிகை. மிகவும் திறமையான நடிகை என்ற பெயர் இவருக்கு இருக்கிறது. மலையாளத்தில் ‘ஆதம்‘ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

    தனுசின் தீவிர ரசிகை என்று சொல்லும் நடிகை மிஷ்டி அதுபற்றி கூறும்போது...

    “நான் தனுஷ் நடித்த சில படங்களைப் பார்த்து அவரது தீவிர ரசிகை ஆகி விட்டேன். அவருடன் படத்தில் நடிக்க வேண்டும். ‘டூயட்’ பாட வேண்டும் என்ற ஆசை அதிகமாக உள்ளது. தனுசுடன் உடனடியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. என்றாலும், தமிழில் தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ தற்போது கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. அதில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

    முதலில் அதில் நடிக்கிறேன். அதற்குள் ‘செமபோத ஆகாத’ படம் திரைக்கு வந்து விடும். பின்னர் தனுசுடன் இணைந்து நடிக்கும் முயற்சியில் நேரடியாக இறங்குவேன்” என்றார் ஆர்வமுடன்.
    சினிமாவுக்கு வந்து 5 வருடம் நிறைவடைந்ததையொட்டி அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். அது குறித்த செய்தியை பார்ப்போம்...
    சின்னத் திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து, முன்னணி நடிகராக உயர்ந்து இருப்பவர் சிவகார்த்திகேயன். சினிமாவுக்கு வந்து 5 வருடம் நிறைவடைந்ததையொட்டி அனைவருக்கும் நன்றி தெரிவித்து அவர் இப்படி கூறியுள்ளார்...

    ‘2012 பிப்ரவரி 3-ந் தேதி பெரிய திரையில் என்னைப் பார்த்தேன். பல அனுபவங்களுடன் இந்த 5 வருடம் அற்புதமாக கடந்திருக்கிறது. நீங்கள் கொடுத்த இப்படி ஒரு வாழ்க்கையை கனவிலும் நினைத்துப் பார்த்தது இல்லை. என்னுடைய சகோதரர்கள், சகோதரிகள், என்னுடைய அனைத்து படக்குழுவினர், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், அனைத்து நட்சத்திரங்கள், ஊடகங்கள், ரசிகர்கள் எனக்கு அன்பும், ஆதரவும் கொடுத்த அனைவருக்கும் நன்றி.

    இந்த பயணத்தை தொடங்கி வைத்த பாண்டிராஜ் சாருக்கு சிறப்பு நன்றி. இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். இன்னமும் கற்றுக் கொண்டிருக்கிறேன். எப்போதும் கற்றுக் கொள்வேன். பொழுது போக்கான படங்களை கொடுக்க என்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்வேன். மீண்டும் ஒரு நன்றி. உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்’.
    முதன் முதலாக விக்ரமுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதை நினைத்தால் ‘திரில்’ஆக இருக்கிறது என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்...
    ‘வாலு’ படத்தை தொடர்ந்து விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் அவருடைய ஜோடியாக சாய்பல்லவி நடிக்க ஒப்பந்தமானார். பின்னர் இந்த படத்தில் இருந்து கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகினார்.

    இப்போது இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்க தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். படப்பிடிப்பு சில தினங்களில் நடைபெற உள்ளது. முதன்முதலாக விக்ரமுடன் ஜோடி சேர்ந்து இருப்பது குறித்து தமன்னாவிடம் கேட்ட போது...

    “முதன் முதலாக விக்ரமுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதை நினைத்தால் ‘திரில்’ஆக இருக்கிறது. இதில் என் கதாபாத்திரம் பற்றி எந்த தகவலையும் இப்போது தெரிவிக்கமுடியாது.

    இது அருமையான கதை. இயக்குனர் விஜய் சந்தர் கதையை என்னிடம் சொன்னதும் நான் மிகவும் ‘இம்பிரஸ்’ ஆகி விட்டேன். மார்ச் மாதம் முதல் இதன் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன்” என்றார்.

