என் மலர்
கார்

அர்பன் குரூயிசர் ஹைரைடர் நான்கு வேரியண்ட்களின் விலையை அறிவித்த டொயோட்டா
- டொயோட்டா நிறுவனம் அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் இந்திய விலை விவரங்களை அறிவிக்க துவங்கி உள்ளது.
- முதற்கட்டமாக அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலின் நான்கு வேரியண்ட்களின் விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான டொயோட்டா இந்திய சந்தையில் தனது புதிய அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலின் நான்கு வேரியண்ட்கள் விலையை அறிவித்து இருக்கிறது. முன்னதாக ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த காரின் விலை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த எஸ்யுவி-க்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும்.
இந்திய சந்தையில் புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் E, S, G மற்றும் V என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேலும்- நியோ டிரைவ் மற்றும் செல்ஃப் சார்ஜிங் ஸ்டிராங் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் என இரண்டு வித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. தற்போது டாப் எண்ட் பிரிவில் கிடைக்கும் நான்கு வேரியண்ட்களின் விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் விலை ரூ. 15 லட்சத்து 11 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 18 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த காரின் செல்ஃப் சார்ஜிங் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வெர்ஷனில் 1.5 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் இ டிரைவ் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 79 ஹெச்பி பவர், 141 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் எலெக்ட்ரிக் மோட்டார் 79 ஹெச்பி பவர், 141 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஸ்டிராங் ஹைப்ரிட் வெர்ஷன் அதிகபட்சம் 114 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது.
அர்பன் குரூயிசர் நியோ டிரைவ் வெர்ஷனில் 1.5 லிட்டர் K சீரிஸ் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜினுடன் இண்டகிரேடெட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 101 ஹெச்பி பவர், 135 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.






