என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    நடிகை பாவனாவை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 7 பேர் மீது கோர்ட்டில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    தமிழ், மலையாளம், கன்னட பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த பாவனாவை கடந்த பிப்ரவரி மாதம் சிலர் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர். கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டு விட்டு அவர் வீட்டுக்கு திரும்பியபோது இந்த கடத்தல் சம்பவம் நடந்தது. 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு அவரை காரில் வைத்து செக்ஸ் தொல்லை கொடுத்து பணம் பறிப்பதற்காக அதனை வீடியோவிலும் பதிவு செய்துகொண்டனர்.

    பாவனா போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டவர்களும், அவர்களுக்கு உதவியவர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். பாவனாவின் முன்னாள் கார் டிரைவரான பெரும்பாவூரை சேர்ந்த பல்சர் சுனில் என்ற சுனில்குமார் இந்த சம்பவத்தில் மூளையாக இருந்து செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது.



    இந்த கடத்தல் விவகாரம் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று நடிகர்-நடிகைகள் வற்புறுத்தினார்கள். போலீஸ் துணை சூப்பிரண்டு பாபுகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். பாவனா கடத்தப்பட்ட இடத்துக்கு குற்றவாளிகளை அழைத்து சென்று ஆதாரங்களை திரட்டினார்கள். அந்த பகுதியில் சாலைகளில் அமைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.

    குற்றவாளிகள் பதுங்கி இருந்த கோவை பகுதிக்கு சென்றும் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தயார் செய்தனர். தற்போது 7 பேர் மீது அங்கமாலி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.இதில் பல்சர் சுனில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார். பாவனா காரில் செல்வது குறித்து பல்சர் சுனிலுக்கு தகவல் தெரிவித்த டிரைவர் மார்ட்டின் ஆண்டனி, கூலிப்படையை சேர்ந்த சலீம், பிரதீப், விஜிஸ், மணிகண்டன், கோவையில் தலைமறைவாக இருக்க உதவிய சார்லி தாமஸ் ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் பலரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இதன் மூலம் பாவனா கடத்தல் வழக்கு விசாரணை தீவிரமடைந்து உள்ளது.
    ரூ.2 கோடி மோசடி வழக்கில் நடிகர் ரித்தீஷ் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    அமெரிக்க இந்தியரான ஆதிநாராயணன் என்பவரிடம் ரூ.2 கோடியே 18 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக நடிகர் ரித்தீஷ், அவரது மனைவி ஜோதீஸ்வரி, நடிகர் வாலி என்ற பசீர், நாகநாதசேதுபதி, முரளிதரன் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் ரித்தீஷ், நாகநாதசேதுபதி ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி நசீமாபானு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான நகர குற்றவியல் அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன், ரித்தீஷ் உள்பட 2 பேருக்கும் முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்தார். இதைதொடர்ந்து ரீத்தீஷ் உள்பட 2 பேரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
    நான் குடும்பத்துடன் வெளிநாடு செல்லதற்கு அனுமதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் குஷ்பு மனு அளித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

    மதுரை:

    நடிகை குஷ்பு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலின் போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் பிரசாரம் செய்தேன். அப்போது தேர்தல் விதிகளை மீறியதாக ஆண்டிபட்டி போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் எனது பாஸ்போர்ட்டை புதுப்பித்துத் தர மறுக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், நான் வெளிநாடு செல்லும்போது எந்த நாட்டுக்கு செல்கிறேன், எங்கு தங்குகிறேன் என்பது உள்பட முழு விவரத்தை மதுரை ஐகோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.


    இந்த நிலையில் நான் குடும்பத்துடன் வருகிற 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் (மே) 14-ந்தேதி வரை பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா செல்கிறேன். நான் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

    ‘அப்சலூட் பிக்சர்ஸ்’ சார்பில் மால்காம் தயாரித்து வரும் ‘அதி மேதாவிகள்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    ‘அப்சலூட் பிக்சர்ஸ்’ சார்பில் மால்காம் தயாரித்து வரும் படம் ‘அதி மேதாவிகள்’.

    இந்த படம் நட்பையும், நகைச்சுவையையும் மையமாக கொண்டு உருவாகி இருக்கிறது. அறிமுக இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன் இயக்கி இருக்கிறார்.