    இந்த படத்தில் போஜ்புரி நடிகர் ரவிகி‌ஷன் தமிழ்பட வில்லனாக அறிமுகம் ஆகிறார்.
    ‘மகளிர் மட்டும்’ பட விளம்பரத்துக்காக ஜோதிகாவுக்கு தோசை சுட்டு கொடுக்கும் காட்சியை சூர்யா டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அது குறித்த செய்தியை பார்ப்போம்...
    ‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்திருக்கும் படம் ‘மகளிர் மட்டும்’. இதில் ஜோதிகாவுடன் ஊர்வசி, பானுபிரியா, சரண்யா, நாசர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    இதை தயாரித்திருக்கும் சூர்யா, சமீபத்தில் ‘மகளிர் மட்டும்’ படத்தின் டீசரை வெளியிட்டார். இதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    படத்தை பிரபலப்படுத்த வேறு ஒரு வழியையும் சூர்யா கடை பிடித்துள்ளார். இந்த டீசரில் “நாம் லட்சக்கணக்கான தோசை சுட்டு கொடுத்திருக்கிறோம். ஆனால் நமக்கு ஒரு தோசையாவது சுட்டு தந்திருக்கிறார்களா?” என்று ஜோதிகா, ஊர்வசி உள்ளிட்ட 4 பெண்களும் பேசிக்கொள்வது போல் ஒரு காட்சி வருகிறது. சூர்யா, இதை குறிப்பிட்டு “காலம்காலமாக பெண்கள்தான் ஆண்களுக்கு தோசை சுட்டுக்கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இனிமேல் ஆண்களும் பெண்களுக்கு வீட்டில் தோசை சுட்டு தர வேண்டும்” என்று அவர் தனது மனைவி ஜோதிகாவுக்கு தோசை சுட்டு கொடுக்கும் காட்சியை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

    இது போல் மனைவிக்கு தோசை சுட்டுக்கொடுத்தவர்கள் டுவிட்டரில் பதிவு செய்யலாம் என்று சூர்யா கேட்டுக்கொள்ள, ஏராளமானோர் மனைவிக்காக தோசை சுட்ட காட்சியை டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்கள். இதன் மூலம் ‘மகளிர் மட்டும்’ படத்தை பிரபலமாக்கும் சூர்யாவின் ஐடியாவுக்கு பலன் கிடைத்திருக்கிறது.
    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் மின்சாரம் தாக்கி பலியான வாலிபர் குடும்பத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என சேலத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் வலியுறுதியுள்ளார்.
    ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்ககோரி சேலத்தில் கடந்த 18-ந்தேதி முதல் நடந்த போராட்டத்தில் இளைஞர்கள் சிலர் பெங்களூரு-கரைக்கால் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் பங்கேற்ற சேலத்தை அடுத்த வீராணம் சத்யா நகரை சேர்ந்த ராஜா என்பவரது மகன் லோகேஷ் என்ற யோகேஷ்வரன் (வயது 17) ரெயிலின் மேற்கூரை மீது ஏறி போராட்டம் நடத்திய போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட லோகேஷ் 19 நாட்களுக்கு பிறகு நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதை பார்த்த உறவினர்கள் கதறி அழுது புரண்டனர்.

    தகவல் அறிந்த கலெக்டர் சம்பத் உடனே அங்கு விரைந்து சென்று லோகேசின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் பெற்றோருக்கும் ஆறுதல் கூறினார். அப்போது லோகேசின் பெற்றோர் மகனை இழந்து தவிக்கும் எங்களுக்கு அரசு நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    பின்னர் லோகேசின் உடலை வாங்கி சென்ற அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேலம் டவுனில் உள்ள காகேயன் சுடுகாட்டில் அவரது உடலை தகனம் செய்தனர்.

    இதற்கிடையே நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று லோகேஷ் வீட்டுக்கு வந்தார். அவர் வருவதற்கு முன்பு லோகேஷ் உடல் தகனம் செய்யப்பட்டு விட்டது. 10 நிமிடம் வீட்டில் இருந்து லோகேசின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய லாரன்ஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

    சின்ன வயதுடைய இந்த வாலிபரின் இழப்பு எது கொடுத்தாலும் ஈடாகாது. இந்த வாலிபர் தமிழ் உணர்வுக்காக உயிர் விட்டுள்ளார். இறந்த வாலிபரின் குடும்பத்திற்கு எவ்வளவு பொருள் கொடுத்தாலும் அது ரொம்ப குறைவாகும்.

    லோகேஷ் மரணம் மிகுந்த வேதனையை அளிக்கிறது. அரசும், தமிழ் உணர்வு கொண்டோரும் அவரது குடும்பத்திற்கு உதவ வேண்டும், அவரது குடும்பத்திற்கு மூத்த பிள்ளையாக இருந்து நான் உதவி செய்வேன். சேலத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்யக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஜோதிகாவுடன் இணைந்து புதிய படத்தில் நடிப்பேன் என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    நடிகர் சூர்யா ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டா அமைப்பு உங்களை எதிர்த்ததே?

    பதில்:- ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாசாரம். அதை மீட்பதற்காக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்தன. ஒரு தமிழனாக ஜல்லிக்கட்டுக்கு நான் ஆதரவு கொடுத்தேன். இதுதான் என்னுடைய முகம். முகத்திரை போட்டு இதனை மறைக்க முடியாது. எனது படத்தை விளம்பரப்படுத்த ஜல்லிக்கட்டுக்கு நான் ஆதரவு தருவதாக பீட்டா அமைப்பு விமர்சித்தது. இதற்காக அந்த அமைப்பை கண்டித்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். பீட்டா அமைப்பு வருத்தம் தெரிவித்து உள்ளது.

    கேள்வி:- சிங்கம் படத்தின் 4-ம் பாகம் வருமா?

    பதில்:- காக்க காக்க படத்தில் நான் நடித்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் வரவேற்பை பெற்றது. சிங்கம் படத்தில் போலீஸ் அதிகாரி வேடம் ஏற்றபோது அதன் இரண்டாம் பாகம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. ரசிகர்களுக்கு சிங்கம் படம் மிகவும் பிடித்து போனது. அதனால் இப்போது மூன்றாம் பாகம் வரை தயாராகி உள்ளது. 4-ம் பாகத்திலும் நடிக்க ஆர்வம் இருக்கிறது. 4-ம் பாகமும் வரலாம். டைரக்டர் ஹரி ராணுவ பின்னணியை மையமாக வைத்து ஒரு கதை தயார் செய்து உள்ளார். அதிலும் நான் நடிக்க இருக்கிறேன்.

    கேள்வி:- சிங்கம்-3 படம் உண்மை கதையா?

    பதில்:- தமிழகத்தில் எம்.ஜி. ஆரும் ஆந்திராவில் என்.டி.ராமராவும் முதல்வர்களாக இருந்தபோது ஆந்திர பிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்தது. அப்போது ஆந்திர அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் ஆந்திர போலீசாருக்கு உதவ தமிழக போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது.

    கேள்வி:- இளம் இயக்குனரான விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்கிறீர்களே?

    பதில்:- இளம் டைரக்டர்களுடன் வேலை செய்யும்போது நம்மை புதுமையாக காட்டுவார்கள். ரஜினிகாந்தும் அப்படித்தான் ரஞ்சித்தின் கபாலி படத்தில் நடித்தார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டமும் நல்ல கதையம்சம் உள்ள படம்.

    கேள்வி:- ஜோதிகாவுடன் இணைந்து நடிப்பீர்களா?

    பதில்:- ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்த 36 வயதினிலே படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மகளிர் மட்டும் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படம் திருமணமான பெண்களுக்கு புதிய உத்வேகத்தை தரும். ஒரு வருடத்துக்கு முன்பே ஜோதிகாவும் நானும் ஒரு படத்தில் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால் நடக்கவில்லை. அவர் மீண்டும் நடிக்க மாட்டேன் என்று சொல்வதற்கு முன்னால் ஒரு படத்தில் சேர்ந்து நடித்துவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன்.”

    இவ்வாறு சூர்யா கூறினார்.
    ஷாருக்கான் நடித்துள்ள ‘ராய்ஸ்’ படத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    ஷாருக்கான் நடித்துள்ள ‘ராய்ஸ்’ படத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த படம் குடியரசு தினத்தில் இந்தியாவில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. வசூலிலும் சாதனை நிகழ்த்தி உள்ளது. பாகிஸ்தான் நடிகை மஹிரா கானும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். பாகிஸ்தானில் வருகிற ஞாயிற்றுக்கிழமை ‘ராய்ஸ்’ படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தனர்.