    இந்த படத்தில் சின்னத்திரை தொகுப்பாளர் சுரேஷ் ரவி நாயகனாக நடிக்கிறார். நாயகி இஷாரா நாயர். இவர்களுடன் தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், ரேணுகா, மது, கல்லூரி வினோ முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.



    படம் பற்றி கூறிய நாயகன் சுரேஷ் ரவி....

    “நானும் ஒரு அரியர்ஸ் மாணவன் என்பதால், இந்த படத்தின் கதையை கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. எல்லா அரியர்ஸ் மாணவர்களுக்கும் எங்களின் அதி மேதாவிகள் திரைப்படம் ஓர் சமர்ப்பணம். இதை படமாக்கிய தயாரிப்பாளருக்கு நன்றி” என்று கூறினார்.

    “பெற்றோர்களின் வற்புறுத்தலால் இரண்டு மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து, படிக்க முடியாமல் அரியர்ஸ் மேல் அரியர்ஸ் வைக்கின்றனர். அதை சரி செய்வதற்கு அவர்கள் என்னென்ன முயற்சிகள் எடுக்கிறார்கள் என்பது தான் ‘அதி மேதாவிகள்’ படத்தின் கதை. இந்த படம் விரைவில் திரைக்கு வரும்” என்றார்.
    தனது திரை உலக அனுபவங்கள் பற்றியும், குடும்ப வாழ்க்கை பற்றியும், பல கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் சொன்னார், சிவகுமார்.
    தனது திரை உலக அனுபவங்கள் பற்றியும், குடும்ப வாழ்க்கை பற்றியும், பல கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் சொன்னார், சிவகுமார்.

    சிவகுமாரின் முதல் படம் 1965-ல் வெளிவந்தது. அவருடைய கலை உலகப்பயணம் தொடங்கி, 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.

    இதுபற்றி அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் சொன்ன பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- உங்கள் மகன் சூர்யா, இப்போது முன்னணி நடிகராகத் திகழ்கிறார். அவர் நடிகர் ஆவார் என்று நீங்கள் ஏற்கனவே எதிர்பார்த்தீர்களா?

    பதில்:- சூர்யா நடிகனான அதிர்ச்சி இன்னும் என்னுள் இருக்கிறது. சென்னை லயோலா கல்லூரியில் "பி.காம்'' படித்தவன் அவன். காலையில் கல்லூரி சென்றால் மாலை வரை அவன் வகுப்பில் நாலு வார்த்தை பேசினால் பெரிய விஷயம். மவுனமாக எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டு அமைதியாக இருக்கும் சுபாவமுள்ளவன்.

    சென்னையில் பிறந்து 22 வருடம் வளர்ந்த ஒரு நடிகனின் மகன், இங்குள்ள எந்த ஸ்டூடியோவிலும் அப்பாவின் ஷூட்டிங்கை பார்த்ததே இல்லை. விளையாட்டாகக் கூட அவனை ஒரு சினிமா ஹீரோவாக நாங்கள் கற்பனை செய்து பார்த்ததில்லை.

    டைரக்டர் வசந்தும், மணிரத்னமும் அவனை திரை உலகுக்கு தேர்ந்தெடுத்தது ஒரு இனிய விபத்து. `வீடியோ டெஸ்ட்' என்று அவனை அழைத்துப் போனார்கள். நான் மணிரத்னத்திற்குப் போன் செய்தேன். "சார்! அவனுக்குச் சினிமா சம்பந்தமாக எதுவும் தெரியாது. அப்படி அவனை நாங்கள் வளர்க்கவில்லை. பெரிதாக எதிர்பார்த்து நீங்கள் `டெஸ்ட்' செய்து ஏமாந்து விடக்கூடாது.

    `கார்மென்ட் எக்ஸ்போர்ட்' (ஆடை ஏற்றுமதி) கம்பெனியில் இப்போது பயிற்சி பெறுகிறான். நாளைக்குச் சொந்தமாக அவன் தொழில் ஆரம்பிக்கலாம். அல்லது எங்காவது வேலை பார்த்து மாதம் பத்தாயிரமோ, பதினைந்தாயிரமோ சம்பாதித்து நிம்மதியாக வாழலாம்.

    "நீங்கள் `டெஸ்ட்' செய்து ஒதுக்கிவிட்டால், அது அவன் எதிர்கால வாழ்க்கையை ரொம்பவும் பாதிக்கும். இப்போதுகூட `லேட்' இல்லை. அவனை அனுப்பி விடுங்கள்'' என்றேன்.

    `அவர் மீது 200 சதவீதம் நமëபிக்கை இருக்கிறது. கவலைப்படாதீர்கள். நாங்கள் அவரைப் பார்த்துக் கொள்கிறோம்'' என்றார், மணிரத்னம்.

    டைரக்டர் வசந்தும், மணிரத்னம் அவர்களும் "நேருக்கு நேர்'' படத்தில், `சூர்யா' என்று பெயரிட்டு அவனை அறிமுகப்படுத்தினார்கள். அந்தக் கலைஞர்களுக்கு நெஞ்சார நன்றி கூறுகிறேன்.

    அமெரிக்காவில் 3 ஆண்டு "இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங்'' படித்து எம்.எஸ். பட்டம் பெற்று இந்தியா வந்த என் இளைய மகன் கார்த்திக், ஒராண்டுக்கும் மேலாக மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பயிற்சி பெற்றான். தற்போது `பருத்தி வீரன்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறான்.

    கேள்வி:- காதல் திருமணம் செய்து கொள்ள வாய்ப்புகள் இருந்தும், அதை நீங்கள் விரும்பவில்லை. தாயாரும், குடும்பத்தினரும் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். உங்கள் மகன் சூர்யா, காதல் திருமணம் செய்து கொள்ள நீங்கள் அனுமதிப்பீர்களா?

    பதில்:- தூய காதலுக்கு நான் எதிரி அல்ல. தான் விரும்பும் பெண்ணைத் தவிர வேறு பெண்ணை மணக்கமாட்டேன் என்ற கொள்கையில் சூர்யா உறுதியாக இருந்தால், அவர் விரும்பியபடி திருமணம் செய்ய அனுமதிப்பேன்.

    கேள்வி:- நீங்கள் நடித்த சினிமாப்படங்களில் முதன் முதலாக உங்கள் தாயார் பார்த்த படம் எது? பார்த்து விட்டு என்ன சொன்னார்கள்?

    பதில்:- கந்தன் கருணை. "முருகனையே நினைத்து வாழ்ந்து, பழனி மலைக்கு கிருத்திகை தவறாமல் போய், திருப்புகழ் - மொத்த பாட்டையும் பாடி, சாமி கும்பிட்டவரு உங்கப்பா. ஒரு கிருத்திகை அன்னிக்கு பழனிலே பாடும்போதே நாவு விழுந்து போச்சு! வந்து பத்து நாள்ளே இறந்துட்டாரு.' அவரு செஞ்ச பிரார்த்தனை, உனக்கு அந்த முருகன் வேஷம் கிடைச்சிருக்கு'' என்றார், என் தாயார்.

    கேள்வி:- 193 படங்களில் நடித்திருக்கிறீர்கள். அவற்றில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான 10 படங்கள் எவை?

    பதில்:- கந்தன் கருணை, உயர்ந்த மனிதன், சொல்லத்தான் நினைக்கிறேன், புதுவெள்ளம், அன்னக்கிளி, ரோசாப்பூ ரவிக்கைக்காரி, வண்டிச்சக்கரம், தண்டிக்கப்பட்ட நியாயங்கள், பவுர்ணமி அலைகள், சிந்துபைரவி.

    கேள்வி:- நீங்கள் நடித்த படங்களில் உங்கள் மனைவிக்குப் பிடித்தமான படம் எது?

    பதில்:- ரோசாப்பூ ரவிக்கைக்காரி, சிந்துபைரவி.

    இவ்வாறு பதிலளித்தார், சிவகுமார்.

    193 திரைப்படங்களில் நடித்து விட்ட சிவகுமாரின் கலைப்பயணம், இப்போது சின்னத்திரையில் தொடருகிறது.

    "சித்தி'', "அண்ணாமலை'', "அபிராமி'' உள்பட ஏராளமான டெலிவிஷன் தொடர்களில் நடித்துள்ளார்.

    சின்னத்திரைக்கு போனது பற்றி அவர் கூறியதாவது:-

    "ஓவியக் கலைஞனாக வாழ்க்கையைத் தொடர நினைத்த என்னை `சிவகுமார்' ஆக்கி, உலகளாவிய தமிழ் மக்கள் அறிந்திடச் செய்தது, திரை உலகம்தான். இன்றைய புகழ், பொருள், வாழ்வு எல்லாம் திரை உலகம் இட்ட பிச்சை.

    ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் நடிக்கத் துவங்கி, நூற்றி இருபது படங்களை முடிக்கும் காலங்கள் வரை கூட நான் லட்ச ரூபாய் சம்பளத்தை எட்டவில்லை. தயாரிப்பாளர்களிடம் வற்புறுத்தி அதிகம் கேட்டதில்லை. காரணம், திரை உலகம் என்னைக் கைவிடாது என்ற அசாத்திய நம்பிக்கை.

    இரண்டரை மணி நேர சினிமா ஏற்படுத்துகிற தாக்கத்தை 25 வார டெலிவிஷன் தொடரில் ஏற்படுத்த முடியாது. காரணம் தொடர்ச்சி விட்டுப் போவதுதான்.

    மைனஸ் பாயிண்டுகள் இருந்தாலும், படைப்பாளி திறமைசாலியாகவும், டெலிவிஷன் மீடியத்தை திறம்படக் கையாளத் தெரிந்தவராகவும் இருந்தால் பெயர் பெறமுடியும் என்பதற்கு கே.பாலசந்தர் உருவாக்கிய `ரயில் சிநேகம்', `கையளவு மனசு', `காதல் பகடை' தொடர்கள் சாட்சி.

    1990களில் "நீதிமான்'' தொலைக்காட்சித் தொடரில் நான் நடித்தபோது, "என்ன சார்! இத்தனை வருஷமா சினிமாவிலே ஹீரோவா நடிச்சிட்டு `டிவி'க்கு வந்திட்டீங்களே!'' என்று சில துணை நடிகர்கள் கேட்டனர். நான் சொல்லும் சமாதானம் அவர்களை திருப்திபடுத்தாது என்பதை உணர்ந்து, மவுனப் புன்னகை செய்தேன்.

    1999-ல் `சித்தி' தொடர் உருவாக ஆரம்பித்ததும், தமிழகத்தில் மட்டும் சுமார் 4 கோடி பேர் `சித்தி' தொடரை பார்த்ததாக புள்ளி விவரங்கள் கூறின.

    "அண்ணாமலை'', உலகின் பெரிய நாடுகளில் எல்லாம் ஒளிபரப்பு ஆயிற்று.

    உலகில் எல்லாத் துறைகளிலும் அவ்வப்போது மாற்றங்கள் நிகழும். அந்த மாறுதல்கள், திரை உலகிலும் நிகழும். கதாசிரியன், சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டு, பேனா முனை மதிப்பு பெறும் காலம் விரைவில் வரும். அப்போது அர்த்தமுள்ள கதைகள், ஆழமான கருத்துக்கள் மீண்டும் திரை மூலம் உயிர் பெறும். அதுவரை சின்னத்திரையில் தற்காலிகமாக பவனி வருவேன்.''

    இவ்வாறு சிவகுமார் கூறினார்.

    சிவகுமார் - லட்சுமி தம்பதிகளுக்கு சூர்யா, கார்த்திக் தவிர, ஒரே மகள் பிருந்தா.

    பிருந்தா, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படித்து "பி.ஏ'' பட்டம் பெற்றவர். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. கணவர் பெயரும் சிவகுமார்தான். இவர் "பி.ஈ'',"எம்.பி.ஏ'' பட்டங்கள் பெற்றவர். சென்னையில், "கிரானைடு''களை வெட்டப் பயன்படும் "டயமண்ட் டூல்ஸ்'' கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்துகிறார்.

    சிவகுமார் பற்றிய தொடர் இத்துடன் நிறைவடைந்தது.


    நடிகை ஒருவர் ஹோட்டலில் இருந்து அவசரமாக வெளியேறியுள்ளார். அங்கு என்ன நடந்தது? என்பதை அறிய கீழே பார்ப்போம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் பெரிய நம்பர் நடிகை தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து வருகிறார். இதனால், அவருக்கு வாய்ப்புகள் அதிகமாகிறதே தவிர, ஒருபோதும் குறைந்ததில்லை. இதனால், சென்னையிலேயே தனி வீடு ஒன்றை வாங்கி அங்கு தனது காதலருடன் குடியமர்ந்தார்.

    ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை, கடந்த சில மாதங்களாக இந்த நடிகை வீட்டை விட்டு வெளியேறி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தாராம். அங்கிருந்துகொண்டே படப்பிடிப்புக்கு செல்வது, திரும்புவது என்று இருந்த நடிகை தற்போது மனம் மாறி, ஹோட்டலை விட்டு வெளியேறி தனது வீட்டுக்கே திரும்பிவிட்டாராம்.