    இதற்காக பாகிஸ்தான் தணிக்கை குழுவினர் பார்வைக்கு ‘ராய்ஸ்’ படம் அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இஸ்லாமியர்களை குற்றவாளிகளாகவும் தேடப்படுபவர்களாகவும் சித்தரிக்கும் சர்ச்சைகாட்சிகள் இருப்பதாக ஆட்சேபம் தெரிவித்து பாகிஸ்தானில் ‘ராய்ஸ்’ படத்தை திரையிட தடை விதித்து உள்ளனர். இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சில மாதங்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீரில் உள்ள ஊரி பகுதியில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினர் எல்லை தாண்டி பயங்கரவாதிகள் முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்தி அழித்தார்கள். பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கவும் எதிர்ப்பு கிளம்பியது. பாகிஸ்தானும் இந்திய படங்களை திரையிடுவதை நிறுத்தியது.

    தற்போது தடையை நீக்கி பிப்ரவரி 1-ந்தேதி முதல் இந்திய படங்களை பாகிஸ்தானில் திரையிட பிரதமர் நவாஸ் செரீப் அனுமதி அளித்துள்ளார். இந்த நிலையில்தான் ஷாருக்கானின் ராய்ஸ் படத்திற்கு அங்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    தமிழ்நாடே தற்போது ஒரு அரசியல் பிரளயத்தை கண்டு வரும் நேரத்தில், நடிகர் கமலஹாசன் சர்ச்சையான இரண்டு கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார்.
    தமிழக முதல்வராக உள்ள ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு எதிராக கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    முதல் டுவீட்டில், சில வருடங்களுக்கு முன்னர் விஸ்வரூபம் படம் கடந்த சிக்கல்களுடன் வெளியாகியது, அந்த நிகழ்வை நினைவு கூர்ந்துள்ள அவர், மக்கள் கொடுங்கோன்மைக்கு எதிராக நின்று தனக்கு ஆதரவாக நின்றதாக குறிப்பிட்டுள்ளார். 

    மற்றொரு டுவீட்டில், தமிழகமே உறங்கச் செல்லுங்கள். நாளை உங்களுக்கு முன்னதாக அவர்கள் எழுந்து விடுவார்கள் என பதிவு செய்துள்ளார்.

    தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு இரண்டு கருத்துக்களும்
    பொருந்துவதால்,  கமலஹாசன் என்ன சொல்ல வருகிறார் என அனைவரும் வழக்கம் போல குழம்பி வருகின்றனர்.
    சீமை கருவேல மரங்களை அகற்றுவது போல் திருட்டு சி.டி.களையும் ரசிகர்கள் தான் அகற்ற வேண்டும் என நெல்லையில் நடிகர் சூர்யா பேசியுள்ளார். அது குறித்த செய்தியை பார்போம்...
    நடிகர் சூர்யா நடித்த சிங்கம்-3 (சி3) திரைப்படம் நாளை மறுநாள் (9-ந்தேதி) வெளியாகிறது. இதையொட்டி அப்படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களை சூர்யா சந்தித்து வருகிறார். நெல்லை பேரின்பவிலாஸ் தியேட்டரில் சிங்கம்-3 திரைப்படம் வெளியாகிறது.

    இதையடுத்து நடிகர் சூர்யா, இயக்குநர் ஹரி ஆகியோர் இன்று பேரின்பவிலாஸ் தியேட்டரில் ரசிகர்களை சந்தித்தனர். அப்போது சூர்யா பேசியதாவது:-

    நான் எத்தனையோ படங்களில் நடித்தாலும் சிங்கம் படத்தின் துரைசிங்கம் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதற்கு காரணம் இந்த மண்தான். நெல்லை மக்கள் கடுமையான உழைப்பாளிகள். அவர்களது வாழ்க்கையைத்தான் சிங்கம் படத்தில் காட்டியுள்ளோம்.

    தற்போது தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. அந்த பணியில் மாணவர்களும் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கருவேல மரங்களின் வேர்கள் நிலத்திற்குள் 20 அடி வரை சென்று நீரை உறிஞ்சுகிறது. அதனால் கருவேல மரங்களை வேருடன் அகற்ற வேண்டும். கருவேல மரங்களின் வேர் போன்று திரைத்துறையிலும் திருட்டு சி.டி.க்கள் உள்ளன. அவற்றை ரசிகர்கள் தான் அகற்ற வேண்டும்.