    அவர் ஏன் ஹோட்டலுக்கு சென்றார்? மறுபடியும் ஏன் ஹோட்டலை விட்டு வெளியே சென்றார்? என்று கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பெரிய கேள்வியே எழுந்துள்ளதாம். அவர் ஹோட்டலில் சென்று தங்கும் அளவுக்கு அவரது வீட்டில் என்ன நடந்தது? மறுபடியும் ஹோட்டலை விட்டு வெளியேறும் அளவுக்கு அவரது அறையில் என்ன நடந்தது? என்பதும் மர்மமாகவே இருப்பதாக கூறப்படுகிறது.
    பிரபல தாதா ஹாஜி மஸ்தானின் வாழ்க்கை வரலாற்றில் ரஜினி நடிக்கப்போவதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அது உண்மைதானா? என்பதை கீழே பார்ப்போம்.
    ‘கபாலி’ படத்தை தொடர்ந்து ரஜினி-ரஞ்சித் இருவரும் மீண்டும் புதிய படத்தில் இணையவிருக்கிறார்கள். இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவிருக்கிறார். ‘கபாலி’ படத்தைப் போன்றே இப்படத்திலும் ரஜினி டானாக நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

    இந்நிலையில், தற்போது மும்பையில் மிகப்பெரிய டானாக வலம்வந்த தமிழர் மிர்ஜா காஜி மஸ்தானின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை எடுக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மும்பையில் 1926-1994 இடைப்பட்ட காலத்தில் மக்களின் தலைவராகவும், மிகப்பெரிய டானாகவும் வலம்வந்தவர் ஹாஜி மஸ்தான்.



    இவர் மிகப்பெரிய கடத்தல்காரராகவும், சினிமா படங்களுக்கு பைனான்ஸ் செய்பவராகவும், ரியல் எஸ்டேட் அதிபராகவும் வலம் வந்தவர். தமிழ் சரளமாக பேசக்கூடியவர். இவர் எப்போதும் வெள்ளை நிறத்தாலான உடைகள், காலணிகள்தான் அணிவாராம். அதேபோல், விலையுயர்ந்த சிகரெட்டுகள்தான் புகைப்பாராம். வெள்ளைக்கலர் மெர்சிடிஸ் கார்தான் உபயோகிப்பாராம். இதுவே இவரை ஏழைகளின் மத்தியில் அவரை ஸ்டைல் மன்னாக எடுத்துக்காட்டியது.

    அப்படிப்பட்டவரின் வாழ்க்கை வரலாற்றைத்தான் பா.ரஞ்சித் படமாக எடுக்கப்போவதாகவும் ஹாஜி மஸ்தான் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால், ரஞ்சித் தரப்பிலோ ஹாஜி மஸ்தானின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கவில்லை என்று கூறுகின்றனர். இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
    கன்னடத்தில் பாகுபலி-2 படத்தை வெளியிட விடமாட்டோம் என போர் கொடி தூக்கியுள்ள மக்களுக்கு எஸ்.எஸ்.ராஜமௌலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி-2 பாகம் பிரம்மாண்டமாய் உருவாகியிருக்கிறது. இப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாய் வெளிவர காத்திருக்கிறது. இந்நிலையில், கர்நாகடத்தில் இப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று ஒருசில கன்னட அமைப்பினர் எதிர்ப்புக் கொடி காட்டி வருகின்றனர்.

    காவிரி நீர் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காத கர்நாடக அரசை கண்டித்து நடிகர் சத்யராஜ் பேசியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் அவர் நடித்துள்ள ‘பாகுபலி-2’ படத்தை கன்னடத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று அவர்கள் போர்க்கொடி காட்டுகின்றனர்.