    முந்தைய படங்களைப் போல் சிங்கம்-3யிலும் காவல்துறையை பெருமை படுத்தியுள்ளோம். இந்த படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். எனவே அனைவரும் தியேட்டருக்கு வந்து படத்தை பாருங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இயக்குநர் ஹரி கூறும்போது, ‘சிங்கம்-3 ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்கும்படி எடுத்துள்ளோம். சிங்கம் 1, 2 படத்தை அடுத்து வேறு படம் இயக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் ரசிகர்களின் ஆர்வம் என்னை சிங்கம்-3 படத்தை எடுக்க தூண்டியது’ என்றார்.

    பின்னர் நடிகர் சூர்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

    அகரம் பவுன்டேசன் மூலம் 600 மாணவர்கள் உயர் கல்வி பெற்றுள்ளனர். இதில் 300 பேர் டாக்டர்களாகவும், என்ஜினீயர்களாகவும் உள்ளனர். வருடத்திற்கு 250 மாணவர்கள் அகரம் பவுன்டேசன் மூலம் கல்வி பெற்று வருகின்றனர்.

    ஆண்டு வருமானம் 10 ஆயிரத்திற்கும் கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட தற்போது லட்சக்கணக்கில் ஊதியம் பெறும் அளவில் அகரம் பவுன்டேசன் கல்வி கற்றுள்ளனர். ஏழைகளுக்கு உதவும் பாலமாக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் பேரின்பவிலாஸ் தியேட்டர் உரிமையாளர்கள் சுந்தர்ராஜ், ஜெயராஜ், திரைப்பட விநியோகஸ்தர்கள் கருணாகர ராஜா, வைகுண்ட ராஜா மற்றும் தளபதி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    வில்லனாக நடிக்க வேண்டும் என்றும் அந்த வாய்ப்பு விரைவில் கிடைக்கும் என்று நம்புவதாக கேமரா மேனாக இருந்து தற்போது நடிகராக மாறியுள்ள ராண்டில்யா கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை பார்ப்போம்...
    25-க்கும் மேற்பட்ட குறும்படங்கள், விளம்பர படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் ராண்டில்யா.

    கேமரா மேன் ஆக இருந்த இவர் தற்போது நடிகராகவும் மாறி இருக்கிறார்.

    இது பற்றி கேட்ட போது ராண்டில்யா அளித்த பதில்...

    “ நான் கேமராமேன் பயிற்சி பெற்று 25-க்கும் மேற்பட்ட குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தேன். நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்காக நான் ஒளிப்பதிவு செய்த ‘மவுனகீதம்’ குறும்படத்துக்காக எனக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது கிடைத்தது. பல விளம்பர படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறேன். ஐ.பி.எல்.விளம்பர படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். டோனி நடித்த விளம்பர படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளேன். விஜய் சேதுபதி, கிருஷ்ணா நடித்த ‘வன்மம்’ படஇயக்குனர் ஜெயகிருஷ்ணா என்னை அந்த படத்தில் முதன் முதலாக நடிக்க வைத்தார். அவருக்கு நான் கடமைப்பட்டி ருக்கிறேன். இதையடுத்து எஸ்.ஏ.சந்திரசேகர், பா.விஜய் நடித்த ‘நையப்புடை’, ‘வெள்ளிக்கிழமை 13-ந்தேதி’, ‘மையம்’ படங்களில் நடித்தேன். அதே நேரம் உதவி கேமரா மேனாகவும் பணிபுரிந்தேன்.

    இப்போது ‘இவன்தந்திரன்’, ‘143’, ‘ஒரு தடவை பார்க்கலாம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். நல்ல ஒளிப்பதிவாளராக விரும்பும் அதே வேளையில், சிறந்த நடிகராகவும் பெயர் வாங்க வேண்டும் என்பதே எனது விருப்பம். தற்போது சிறுசிறு வேடங்கள் வருகின்றன. முக்கியமான வேடங்களில் நடிக்க வேண்டும். வில்லனாக நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அந்த வாய்ப்பு விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
    சிரஞ்சீவி நடித்த ‘கைதி நம்பர் 150’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் வெற்றியால் உற்சாகம் அடைந்த சிரஞ்சீவி 151-வது படத்துக்கு தயாராகிவிட்டார். இதில் அவருடைய ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இதுகுறித்த செய்தியை பார்ப்போம்...
    அரசியலுக்கு சென்று மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய சிரஞ்சீவி 10 ஆண்டுகளுக்கு பிறகு நடித்த ‘கைதி நம்பர் 150’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    இந்த படத்தில் முதலில் சிரஞ்சீவி ஜோடியாக அனுஷ்காவை நடிக்க வைக்க முயற்சி நடந்தது. அவர் ‘பாகுபலி 2’ படத்தில் பிசியாக இருந்ததால் இதில் நடிக்க முடியவில்லை.