    இந்த பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பதற்காக இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, கன்னட மக்களுக்கு வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது, சத்யராஜ் கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து. 9 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பேசியதை வைத்து தற்போது இந்த படத்தை திரையிட விடமாட்டோம் என்று சொல்வது நியாயமற்றது. படத்தை தடை செய்வதால் அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை. படக்குழுவினருக்குதான் பெரிய இழப்பு ஏற்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 
    'தூங்கா நகரம்' படத்தின் இயக்குனர் கௌரவ் நாராயணனை ஓமன் நாட்டு அமைச்சர் ஒருவர் பாராட்டியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    ‘தூங்கா நகரம்’, ‘சிகரம் தொடு’ ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கௌரவ் நாராயணன் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் - மஞ்சிமா மோகன் நடிக்கும் ‘இப்படை வெல்லும்’ என்ற படத்தை இயக்குகிறார். படத்தில் இடம்பெரும் பாடலின் படப்பிடிப்பிற்காக ஓமன் நாட்டிற்கு படக்குழுவினர் சென்றனர்.

    தனது நாட்டில் படப்பிடிப்பு நடத்துவதை அறிந்த ஓமன் நாட்டின் தகவல் துறை அமைச்சர் மர்வான் யூசுப் இயக்குனர் கௌரவ் நாராயணனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது, இப்படத்தின் பாடல் காட்சிகளை பார்த்த ஓமன் நாட்டின் அமைச்சர் மர்வான் யூசுப் இயக்குனர் கௌரவ் நாராயணன் மற்றும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.



    ‘இப்படை வெல்லும்’ படத்தில் ராதிகா சரத்குமார், சூரி, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனம் வெளியிடவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
    நடிகை இஷாரா நாயர் அதி மேதாவிகள் படத்துக்காக 10 நாட்களில் தனது உடல் எடையை குறைத்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    'சதுரங்க வேட்டை' படத்தில் நட்டிக்கு ஜோடியாக நடித்தவர் இஷாரா நாயர். இப்படத்தில் இவர் நடித்த பானு என்கின்ற வெகுளி கதாபாத்திரம் மூலமாக ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் உள்ளங்களையும் கொள்ளை அடித்து சென்றவர். இவர் தற்போது 'அதி மேதாவிகள்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன் இயக்கி வருகிறார். ‘மோ’ படத்தில் நடித்த சுரேஷ் ரவி கதாநாயகனாக நடித்து வருகிறார்.

    இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து இஷாரா நாயர் கூறும்போது, நான் முன்பு நடித்த கதாபாத்திரத்தின் சாயல் என்னுடைய புதிய கதாபாத்திரத்திற்கு இருக்க கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாக இருந்து தேர்வு செய்த திரைப்படம் தான் 'அதி மேதாவிகள்'. இந்த படத்தில் சுஜி என்கின்ற கதாபாத்திரத்தில் நான் நடித்து இருக்கின்றேன். இரண்டு நண்பர்கள் தங்களின் கல்லூரியில் வைக்கும் அரியர்ஸ் பற்றியும், அந்த அரியர்ஸை கடந்து வர அவர்கள் எடுக்கும் முயற்சிகளும்தான் ‘அதி மேதாவிகள்’ படத்தின் ஒரு வரி கதை.



    இந்த படத்திற்காக என்னை உடல் எடையை குறைக்க சொன்னார் இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன். அதற்கு அவர் கொடுத்த கால அவகாசம் வெறும் 10 நாட்கள் தான். இருந்தாலும் இதை நான் சவாலாக எடுத்து கொண்டு, 10 நாட்களில் உடல் எடையை குறைத்தேன். மற்ற எல்லா படங்களில் இருந்தும் எங்களின் ‘அதி மேதாவிகள்’ படம் தனித்து விளங்கும்.

    காதல் இல்லாமல் வெறும் நட்பை மட்டுமே எங்கள் ‘அதி மேதாவிகள்’ படம் உள்ளடக்கி இருப்பதே அதற்கு காரணம். படத்தின் வெளியீட்டிற்காக ஆவலோடு காத்து கொண்டிருக்கின்றேன்" என்று உற்சாகமாக கூறினார். இப்படத்தை 'அப்சலூட் பிச்சர்ஸ்' சார்பில் மால்காம் தயாரித்து இருக்கிறார்.

    நமது நாட்டில் கொடி கம்பங்கள் கூட ஆடை கட்டி உள்ளது. விவசாயிகளால் ஆடை கட்ட முடியாத அளவுக்கு அவர்களது நிலைமை உள்ளது என்று கோவை விழாவில் கவிஞர் வைரமுத்து கூறினார்.
    ‘வெள்ளை வெளிச்சம்’ என்ற தலைப்பில் வள்ளலார் குறித்து கவிஞர் வைரமுத்து எழுதிய கட்டுரை அரங்கேற்ற நிகழ்ச்சி கோவை கொடிசியாவில் நேற்று நடைபெற்றது. விழாவில் வைரமுத்து பேசும்போது கூறியதாவது:-

    கொங்கு மண்டலம் தமிழுக்கு தங்க மண்டலமாகவும், சன்மார்க்க நெறி வளர்க்கும் மண்டலமாகவும் திகழ்கிறது. இந்த தலைமுறை மக்கள் திரைப்படங்களை, செல்போன் தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ளும் அளவுக்கு தமிழ் இலக்கியங்களை படிப்பதில் ஆர்வம் குறைந்தவர்களாக உள்ளனர். காதலர்கள் கூட 4 வரி காதல் கவிதைகளைத்தான் விரும்புகிறார்கள். குறுஞ்செய்தி அனுப்பும் இந்த சமுதாயத்தில் ஆழ்ந்து வாசிக்கும் திறனில் ஆர்வம் செலுத்துவதில்லை.

    வள்ளலார் மனித சமுதாயத்துக்கு கிடைத்த பொக்கிஷம். அவர் ஜாதி கூடாது என்றும், உருவ வழிபாடு கூடாது என்றும் கூறினார். வள்ளலாரின் குரல் சத்தியத்தின் குரல். இப்போது ஜாதி ஒழிந்து இருக்கிறதா? என்றால் இல்லை. இந்த நவீன உலகிலும் அது அதிகரித்துதான் இருக்கிறது. நரபலி செய்து பிழைக்கும் கூட்டமும், அதனை நம்புகிற கூட்டமும் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.


    கோவை கொடிசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பேசியபோது எடுத்த படம்.

    வாடிய பயிர்களை கண்டு வாடியதாக வள்ளலார் கூறினார். இப்போது டெல்லி ஜந்தர் மந்தரில் தார்சாலையில் அமர்ந்து விவசாயிகள் போராடுகிறார்கள். அவர்கள் ஆடையில்லாமல் சென்றதாக கூறினார்கள். தங்களால் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதற்காகவே விவசாயிகள் அவ்வாறு சென்றுள்ளனர். விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்போம். இந்த நாட்டில் கொடிக்கம்பங்கள் கூட ஆடை கட்டி உள்ளது. ஆனால் விவசாயிகளால் ஆடை கட்ட முடியவில்லை. அந்த அளவுக்கு விவசாயிகளின் நிலைமை உள்ளது.

    சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பின்பற்றும் கல்வி மையங்களில் இந்தி மொழி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களது பிள்ளைகள் தமிழ்மொழியில் படிக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்பினால், யாரும் எந்த மொழியையும் திணிக்க முடியாது. தாய் மொழி இறையாண்மையை காப்பாற்றினால்தான் உள்ளூர் கலாசாரத்தை காப்பாற்ற முடியும். இது ஒவ்வொரு மொழிக்கும் பொருந்தும். எனவே ‘தமிழ் படித்துவிட்டுத்தான் எந்த மொழியையும் படிப்போம்’ என்ற உறுதி மொழியை ஒவ்வொருவரும் ஏற்க வேண்டும்.

    நமது நாடு பல நூற்றாண்டுகளாக ரத்தங்களால் நனைந்து, சிவந்து, சிதறி கிடந்தது. வள்ளலாரின் கருத்துக்கள் ஒவ்வொரு மனிதனையும் பண்படுத்தும்.

    இவ்வாறு வைரமுத்து கூறினார்.
    திரிஷா ஒரே நேரத்தில் மூன்று படங்களின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    சினிமாவில் 10 வருடங்களை தாண்டியும் இன்னும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துவந்த திரிஷா, தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

    அந்த வரிசையில் ‘மோகினி’, ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை-2’ ஆகிய படங்களில் நடித்து வந்தார். இந்த மூன்று படங்களின் படப்பிடிப்பையும் தற்போது திரிஷா முடித்துவிட்டார். இதற்காக இப்படங்களின் இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.



    சமீபகாலமாக திரிஷா நடிப்பில் வெளிவந்த சில படங்கள் தோல்வியை சந்தித்தன. எனவே, வெற்றிக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் திரிஷாவும் இருக்கிறார். இவர் நடித்திருக்கிற இந்த மூன்று படங்களும் திரிஷாவின் சினிமா பயணத்திற்கு பெரிய தூண்டுகோலாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. 
    ×