    பின்னர் நயன்தாராவிடம் பேசினார்கள். அவரும் நடிக்காததால் காஜால் அகர்வால் நடித்தார். இந்த படத்தின் வெற்றியால் உற்சாகம் அடைந்த சிரஞ்சீவி அவருடைய அடுத்த 151-வது படத்துக்கு தயாராகிவிட்டார்.

    இதற்கு ஒரு நல்ல கதையை தயார் செய்யும் படி தெலுங்கு டைரக்டர் சூரியிடம் சிரஞ்சீவி கூறி இருக்கிறார். இதில் அவருடைய ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். ‘கைதி எண் 150’ ஐ தயாரித்த சிரஞ்சீவியின் மகன் ராம் சரண்தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார்.

    ‘பாகுபலி-2’ படத்தில் நடித்து முடித்த பிறகு அனுஷ்கா திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்று முன்பு கூறப்பட்டது. இப்போது சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் அவருடன் ஜோடி போட தயாராகி வருகிறார்.
    நாட்டுக்கும், வீட்டுக்கும் முக்கியமானவர்கள் விவசாயிகளும்,மாணவர்களும் என ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். அதுகுறித்த செய்தியை பார்ப்போம்...
    ராகவா லாரன்ஸ், சத்யராஜ், நிக்கி கல்ராணி, ராய்லட்சுமி, கோவை சரளா, சதீஷ், மனோபாலா, ஸ்ரீமன் உள்பட பலர் நடித்திருக்கும் படம் ‘மொட்டசிவா கெட்ட சிவா’.

    சாய்ரமணி இயக்கியுள்ள இந்த படத்துக்கு அம்ரீஷ் இசை அமைத்துள்ளார். ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருக்கிறார். வேந்தர் மூவிஸ் மதன், சிவபாலன் ஆகியோர் வெளியிடும் இது வருகிற 17-ந்தேதி திரைக்கு வருகிறது.

    ‘மொட்ட சிவா கெட்டசிவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. முதல் முறையாக இந்த படத்தின் இசை சிடியை விவசாயிகள் வெளியிட மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.

    “வழக்கமாக திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களுக்கு முக்கிய பிரமுகர்களை அழைத்து நடத்துவோம். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு நாட்டுக்கு வீட்டுக்கும் முக்கியமானவர்களான விவசாயிகளையும்,மாணவர்களையும் அழைக்கவேண்டும் என்று விரும்பினேன்.

    அதற்கு அனுமதி வழங்கிய தயாரிப்பாருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி. இந்த படம் கடந்த ஜுன் மாதமே வெளியாகி இருக்க வேண்டும். தற்போது பல சிக்கல்களையும், தடைகளையும் கடந்து வந்திருக்கிறது. படம் வெளியாக ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. ‘மொட்டசிவா கெட்டசிவா’ அனைவரும் விரும்பி ரசிக்கும் கமர்சியல் படமாக உருவாகி இருக்கிறது. நிச்சயம் எல்லோருக்கும் இது பிடிக்கும்”என்றார்.

    தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, “‘மொட்டசிவா கெட்ட சிவா’ எங்கள் நிறுவனம் தயாரிக்கும் 88-வது படம். 89-வது படம் ‘கடம்பன்’, 90-வது தயாரிப்பு தெலுங்கு படம். மற்ற 2 படங்களும் தயாராகி விட்டன. அதற்கு முன்பு இந்த படத்தை வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அந்த வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. ஒரு சாதனைக்காக 1000 படங்கள் தயாரிக்கும் வரை நான் தயாரிப்பாளராக நிர்வாகம் செய்வேன் பின்னர் ஓய்வு பெறுவேன்” என்றார்.

    நிகழ்ச்சியில் இந்த படத்தில் நடித்த நடிகர்- நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் உள்பட பலர் பங்கேற்றனர்.
    ×